ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆல்பர்ட் ஐன்ஸ்டனின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே
‘அணு’ என்ற தமிழ்ச் சொல்
நமது இலக்கியமானது!
அறிவியல் மேதையான ஆல்பர்ட் ஐஸ்ஸ்டைன்; அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து, இயற்கையின் சக்திகளை ஊடுருவி உணர்ந்து, பல உண்மைகளைக் கண்டுபிடித்து, அறிவியல் துறைக்கு அழியாப் புகழைத் தேடித் தந்தவர்.
‘அணு’ என்ற ஒரு பொருளில் மறைந்துள்ள அற்புதங்களை எல்லாம் ஆழமாக அலசி ஆய்ந்து புரட்சிகரமான கோட்பாடுகளை புதுமையோடு உலகுக்கு அளித்துள்ளார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு முன்பு, மேடம் கியூரி தம்பதிகள், அணுவைப் பிளக்க முடியும் என்பதை முதன் முதலில் அவனிக்கு அறிவித்தார்கள்.
மேடம் க்யூரி தம்பதியினரும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ‘அணு’ என்ற அறிவியல் சக்தியைப்பற்றி 19ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார்கள் என்பது விஞ்ஞான உலகத்தின் சாதனையாகும்.
ஆனால், ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி தமிழ்க்குடி’ என்று இலக்கியங்களால் போற்றப்படும் தமிழ் மக்கள், ‘அணு’ என்ற சொல்லையும், அது ஓர் அறிவியல் சக்தி என்பதையும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்த, அறிவியல் மரபுடையவர்களாக வாழ்ந்துள்ளார்கள். என்பதை அறிந்து நம்மால் வியக்காமல் இருக்க முடிய வில்லை.
அழுது கொண்டே பிறக்கின்ற ஒரு குழந்தை, வளர்த்து வாழ்ந்து அனுபவங்களைச் சந்தித்து, சிரித்துக் கொண்டே சாகும் வரை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இலக்கணத்தை இலக்கியமாகக் கூறுவது திருக்குறள் என்ற ‘வாழ்வியல் சட்ட நூல்’ என்றால் அது மிகையாகா.
அந்த திருக்குறள் நூலுக்கு சான்றோர் பலர் அணிந்துரைகளாகத் தந்துள்ள அறிவுரைகள் தான் திருவள்ளுவ மாலை என்ற புகழ் பூத்த பூவாரம் பகுதி!
அந்த ‘திருவள்ளுவமாலை’யில் ஒளவை பெருமாட்டி என்ற பெண்பாற் புலவரால் புகழாரமாகச் சூட்டம் பட்ட நறுமணம் கமழும் பாடவ் ஒன்றில்,
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்”.
என்ற மலராரம் மணந்து கொண்டிருப்பதை நாம் இன்றும் நுகரலாம்.
அந்த பாடலின் முதல் சீரில் ‘அணு’ என்ற சொல்லும், அணு என்பது ஓர் அபூர்வமான இயற்கைப் படைப்பு என்பதையும் நமக்கு அறிவிக்கின்றது.
‘அணு’ என்ற அந்தச் சிறு பொருளைத் துளைக்க முடியும், அதனுள்ளே ஏழ்கடலையும் புகுத்த முடியும் என்ற பொருளை அந்த ‘அணு’ என்ற சொல் அவனுக்கு உணர்த்தியுள்ளது என்றால், அந்த ‘அணு’வின் மாபெரும் அற்புதச் சக்தி எப்படிப்பட்டதாக இருக்க முடியும் என்பதை நாம் எண்ணியெண்ணி வியப்படைகிறோம் அல்லவா?
இந்த ‘அணு’ சக்தியை, திருக்குறள் காலமான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே, சில ஆயிரம் ஆண்டு காலக் கட்டத்தில் தமிழ் மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்ற ஓர் உண்மை புலப்படுகின்றது இல்லையா?
அந்த அணு சக்தியைத்தான், 19ஆம் நூற்றாண்டைய மேனாட்டு மேதைகளான மேடம் க்யூரி தம்பதிகளும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ஊடுருவி, ஆய்ந்து, பல உண்மைகளை உய்த்துணர்ந்து உலகுக்கு உணர்த்தினார்கள் என்று படித்து நாம் பெருமிதம் அடைகின்றோம்! அவர்களைப் பாராட்டுகின்றோம்.
கம்பன் கண்ட ‘அணு’
‘கோன்’ ஆக மாறிய விந்தை
கவிச் சக்கரவர்த்தி என்று கன்னித் தமிழ் பாராட்டும் கவிஞர் கம்பர் பெருமான்!
கவி பாடுவதில் அவர் மன்னர் மன்னனாக விளங்கியவர். அவர் எழுதிய ‘இராம காதை’யில் ஓர் பகுதி இரண்ய வதைப் படலம்.
மாவீரன் இரண்யன் தனது மகன் பிரகலாதனைப் பார்த்து. “உனது கடவுள் விஷ்ணு இந்த தூணிலே இருக்கிறானா?” என்று தகப்பன் கொடுத்த வினாவிற்கு விடையாக மகன் கூறும் கட்டத்தில் வரும் ஒரு பாடலில்,
“சாணிலும் உளன், இந்நின்ற தூணிலும் உளன், ‘அணு’வைச் சத கூறுகளிட்ட ‘கோனி’லும் உளன், என்று கம்பர் பேசுகிறார்.
அதாவது, ஒரு சாண் அளவுள்ள இடத்திலும் கடவுளே இருக்கிறார், இங்கே நிற்கின்ற இந்தத் தூணிலும் கடவுள் உள்ளார். ‘அணு’ என்ற ஒரு சிறு நுண்பொருளை நூறு பாகமாக வெட்டினால், அந்த நூறாவது அணுவுக்கும் அணுவான துகளுக்கு Particleக்கு கோன் என்ற சிறு பகுதியிலும் கடவுள் இருக்கிறார் என்று, பிரகலாதன் தனது தந்தையிடம் பதில் கூறுகிறான்.
‘அணு’ என்பதே சிறு துண் பொருள்! அதைப் பிளக்க முடியும் என்று பொதுவாகத்தான் மேடம் க்யூரி தம்பதிகள் 19ஆம் நூற்றாண்டிலே கண்டு பிடித்துக் கூறி நோபல் பரிசு பெற்றார்கள்.
ஆனால், எந்தவித விஞ்ஞான வளர்ச்சியும், உணர்ச்சியும், எழுச்சியும் அற்ற பத்து பதினொன்றாம் நூற்றாண்டிலே வாழ்ந்த கம்பர் எனும் கவிஞர் பெருமான், ‘அணு’ என்ற துண்பொருளை நூறு பகுதிகளாக வெட்டலாம், சிதைக்கலாம், உருவாக்கலாம்; அதாவது, atomic fission என்ற அணுச் சிதைவைச் செய்யலாம் என்று உணர்ந்து, அந்த நூறாவது பகுதிக்கு என்ன பெயர் தெரியுமா? ‘கோன்’ என்று பெயர் வைத்தார் என்றால், கம்பர் பெருமானை நாம் எப்படிப் புகழ்வது? எவ்வாறு பாராட்டுவது? என்ன பரிசு கொடுப்பது? எவனுக்கு எந்த மன்னனுக்கு அந்த அறிவியல் உணர்வு இருந்தது? என்று நாம் எண்ணும்போது, கம்பன் பிறந்த நாட்டிலே பிறந்த மண் பெருமைதான் நமக்கு மிகுதி இல்லையா?
‘அணு’வை ஆட்டம் என்பார்கள் ஆங்கிலத்தில்! இந்த இரண்டு சொற்கள் மூலத்தை ஆராய்ந்தால், ‘அணு’ என்ற பெயர்தான் ஆட்டம் என்று உருமாறியது என்பதை உணரலாம்!
நாவலந் தீவு வேளான் நாகரீகக் காலம் போய் முதல் இடை கடைச் சங்க காலங்கள் மாறி, திருவள்ளுவர் காலத்திற்குப் பிறகு நாயன்மார்கள், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் காலங்கள் எல்லாம் மாறி மாறி, இப்போது விஞ்ஞான ஆய்வுகள் புதுமைகளைப் புகுத்தி, நீராவி சக்தி, எண்ணெய் சக்தி, மின்சார சக்தி, என்று ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர் தோற்றங்கள் தோன்றி, இறுதியாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ‘அணு’யுக ஆய்வு பிறந்து, அது அழிவையும் ஆக்கத்தையும் அவனியிலே தோற்றுவித்துள்ளதையும் நாம் பார்க்கிறோம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஓர் அறிவியல் மேதை! அவருக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞான வித்தகர்களின் ஆய்வுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தார் போன்ற ஒரு தனிப்புரட்சியை உருவாக்கியவர். ஆனால், அவர் எந்த ஒரு விஞ்ஞானியின் ஆய்வையும் குறைத்து மதிப்பிடாத முதிர்ந்த ஒரு விஞ்ஞான ஞானியாக விளங்கினார் என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும்.
ஐன்ஸ்டைன் பிறப்பதற்கு முன்பிருந்த அறிவியலாளர்களும் அதிசயிக்கத்தக்க அறிவிற்கு, அறிவியல் துறைக்குப் பெருமை தேடித் தந்தவர் ஐன்ஸ்டைன்.
விஞ்ஞானம் என்றால் என்ன? என்பதற்கு ஐன்ஸ்டைன் தந்த விளக்கம் மனித நேயமிக்கதாக இருந்தது என்பது மட்டுமல்ல; அவருக்கு முன்பு அத்துறையிலே அரும்பெரும் சாதனைகளைக் கண்டறிந்த அனைவரையும்விட உயிராபிமானமிக்கதாக விளங்கியது என்றே கூறலாம். அவர் கூறுகிறார் :
“அறிவியலாவது, மனிதனிடம் உள்ள மனித நேயத்தை, மனிதாபிமானத்தை, மனிதத் தன்மையை, நாளுக்கு நாள் விரிவுபடுத்தி, அவனுக்கு மென்மேலும் ஆன்ம விடுதலை தருவதாகவும், அவனுடைய அறிவானது இயற்கையோடு ஒன்றி, ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி வியனுலகை ஆட்சி செய்யும் ஆற்றலை வழங்குவதாகவும், இந்த உலகில் பிறந்த மனிதன் தனது உற்றார் உறவோடும், சுற்றத்தோடும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப்போதிக்கும் அறிவாகவும் திகழ வேண்டும்” என்று ஐன்ஸ்டைன் நமக்கு அறிவு புகட்டுவது வியப்பிற்குரியதாக உள்ளது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற அந்த மனிதப் புனிதன் ஜெர்மன் நாட்டின் வள்ளல் பெருமானாகவே, கருணையின் சிகரமாக, அன்பின் விளை நிலமாக, பண்பின் பெட்டகமாக ஆய்வின் விஞ்ஞானமாக, ஆற்றலின் மெய் ஞானமாக தனது கடைசிக் காலம் வரை வாழ்ந்து காட்டினார்.
