உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/திருவள்ளுவர்-சமயவியல்

விக்கிமூலம் இலிருந்து

திருவள்ளுவர் - சமயவியல்
(இரண்டாம் நாள் சொற்பொழிவு)

முன்னுரை

திருக்குறள் ஓர் அறிவு நூல்; திருக்குறள் ஓர் அற நூல்; அறத்திலும் சிறந்து விளங்கும் ஞானத்தை - பேரறிவை வழங்கும் ஞானப் பனுவல், திருக்குறள், மெய்யுணர்வில் திளைத்த அருள்ஞானச் செல்வராகிய திருவள்ளுவர் தந்தது. திருக்குறளைப் பிற்காலத்தவர்கள் வடமொழி நான்மறை யோடு ஒத்தது என்பர். இல்லை, இல்லவே இல்லை! சிறு தெய்வங்களையும், இயற்கை ஐம்பூதங்களையும் அஞ்சித் தொழும் நெறிகளைக் கூறுவன அந்நான்மறைகள். ஆனால், அச்சமின்றிப் பரம்பொருளைத் தொழும் ஞானநெறியைக் காட்டியது, காட்டுவது திருக்குறள். திருக்குறள், சமயச் சான்றோர்களால், ஞானிகளால் ஏற்றுப் போற்றப் பெற்றிருப்பதனாலேயே அதனுடைய அருமை விளங்குகிறது. உமாபதி சிவம், திருக்குறளை உளங்குளிரப் பாராட்டுகின்றார்.

"—... நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த
மெய்வைத்த சொல்” (நெஞ்கவிடு தூது, 25-26)

என்று கூறியிருப்பதறிக. "இவ்வளவு உயர்ந்த ஞானத்தைச் சிறந்த முறையில் கூறும் திருக்குறள் போன்ற அறநெறிக் கோவை உலக இலக்கியங்களிலேயே வேறு இல்லை" (சர் ஆல்பெர்ட் சுவைட்சர் - இந்திய நாட்டின் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்) என்பர் சர் ஆல்பெர்ட் சுவைட்சர். ஆதலால், திருக்குறள் ஓர் இலக்கியம்! இல்லை, அஃது இலக்கிய அமைப்பில் சிறப்புற்று விளங்கும் அறநூல். இலக்கியம், அறநூல் ஆகிய தகுதிகளோடு அஃது ஒரு சிறந்த அரசியல் நூலாகவும் விளங்குகிறது. மேலும் சிறந்த ஞானத்தின் கருவூலமாகவும் திகழ்கிறது. திருக்குறள் ஒரு மறை. மனித வாழ்க்கையை அறிவியற்பார்வையோடு அணுகி ஆராய்ந்து வழி நடத்தி வாழ்விப்பது திருக்குறள். திருக்குறளைப் போன்ற ஒரு முழுநூல் மக்களாகப் பிறந்தார் பேசும் வேறு எம்மொழியிலும் இல்லை

மனித வாழ்க்கை

மனித வாழ்க்கை அருமைப்பாடுடையது. அது பழிக்கத் தக்கதன்று; சாவை விரும்பிச் செல்வதன்று: பழந்தமிழகத்தின் கொள்கை, வாழ்க்கையைப் போற்றுவதாகும். தமிழகத்தில் தோன்றிய அனைத்துச் சமயச்சான்றோரும் வாழ்க்கையை வரவேற்றுப் போற்றியுள்ளனர்.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்"

- (அப்பரடிகள், கோயில்-5)

என்று திருமுறை, வாழ்க்கையைப் போற்றும்படி அறிவுறுத் துகிறது. போற்றத்தக்க இப்பிறவி இன்னும் வேண்டும் என்பதை,

"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"

- (அப்பரடிகள் கோயில்-4)

என்று அப்பரடிகளின், அருந்தமிழ் கூறும்.

மானிட வாழ்க்கை வெற்றிக்குரியது என்பதைக் ಧಿ. உணர்ந்து "மானுடம் வென்றதம்மா" என்று உளங்குளிர வியப்புணர்ச்சியுடன் பாராட்டுவான். ஆம்! மானுடம் பிண்டமன்று; மானுடம் ஒரு வாழ்க்கை.

"காயமே இது பொய்யடா!
   காற்றடைத்த பையடா!"

