உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/ரயில் நிலையத்தில் ரகளை

விக்கிமூலம் இலிருந்து


1Ο
ரயில் நிலையத்தில் ரகளை

தான்பிரீன் கூட்டத்தார் காலை 2.30 மணிக்கே எமிலியை அடைந்தனர். முதல் ரயில் மதியத்தில்தான் வரும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் திப்பெரரியிலிருந்து உதவியாட்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். திப்பெரரி வீதியில் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். ஒருவரும் வரக்காணோம். வழியில் என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றனர். மணி பதினொன்று அடித்தது. ஒவ்வொரு நிமிஷமும் ஒரு நாளாகத் தோன்றிற்று. எந்த ஆசாமியும் வரக்கானோம். ரயில் வரக்கூடிய நேரம் நெருங்கி விட்டது.

உதவிக்கு நண்பர்கள் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஸீன் ஹோகன் பகைவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவனுடைய நண்பன் சும்மா இருப்பதா? அது நட்புக்குத்துரோகம் அல்லவா? இவ்வாறெல்லாம் தான்பிரீன் எண்ணமிட்டான். எப்படியாவது முயற்சி செய்து பார்த்துவிட வேண்டியது தங்கள் கடமை என்று தீர்மானித்தான். ஹோகனுக்குப் பாதுகாப்பாகச் சுமார் நான்கு முதல் எட்டுப் போலிஸார் தக்க ஆயுதங்களுடன் வரக்கூடும். ஆனால் அவைகளையெல்லாம் பற்றி யோசிக்க அந்தத் தொண்டர்களுக்கு மனமில்லை. ஹோகனை மீட்க வேண்டும் அல்லது அவனுக்காகத் தங்கள் உயிரைப்பலியிட வேண்டும் வருவது வரட்டும் என்று அவர்கள் துணிந்து நின்றனர். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ரயில் வந்து விட்டது. உடனே மூவரும் ஸ்டேஷனுக்குள்ளே பாய்ந்தனர்.

உள்ளே பாய்ந்த வேகத்தில் தான்பிரீன் ஒரு கிழவியை இடித்துத் தள்ளிவிட்டான்; தானும் கீழே விழுந்தான். கிழவியைத் திரும்பிப் பாராமலே துள்ளி எழுந்து ரயிலடிக்கு ஓடினான். ஒவ்வொரு நிமிஷமும் அவனுடைய கைவிரல் சட்டைக்குள் மறைத்திருந்த ரிவால்வரின் குதிரையைப் பிடித்த வண்ணம் தயாராக இருந்தது.

ரயில் வந்ததே யொழிய அதில் ஒரு கைதியையும் காணோம்! மூவரும் ஏமாற்றமடைந்து திகைத்தனர். ஆனால் அதுவும் நல்லது தான் என்று கொஞ்சம் சந்தோஷம் அடைந்தனர். ஏனெனில் ஹோகன் அடுத்த ரயிலில் கொண்டு வரப்பட்டால், அதற்குள் திப்பெரரி ஆட்கள் வந்துவிடக்கூடும் என்று அவர்கள் நம்பினார்கள். அடுத்த ரயில் வரும்வரை காத்திருப்பதுதான் மிகவும் கஷ்டமாயிருந்தது. போராட்டத்தில் தீவிரமாய்க் குதிப்பது எளிது. ஆனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான் கஷ்டம்.

திப்பெரரி நண்பர்கள் ஆபத்துக்கு உதவத் தவறி விட்டனர். தான்பிரீன் வேறு எங்கிருந்து உதவி பெறலாமெனச் சிந்தித்தான். பக்கத்து மாவட்டங்களிலிருந்த கால்ட்டீ தொண்டர் படைக்குத் தகவல் கொடுத்தால் பல வீரமுள்ள வாலிபர்கள் உடனே உதவி செய்வார்கள் என்று கருதினான். அவ்வண்ணமே அவர்களுக்குச் செய்தி அனுப்பி உதவிக்கு வரும்படி வேண்டினான். கால்ட்டீ வீரர்கள் தகவல் கிடைத்த மறுநிமிஷமே ஐந்து பேர்களை அனுப்பி வைத்தனர்.

