அம்புலிப் பயணம்/அப்போலோ - 17

விக்கிமூலம் இலிருந்து
19. அப்போலோ - 17

ப்போலோ - 17 விண்வெளிப் பயணம்[1] உலகிற்கு 45ஆவது விண்வெளிப் பயணமாகும் ; அமெரிக்காவிற்கு 27 ஆவது பயணமாகும். அம்புலியைச் சுற்றி அமெரிக்க விண்வெளி வீரர்கள் சென்ற ஒன்பதாவது பயணம் இது. அம்புலியைச் சுற்றி வந்த பயணங்களிலே மூன்று பயணங்கள் நீங்கலாக மற்றெல்லாப் பயணங்களிலும் விண்வெளி வீரர்கள் அம்புலியில் இறங்கினர். 1968 டிசம்பரில் அப்போலோ - 8 விண்வெளி வீரர்கள் அம்புலியை முதன் முதலாகச் சுற்றினர். 1969 சூலை மாதம் அப்போலோ-11 வீரர்கள் முதன்முதலாக அம்புவியில் அடியெடுத்து வைத்தனர். பின்னர் திகழ்ந்த அப்போலோ 13 பயணம் நீங்கலாக மற்றெல்லா அப்போலோப் பயணங்களிலும் விண்வெளி வீரர்கள் அம்புலியில் இறங்கினர். விண்வெளிக் கலத்தில் ஏற்பட்ட கடுமையான சீர்கேடு காரணமாக அப்போலோ -13 விண்வெளி வீரர்கள் அம்புலியில் இறங்க முடியவில்லை. அவர்கள் அம்புலியை வலம் வந்து திரும்பி விட்டனர். அப்போலோ-17 பயணத்துடன் மனிதன். அங்கு இறங்குவது ஆறாவது தடவையாகும். பத்து ஆண்டுகட்கு முன்பிருந்து ஆயத்தமான அமெரிக்க அம்புலிப் பயணத் திட்டத்திற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல் அமைந்த பயணம் இது.

அம்புலிப் பயணங்கள் எல்லாவற்றிலும் மிக நீண்டது இந்த அப்போலோ - 17 இன் பயணம்.[2] இதில் யூஜீன் ஏ. செர்னான் (Eugene A. Cernan) (வயது 40) ரானல்டு இ. இவான்ஸ் (Ronald E. Evans) (வயது 39) ஹரிசன் எச். ஸ்கிமித் (Harrison H. Schmitt) (வயது 37) ஆகிய மூவரும் பங்கேற்றனர். இவர்களுள் செர்னான் தலைமை விமானி; இவான்ஸ் 'அமெரிக்கா' என்ற தாய்க்கப்பலின் விமானி; ஸ்கிமித் 'சாலஞ்சர்' (Challenger) என்ற நிலாக்கலத்தின் விமானி. செர்னான் 1966 இல் விண்வெளி விமானியானவர். இதற்குமுன் இருமுறை விண்வெளிப் பயணம் செய்தவர் இவர். 1966 சூன் மாதம் ஜெமினி - 9 விண்வெளிக் கலத்தில் சென்றபோது கலத்திற்கு வெளியில் வந்து விண்வெளியில் 2 மணி 10 நிமிடம் நடந்து காட்டியவர் ; விண்வெளிக் கலம் ஒன்று பூமியை ஒரு முழுச் சுற்று சுற்றும் வரையில் ஆகாயத்தில் நடந்த முதல் மனிதர். பின்னர் 1969 இல் மே மாதம் அப்போலோ 10 விண்வெளிக் கலத்தில் அம்புலியை 31 முறை வலம் வந்து அம்புலித், தரைக்குப் பதினைந்து கிலோ மீட்டர் உயரம் வரை சென்று திரும்பியவர் இவர். ஆக மொத்தம் இதுவரை பதினொரு நாட்களுக்கு மேல் விண்வெளியில் பயணம் செய்த வீரராவார். இந்தப் பயணத்தில் இவான்ஸ் தாய்க்கப்பலில் தனியே அம்புலியைச் சுற்றிக்கொண்டு ஆய்வுகள் நடத்தினார். இதற்கு முன்னர் இவர் விண்வெளி சென்றதில்லை. செர்னான், ஸ்கிமித் ஆகிய இருவரும் அம்புலித் தரையில் இறங்கி ஆய்வுகள் தடத்தினர். இவர்கள் முறையே நிலாத் தரையில் இறங்கிய 11-வது, 12-வது மனிதர்களாவர். ஸ்கிமித் ஒரு நில உட்கூற்றியல் அறிவியலறிஞர்; டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் ஒரு மாணி (Bachelor). அறிவியலறிஞர் ஒருவர், முதன் முதலாக அம்புலிக்குச் சென்றவர் இவரே யாவார். பூமியில் பாறைகளையும் பாறைகளின் அமைப்பையும் ஆராய்வதில் இவர் வல்லுநர், அம்புலியின் பாறை ஆய்வுக்காகவே இவர் 1965 இல் விண்வெளி விமானியாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்.

