உள்ளடக்கத்துக்குச் செல்

அறவோர் மு. வ/என் பார்வையில்

விக்கிமூலம் இலிருந்து
437291அறவோர் மு. வ — என் பார்வையில்-டாக்டர் மு. வ.முனைவர் சி. பாலசுப்பிரமணியன்

இரண்டாம் பகுதி

I

என் பார்வையில் - டாக்டர் மு. வ.

"வாழ்க்கை மிகப்பெரிய கலை. அதில் தேர்தல் கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நாம் செய்யத்தக்க நல்ல தொண்டு. எப்படி எனின் நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு, நாம் ஒரு நூலாகப் பயன்படுவோம்".

இவ்வாறு தம் மாணவர் ஒருவர்க்கு 1959 ஆம் ஆண்டில் கடிதம் எழுதியவர் என் பேராசான் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் ஆவர்.

தம் வாழ்க்கை குறித்து அவரே ஓர் இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

என் வாழ்க்கை படிப்படியான முன்னேற்றங்கள் உடையது. திடீர் மாற்றங்களோ சரிவுகளோ இல்லாதது. வடஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்துாரில் பிறந்தேன்... பாட்டனார் உழவர், பெரியதனக்காரர். தந்தை வியாபாரம் செய்தவர். நானே குடும்ப வட்டாரத்தில் முதல் பட்டதாரி."

'உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்னும் பழமொழிக்கேற்பத் தம்முடைய அரிய உழைப்பால், அயராத முயற்சியால் தன்னைத் தலையாகச் செய்து கொண்டவர் டாக்டர் மு.வரதராசனார் ஆவர்.

வேலம் என்னும் சிற்றுார், வடார்க்காடு மாவட்டம் வாலாசாபேட்டை நகருக்கு அருகே அழகுற நிமிர்ந்து நிற்கிறது. அச் சிற்றுாரிற் பிறந்த மு. வ. அவர்கட்குச் சங்கப் புலவர் போன்று இயற்கையில் இணையிலாத ஈடுபாடு இருந்தது. தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார் தமிழ்ப் பெருமக்கள் இயற்கைக் காட்சிகளில் மனந்தோய்ந்து ஈடுபட வேண்டிய இன்றியமையாமையை வற்புறுத்துவார்.

"மனிதன் இயற்கையோடு உறவாடல் வேண்டும். காடுகளிலும் மலைகளிலும் புகுந்து ஆங்காங்குள்ள இயற்கை வனப்பைக் கண்டு கண்டு மகிழ்தல் வேண்டும். செடிகளின் அழகும், கொடிகளின் அழகும், பூக்களின் அழகும், பறவைகளின் அழகும், பிற அழகுகளும் அடிக்கடி மனத்திற் படிவதால் உடலில் அழகரும்பும். கடலோரத் தமர்ந்து கடலைக் காணக் காண மகிழ்ச்சி பொங்கும். வானத்தை, நோக்கினால் அழகிய நீல நிறமும், விண்மீன்களும், திங்களும் மகிழ்ச்சியூட்டும். மகிழ்ச்சி அழகை வளர்க்கும். ஆதலால் மனிதன் என்றும் இயற்கை வாழ்வை விரும்புதல் வேண்டும்’ என்பது திரு. வி. க. கண்ட தெளிவாகும்.

தொடக்க நாட்களில் மு. வ. அவர்களைத் திரு. வி. க. கண்டவுடன், அவர் பார்வையில் மு. வ. பட்ட நிலையினை திரு. வி. க. அவர்களின் மணிமொழி கொண்டே தெரியலாம்.

"வாலாஜா, இராணிப்பேட்டை, வேலூர், வெட்டு வானம் முதலிய இடங்கட்கு யான் அடிக்கடி செல்வேன்; கூட்டங்களில் யான் மு. வரதராஜனாரைப் பார்ப்பேன், அவர் என்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பார். பின்னர் நாங்கள் நெருங்கிப் பழகினோம். வரதராஜனார் முக அமைப்பு என் மூளைக்கு வேலை அளித்தது. அதைச் சிந்திக்கச் சிந்திக்க என் மூளை அவர் மூளையை நண்ணியது. நுண்ணறிவுக்கேற்ற முகம் வடிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.