என்று பாடுவது முழுமையான மானுட வாழ்க்கையைக் குறிக்காது. அஃது உடம்பு நிலையாமையை மட்டுமே குறிக்கும். வாழ்க்கை யென்பது உடலை மட்டும் சார்ந்த தில்லையே! எழுதும் பேனாக்களில் மை வற்றலாம்; பேனாவே கெட்டுப் போகலாம். ஆனால் பேனாவால் எழுதிய காவியங்கள் நிலையில்லாதனவா? ஆதலால், வாழ்க்கை நிலையானது; அழியாதது, பௌத்த, சமண மாயாவாதக் கலப்புகளுக்குப் பிறகு வாழ்க்கையை இழித்தும் பழித்தும் பேசும் வழக்கம் தமிழகத்தில் இடம் பெற்றது. அத்தத்துவங்களின் விளைவால் நாடு செயலற்று வறுமையில் துஞ்சியது; அந்தியர்க்கு அடிமைப் பட்டது என்ற உண்மை உணரப்படுதல் வேண்டும். வள்ளுவத்தின் பார்வையில் வாழ்க்கை அருமையுடையது; பயனுடையது; புகழ் மிக்கது என்பதறிக.

'உயிரினத்தின் வாழ்க்கையில் சமயம் கால்கொண்டது. சமயத் தோற்றத்திற்குக் களன் விண்ணுலகமன்று; மானுடச் சாதியின் சமயம் யாரோ ஒருவரால் தயாரிக்கபெற்று இறக்குமதி செய்யப் பெற்றதுமன்று. மானுடச் சாதியின் இயல்பான வளர்ச்சியில் (Evolution) பரிணாமத்தில் தோன்றியது சமயம். மேலை நாட்டவர் அச்சத்தின் காரணமாகச் சமயத்தை கண்டனர். Fear is the beginning of God என்பது ஒரு பழமொழி. ஆனால் வீரத்திற்கும் தறுகண்மைக்கும் ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டியது சமயம்.

"ஈர அன்பினர் யாதும் குறைவிலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ

(பெரியபுராணம் 5 : 9)

என்று சேக்கிழார் பெருமான், சமய நிலையினர்தம் வீரத்தைப் போற்றுகின்றார். ஆதலால் அஃது அச்சத் தினின்று பிறத்தற்கில்லை. அச்சத்தில் தோன்றிய சமயமும் மானுடச் சாதிக்குப் பயன்தாராது. அச்சம் கொச்சைத் தனமானது; கீழ்மையானது; ஆக்கத்தின் வழி நடத்தாது. அதனாலன்றோ வள்ளுவம்,

"அச்சமே கீழ்களது ஆசாரம்" - (1075)

என்று அச்சத்தை இழித்துப் பேசுகிறது. சமய வாழ்க்கையில் மேம்பட்டு விளங்கிய ஞானிகள் "அஞ்சுவது யாதொன்று மில்லை; அஞ்ச வருவதுமில்லை" என்று உரைத்த உயர் ஞானமொழி உணரத்தக்கது. தேசியக் கவிஞனாகவும் சமய வாழ்க்கையுடையவனாகவும் விளங்கிய பாரதி "அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பதில்லையே” என்று பாடியதையும் அறிக. ஆதலால் அச்சம், அறிவியல் முயற்சிக்கு முரணானது: ஆக்கத்திற்கு மாறுபட்டது; அன்பு நெறிக்கு இசைவிலாதது; அருளியலுக்கு உடன்பாடிலாதது. எனவே அச்சத்தில் பயத்தில் சமயம் தோன்றாது; தோன்றமுடியாது; தோன்றக் கூடாது. அச்சத்தின் வழிப்பட்ட சமயங்கள் ஆனவை மானிடச் சாதியை அடிமையாக்கும்; குற்றவாளிகளாக்கும்; பிச்சைக்காரர்களாக்கும்; காலப்போக்கில் அழித்துவிடும். அப்படியானால் அப்பரடிகள்,

"அஞ்சியாயினும் அன்புபட்டாயினும்
நெஞ்சம்வாழி நிலைநின்றி யூரை நீ"

(திருவொற்றியூர்த் தேவாரம், 10)

என்று அருளிச் செய்துள்ளாரே என்ற வினா எழும். அது, அவர் காலத்தில் வந்த வழக்கினைச் சார்ந்த நிலை. அப்பரடிகள் உலகு தழுவிய சிந்தனையுடையவர். ஆதலால், தம் காலத்தில் வழக்கில் இருந்த செய்திகள் சிலவற்றைத் தம் பாடல் வழி நினைவு கூர்கிறார் அஃது ஒரு நினைவு கூர்தல் என்ற அளவிலேயே அமையும்.

