என் சுயசரிதை/குறித்த காலப்படி நடத்தல்
இவ்விஷயத்தில் என் அருமைத் தந்தையாரே எனக்கு முதல் போதகர். அவர் பள்ளிக்கூடங்களை விஜாரிப்பதற்காக போவதில் ஒருபோதும் காலம் தவறிப்போனதில்லை. என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஒரு உதாரணம் கொடுக்கின்றேன். ஒரு நாள் ஒரு உயர் தரப் பள்ளியை பரிட்சிப்பதற்காக காலை 11-மணிக்கு தானும் தனக்குமேற்பட்ட உத்தியோகரான மிஸ்டர் பவுலர் (Mr. Powler) உம் வருவதாக குறித் திருந்தார்களாம். அன்று மிக அதிக மழை பெய்ததாம். இருந்த போதிலும் 11-மணிக்கு முன்னதாகவே அவர் போய் சேர்ந்த போது பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் பிள்ளைகளும் கொஞ்சம் உபாத்தியாயர்களும் தான் வந்திருந்தார்களாம். பவுலர் துரையும் 1- மணி சாவகாசம் பொறுத்து வந்தாராம். வந்தவர் என் தகப்பனார் சரியாக வந்ததற்காக அவரை, மிகவும் சிலாகித்துப் பேசினாராம். இதை அப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் ஒருவரே பிறகு எனக்குத் தெரிவித்தார். சாதாரணமாக நம் தேசத்தவர்கள் இதை சரியாக கவனிப்பதே இல்லை. வெள்ளைக் காரர்கள் பெரும்பாலும் இதை மிகவும் கவனிப்பார்கள். இவ்விஷயத்தில் எனக்கு இரண்டாவது போதகாச்சாரியார் சின்ன கோர்ட் நீதிபதியாயிருந்த மிஸ்டர் ரோஜேரியோ (Mr. Rozario) அவர் கோர்ட்டுக்குச் சரியாக 11-மணி அடிக்கும்போது வந்து உட்காருவார். அவர் முன்பாக நான் 4 வருஷம் வக்கீலாக பழகினேன். அவர் ஒரு நாளும் இதில் தவறியதில்லை. இதைக் கடைப்பிடித்தே நானும் அதே கோர்ட்டில் பிறகு நீதிபதியாய் இருந்தகாலமெல்லாம் சரியாக 11-மணிக்கு வந்து வேலை ஆரம்பிப்பேன். இதைப்பற்றி என்னுடைய சிநேகிதர்களாகிய வக்கீல்கள் “கடிகாரம் தப்பினாலும் தப்பும் இவர் தப்பமாட்டார்” என்று கூறியதை நான் என்முறை கேட்டிருக்கிறேன். நம்மவர்கள் இந்தமுறை ஏன் பின்பற்றுவதில்லை என்று எனக்கு ஆச்சரியமாகவே யிருக்கிறது. நம்மவர்கள் கல்யாணங்களுக்கு லக்னம் வைத்தால் அதில் தவறுகிறார்களா. அல்லது ரெயிலுக்கு போவதென்றால் இரண்டு நிமிஷம் தவறிப்போகிறார்களா? இவ்விஷயத்தில் மேற்சொன்ன ரொஜோரியோ எனக்குக் கூறிய ஒரு வாக்கியம் ஞாபகம் வருகிறது. அதாவது “சம்பந்தம், காலக்கிரமப்படி வருவது எனக்குக் கஷ்டமாயில்லை. காலம் தவறி நடத்தல்தான் எனக்கு பெரும் கஷ்டமாயிருக்கிறது” என்பதாம். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களாவது வெள்ளையர்களைப் போல் தாங்களும் எவ்விஷயத்திலும் குறித்தகாலக் கிரமப்படி நடக்க கற்றுக்கொள்வார்களாக!