"முதல் முதல் வரதராஜனார் பேச்சை யான் வெட்டு வாணத்தில் கேட்டேன். அப்பேச்சு, அவர் முக அமைப்பைப் பற்றி யான் கொண்ட முடிவை உறுதிப்படுத்தியது. அவரது எழுத்தும் பேச்சைப் போலவே இருத்தல் கண்டேன்.

"கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும் கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜனாரும் யானும் ஆற்றங்கரைக்குச் செல்வோம்; தோட்டங்களுக்குப் போவோம். இயற்கையை எண்ணுவோம்; பேசுவோம்: உண்போம். அவர் திருப்பத்துாரில் வதிந்தபோது இயற்கையோடியைந்த வாழ்வு அவரிடம் தானே தவழ்ந்தது."

இவ்வாறு 'கூறாது நோக்கிக் குறிப்புணரும்' தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களின் கூற்றிற்கிணங்க மு. வ. அவர்கள் இளமைதொட்டே இயற்கையில் ஊறித் திளைத்தவராவர். 'பழந்தமிழிலக்கியத்தில் இயற்கை' என்ற தலைப்பில் தம் டாக்டர் பட்டத்திற்குரிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு வெற்றி பெற்றார்கள். இன்னும் ஆராய்ச்சியுலகில் மணிமுடியாக அமையத்தக்க அவரது நூலான 'ஓவச் செய்தி’ பிறந்த வரலாற்றினை, ஒரு பாட்டு; அதைக் குறித்துப் பல நாள் போராட்டம். இரண்டு நாள் இரவும் பகலும் ஏக்கம். மூன்றாம் நாள் மாலை வேலத்து மலையை அடுத்து அழகிய ஒடையில் உலவும்போது எதிர்பாராத விளக்கம்; தெளிவால் பிறந்த பேருவகை. அவைகளே இந்நூலாக உருப்பெற்றது’ என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

இளமைக் காலத்திலேயே சான்றாண்மைக்குரிய சீாிய பண்புகள் இவரிடம் படிந்திருந்தன. எளிய உடைகளையே உடுத்துவார். காந்தியத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த இவர் துாய வெள்ளிய கதராடையினையே உடுத்தி வந்தார். நெடிய உருவமும் கரிய நிறமும் வாய்ந்து எடுப்பான தோற்றங் கொண்டிருந்த இவரின் கண்கள் ஒளிமயமானவை. உள்ளொளி துலங்கும் மனத்தை வெளிப்படுத்தும் கூரிய சீரிய பார்வை. மேலும் அருளொளி துலங்கும் விழிகள் எனலாம்! அரவணைக்கும் கைகள் எனலாம். பிறருக்கு எப்போதும் உதவி செய்ய விரையும் மனம் எனலாம். குடும்பப் பாசத்தோடு பிறரிடம் பழகும் பெருமனம் இவருடையது எனலாம். தம் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்காத எளிய உணவையே உண்டு, பழங்களை மிகுதியாகச் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தார் எனலாம். வருவாயைத் தாம் தேடிச் செல்லாமல் வருவாய் தம்மை நாடி வர உழைப்பையும் அறிவையும், பண்பையும், முயற்சியையும் பெருக்கிக் கொண்டவர் மு.வ. ஆவர்.

1931 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை நலிந்த உடலை ஒம்ப வேண்டும் என்று அரசாங்கப் பணியை விடுத்துச் சொந்தவூர் சேர்ந்த மு. வ. அவர்கள் கற்றுக் கற்று உயர்ந்தார். இயற்கை மருத்துவ முறையில் உடல்நலம் காத்துக் கொண்டார்.

"ஓய்வு கொள்ளக் கிராமத்திற்குச் சென்ற நான், ஓயாமல் இரவும் பகலும் தமிழ் நூல்களைக் கற்றேன்" என்கிறார் மு. வ.