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்"
என்றும்

"வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்"

என்றும் அருளிச் செய்துள்ளமையால் அவர் காலத்தில் நிலவியவற்றையும் எடுத்து இயம்பித் தம் நிலையில் நின்றார் என்பதே கருத்து. அது மட்டுமன்று. அஞ்சுதல். அன்பு எனும் இவையிரண்டும் இருவேறு இயல்பின என்பதையும் அவர் உணர்த்தாது உணர்த்துகிறார். மேலும் அஞ்சியாயினும் என்பதற்கு அச்சத்தினாலாயினும் என்று பொருளே தவிர, அஞ்சி வழிபடுதலை முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்பது பொருளாகாது. அவருக்கு உண்மையான நோக்கம் அன்பினால் வழிபாடு நிகழ்த்துதல் என்பதேயாம். திருக்குறள் தோன்றிய தமிழினத்தின் சமயம், அறிவு ஆற்றல்களின் எல்லையைக் காணும் ஆர்வத்தில் பிறந்ததேயாம். இயல்பின் மனித அறிவு, எல்லைகளுக்கு உட்பட்ட அறிவாக விளங்குகிறது. ஆற்றலும் அப்படித்தான்! ஒரு மாபெரும் செயலைச் செய்து முடிக்க விரும்புபவர் தமது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள ஆர்வம் உடையராயிருத்தல் இயற்கை. நெடுந்தூரம் கடக்க வேண்டியவர் விரைந்து செல்லும் பயண ஊர்திகளையும், நெடுந்தொலைவு காண விரும்புபவர் ஆற்றல் மிக்க தொலை நோக்கியையும் பயன்படுத்துவதைக் கண் கூடாகக் காண்கிறோம். அது போல, உயிரின் அறிவை ஆற்றலைப் பெருக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்; அதற்குப் பேரறிவாளனாக - வரம்பிலாற்றல் உடையானாக விளங்கும் இறைவனை நாட வேண்டும் என்கிற மனப் போக்கிலேயே உயர் சமயம் தோன்றியது. பிறிதொரு களமும் உண்டு. உயிர்கள் துய்த்து மகிழ்ந்து, இன்புற்று வாழ எத்தனையோ கோடி இன்பங்கள் இந்த உலகத்தில் உள்ளன. அவைகளைக் கூர்ந்து நோக்குங்கால், மனித ஆற்றலை விஞ்சிய ஆற்றலின் தொழிற்பாடு தெரிகிறது.

"கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு"


(திருமுரு 1 : 17)

என்பார் நக்கீரர். இவ்வின்பத்தையெல்லாம் துய்த்து மகிழும் உயிர், நன்றிப் பெருக்கோடு அந்த ஒப்பரிய பேராற்றலை வாழ்த்த முனைவதும் ஒரு காரணம். இவைதாம், தொன்மைக் காலத்தில் தமிழ்ச்சமயம் தோன்றுவதற்கமைந்த களங்கள். காலப்போக்கில் மனித குலத்தில் பொதுமையும் சான்றாண்மையும் குறையக் குறையப் பொய்யும் வழுவும் வந்தமைய, அறத்தை வற்புறுத்தவும், நீதியை நிலைநாட்டவும் சட்டங்கள் தோன்றுவதற்கு முன்பு, இம்மை மறுமை நலன்களைக் காட்டித் தடம் பிறழ்ந்த மனித சமுதாயத்தை நன்னெறியில் நிறுத்தச் சமயநெறிகள் முயன்றன. அப்போது சமயத்தின் தோற்றக்களன் விரிந்து, ஆட்சி முறையினைத் தழுவித் தேவைக்கேற்பப் புனைந்துரைகளை நாடியது. இப்படி விரிந்தமையினால் சமயவுலகு நன்மைகளும் பெற்றது; தீமைகளும் பெற்றது. சமயத் துறையின் நிலையியலுக்கு எடுத்துக் கொண்ட விரிவை, மருந்தாகப் பயன்படுத்தாமல் உணவாகப் பயன்ப்டுத்தியதால் சில தீய விளைவுகளும் தோன்றின. அதனால் "மனித உலகத்தின் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை" - "சமயம் முட்டுக்கட்டை", "சமயம் மக்களுக்கு அபின்" என்றெல்லாம் எடுத்து விளக்கக்கூடிய அளவுக்குச் சமயநெறியினைச் சார்ந்த நிறுவனங்கள் முறைபிறழ்வில் நெடியதூரம் சென்றுவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை; மறுக்கவும் இயலாது. ஆக, சமயத் தோற்றத்திற்குக் காரணம் அறிவின் வேட்கையேயாம்; ஆற்றலின் பாற்பட்ட நாட்டமேயாம். அமைதியை நாடும் இன்ப அன்பினைத் தழுவும் பேரார்வமே, சமய நெறியின் தோற்றத்திற்கு ஊற்றுக் கண்.