இதுவே இரவில் புறப்பட்ட முதற் பயணம் ஆகும். இரவில் ஏன் புறப்படவேண்டும் ? அம்புலியில் நம்மை நோக்கியிருக்கும் பக்கத்தில் ஏறத்தாழ விளிம்பிற்கும் மையத்திற்கும் நடுவில் வடகிழக்குப் பகுதியில் டாரஸ்-லிட்ராவ் (Taurus-Littrow)[3] என்ற மலைப்பாங்கான இடத்தில் இறங்கவேண்டும், அதற்குக் கென்னடி முனையிலிருந்து கிளம்பினால் இரவில் தான் புறப்பட வேண்டியுள்ளது. அப்பொழுது தான் வழியில் எரி பொருள் செலவு குறைவாக இருக்கும். இடையில் கலம் செல்லும் வழியைச் சற்று மாற்றித் திருத்தவேண்டிய வேலையும் குறையும். இறங்கும் இடத்திலும் இறங்கும் நேரத்தில் கதிரவன் வசதியான உயரத்திலிருந்து ஒளி வீசும்.

தேர்ந்தெடுக்கப் பெற்ற 'டாரஸ் - லிட்ராவ்' என்ற இலக்குத் தனிச்சிறப்புடையது. இது வேறுபட்ட இயற்கைத் தோற்றம் உடையது ; நில உட்கூற்றியல்பற்றிய பல வகை அமைப்புகள் கொண்டது. இங்குள்ள குன்றுப் பகுதிகளை மூடியிருக்கும் வெளிர் நிறப் பொருள் அம்புலி தோன்றிய காலத்தையொட்டியது, என. அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். சுமார் 2,100 மீட்டர் உயரமுள்ள அம்புலிமலையின் அருகிலிருக்கும் பள்ளத்தாக்கிலுள்ள பொருள்களும், மலையின் மீதும் பள்ளத்தாக்குகளிலும் சில கரும்பொருள்களும் எரிமலைகளினின்றும் உருகி வழிந்து பின்பு இறுகியவை என்று கருதப்பெறுகின்றன. இவை அம்புலியின் - உட்புறத்தில் மிக ஆழத்தினின்றும் ஓரளவுக்கு அண்மைக் காலத்தில் வெளிப்பட்டவையாக இருத்தல்வேண்டும்.

கதிரவ மண்டலம், பிரபஞ்சம் இவை தோன்றிய விதம் பற்றி ஆராயும் அறிவியலறிஞர்கட்குப் பழைமையான பொருள்கள் பெருமகிழ்ச்சி தரும். சுமார் 450 கோடி ஆண்டுகட்கு முன்பு அம்புலி தோன்றியதாக மதிப்பிடுகின்றனர் அவர்கள். வாயு மேகங்கள் இறுகி அஃது உண்டானதாக ஒரு கருத்து நிலவுகின்றது. அம்புலிப் பொருள்களின் மாதிரிகள் அப்போதிருந்த நிலைமைபற்றித் துப்புத் துலக்கக் கூடும். எரிமலைக் குழம்பு மாதிரிகளில் கோளியல் அறிஞர்கட்குப் பேரரர்வம் உண்டு. இவர்கள் பூமியும் அம்புலியும் உட்படப் பல்வேறு கோள்களும் எவ்வாறு தோன்றின என்று ஆய்வுகளை மேற்கொள்பவர்கள். அம்புலி தோன்றிய காலம் முதல் இன்றுவரை அஃது எத்தகைய மாற்றங்களை அடைத்தது என்பதை அறிய இப்பொருள்கள் துனை செய்யும்.

மேற்குறிப்பிட்ட 'டார்ஸ்-லிட்ராவ்' என்ற இலக்கு 'அமைதிக் கடல்' (Sea of Serenity) என்னும் அம்புலிப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அம்புலி ஆய்வுகளின் மூலம் இப்பகுதி ஒரு 'மாஸ்கான்' (MassConcentration) எனக் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. அஃதாவது, இப் பகுதி மிகுந்த பொருண்மைச் செறிவு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இங்கு உலோகத் தனிமங்கள் இருக்கக் கூடும். இத் தனிமங்கள் அம்புலியைச் சுற்றிவரும் செயற்கைக் கலங்களின் வட்டப் பாதையைப் பாதிக்கும் வகையில் ஈர்ப்பு விசையைச் செலுத்துபவை என்று கருதப் பெறுகின்றன. அப்போலோ - 17 இந்த இலக்குக்கு மேலே பறந்து சென்றபோது 'மாஸ்கான்கள்' பற்றியும், அவை செயற்கைக் கலங்கள் மீது உண்டாக்கும் விளைவுகள் பற்றியும் துணுக்கமான ஆய்வுகள் நடத்தப்பெற்றன்.