கால்ட்டீ தொண்டர்களுடைய பெயர்களாவன: ஈமன் ஓப்ரியன். ஜேம்ஸ் கான்லன், ஜே. ஜே. ஓப்ரியன், ஸீன் லிஞ்ச், மார்ட்டின் போலீ. அந்த வாலிபர்கள் அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் அவர்களில் மார்ட்டின் போலீ என்பவன் பின்னால் போலிஸாரால் பிடிக்கப்பட்டு, இரண்டு வருஷங்கள் கழித்து மவுண்ட் ஜாய் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மட்டுமல்ல, அந்தப் போராட்டத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லாத மாஹெர் என்னும் வாலிபனும் குற்றஞ் செய்ததாகப் பொய்க்காரணம் சொல்லி தூக்கிலிடப்பட்டு மடிய நேர்ந்தது. அந்த இரு வாலிபரும் அயர்லாந்துக்காகச் சிரித்த முகத்துடன் உயிரைப் பலி கொடுத்தனர்.

கால்ட்டீ துணைவர்களைச் சேர்த்து தான்பிரீன் படையில் மொத்தம் எட்டுப் பேர்கள் இருந்தனர். ஐந்து பேர்களுக்கு ஆயுதங்கள் இருந்தன; மூவர் நிராயுத பாணிகள். எல்லோரும் கூடிஆலோசித்ததில் முன்போட்டதிட்டம் சிறிது மாற்றப்பட்டது. ஸீன்டிரீஸியும், ஸிமஸ் ராபின்ஸனும், தான்பிரீனும், அடுத்த ஸ்டேஷனுன நாக்லாங்குக்கு சைக்கிள்களிற் சென்றனர். நாக்லாங் எமிலியிலிருந்து மூன்றாவது மைலில் இருந்தது. மற்ற ஸ்டேஷன்களில் எப்பொழுதும் போலிஸாரும் பட்டாளத்தாரும் தங்கியிருப்பார்கள் என்பதால் நாக்லாங் ஸ்டேஷனுக்கே செல்ல வேண்டும் என்று அவர்கள் புறப்பட்டார்கள். அதன் பக்கத்தில் இரண்டு மைல்களுக்கு இடையில் போலிஸ் நிலையமே கிடையாது. நாக்லாங்கிலும் காரியம் பலிக்கவில்லையானால், அடுத்த ஸ்டேஷனான பிளார்னிக்கு மோட்டாரில் செல்வது என்று அவர்கள் தீர்மானித்தனர். மற்ற நால்வரும் எமிலிக்குச் சென்றனர். அவர்கள் அங்கு ரயிலில் வந்தவுடன் அதில் ஏறிக்கொண்டு, யாரும் சந்தேகிக்காதபடி ஹோகனிருந்த இடத்திற்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்றும், நாக்லாங் வந்தவுடன் அங்கு காத்திருந்த தான்பிரீன் முதலானவர்களுக்கு அந்த வண்டியை அடையாளம் காட்டவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தான்பீரினும் நண்பர் இருவரும் நாக்லாங் ஸ்டேஷனை அடையும் பொழுது முதல் மணி அடிக்கப்பட்டது. ரயில் எமிலியை விட்டுப் புறப்பட்டுவிட்டது என்பதை அது அறிவித்தது. தொண்டர்கள் ரயில் நிற்கக்கூடிய மேடைக்குச் சென்று உலாவிக்கொண்டிருந்தனர். அவர்கள் சாதாரன மனிதர்கள் போலவே காணப்பட்டார்கள். ஆனால், அவர்களுடைய கைகள் மட்டும் சட்டைப்பைக்குள் ரிவால்வரைப் பற்றிய வண்ணமாயிருந்தன.

தூரத்தில் எஞ்சினுடைய புகை ஆகாயத்தில் தெரிந்தது. அடுத்த நிமிஷத்தில் வண்டி ஸ்டேஷனில் வந்து நின்றது. அதே சமயத்தில் கார்க் நகரிலிருந்து வேறோரு வண்டியும் வந்து அடுத்த தண்டவாளத்தில் நின்றது. அந்த வண்டியில் ஏராளமான பட்டாளத்தார்கள் இருந்தனர் என்பது தொண்டர்களுக்கு மறுநாள் தான் தெரியவந்தது. அன்று நடந்த குழப்பத்தில் எக்காரணத்தாலோ பட்டாளத்தார் கீழே இறங்கிக் கலந்து கொள்ளவில்லை. ஒரு வேளை அவர்களுக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்னரே கலகம் முடிந்து விட்டது போலும்.

ரயில் தண்ட வாளத்தில் நிற்குமுன்பே வண்டியிலிருந்த தோழர்கள் ஆசாமி இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். ரயில் ஒரு நிமிஷம்தான் நிற்கும். அதற்கு மேல் நிற்க வேண்டுமானால் எஞ்சின் ஒட்டியவர்களைச் சுடவேண்டியிருக்கும். அதற்கு அவசியமில்லாமல், அந்த ஒரு நிமிஷத்திற்குள் காரியத்தை முடித்து விடவேண்டுமென்று தான்பிரீன் தீர்மானித்தான்.