உயர்வான விஞ்ஞானியும், உயர்வான சமய ஞானியும் ஒருவருக்கொருவர், ஒன்றுபட்டவரே தவிர, முரண்பட்டவர்கள் அல்லர் என்பதை நிரூபித்த கண்கண்ட விஞ்ஞானி அவர். அப்படி இருப்பவர்கள் அல்லது தொண்டாற்றுபவர்கள் இரண்டும் சேர்ந்த உணர்ச்சிகளின் இரு வேறு உருவங்களே என்பவையும் அவரது வாழ்வில் தோற்றமளித்து ஒளி வீசின.
அவர், இவ்வாறு ஒரு பண்பாட்டின் சிகரமாக வாழ்வதற்குரிய பின்புலக் காரணம் என்னவாக இருக்கும் என்பதும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
ஐன்ஸ்டைன் பிறந்த
காலச் சூழ்நிலை!
உலக வரலாற்றில் ஜெர்மன் நாடு அறிவுத் துறையிலும் சரி, கலைத்துறையிலும் சரி, கிரேக்க நாட்டைப் போல, குறிப்பாக ஏதென்ஸ் நாட்டின் நாகரிகம் போல சிறந்து விளங்கியதைக் காண்கிறோம். குறிப்பாக தெற்கு ஜெர்மன் நாடு உச்சகட்ட நாகரிக நாடாக இருந்தது எனலாம்.
தென் ஜெர்மன், புகழ்ச் செல்வர்கள் பலரைத் தோற்றுவித்த நாடு. இங்கே மதப் பூசல் கிடையாது, மனித இன வேறுபாடுகள் கிடையா. எங்கும் சமத்துவம், சகோதரத்துவம், ஆன்மீகத்துவம், செல்வத்துவம், ஒழுக்கத்துவம் ஒளி வீசி அமைதியான வாழ்க்கையிலே ஆனந்தமாக வாழ்த்துகொண்டிருக்கும் ஒருபகுதியாக விளங்கியது.
வடக்கு ஜெர்மன் நாடு அப்படி அல்ல; தெற்கு ஜெர்மனிக்கு நேர் விரோதமாக வாழ்ந்து வரும் நாடு. மண்ணாதிக்கம் செய்வது வடக்கு ஜெர்மன் மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும் சுபாவமாகும். இதனால் மற்ற நாடுகளையும், மிற இனத்தவர்களையும் வட ஜெர்மன் நாடு ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறியது.
பிரஷ்யர்கள் போர் வெறியர்கள். அவர்கள் வட ஜெர்மனியை போர்வெறி நாடாக மாற்றுமளவுக்கு படைகளைப் பெருக்கி மற்ற நாடுகள் மீதும் படையெடுக்கலானார்கள். தென் ஜெர்மனியை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தார்கள். இப்படிப்பட்ட மண்வெறி பூமிக்குத் தான் பிற்காலத்தில் போர் வெறியன் இட்லர் படைதளபதியானான். உலகப் போர் மீண்டும் இரண்டாவது முறையாக உருவானது.
போர் வெறியன் இட்லர், ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்று உலக நாடுகள் முன்பு போர்முரசு அறைந்தான். ஜெர்மனியிலே உள்ள யூதர்களை அடியோடு எதிர்த்தான்! அழித்தான்! எங்கு பார்த்தாலும் யூதர்கள் ஆதிக்கமும்-செல்வாக்கும் வேரூன்றியுள்ளதை ஆணிவேரற அறுக்க நினைத்து ‘யூத இனத்தைப் பூண்டோடு ஒழித்துக் கொல்வேன்! என்று சபதமிட்டான்! சவால்விட்டான்! அதற்கான போர்க்களங்களைக் கண்டு போரிட்டு ஜெர்மனியின் சர்வாதிகாரியானான்.
இந்த சம்பவங்களை எல்லாம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்டார்! அப்போது அவருக்கு வயது ஐம்பது இருக்கக் கூடும். நாட்டுப் பகை, இன ஈன விரோதம், போர் வெறி, மண் ஆதிக்கம், கிறித்துவ, யூத மத வெறி மோதல்கள் இவைகட்கு இடையே வடஜெர்மனியும் தென் ஜெர்மனியும் சிக்கி அழிந்து, புதிய ஜெர்மனி தேசியம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு எழுந்தது!
இத்தகைய கொடுமைகளுக்கு உட்பட்ட தெற்கு ஜெர்மன் நாட்டில், உல்ம் என்ற ஒரு சிறு கிராமத்தில், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் யூதர் இனத்திலே கி.பி. 1879-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதியன்று பிறந்தார். ஐன்ஸ்டைன் தந்தை பெயர் ஹெர்மன் ஐன்ஸ்டைன். தாய், பாலைன் ஐன்ஸ்டைன். இருவரின் செல்வ மகனாய் பிறந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
ஆல்பர்ட்டின் தந்தையாரான ஹெர்மன், அவரது உடன்பிறந்த தம்பியான ஜேக் என்பவரோடு இணைந்து மின்காந்தத் தொழிற்சாலை நடத்தி வந்தார். தனது மகனான ஆல்பர்ட்டை விருப்போடும், பொறுப்போடும், கருத்தோடும் வளர்த்துவந்தார். அந்தச்சிறிய வயதிலேயே ஆல்பர்ட் மின்காந்தக் கருவிகளை எவ்லாம் ஊன்றிக் கவனித்து தந்தை தொழிலிலே ஊக்கம் செலுத்தி வந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தாய் பாலைன் ஐன்ஸ்டைன் மகன் மீது அளப்பரிய அன்பு செலுத்திவந்தார். அவர் நகைச்சுவையோடு மகனிடம் பேசி அடிக்கடி சிரிக்க வைக்கும் கலையுணர்வு உள்ளவர்.
இசைக் கலையில் ஈடுபாடு கொண்ட பாலைன் ஐன்ஸ்டைன், வயலின் கருவியை வாசிப்பதில் வல்லவர். அதனால், தனது மகனுக்கு இசை நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். ஐன்ஸ்டைனுக்கு ஒரு தங்கை. அவள் பெயர் மேயா! தனது ஒரே தங்கையிடம் ஆல்பர்ட் அன்போடும் உண்ர்வோடும் பழகி வந்தார். தங்கையைத் தனது உயிருக்குச் சமமாக எண்ணி அவர் இணைபிரியாமல் வளர்த்து வந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், இளம் வயதில் திக்குவாயராக தெத்தித் தெத்திப் பேசும் சுபாவம் கொண்டவர். கொஞ்சம் மந்தமாக எல்லா விஷயங்களிலும் ஆல்பர்ட் நடந்து கொண்டாலும், அவரை யாரும் வெறுக்காமல் விருப்போடு தான் பழகுவார்கள். ஐன்ஸ்டைன் திக்குவாயராக இருந்தாலும், எந்த சொற்களை அவர் கூறினாலும் பொறுமையாக, பொறுப்பாக, சிதைவுற்றுச் சிதைவுற்று மெதுவாகத்தான் வெளிவரும். இவ்வாறு இவர் பேசுவது, ஆசிரியருக்கு கோபத்தை அடிக்கடி கிளறிவிடும். அதனால், அவர் அடிக்கடி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை முட்டாள் முட்டாள் என்றே அழைப்பார். ஆனாலும், அவருக்குக் கோபம் என்பதே வராது. காரணம், தனது திக்குவாய்த்தன்மை அவருக்கே நன்கு புரியும் அல்லவா? இதனால்!
ஆல்பர்ட்டுக்கு ஆசிரியரிடம் இந்தக் கோபத்திலும் ஒரு நற்பெயர் உருவானது. ‘பொய் பேசாத, உண்மை உரைப்பவர்’ என்பதே அந்த நல்ல பெயராகும். ஆனாலும், ஆல்பர்ட்டுக்கு பள்ளிக்கூடம் என்பது ஒரு சிறைச்சாலையாகவே தென்பட்டது. ஆனால், அடிக்கடி தனது தாயாரிடமும், தங்கையிடமும் அளவளாவியே காலம் கழிப்பார்! அதனால் பள்ளிபாரமே தெரியாது.
எந்தக் கேள்வியை ஆசிரியரிடம் ஆல்பர்ட் கேட்டாலும்,‘ஏன்? எப்படி? எதற்காக? எப்போது’ என்ற வினாக்களைத் தொடுக்கும் சாக்ரட்டீசியம் மாணவராகவே விளங்குவார். அதனாலும் ஆசிரியருக்கு ஆல்பர்ட் மீது கோபம் அடிக்கடி உருவாகி, ‘முட்டாள், முட்டாள்’ என்றே வகுப்பு மாணவர்கள் மத்தியிலே அழைப்பார். அப்போதும் அவருக்கு அருவருப்போ ஆத்திரமோ ஆவேசமோ வராது.
எந்தப் பாடத்திலும் அவருக்கு முழுமையான அறிவு வராது. எதையெடுத்தாலும் அரை குறைதான்! அதுவும் ஒரு காரணம், ஆல்பர்ட்டை ஆசிரியர் அடிக்கடி ‘முட்டாள், முட்டாள்’ என்று அழைப்பதற்கு.
ஆனால் ஓர் அதிசயம் என்னவென்றால், எப்பாடங்களிலும் முழுமையான அறிவு பெற முடியாத ஆல்பர்ட், கணிதத்திலும் பெளதிகத்திலும் மட்டும் தணியாத வேட்கையுடையவராகக் காணப்பட்டார். அதன் பலன், உருக்கணக்கியல் எனப்படும் Algebra, வடிவியல் அல்லது க்ஷேத்திர, கணிதம் எனப்படும் ஜியோமிட்ரி Geometry கணிதப் பாடங்களில் வல்லுநராகத் திகழ்ந்தார். இவ்வாறு, வல்லாண்மைக்குக் காரணம், ஆல்பர்ட்டின் சிறிய தந்தையாரான ஜேக்கப்பும் ஒரு காரணமாகும்.