மதம் - சமயம் ஆகிய சொற்கள் ஒரு பொருள் உடையன போல வழங்கப் பெறுகின்றன. ஆனாலும் "மதத்திற்கும் சமயத்திற்கும் வேறுபாடு உண்டு. மதம்' என்பது,

"எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேல் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூற் குற்றம் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே”

(நன்னூல் பொதுப்பாயிரம் : 1)


என்று வகைப்படுத்தப் பெறுகிறது. இங்கு மதம் என்ற சொல்லுக்குக் கொள்கை என்பதே பொருள். இந்நூற் பாவில் வரும் மதம் என்ற சொல் உணர்த்திய பொருளோடு கடவுள் தொடர்பு இல்லை. அஃதொரு கருத்தினை, கொள்கையினைக் குறிக்கும் சொல்லாகத் தானிருக்கிறது. இஃது உணரத்தக்கது. பின், ஒரு கொள்கையுடையார் பிறிதொரு கொள்கையுடையார் மீது கொள்கையைத் திணிக்கக் கடவுட் கொள்கையையும் சேர்த்துப் பயன்படுத்தி யிருப்பார்கள் போலும்! அப்பொழுது மதம் என்ற கொள்கை அமைப்போடு கடவுள் சம்பந்தப்பட்டது. கொள்கை வெறியில் கொள்கையின் தராதரத்தை ஆராய்ந்தறியாமல் கொள்கையைத் திணித்து விடவேண்டும் என்று வெறிபிடித்து அலையும் பெரியவர்களுக்கு "மதம் என்னும் பேய் பிடியா திருக்க வேண்டும்" என்று தன்மீது வைத்து வள்ளலார் அறிவுறுத்துகிறார். தமிழ் இன வாழ்க்கையில் சமயம், முன்னர்க் குறிப்பிட்டதைப்போல வாழ்க்கை செப்பமாக அமைய, குறைகளை நிறைகளாக மாற்றிக்கொள்ளத் தோன்றியதேயாம். மதம் என்ற சொல்லுக்கும் சமயம் என்ற சொல்லுக்கும் உணர்வில், பொருள் விளக்கத்தில் நடைமுறையில் நிறைந்த வேறுபாடுண்டு. இன்று நாம் விரும்புவது மதமன்று, சமயமேயாம்.

வாழ்க்கை அருமையானது; பெருமைக்குரியது. என்றால் எந்த வாழ்க்கை: இன்று பலர் வாழவே இல்லையே! ஏன்? அவர்களுக்கு வாழத் தெரியாதே! அது மட்டுமா? அவர்கள் வாழவேண்டுமென்று ஆசைப்படக்கூட மறுக்கிறார்கள். ஊனுடலுடன் உலா வந்து, உண்டுடுத்திச் செத்துப் போதலும் வாழ்க்கையோ? இது பிழைப்பு. பிழைக்க யாருக்குத்தான் தெரியாது? தெருவுதோறலையும் ஊர் நாய் கூடத்தான் பிழைத்து விடுகிறது. வாழ்க்கையென்பது ஒரு அருமையான கலை நுணுக்கம் உடையது; நெடிய வரலாறுடையது; உயர் இலக்கு உடையது. வாழ்க்கையின் அருமைப்பாட்டினை உணர்த்து வாழ்தலே வாழ்க்கை. நல்லதோர் வீணையானாலும் அதனை மீட்டத் தெரிந்தால் தானே இசை இன்பம்! அதுபோல வழியோடும் வகை யோடும், அறிவோடும் தெளிவோடும், உயிரோடும் உணர் வோடும், படைப்பாற்றல் நோக்கோடும் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை. இதனை வள்ளுவம்,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

(50)

என்று கூறுகிறது. வாழ்வாங்கு வாழ்கிற வாழ்க்கைக்குத் துணை செய்வது சமயம், அகநிலைச் சார்புடையது; புலன் களைத் திருத்தத் துணைசெய்வது சமயசீலங்கள் பொறிக ளோடு தொடர்புடையன அல்ல, பொறிகளின் தூய்மைக் கேட்டுக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். புலன்களின் துய்மைக்குச் சமயம் துணை செய்கிறது. "புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று சங்க காலப் பாடல் சமய வாழ்க்கையைக் குறிப்பிடுதலை உணர்க. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற இவற்றின் வகைதெரிந்து வாழ்வோரே சமயநெறி நிற்போர்.

"சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் என்றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு"

(27)

என்ற வள்ளுவம் அறிக. புலன்கள் தூய்மையானால் பொறிகள் துய்மை நெறியில் இயல்பாக இயங்கும். தனாலன்றோ, தி. 10.

"மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற"

(34)

என்று வள்ளுவம் கூறுகிறது. ஆதலால் மானிடரின் புலன்களைத் துய்மை செய்து, சீலம் பெருக்கி மனத்தின் கண் தூய்மையைச் சேர்த்து அகவாழ்க்கையை வளர்த்து, அவ்வழி புறவாழ்க்கையையும் வளர்த்து வழி நடத்தி வாழ்விப்பது உயர் சமய நெறியின் நோக்கம்; பயன்.

உயிர், துய்த்தலுக்குரியது. இன்புறுதலுக்குரியது. ஆதலால், சமய வாழ்க்கையின் அடிப்படையில் துய்த்தல் நெறிக்கு மாறான - துய்த்தல் நெறியை அடக்குகின்றபொறிகளை, புலன்களை அழிக்கின்ற - வறட்சித் தன்மை யுடைய துறவை உயர்ந்த சமயம் ஏற்பதில்லை. அதனால், சமய நெறியில் துற்வேயில்லையென்று பொருள் கொள்ளற்க. துறவு உண்டு; எல்லாருடைய வாழ்க்கையிலும் துறவு இருத்தல் வேண்டும். துய்ப்பு வாழ்க்கை துறவுடன் தொடர்பு கொண்டிருந்தால்தான் சிறக்கும்; இன்பம் கிடைக்கும். உயிர்கள் தத்தம் வளர்ச்சி எல்லைக்கண் நின்று வாழ்தல் வேண்டும். இயற்கையோடு இசைந்த வாழ்க்கையே இறைநெறி சார்ந்த வாழ்க்கை. ஆதலால் தமிழர்தம் வாழ்க்கையில் மேற்கொண்டொழுகிய சமயதெறியில் பெண்ணை வெறுத்தலும், மனையறத்தை வெறுத்தலும் இல்லை. தமிழர் போற்றிய பெண்ணின் பெருமைக்கும் அகனைந்திணை வாழ்க்கைக்கும் புறச்சமயங்கள், அயல் வழக்குகள் முரண்பட்டு இருந்ததனால்தான் நம்முடைய நாயன்மார்கள் அந்தப் புறச்சமயங்களை எதிர்த்துப் போராடித் தமிழினத்தின் சமயநெறியை - அகனைந்திணை ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாத்தனர். ஆதலால்தான் இல்லறத்தை அறத்துப்பாலின் முதனிலையில் வைத்து ஒதுகிறார் திருவள்ளுவர்.

"அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை" என்று ஐயத்திற்கு இடமின்றி அழுத்தமாக இயம்புகிறார். ஏன்? வாழ்க்கையின் பேறுகளை வேறு வேறு நெறிகளில் பெற முயல்வார் வெற்றி பெறுதல் அரிது.

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை"

(47)

என்று இல்லறத்தைப் பாராட்டுகின்றார். எனவே மனையறத்தைச் சிற்றின்பம் என்று பறிப்பதும், அது இறவாத இன்ப அன்பினைப் பெறுதற்குத் தடை என்பதும் *wஉண்மையறியாதார் கூற்று.

மனையற வாழ்க்கையில் நின்று வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்று வள்ளுவம் உறுதி கூறுகிறது. உயிர், படிப்படியாக அன்பில் வளர மனையறம் துணை செய்கிறது. உயிர்கள் துய்த்தலினால் துன்புறுவதுமில்லை; கேடுறுவதுமில்லை; இன்பத்திற்குத் தடையுமில்லை; வீடு பேற்றுக்குத் தடையுமில்லை. ஆனால் துய்த்தலில் ஏற்படும் உள்ளத்தின் விருப்பு - வெறுப்பு உணர்ச்சிகள் துன்பத்தைத் தருகின்றன. தூய்மையான துய்த்தல் நெறி, அளவிலாத இன்பத்தைத் தரும். பொருந்தா உணவைப் பெருந்தீனியாகத் தின்பது துய்த்தலன்று. பொருந்திய சுவைமிக்க உணவைச் சுவைத்து உண்பதே துய்த்தல். இங்கனம் உணவைச் சுவைத்துத் துய்ப்பதால் உடல்நலம் பெருகும்; உயிர் நலம் பெறும்; உணர்வும் சிறக்கும். உண்ணாது பட்டினி கிடப்பது சமயம் வகுத்த நோன்பன்று. 'உண்க', வாழ்வதற்காக 'உண்க', வகையறிந்து உண்க, அற்றது அறிந்து உண்க-இதுவே சமயம் காட்டும் துய்த்தல் நெறி.

