உள்ளடக்கத்துக்குச் செல்

விந்தன் கதைகள் 2/அவன் ஏன் திருடவில்லை?

விக்கிமூலம் இலிருந்து
அவன் ஏன் திருடவில்லை?


'லொக்கு, லொக்கு, லொக்கு'.... நெஞ்சைப் பிளக்கும் இந்த இருமல் சத்தம் காதில் விழும்போதெல்லாம் அந்தச் சத்தத்துக்குரிய ஜீவனைக் கடை வாயிலில் உட்கார்ந்தபடியே அனுதாபத்தோடு பார்ப்பான் ஆறுமுகம். ஆம், அவனுடைய கடைக்கு எதிர்த்தாற் போலிருந்த நடைபாதையில் தான் அந்தக் கிழவன் வசித்து வந்தான். கடை என்றால் சாதாரணக் கடையல்ல, மிகப் பெரிய ஜவுளிக் கடை. அந்த மிகப் பெரிய கடையிலே ஏவலாளர்களாக வேலை பார்த்து வந்தவர்களில் மிகச் சிறியவனான ஆறுமுகமும் ஒருவன்.

காலையில் கடை திறப்பதற்கு முன்னால் அந்தக் கிழவனின் கையிலே ஒரு மூங்கில் பச்சைப்பசேலென்று காட்சி அளிக்கும். சிறிது நேரத்துக்கெல்லாம் அது அவன் கை பட்டுக் கூடைகளாகவும், முறங்களாகவும் மாறிவிடும். அதற்குப்பின் 'லொக்கு லொக்கு' என்ற இருமல் ஓசையோடு 'கூடை வாங்கலையோ, முறம் வாங்கலையோ!' என்ற ஓசையும் கலந்து கேட்கும்.

தெருவெல்லாம் அந்த ஓசைபரவி எதிரொலிப்பதை ஆறுமுகம் கேட்டுக் கொண்டே யிருப்பான். அதற்குள் மத்தியான வேளை வந்துவிடும்; அவன் சாப்பிடப் போய் விடுவான்.

சாயந்திரம் பார்த்தால் அந்தக் கிழவன் வேலை செய்த இடத்திலே கூடையும் இருக்காது; முறமும் இருக்காது. அவற்றுக்குப் பதிலாக புகையும் கல்லடுப்பின் மேல் கரி படிந்த கலம் ஒன்று கம்பீரமாக வீற்றிருக்கும்; அந்தக் கலத்தின் வாயிலிருந்து பொங்கிவரும் சோறு, அவனுடைய முகத்தையும் மகிழ்ச்சியால் பொங்கவைக்கும். அதை வடிக்காமலே எடுத்து வைத்துக்கொண்டு அவன் சாப்பிடுவதற்கும், ஆறுமுகம் வேலை பார்க்கும் கடையை மூடுவதற்கும் அநேகமாகச் சரியாயிருக்கும்.

இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? - எத்தனையோ நாட்களாக அவன் அந்தக் கிழவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அறையில் கோவணத்தைத் தவிர வேறொன்றும் இல்லாத அந்தக் கிழவன் குளிரால் நடுங்கும் போது, தன்னுடைய சட்டையையாவது கழற்றி அவனிடம் கொடுத்து விடலாமா என்று தோன்றும் ஆறுமுகத்துக்கு. ஆனால் மிகச்சிறியவனான நான் எங்கே, மிகப் பெரியவனான அந்தக் கிழவர் எங்கே? - தன்னுடைய உள்ளம் அதற்கு இடம் கொடுத்தாலும், அவருடைய உடல் இடம் கொடுக்காது போலிருக்கிறதே!

தனக்கு மட்டும் ஒரு போர்வை இருந்தால் அதை அவரிடம் கொடுத்து விடலாம். ஆனால் அம்மாவின் புடவைதானே, அவளுக்கும் புடவையாயிருந்து தனக்கும் போர்வையாக இருந்து தொலைகிறது?