அல்ஜீப்ரா, ஜியோமிட்ரி கணக்கியல்களில் ஆல்பர்ட் அற்புதமாகப் போடும் வித்தகம் ஆசிரியருக்கும் வகுப்பு மாணவர்களுக்கும் ஓர் அதிசயமாக விளங்கியது.
பெளதிகம் என்ற Physicsக்கு கணித உண்மைகளே அடிப்படை. ஆனால், புரிந்தவர்களுக்கு அது சுலபமானது. எனிது. மிகச் சிக்கலான கணிதக் கோட்பாடுகள்தான், கணித உண்மைகளின் அஸ்திவாரம் என்பதும் பெளதிகக் கணக்கியலின் உண்மையுமாகும். கணிதம் இல்லையென்றால் பெளதிகம் இல்லை என்ற அளவுக்கு அவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமுடையனவாகும்.
இந்த உண்மைகளைத்தான் ஆல்பர்ட் தனது தத்துவங்களில் அவரறிந்த கணித உண்மைகளை விளக்கிட கையாண்டார். அவர் உலகப் புகழ்பெற்ற பெளதிகவாதியாகத் தோற்றமளித்ததற்கு காரணம், அவரது நுண்மான் நுழைபுலக் கணித அறிவே என்பதில் எவ்வித ஐயமும் இல்லையெனலாம்.
ஜெர்மானிய நாட்டிலிருந்த அவரது தந்தை ஐன்ஸ்டைனும், ஜேக்கப்பும், ஆல்பர்ட் தாய், தங்கை அனைவரும் இத்தாலி நாட்டிற்குக் குடியேறினார்கள்.
உலகில், சொந்த நாடுகளே இல்லாத இனம் இரண்டே இரண்டு இனங்கள்தான் இருந்தன. ஒன்று ஆரிய இனம், மற்றொன்று யூத இனம். ஆரிய இனத்தைச் சேர்ந்த போர்வெறியன் இட்லர். யூத இனத்தை வேரறுக்க இனப்பழியில் ஈடுபட்டான். ஆனால் மண்ணாதிக்க வெறியன் இட்லர் இறுதியில் மண்ணைக் கவ்விட அவனது இனப்பழிவாங்கும் புத்தியே காரணமாக அமைந்தது.
இரண்டாவது உலகப் போர் முடிவுற்றபின்பு, இன வெறியன் இட்லரும் அவனது கூட்டணி நண்பர்களும் தற்கொலை முடிவுக்குப் பலியான பிறகு, உலகம் உத்வேக உணர்வோடு இயங்க ஆரம்பித்தது.
இனவெறியன் இட்லர் முடிவை எதிர்த்து, சொந்த நாடே இல்லாமல் நாடோடி இனமாகத் திரிந்த யூத இனம், கோல்டாமியர் Goldmeir என்ற ஒரு பெண்பிரதமர் தலைமையில், ‘இஸ்ரேல்’ என்ற ஒரு சொந்த நாட்டை உருவாக்கி அவர் ஏறக்குறைய இருபது மூன்று ஆண்டுகளாக புகழ்பெற்ற பிரதமராக உலகில் பவனி வத்தார் என்பது உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் அதிசயச் சாதனையாகும்.
ஆரிய இனமான மற்றொரு இனத்திற்கு இன்றளவும் ஒரு சொந்த நாடே கிடையாது என்பது உலக வரலாறு உணர்த்தும் ஓர் உண்மையுமாகும்.
அந்த யூதர் இனத்தில் பிறந்த ஞானமேதைதான் நமது ஆல்பர்ட் ஜன்ஸ்டைன். அதுவும் அழிக்கப்பட இருந்த, ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த மாமேதை, விஞ்ஞான வித்தகராக விளங்கியது மட்டுமல்ல; அணு முதல் அண்டம் வரை உலகத் தத்துவங்களை ஆராய்ந்து புதுமையான புரட்சிகரமான அறிவியல் கோட்பாடுகளை எல்லாம் கண்டுபிடித்து ‘அணுகுண்டு’ என்ற அழிவுச் சக்திக்கும் பயன்படுத்தலாம் என்ற அறிவியல் பயன்பாடுகளின் பண்பு நாயகனாகவும் விளங்கினார் என்றால்,‘அறிவு’ என்ற ஒன்று உலகில் உள்ளவரை அவரைப் பாராட்டாமல் இருக்குமா? சிந்தனை செய்து பாருங்கள்.
எந்த யூத இனத்தை அழிக்கவேண்டும் என்று இன எமன் இட்லர் கங்கணம் கட்டிக்கொண்டு போர்வெறி முரசம் கொட்டினானோ, அவனுடைய இனவெறியை, எதிர்த்து அடிமையாக யூதர் இனம் வாழாது ‘எங்களுக்கென்து ஒரு நாடு வேண்டும். அது பாலைவனமாக இருத்தாலும் சரி’ பசும்சோலைவனமாக இருந்தாலும் சரி, என்று மண் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்ற இனம்தான் யூத இனம்.
அந்த யூத இனத்தில் எத்தனையோ பேரறிவாளர்கள் சிந்தனையாளர்கள், ஞானமகான்கள், ஏன் இயேசு பெருமானே தோன்றினார் என்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்துவதை நம்மால் மறக்கமுடியாத ஒன்றன்றோ!
அதுபோலவே, உலக வரலாற்றில் தங்களது இன உரிமைகளுக்காக போராடி வரும் இனங்கள் இரண்டு இருக்கின்றன. அவற்றுள் ஒன்று Block Movement, அதாவது கறுப்பர் இனம் எனப்படும் நீக்ரோ இனம்;மற்றோர் இனம் Dravidian Movement என்கிற திராவிடர் இனமாகும்.
கறுப்பர் இன உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டங்களிலே அமெரிக்க வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து மனிதநேய விரும்பிகளான ஆப்ரகாம்லிங்கன், ஜான்கென்னடி என்ற அமெரிக்க அதிபர்களே மனித இன உரிமைகளுக்காகச் பலியானார்கள்; சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! சுட்டுக்கொன்றவர்கள் யார் தெரியுமா? அவர்களும் வெள்ளை இனத்தவர்களே!
கறுப்பர் இன உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன் மார்ட்டின் லூதர் கிங் என்ற கறுப்பர் இன வழி வந்த பாதிரியாரும் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை வரலாறு தமக்காக வருந்திக் கண்ணிக் உகுத்துக் கொண்டிருக்கின்றதைப் பார்க்கின்றோம்! அவரைச் சுட்டவனும் ஓர் ஆங்கிலேய இனத்தன்தான் என்பதைப் பார்க்கும்போது மனித நேயம் எவ்வாறு ஓர் இனத்தால் சிதைத்துச் சீரழிக்கப் பட்டது இட்லரிசத்தைப்போல என்று எண்ணி வருந்தாமல் இருக்க முடியுமா?
ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிடர் இனத்துக்காக, ஆரிய இனத்தை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார்; அறிஞர் அண்ணா போன்றோர் உழைப்புகளுக்குரிய பலன் ஏதும் இல்லாதது எண்ணியெண்ணி சிந்திக்க வேண்டிய ஓர் அடிப்படையான மர்மமன்றோ!
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் யூதர் இனத்தில் தோன்றினாலும், யூதர் இன மனித உரிமைகளுக்காக மட்டுமே போராடாமல், அவர் கண்டு பிடித்த அறிவியல் புரட்சிக் கோட்பாடுகள் எல்லாம், யூத மக்களுக்காக மட்டுமே இல்லாமல், உலக மக்களுடைய முன்னேற்றத்துக்காகவும் அவர்களுடைய வளர்ச்சிக்காகவும், ஆக்க சக்திகளுக்காகவும் பயன்படும் வகையில், மனிதநேய உரிமைகளுக்காக இன்றளவும் பயன்படுவதைக் கண்டு உலகமே வியந்து, பாராட்டிடும் வகையில் விளங்கி வருவதை உலக வரலாறு உணர்த்திக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். கைமாறுண்டோ இந்த மனிதநேயக் கடப்பாடுகளுக்கு?
அதனால்தான், தனது தந்தையை வற்புறுத்தி, ஜெர்மானிய நாட்டின் குடியுரிமையைப் புறக்கணித்து, தான் குடியேறிய இத்தாலி நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றார். தனது இறுதிக் காலத்தில் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார்.
ஆல்பர்ட் வாழ்ந்த காலத்தில் ஜெர்மன் நாட்டுக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க மறுத்தார். காரணம், இட்லர் யூதர் இனத்தைப் பழி வாங்கியக் கொடுமை மனம் வெறுத்து, சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஆரிக் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த பல்தொழில் நுண்கலைக் கல்விநிலையமான Poly Technic-ல் சேர்ந்து கணிதம், பெளதிகம் பிரிவுகளிலே பாடம் பயின்றார்.
பள்ளிப் பருவத்திலே, உலக மேதைகள் எனப்பட்டவர்களில் சிலர் முட்டாள் பட்டத்தைப் பெற்றவர்களாகவே விளங்கினார்கள். அவர்களிலே ஒருவர்தான் சிறந்த ராஜ தந்திரி என்று உலகத்தவரால் பாராட்டப்பட்ட வின்சென்ட் சர்ச்சில் என்ற புகழ்பெற்ற அரசியல் மேதை.
வின்சென்ட் சர்ச்சில் மாவீரன் நெப்போலியனைப் போல, எதை நினைக்கின்றாரோ அதில் அவர் வெற்றி பெற்றாரே ஒழிய தோல்வி கண்டவர் அல்லர். அதனால் தான், V என்ற ஆங்கில எழுத்தையே தனது வெற்றிச் சின்னமாக V: For Victory என்று கூறியபடியே வாழ்ந்து மறைந்தார்.
அவரைப் போலவே, தமிழ்நாட்டில் ஏறக்குறைய பதினொன்று ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியிலே அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்த மக்கள் திலகம் எம். ஜி. ராமசந்திரன் அவர்களும் மக்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது இரட்டை இலை தேர்தல் சின்னத்தின் வெற்றியை நிலைநாட்டும் வகையில் தனது கையின் இரண்டு விரல்களை 'V' போலவே சுட்டிக்காட்டி ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியைக் காணாமல் வெற்றிச் சின்னத்தையே நிலைநாட்டி வந்தார் என்று தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்தது என்று கூறலாம்.