காதல் வாழ்க்கைத் துய்ப்புக்கும் இந்நெறியே பொருந்தும். பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு போற்றிய நலத்தை வாழ்க்கையில் வளர்த்துத் தம்முள் மாறி அன்பு செய்து, தற்சார்பைத் தன்னலத்தைத் தீரத்துறந்து, இன்புறுத்தும் இல்லற நெறியை ஏற்று ஒழுகின் அஃது இறைநெறியாம். வாழ்வாங்கு வாழ்தலே இல்லற வாழ்க்கை யென்று வள்ளுவம் வரையறை செய்கிறது. இத்திருக்குறளுக்கு உரைவிளக்கம் செய்வார் போல உய்யவந்த தேவநாயனார்,

"பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரிசு உந்தீபற
முளையாது மாயையென்று உந்தீபற"

(திருவந்தியார் 33)

என்று கூறுவார்.

திருவள்ளுவர் துறவறத்தையும் கூறுகிறார். திருவள்ளுவர் காட்டும் துறவறம் பெண்ணை வெறுத்த துறவறமா? மனையறத்தை வெறுத்த துறவறமா? என்று அறியப் போதுமான அகச்சான்றுகள் வெளிப்படையாக இல்லை. பல ஆண்டுகள் இல்லறம் இயற்றிய பிறகு, உயிர் நலம் கருதியும் பொதுநலம் கருதியும் மனையறத்தைத் துறந்து தவ வாழ்க்கை இயற்றுதலைத் துறவறம் என்று தொல் காப்பியம் கூறுகிறது.

"காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்தவன் பயனே" -

(தொல் பொருள் கற்பியல் 51)

என்பது தொல்காப்பியம். இத்தகைய வாழ்க்கையைத் தான் வள்ளுவம், துறவறத்தில் எடுத்துக்கூறுகிறது என்று கருத இட மிருக்கிறது. துறவறவியலில் சுறப்பெற்றுள்ள அதிகாரங்களை நோக்கி ஒரோவழி இல்வாழ்க்கையின் சூழ்நிலைகளால் தோன்றும் தவறுகளையும் முற்றாகத் தவிர்த்து வாழ்தல் என்பது பெறப்படுகிறது. இல்வாழ்க்கையிலும் கூட வெகுளா திருத்தலும், வாய்மை போற்றுதலும் வேண்டற்பாலனவாம். ஆயினும் அறியாதாரை அறநெறியிற் செலுத்தவும் தற்காப் புக்கும் ஒரோவழி மேற்கூறிய தவறுகள் செய்யவேண்டிய கட்டாயங்கள் தோன்றலாம்; செய்யவும் நேரிட்டுவிடலாம். அங்ஙணம் செய்தாலும் இல்லறநெறியில் அவை தவிர்க்க முடியாத தவறுகள் என ஏற்றுக் கொள்ளப்பெற்றுச் சான்றோரால் ஒப்புறுதி அளிக்கப்பெறும். ஆனால் துறவறத் தில் அத்தகைய தவறுதலை எக்காரணத்தை முன்னிட்டும் மறந்தும் செய்யக்கூடாது என்பது துறவறவியலின் முடிவு. இல்லற வாழ்க்கையில் பொருள் செய்யும் முயற்சி தேவை. அதற்குரிய அவா தேவை. ஆனால் துறவற வாழ்க்கையில் அது கூடாது. துறவற வாழ்க்கையில் மற்றவர் வழங்கும் துய்ப்புக்களைக் கொண்டு வாழ்ந்து, மனவமைதி பெறுதல் வேண்டும். உடைமைகளைச் சேர்த்தல் கூடாது; பாதுகாக்கவும் கூடாது. வள்ளுவம் துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு உடைமையும் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. அப்படியொரு உடைமை இருக்குமாயின் மயக்கத்தைத் தரும் என்று தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது.