திருப்பத்துாருக்கு அண்மையில் 'கிறித்து குல ஆசிரமம்' என்ற அமைப்பு இன்றும் உளது. அது மருத்துவச்சாலையாகவும் அமைந்து ஏழை எளியோர்க்கு மருத்துவத் தொண்டு ஆற்றிவந்தது. டாக்டர் ஏசுதாசன் என்ற பெரியவர் தாய்மொழிப் பற்றுமிக்கவர். அவருடன் ஸ்காத்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பேட்ரன் என்பவரும் பணியாற்றி வந்தார். தமிழ் மொழியினைக் கற்க உளங்கொண்ட மருத்துவமனைப் பெரியவர்கள் பலர் மு. வரதராசனாரின் உதவியை நாடினர். ‘தீனபந்து ஆண்ட்ரூஸ்’ அவர்கள் அண்ணல் காந்தியடிகளாரிடம் பயின்றவர். அவரும் அவ் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அவரோடு பழகிய காரணத்தால் மு. வ. அவர்கள் காந்தியப் பற்றும், சமயப் பொறுமையும், பிறருக்கு உழைக்கும் பெருமனமும் கைவரப்பெற்றார்.

கடுமையாக உழைத்துத் தம்மைச் சார்ந்த பிறரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கருத்துக் கொண்டிருந்த மு. வ. அவர்கள் தாமே பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் 1935 ஆம் ஆண்டில் முதலாமவராக வந்து திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத தம்பிரானவர்களின் ஆயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றார். 1939 ஆம் ஆண்டில் புகழ் பூத்த கல்வியாளர் டாக்டர் ஏ. எல். முதலியார் ஆதரவு காரணமாகச் சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் தமிழ் திருத்தாளராகப் பணியமர்த்தம் பெற்றார்.

மு. வ. பிறவி ஆசிரியர். மாணவர் மனத்தில் பசுமரத் தாணியெனப் பதியும் வண்ணம் பாடம் நடத்துதலில் வல்லவர். இருபத்தெட்டே நிறைந்த அகவையில் கல்லூரியிற் கால் வைத்துப் பயிலாத அவர், தாமே முயன்று படித்துத் தகுதியுடன் தேறிக் கல்லூரியில் - அதுவும் தமிழிற்கே அந்நாளில் முடிமணியாக விளங்கிய வகுப்பான பீ. ஒ. எல். ஆனர்ஸ் வகுப்பில் அவர் மாணாக்கர்க்குத் தமிழ் கற்றுக் கொடுத்த திறத்தினை அவருடைய முதலணி மாணவர் ஒருவரே மனந்திறந்து குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

"கழுத்துவரை மூடிய நீண்ட கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை, நெற்றியில் சத்தனப் பொட்டு ஆகிய கோலத்துடன் மு. வ. அவர்கள் எங்கள் வகுப்பிற்குள் முதன் முதலாக 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் நுழைந்தார். அவர் தோற்றப் பொலிவும், முகத்தில் தவழ்ந்த இனிமையும், நிமிர்ந்த நன்னடையும் எங்களை ஆட்கொண்டன. ‘திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை முதல் பாடமாகத் தொடங்கினார். தமிழ்த்தெய்வமான முருகனை இலக்கிய உலகில் அவர் அறிமுகம் செய்த விதமே தனிச் சிறப்புடன் திகழ்ந்தது. அதை அடுத்து ‘நம்பி அகப்பொருள்’ என்ற இலக்கண நூலைப் பாடம் சொல்லி விளக்கினார். ஆம், தேனில் இனிமையைக் குழைத்துச் செந்தமிழ்ப் பாலினை ஊட்டத் தொடங்கினார். அள்ள அள்ளக் குறையாத அமுதை வாரி வாரி வழங்கினார். ஐந்து ஆண்டுகள் போனதே தெரியவில்லை.”

கண்டறியாதன வெல்லாம் கண்முன் காட்டி, விளக்கம் ஊட்டி மாணவர் மனத்தைத் தெளிவுறச் செய்வது மு. வ. அவர்களின் பாடஞ் சொல்லும் முறை. ஒரு சமயம் புன்கம் பூக்களைக் கொண்டு வந்து மேசை மேல் வைத்து, “‘பொரிப்புன்கு’ என்றாரே சங்கப் புலவர்; பாருங்கள் - சிந்திக் கிடக்கும் புன்க மலர்களை! தெரியாமல் அயர்ந்து போய், பொரி என்று வாயில் போட்டுக் கொள்ள யாரேனும் நினைத்தாலும் வியப்பதற்கில்லை. பாருங்கள் இலக்கியப் புலவரின் கூரிய கலைப் பார்வையை” என்று அவர் குறிப்பிட்ட பொழுது, அவர் பாடம் பயிற்றலும் வகையும் திறமும் ஒருசேர விளங்கின.

டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு - எடுத்து மொழிய முடியாத அளவிற்கு ஆழ்ந்த தமிழ்ப் பற்றாளர் என்பதனை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் மிக நன்றாக அறிவார்கள். தம் தந்தையின் தமிழறிவு சரிவர அமையவில்லையே என வருந்தி அவரே குறிப்பிடும் இடம் அவர் மொழிப் பற்றுக்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாகும். அவரே இதனைக் குறிப்பிடக் காணலாம்.

“எனக்கு ஒரு பெரிய குறை உண்டு. நான் வெளியூர்க்குச் சென்ற பிறகு அவர் எழுதிய கடிதங்களைப் படிக்கும் போதெல்லாம், என் தந்தையாரைப்போல் தமிழ்க் கொலை செய்கின்றவர் எவரும் இல்லை என்று எண்ணி வருந்துவேன். ‘றாமசாமி, நன்ராக, இருக்கிரார்கள், வன்து போறார், எண்று சொண்ணார்’ என்றெல்லாம் அவர் கடிதங்களில் எழுதியவற்றைக் கண்டு ஆத்திரம் கொள்வேன். அந்தக் காலத்துப் படிப்பு அவ்வளவுதான் போலும்’ என்று ஒருவாறு ஆத்திரம் அடங்குவேன்’

என்று குறிப்பிட்டிருப்பதைக் காணும் பொழுது தமிழைப் பிழையற எழுத வேண்டும் என்று அவர் காட்டிய ஆர்வம் புலனாகின்றது.

ஒரு முறை வகுப்பறையில் மொழி நூற் பாடத்தினை எங்கட்குப் பயிற்றி வந்தார்.

ஆயினும் தமிழ் நூற்கு அளவிலை...
ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே

என்ற புலவர் ஒருவரின் - சுவாமிநாத தேசிகரின் பாட்டைச் சொல்லி, தமிழ் மண்ணிற் பிறந்து, தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒருவர் இப்படிச் சொல்லிப் போனாரே என்று துடித்துத் துடித்து மனம் மாழ்கினார்.

இந் நிகழ்ச்சி அவர்தம் மொழிப்பற்றினைக் காட்டும்.

சின்னஞ் சிறு குழந்தையர்க்கு என அவர் தொடக்க காலத்தில் எழுதிய கவிதைகளில் கருத்துவளம் இருப்பதனைக் காணலாம். மு. வ. வின் எழுத்துகள் என்றால் அவற்றில் வாழ்க்கையை வழிநடத்தி வளப்படுத்தும் கருத்துகள் தவறாது இருக்கும் என்று பின்னாளில் தமிழுலகு ஏற்றிப் பாராட்டியதற் கிணங்க, அடிநாளிலேயே தம் எழுத்தைச் சமுதாயப் பயன்பாட்டிற்கெனப் பயன்படுத்தியவர் மு. வ. அவர்களாவர். ஒரு பாட்டைப் பார்ப்போம் :

தென்னை மரமே கேளாய்!
   தென்னை மரமே கேளாய்!
உன்னை வளர்த்தவர் அப்பா
   என்னை வளர்த்தவர் அம்மா!
உனக்கும் வயது ஆறே:
   எனக்கும் வயது ஆறே;
நீ வளர்ந்த உயரம்
   நான் வளரவில்லை!
நீ கொடுப்பாய் இளநீர்
   நான் கொடுப்ப தென்ன?
ஆனாலும் என்னை அன்பாய்
  அன்னை வளர்த்தலைப் பாராய்!

அரியவற்றையெல்லாம் எளிதில் விளக்கும் அரிய திறம் பெற்றவர் பெருந்தகை மு. வ. ஆவர். நுணுக்கமாக மொழிநூற் கருத்துகளையும் எவரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அவர் எழுதியிருப்பதைக் காணலாம்.

