பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்/பொன்மொழிகள்

விக்கிமூலம் இலிருந்து

பெஞ்சமின் ஃபிராங்ளின் வாழ்ந்தபோது மக்களை மேம்படுத்தும் எண்ணங்களை எல்லாம் அவரது நூற்களிலே பேசிய உரையாடல்களிலே தனது அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்த பிறகாவது நம்மை நாம் வாழ்க்கையிலே மேம்படுத்திக் கொள்வோமாக.

◯ தன்னடக்கமாக இரு. அதிக உணவை உண்டு மந்தமாக வாழாதே! போதைவெறி ஏறும்படி மதுபானத்தைக் குடிக்காதே,

◯ உனக்கோ, பிறருக்கோ நன்மை தரும் என்றால் ஒழிய அதிகமாகப் பேசாதே! அற்பமான வார்த்தைகளை அலசி அலசி ஆத்திரப்பட்டு உளராதே!

◯ எதையும் ஒழுங்குபடுத்து. எந்தப் பொருளையும் அவற்றிற்குரிய இடங்களிலே வைத்து பாதுகாத்துக்கொள். அதனதன் தேவை நேரும்போது கையாண்டுகொள்.

◯ காலத்தை வீணாக்காதே! போனால் திரும்பி வராது; உனக்குப் பயன்படுவதிலேயே உனது நேரத்தைச் செலவழி; அனாவசியமான செயல்களை அகற்றிவிடு.

◯ பொருளைக் காப்பாற்று! கண்டபடி அதை செலவழிக்காதே! உனக்கோ, மற்றவர்களுக்கே நன்மை தருமானால் செலவு செய்! ஒரு காசையும் துச்சமாக வீணாக்காதே.

◯ பிறரைத் துன்புறுத்தாமல் நேர்மையாக நட. கபடு, சூடு, பொய், பழிக்குப் பழி, பாவம் எதையும் நேர்மை தவறிச் செய்யாதே! எதைப் பேசினாலும் எங்கே பேசினாலும், எப்போது பேசினாலும் உண்மை ஒன்றையே உரையாடு.

◯ சுத்தமாக இரு. வாழும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்; உணவு, உடை, பழக்கவழக்கங்களிலும் அசுத்த எண்ணங்களுக்கு இடம் தராதே!

◯ குழத்தை பெறுவதற்காகவோ, உடல் நலத்திற்காகவோ மட்டும் அபூர்வமாக ஆண்-பெண் உறவுகொள், மானத்திற்கு களங்கம் ஏற்படுமாறு மாற்றாரிடம் ஆண்-பெண் உறவு தொடராதே!

◯ பணிவாக நடக்கக் கற்றுக்கொள்! சகிப்புத்தன்மையோடு வாழ முற்படு. இயேசு நாதரையும் சாக்ரடீசையும் முன்னுதாரணமாகக் கொண்டு வாழக் கற்றுக்கொள்.

◯ தன்னடக்கம்தான் உயிர்ப்பண்பு. அது மூளைக்குத் தெளிவைத்தரும்; குளிர்ச்சியைக் கொண்டுவரத் தூண்டும்; ஆசை, கவர்ச்சி, ஆத்திரம், கோபம் என்ற மனத்துன்பங்களிலே இருந்து உன்னையே நீ உணர்ந்து காப்பாற்றிக் கொள்.

◯ உணவு கொள்வதற்கு முன்பு உடற்பயிற்சி கொள். உண்டபின் செய்யாதே; முன்னது விருத்தி தரும்; பின்னதோ செரிமானத்திற்கு இடையூறு செய்யும். உறக்கம் இயற்கையாக வரும் கலக்கமற்றதாகவும் அமையும். வயிறு புடைக்க உண்டு விட்டு உறங்குவாயானால் கெட்ட கனவுகளும் பயங்கர எண்ணச் சுழல்களும் உண்டாகும்.