"இயல்பாகும் நோன்பிற்கு) ஒன்(று) இன்மை;
உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து"

(344)

என்று திருக்குறள் கூறும். ஆனால் அதுபோலப் பெண்ணைத் துறத்தல் வேண்டும் என்று யாண்டும் கூறவில்லை. பண்டைத் தவமுனிவர் வாழ்க்கையிலும் பெண்ணைத் துறந்ததாக வரலாறில்லை. ஆனால் பின்னே தோன்றிய துறவு நெறிகள் - வள்ளுவத்திற்கு மாறான துறவு நெறிகள் நடைமுறைக்கு வந்தன. ஆசைகளை மூவகைப்படுத்துவர். மண், பொன், பெண் என்று. இம்மூன்றில் வள்ளுவம் துறக்கச் சொன்னது முன் இரண்டையும், காரணம் அவையிரண்டும் அன்பினை வளர்க்காது; வழிபாட்டு நெறியில் வழி நடத்தாது; இவறிக்கூட்டும் இயல்பினை வளர்த்து மனிதனின் தூய அன்புணர்வைக் கெடுக்கும். கேடு செய்வதில் இவையிரண்டுக்கும் ஈடு எதுவுமில்லை. இவ்வுலகத்தில் சிறைக்கூடங்களைப் பெருக்கிவளர்த்தவை இவ்விரண்டும்தானே! பெண், மண்ணும் பொன்னும் செய்யும் தீமையைச் செய்ய மாட்டாள். இரக்க உணர்ச்சியைத் தூண்டிவளர்க்கும் ஆற்றல் பெண்ணுக்கு உண்டு. ஆனால் தமிழகத்துத் துறவு வாழ்க்கையில் மண்ணையும் பொன்னையும் துறக்காமல் பெண்ணை மட்டுமே துறக்கும் நெறி மேற்கொண்டதால் துறவிலும் முழுமையான வெற்றி பெறவில்லை. உடைமைகளின் பெருக்கத்தால் ஒழுக்க நெறியிலும் காலூன்ற இயலவில்லை. அதன் விளைவாகத் துறவிகள் வாழும் மடங்களும் பூட்டுக்கள் உடையனவாக, தணிக்கைகளுக் குரியனவாக, வழக்குகளுக்கு உரியனவாக வளர்ந்துள்ள அவலநிலையை நினைந்து வருந்த வேண்டும். ஒரு சாதிக்குச் சமயத் தலைவராக விளங்குபவர் - ‘சகத்குரு’வாகி விடுகிறார். கிறித்துவத் துறவுநெறி சற்றுப் பரவாயில்லை. ஏன், அங்கு நாடுகளை - இனங்களை - சாதிகளைக் கடந்த துறவிகள் பல்லாயிரவர் கூடிக் கூட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களில் யாருக்கும் சொந்தத்தில் உடைமையில்லை. நீதியியலில் தனி ஒரு துறவிக்கு உரிமை இல்லை. அவர்களுக்கு ஓரூரும் கிடையாது; ஓர் இடமும் கிடையாது. அத்தகையதொரு துறவுநெறி போற்றுதலுக்குரியது; தவறுகள் நிகழாமல் தற்காப்பதற்குரிய வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆயினும் அதுவே ஏற்புடையதாக, சிறப்புடையதாக அமையவில்லை; குறைகளும் குற்றங்களும் மலிந்து விட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் செருமனியில் தோன்றிய மார்ட்டின் லூதர் மனையறவாழ்க்கை மேற்கொண்ட புதிய கிறித்துவ சமயத்தைத் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார். இன்றைய தமிழகத்தில்கூடத் தென்னிந்தியத் திருச்சபை வழி அவர்கள் செய்யும் தொண்டு பாராட்டுதலுக்குரியது. அதுபோல இந்த நாட்டில் சமய நம்பிக்கையுடைய படித்த இளைஞர்கள் மாற்றம் காண முயலவேண்டும். ஆதலால் வள்ளுவம் காட்டும் சமயநெறியில் துறவு வாழ்க்கை, உள்ளத்தை மாசுபடுத்தும் தன் நலத்தைத் துறந்து, பொது நலத்தை நாடித் தவம் செய்தலாகும். தவம் என்பது உடலால் உயிரால் உணர்வால் செய்யக் கூடியது. உடலில் அகநிலை, புறநிலை உறுப்புகள் தத்தம் நிலையில் நிற்காமல் துய்க்கும் வேட்கை தணிந்து மற்றவர்களை இன்புறுத்தவேண்டும் என்ற பெருநெறியில் செல்லுதலே துறவறம். இதுவரையில் தன்னலம் கருதியும் சுற்றத்தார் நலம் கருதியும் நாட்டின் நலம் கருதியும், மேற்கொண்ட ஒழுக்கங்களை நிறைவு செய்து கொண்டு, அதனினும் விஞ்சிய மெய்யுணர்வு நாட்டத்தில் தவம் மேற்கொள்ளுதலை வள்ளுவம் வாயாரப் போற்றுகிறது.

