வாழும் வழி/காலங் கடத்தாதே

விக்கிமூலம் இலிருந்து

4. காலங் கடத்தாதே!


அன்புள்ள மாணாக்க,

நலம், நலம் பல பெருகுக!

உன் கடிதம் கிடைத்தது. உனக்கு வேலை மிகுதியாயிருப்பதாக எழுதியிருந்தாய். ஆமாம், இந்த வயதில் எவ்வளவு வேலையாயிருந்தாலும் முயன்று செய்யத்தான் வேண்டும். சில சமயம் பல வேலைகள் சுமந்து போவதாகவும் குறிப்பிட்டிருந்தாய். வேலைகள் சுமையாகக் குவியாமல் இருப்பதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழியினை நீ என்னிடம் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நான் சொல்லியிருப்பதாக நினைவிருக்கிறது. மீண்டும் அதனை ஈண்டு உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

எந்த வேலையாயிருப்பினும் உரிய காலத்தில் முடித்துவிட வேண்டும். பிறகு பார்ப்போம் என்று ஒத்திப்போடும் இயல்பு நம் ஆக்கத்திற்குப் பெருந்தடைக்கல்லாகும். முழு வேலையினையும் ஒத்திப் போடுவதற்கு மட்டும் இதனை நான் கூறவில்லை; குறித்த ஒரு வேலையை அரைகுறையாய் விட்டு வைப்பதற்கும் சேர்த்தே நான் இந்த அறிவுரையினைக் கூறுகிறேன். அரைக் கிணறு தாண்டலாமா? வேலையைக் குறையாய் நிறுத்தும் இயல்புடையவரிடந் தான் வேலைகள் மலையெனக் குவிந்துவிடுவது வழக்கம். முற்பகல் வேலையைப் பிற்பகல் செய்ய, பிற்பகல் வேலையை மறுநாள் செய்ய,இப்படியே போய்க்கொண்டிருந்தால், எந்த வேலையும் ஒழுங்குறாது அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையாய்ப் போய்விடும். ‘செய்வன திருந்தச் செய்’ என்பது முதுமொழியல்லவா?

சிலர் செய்ய வேண்டிய வேலையை நிறுத்தி விட்டு, இன்பப் பொழுதுபோக்குக் களியாட்டங்களில் ஈடுபடுவதுண்டு. வெளித்தோற்றத்திற்கு அவர்கள் களியாட்டயர்வதாகக் காணப்படினும், அவர் தம் உள்ளத்தே ஐயோ, வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டோமே, எப்போது செய்வது, என்ன ஆவது என்ற எண்ணம் உறுத்திக்கொண்டேயிருக்கும். குறைவேலைக்காரர்கள் பொழுதுபோக்கினால் பெறும் போலி இன்பத்தைவிட, உரிய வேலையினை உரிய காலத்தில் முடித்து மனநிறைவு கொள்வதனால் உண்டாகிற இன்பமே பேரின்பம்! பேரின்பம்! இந்த உண்மையைப் பலர் உணர்வதில்லை.

சுற்றிவளைக்காமல் சுருங்கச் சொல்லின், எடுத்துக்கொண்ட வினையை எச்சமாக விடுவது - அதாவது வேலையைக் குறைவாக நிறுத்துவது, நம் திட்டங்களையெல்லாம் முறியடித்து, நம்மைக் குறிக்கோள் அற்றவராக்கி, நம் வாழ்வையே சீர்குலைத்துவிடும். எனவே, வேலையில் சிறிதும் குறை வைக்கக்கூடாது. வாழ்க்கையில் சிறு பகையிருப்பினும் அஃது எங்ஙனம் பெரிய பகையாக முற்றி நம் தலைக்கே கேடு விளைத்துவிடுமோ, அங்ஙனமே குறை வேலையும் செய்துவிடும். ஏன், வேறோர் எடுத்துக்காட்டும் உண்டே! தீயை அணைக்காமல் சிறிதளவு எச்சமாய் (குறையாய்) விட்டு வைத்தாலும், அது பெருகி வளர்ந்து பெருங்கேடு செய்யுமல்லவா? அது போன்றதே வினைக்குறையும். இதனை நம் வள்ளுவப் பெருந்தகையாரும்,

“வினை பகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்”

என்னும் குறட்பாவால் தெளிவுறுத்தியுள்ளாரே! எனவே எந்த வேலையினையும் காலங்கடத்திச் செய்யாதே உரிய காலத்தில் செய்துவிடுக. பொன்னினும் சிறந்ததொரு பொருள் அருங் காலமல்லவா? நினைவிருக்கட்டும்.

உன் அன்புள்ள,
ஆசிரியன்