◯ பருவப் பெண்களை விட வயதான பெண்களையே தேர்ந்தெடுங்கள். புத்திளம் பெண்களை விட வயதான் பெண்களே - அதாவது சிறுசுகளை விட பெரிசுகளே மெல் என்ன காரணம் தெரியுமா?

◯ வயதான் பெண்களுக்கு உலகஅறிவும் அனுபவமும் அதிகம். நன்றாகப் பேசுவார்கள்; சிறுசுகளைப்போல அசட்டுத்தனமாகவும், அர்த்தமில்லாத கூச்சமும், அடம் பிடிக்கிற சுபாவமும் இருக்காது. எதிலும் அதிகமாக எதிர்பார்க்க மாட்டார்கள். வயதான பெண்களுக்கு அழகும் கவர்ச்சியும் குறையும் போது உங்களிடம் நல்ல விதமாகப் பழகுவார்கள், நடப்பார்கள்; அதிகமாகக் குழந்தைகள் பிறக்கும் என்ற ஆபத்தும் இல்லை. அனுபவம் அதிகமாதலால் எதிலும் கவனமாக இருப்பார்கள். எதிலும் தங்களது திறமையைக் காட்டுவார்கள். காதல் விஷயங்களில் மிகவும் கருத்துள்ளவர்களாக இருப்பார்கள். இளம் பெண்ணைத் துன்பப்படச் செய்தால் உங்களுக்கு அடிக்கடி கசப்புகள் ஏற்படும். வயதானவர்கள் இடத்திலே அவ்வாறு ஏற்படாது. உங்கள் மேல் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வார்கள்.

அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதிலே அவ்வளவு சங்கடங்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் நன்றி உணர்ச்சியுடன் இருப்பார்கள்.

“இருட்டிலே எல்லா பூனையும் பழுப்பு நிறந்தான்” எனவே, உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்.

◯ அரசியல் வாதிகள் என்றால் தவறுகளையே அதிகமாகச் செய்வார்கள். அதற்கு சரித்திரத்திலே ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

◯ எங்கு சுதந்திரம் வாழ்கிறதோ அங்கு தான் என் நாடு இருக்கிறது.

◯ நாம் எல்லோரும் ஒன்றாகக் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஒற்றுமையாகத் தொங்குவோம். இல்லையென்றால், நாம் தனித்தனியாகவே தூக்கில் தொங்க நேரிடுவது நிச்சயம்.

◯ நல்ல போர் என்ற ஒன்று இருந்ததில்லை; கெட்ட சமாதானம் என்று ஒன்று இருந்தது இல்லை.

◯ பலவிதமான கட்சிகளின் பலவிதமான கொள்கை நோக்கங்களே குழப்பங்களுக்கு காரணமாகும்.

◯ ஒரு கட்சியானது பொது நோக்குடன் செயல்பட வேண்டும். சுயநலப்போக்கு மக்களிடம் பகையை உருவாக்கி விடும்.

◯ பொது விவகாரங்களில் ஈடுபடுவோர் சிலர்தான். மனித குலத்துக்கு நன்மை உண்டாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் பாடுபடுவார்கள்.

◯ அறிஞர்கள் அனைவரும் ஒரே மதத்தைத்தான் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், என்றனர் அறிஞர்கள். அங்கிருந்த பெண்மணி ஒருத்தி, “அது என்ன மதம்?” என்று கேட்டாள். அதற்கு அறிஞர் உடனே, “அறிவாளிகள் வாய்திறந்து சொல்வது இல்லை பெண்ணே” என்றார்.

◯ ஒரே கடவுள்தான் உண்டு. அறிவின் ஊற்றுநீர் வீச்சுதான் கடவுள்.

◯ மனிதர்களுக்கு நல்லது செய்வது தான் கடவுளுக்குச் செய்யும் மிக மிக நல்ல தொண்டு.

◯ கடவுள், தன் நற்கருணையால் இந்த உலகத்தை ஆள்கிறார்! அவரைப் போற்றுவதும் ஆராதனை செய்வதும்தான் அவரை நாம் வழிபாடு செய்தலாகும்.

