உலகம் பிறந்த கதை/உலகம் அணுமயம்
2. உலகம் அணுமயம்
நில உலகிலே வாழ்கிறோம் நாம். வான வீதியிலே உள்ளது ஞாயிறு; சூரியன். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல்கள். எனினும் சூரியன் நமது தோழன். நமது வாழ்வுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவன். நம்மை வாழ்விப்பவன் சூரியன்; சூரியனே. சூரியன் இல்லையேல் நாம் இல்லை நமது வாழ்வும் இல்லை. உயிர் இனம் எதுவும் இல்லை; தாவர இனமும் இல்லை.
அதனால்தான் நமது முன்னோர்கள் சூரியனை வணங்கினார்கள். கடவுள் என்று போற்றினார்கள்.
கிராம விவசாயிகள் காலையிலே எழுந்த உடன் பல் தேய்த்து முகம் கழுவிக் கிழக்கு நோக்கி நின்று சூரியனைக் கும்பிட்டே வேலை தொடங்கினார்கள்.
ஆகவே நாமும் சூரியனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுவது அவசியம்.
முதலில் சூரியனது பிறப்பிடத்தைக் கவனிப்போம். சூரியனது பிறப்பிடம் ஆகாயம்-வெளி-வானம்.
வெளிமுழுதும் வியாபித்திருப்பது எது? வாயு. வாயு என்று சொன்னால் காற்று என்று பொருள் கொள்ளல் கூடாது. 'கியாஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்களே அந்த கன வாயு. கன வாயு எப்படிப்பட்டது? பார்ப்போம்.
பனிக்கட்டியை நாம் எல்லாரும் அறிவோம். அதுதான் 'ஐஸ்.' ஐஸ் எப்படி ஏற்படுகிறது? நீரை இறுகச் செய்தால் அது ஐஸாக மாறுகிறது. இறுகச் செய்வது என்றால் என்ன? குளிரச் செய்வது.
ஐஸ்கட்டியைச் சூடாக்கினால் நீராகிறது. நீரைக் கொதிக்க வைத்தால் ஆவியாகிறது. ஆவிலேசாக இருப்பதால் மேலே எழும்புகிறது.
ஆகவே, நீரைக் கொதிக்க வைத்தால் ஆவியாகிறது. குளிர வைத்தால் கட்டியாகிறது.
நீர், நீராவி, ஐஸ் ஆகிய மூன்றும் வேறு வேறு பொருள்களா? இல்லை. ஒன்றே. பொருள் ஒன்று; உருவம்தான் வேறு.
தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற உலோகங்களும் இத்தகையனவே.
இவற்றை உருக்கினால் திரவமாகின்றன மேலும் உருக்கிக் கொண்டே இருந்தால் ஆவியாக மாறுகின்றன. குளிரச் செய்தால் கட்டியாகின்றன.
தண்ணீரும், தங்கமும், வெள்ளியும், ஈயமும், இரும்பும், செம்பும், சூடேற்றப் பட்டால் ஆவியாவது ஏன்? குளிரச் செய்தால் கட்டியாவது ஏன்.
எல்லாம் அணுவின் செயல்தான்.பல வித அணுக்களின் சேர்க்கையே தண்ணீராகக் காட்சி அளிக்கிறது. தங்கமாகத் தெரிகிறது; வெள்ளியாகக் காட்சி தருகிறது; ஈய உருவில் தோன்றுகிறது; செம்பாகத் தெரிகிறது.
ஒரு பொருளைக் குளிரச்செய்யும் போது என்ன ஆகிறது. இந்த அணுக்கள் நெருங்கி, இணைந்து ஒன்றை மற்றொன்று கட்டிக் கொள்கின்றன. ஆகவே கட்டியாகின்றன.
தண்ணீர், ஐஸாக மாறும் போது இந்நிலைதான் ஏற்படுகிறது. எனவே ஐஸ் கட்டியைக் காண்கிறோம்.
சூடு ஏற்றினால் என்ன ஆகிறது. அணுக்கள் விலகிப் போகின்றன. ஆகவே ஐஸ் கட்டிக்குச் சூடு ஏற்றினால் தண்ணீராகிறது. மேலும் சூடு ஏற்றினால் ஆவியாகிறது. லேசாகி மேலே போகிறது. அணு, அதாவது கன வாயு ஆகிறது.
ஆகவே விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்.
"உலகத்தில் உள்ள பொருள்கள் எல்லாம் கனப் பொருள்களாயும், திரவப் பொருள்களாயும், கனவாயுப்பொருள்களாயும் இருக்கின்றன. இவற்றின் அடிப்படை ஒன்றே. அதாவது அணு" என்று சொல்கிறார்கள்.
உலகம் அணு மயமானது. அணுக்கள் விலகி இலேசானால் கன வாயுவாக வான மண்டலத்தில் திரிகின்றன. குளிர்ந்தால் நெருங்கி திரவமாகின்றன. மேலும் குளிர்ந்தால் இறுகிக் கட்டியாகின்றன.