உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய கணக்கு/அடிக்கடி காணாமல்

விக்கிமூலம் இலிருந்து



“அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா”

வில்லிவாக்கத்திலிருந்து தினமும் ரயிலில் பொம்பூருக்குப் போய்ப் படித்துக் கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்பு வரை தமிழில் படித்துக் கொண்டிருந்த எனக்கு பெரம்பூர் ஹைஸ்கூலுக்கு மாறியதும், ஹிஸ்டரி, ஜாக்ரபி எல்லாமே இங்கிலீஷில் படிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் புரியாத காரணத்தால் படிப்பில் ஒரு வெறுப்பே வந்து விட்டது. இதனால் அடிக்கடி வகுப்புக்கு மட்டம் அடித்து விட்டு சென்னைக்குப் போய் விடுவேன். காலாண்டுப் பரீட்சை நெருங்கிய போது என் அந்தராத்மா, “நண்பனே, நீ பரீட்சையில் பெயிலாகி விடுவாய். ஆகையால் பரீட்சையில் கலந்து கொள்ளாதே” என்று புத்திமதி கூறவே, வீட்டுக்குச் சொல்லாமல் அப்பா கொடுத்த ஸ்கூல் ஃபீஸ் பணத்தை எடுத்துக் கொண்டு திருச்சி, தஞ்சாவுர், மானாமதுரை வரை மனம் போனபடியெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியாக திருப்பாதிரிப்புலியூருக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்த அளவுக்குத்தான் கையில் பணம் இருந்தது.

திருப்பாதிரிப்புலியூர் கோவிலை அடுத்த வேத பாடசாலையில் என் அத்தை மகன் வேதம் படித்துக் கொண்டிருந்தான். நான் அவனைத் தேடிப் போன சமயம் அவன் விடுமுறையில் சொந்த ஊருக்குப் போய்விட்டிருந்ததால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானேன். கையிலிருந்த காசும் தீர்ந்து விட்டது. வில்லிவாக்கத்துக்கே திரும்பிச் செல்ல நினைத்தாலும் போக முடியாத நிலை. பாடசாலைத் திண்ணையிலேயே பட்டினியோடு இரண்டு நாள் படுத்துக் கிடந்தேன். பசிக் கொடுமை பெருங்குடலைப் பிடுங்கித் தின்றது. அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமல் அழுது விட்டேன். அவ்வப்போது தண்ணீர் குடித்துப் பசியை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். சட்டைப் பையில் ஒரே ஒரு தம்படி மிச்சம் இருந்தது. கடைக்குப் போய் அதற்கு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் பட்டினியைத் தொடர்ந்தேன்.

ஆம்; அந்தக் காலத்தில் ஒரு தம்படியும் உண்டு, தம்படிக்கு ஒரு வாழைப் பழமும் உண்டு.

இதற்கிடையில் வில்லிவாக்கத்தில் என் தாய் தந்தையர், என்னைத் தேடி எங்கெங்கோ அகலந்திருக்கிறார்கள். யார் யாருக்கோ தந்தி கொடுத்து விசாரித்திருக்கிறார்கள். நான் எங்கு போனேன் என்று தெரியாமல் அழுது புலம்பியிருக்கிறார்கள்.

“மீண்டும் மகனை உயிரோடு பார்ப்போமா?” என்று தவித்திருக்கிறார்கள். மகன் திரும்பி வந்தால் திருப்பதிக்குக் காணிக்கை செலுத்துவதாகவும் சமாராதனை செய்து பிராமணர்களுக்கு சாப்பாடு போடுவதாகவும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பாதிரிப்புலியூரில் நான் பசி தாங்காமல் கோயிலில் சதிர்த் தேங்காய் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் எனக்காக என் தாய் தந்தையர் சமாராதனை செய்து பிராமணர்களுக்குச் சாப்பாடு போடுவதாக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் நான் என் நிலையை விளக்கி அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். பசிக் கொடுமை தாங்காமல் போகவே அருகிலிருந்த ஓட்டல்காரரைப் பரிச்சயம் செய்து கொண்டு, அவரிடம் என் நிலைமையை விளக்கியபோது அவர் என் மீது பரிதாபப் பட்டு சாப்பாடு போட்டதுடன் கார்டு எழுதிப் போடக் காசும் கொடுத்தார். என் கடிதத்தைக் கண்ட மறுகணமே என் தந்தை, நண்பர் ஒருவரை அடுத்த ரயிலிலேயே திருப்பாதிரிப்புலியூருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நண்பரோடு நான் மறுநாள் காலை வில்லிவாக்கம் திரும்பிப் போனதும் என் தாயார் பாசத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு அழுது விட்டார்.

“நீ நல்லபடி வந்து சேர்ந்தாயே, அதுவே போதும். உன்னை உயிரோடு பார்ப்போமா என்றாகி விட்டது. நீ கிடைத்து விட்டால் தெய்வத்துக்கு சமாராதனை செய்து பிராமணர்களுக்குச் சாப்பாடு போடுவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளோம். எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை. அந்த தெய்வம் உன்னை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டது. அதனால் பிரார்த்தனையை இன்றே நிறைவேற்றி விட முடிவு செய்து அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது” என்றனர் என் தாய் தந்தையர்.

வீட்டில் வாழை இலைக் கட்டும், கறிகாய்களும் வந்து குவிந்திருந்தன. பின் கட்டில் சமையல் நடந்து கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து பாயச வாசனையும், முந்திரிப் பருப்பு வறுபடும் வாசனையும் சேர்ந்து மூக்கைத் துளைத்தது. முன் கட்டில் ஊதுவத்தி மணத்துடன் பூஜை நடந்து கொண்டிருந்தது.

பதினோரு மணிக்கு எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் பிராமணர்களுக்குத் தாம்பூலம் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவரான கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் ஏப்பம் விட்டபடி என்னிடம் வந்து, “சாப்பாடு பிரமாதம்டா! நீ அடிக்கடி இந்த மாதிரி காணாமல் போய்க் கொண்டிரு. அப்போதுதான் எங்களுக்கு இந்த மாதிரி சாப்பாடு கிடைத்துக் கொண்டிருக்கும்” என்றார்!

ஆசிரியர் சாவியின் நூல்கள்


வாஷிங்டனில் திருமணம்
விசிறி வாழை
வழிப்போக்கின்
வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு
வேதவித்து
கேரக்டர்
பழைய கணக்கு
இங்கே போயிடுக்கிறீர்களா
ஊரார்
திருக்குறள் கதைகள்
கோமகனின் காதல்
தாய்லாந்து
உலகம் சுற்றிய மூவர்
என்னுரை கலைஞரின் முன்னுரையுடன்
சாவியின் கட்டுரைகள்
சாவியின் நகைச்சுவைக்கதைகள்
ஆப்பிள் பசி
நான் கண்ட நாலு நாடுகள்
நவகாளி யாத்திரை
சிவகாமியின் செல்வன்


சாவி பப்ளிகேஷன்ஸ்