இப்படி ஒரு நாள் எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது கடையின் சிப்பந்திகளில் ஒருவனான கணபதி அவனுடைய முதுகிலே ஒரு தட்டுத் தட்டி, "ஏண்டா, தம்பி! இன்னுமா நீ சாப்பாட்டுக்குப் போகலே?" என்றான் கனிவுடன்.

அப்போதுதான் சாப்பாட்டு நேரம் விட்டதென்பதையும், கடையில் தன்னையும் அவனையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் உணர்ந்த ஆறுமுகம் "இல்லை ஸார்!" என்றான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே.

"ஏண்டா?"

"அம்மா வேலை செய்யும் அய்யர் வீட்டிலே ராத்திரி ஒன்றும் மிச்சமாக வில்லையாம்!"

"அங்கே ராத்திரி சாப்பாடு மிச்சமானால் தான் உனக்கு இங்கே மத்தியானம் சாப்பாடா?"

"ஆமாம், ஸார். எனக்கு இங்கே மாசம் முப்பது ரூபாய் சம்பளம்: என் அம்மாவுக்கு மாதம் பத்து ரூபாய் சம்பளம்; இந்த நாற்பது ரூபாயில் ராத்திரி ஒரு வேளை மட்டும்தான் எங்கள் வீட்டில் அடுப்பு புகைகிறேன் என்கிறது, ஸார்!"

"ஐயோ, பாவம்! அதற்காக மத்தியானம் சும்மாவா இருப்பது? இந்தா ஒரு ரூவா போய்ச் சாப்பிடு!" என்று ஒரு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தான் கணபதி.

"என்ன ஆச்சரியம்! இப்படியும் ஒரு மனிதரா இந்தக் காலத்தில்? - நன்றி உணர்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட ஆறுமுகம் அடுத்தாற்போலிருந்த ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தான். ஒரு ரூபாய்க்குக் கிடைத்த அளவுச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டு அவசரம் அவசரமாக கடைக்குத் திரும்பினான். அதற்குள் முதலாளி வந்து விடுவாரோ, என்னவோ என்ற அச்சத்தில்.

ஆனால் அவன் எதிர்பார்த்தபடி முதலாளி வரவில்லை; அவருக்குப் பதிலாக கணபதியின் மகன் கல்யாணம் அங்கே வந்திருந்தான். அவனிடம் ஒரு போர்வையை எடுத்து அவசரம் அவசரமாக மடித்துக் கொடுத்துவிட்டு, "போ! போ சீக்கிரம் போ" என்றான் கணபதி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே.

அதைப் பார்த்துக்கொண்டே வந்த ஆறுமுகத்துக்கு ஒன்றும் புரியவில்லை; விழித்த கண் விழித்தபடி "ஏன் ஸார், நீங்களா திருடுகிறீர்கள்?" என்றான் வியப்புடன்.

"வேறு வழியில்லை, அப்பனே! உனக்கும் எனக்கும் போர்வை வேண்டும் என்றால் திருடுவதைத் தவிர வேறு வழியே இல்லை!" என்று அவனையும் தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொண்டு கையை விரித்தான் கணபதி!

"நிஜமாகவா?"

"சந்தேகமில்லாமல்!"

"அப்படியானால் நம்முடைய கடைக்கு எதிர்த்தாற் போல் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவருக்குக் கூடத் திருடினால் தான் போர்வை கிடைக்குமா?"

"ஆமாம் அப்பனே, ஆமாம்!"

"அப்படியானால் அவர் ஏன் திருடவில்லை?"

"திருட முடியவில்லை; அதனால் திருடவில்லை!"

"ஐயோ, பாவம்! திருட முடிந்தவர்கள் அவருக்கும் ஒரு போர்வை திருடிக் கொடுத்தால்?"

"கொடுக்கலாம், நீ ஒத்துழைத்தால்!"

"எப்படி?"

"சொல்கிறேன் - ராத்திரி நான் கடையை மூடும் போது நீ நம் கடைக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலுக்கு அருகே வந்து நில்; நான் ஒரு போர்வையை எடுத்துக் கொடுக்கிறேன் - வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்துவிடு!"

