மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/40. கருணை மிகுந்த உள்ளம்
நபி பெருமானார், பகைவர்களிடத்தில் எத்தகைய கருணை காட்டினார்கள் என்பதை பல நிகழ்ச்சிகள் மூலம் அறியலாம்.
முஸ்லிம்களுக்கும் பனூஹனீப் கோத்திரத்தாருக்கும் நிகழ்ந்த சிறிய சண்டையில் அக்கூட்டத் தலைவர் துமாமா என்பவர் முஸ்லிம்களிடம் சிறைப்பட்டார்.
பெருமானார் அவர்களின் முன்னிலையில் துமாமாவைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். "உம்மை எவ்வாறு நடத்த வேண்டும்?" என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்:
"நீங்கள் என்னைக் கொன்று விடுவதால், முஸ்லிம்களைக் கொலை செய்த ஒருவனைக் கொன்றதாகும். ஆனால், என் மீது இரக்கம் காட்டினால் அதற்காக நன்றியறிதல் உள்ள ஒருவன் மீது கருணை காட்டியதாகும்” என்றார்.
பெருமானார் அவர்கள், உடனே அவரை விடுவிக்கும்படி உத்தர விட்டார்கள்.
உடனே துமாமா அருகில் இருந்த ஊற்றில் குளித்து விட்டுப் பெருமானார் அவர்களிடம் வந்து,
"ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். நேற்றுவரை நான் உங்களை வெறுத்ததைப் போல் இவ்வுலகில் வேறு எவரையும் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்களுடைய முகத்தைப் போல் அவ்வளவு ஒளி மிகுந்ததாக வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. மற்றும், உங்களுடைய மார்க்கத்தை வெறுத்ததைப் போல் வேறு எதையும் வெறுக்கவில்லை. ஆனால் இன்றோ எனக்கு அதை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை" என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினார்.
அதன் பின்னர், துமாமா மதீனாவிலிருந்து நேராக மக்காவிற்குப் பயணமானார்.
குறைஷிகள் அவரைக் கண்டதும், "நீர் என்ன மதம் தவறியவர் ஆகிவிட்டீரே?" என்று கேட்டனர்.
அதற்கு அவர், "நான் மதத்தில் தவறவில்லை; ஆண்டவனுடைய தூதரின் மார்க்கத்தைத் தழுவி இருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.
துமாமா வாழ்ந்து வந்த யமாமா மாகாணத்திலிருந்தே மக்காவுக்குக் கோதுமை போய்க் கொண்டிருந்தது.
அவர் முஸ்லிமானதும், பெருமானார் அவர்களுடைய உத்தரவு இல்லாமல், இஸ்லாத்தின் விரோதிகளான மக்கா குறைஷிகளுக்குக் கோதுமை அனுப்ப இயலாது என்று கூறி, அதை நிறுத்திவிட்டார்.
அதனால், குறைஷிகள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளானார்கள். தங்களுக்குக் கோதுமை அனுப்புமாறு துமாமாவுக்கு கட்டளையிட வேண்டும் என பெருமானார் அவர்களை மிகவும் வேண்டிக் கொண்டனர்.
கடுமையான பகைவர்களின் வேண்டுகோளை, கருணை மிக்க பெருமானார் அவர்கள் மறுக்காமல், துமாமாவுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வழக்கம்போல் அவர்களுக்குக் கோதுமை கிடைத்தது.
குறைஷிகளுக்கு எவ்வளவு தயை காட்டினாலும் அவர்களோ பகைமையைக் கைவிடுவதாக இல்லை,