ஹோகன் இருந்த வண்டி மிக நீளமானது. அதில் பன்னிரண்டு தனி அறைகள் இருந்தன. அந்த அறைகளுக்கு வெளியே எல்லாவற்றிற்கும் பொதுவான பாதையிருந்தது. கால்ட்டீ ஆசாமிகள் அந்தப் பாதையிலே நின்று கொண்டிருந்தனர். ஸீன்ஹோகன் கைவிலங்கிடப்பட் டு எஞ்சின் இருந்த திசையைப்பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு இரு பக்கத்திலும் ஒரு சார்ஜென்டும், ஒரு போலிஸ்காரனும் இருந்தனர். அவனுக்கு முன்னால் வேறு இரண்டு போலிஸ்காரனும் இருந்தனர். அவனுக்கு முன்னால் வேறு இரண்டு போலிஸ்காரர்கள் அமர்ந்திருந்தனர். தான்கு காப்பாளர்களும் துப்பாக்கி, கத்தி முதலிய ஆயுதங்களையும் தயாராப் வைத்துக் கொண்டிருந்தனர். அன்றைய போராட்டத்தை ஸீன் டிரிஸியே தலைமை வகித்து நடக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவன் உத்தரவு கொடுத்து விட்டான். ரயில் வந்து நின்று ஐந்து வினாடிகளுக்குள் அவர்கள் அதில் ஏறி நீண்ட பாதையின் வழியாக ஹோகனிருந்த அறைக்குள் பாய்ந்தனர். பாயும்பொழுது அவர்கள் 'தூக்குங்கள் கைகளை' என்று கூவிக்கொண்டே சென்றனர். அவர்கள் உள்ளே போவதற்கு ஒரு நிமிஷத்திற்கு முன்புதான் சார்ஜெண்டு ஹோகனைப் பார்த்து, 'அடே உன்னுடைய ஸீன் டிரீஸியும், தான்பிரீனும் இப்பொழுது எங்கடா போனார்கள்?' என்று கேட்டுக்கேலி செய்தானாம். அடுத்த நிமிஷத்தில், அவன் விளையாட்டாகக் கேட்ட கேள்விக்கு உண்மையாகவே பதில் கூற, நீட்டிய ரிவோல்வர்களுடன் தான்பிரீனும், டிரீலியும் அங்கு புகுந்து விட்டனர். ஹோகன் அநாதையில்லை என்பதை நிரூபித்து விட்டார்கள்.

போலிசார் புதிய ஆசாமிகளைக் கண்டவுடன் அவர்கள் வந்த காரியத்தைத் தெரிந்து கொண்டனர். என்ரைட் என்ற கான்ஸ்டபிள் தன் ரிவால்வரை எடுத்து ஹோகனுடைய நெற்றிக்கு நேராக நீட்டிவிட்டான் யாராவது கைதியை விடுவிக்க வந்தால் முதலில் கைதியைச் சுட்டுக் கொல்லும்படியாகப் போலிஸ் மேலதிகாரிகள் அவர்களுக்குச் சொல்லிவிட்டிருந்தார்கள். கண்கொட்டு முன்னால் அப்பாதகன் ஹோகனைச் சுட்டிருப்பான். ரிவால்வரின் விசையை இழுக்கும்போழுது, அவனுடைய நெஞ்சில் படீரென்று குண்டு பாய்ந்து விட்டது. அவன் சுருண்டு விழுந்து இறந்து போனான். அந்தக் குண்டு புரட்சிக்காரருடைய முதற் குண்டு.

வண்டியிலிருந்த மற்றப் பிரயாணிகள் புரட்சி வாலிபர்களுடைய நோக்கத் தைத்தெரிந்து கொண்டார்கள். அங்கிருந்த பட்டாளத்தான் ஒருவன் கூட, பிரிட்டிஷ் காக்கி உடையை அணிந்து கொண்டே, 'குடியரசு நீடுழி வாழ்க!' என்று வாழ்த்துக்கூறி ஆர்ப்பரித்தான். அவன் சொந்த வேலையின் பொருட்டு எங்கோ சென்று கொண்டிருந்தவன்.