"இவ்வளவுதானே, அவசியம் வந்து நிற்கிறேன்!" என்றான் ஆறுமுகம்.

"அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டான் கணபதி - இனி அவனுக்கு இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அந்த ஒரு ரூபாய் கூடக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற நிம்மதியில்!

சொன்னது சொன்னபடி அன்றிரவு கணபதி கடையை மூடும் போது, கடைக்குப் பின்னாலிருக்கும் ஜன்னலருகே வந்து நின்றான்; ஆறுமுகம் அவனிடம் ஒரு போர்வையை எடுத்துக் கொடுத்தான் கணபதி.

"இன்னும் ஒன்று!" என்றான் ஆறுமுகம்.

"எதற்கு? ஒன்று கொடுத்தால் போதும்; போ போ" என்றான் கணபதி.

"அவருக்கு இல்லை ஸார், எனக்கு!"

"ஓ, உனக்கா இந்தா!" என்று அவன் இன்னொரு போர்வையை எடுப்பதற்காகத் திரும்பியபோது, 'லொக்கு லொக்கு' என்ற இருமல் சத்தம் அவன் காதில் விழுந்தது. திடுக்கிட்ட கணபதி, திறந்த பீரோவைத் திறந்தது திறந்தபடி வைத்துக்கொண்டு அப்படியே நின்றான்.

"அதோ அவரே வந்து விட்டார்!" என்றான் ஆறுமுகம், கணபதியின் நிலையை உணராமல்.

"அதுதான் தெரிகிறதே! அவன் ஏண்டா இந்த நேரத்திலே இங்கே வந்து தொலைந்தான்?" என்றான் கணபதி எரிச்சலுடன்.

"வந்தால் என்ன ஸார், அவரும் நம்மைச் சேர்ந்தவர் தானே?" என்றான் ஆறுமுகம்.

"யார் கண்டது? அவன் எப்படியோ என்னவோ? உனக்கு அவன்மேல் நம்பிக்கை யிருந்தால் உன்னிடமிருக்கும் போர்வையை அவனிடம் கொடுத்துவிடு; நாளை நான் உனக்கு வேறொரு போர்வை தருகிறேன்!" என்றான் கணபதி.

"சரி!" என்றான் ஆறுமுகம்.

"தாத்தா, தாத்தா!

அந்த நேரத்தில் ஆறுமுகத்தின் எதிர்பாராத அழைப்பைக் கேட்டதும் "யாரப்பா அது?" என்றான் கிழவன், தெரிந்தும் தெரியாதவன் போல.

"நான்தான் ஆறுமுகம் தாத்தா! அன்றொரு நாள் உங்களுடன் சேர்ந்து கூடைகூட முடைந்தேனே...?"

"ஓ, நீயா! என்னப்பா, சமாசாரம்?"

"குளிருக்கு ஒரு போர்வைகூட இல்லாமல் நீங்கள் ரொம்ப நாளா கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள், இல்லையா? இந்தாருங்கள், உங்களுக்கு ஒரு போர்வை!"

கிழவன் சிரித்தான்; "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டான் ஆறுமுகம்.

"ஒன்றுமில்லை; எனக்குப் போர்வை இல்லை என்று நீ சொன்னாயே, அதற்காகச் சிரித்தேன்!" என்றான் கிழவன்.

"அப்படியானால் உங்களிடம் போர்வை இருக்கிறதா, என்ன?"

"இருக்கிறது தம்பி, இருக்கிறது. ஆனால் அதை உன்னாலும் பார்க்க முடியாது; அந்தக் கணபதியாலும் பார்க்க முடியாது!"

"அது என்ன போர்வை தாத்தா, அப்படிப்பட்ட போர்வை?" என்று கேட்டான் ஆறுமுகம் ஒன்றும் புரியாமல்.

"அது தான் மானம் தம்பி, மானம் அந்தப் போர்வை உள்ளவன் இந்தப் போர்வையை விரும்பமாட்டான்!" என்றான் கிழவன்.