அம்புலிப் பயணம்/திட்டமிட்ட வெற்றிச் செயல்கள்
"சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்“[1] என்று கனவு கண்டான் நம் நாட்டுக் கவிஞன் பாரதி. இப் பகுதியடங்கிய பாடல் முழுவதும் எந்தெந்த வகைகளில் எல்லாம் நாட்டினை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்று கவிஞனின் கனவு விரித்துரைக்கின்றது. இத்தகைய கனவினை மேற்புல நாடுகள் - குறிப்பாக அமெரிக்காவும் இரஷ்யாவும் - நனவாக்கி வருகின்றன. திட்டங்களை வகுத்துக்கொண்டு அவற்றைப் படிப்படியாக வெற்றியுடன் நிறைவேற்றி வருகின்றன. அமெரிக்காவில் நாசா (NASA)[2] இயக்கத்தினைச்சேர்ந்த அறிவியலறிஞர்கள் மூன்று திட்டங்களை வகுத்துக்கொண்டு அவற்றைச் செயற்படுத்தி வருகின்றனர். இம் மூன்று திட்டங்களும் மனிதன் திங்கள் மண்டலத்திற்குச் சென்று திரும்பும் வழிகளை வகுத்து அவற்றை வெற்றியுடன் செயற்படுத்துவதற்காகவே உருவாக்கப் பெற்றவை. இத் திட்டங்களின் ஒரு சில கூறுகளைச் சுருக்கமாக ஈண்டுக் காண்போம்.
மெர்க்குரித் திட்டம் : ஒரு கூண்டுக்குள் ஒரு மனிதனை ஏற்றி அக் கூண்டினை விண்வெளிக்கு அனுப்பி அதனைப் பூமியைப் பலமுறை சுற்றிவரச் செய்து. அதன் பின்னர் அதனைப் பூமிக்கு மீட்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டம் வெற்றி பெற்றுவிட்டதை இன்றைய உலகம் நன்கறியும். ஜான் கிளென் (Jchn Glenn) என்பவர் அமெரிக்காவீன் முதல் விண்வெளி வீரர். இவரை ஃபிரெண்ட்ஷிப்-7 {Frientlsilip-7) என்ற விண்வெளிக் கலத்தில் இருக்கச் செய்து[3] அக் கலத்தை மூன்று அடுக்கு அட்லாஸ் {Atles) என்ற இராக்கெட்டால் இயக்கினர். அவர் அமர்ந்திருந்த கலத்தின் எடை சுமார் இரண்டு டன் ; கலத்தினை இயக்கின இராக்கெட்டின் உந்து வீசை 3,60,000 பவுண்டு. சற்றேறக் குறைய ஐந்து நிமிடங்களில் விண்வெளிக் கலம் பூமியின் சுற்று வழியை அடைந்தது. பூமியை மூன்று முறை வலம் வந்தார். அதன் பின்னர் அவர் பின்னியங்கு இராக்கெட்டுகளை இயக்கினார் ; கலம் கடலில் வந்திறங்கியது. அங்கிருந்து அவர் மீட்கப் பெற்றார்.
இவரை கழித்து ஸ்காட் கார்ப்பெண்டர் (Scott Carpeular) என்பார் அரோர-7 என்ற விண்வெளிக் கலத்தில் அனுப்பப்பெற்றார்.[4] அமெரிக்காவின் இரண்டாவது விண்வெளி வீரரான இவர் சென்ற தலத்தினை அட்ரைஸ்-D என்ற மூன்றடுக்க இராக்கெட்டு இயக்கியது. இந்த வீரர் பல அரிய ஆராய்ச்திகளில் ஈடுபட்டார். இவர் இரண்டாவது முறை பூமியை வலம் வந்த பொழுது கலம் சாயாமல் செல்லுவதற்காகப் பயன்படும் ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு (Hydrogen peroxids; என்ற திரவம் எதிர்பாராத விதமாகத் தீர்ந்துவிட்டது. இத் தகவலைப்பூமியில் இருக்கும் அறிவியலறிஞர்கள் அறிவித்து இரண்டு சுற்றோடு பூமிக்குத் திரும்பி விடுமாறு கட்டளை பிறப்பித்தனர். ஆனால் வானொலித் தொடர்பு தடைப்பட்டது. இதனால் அவர்கள் கார்ப்பெண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியாமல் 53 நிமிடங்கள் வரை கவலை கொண்டிருந்தனர் . எண்ணற்ற கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அட்லாண்டிக் மாபெருங்கடலில் அவரைத் தேடித் திரிந்தன. இறுதியாக ஒரு ஹெலிகாப்டர் விமானம் கடலில் ஒரு கூண்டு மிதந்து கொண்டிருப்பதையும் அதன் அருகில் ஓர் உயிர்ப்படகின் மீது ஒருவர் அமர்ந்திருப்பதையும் கண்டது. உடனே கார்ப் பெண்டர் அங்கிருந்து மீட்கப் பெற்றார்.
