உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

333

காரியங்களாகச் செய்து விடுகிறீர்களே. ஐயா? எங்கள் தலைவி கொடுத்தனுப்பிய தாழைமடலை அதற்குரியவரிடம் சேர்க்காமல் நகைவேழம்பரிடம் கொடுத்திருக்கிறீர்களே; அது எப்படி நேர்ந்தது? உங்களை நம்பிக்கையான மனிதர் என்று எண்ணி மடலைக் கொடுத்தனுப்பிய எங்களுக்கு நல்ல பாடம் கற்பித்துவிட்டீர்களே?” என்று வசந்த மாலை கடுமையான குரலில் கேட்ட போது—

“அம்மணீ! அது என் பிழையில்லை, உங்கள் மடலை அதற்குரியவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மாளிகைக்குத் திரும்பி உங்கள் தலைவியைச் சந்தித்து மடலைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தோடு வந்தவனை அந்தக் கொடுமைக்கார மனிதர் வழிமறித்துப் பயமுறுத்தி மடலையும் பறித்துக் கொண்டு இந்த இருட்டறையில் கொண்டு வந்து தள்ளி விட்டாரே! நான் என்ன செய்வது?” என்று தன் இயலாமைக்குக் காரணத்தை ஓவியன் விளக்கினான்.

அவன் குற்றமற்றவன் என்பது வசந்தமாலைக்குப் புரிந்தது. ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி ஓவியன் சிறைபட்டுக் கிடந்து ஒளியிழந்து போயிருப்பதைப் பார்த்து அவள் மனம் இளகினாள்.

“கவலைப்படாதீர்கள். மறுபடியும் நீங்கள் அந்த இருட்டறைக்குப் போகும்படி நேராது. அந்தக் கொடுமைக்காரருடைய முகத்திலும் விழிக்க வேண்டிய அவசியமிராது. இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவி ஒரு காரியமாக உங்களை இந்த மாளிகையிலிருந்து வெளியே அனுப்பப் போகிறாள்; வாருங்கள். தலைவியைச் சந்திக்கப் போகலாம்” என்று ஓவியனை அழைத்துக் கொண்டு சுரமஞ்சரியின் மாடத்துக்குச் சென்றாள் வசந்தமாலை.

நகைவேழம்பரோடு தந்தையாரும் எங்கோ வெளியே போயிருந்ததனால் அவர்கள் திரும்புவதற்குள் ஓவியனிடம் செய்தியைச் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டுமென எண்ணினாள் சுரமஞ்சரி. ஓவியனைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/39&oldid=1149341" இலிருந்து மீள்விக்கப்பட்டது