செர்னானும் ஸ்கிமித்தும் மின்விசை மோட்டார் வண்டியில் அம்புலித் தரையில் மூன்று முறை சுற்றி வந்தனர். அப்போது அவர்கள் செய்த முக்கியமான பணிகளுள் ஒன்று நிலாத் தரையில் ஆய்வு நிலையம் அமைத்ததாகும். இந்த ஆய்வு நிலையம் பலவகையான கருவித் தொகுதிகளைக் கொண்டது. இக் கருவிகள் தாமாகவே இயங்குபவை ; தம்மில் பதிவாகும் தகவல்களைத் தாமே நெடு நாட்களுக்கு ஒலிபரப்பிப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதற்கு - முன்னர்ச் சென்ற ஐந்து அப்போலோ கலங்களும் நிறுவிவந்த ஐந்து ஆய்வு நிலையங்களும் அறிவியல் தகவல்களை இன்றும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

முன்னைய அப்போலோ கலங்கள் எடுத்துச் சென்ற கருவிகள் தவிரப் புதிதாகப் பத்துக்கருவிகளைப் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு அப்போலோ - 17 அம்புலி மண்டலத்திற்கு எடுத்துச் சென்றது. அவற்றுள் ஏழு, நிலாத் தரையில் நடத்தும் ஆராய்ச்சித் தொகுப்பைச் சார்ந்தவை. ஒன்று, பூமி முதலிய விண்கோள்கள் அம்புலியைக் கவர்ந்து ஈர்க்கும் விசையின் தன்மையை ஆராய்ந்து கூறும். மற்றொன்று, அம்புலியின் உள்ளிருந்து சிறுசிறு அளவுகளில் தப்பித்து வெளிவரும் வாயுக்களின் மூலக்கூறுகளை ஆராயவல்லது. பிறிதொன்று, விண்வெளியினின்றும் வந்து அம்புலித் தரையில் படியும் தூசியின் அளவைக் கணிக்கவும் விண்கற்களால் தாக்குண்டு பெயர்ந்து விழும் நிலாத்தரைப் பொருள்களால் உண்டாகும் நில அரிப்பினை அளவிடவும் வல்லது. இன்னொன்று, அம்புலியின் பௌதிக இயல்புகளை ஆய்வதற்காக வெடிகுண்டுகளை வெடித்து ஆராயும் தன்மையுடையது.

நிலாத் தரையின் அடியில் பாறைகள் என்ன என்ன வகையில் அடுக் கடுக்காக உள்ளன என்று மேற்பரப்பின் மின் விசைத் தன்மைகளைக்கொண்டு ஆராயும் கருவி ஐந்தாவது. இதன் பயனாக அம்புலியின் உள்ளே நீர் உள்ளதா என்பதைக் கண்டறியலாம். அம்புலியின் ஈர்ப்புவிசை எவ்வாறு பரவியுள்ளது என்பதை ஆறாவது கருவி ஆயும். இதனை விண்வெளி வீரர்கள் நிலா ஊர்தியில் வைத்து அதில் ஏறிச்செல்லும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தி ஈர்ப்புவிசை நிலப்படம் வரைய உதவுவர். 'நிலா 'நியூட்ரான் ஆய்வு' என்ற ஏழாவது கருவி நிலாத்தரையில் ஏற்படும் அரிப்புகள் பற்றிய செய்திகளைத் தயாரித்துத் தரும். அம்புலித்தரையில் இறங்கிய இருவரும் இந்தக் கருவிகளைக் கையாண்டு ஆய்வுகளை நடத்தினர். இவர்கள் அம்புலியில் மூன்று நாள் மூன்று மணி ஒரு நிமிடநேரம் தங்கியிருந்தனர். இஃது அப்போலோ - 16 விண்வெளி வீரர்கள் அங்குத் தங்கியிருந்த நேரத்தைவிட, நான்கு மணிநேரம் அதிகமாகும்.