வால்ட்டர் ஸ்கிர்ரா (Walter Schirra) என்பவர் அமெரிக்காவின் மூன்றாவது விண்வெளி வீரர். இவர் சிக்மா-7 என்ற விண்கலத்தில் அனுப்பப் பெற்றார் ; இக் கலத்தை அட்லாஸ் என்ற இராக்கெட்டு இயக்கியது.[5] பூமியின் சுற்று வழியை அடைந்ததும் இவர் கூண்டு செல்லும் திசையை அச்சாகக் கொண்டு கூண்டினைச் சுழலுமாறு கருவிகளை இயக்கினார். இதன் காரணமாக இவர் பாதி சுற்றுவரை நேராகவும், மறுபாதி சுற்றில் தலை கீழாகவும் இருந்துகொண்டு ஆறு முறை பூமியை வலம் வந்தார். அதன் பிறகு பின்னியங்கு இராக்கெட்டுகளை இயக்கிக் கூண்டினைக் கடலில் இறக்கினார். காத்திருந்தவர்கள் அவரை மீட்டனர்:
நான்காவதாகச் சென்ற கர்டான் கூப்பர் (Gordran Coopar) என்ற விண்வெளி வீரரின் செலவு அமெரிக்க மக்களை வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. இவர் ஃபெயித்-7 (Faith-7) என்ற விண்வெளிக் கலத்தில் சென்றார்.[6] இக் கலத்தை அட்லாஸ் என்ற இராக்கெட்டு ஐந்தே நிமிடத்தில் பூமியின் சுற்று வழியில் கொண்டு செலுத்தியது. தொடக்கத்திலிருந்து கருவிகளின் இயக்கங்களைப் பூமிக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார். இவர் திட உணவு அருந்திப் பழச்சாறுகளைப் பருகி ஏழரை மணி நேரம் அயர்ந்து உறங்கி எழுந்தார். உறங்கும் போது இவர் இதயம் "படபட“ வென்று துடித்ததைப் பூமியிலிருந்தோர் அறிந்தனர். கனவு கண்டதே இதற்குக் காரணம் என்று விளக்கம் தரப்பெற்றது.. இவர் இந்தியா மீது நான்கு முறை பறந்தார். 22 முறை பூமியை வலம் வந்த பிறகு திரும்பலாம் என்று கட்டளை பிறப்பித்தனர். எதிர்பாராத விதமாகக் கருவிகளில் கோளாறுகள் ஏற்பட்டு விட்டன. ஏற்கெனவே விண்வெளிக்குச் சென்ற கிளென் கருவிகளைக் கையாளும் முறையைப் பூமியிலிருந்தே அறிவிக்க அம்முறைகளையெல்லாம் தவருது கையாண்டு பசிபிக் மாகடலில் முன்னரே குறிப்பிடப்பட்ட இடத்தில் கூண்டினைக் கொண்டு வந்து இறக்கினார் இந்த மாபெரும் வீரர். அத்த இடத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் விமானங்களில் ஒன்று அவரை மீட்டு அருகிலிருந்த கப்பலில் சேர்த்தது.