முதல் குண்டில் ஒரு போலிஸ்காரன் தீர்ந்துபோனதைக் கண்டு மற்றவர்கள் ஹோகன் மேல் கைவைக்க அஞ்சினர். அந்தக் குண்டோசை கேட்டவுடன் மற்றொரு போலிஸ்காரன் ஜன்னல் வழியாகக் குதித்து, ஊளையிட்டுக்கொண்டே மாயமாய் மறைந்து போனான். மறுநாள் காலையில்தான்.அவன் எமிலிபோலிஸ் நிலையத்திற்குப் போய் முதல் நாள் ஸ்டேஷனில் நடந்ததைக் கூறினானாம்!

கான்ஸ்டபிள் என்ரைட் இறந்து போனான்; மற்றொருவன் உயிருடன் மறைந்தொழிந்தான். சார்ஜெண்டு வாலஸ் என்பவனும், கான்ஸ்டபிள் ரெய்லியுந்தான் பாக்கியிருந்தார்கள். அவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சுட ஆரம்பித்தார்கள். புரட்சிக்காரர்களும் சுட்டார்கள். அவர்கள் சுடுவதில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்களுடைய குண்டுகள் தங்கள் ஆட்களையே கொன்று விடக்கூடும். அல்லது ஹோகன் மேல் பட்டுவிடக்கூடும். இடையில் கான்ஸ்டபிள் ரெய்லி கீழே தரையில் சாய்ந்து விட்டான். இருக்கும் நிலையைக் கருதி, அவன் இறந்தவனைப் போல் பாசாங்கு செய்து கொண்டு தரையோடு தரையாய்க் கிடந்தான். தலையை மேலே தூக்கியிருந்தால் அவனும் விண்ணை எட்டிப்பார்த்திப்பான். சார்ஜெண்டு வாலஸ் கடைசிவரை தயங்காது தனியே நின்று போராடி வந்தான். அவன் அடைக்கலம் புகுந்தால் உயிர்ப்பிச்சை கொடுப்பதாய்ப் புரட்சிக்கார்கள் பலமுறை கூறிப்பார்த்தார்கள். அவன் கேட்பதாயில்லை. கூட இருந்தவர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்துப்போன பின்பும் அவன் கலங்காது நின்று போராடினான். சுற்றிலும் பெருங்குழப்பம், இடமோ மிகச் சிறியது. வண்டியில் மக்கள் கூட்டம் அதிகம். அவ்வளவுக்குமிடையே புரட்சிக்காரர்கள் ஹோகனைக் கதவு வழியாக வெளியே தள்ளிக்கொண்டு போவதற்கு ஏற்பாடுகளைச் செய்தனர்.

கடைசியில் ஹோகன் பந்தோபஸ்தாய் வெளியேற்றப்பட்டான். புரட்சிக்காரர்களும் வண்டியை விட்டு வெளியே குதித்தார்கள். வீரமிக்க சார்ஜெண்டு அவர்களை விடுவாதாயில்லை. அவனும் வெளியே குதித்து அவர்களைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தான். தான்பிரீன் திரும்பிப் பார்த்தான். அவன் உடம்பில் ஒரு குண்டு பாய்ந்து இரத்தப் பெருக்கெடுத்தது. ஆனால் குண்டு எந்த இடத்தில் பாய்ந்தது என்பது அந்த ஆத்திரத்திலும் அவசரத்திலும் அவனுக்குப் புலனாகவில்லை . சிறிது நேரத்திற்குப் பிறகு தான் சுவாசப்பையில் காயம் பட்டிருப்பதை உணர்ந்தான்.

டிரீஸி, ஈமன் ஓப்ரியன், ஸ்கான்லன் ஆகிய மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களிடமும் தான்பிரீனிடமுமே ரிவால்வர்கள் இருந்தன. ஆயுதங்கள் வைத்திருந்த நால்வருடைய உடம்புகளிலும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. தான்பிரீனைத் தவரி மற்ற மூன்று பேர்களுடைய துப்பாக்கிகளும் சண்டையில் எங்கோவிழுந்துவிட்டன. தான்பிரீன் ஓருவனே ஆயுதந்தாங்கிச் சண்டை செய்யக்கூடிய நிலைமையில் இருந்தான். அவனுக்கு எதிராக சார்ஜெண்டு வாலஸ் போராடிக்கொண்டிருந்தான். அத்துடன் இறந்து போனதாய் பாவனை செய்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் ரெய்லியும் மெல்ல எழுந்து வந்து தான்பிரீனைப் பார்த்து ஓயாமல் சுட்டுக் கொண்டிருந்தான். தான்பிரீனுடைய வலது கையில் மீண்டும் ஒரு குண்டு பாய்ந்தது. அவனுடைய ரிவால்வரும் கீழே விழுந்து விட்டது. அவன் குனிந்து அதை எடுத்துக் கொண்டு மீண்டும் இரண்டு எதிரிகளையும் பார்த்து சுடலானான். வலது கை பயனற்றுப் போனதால், இப்பொழுது இடது கையால் சுட்டு வந்தான். இத்தகைய சந்தர்ப்பம் ஏற்படு மென்றே அவன் முற்காலத்திலேயே இரண்டு கையாலும் குறிதவறாது சுடப்பழகியிருந்தான். அந்தப் பழக்கம் இந்த ஆபத்தில் மிக உதவியாக இருந்தது. எதிரிகளுடைய குண்டுகளுக்கு இடம் கொடாமல் தப்புவதோடு, அவர்களையும்சுட வேண்டியிருந்தது. இடையில் வேறு எதிரிகள் எங்கிருந்தாவது வருதற்குள் போராட்டத்தை அவசரமாகவும் முடிக்க வேண்டியிருந்தது.