"அமெரிக்கா“ என்ற தாய்க் கலத்தில் நிலவினை வலம் வந்துகொண்டிருந்த இவான்ஸ் மற்ற மூன்று கருவி களையும் கையாண்டு ஆய்வுகள் நடத்தினார். இவர் பணிப் பகுதியில் உள்ள இந்த மூன்று ஆய்வுக்கருவிகளையும் ஒளிப்படக் கருவிகளையும் இயக்கி வைத்தார். ஒரு கருவி அம்புலித் தரைக்கு 13 கிலோ மீட்டர் ஆழத்திலுள்ள நிலைமைகளை "ராடார் அலைகள்“ கொண்டு ஆராயும் தன்மையது. மற்ருெரு கருவி அம்புலியின் இருண்ட மறுபக்கத்தின் அமைப்பினை உற்றறிவதற்காக அங்குள்ள மேற்பரப்பின் வெப்ப நிலை இடத்துக்கு இடம் வேறுபடுவதைக் கண்டறிய வல்லது. இன்னொரு ஆய்வுக்கருவி விண்வெளிக்கலம் வெளியிடும் புகை முதலிய வாயுக்கள் எப்படி எப்படிப் பரவுகின்றன ? அவை அம்புலியின் அருகே எவ்வளவு நேரம் தங்கியிருக்கின்றன ? என்பவற்றைத் தெரிவிக்கும்.

இந்த நீண்ட பயணத்தில் விண்வெளி வீரர்கள் மூவரும் திட்டமிட்டபடி எல்லாச் சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்தனர். இந்தப் பயணத்தின் புதுமைகளில் ஒன்று நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள் அம்புலித் தரையில் கண்ட ஆரஞ்சு நிறப் பள்ளத்தாக்கு ஆகும். இங்குள்ள மண்ணை இருவரும் சேகரித்தனர். இத்தகைய மண்ணை எவரும் கண்டதில்லை. அம்புலியில் தோன்றும் எரிமலையினால் வெளிப்படும் குழம்பில் உலோகப் பொருள்கள் இருக்க வேண்டும் என்று கருதப்பெறுகின்றது. அப் பொருள்கள் உயிரியத்துடன் (Oxygen) சேர்ந்து இந்த ஆரஞ்சு நிற மண் (Rust) உண்டாகியிருக்கவேண்டும். என்று ஊகம் செய்கின்றனர். இஃது உண்மையாயின் அம்புலியில் நீரும் உயிரியமும் இருந்திருக்கவேண்டும் என்றும், இதிலிருந்து அம்புலிக் கடல்களில் 300 கோடி ஆண்டுகட்கு முன்னர் எரிமலைக் குழம்பு நிரம்பியிருந்த பொழுது அஃது உயிரற்றுப் போய்விடவில்லை என்பது தெரிகின்றது என்றும் கருதுகின்றனர்.

இந்த அப்போலோ பயணத்தில் ஐந்து சிறிய சுண்டெலிகளும்[4] விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்தன. மனிதரும் பிற உயிர்களும் அம்புலிக்குப் பயணம் செய்தது இதுவே முதல் தடவையாகும். விண்வெளியில் அண்டக் கதிர்கள் (Cosmicrays) பரவியுள்ளன. அவை மனிதரைத் தாக்கும் பொழுது பல்வேறு உறுப்புகளிலும் பலவகை விளைவுகளை உண்டாக்குகின்றன. இக் கதிர்கள் மூளையில் எத்தகைய விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதை அறிய இந்தச் சுண்டெலிகள் அம்புலி மண்டலத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்றன. இவற்றின் மூளையில் அண்டக் கதிர்களைப் பதிவுசெய்யும் கருவிகள் பொருத்தப் பெற்றிருந்தன. அப்போலோக் கலத்தில் இவான்ஸ் இந்த எலிகளுடன் அம்புலியைச் சுற்றிக் கொண்டிருந்தார். பூமிக்குத் திரும்பிய பின்னர் இவ்வெலிகளின் மூளையை ஆராய்ந்து அதில் அண்டக் கதிர்களின் விளைவுகளைக் கணித்து அறிவர்.


  1. இது டிசம்பர் 7ஆம் நாள் (1972) தொடங்கி 19-ஆம் நாள் நிறைவு பெற்றது.
  2. புறப்பட்டதிலிருந்து வந்து இறங்கும் வரை ஆன காலம் 12நாள் 16 மணி 31 நிமிடம் ஆகும். அப்போலோ-15 விண்வெளி வீரர்கள் தங்கிய நேரத்தை விட மணி நேரம் அதிகமாகும்.
  3. துருக்கி நாட்டிலுள்ள பாரஸ் என்ற மலைத்தொடரின் பெயரையும் 19 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்திரிய நாட்டு வானியல் வல்லுநரும் கணித மேதையுமான விட்ராவ் என்பார் பெயரையும் இணைத்து இடப்பெற்றது இப் பெயர்.
  4. விரலின் நுனி அளவு உள்ளவை. ஒவ்வொன்றின் எடையும் 1/3 அவுன்ஸ் அளவே யாகும், மனிதர்கட்கு முன்னர் விண்வெளிக்குச் சென்ற பிற உயிர்கட்குப் பெயர் வைத்தது போல் இவற்றிற்குப் பெயர் வைக்க வில்லை.