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆல்பர்ட் ஜன்ஸ்டைனும், பள்ளிப் பருவத்திலே இதற்கு மூன்பு முட்டாளாக இருந்ததைப் போன்றில்லாமல், விரும்பிய படிப்புக்கேற்ற கணிதத்திலும், பெளகத்திலும், அந்த பாலிடெக்னிக் கல்வி நிலைய ஆசிரியர்கள் பாராட்டி மகிழும் அளவிற்கு அதிசய மாணவனாக புகழ்பெற்றாரே தவிர, படிப்பிற்கு தேர்ந்து எடுத்துக் கொண்ட பாடங்களில் தோல்வியை அவர் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமாகும்.
எந்தக் கல்வி நிலையத்தில் ஆல்பர்ட் மாணவனாகச் சேர்ந்தாரோ அதே பள்ளியில் ஆசிரியர் பணியைப்பெற்று நல்லாசிரியர், வல்லாசிரியர் என்ற புகழையும் அடைந்தார்.
தனது பள்ளி நண்பரான மார்சல் என்பவரின் தந்தைக்கு அரசு செல்வாக்கு இருந்ததால், அவர் மூலமாக தனது தந்தையைக் கொண்டு பெர்ன் நகரிலிருத்தி பேடண்ட் என்ற பதிவுரிமை அலுவலகத்தில் 3000 பிராங்க் சம்பளம் பெறும் ஒரு விஞ்ஞானத் துணை அலுவலராகச் சேர்ந்து பணியாற்றினார். இந்தப் பணியை, அவர் பெரிதும் விரும்பினார்! காரணம், மேற்கொண்டு தனது அறிவியல் ஆய்வுப் பணிக்கு இந்த வேலையிலே, அதிக நேரம் ஓய்வு கிடைத்ததுதான்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மிகத் திறமைபெற்ற அறிவியல் ஆய்வாளராக புகழ் பெற்று வந்த போதும் கூட ஏதோ ஒரு துணை உதவியாளர் பணிதானே என்று அதைத் துச்சமாக மதியாமல் பெற்ற வேலையைப் பொறுப்போடு கவனித்து வந்த நிபுணராகத் திகழ்ந்தார்.
பாலிடெக்னிக் கல்விநிலையத்தில் பணியாற்றி வந்த ஐன்ஸ்டைனுக்கும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மிலிவா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு, 1902-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் புரிந்து கொண்டார்கள். வாழ்க்கை அமைதியாகவும் அன்பாகவும், சுவையாகவும் அமைந்து வாழ்ந்து வந்தார்கள்.
ஐன்ஸ்டைன் பணியாற்றி வந்த பதிவுரிமை அலுவலகத்தில், யார் யார் புதிய புதிய கண்டுபிடிப்புகளை தங்களது ஆய்வுகள் மூலமாகக் கண்டுபிடிக்கின்றனரோ அவர்களது கண்டு பிடிப்புப் புதுமைகளையும், நுணுக்கங்களையும், அதன் முழுவிவரங்களையும் அந்த அலுவலகமும் ஆராய்ந்து அவற்றின் தகுதிகளையும் பதிவுரிமை செய்வதுதான் அங்குள்ள இளம் விஞ்ஞானிகளின் வேலையாகும்.
இந்த பணிகளை மிகத் திறமையாகவும் தெளிவாகவும் ஆற்றி வந்த ஆல்பர்ட், அவற்றின் ஆய்வுகளால் தனது திறமைகளையும் அந்தந்த பிரிவுகளில் வளர்த்துக் கொண்டார். அதனால் அவருக்கு பெருமையும் புகழும் வளர்ந்து தேடி வந்தது.
ஐன்ஸ்டைன் இவ்வாறு ஓயாமல் ஒழியாமல், செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்பி, உணர்ந்து ஆராய்வதும், அதற்கான விவரங்களைச் சேர்ப்பதும், விளக்கி தனது மாணவிக் காதலிக்குக் கூறிக் கூறி அறிவு பெறுவதும் அவருடைய மனைவிக்கு சிறிதும் பிடிக்கவில்லை. அதனால், ஆல்பர்ட்டின் தொழில் மீது அந்த மனைவிக்கு வெறுப்பும், வருத்தமும் வேதனையும் எரிச்சலும்தான் ஏற்பட்டது.
தமது மனைவிக்கு தனது அறிவியல் ஆய்வை விளக்குவது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை அறிந்த ஆல்பர்ட், தனது நண்பர்களிடமும், ஏன், ஏதுமறியாத தனது சிறு மகனிடம் கூறிப் பெருமிதம் கொண்டு மகிழ்வார்.
தான் கண்டுபிடிக்கும் அறிவியல் நுணுக்க ஆய்வுகளைப்பற்றி அவ்வப்போது கட்டுரைகளாக எழுதுவார். 1905-ஆம் ஆண்டின் போது, ஐன்ஸ்டைன் பெயரால் பல அறிவியல் புரட்சிக் கட்டுரைகள் வெளி வந்தன! அவை மக்களிடையே, குறிப்பாக விஞ்ஞான உலகிலே ஒரு புதுமையை, புரட்சியை, புலன் நுணுக்க விபரங்களை உருவாக்கிற்று.
‘இயங்கும் பொருள்களின் மின் இயக்க ஆற்றல், பிரவுனின் இயக்கங்களுக்கான விதிகள், ஒளியின் தோற்றம் மூலங்கள், அதன் மாறுபாடுகள், அணுத் திரள்களின் பருமன், அதற்கான அளவைகள் நிர்ணயிப்புகள் போன்ற, அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதியபடியே இருந்ததால், அவரது கருத்துக்களைப் பற்றிய பேச்சே சூரிக் பல்கலைக் கழகம் முதல் இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் முழுவதும் பரவியது. அதனால், அந்த பல்கலைக்கழகம் அவருக்கு தத்துவப் பேராசிரியர் என்ற பட்டத்தைக் கொடுத்துப் பாராட்டியது.
அந்தப் பட்டம் பெற்ற ஐன்ஸ்டைன், தனது சார்பு நிலைக் கொள்கை Theory of Relatirity என்ற நூலை ஆய்வு விளக்கத்தோடு வெளியிட்டார். இந்த நூலில், இடம் காலம், அண்டம் என்பவற்றைப் பற்றிய விளக்கமும் ஆய்வும் இடம்பெற்றன. அந்த நூலுக்கு ‘சார்பு நிலைக் கொள்கை’ என்ற பெயரை அவர் சூட்டினார்.
இந்த நூல் வெளி வந்ததும் விஞ்ஞான உலகத்திலே ஒரு பெரும் மாற்றத்தைத் தந்தது. எல்லா சிந்தனையாளர்களும் ஆல்பர்ட்டின் அறிவியல் புரட்சிகளைப் பற்றியே பேச ஆரம்பித்தார்கள். இந்த ஆராய்ச்சிக் கருமீது மற்ற விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து வரும் நிலை ஏற்பட்டது.
இந்த நூலினுள்ளே கூறப்பட்ட ஆராய்ச்சியின் உருவம்தான் அணுகுண்டு என்ற பயங்கரத்தை உருவாக்கியது. இந்த அணுகுண்டு கண்டு பிடிப்பு, விஞ்ஞான உலகத்தையே ஆட்டிப்படைத்து அச்சுறுத்தியது. அதற்கான முழு விவரங்களை அறிய ஆல்பர்ட்டைத் தேடி அறிவியல் உலகம் வந்தது. அதனால், சூரிக் பல்கலைக் கழகம் அவருக்கு பேராசிரியர் பணியை வழங்கியது. இந்தப் பணியை, 1909-ஆம் ஆண்டில், தனது முப்பதாவது வயதிலே பெற்று, உலகப் புகழ் பெற்றார்.
பல்கலைக் கழகங்கள் தோறுமுள்ள விஞ்ஞானக்கழக அழைப்புகளை ஏற்று தனது கண்டுபிடிப்புக்களைப் பற்றி விளக்கமாக உரையாற்றுவார். பத்திரிகைகளிலே எழுதுவார்; அறிவியல் வித்தகர்கள் அவையிலே பேசுவார். இதற்கே அவருக்குரிய நேரம் போதவில்லை.
இவ்வளவு அறிவியல் ஆய்வுகளைச் செய்தும், எழுதியும், பேசியும் வந்த ஆல்பார்ட்டின் வாழ்க்கை, பொருளாதாரத்தில் போதிய முன்னேற்றத்தைக் கொடுக்கவில்லை.
இதற்குப் பிறகு பிரேக் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அதற்கேற்ப போதுமான வருவாயும் கிடைத்தது. ஆனால், எப்போது பார்த்தாலும் விஞ்ஞான ஆராய்ச்சியிலே ஈடுபட்ட ஆல்பர்ட் வாழ்க்கை, அவரது மனைவிக்கு மீண்டும் வெறுப்பையே தந்தது அதனால், அந்த அம்மையாரே விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையில், ஆல்பர்ட் பெடால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பிறகு, பெர்லின் நகரிலே உள்ள பிரஷ்ய விஞ்ஞான அவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். முழுநேர ஆய்விலே தனது நேரத்தைச் செலவிட அவரது மனைவியின் விவாகரத்தும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம். ஸ்விட்சர்லாந்து நாட்டின் குடியுரிமையோடு அவர் ஜெர்மன் நாட்டு பெர்லின் நகரிலே பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் உலகப்போர் மூண்டது.
ஆல்பர்ட்டின் மனித நேயம், கருணை உள்ளம், ஜெர்மானியர்களின் போர் வெறி முயற்சிகளிலே தனது அறிவியல் சாதனைகளைப் பயன்படுத்த, ஆய்வு புரிய, மறுத்து விட்டது.
ஐன்ஸ்டினின் போர் உதவி மறுப்பு, போர் வெறி எதிர்ப்பு அனைத்தும் ஜெர்மன் ஆதிக்க வெறியர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு ஐன்ஸ்டைன் மீது வெறுப்பும் பகையும் உருவாயிற்று.