கான்ஸ்டபிளின் கை பதறாமலிருந்திருந்தால் தான்பிரீனை ஒரு கணத்தில் சுட்டுக் கொன்றிருக்க முடியும். தான்பிரீன் விரைவாக ரிவால்வரை அவன் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தான். தனக்கு சாவுமணி அடித்து விட்டதென்று அஞ்சி அவன் அவ்விடத்திலிருந்து குதிரைபோல் துள்ளி ஓடிவிட்டான். சார்ஜெண்டுக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. அவனும் தரைமேல் வீழ்ந்தான். தான்பிரீன் ரெய்லியை விடாது சுடவேண்டுமென்று பார்த்தான். ஆனால் அவனுடைய கண்களில் இரத்தம் வழிந்து பார்வை தெரியாமல் போய்விட்டது. இதற்குள் நண்பர்கள் ஹோகனை ஸ்டேஷனுக்கு வெளியே செளகரியமான ஓரிடத்திலே கொண்டு சேர்த்தனர்.

இறந்த கான்ஸ்டபிளையும் இறந்து கொண்டிருந்த சார்ஜென்டையும் தவிர அங்கு வேறு எதிரிகள் இல்லை. ஆதலால் தான்பிரீன் விரைவாகச் சென்று ஸ்டேஷன் வாயிலை அடைந்தான். மக்கள் திகைப்படைந்து ரயிலிலிருந்து கீழே குதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எஞ்சின் ஓட்டிக்குக் கூட சண்டை நடந்தது தெரியாது. எங்கோ குண்டோசை கேட்பதாக அவன் எண்னிக் கொண்டான்.

அன்றிரவு இறந்து போன என்ரைட்டின் உடலும், காயம்பட்ட சார்ஜென்டும் ரயிலில் கில்மல்லக் என்ற ஊருக்குக் கொண்டு போகப்பட்டதில் சார்ஜென்டும் மறுநாள் மாலை இறந்துபோனான். பின்னால் மரண விசாரணையில் ரெய்லி வாக்குமூலம் கொடுத்தான். அவன் வாக்கு மூலத்தை ஒருவரும் நம்பவில்லை. இந்த மரண விசாரணையின் முக்கிய அம்சம் என்னவெனில், ஜூரர்கள் கொலை என்று தீர்ப்புக்கூற மறுத்துவிட்டதேயாகும். கெளரவமான மனிதர்களை அரசாங்கம் கைது செய்ததும், மக்களுக்கு ஆத்திரமூட்டியதும், தக்க பந்தோபஸ்தில்லாமல் போலிஸாரை அனுப்பி வைத்ததும் குற்றமென்று அவர்கள் கூறினார்கள் அத்துடன் புரட்சிக்காரர்களுக்கு இறந்து போன போலிஸாரிடம் பகைமை இல்லை என்பதையும், போலிஸார் தங்கள் கடைமையை மறந்து துப்பறிந்து கூறும் உளவாளிகளாக நடந்தும், பட்டாளத்தில் வேலைகளைத் தாங்களே செய்தும் வந்ததால் இம்மாதிரிச்சண்டைகள் நடந்தன என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்!

நாக்லாங் சம்பவத்தைப் பற்றிப் பலர் பலவாறு கூறி வந்தனர். பாதிரிமார்களும், பத்திரிகைக்காரர்களும் வழக்கம்போல் அதைக் கண்டித்து ஓலமிட்டனர். ஆனால் இதே ஆசாமிகள்தான் பின்னால் 'வீரர்கள் வாங்கித் தந்த சுயராஜ்யம்' என்று அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.