642
மணிபல்லவம்
“ஏற்கெனவே மென்மையான கைகளிலே இன்னும் இரண்டு மெல்லிய கரங்கள் வந்து சேர்வதால் வலிமை கூடுவதற்கு வழி ஏது?”
“வழி இருக்கிறது! உன்னைப்போல் மெய்யான அன்பைச் செலுத்துகிற அழகு வாய்ந்த மங்கல மனைவி ஒருத்தியே தன் கணவனுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தைத் தர முடியும். பதுமை!”
கணவனுடைய புகழ்ச்சியைக் கேட்டுப் பதுமை நாணிக் கண் புதைத்தாள். குனிந்த தலை நிமிராமல் கடலைப் பார்த்துக் கொண்டே கணவனை ஒரு கேள்வி கேட்டாள் பதுமை.
“ஒரு பெண்ணின் அழகும் மங்களமுமே உங்களைப் பலசாலியாக்கியிருப்பதாக நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களே. பூம்புகார் நகரம் முழுவதும் தேடினாலும் கிடைக்காத இரண்டு பேரழகிகளின் அழகிய கைகளைப் புறக்கணிக்கிறவருக்கு அந்தப் புறக்கணிப்பால் நான்கு கைகளின் வலிமையல்லவா கிடைக்காமல் வீணாகப் போகிறது?”
“நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய், பதுமை?”
“அதோ அந்தக் கோடியில் நின்றுகொண்டு உச்சி வானத்தில் கதிரவனின் ஒளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே அவரைப் பற்றிச் சொல்கிறேன்” -- என்று கப்பல் தளத்தின் மற்றொரு கோடியில் நின்று கொண்டிருந்த இளங்குமரனைக் காண்பித்தாள் பதுமை. அப்போது அவள் இதழ்களில் குறும்புப் புன்னகை முகிழ்த்தது. மணிமார்பன் தனது வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி, அந்த மதிமுகத்தின் கண்களில் வண்டு பறப்பது போல் சுழன்ற குறுகுறுப்பைப் பார்த்துக்கொண்டே அவளைக் கேட்டான்.
“பதுமை! உலகத்தில் அத்தனை குறும்புகளும் பெண்களாகிய உங்கள் பேச்சிலிருந்துதான் கிடைத்திருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா இதை?"