அந்த நேரத்தில் பெர்லினில் உள்ள அவரது தாய் மாமன் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெர்மன் ஆதிக்க வெறியர்கள் விரோதங்களை பெரிதுபடுத்தாமல் புறக்கணித்தார். அங்குதான், அவரது தாய்மாமன் மகளான எல்சா என்ற விதவையை ஆடம்பரம் எதும் இல்லாமல், மறுமணம் செய்து கொண்டார்.
எல்சாவுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், அவளை இரண்டாவது மனைவியாக மகிழ்ச்சியோடு ஏற்று மன அமைதியோடு தனது ஆய்வையும், வாழ்வையும் இன்பமாக அனுபவித்து வந்தாா்.
இந்த காலகட்டத்தில், ஆல்பர்ட் தனது கண்டுபிடிப்புகளை அறிவியல் கழக அறிஞர்கள் அவையிலே தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டினார்.
“சூரியன் இருக்கும் திக்குக்கு அடுத்துள்ள நட்சத்திரங்கள், ஐன்ஸ்டைன் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது விலகித் தெரியவேண்டும்.”
“கதிரவனது ஈர்ப்புச்சகதியால் அருணனது அருகாமையில் ஒளிக்கிரணங்கள் தமது பாதையிலே இருந்து விலகிச் செல்ல வாய்ப்பு உண்டு என்று இதனைக் கொள்ளலாம் அல்லது விளக்கலாம்” என்று.
மேற்கொண்ட இரண்டு கொள்கைகள் தமது கண்டுபிடிப்புகள் என்று அறிவியல் கழகம் முன் அறிவித்தார்.
இவை உண்மைதானா என்று இரண்டு விஞ்ஞானிக்ள் ஆல்பர்ட்டின் கருத்துக்களை ஆராய முற்பட்டார்கள்.
அந்த ஆய்வு நடந்த 1919-ஆம் ஆண்டில் முழுமையான, சூரிய கிரகணம் ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் அந்த சோதனை புரிய சுலபமாக இருந்தது. இரண்டு விஞ்ஞானக் குழுவினர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு இரு வேறு இடங்களிலே இருந்து அந்தச் சூரிய கிரகணத்தைப் படம் எடுத்தார்கள்.
இந்தப் படங்கள் எல்லாம், ஐன்ஸ்டைன் என்ன கருத்துக்களைக் கண்டுபிடித்தாரோ, அவற்றை உண்மையென நிரூபித்தது.
ஐன்ஸ்டைன் கண்டுபிடிப்புக் கொள்கைகள் உண்மை உண்மையென உணர்ந்துகொண்ட விஞ்ஞான உலகம், அவரைப் பாராட்டியது. எதிர்பாராத அறிஞர்களிடம் இருந்தெல்லாம் வரவேற்பும் வாழ்த்தும் வந்து குவிந்தன. இதனால், ஆல்பர்ட் உலகப் புகழைப் பெற்றார்.
உலகப்போர் 1914-ல் ஆரம்பமாகி 1918-ஆம் ஆண்டு மூடிந்து, அதற்கான சமாதான உடன்படிக்கைகள் நாடுகள் இடையே ஏற்பட்டனவென்றாலும் அந்நாடுகளது விரோத உணர்ச்சிகள், போர் பழிவாங்கல் எண்ணங்கள் நீறுபூத்த நெருப்புப் போலவே நிலவியிருந்தது.
தோல்வியடைந்ல் ஜெர்மன் நாட்டு ஆதிக்க வெறியர்கள் இந்தப் போரில் ஐன்ஸ்டைனின் ஒத்துழையாமையைக் கண்டு, யூத இனத்தவர்களைக் குறை கூற ஆரம்பித்தார்கள். அதிலும் குறிப்பாக, ஐன்ஸ்டின் மீதும், அவரது அறிவியல் சாதனைகள் மீதும் காழ்ப்புணர்வையும். வெறுப்புணர்வையும் காட்டினார்கள்.
இவ்வாறு முதல் உலகப்பெரும் போரிலே ஜெர்மன் போர் வெறியர்கள் இடையே எழுந்த மனக்கசப்பு, வளர்ந்த யூத இன வெறுப்பு, ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகள் மீது ஏற்பட்ட தனி மனிதப் பகை, அனைத்தும்தான் 1944-1948-ஆம் ஆண்டின் இரண்டாவது உலகப்போர் வெறிக்குரிய அடிப்படையாக அமைந்தது.
யூதஇன எதிர்ப்பால் இட்லர், நாசிசம் என்ற பெயரிலே ஜெர்மனியில் வளர காரணமாக இருந்தது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மனிதநேய மாண்பாளராகவும். உயிரியக்க வளர்ச்சிக்குரிய அபிமானியாகவும், போர்வெறி எதிர்ப்புக்குரியவராகவும் இருந்ததால்தான் அவர் மதம், இனம், மொழி, நாடுகளை எல்லாம் கடந்த உலக அமைதி யாளர் என்ற உத்தமனாக உலவ முடிந்தது என்பது அவரிடம் குறிப்பிடத்தக்க பண்பாகும்.
இந்த நேரத்தில் ஐன்ஸ்டைன் ஜெர்மன் நாட்டைவிட்டு அமெரிக்க நாட்டுக்குத் தனது மனைவியுடனும், மற்றும் குழந்தைகளுடனும் சென்றார். அமெரிக்கா அவரது அறிவியல் சாதனைகளை. ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தால் ஆல்பர்ட்டையும் அவரது குடும்பத்தையும் அந்த நாட்டு மக்கள் வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்த நாட்டு பத்திரிகைகளும் அறிவியல் வித்தகா்களும் ஐன்ஸ்டைன் ஆய்வைப் பாராட்டினார்கள். ஆனால் இவற்றை எல்லாம் கண்ட அவர், ‘பணியுமாம் பெருமை’ என்ற குறளுக்கு இலக்கணமாக அமெரிக்காவிலே உலா வந்தார்.
அமெரிக்காவிலே மட்டுமல்ல, உலக நாடுகளில் இருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து குவிந்தன. இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்த அவர், லண்டன் மாநகரிலே மக்கள் வரவேற்புகளிலே மகிழ்ந்தார்! தனது மனைவி மக்களுடன் லண்டன் நகர் விருந்துபச்சாரங்களிலே பெர்னாட்ஷா போன்ற மேதைகளுடன் கலந்து கொண்டார்.
ஆல்பர்ட் லண்டனில் ஆற்றிய உரைகளும், ஜப்பான் நாட்டில் பேசிய அறிவியல் பேச்சுகளும், பாலஸ்தீன நாட்டில் அவர் பங்கேற்ற பாராட்டு விழா உரைகளும், சீனா, இந்தியா முதலான வேறு பல நாடுகளுக்கும் அவர் செய்த சுற்றுப்பயணங்களும் ஓர் புதிய திருப்பத்தையும் அறிவியல் எழுச்சிகளையும் உருவாக்கிற்று.
நோபல் பரிசு
பெற்றார்
உலகில் உள்ள எந்தப் பரிசுக்கும், விருதுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு நோபல் பரிசுக்கு உண்டு. இந்த பரிசுப் பணம் மிக அதிகமாக இருப்பதால் மட்டுமே உயர்ந்த பரிசு என்று மதிக்கப்படுவது இல்லை.
இந்த அரிய பரிசை உருவாக்கியவர் ஆல்பிரட் நோபல் என்ற ஒரு அறிவியல் மேதை ஆவார். 1833-ல் தோன்றிய நோபல் 1896-ஆம் ஆண்டு மறைந்தார். அதற்குப் பிறகு 1901ஆம் ஆண்டு முதல் அவர் பெயரால் நோபல் பரிசு அளிப்பது ஒரு திட்டமாகச் செயல்பட ஆரம்பித்தது.
இலக்கியம் Literature, இரசாயணம் Chemistry, பெளதீகம் Physics, மருந்து அல்லது உடற்கூறு Medicine or Physiology, சமாதானம் Peace, பொருளாதாரத்துறை Economics ஆகிய துறைகளிலும் யார் யார் புதிய சாதனைகளை நிகழ்த்துகின்றனரோ, அவர்களுக்கு நோபல்பரிசு வழங்கப்பட வேண்டும் என்பது விஞ்ஞானி நோபல் திட்டமாகும். இந்த பரிசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ஆம் நாளான நோபல் மறைவு நாளன்று, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சாதனையாளரைத் தேர்வு செய்து வழங்கப்படும் பரிசு ஆகும்.
இந்தப் பரிசு நாடு, இனம், சாதி, மதம் என்ற பாகுபாடுகளை எல்லாம் தாண்டி, பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சுவீடனைச் சேர்ந்த் ஸ்டாக்ஹோம் நகரிலும், நார்வே நாட்டிலுள்ள ஆஸ்லோ நகரிலும் வழங்கப்படும்.
நமது இந்திய நாட்டில் Raman Effect ‘ராமன் விளைவு’ என்ற கண்டுபிடிப்புக்காக சர். சி. வி. ராமனும் இலக்கியத்திற்காக கவியரசர் இரவீந்திரநாத் தாகூரும், அன்னைதெரசா உலக அமைதிக்(world Piece) காகவும் இந்தநோபல் பரிசைப் பெற்றுப் பெருமை அடைந்தாா்கள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1922-ஆம் ஆண்டில் இந்த நோபல் பரிசைப் பெற்றார். எதற்காக இந்த அரிய பரிசைப் பெற்றார்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்த ‘ஒளிமின் விளைவு’ Photo Electric Effect என்ற ஆராய்ச்சிக்காக,ஸ்வீடன் நாட்டு அறிவியல் கலைக்கழகம் இந்த நோபல் பரிசை வழங்கி அவரைப் பாராட்டியது.
‘ஒளிமின் விளைவு’ என்றால் என்ன்? ‘சில உலோகங்களின் மீது ஒளி விழும்போது எலக்ட்ரான்கள் Electrons வெளிப்படுகின்றன. இதனைக் கொண்டு சிறிய அளவில் மின்சார சக்தியைக் கண்டுபிடிக்கலாம்’. இதுவே ‘ஒளிமின் விளைவு’ என்று கூறப்படும்.
