பழைய கணக்கு/வெள்ளி மணி பிறந்த கதை
ஆசிரியர் கல்கி தலையங்கம் எழுதுவது வியாழக் கிழமைகளில்தான். விரல்களால் கீழ் உதட்டைச் செல்லமாய்த் தேய்த்துக் கொண்டே எழுதுவது அவர் வழக்கம். அப்படி எழுதுகிறார் என்றால் கற்பனை அபாரமாக ஓடுகிறது என்று அர்த்தம்! மார்பை நிமிர்த்தியபடி மேஜை முன் உட்கார்ந்து எழுதத் தொடங்கி விட்டால் அவர் எதிரில் யானையைக் கொண்டு போய் நிறுத்தினாலும் அவர் கண்ணில் படாது!
அவர் தலையங்கம் எழுதும் நாட்களில் நான் காலை எட்டு மணிக்குள்ளாகவே அலுவலகத்துக்குப் போய் விடுவேன்.
எழுதுகிற தலையங்கத்தை ஒவ்வொரு ஷீட்டாக மேஜை மீது வைத்துக் கொண்டிருப்பார். இரண்டு மூன்று ஷீட் சேர்ந்ததும் அவற்றை எடுத்துக்கொண்டு போய் ஃபோர்மென் ராஜாபாதரிடம் கொடுப்பேன். பிரஸ்ஸுக்குப் போவதற்குள்ளாகவே அந்த ஷீட்டுகளைப் படித்து விடுவேன். எழுதிய மை உலர்வதற்கு முன்பே, கல்கியின் எழுத்தைப் படித்து விடுவதில் எனக்கு அப்படி ஓர் ஆர்வம். எனக்கு மட்டுமல்ல, எல்லா உதவி ஆசிரியர்களுக்குமே.
நான் நவகாளி யாத்திரை எழுதி முடித்த சில நாட்களுக்குள் கல்கியை விட்டுப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம், அல்லது துரதிருஷ்டம் எனக்கு ஏற்பட்டு விட்டது. நான் செய்த ஒரு சிறு பிழை காரணமாக அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். (அது என்ன பிழை? அது என்ன கோபம்? என்பது எங்களிருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.) அப்படிப் பேசாமல் என்னை தண்டித்த அந்தக் கொடுமையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நான் ராஜினாமாச் செய்து விட்டேன். ராஜினமாக் கடிதத்துடன் அவர் அறையில் போய் நின்றேன். என்னைக் கண்டதும், ஜாடையிலேயே என்னவென்று விசாரித்தார். கடிதத்தை நீட்டினேன். படித்துப் பார்த்துவிட்டு, “ம்...இது நான் எதிர்பார்த்ததுதான்” என்று கூறிவிட்டு “உன் முயற்சி கடவுள் அருளால் வெற்றி பெறுவதாக. என் வாழ்த்துக்கள்” என்று அந்தக் கடிதத்தின் கீழேயே நாலு வரிகள் எழுதி, அக்கெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு என் சம்பளக் கணக்கைத் தீர்த்துக் கொடுக்கும்படி தகவல் கொடுத்து விட்டார்.
அந்த ராஜினமாக் கடிதத்தில் அப்படி நான் என்ன எழுதியிருந்தேன்?
“சொந்தமாகப் புதிய பத்திரிகை ஒன்று தொடங்கப் போவதால் கல்கியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.” இவ்வளவு தான்.
விலகுவதற்கு உண்மையான காரணம் புதிய பத்திரிகை தொடங்க வேண்டுமென்ற ஆசை அல்ல. விலக வேண்டிய நிர்ப்பந்த முடிவுக்கு வந்து விட்டதாலேயே புதிய பத்திரிகை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
கல்கியிடம் எனக்குக் கருத்து வேற்றுமை ஏற்பட்ட போதிலும், அவர் என்னுடன் பேசாமலிருந்த போதிலும் அவரிடம் எனக்கிருந்த பெரும் மதிப்பும் குருபக்தியும் எள்ளளவும் குறையவில்லை. அவரைப் பிரிகிறோமே என்று உள் மனம் ஓயாமல் விசும்பிக் கொண்டிருந்தது.
அன்றே அப்போதே கணக்கைத் தீர்த்துக் கொண்டு, திரு சதாசிவம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு நேராக மாம்பலத்திலுள்ள சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணைக்குப் போய்ச் சேர்ந்தேன். கல்கியிடம் எனக்கேற்பட்டிருந்த உரசல் பற்றி சின்ன அண்ணாமலையிடம் முதல் நாள் மாலையே ஒரு மாதிரி சொல்லியிருந்ததால் நான் கல்கியிலிருந்து விலகி விட்டேன் என்ற செய்தி அவருக்கு அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை.
“அடுத்தாப்பல என்ன செய்யப்போறீக?” என்று கேட்டார்
“வெள்ளி மணி என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்று தொடங்குவோம். நான் எடிட்டர். நீர் பப்ளிஷர். தமிழ்ப்பண்ணை வெளியீடாக இது வரட்டும்” என்றேன்.