“கோழி பேசுகிறது. கோழியாவது பேசுவதாவது? இது என்ன கதையா என்று எண்ணத் தோன்றும். ஆனால் நன்றாக எண்ணிப் பார்த்தால் தாய்க்கோழி தன் குஞ்சுகளோடு இருக்கும் போது எந்நேரமும் பேசிக் கொண்டே இருப்பது உண்மை என்று தெரியும். அது ஒரு பேச்சா, கிக் கிக்கிக் என்ற ஒலிதானே என்று எண்ணலாம். நமக்கு விளங்காத காரணத்தால் அது பேச்சு அன்று என்று தள்ளிவிடக் கூடாது. சீனாக்காரன் பேசுவது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதனால் அது பேச்சு அன்று என்று தள்ள முடியுமா? அப்படித் தான் கோழிப் பேச்சும். அதன் பேச்சு நமக்கு விளங்கவில்லை. ஆனால், அதன் இளங்குஞ்சுகளுக்கு நன்றாக விளங்குகிறதே. அவைகள் தாய் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பதைக் காணலாம். ஆகையால் அது பேச்சுத்தான்.”

- இது மொழியின் கதை என்கிறார்.


பாத்திரப் படைப்புகளை நுணுகிக் கண்டு அவர்களின் வாழ்வினைத் திறனாய்வு நோக்கில் பார்த்து உண்மை தெளியும் திறம் மு.வ. அவர்களுடையது. ‘மாதவி’ என்ற நூலில் மாதவியின் பண்பு நலங்களை அவர் விளக்கும் போக்கு, புதுமையும் புரட்சியும் உடையதாகும்.

“கண்ணகியின் வாழ்வு கணவனுக்காகவே வாழ்ந்து கணவனுக்காகவே முடிந்தது. மாதவியின் வாழ்வு காதலின் நின்று பிறகு அதையும் கடந்து அறத்துறையில் சென்றது. மனம் மாறிய மாதவி பிறந்த குடும்பத்தின் தீமையை வேருடன் களைந்தாள்: அதுபோன்ற மற்றக் குடும்பங்களின் சீர்திருத்தத்திற்கு வழிகாட்டியாக விளங்கினாள்; பெரும் புரட்சி செய்தாள்; கலையின் வளர்ச்சிக்காக மங்கையர் சிலரின் வாழ்வைக் கெடுக்கும் மடமையைக் கொளுத்தினாள். அரசன் திகைக்க, ஊரார் வியக்க, சுற்றத்தார் இரங்க, பெற்ற தாயும் வருந்த, சீர்திருத்தம் செய்தாள். கணிகையரின் வாழ்வுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை நாடு அறியச் செய்தாள். தன் வயிற்றில் பிறந்த மணிமேகலையைத் தமிழகத்தின் தவச்செல்வி ஆக்கினாள். சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குதல், அமுத சுரபி ஏந்திப் பசிப்பிணி தீர்த்தல் முதலிய அறப்பெருஞ் செயல்கள் செய்து தொண்டு ஆற்றி, உலகப் பெருமாதரில் ஒருத்தியாக விளங்கிய மணிமேகலையைப் பெற்ற தாய் என்று உலகம் புகழுமாறு உயர்நிலை உற்றாள் மாதவி” என்று அவர் கூறுந் திறம் பாத்திரங்களையே விளக்கும் தன்மைத்தன்றோ!

படைப்பு எழுத்தாளர் (Creative Writer) என்ற வகையில் மு.வ. இந்நூற்றாண்டிற் சிறக்க விளங்கியதனால் அவர் எழுதிய இலக்கிய நூல்களுக்குக் கூடப் படைப்பிலக்கியத்தின் தகுதிகள் சிலவற்றைப் புகுத்தி விளக்கினார். சிறு கதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப் பந்தயத்தைப் போல இருக்கவேண்டும் என்பர். தொடக்கம் கருத்தைக் கவர்ந்து மனத்தைச் சுண்டியிழுப்பதாக இருக்கவேண்டும் என்பர். முடிவு நம்மைச் சிந்திக்க வைத்து நம் வாழ்வைச் சிறக்க வைப்பதாக இருக்கவேண்டும் என்பர். அம் முறையில் ‘கண்ணகி’ என்னும் இலக்கிய நூலின் தொடக்கம் இவ்வாறு அமைகின்றது.

