426
மணிபல்லவம்
கலங்கி நின்றாள் முல்லை. அவள் முகத்தை நேரே பாராமல் தன் வலது உள்ளங்கையில் நாகலிங்கப் பூவை வைத்து அதைப் பார்த்துக் கொண்டே அவளிடம் பேசினான் இளங்குமரன்:
“உன்னைப் போன்ற உலகத்துப் பெண்களின் மனங்களையெல்லாம் சந்தேகத்தையும், ஆசையையும் இணைத்துப் படைத்திருக்கிறார் படைப்புக் கடவுள். நீங்கள் எல்லாரும் என்னைப் போன்ற ஆண்மகனிடமிருந்து எதிர்பார்க்கிற பொருள் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றையும் உங்களுக்கே சொந்தமாக்கி வெற்றி கொள்ள விரும்புகிறீர்கள். எந்த ஒன்றை முதலாகக் கொண்டு உலகத்தின் மற்றப் பொருள்களையெல்லாம் நாங்கள் வெற்றி கொள்ள வேண்டுமோ அந்த முதலையே நீங்கள் கொள்ளையிட்டு வென்றுவிட முயல்கிறீர்கள்.”
“அப்படியா? நாங்கள் கொள்ளையிட்ட வெற்றி கொள்ளத்தக்கதாக உங்களிடமிருக்கும் அந்த விசித்திரப் பொருள் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமோ!”
“இதுவரை உனக்குத் தெரியாமலிருந்தால் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உண்மையாகவே தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டே வாயைக் கிளறுகிறாயா?”
“மெய்யாகவே தெரியவில்லை, சொல்லுங்கள் அந்த விந்தைப் பொருள் எது?”
“வேறெதுவுமில்லை! ஆண்பிள்ளையின் மனம். ஒவ்வொரு பெண்ணும் அதை வெற்றிகொண்டு ஆள்வதற்குத்தான் ஆசைப்படுகிறாள். ஆசை நிறைவேறாத போது சந்தேகப்படுகிறாள். கண்கலங்கி நின்று மணம் கலங்கச் செய்கிறாள். என்னைப் பொருத்தவரையில் ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக என் மனத்தை அளித்திருக்கிறேன்.”
“மிக்க மகிழ்ச்சி. அதே மனத்தின் ஒரு கோடியில் அன்பைப் பயிர் செய்து கொள்ளவும் சிறிது இடம் வேண்டி நிற்கிறேன் நான்.”