பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 255


கருத்திலேயே 'ஒழுக்க முடைமை குடிமை என்ற குறள் எழுந்தது.


உண்மைக் குடிமக்கள் யார்?


னித சமுதாய அமைப்பின் வழியிலேதான் நகர, நாட்டு அமைப்புகள் தோன்றுகின்றன. மனித சமுதாயம் நாடுகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில், நாட்டின் வழி மனித சமுதாயம் பெருமை பெறுகிறது; புகழ் பெறுகிறது. இந்த உணர்ச்சி வடிவத்தில் தோன்றுவதுதான் தாய்நாட்டுப் பற்று. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று வாழுதல், மனிதனின் விழுமிய சிறப்புகளுள் ஒன்று. உலகில் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை பெறாத மக்கள் நாடற்றோர் என வாழ்கின்றார்கள். அது பீடன்று. மேலும் நிரந்தரமான நல்வாழ்வுக்கும் உத்தரவாதமில்லை.

ஒரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றால் மட்டும் போதாது. அந்நாட்டு மக்களின் மொத்த நலனை எண்ணத்திற் கொண்டு ஒழுகுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கங்களைப் போல, நாட்டு ஒழுக்கங்கள் என்று சில இருக்கும். அவ்வொழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களே உண்மையான குடிமக்கள்.

ஒரு நாட்டில் பிறந்து விட்டதனாலோ அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்கள் கணக்கில் சேர்த்து விட்ட மையினாலோ ஒருவர் ஒரு நாட்டின் உண்மையான குடிமகனாகி விடுவதில்லை.

முடியாட்சி நிலவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் சிறந்த குடிமக்கள் ஆட்சியைப் பற்றியும் கூறுகிறது. திருவள்ளுவர், நாட்டு ஒழுக்கம் பற்றி நகைச்சுவை ததும்பப் பேசுகின்றார். மக்கட் கணக்கு எழுதி வைக்கும் அலுவலர் மக்கள் வரிசையில் ஒருவர் பெயரை எழுதி வைத்திருந்தார்.