“ஏறக்குறைய ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் மதுரை மாநகரத்தின் ஒரு பகுதியில் ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது. இந்த ஊரில் கற்புடைய பெண்கள் இல்லையா? அருளுடைய சான்றோர் இல்லையா? அறங்காக்கும் தெய்வமும் இல்லையா? என்று அழுது அரற்றுவது கேட்டது”

என்று சிறுகதைப் போக்கின் சிறந்த உத்தியினைக் கையாண்டு, நூல் படிப்போரின் கவனத்தினைக் காந்தமெனக் கவர்கிறார் மு.வ.

தமிழ் நாட்டுப் பதிப்பக வரலாற்றில் இதுகாறும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ என்பது பலரும் அறிந்த செய்தியே. பத்து லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள ஒரே தமிழ் நூல் அது.

‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ மு. வ. அவர்கள் எழுதிய மிக உயரிய நூல். தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்கள் வாக்கிற் சொல்லவேண்டும் என்று சொன்னால், ‘உலகம் ஒரு குலமாதல் வேண்டும்’ என்னும் உயர்ந்த உணர்வே திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்றும் நூலைப் படைக்க வைத்தது’ எனலாம்.

மு.வ. அவர்கள் திருப்பெயர் ஒளிர வகை செய்தது. படைப்பிலக்கியத் துறையே எனலாம். ‘செந்தாமரை’ என்னும் முதல் நாவலை எழுதி முடித்துப் பொருள் முட்டுப் பாட்டால் வெளியிட முடியாமல் மு. வ. அவர்கள் திணறியபொழுது, அவருக்கு அமைந்த அருமை வாழ்க்கைத் துணைவியார் எங்கள் மதிப்பிற்குரிய இராதா அம்மா அவர்கள் தாம், தம் நகைகளைக் கழற்றித் தந்து நூல் வெளியிட உதவி செய்தார்கள். செந்தாமரை 1948 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ‘கள்ளோ காவியமோ’ அவருக்குப் புகழ் சேர்த்த நாவல். இந் நாவலைப் படித்துவிட்டு மணமக்கள் பலர் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ்வதாக அவர் அமரராகிப் பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும் எனக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

“காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வே ண் டு ம். குழந்தைபோல் வாழவேண்டும்! தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு அயுள் வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது. அறிவும் மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவர்க்குத் தெரியாத அன்பு வாழ்வு-கண்மூடி வாழ்வு வேண்டும்”

என்பார் மு.வ.

“இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும். ஈ எறும்பாலும் முடியும் தேவையானபோது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே வந்து மொய்க்கின்றன. அதுபோல் இன்பம் உள்ளவரை யார் வேண்டுமானாலும் வந்து மொய்த்துக் கொள்வார்கள். ஆதலால் இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத் தேடு. உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித்தான் தேட வேண்டும்.”

இஃது ‘அல்லி’ என்னும் நாவலின் உள்ளீடான கருத்தாகும்.

“தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் வாழ்ந்தால் போதாது; வல்லவர்களாகவும் வாழவேண்டும்” என்பது: மு.வ. தமிழர்களுக்கு விடுத்த செய்தியாகும்.

"அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கிநட; உரிமைக்காகப் போராடிக் காலங் கழிக்காதே.”

-இது 'தங்கைக்கு' நூல் வழி, பெண்ணுலகிற்கு விடுத்த செய்தி.

“விரும்பியது கிடைக்கவில்லையென்றால், கிடைத்ததை விரும்பவேண்டும்".

இஃது எல்லார்க்கும் விடுத்த செய்தி.

அரசு, நம்பி, பாரி என்று தூய தமிழ்ப் பெயர்களையே தம் பிள்ளைகளுக்கு இட்ட மு. வ. ஒரு தமிழர்.

தமிழின் துறைதோறும் துறைதோறும் சென்ற நூல்கள் பலவற்றைப் படைத்த மு.வ. ஒரு கலைஞர்.

தமிழ்ச் சமுதாயவுணர்விற்கே முதலிடம் தந்து வாழ்ந்த மு.வ. ஒரு சான்றோர்.