உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

655


உறக்கம் கலைந்து அவர் கண்விழித்து எழுந்து பள்ளியறை வாயிலுக்கு வந்தபோது பொழுது விடித் திருப்பதுடன் எதிர்ப்புறமிருந்து எதிர்பாராத பகை உதயமாகித் தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதையும் கண்டார்.

தீக்காயம் பட்டிருந்த முகமும் நடுநடுவே கசங்கிக் கடல் நீரில் நனைந்ததால் முடை நாற்றமடைந்து சில இடங்களில் கருகியிருந்த ஆடையுமாகப் பொழுது விடிந்ததனால் எங்கோ போய்விட்ட இருளே விடிந்ததைப் பார்க்கும் ஆசையோடு ஓர் உருவமாகி வந்தது போல நகைவேழம்பர் எதிரே வந்து கொண்டிருந்தார். முற்றிலும் களியாமல் காய் நிலைமை மெல்ல மாறி கனியத் தொடங்கியிருந்த நாவற்காய் போல் அவருடைய ஒற்றைக் கண் செக்கச் செவேலென்று கனன்று கொண்டிருந்தது. கடலில் நீண்ட தொலைவு நீந்தி வந்த துன்பம் அவர் நின்ற கோலத்திலிருந்தே தெரிந்தது.

முதல்நாள் இரவு தான் அநுபவித்த அற்பச் சுகங்களைப் பறித்துக்கொண்டு போக வந்த பூதம் போல் எதிரே பாய்ந்து வருகிற இந்த இருளைப் பெருநிதிச் செல்வர் மருட்சியோடு பார்த்தார்.

எதிர்ப்புறமிருந்து இடி முழக்கம் கேட்டது. மின்னல் சீறியது. செங்காய் போலக் கனன்று மின்னும் ஒற்றைக் கண் பாயும் புலிப்பார்வை பார்த்தது. சொற்கள் ஊழிப் பெரும் புயலாய் ஒலித்தன.

“நான் சாகவில்லை! உயிரோடு பிழைத்துத்தான் வந்திருக்கிறேன்!... ஆனால் இப்போது என் நெஞ்சும் கைகளும் துடிக்கிற துடிப்பைப் பார்த்தால் யாரையாவது சாகவைக்க வேண்டும்போல் எனக்கு ஆசையாயிருக்கிறது. இப்போது என் உடம்பில் ஊறும் கொலை வெறியை எதைச் செய்தாவது நான் தணித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். நான் யாரையாவது கொல்ல வேண்டும். அல்லது என்னையே நான் கொன்று கொள்ள வேண்டும்!.. என்ன சொல்லுகிறீர்கள் பெருநிதிச் செல்வரே?..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/46&oldid=1190550" இலிருந்து மீள்விக்கப்பட்டது