இரஷ்யாவிலும் இந்த விண்வெளிச் செலவு சுறுசுறுப்பாக நடைபெற்றது. அமெரிக்க வீரர்கள் விண்வெளியை அடைவதற்கு முன்னதாகவே இரஷ்யா, யூரிககாரின் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி அழியாப் புகழ்பெற்றது.[7] இவர் சென்ற விண்வெளிக் கலம் வாஸ்டாக். 1 என்பது. ஒரு முறை வலம் வந்த பிறகு இவர் பூமியை வந்தடைந்தார். இவரை அடுத்து அனுப்பப் பெற்ற மேஜர் டிட்டோல் (Major Titoy) என்பார் பூமியைப் பதினேழு முறை வலம் வந்து பூமியை வந்தடைந்தார்.[8] இவர் சென்ற கலம் வாஸ்டாக்-2 என்பது. அதன் எடை நாலரை டன். அடுத்துச் சென்ற இரஷ்யாவின் இரட்டை விண்வெளி வீரர்கள் எதிர்கால விண்வெளி நிலையத்திற்கு அடிகோலும் வகையில் அரியதொரு செயலை ஆற்றினர். வாஸ்டாக்-3 கலத்தில் நிக்கோலாவ் (Nikolayev] என்பாரும்,[9] இவர் சென்ற மறுநாள் வாஸ்டாக்-4 கலத்தில் பொட்ச் (Popvich) என்பாரும் அனுப்பப் பெற்றனர். இரண்டு கலங்களும் சென்ற சுற்று வழிகள் கிட்டத்தட்ட நெருங்கி, இருந்தன ; இருவரும் ஒருவரோடொருவர் வானொலி மூலம் தொடர்பு கொண்டிருந்தனர். நிக்கோலாவ் 64 சுற்றுக்களும், பொப்விச் 48 சுற்றுக்களும் சுற்றிய பின்னர்ப் பூமியை வந்தடைந்தனர். அடுத்து, ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்பி இரஷ்யா பெரும்புகழ் அடைந்தது. வலேரி பிகோவ்ஸ்கி என்ற வீரரை வாஸ்டாக்-5 கலத்திலும்,[10] இரண்டு நாள் கழிந்த பின்னர் வாலண்டினா தெரஸ்கோவா என்ற வீராங்கனையை வாஸ்டாக்-6 கலத்திலும் இரஷ்யா, அனுப்பி வைத்தது. வாஸ்டாக்- 5 பூமியை 88 நிமிடங்களுக் கொருமுறையும், வாஸ்டாக்-6 83.3 நிமிடங்களுக் கொருமுறையும் - பூமியை வலம் வந்து கொண்டிருந்தன. வாஸ்டாக் 6 விண்வெளிக்குச் சென்ற முப்பது நிமிடங்களில் வாஸ்டாக்.5 உடன் தொலை பேசித் தொடர்பு கொண்டது. இரண்டு கலங்களும் பல்வேறு சோதனைகளை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைந்தன.[11] பிகோவ்ஸ்கி விண்வெளியில் 4 நாள்கள் 25 மணி 54 நிமிடங்கள் பயணம் செய்து பூமியை 82 தடவைகள் வலம் வந்தார். தெரஸ்கோவா 2 நாள்கள் 22 மணி 57 நிமிடங்கள் பயணம் செய்து பூமியை 49 முறை சுற்றினார்.
இங்ஙனம் இரு நாடுகளும் விண்வெளிச் செலவினை மேற்கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தன. 1963-இல் இத் திட்டம் நிறைவு பெற்றது.
