768
மணிபல்லவம்
நினைத்து அதனாலேயே மனம் வீங்குவதுகூடப் பாவம்தான். கருணை மறவனிலும் மேலே உயர்ந்து சான்றாண்மை மறவனாக எல்லையற்ற நிதானத்தில் போய் நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்போல் ஆசையாக இருக்கிறது எனக்கு. திருநாங்கூரில் கற்று நிறைந்த பின் பூம்புகாரின் வீதிகளிலும் சமயவாதிகளின் பட்டி மண்டபங்களிலும், இப்போது, உங்களோடு இந்தக் கப்பலிலும் நான் திரிந்து கொண்டிருப்பதுகூட உலக அநுபவத்தில் தோய்ந்து தோய்ந்து அதிலிருந்தும் ஞானத்தைக் கற்பதற்காகத்தான். சேற்றில் பிறந்தும் சேறு படாமல் மேலெழுந்து மலர்கிற தாமரையைப்போல் இந்த உலகியல்கள் என்னை மேல் நோக்கி மலர்விக்கத் துணை புரிய வேண்டுமே ஒழியக் கீழே தள்ளி மறுபடியும் அழுக்கில் புரட்டி எடுத்துவிடக் கூடாது.”
இவற்றைச் சொல்லும்பொழுது நேர்கிழக்கே உதித்துக் கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் எல்லாம் இளங்குமரனின் முகத்தில் பட்டு அந்த அழகிய முகத்தைத் தெய்வீகப் பொற்சுடராக்கின. அந்தக் கணத்தில் அப்படியே கைகூப்பி வணங்கி விடலாம் போலத் தூய்மையாய்த் தெரிந்த அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த வளநாடுடையாருக்குக் கோபம் வரவில்லை. இனம் புரியாத தயக்கத்தோடு அவர் அவனை நோக்கி மேலும் சிலவற்றை வற்புறுத்திக் கூறினார்.
24. ஏழாற்றுப் பிரிவு
சான்றாண்மை வீரம் என்று இளங்குமரன் எதைச் சொல்லிப் பெருமைப்பட்டானோ அதை அவனிடமே மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினார் வீரசோழிய வளநாடுடையார். “தம்பீ! உன்னுடைய சொற்கள் என்னால் மறுக்க முடியாதவையா