பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

163


"அறிவுடையார் ஆவதறிவார்" என்ற வள்ளுவத்தை மறந்துவிட்டோம். அறிவு என்பது எதையும் தேர்ந்து தெளிவதாகும். அறிவுடையோர் கடவுளை நம்புவது, வழிபடுவது என்பது பாவங்களைக் கழுவுவதற்காக அல்ல. அல்லது இறைவன் சந்நிதியில் பிச்சைக்காரர்களாகச் சென்று யாசிப்பதற்காக அல்ல. அவர்கள் கடவுளை நம்புவதும், வழிபாடு செய்தும்கூட, பண்ணப் பணைத்த அறிவினைப் பெறுவதற்குத்தான்! அதனாலன்றோ சமய வாழ்க்கையின் பயனை ஞான வாழ்க்கை என்கின்றனர். ஞானம் என்பது திரிபிலாத பேரறிவு; முறை பிறழ்வில்லாத நிறை அறிவு: மயக்கமில்லாத தெளிவு. அத்தகைய பேரறிவு தோன்றின் உடற்பொறிகள் ஓராயிரம் புதுமையை நோக்கும் திசைதோறும் காணும்! புலன்கள் படைக்கும்! உலகு செழிக்கும்.

இத்தகு ஆற்றல் பெற்றோரே அறிவுடையார், இத்தகைய பேரறிவைப் பெற நல்ல நூல்களை நாள்தோறும் தேர்ந்தெடுத்து முறையாகக் கற்க கற்ற நூற்கருத்துக்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திச் சோதனை செய்க! அந்நெறி நின்று ஒழுகுக! அந்தப் பேரொழுக்கம் அறிவாக, ஞானமாக வளர்ந்து வாழ்க்கையை நிறைவு செய்யும்! எல்லாம் நல்கும்!

கல்வியின் பயன்!

டவுள், பேரறிவினன், பேரறிவாளன்; அது மட்டு மன்று, துய்மையான அறிவினனும்கூட! அறிவிலும் பலபடிவளர்ச்சிகள். தூய்மையான அறிவு என்பது வளர்ந்த நிலை. அறியாமையும் அவலமும் இல்லாதது தூய்மையான அறிவு. 'அறிவே தெய்வம் என்று இன்று சிலர் கூறுகின்றனர். அங்ஙனம் கூறுவதில் பெரும்பிழை ஒன்றும் இல்லை! ஆனால், எந்த அறிவு தெய்வம்? இந்த வினாவுக்கு விடை வேண்டாமா?