தமிழின்பம்/பழகு தமிழ்
10. பழகு தமிழ்
தமிழகத்தில் பல நாடுகள் உண்டு; பல குலங்கள் உண்டு. ஒரு நாட்டுத் தமிழுக்கும் இன்னொரு நாட்டுத் தமிழுக்கும் வேற்றுமையே இல்லை என்று கூற முடியாது. ஒரு குலத்தார் பேசுந்தமிழ் மற்றொரு குலத்தார் பேசுந் தமிழை எல்லா வகையிலும் ஒத்திருக்கும் என்று சொல்ல முடியாது.
பந்தல் என்ற சொல்லின் ஆட்சியைப் பார்ப்போம்; திருமணத்திற்குப் பந்தல் போடும் வழக்கம் இந்நாட்டில் சாலப் பழமை வாய்ந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே செல்வக் குடியிற் பிறந்த கண்ணகிக்கும் கோவலனுக்கும் முத்துப்பந்தலிலே திருமணம் நிகழ்ந்தது. "மாலை தாழ் சென்னிவயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்” என்று அப்பந்தலைச் சிலம்பு பாடிற்று. கோடையிலே வழிநடந்து செல்வார்க்கு நீரும் நிழலும் தரும் பந்தலைத் தண்ணிர்ப் பந்தல் என்பர்.
இத்தகைய மேன்மையான சொல் தனவணிகர் நாடு என்னும் செட்டிநாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகின்றது. பந்தல் என்பது அந்நாட்டிலே மணப் பந்தலைக் குறிப்பதில்லை; பிணப் பந்தலையே குறிக்கும். இழவு வீட்டில் போடுவது பந்தல்; கல்யாண வீட்டில் போடுவது காவணம் அல்லது கொட்டகை, இலக்கியத்தில் வழங்கும் காவணம் என்ற அருஞ்சொல் செட்டிநாட்டிலே பழகு தமிழாய்ப் பயில்கின்றது.
இனி, தொண்டு என்ற தொன்மையான சொல்லைப் பார்ப்போம்; தொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை தேசத் தொண்டு எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை திருத்தொண்டு எனப்படும். 'தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே' என்னும் வாய்மொழி பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது. இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது. ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல்.
'பையச் சென்றால் வையந் தாங்கும்' என்பது இந்நாட்டிலே ஒரு பழமொழி. பைய என்றால் மெல்ல என்பது பொருள். 'பையப் போ' என்ற சொல் பாண்டிய நாட்டிலே பெருவழக்குடையது. தேவாரத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் சிவனடியார் திருமடத்தில் தீயோர் வைத்த தீயை அரசனிடம் செலுத்தத் திருவுளங்கொண்ட திருஞான சம்பந்தர், "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” எனப் பணித்ததாகத் தேவாரம் கூறும். இத்தகைய சிறந்த ஆட்சியுடைய சொல் இப்போது சென்னை முதலிய இடங்களில் வழங்குவதில்லை.
அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல்.[1]இக்காலத்தில் 'பசார்' என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது. பெரிய நகரங்களில் அந்தியும் பகலும் அங்காடி நடைபெற்றது. அந்தியில் நடைபெற்ற அங்காடியை அல்லங்காடி என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை நாளங்காடி என்றும் அழைத்தனர். பட்டினத்தடிகள் அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார். "அங்காடி நாய்போல், அலைந்து திரிந்தேனே' என்பது அவர் பாட்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்றும் அங்கடி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு. தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்? செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு 'அணிகல அங்காடி' என்று பெயரிட்டுள்ளார். சென்னையிலுள்ள மூர் மார்க்கட்டை, மூரங்காடி என்று வழங்கும் நாள் எந்நாளோ?
பைத்தியக்காரனுக்குத் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் உண்டு. படித்தவர்கள் அவனைப் பித்தன் என்பார்கள்; பித்துக்கொண்டவன் என்னும் பொருள் நன்றாகத் தோன்றும்படி பித்துக்கொள்ளி என்றும் சொல்லுவார்கள். கிறுக்கன் என்பதும் அவனையே குறிக்கும். திருநெல்வேலியிலே பைத்தியக்காரனைக் கோட்டிக்காரன் என்பர். கோட்டி என்பது நல்ல தமிழ்ச் சொல். கோட்டம் என்றால், வளைவு அல்லது கோணல். மனத்திலே உள்ள கோணல் மனக்கோட்டம் எனப்படும். பேச்சிலே வளைவு நெளிவு காணப்பட்டால் அதைச் சொற்கோட்டம் என்பர். இவ்விருவகைக் கோட்டத்தையும் திருவள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார். 'சொற்கோட்டி மில்லது செப்பம்; ஒருதலையா உட்கோட்ட மின்மை பெறின்' என்பது திருக்குறள். எனவே, அறிவிலே கோட்டம் உடையவனைக் கோட்டி என்று சொல்வது பாண்டி நாட்டு வழக்கு.
கோட்டியைத் தீர்க்கும் குற்றால அருவியைச் சிறிது பார்ப்போம். மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலத்திலே அருமையான பல அருவிகள் உள்ளன. தேனருவி என்பது ஒர் அருவியின் பெயர். வட அருவி என்பது மற்றோர் அருவி; ஐந்தலை அருவி என்பது இன்னோர் அருவி. அருவியை நினைக்கும் பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். 'வீங்கு நீர் அருவி வேங்கடம்' என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடினார் சிலப்பதிகார ஆசிரியர். 'பொங்கருவி துங்கும் மலை பொதிய மலை என் மலையே' என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. 'தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்' என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. இத்தகைய பழமையான சொல் இன்றும் திருநெல்வேலியில் வழங்குகின்றது. ஆனால், சென்னை முதலிய இடங்களில் அருவி என்றால் தெரியாது; நீர் வீழ்ச்சி என்றால்தான் தெரியும். நீர் வீழ்ச்சி என்பது Water-fall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழி பெயர்ப்புப்போல் காணப்படுகின்றது.
மலையிலே வாழ்கின்ற ஒரு குலத்தாரை மலைப் பளிங்கர் என்பர். வேடர் வகுப்பைச் சேர்ந்தவர் அவர்; மலைநாட்டுப் பழங்குடிகள். பளிங்கன் என்ற சொல்லை ஆராய்ந்தால் அஃது ஒரு பழமையான தமிழ்ச் சொல்லின் சிதைவு என்பது புலனாகும். தமிழ் இலக்கியத்தில் மலையில் வாழும் வகுப்பார்க்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று புளிஞர் என்பது. புளிஞர் என்ற சொல்லைக் கம்பர் எடுத்தாள்கின்றார். மறைந்து நின்று அம்பெய்த இராமனை நோக்கி,
எவ்விய தென்னை'
என்று வாலி கேட்டான் என்பது கம்பர் பாட்டு. புளிஞன் என்ற சொல்லே பளிங்கன் என்று மருவி வழங்குகின்றது.
தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப் பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகராக விளங்கிற்று. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, தென்னாடு முத்துடைத்து என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கின்றார்கள்.
- ↑ தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவரி வயிற்றுச் செல்வோரை அது குறிக்கிறது.