ஜெமினித் திட்டம் : இத் திட்டத்தில் இரண்டு வீரர்கள் தங்குவதற்கேற்ற விண்கலம் அமைக்கப் பெற்றது. கூண்டில் இரண்டு வீரர்களை இருக்கச் செய்து, அஃது ஓர் இராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு அனுப்பப் பெற்றது. இந்த விண்கலம் வாரக் கணக்காகப் பூமியைப் பன்முறை வலம் வந்த பின்னர்ப் பூமியை வந்தடைந்தது. இத் திட்டமும் வெற்றியுடன் செயற் படுத்தப்பட்டுவிட்டது. இத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பெற்ற பன்னிரண்டு விண்வெளிச் செலவுகளும் வெற்றியுடன் நிறைவேறின. அம்புலியில் இறங்குவதற்குத் தேவையான எல்லாத் துறை - நுட்பச் சோதனைகளிலும் வெற்றி கண்டனர். விண்வெளியில் முன்னேற்பாட்டின்படி குறிப்பிட்ட இடத்தில் விண்வெளி வீரர்கள். சந்தித்தல், இரண்டு விண்வெளிக் கலங்களை இணைத்தல், மனிதன் நீண்ட காலம் தொடர்ந்து விண்வெளியில் இருத்தல்- இவை இத் திட்டத்தின் முதல் நோக்கங்களாக இருந்தன. இவை இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப் பெற்ற விண்வெளிச் செலவுகளால் நிறைவேறின. மனிதர்கள் விண்வெளிக் கலங்களைத் திறம்படக் கையாள முடியும் என்பது மெய்ப்பிக்கப் பெற்றது. மேலும், அவர்கள் ஒரு சுற்று வழியினின்றும் பிறிதொரு சுற்று வழிக்குச் செல்லல், விண் வெளிக் கலத்திற்கு வெளியில் ஒருவிதக் கட்டுப்பாட்டின் கீழ் விண்வெளியில் நடத்தல், சுற்று வழியில் வேறொரு விண்கலத்தின் இருப்பிடத்தை அறிந்து, அதனைத் தொடர்ந்து சென்று அதனுடன் இணைதல், அம்புலிக்குச் சென்று திரும்புவதற்கு வேண்டிய கால அளவில் இரண்டு மடங்கு கால அளவிற்கு நீண்ட காலம் தொடர்ந்து விண்வெளியில் தங்குதலைச் சமாளித்தல் ஆகியவை இச் செலவுகளால் தெளிவாயின.
ஜெமினித் திட்டம் தொடங்கப்பெற்ற காலத்தில்-அஃதாவது 1963 இல்- இத் திட்டத்தின் நோக்கங்கள் மிகப் பெரியனவாய்த் தோன்றின. ஒரு மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஒரு குறிப்பிட்ட சுற்று வழியில் தங்கிச் சிறிது காலத்திற்குள் பூமிக்குப் பாதுகாப்புடன் திரும்பிய செயல் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. சுருங்கக் கூறின், இத் திட்டத்தின் நோக்கங்கள் குறைவானவை என்றே சொல்லலாம். இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப் பெற்ற பன்னிரண்டு விண்வெளிச் செலவுகளைப் பற்றியும் சுருக்கமாகக் காண்போம்.
முதலிரண்டுச் செலவுகளும் ஆளில்லாத விண்வெளிச் செலவுகளாகும். வி. ஐ கிரிஸ்ஸம் (Virgil I. Grissom), ஜான் பங்க் (John Young) ஆகிய இரு விண்வெளி வீரர்கள் ஜெமினி - 3 (Gemini - 3) கலத்தில் விண்வெளிக்குச் சென்று மூன்று முறை தங்கள் கலத்தைப் பூமியின் சுற்று வழியில் இயக்கினர்.[12] - மூன்று திங்கட்குப் பிறகு ஜெமிணி - 4 இல் சென்ற மேக்டிவிட்டும் (Mc Divitt), எட்வர்டு வொயிட்டும் (Edward White) விண்வெளியில் வீண்கலத்தைப் பல்வேறு விதமாகத் திறம்பட இயக்க முடியும் என்பதைக் காட்டினர் ; வொயிட் முதன் முதலாக விண்வெளியில் நடந்து காட்டின அமெரிக்க வீரர் ஆவர். ஜெமினி - 5 இல் சென்ற கர்டான். கூப்பரும் (Gordon Cooper) சார்லஸ் கொன்ராடும் (Charles Conrad) எட்டு நாள் செலவினைத் தாக்குப் பிடிக்கும். ஆற்றல் மனிதனிடம் உண்டு என்பதை மெய்ப்பித்தனர்.[13] நான்கு திங்கட்குப் பிறகு (டிசம்பரில்) ஜெமினி - 7இல் விண்வெளிக்குச் சென்று பதினான்கு நாட்கள் அங்குச் சுற்றினர். இதுதான் உலகிலேயே விண்வெளியில் அதிக நாள்கள் இருந்த முதல் தடவையாகும். அவர்கள் இருவரும் பூமியை வலம் வந்து கொண்டிருந்த பொழுது ஜெமினி - 6இல் விண்வெளிக்குச் சென்ற வால்ட்டர் ஸ்கிர்ராவும், தாமஸ் ஸ்டாஃபோர்டும் (Thomas Stafford) அவர்களுடன் சேர்ந்தனர். இதுதான் மனிதர்கள் முன்னேற்பாட்டின்படி விண்வெளியில் நிகழ்த்திய முதல் சந்திப்பாகும்.
