உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

மணிபல்லவம்

அவ்வப்போது மனத்தில் தோன்றும் தோற்றத்தால் உறுதி கொள்ளும் செயல்களும் மங்களமாகவே அமையும். நடந்ததையும் நடக்கப் போவதையும் நினைவினாலேயே உணர்ந்து கணிக்கும். அவதி ஞானத்தைப் பற்றி உனக்கும் கற்பித்திருக்கிறேன். மனம் கனிந்தால் அந்த அபூர்வ ஞானம் எளிது.

“இளங்குமரா! உன்னைப் பற்றிக் கேள்விப்படுதற்கு முன், காண்பதற்கு முன், என்னுடைய நினைவுகளிலும் சங்கல்பத்திலும் நெடுங்காலமாக நான் பாவனை செய்து கொண்டு வந்த பரிபூரணமான மாணவன் எவனோ, அவனாகவே நீ விளைந்து வந்தாய். நீலநாகன் உன்னை இங்கே அழைத்து வந்த நாளில் நம்முடைய முதற் சந்திப்பின்போது நான் கூறிய வார்த்தைகளை நீ இன்னும் மறந்திருக்க மாட்டாய். சந்திக்கின்றபோது உண்டாகிற உறவு பிரிகிறபோது நினைவு வருவதைத் தடுக்க முடியுமானால் உலகத்தில் துக்கம் என்ற உணர்வே ஏற்பட்டிருக்காது. என்னைப் போலவே அந்தப் பழைய நினைவுகளை நீயும் இப்போது திரும்ப எண்ணிக் கொண்டிருப்பாயானால் நான் அப்போது கூறிய வார்த்தைகளையும் மறந்திருக்க மாட்டாய். அறியாமையையும் ஆணவத்தையும் தவிர உங்களிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் கொண்டு வரவில்லை என்றாய் நீ உன்னையே எனக்குக் கொடு” என்று வாங்கிக் கொண்டேன் நான். இன்னும் சில வார்த்தைகளும் அப்போது உன்னிடம் கூறினேன்.

‘என்னுடைய மனத்தில் உதயமாகும் காவியம் ஒன்றிற்கு நாயகனாக ஏற்ற முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். அவன் இன்று எனக்குக் கிடைத்துவிட்டான்’ என்று பூரிப்போடு உன் கைகளைப் பற்றிக் கொண்டு நான் மகிழ்ச்சிக் கூத்தாடியதையும் நீ மறந்திருக்க மாட்டாய். அவ்ற்றை எல்லாம் திருப்பிக் கூறுவதன் நோக்கம் இளங்குமரன் காவியத்தின் நிறைவெல்லையாக நான் எதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/152&oldid=1150038" இலிருந்து மீள்விக்கப்பட்டது