உலகம் பிறந்த கதை/ஐம் பெரும் பூதக்கட்டு

விக்கிமூலம் இலிருந்து

23. ஐம் பெரும் பூதக்கட்டு
நமது உடல் இருக்கிறதே இதற்கு யாக்கை என்று பெயர். யாத்தல் என்றால் கட்டுதல், சேர்த்தல் என்று பொருள். ஆகவே, யாக்கை என்றால் சேர்க்கை, கட்டு எனலாம்.

கட்டு என்றால் எதனால் ஆன கட்டு? தசை, நார், எலும்பு ஆகியவற்றால் ஆன கட்டு என்று சொல்வார்கள். ஐம் பெரும் பூதங்களால் ஆன கட்டு என்றும் சொல்வார்கள். ஐம் பெரும் பூதங்கள் எவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்பன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்று சொல்வது வழக்கம். பஞ்ச பூதங்கள் என்றும் சொல்வார்கள்.

இந்த உலகமே பஞ்ச பூத சிருஷ்டிதான். அதே மாதிரி உயிர் இனங்களும் ஐம் பெரும் பூதங்களால் ஆன கட்டுதான். இது, நமது முன்னோர் மொழிந்த உண்மை.

இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது? இன்னும் சிறிது விரிவாகச் சொல்கிறது. இந்த ஐம் பெரும் பூதங்களும் தொண்ணூற்றிரண்டு விதமாகப் பரிணாமம் பெறுகின்றன. அவ்விதம் பரிணாமம் பெறும் தொண்ணூற்றிரண்டில் சிறப்பாகக் குறிப் பிடத்கக்கவை பதினெட்டு. இந்தப் பதினெட்டு பூதங்களின் சேர்க்கையே உயிரினம். நாம் என்கிறது அறிவியல்.

'கம்பவுண்டர்' என்கிற சொல் நாம் எல்லோரும் அறிந்ததே. இது ஆங்கிலச் சொல். மருந்து கலக்கிக் கொடுப்பவரைக் 'கம்பவுண்டர்' என்று சொல்கிறோம்.

'கம்பவுண்டர்' எனும் சொல்லுக்கு, என்ன பொருள் தெரியுமா? சேர்ப்பவர், கலப்பவர், கூட்டுபவர் என்று பொருள்.

'கம்பவுண்டர்' என்ன செய்கிறார்? மருந்து சேர்க்கிறார். அதனாலே அவருக்கு அப் பெயர் வந்தது.

நமது உடல் இருக்கிறதே! இது ஒரு ரசாயனச் சேர்க்கை ! ரசாயனக் கூட்டு-ரசாயனக்கட்டு என்று சொல்கிறது அறிவியல்.

'கெமிக்கல் காம்பவுண்ட்' என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள், அதாவது ரசாயனச் சேர்க்கை! - ரசாயனக் கட்டு. 'யாக்கை' என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்களே!. அது எவ்வளவு பொருத்தமான பெயர்! பொருள் செறிந்த பெயர்!

ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன், சல்பர், பாஸ்பரஸ், இரும்பு, கால்ஷியம், சோடியம், பொட்டாசியம், ஐயோடின், குளோரைன், மக்னீசியம், சிலிகன், ப்ளோரின், ஜிங்க், மாங்கனீஸ், இந்த மாதிரியான தாதுப்பொருள்கள் எல்லாம் நமது உடம்பிலே இருக்கின்றன. நமது உடம்புமாத்திரமா? அல்ல. உயிர் இனங்கள் எல்லாவற்றின் உடம்பிலும் இருக்கின்றன.

இன்னும் சிறிது வலியுறுத்திச் சொல்ல. வேண்டுமானால் இந்தப் பொருள்களின் சேர்க்கையால்தான் உயிர் இனங்கள் தோன்றுகின்றன எனலாம்.

இவ்வளவு தாதுப் பொருள்களும் நம் உள்ளே எவ்வாறு செல்கின்றன? சென்றன! வியப்பாயிருக்கிறது அல்லவா!

நாள்தோறும் நாம் சாப்பிடுகிறோம்.. சாப்பாட்டிலே என்ன இருக்கிறது? மேலே குறிப்பிட்ட தாதுப் பொருள்கள் அவ்வளவும் இருக்கின்றன.

ஆடு மாடுகள் புல் பூண்டுகளையும் செடி கொடிகளையும் மேய்கின்றன. உயிர் வாழ்கின்றன. நாம் காய்கறி வகைகளை உண்ணுகிறோம்; உயிர் வாழ்கிறோம்.

செடி கொடிகள் புல் பூண்டுகளிலே, இந்த தாதுப் பொருள்கள் அவ்வளவும் இருக்கின்றன. பக்குவமாகச் சேர்த்து வைக்கபட்டிருக்கின்றன. காய் கனி வகைகளிலே இந்த தாதுப் பொருள்கள் இருக்கின்றன.

இவற்றை ஆடு மாடுகள் உட்கொள் கின்றன; உயிர் வாழ்கின்றன. நாமும் உட் கொள்கிறோம் உயிர் வாழ்கிறோம். தாவர வகைகள் மேற்சொன்ன தாதுப் பொருள்களை எவ்விதம் சேகரிக்கின்றன?

கவனிப்போம்.