இந்த ‘ஒளிமின் விளைவு’ அடிப்படையில்தான் இன்றைய சினிமா எனப்படும் ‘பேசும்’ படம் உருவாயிற்று. Film பிலிம் பக்கவாட்டில் ஒலிப்பதிவை இணைக்க இந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஐன்ஸ்டைனைப் ‘பேசும்’ படத்தின் தந்தை என்று குறிப்பிடலாம்.
இந்த நோபல் பரிசு மூலம் அவர், பணமாக நாற்பதாயிரம் டாலர்களைப் பெற்றார். இந்தப் பணத்தை ஐன்ஸ்டைன் தனது முதல் மனைவியான மிலீசாவிற்கும், அறக்கொடையாக மற்ற செயல்கட்கும் பங்கிட்டு வழங்கினார். மாஜி மனைவிதானே என்று மிலீசாவையும், அவர் பெற்ற மகனையும் விட்டுவிடாமல், அவர்களது வாழ்க்கைகாக உதவினார் என்றால், அவருடைய மனிதநேயத்தைப் பாராட்டி மகிழத்தானே வேண்டும்!
1933-ஆம்ஆண்டு, ஜெர்மனி நாடு ஒரு பாசிச வெறியர்கள் ஆதிக்கம் மேலோங்கி வந்த இனவெறி நாடாக மாறியது. ஜெர்மனியர் என்றால் ஆரியர்கள் என்ற இனப் பிரச்சாரம் கடுமையாகத் தலைவிரித்தாடியது. அதனால் யூத இனத்தவர்கள் சொல்லொணா கொடுமைகளை அனுபவிக்கும் சூழ்நிலையாக அந்த நாடு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் யூத மக்கள் பழிவாங்கப் பட்டார்கள். அதற்கு இட்லர் என்ற இனவெறியன் தலைமை வகித்தான். அவன் நாட்டையே இனவெறிப் போர்க்களமாக மாற்றி ஆர்ப்பரித்தான்.
இந்த இனவெறிக் கொடூரங்களுக்கு ஆல்பரட் ஐன்ஸ்டைனும், அவர் ஒரு யூதர் என்ற காரணத்தால் தப்ப முடியவில்லை. அவர் மீது பொய்யானக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆல்பிரட் வேறு எந்த நாட்டுக்காவது தனது குடும்பத்துடன் போய்விடுவது நல்லது என்று நினைத்தார். அதற்குள் ஐன்ஸ்டைன் வீடு மட்டுமல்ல; யூதர்கள் வீடுகள் எல்லாம் கடும் சோதனைகளுக்கும் கொள்ளைகளுக்கும், கொலைகளுக்கும் இரையாயின! அமைதியை விரும்பும் ஐன்ஸ்டைன் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தார்.
ஆல்பர்ட் வீட்டை அனாவசியமாக சோதனை போடப்பட்டது! அவருடைய வீட்டுப் பொருட்களை அலங்கோலப்படுத்தி பறிமுதல் செய்தார்கள். குடியிருந்த வீட்டையும் பறித்துக்கொண்டு ஐன்ஸ்டைனை நாடு கடத்தி உத்தரவிட்டார்கள். அவர் மட்டுமல்ல, யூத இனத்தவரும் அவர்கள் அல்லாத வேறு இனத்தவரும் ஆரியர்களால் நாடு கடத்தப்பட்டாரகள்.
நாடு கடத்தப்பட்ட ஐன்ஸ்டைனுடைய அறிவியல் கொள்கைகளை ஜெர்மனி நாட்டு கல்விக்கூடங்களில் கற்பிக்கக் கூடாது என்ற கடும் கர்வத்தால், அவரால் எழுதப்பட்ட புத்தகங்களை எல்லாம் நெருப்பிட்டு எரித்தார்கள். சோதனைக் கூடக் கருவிகளை எல்லாம் தூக்கிப் போட்டு சூறையாடி உடைத்தெறிந்தார்கள்.
இந்த மன வேதனையிலே குடும்பத்துடன் தத்தளித்துக் கொண்டிருந்த ஐன்ஸ்டைனுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் நகரின் ஓர் உயர்தர அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு அழைக்கப்பட்ட அழைப்பு அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஐன்ஸ்டைன் அமெரிக்கா சென்று பிரின்ஸ்டன் நகரத்தில் தனது பணிகளை முன்னிலும் தீவிரமாகச் செய்து வந்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்று இருக்கலாம்.
ஆல்பர்ட் தாயார், இளமைக் காலத்திலே அவருக்கு கற்றுத்தந்த இசைக்கல்வியும், வயலின் வாத்திய வாசிச்பும் அப்போது பயன்பட்டது. மனச்சோர்வும், குடும்பச் சோர்வும் சூழ்ந்த நேரங்களில் எல்லாம் தனது இசைக் கருவி மூலமாக புதிய புதிய இசைகளை உருவாக்கி அனுபவித்துக்கொண்டும், அறிவியல் ஆய்விலே சிந்தனை செய்துகொண்டும் வாழ்ந்தார்.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் ஆல்பர்ட்டின் இரண்டாவது மனைவியான எல்சா திடீரென இறந்து விட்டாள்.
1936-ஆம் ஆண்டு தனது 2ஆவது மனைவி, தான் பெற்றக் குழந்தைகள் இருவரையும் தவிக்க விட்டுவிட்டு, ஐன்ஸ்டைன் ஆய்வுக்கு அரும் துணையாக அமைந்த அந்த அம்மையார் மறைவு ஆல்பர்ட்டுக்கு ஏதோ ஒரு உடலுறுப்பை இழந்து விட்டதைப் போன்ற வேதனையையும் விரக்தியையும் தந்தது.
தனிமையாக இசைக்கருவியுடன் அமர்ந்து ஏதோ மனம் போனபடி இசை இயற்றி, தனி வாழ்வு வாழ்ந்து வந்த அவர், அவள் பெற்ற செல்வங்களையும் தாயன்போடு வளர்த்து வந்தார்.
அமெரிக்க குடியுரிமை அவருக்கு 1941-ஆம் ஆண்டில் கிடைத்தது. அதற்குப்பிறகு அவர் பொருளாதாரச் சிக்கலற்ற அமைதியான வாழ்வையே அனுபவித்து வந்தார். தனது அறிவியல் சிந்தனைகளுக்கு அந்த தனிமை வாழ்வு அவருக்கு மிகவும் பயன்பட்டது. போதிய ஓய்வும், நண்பர்கள் வட்டத்து பழக்க வழக்கத் தொடர்புகளும் அவர்களுடன் தனது சிந்தனைகளைப் பற்றி வாதாடிபுத்துணர்வு பெறும் சிந்தனைச் செல்வங்களும் கிடைத்து வந்தன.
ஐன்ஸ்டைன், தனது சார்பு நிலைக் கொள்கையை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆராயத் தொடங்கினார். சார்புநிலைக் கொள்கை என்பது மற்ற கண்டுபிடிப்புகளுக்கு துணையாக இயங்கும் ஓர் ஆய்வுக்கொள்கையே தவிர, அது ஒரு கண்டுபிடிப்பு அல்ல என்பதை தனது நண்பர்களிடம் விளக்கினார். அந்த சார்பு நிலைக் கொள்கைதான், அதன் ஆழமான சிந்தனைதான், அணு குண்டு என்ற ஒரு பயங்கரமான வெடிகுண்டைக் கண்டுபிடிக்க துணையாக இருந்தது எனலாம்.
உலகத்தை உருக்குலைக்கும் இத்தகைய ஓர் அழிவுச் சக்தியை உருவாக்கும் ஆபத்தான ஆற்றல் வாய்ந்த ஓர் அணுகுண்டைத் தயாரிக்கும் வியத்தகு விந்தையை தனது சார்பு நிலைக் கொள்கை மூலம் தயாரிக்க முடியும் என்று ஓர் இருபதாண்டுக் காலம் வரை ஆல்பர்ட்டே சிந்தித்தது இல்லை. இவருடைய கோட்பாடுகள் என்ற வரம்பிலே நின்றுகொண்டு, உலக விஞ்ஞானிகள் அணுவிலிருந்து மிகப் பிரம்மாண்டமான, உலகமே பிரமிக்கத்தக்க வகையில் அணுசக்தியை வெளிப்படுத்த முடியும் என்று அவர்கள் ஆய்வு செய்து கூறிய பிறகுதான், ஐன்ஸ்டைனுக்கே தான் கண்டுபிடித்த சார்புநிலைக் கொள்கையின் சக்தி அவருக்குப் புரிந்தது.
ஆல்பர்ட் இந்த சக்தியைப் பற்றிய சார்புநிலைத் தத்துவத்தைக் கண்டறிந்தபோது, ஏதோ கொள்கை அளவிலே முயன்றால் ஏதும் செய்யமுடியும் என்ற இழுபறி இருவித மனத்தோடுதான் இருந்தார்.
ஐன்ஸ்டைன் எண்ணியிருந்த எனோதானோ கருத்துக்கு மாறாக, அணுவில் அடங்கியிருக்கும் மாபெரும் ஆற்றலுடைய ஓர் அரிய சக்தியை வெளிக்கொண்டு வந்து அதை உலகுக்கு உணர்த்தமுடியும் என்று பிற விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உடனே, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனே புருவத்தை மேலேற்றி வியப்புடன் நோக்கினார் தனது கோட்பாட்டின் புரட்சியை!
- E = Mc2 என்ற பெளதிக சூத்திரம் உருவானது.
- E = என்றால் சக்தி, Energy
- M = என்றால் : பொருட்திணிவு, Mass
- C = என்றால் : ஒளியின் வேகம்
- E = Mc2 என்ற பெளதிக சூத்திரம் உருவானது.
இந்த சூத்திரத்தின் கணக்கு என்னவென்றால், Energy—Mass X Velocity of light X Velocity of light: சக்தி - பொருட்திணிவு X ஒளியின் வேகம்.
X ஒளியின் வேகம் என்ற சமன்பாடுதான் அணுகுண்டு என்ற அண்டத்தை ஆட்டி வைக்கும் அபாயமான ஓர் ஆற்றல்மிக்க பயங்கர வெடிகுண்டு தோன்ற வழிகாட்டியது என்று கூறலாம்.
இந்த சமன்பாடு என்ற Formula சூத்திரமேதான், அணு குண்டு எப்படி செய்யலாம் என்பதற்கான வழிகாட்டி முறையாக இருக்கிறது. யூரேனியம், அணுக்களைச் சிதைக்கும் போது அதிகமான அபாயமான சக்தியை வெளிப்படுத்துகிறது.