இந்தச் சமயம் டெலிபோன் மணி அடித்தது. சின்ன அண்ணாமலை போனை எடுத்துப் பேசினார். அந்த முனையில் கல்கி.
“நீங்க இங்கே வந்துட்டுப் போக முடியுமா?” என்று சின்ன அண்ணாமலையைக் கேட்டார்.
அடுத்த கணமே சின்ன அண்ணாமலை கல்கியைப் பார்க்கக் கிளம்பி விட்டார். அவர் திரும்பி வருகிற வரை தமிழ்ப்பண்ணையிலேயே—மசாலா தோசை தருவித்துச் சாப்பிட்டுவிட்டு—காத்திருந்தேன்.
சி. அண்ணுமலை திரும்பி வந்ததும், “கல்கி என்னய்யா சொன்னார்?” என்று கேட்டேன்.
“என்னை 'தீபம்’னு மாதப் பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கச் சொல்கிறார், நீர் கல்கியை விட்டு விலகிவிட்ட செய்தியையும் சொன்னார்” என்றார்.
“அப்படியா? அப்படின்னா இப்ப என்ன செய்யப் போறீங்க? தீபம் ஆரம்பிக்கப் போறீங்களா, இல்லை, வெள்ளி மணி ஆரம்பிக்கப் போறீங்களா!”
“வெள்ளி மணி வாரப் பத்திரிகை. அதுக்கு நீங்க ஆசிரியர். தீபம் மாதப் பத்திரிகைதானே? அதுக்கு நான் ஆசிரியர். இரண்டுக்குமே டிக்ளரேஷன் வாங்கிடுவோம்” என்றர் சி. அ.
கல்கியின் விரோதத்துடன் வெள்ளி மணியைத் தொடங்கவோ நடத்தவோ எனக்கு விருப்பமில்லை. அவருடைய முழு ஒத்துழைப்பும் ஆசியும் இதற்கு ரொம்ப முக்கியம் என்று நான் கருதியதால், கல்கி, ராஜாஜி, டி. கே சி. மூவருடைய வாழ்த்துக்களையும் கேட்டுப் பெற்றுக் கொண்ட பிறகே வெள்ளி மணியை ஆரம்பித்தேன். அவர்கள் எழுதித் தந்த வாழ்த்துக்களை அப்படியே பிரசுரித்து, அட்டையில் டி. கே சியின் படத்துடன் முதல் இதழைக் கொண்டு வந்தேன்.
கல்கிக்கு இது ஒரு துணைப் பத்திரிகை போல் நடக்கும் என்று ஒரு குறிப்பும் அந்த இதழில் வெளியிட்டிருந்தேன்.
வெள்ளி மணிக்குத் தமிழ் வாசகர்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதையெல்லாம் கண்டதும் கல்கிக்கு என் மீது இருந்த கோபம் அடியோடு மறைந்து போயிற்று.
“பேஷ், பேஷ்! முதல் இதழே ரொம்பப் பிரமாதம் ரொம்ப காலமாக நடக்கும் பத்திரிகை மாதிரி இருக்கிறது” என்று என்னை மனமாரப் பாராட்டியதுடன் மறுநாளே என்னையும் சின்ன அண்ணாமலையையும் அழைத்துத் தம் வீட்டில் ஒரு விருந்து அளித்தார்.
பாராட்டியதோடு, விருந்து அளித்ததோடு நிற்காமல் வெள்ளி மணியை மேலும் வெற்றிகரமாகக் கொண்டு வருவதற்கு என்ன வழி என்று கவலையோடு யோசிக்கலானர். “பத்திரிகை நடத்தப் பணம் வேண்டுமே. பணத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? பத்திரிகை என்றால் எப்போதும் பணத்துக்கு ஒரு பகாசுரப் பசி இருந்து கொண்டே இருக்கும். யாராவது ஒரு பணக்காரரைப் பிடித்துப் போடுங்கள். அப்போதுதான் நீங்கள் பத்திரிகையின் மற்ற வேலைகளை முழு முயற்சியோடு கவனிக்க முடியும்” என்றார்.
“யாரைப் பிடிக்கலாம்?” என்று சின்ன அண்ணாமலை கேட்டார்.
நானும் சின்ன அண்ணாமலையும் சேர்ந்து பணக்காரர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று தயாரித்தோம். அதில் திரு ஏவி. மெய்யப்பன் பெயரும் ஒன்று. மெய்யப்பன் பெயருக்கு நேராகப் பேணாவால் டிக் செய்து, “இவர்தான் சரி. இவருடன் நான் இன்றைக்கே பேசி விடுகிறேன். பிறகு நீங்கள் இருவரும் இவரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்கிறேன்” என்றார். நானும் சின்ன அண்ணாமலையும் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்குப் புறப்படுகிற நேரத்தில் கல்கி சி. அண்ணாமலையைத் தனியாக அழைத்து “இப்போதைக்கு ‘தீபம்’ பத்திரிகை வேண்டாம். வெள்ளி மணி மட்டும் நடத்தினால் போதும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
வெள்ளி மணி பிறந்த கதை இதுதான்.