◯ ஆத்மா அழிவற்றது.

◯ பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா? எங்கேயாவது சென்று கொஞ்சம் கடன் வாங்கிப்பார்!

◯ மங்கையர், மது, சூது, பித்தலாட்டம் எல்லாம் செல்வத்தைத் தேய்க்கும் படைகள். தேவைகளைப் பெருக்கும் நோய்கள்.

◯ நேரம்தான் பணம் என்பதை நினைவிலே நிறுத்து! அதற்கேற்ப உழை! கணக்கில் இருப்பதும் பணம்தான்! ஞாபகத்தில் வை.

◯ பணம் என்பது குட்டிபோட்டு இன விருத்தி செய்யும் இயற்கையானது என்பதை மறந்து விடாதே.

◯ பணம் குட்டி போடும். அந்தப் பணம் மேலும் பல குட்டிகளை ஈன்று இனம் பெருக்கும்! எனவே, பணம் பிரசவிக்கும் ஓர் ஜீவன்!

◯ நூறு பணத்தை முதலில் சம்பாதித்து விட்டால், அடுத்த நூறு பணம் சம்பாதிப்பது மிகச் சுலபமாகும்.

◯ கடன் வாங்காதே! அதை வாங்கியவர்களை விட கொடுத்தவர்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு மறக்க மாட்டார்கள்.

◯ இந்த உலகில் சாவையும் வரியையும்விட வேறு எதுவும் நிச்சயம் இல்லை.

◯ வறுமைதான் பெரும்பாலும் மனிதனிடமுள்ள நல்ல பண்புகளையும் ஜீவனையும் தின்று விடுகின்றது.

◯ உலகம் என்பது சக்கரம்! அது சுழன்று சுழன்று நேராகவே வந்து சேரும்.

◯ மறுபடியும் ஒருமுறை வாழ எனக்கு வாய்ப்பு வந்தால், மீண்டும் துவக்கம்முதல் இறுதி எல்லைவரை ஓடி, அதேவிதமான வாழ்க்கையிலே மறுபடியும் வாழத்தயாராக உள்ளேன். ஆனால் நான் கேட்பது எல்லாம் ஒரு புத்தக ஆசிரியனுக்குரிய சலுகைதான். அதாவது முதற்பதிப்பில் விட்டுப்போன சில தவறுகளை மறுபதிப்பில் திருத்திக் கொள்ளும் உரிமைதான். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே தோன்றும் பிரச்னைகளில் மெய்மை, நேர்மை, முழுமை இந்த மூன்றும் எனது வாழ்வுக்கு வளத்தை வழங்காதா? என்று கருதியே வாழ வந்திருக்கிறேன்.

◯ காதல் என்றால் என்ன? நீ காதலிக்கப்பட வேண்டும் என்றால், நீ காதலிப்பவனாகவும், காதலுக்கு உகந்தவனாகவும் இருக்க வேண்டும்.

◯ எங்கே காதல் இல்லாமல் திருமணம் ஆகின்றதோ அங்கே திருமணமில்லாமல் காதலும் இருக்கும்.

◯ அடிக்கடி வெட்டப்படும் மரமோ, அடிக்கடி பிரிந்து போகும் குடும்பமோ, நிலையான மரத்தையும், நிலையான குடும்பத்தையும் போலச் செழித்து ஓங்கியதைக் காண முடியாது.

◯ ஆணும்-பெண்ணும் ஒன்று சேர்வதிலேதான் மனிதத் தன்மையை பரிபூரணமாக்குகின்றது.

◯ திருமணம் ஆகாத தனி மனிதன், அரைகுறையான மிருகம்தான். பாதிக் கத்திரிக்கோல்போல் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளிப்பான்.

◯ பெண்கள் எல்லாம் புத்தகங்களா? அப்படியானால், நான் ஆண்டாண்டு தோறும் பெண்ணை மாற்றியமைக்கும் பஞ்சாங்கமாக இருப்பேன்.