அடுத்து, நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் (Neil Armstrong), டேவிட் ஸ்காட்டும் (David Scott) அரியதொரு வீரச் செயலைப்புரிந்தனர். ஜெமினி-8 இல் சென்ற இவர்கள்[14] அஜெனா என்ற இலக்கு ஊர்தியுடன் தாங்கள் சென்ற விண்கலத்தை இணைத்தனர். விண் வெளியில் இரண்டு ஊர்திகள் இணைந்தது இதுவே முதல் தடவையாகும். அதே ஆண்டு ஜுன் திங்களில் (1966) ஜெமிணி - 9 இல் விண்வெளிக்குச் சென்ற இரு விண்வெளி வீரர்களில் ஒருவராகிய தாமஸ் ஸ்டாஃபோர்டு என்பார் ஒர் இலக்கு ஊர்தியுடன் தன் கலத்தை விண்வெளியில் தனித் தனியாக மூன்று முறை சந்தித்து அதனுடன் இணைத்துக் காட்டினார் ; - மற்றொருவராகிய கெர்னான் என்பார் 2 மணி 8- நிமிட நேரம் விண்வெளியில் நடந்து காட்டினார். உலகிலேயே அதிக நேரம் விண்வெளியில் நடந்து காட்டியது இதுவே முதல் தடவையாகும். இவர்கள் அட்லாண்டிக் மாபெருங் கடலில் இலக்கு இடத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தங்கள் விண்வெளிக் கலத்தை இறக்கினர்.
ஜான் யங்க, மைக்கோள் காலின்ஸ் (Michael Collins) என்ற இரு விண்வெளி வீரர்கள் ஜெமினி - 10 கலத்தில் சென்று தனித்தனியாக இரண்டு அஜெனா ஊர்திகளைச் சந்தித்தனர். இங்ஙனம் இரட்டை ஊர்திகளை விண்வெளியில் சந்திக்கச் செய்தது. இதுவே முதல் தடவையாகும். காலின்ஸ் என்பார் நான்கு நாள் விண்வெளிப் பயணத்தில் தனித்தனியாக இருமுறை விண்வெளியில் செயல் புரிந்தார். மேலும்,
ஜெமினி - 10 முதல் தடவையாகச் சுற்று வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்றோர் இராட்கெட்டுடன் இணைந்து தன்னுடைய திறனை அதிகரித்துக் கொண்டது. அது அஜெனா இராக்கெட்டுடன் இணைந்து மேலும் அதிக உயரம் (766 கிலோ மீட்டர்) செல்லுவதற்கு அதன் வேகத்தைப் பயன்படுத்திக் கொண்டது. இரண்டாவது அஜெனா இலக்கு ஒன்றினைத் தேடுவதற்காக மனிதன் மிக அதிக உயரத்திற்குச் சென்றது இதுவே முதல் தடவையாகும்.
அடுத்து செப்டம்பரில் (1968) ஜெமினி - 11 இல் ரிச்சர்டு - கர்டான் (Richard Gordon), சார்லஸ் கோன்ராடு (Charles Coprad) என்ற இரு விண்வெளி வீரர்கள் அனுப்பப்பெற்றனர். இவர்கள் 1368 கிலோ மீட்டர் உயரம் வரை விண்வெளியில் சென்று ஜெமினி - 10 சென்ற உயரம் சிறிது என்று சொல்லுமாறு செய்தனர். விண்வெளியில் நடைபெறும் சந்திப்பு, கலங்களை விண்வெளியில் இணைத்தல் ஆகிய செயல்களின் துறை - நுட்பங்கள் (Techniques) மேலும் பண்பட்டன. கர்டான் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கலத்திற்குப் புறம்பே தங்கியிருந்தார். ஜேம்ஸ் லவல் {James Love!1}, எட்வின் ஆல்ட்ரின் (Edwin Aldrir) என்ற விண்வெளி வீரர்கள் ஜெமினி-12 இல் விண்வெளிக்குச் சென்றதோடு[15] ஜெமினி திட்டம் நிறைவு பெற்றது. இவர்கள் விண்வெளியில் தங்கள் கலத்தை வேறொரு இலக்கு ஊர்தியுடன் நான்கு முறை இணைத்தும் பிரித்தும் வெற்றிச் செயல் புரிந்தனர்.
