விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2020-07-02
உடற்கல்வி என்றால் என்ன நூலை எஸ். நவராஜ் செல்லையா எழதியுள்ளார். உடற்கல்வி என்றால் என்ன? அதன் தத்துவம் என்ன? அறிவார்ந்த கொள்கைகள் யாவை? அதன் ஆழமான நுட்பங்கள் யாவை? உடற்கல்வி எப்படி உருவாகியிருக்கிறது? உடலுக்கு உடற்கல்வி தரும் உணர்ச்சி பூர்வமான செயல்பாடுகள் உள்ளத்தைப் பண்படுத்த, அது மேற்கொள்ளும் முயற்சிகள், சமுதாயத்தின் செழிப்புக்காக, உடற்கல்வி மக்களை தயார்படுத்தும் மனோன்னத சேவைகள். நன்மையும் தண்மையும் மிக்கத் தலைவர்களாக, தன்னைப் புரிந்து கொண்டு தொடர்கின்ற தொண்டர்களாக, மக்களை மாற்ற முனையும் முனைப்புக்களில் உடற்கல்வி கொண்டிருக்கும் நன்னோக்குகள், நம்பிகைகள் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 1. உடற்கல்வியும் உலகமும் இன்றைய உலகம் இன்றைய உலகம் எந்திர உலகமாக இருக்கிறது. ‘மந்திரத்தில் மாங்காய் விழுகிறது’ என்பார்களே, அது போன்ற மாயாஜாலம் போன்று மயங்குகிற விதத்திலே மாபெரும் காரியங்கள் நடைபெறுகின்ற களமாக, நாகரிக உலகம் இன்று நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. உடல் உழைப்பை ஒரமாக ஒதுக்கிவிட்டு, விரலசைத்து விடுகிறபோதே விரும்புகிற பல செயல்களைச் செய்து கொண்டு, உல்லாசமாக ஒய்வெடுத்துக் கொண்டு, மக்கள் வாழ்கின்றார்கள், காலத்தைக் கழிக்கின்றார்கள். நேரம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மக்களும் சுறுசுறுப்பு என்கிற போர்வையிலே மதமதர்ப்புடன் வாழ்கின்றார்கள். ‘சோம்பல்’ அவர்களை சொகுசு காட்டிக் கூட்டிச் சென்று, சோர்ந்து போக வைத்துக் கொண்டிருக்கிறது. அன்று சேர்ந்து வாழக் கற்றுக் கொண்ட மக்கள், இன்று தேர்ந்த கைகாரர்களாக வாழ்வதில் வல்லவர் |