அணுக்களில் புதைந்து கிடக்கும் அபாரமான சக்திகளை அவனியின் முன் கொண்டுவந்து நிரூபிக்க இயலும் என்று மற்ற விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைனிடம் விளக்கி விளம்பிய பிறகுதான். அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்த அறிவியலின் அற்புத ஆற்றலை அணுகுண்டாகத் தயாரிக்கலாம் என்று எழுதுமாறு ஆல்பர்ட்டை அல்லும் பகலும் தூண்டிக்கொண்டே இருந்தார்கள்.
போர்மேகங்கள் அப்போது, உலக நாடுகளிடையே நாளுக்கு நாள் சிறுத்தும் பெருத்தும் மிகுந்து அந்தந்த நாடுகளிலே ஆபத்துக்களை உருவாக்கும் இடிகளாகவும் மின்னல்களாகவும் மின்னி மின்னி இடியிடித்துக்கொண்டு மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்த காலம். அதனால், ஐன்ஸ்டைன், அன்றைய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு விரிவான ஒரு கடிதத்தை எழுதினார். அதன் எதிரொலி என்ன தெரியுமா? அணுகுண்டு அண்டர் கிரவுண்டில், அதாவது ரகசியமாக, எவரும் அறியா கட்டுப்பாட்டில் தயார் செய்யப்பட்டது.
இரண்டாவது உலகப்போர் முடிவுற்ற பின்பு, வல்லரசு நாடான அமெரிக்கா, இந்த அணுகுண்டைத்தான் 1945-ஆம் ஆண்டு, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா என்ற இடத்தில் வெடித்தது. உலகமே, உயிரைப் பிடித்துக்கொண்டு உலுங்கியது. மக்கள் நெஞ்சிலே பயங்கரம் என்ற தீ பற்றிக்கொண்டது. அதனால், அவனியே ஆபத்துக்களிடையே தத்தளித்துக் கொண்டிருந்தது எனலாம்.
அணுகுண்டு வெடித்த பின்பு, அதனால் ஏற்பட்ட அழிவுச் சக்திகளைக் கேட்டும், பார்த்தும் ஐன்ஸ்டைன் அதிர்ந்து வெலவெலத்தார்! திகைத்தார்! திணறினார்! பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பற்றிக்கொண்டோமே என்று நிம்மதியற்றவராய் வேதனைக்கடலில் துரும்பானார்-பாவம்!
அணுவிலிருக்கும் ஆற்றலுக்கு இவ்வளவு பெரிய மகத்தான சக்தி உண்டா? ஒரு குண்டுக்கே இந்த உலகம் ஆடிப்போய் விட்டது என்றால், இந்த அணுகுண்டு தத்துவம் நாட்டுக்கு நாடு பரவி, ஒவ்வொரு நாட்டையும் உருக்குலைக்கும் சக்தியானால், மக்கள் கதி என்ன? உலக இயற்கைச் சக்தியின் நிலை என்ன? என்பதை எல்லாம் எண்ணி மனம் மருகினார்! வேதனையால் நெஞ்சம் வெந்தார்.
ஆனால், அழிவுக்கு மட்டும் அல்ல; ஆக்கப் பணிகளுக்கும் அணுசக்தி பயனாகும் என்று கண்டறிந்த பின்னர்தான், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனம் அமைதியும் அக மகிழ்வும் அடைந்தது. எனவே, அணுகுண்டு தோன்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய ஆராய்ச்சிதான் அடிப்படைக் காரணம் என்றாலும், அதனுடைய ஆக்கச்சக்தியையே உலகம் பயன்படுத்திக்கொள்வதுதான் அறிவுடைமையே தவிர எந்த நாடும் மக்களும் அழிவுச்சக்தியைப் பயன்படுத்தமாட்டார்கள் என்ற தத்துவம் மக்களிடையே பரவி, அவருக்கு புகழை உருவாக்கி விட்டது.
இந்த அணுகுண்டு உருவான்தற்கு காரணம் (Haiu Reaction) என்ற தொடர் செயல் என்ற பெளதிக விதியே அடிப்படை. இதனால் உலகுக்கு என்ன பயன்பாடு கிடைத்தது என்றால், அணுவில் மறைந்துள்ள அளவிடற்கரிய சக்திகளை இந்த பூமி வாழ் மக்களுக்குக் கண்டுகாட்டி அவற்றை நன்மைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பதேயாகும்.
இந்த அணுசக்தி, மக்கள் நல்வாழ்வுத்துறைக்குரிய சிகிச்சைக்கும் பயன்படுகின்றது. வானவியலில் அற்புத சக்திகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றலோடு அறிவியல் கருவியாக விண்ணையும் மண்ணையும் வலம் வருகிறது. இந்த செயற்கரிய செயலைச் செய்த பெரியவரான ஐன்ஸ்டைனுக்கு நாம் என்ன பிரதி உபகாரம் செய்தோம்! அவரது அறிவுக்களஞ்சிய நூற்களை மனித இனத்தின் ஒரு கூட்டம் அனலிலிட்டு எரித்த காட்சியைத் தானே பார்த்தோம்,
அணுகுண்டினால் விளைந்த அதிர்ச்சிகளையும் ஹிரோஷிமா நாகசாகி தீவுகளின் அழிவுகளையும் கண்டுவிட்டதை ஒருவாறு உணர்ந்த ஐன்ஸ்டைன் மேற்கொண்டும் தனது அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆராயலானார்.
பல்கலைக்கழகங்களும், அறிவியல் சங்கங்களும், விஞ்ஞான மாணவர்களும், வானியல் இளம் ஆய்வாளர்களும், இடைவிடாது அவரை அறிவியல் உரையாற்றிட போட்டிப்போட்டு அழைத்தபோது எல்லாம், ஆங்காங்கே சென்று ஆய்வுரையும், அறிவியலுரையும், அறிவுரையும், பயனுரையும் ஆற்றியபடியே எதிர்கால விஞ்ஞானத்துறை கல்வியாளர்களுக்கு வழிகாட்டியவாறே தம் கடமை பணி செய்து கிடப்பதே என்பதற்கேற்ப, அரும்பாடுகளை ஆற்றலானார்.
வயது ஏற ஏற காதோரம் முடி மட்டும் நரைக்கவில்லை; கண் இமைகளுக்குக் கீழே திரைகளும் வீழ்ந்து முதுமைக்கு முரசு கொட்டிற்று காலம், ஐன்ஸ்டைனுக்கு!
இளைத்தது உடல்! சோர்ந்தது செயல்!’ தளர்ந்தது நடை! காலையில் எழுந்ததும் உலாவரும் கால்கள், இப்போது நடைபோட மறுத்தது! அதனால், வீட்டிலேயே தங்கவேண்டிய அளவுக்கு எழுபத்தாறாவது வயது முதுமை, அவரைச் சிறையிட்டது.
அறிவியல் மருத்துவத்துக்கு விதையாக நின்ற ஆல்பர்ட்டுக்கு, அந்த வித்துக்கள் எல்லாம் விழலாகவே பயன் தந்தது! ஆம், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற அந்த விஞ்ஞான மாமேதை 1955-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் நாள் மண்ணுலகை விட்டு மறைந்தார், காலமானார். இயற்கையை ஆய்வு செய்த இயற்கைவியல் உரு இயற்கையோடு இயற்கையாக இரண்டறக் கலந்து விட்டது.
19-ஆம் நூற்றாண்டிலே தோன்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு நல்ல கரு, உருவாக உழைத்து உழைத்து, இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் திருவாக வாழ்ந்து மறைந்து நம்மையெல்லாம் கண்ணீர் சிந்தவைத்து விட்டுச் சென்று விட்டார்.
ஆனால், தனது உடலின் சில பகுதிகளையும், குறிப்பாக அவரது மூளையையும் உலக நலத்தை முன்னிட்டு, எதிர்கால இளம் வாலிபர்களின் விஞ்ஞான ஆய்வுக்களத்திற்குரிய கருவிகளாக உயில் எழுதி வைத்து தானமாகக் கொடுத்துவிட்டுச் சென்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
அறிவியல் உலகம், அவரது ஆய்வுக் கொடைகளையும், அரிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் வைத்து மேலும் சிந்தித்துக்கொண்டே இருக்கின்றது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்னவென்பதைப் பார்ப்போம்.
★ எவனும் எளிமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எளிய வாழ்க்கையே சிறப்பானது. எளிமையான இல்லத்திலே, எல்லாரும் விரும்பும் எளிமை விரும்பியாக வாழ கற்றுக்கொண்டால் மக்களும் அப்படி வாழ்பவரைப் பின்பற்றத் தயங்க மாட்டார்கள்.
★ எப்போதும் படாடோபமாக வாழக்கூடாது. தான் ஓர் அறிவாளி என்ற பேதைமை எண்ணத்தோடு பிறரிடம் பழகக்கூடாது. அனைவரையும் நேசிக்கும் மனப்பக்குவம் பெற்றாக வேண்டும்.
★ குழந்தைகள் தெய்வத்திற்குச் சமம் என்பார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று கூறுவது உண்டு. அதற்கேற்ப, ஐன்ஸ்டைன் குழந்தைகளுடன் மிகவும் நெருங்கி அன்போடு பழகுவார். அதனால் ஆல்பர்ட் குழந்தைகளின் அன்புத் தெய்வமாக நடமாடினார்.
★ நாம் குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதை விட, அக்குழந்தையிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையே சிந்திக்க வேண்டும்.
★ ஒரு பெண் விதவையானாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். அப்படி இருந்தும் தனது மாமன் மகள் என்ற உறவைவிட, கணவனை இழந்த கைம்பெண் என்ற நோக்கத்துக்காகவே அவளை இரண்டாவது மனைவியாக, ஆடம்பரம் இல்லாமல் மணந்து, அன்போடும் பண்போடும் அமைதியோடும், எவ்வித மனபேதங்களற்ற தம்பதிகளாக மனைவியுடன் ஐன்ஸ்டைன் வாழ்ந்து காட்டினார்.
★ உலக அமைதிக்கு எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்பதிலே மிகக்கவனமாக இருந்தார். எந்த காரியமானாலும், எவரிடமானாலும், சமாதானத்தோடும், அமைதியோடும் செய்யப்படவேண்டும் என்றார்.
