திருநாங்கூர்ப் பூம்பொழிலின் ஒரு மேடையில் அடிகளும் இளங்குமரனும் வீற்றிருந்தனர். சாயங்கால வேளை உலகம் பகல் என்னும் ஒளியின் ஆட்சியை இழந்து போய்விட்டதற்காகச் சோக நாடகம் நடத்துவதுபோல விளங்கும் மேற்கு வானம். போது ஒடுங்கும் அந்தி மாலைக்குச் சொந்தமான மேலைத்திசை மூலையிலே இந்தச் சோக நாடகத்துக்குத் திரையெழுதினாற் போன்ற காட்சிகள். மேற்கு நோக்கி அமர்ந்திருந்த அடிகளுக்கு முன்புறம் கிழக்கு முகமாகப் பார்த்தவாறு இளங்குமரன் இருந்தான். அவரிடமிருந்து ஏதோ நிறையக் கேட்டு அறிந்து கொள்வதற்கு இருப்பதுபோல அமைந்து அடங்கி இருந்தான் இளங்குமரன். அவரும் அவனுக்குக் கூறுவதாக மனத்துக்குள் சிந்தனைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருப்பது போன்ற முகபாவத்தோடு இருந்தார். மேற்கு வானத்தில் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன.
இதே போன்ற ஒரு மாலைநேரத்தில் முதன் முதலாக நீலநாக மறவர் தன்னை அங்கே அழைத்துக் கொண்டு வந்த நாளை நினைத்தான் இளங்குமரன். இறந்த காலத்தின் நிகழ்ச்சியாக எங்கோ ஒரு கோடியில் நெடுந் தொலைவு நடந்து வந்த பின்னால் காலவிதியின் அந்தப் பழைய திருப்பத்துக்குப் பாவனைகள் மூலமாகவே பின்னோக்கி யாத்திரை போய்விட்டுத் திரும்பினான் அவன்.
அடிகளின் குரல் அவனை அழைத்துப் பேசத் தொடங்கியது.
“இளங்குமரா! இன்று காலை நீ கற்கவேண்டிய கடைசி சுவடியின் கடைசி வாக்கியத்தையும் கற்று முடித்து விட்டாய். அடிக்கடி உன்னைத் தேடிக் கொண்டு இங்கே