இரஷ்யாவும் விண்வெளிக் கலங்களை விண்வெளியில் இணைக்கும் செயலையும் அண்டவெளியில் விண்வெளி வீரர்கள் தாம் இருந்த கலங்களினின்றும் இடம் மாறும் செயலையும் நிறைவேற்றி அழியாப் புகழ்பெற்றது. சோயுஸ் - 4 என்ற விண்வெளிக்கலம் தனது 31ஆவது சுற்றின்போது சோயுஸ்- 5 என்ற கலத்துடன் அதன் 18ஆவது சுற்றின் போது இணைந்தது.[16] இரண்டு கலங்களும் இணைந்த நிலையில் 4 மணி 35 நிமிட நேரம் பறந்து ஒரு விண்வெளி நிலையம்போல் செயற்பட்டன. சோயுஸ் - 5 லிருந்த எவ்ஜெனி குருனோ, அலெக்கி யென்சோ என்ற இரு விண்வெளி வீரர்கள் (Cosmonaute) விண்வெளி உடையணிந்து கொண்டு தம் கலத்தினின்றும் வெளியில் போந்து ஒரு மணி நேரம் விண் வெளியில் நடை போட்ட பிறகு சோயுஸ் - 4 கலத்தினுள் நுழைந்து தமது விண்வெளித் தோழரான ஷதலோவுடன் கைகுலுக்கினர். பிறகு இரண்டு கலங்களும் பிரிந்து தனித் தனியாகத் தம் பயணங்களைத் தொடர்ந்தன. தம் பணிகள் நிறைவேறியதும் அவை பாதுகாப்பாகத் தரையில் இறங்கின.
அண்மையில் ஒன்றன் பின் ஒன்றாக 24 மணி நேர இடைவெளியில் இரஷ்யர்கள் அனுப்பிய சோயுஸ்-6, சோயுஸ் 7, சோயுஸ் 8 என்ற விண் வெளிக் கலங்கள்[17] விண்வெளிக்குச் சென்றதும், அவை ஏழு விண்வெளி வீரர்களின் கூட்டுறவால் பிரிந்து இணைந்ததும், பிறகு அவை வெற்றியுடன் பூமிக்குத் திரும்பியதும், விண்வெளிப் பயணத்தின் சிறந்த ஓர் எதிர் காலத்திற்கு அறிகுறிகளாகும். வருங்காலத்தில் சோயுஸ் வகை விண்கலங்களைப் போக்குவரத்து ஊர்திகளாகவும், விண்வெளித் துறைமுகங்களாகவும், அடுத்துச் செல்லும் வலவர்களது பயிற்சி நிலையங்களாகவும், தானியங்கி விண்வெளி ஊர்திகளைப் பழுது பார்க்கும் மேடைகனாகவும் பயன்படுத்தலாம் என்று பொறிஞர்கள் கருதுகின்றனர்.
- ↑ பாரதியார் கவிதைகள் - பாரத தேசம் - 11,
- ↑ NASA - National Aeronautics and Space Adminis-. tration.
- ↑ 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள்.
- ↑ 1982 ஆம் ஆண்டு மே 24 ஆம் நாள்.
- ↑ 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள்.
- ↑ 1963 ஆம் ஆண்டு மே.15 ஆம் நாள்.
- ↑ 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள்.
- ↑ 1861 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் நாள்
- ↑ 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் நாள்.
- ↑ 1963 ஆம் ஆண்டு சூன் 14 ஆம் நாள்.
- ↑ 1963 ஆம் ஆண்டு சூன் 19 ஆம் நாள்.
- ↑ 1985ஆம் ஆண்டு மார்ச்சு 28 ஆம் நாள்.
- ↑ 1965ஆம். ஆண்டு ஆகஸ்டு 24-29ஆம் நாட்கள்.
- ↑ 1966 ஆம் ஆண்டு மார்ச்சு 16-ஆம் நாள்.
- ↑ 1966 ஆம் ஆண்டு நவம்பர் 11-15ஆம் நாள்கள்.
- ↑ 1969 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள்.
- ↑ 1969ஆம் ஆண்டு அக்டோபர் 11, 12, 13 நாள்கள.