★ சண்டைகளை வெறுத்தார்! மனித இயல்புகளுக்கு அது ஒவ்வாதது. கூடுமானவரை, சமாதானத்திற்காக உயிரையே தியாகம் செய்ய நேர்ந்தாலும் அவ்வாறு செய்வது தவறில்லை! அதுவே தியாகமாகும்.
★ தாராளமனம் படைத்திருக்க ஒருவன் கற்கவேண்டும். தமக்கென்று வாழாத் தன்னையும், பிறர்க்கென்று வாழும் பண்பையும் பெறுபவனே மக்களால் புகழப்படும் அறிஞனாவான்.
★ அவருக்கென்று கிடைத்த 40000 டாலர்களை கைவிடப்பட்ட முதல் மனைவிக்கும் அவள் குழந்தைக்கும், அறக்கொடைகளுக்கும் கொடுத்த நேர்மையாளர் அவர் . அதனால் மனிதநேயம் அவரைப் பாராட்டியது. தனக்கென்று ஒரு டாலரையும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர் வாழ்வுக்கே வளமாக இருக்கும் பண்பை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
எண்ணங்களும் கொள்கைகளும்
IDEAS AND OF OPINIONS
ஐன்ஸ்டைன் சூரிக் பள்ளியில் தத்துவப் பேராசிரியராக இருந்தபோதும், பதிவுரிமைச் சங்கத்தின் பணியாளராக பணிபுரிந்தபோதும் அவர் அறிவியல் கருத்துக்களைப் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். அவை பத்திரிகைகளிலும் வெளிவந்தன. அந்தக் கட்டுரைகளில் தனது சார்புநிலைக் கொள்கை குறித்து அவரே எழுதியுள்ளார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகின்றது.
வாழ்க்கையில்
இன்பமும்-துன்பமும்
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்துவரும் என்று வரட்டு வேதாந்தம் பேசிக் கொண்டே காலம் தள்ளக் கூடாது. விரக்தியாக வாழ்பவன், வாழவே தகுதியற்றவனாவான். எதிலும் சுவைஞன் உள்ளம் பெற வேண்டும். அந்த மனம் அமைந்தால் தான் வாழ்க்கையின் தெளிவு, மெலிவு, நெளிவு, வளைவுகளை நன்குணர்ந்து அவற்றை அதனதன் சுவைகளுக்கு ஏற்றாற்போல மகிழ்ச்சியுடன் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை. வாழ்க்கை கானல் நீர், அர்த்தமற்றது, இன்பமில்லாதது என்று வேதாந்தம் பேசுபவன், இந்த உலகில் வாழவே தகுதியற்றவனாவான்.
நல்லவனாக
வாழ்ந்திடு
மானிட இனமும், மனித உயிர்களும் மேன்மையுறப் பாடுபட்டவர்களே, நல்லவர்களாகப் பலராலும் நேசிக்கப் படத் தகுதியுள்ளவர்கள். தன்னை ஒத்தவன் உலகில் மேன்மையுறத் தக்க பணிகளைக் கொடுத்து, அவர்களை மேம்படுத்தச் செய்பவனே சிறந்தவன். எதையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தணியாத ஆர்வம், விருப்பம். மனிதனுக்கு சிறப்பைத் தருகிறது. நல்லவனாக நடக்க வேண்டும்; நல்லதையே செய்யவேண்டும். நல்லவனாக நாட்டில் வாழ்வதே நல்லது,
பணம்! பணம்!
பணத்தால் பயன்
★ பணம் அல்லது உலகில் உள்ள மற்ற செல்வங்களுள் எதாவது மனித சமுதாயத்தின் மேம்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்குமா என்பது சந்தேகமே. வேண்டுமானால் சில விதிவிலக்குகள் இருக்கலாம். பணம் மனிதனுக்குரிய சுயநலப்பற்றையும், தீய குணத்தையும், அலட்சியப் போக்கையும் தரக்கூடியதாக இருக்கக்கூடும். ஆனால், பணம் மட்டுமே சகலவிதமான நன்மைகனை நல்கும் என்று நம்புவதற்கு இல்லை.
மனித உரிமையால்
பலன் உண்டா?
மனித உரிமைகளோடு மனிதன் வாழ விரும்புவது இயற்கை. பல சூழ்நிலைகளில் உரிமைகளைப் புதிதாகப் பெறவோ, அல்லது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவோ மனிதன் முயன்று வருகிறான். இதற்காக வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கின்றன. ஆனால், மனித உரிமைகளுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டங்கள் மூலமாக உறுதியான வெற்றி கிடைப்பதும் சந்தேகம்தான். வெற்றியே கிடைத்திடும் என்று நம்புவதற்கு இல்லையே.
வேலை செய்யும் உரிமை, பணிகள் செயவதால் போதிய ஊதியம் பெறும் உரிமை முதலானவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். ஆனால், இவை எல்லாம் இன்று கொள்கையளவில்தான் பெறப்படுகின்றனவாக உள்ளன.
எனவே, தான் ஆசைப்படாத ஒன்றில் மனிதன் பற்று இல்லாமல் இருக்கும் உரிமை அவனுக்கு உறுதியோடு இருந்தாக வேண்டும்.
கல்வி நோக்கம்
ஒரு மாணவனிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமை, அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மாணவர்கள் மண்டைகளில் பல கரடுமுரடான செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி.
குழந்தைகள் படிக்க ஆசைப்படுவதையே அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். அதை விட்டுவிட்டு, வயது முதிர்ச்சி அடைந்தவர்களது ஞானத்தை எல்லாம் கற்பிக்க முயல்வது கூடாது. இப்படிச் செய்தால், அதே குழந்தைகளிடம் தாங்கள் படிக்கவேண்டும் என்ற இயல்பான ஊக்கம், ஆர்வம் எல்லாம் பாழ்பட்டுப்போகும் என்பதை உணரவேண்டும். கல்வி மீது ஆர்வத்தை உருவாக்குவதற்குப் பதிலாக வெறுப்பை அவர்களது சிந்தனையிலே விதைக்கக்கூடாது. எதனை ஆராயவேண்டும் என்ற ஆர்வ ஊக்கத்தை உருக்குலைத்து விடக்கூடும். இதனால், தற்போதுள்ள கல்விமுறையை மாற்ற வேண்டும்.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பயன்படும் செய்திகளை எல்லாம் பள்ளியிலேயே கற்றுக்கொடுக்கலாம் என்ற கட்டாய நிலையை கல்விமுறை கைவிட வேண்டும். வாழ்கை என்பதும் கலைதானே! அக்கலைகளை பள்ளிகளிலே கல்வி மூலமாகப் போதிப்பது என்பது ஒரு கடினமான, சிக்கலான, சிந்தனை ஓட்டத்தைக் குன்ற வைக்கும் ஒரு செயல் என்பதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.
ஒருவன் என்னதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருந்தாலும், அவன் பிறருடைய உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவனாக, இருக்கவேண்டும். அப்படி இருக்கத் தவறுவானானால் அவன் கல்வியால் பெற்ற பயன் என்னவோ!
பிறருடைய கருத்துகளிலும், இன்ப துன்பங்களிலும் பங்குகொண்டு, அவரவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து பெருமை பெறுபவனாக வாழ்வது ஒன்றே அவன் கற்ற கல்வியின் அடையாளமாகும்.
எனவே, மாணவர்கள் அனைவரும் சுயமாகச் சிந்திக்கும் சூழ்நிலையைப் பெற்றிட வேண்டும். அம்முறையிலே அவன் கற்கும் கல்விமுறைகள் அமைதல் நலம். அப்போது தான் மகிழ்ச்சியோடு கல்வி கற்கும் இன்பநிலை அவனிடம் அரும்பும்! அவ்வகையிலே கல்விமுறைகள் அமைவதே மிகச்சிறந்த கல்வியை வளர்க்கும் தொண்டுகளாகும்,
காந்தியடிகள்
கற்ற கல்வி
மனிதருள் தலைசிறந்த மாமனிதன் என்று மக்களால் மதிக்கப்பட்ட மகாத்மாகாந்தி, தனது ஆளுமைச்சிறப்பால் அனைவரையும் தன்வழியே அழைத்துச் சென்றாரே, அது எப்படி? அவர் அரசியல்வாதி மட்டுமல்ல; மிகச்சிறந்த பண்பாட்டுவாதி, ஆன்மிகவாதி, ஒழுக்கவாதி, உண்மைவாதி, சிந்தனைவாதி, செயல்வாதி. அதனால் தான் இந்திய நாட்டுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி, விடுதலை வாங்கித் தந்து இந்த உலகில் எதனையும் சாதித்துக் காட்டமுடியும் என்று செயல்பட்ட அரிய செயல் வீரராக வாழ்ந்தார். விடாமுயற்சி, யூகம், அதன்மீது எழும் தன்நம்பிக்கை போன்ற நல்ல சிந்தனைகளால் அவர் ஓர் மனிதப்புனிதனாக கோடானுகோடி மக்கள் நலனுக்காக உழைத்து குணச் சிறப்புகளால் வாழ்ந்து மறைந்தார்.
மேடம் கியூரி !
நோபல் பரிசு பெற்ற மேடம் க்யூரி அம்மையாரிடம் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தை ஓர் அதிருஷ்டமாக நம்பினேன், அவரது மனோதிடம், ஆராய்ச்சியில் இருந்த தணியாத ஆர்வம், விடாமுயற்சி, எடுத்த செயலைத் தொடர்ந்து ஆற்றும் திறமைகளால்தான் அவரால் மிகச்சிறந்த விஞ்ஞானியாக விளங்க முடிந்தது.
அமைதி! அமைதி!
மீண்டும் அமைதி!
உலக அமைதி என்பது நமக்கு முன்பு வாழ்ந்த சான்றோர்களும் ஆன்றோர்களும் விரும்பிய ஒன்று. ஆனால், தற்கால நாகரிக உலகில் அது ஆட்டம் கண்டுகொண்டு வாழ்கிறது. இதுவும் ஒருவகை நாகரிக வளர்ச்சியோ!
விடுதலை பெற்ற நாடுகளின் நிலை, அந்நாட்டு மக்கள் கையில்தான் உள்ளது. நாடு பெருமை பெற வேண்டிய கட்டாயம் அதன் புகழ், அந்நாட்டு மக்களிடம் தான் இருக்கின்றது.