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு"

81

இதுவே திருவள்ளுவர் கண்ட சமய வாழ்க்கையின் துறவறம்.

சமயநெறி, முன்னர்க் குறிப்பிட்டதைப் போல அகநிலையைச் செழுமைப்படுத்துகிறது; புலன்களுக்குச்சீலம் சேர்க்கிறது; அவ்வழி, அது பொறிகளையும் தூய்மை செய்கிறது ஆதலால் சமயம் சார்ந்து வாழும் சமுதாயம் அன்பினால் தழைத்து வளரும்; இன்பம் துய்க்கும்; ஆங்கு மறந்தும் ஒழுக்கக் கேடுகள் தலைகாட்டா; கனவும் காவலும் இல்லை; உடையாரும் இல்லாரும் இல்லை; சிறைச்சாலைகள் இல்லை. எங்கும் அறச்சாலைகளே உண்டு; மனித குலத்தை வேறுபடுத்துகிற வேறுபாடு இல்லை; பகையும் இல்லை; போரும் இல்லை. இங்ஙனம் வாழும் சமுதாயமே சமயம் சார்ந்த சமுதாயம்.

வாழ்க்கையில் இயல்பாக மலர்ந்த சமயம், காலப் போக்கில் அறிவாராய்ச்சியில் தலைப்பட்டு மெய்ஞ்ஞானத்தை வளர்க்கும் விஞ்ஞானமாக வளர்ந்தது. சமயத் தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியன அறிவியல் உணர்வோடு அணுகப்பெற்றன. அறிவியல் பாங்கில் அடித்தளமும் அமைக்கப் பெற்றது. உலகு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞாயிறு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உலக இயக்கத்தில் அடிப்படை உறுப்புகளாக அமைந்துள்ளன எவை? எவை? உலக இயக்கத்தால் அந்த உறுப்புகள் அடையும் பயன் என்ன? என்று ஆராய்ந்தறிதல் சமயத்தின் இயல்பாக அமைந்தது. உலகில் படைக்கப் பெறாமல், என்றும் உளவாகத் தாமே இயல்பியல் அமைந்த பொருள்கள் மூன்று. அவற்றுள் பொருள்கள் இரண்டு; பொருளின் தன்மை ஒன்று. இம்மூன்றும் யாவை? ஒன்று கடவுள்; மற்றொன்று உயிர்; பிறிதொன்று உயிரைப் பிணைத்துள்ள அறியாமை. இவை மூன்றும் படைக்கப் பட்டனவுமல்ல; தோன்றியனவுமல்ல; அழியக் கூடியனவு மல்ல.

"பதிபசு, பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல்பசு பாசம் அனாதி”

(திருமந்திரம் 1 : 159)

இது தமிழினத்தின் மெய்யறிவுக் கொள்கை.

இம்மூன்று பொருள்களும் என்றும் உன் பொருள்கள் என்பது வள்ளுவர் கொள்கை. கடவுள் பிறப்பிறப்பில்லாதவன் என்பதனை உணர்த்த அவன் பிறவிக்கடல் நீந்துவதற்குத் துணையானவன் என்று வள்ளுவர் விளக்குகிறார். மேலும் தனக்கு உவமை இல்லாதான்', 'எண்குணத்தான்', 'பொருள் சேர் புகழுடையான்' என்றெல்லாம் கூறுவதால் கடவுள் என்றும் உள்ள பொருள். அவனுடைய தனக்குவமையில்லாத் தகுதியும், குணமும், புகழும் இயல்பாய் அமைந்தவை. இவை மட்டுமன்றித் தன்னைச் சார்ந்தாரின் மனக் கவலையையும் மாற்றுவான்.

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது".

(7) திருவள்ளுவர் கண்ட கடவுளுக்கும் உருவமில்லை. 'யான்', 'எனது' என்னும் செருக்கற்ற உயிர்களைத் தாங்கும் தகுதிமிக்க திருவடியைத் தாள்கள் என்கிறார். இது வள்ளுவர் காட்டும் கடவுளியல்.

உயிர்

உயிர்! அருமையான தமிழ்ச்சொல். உய்தற்குரியது உயிர். உய்யும் தகுதியுடையது உயிர். உயிர்கள் கடவுளாலோ, மற்றும் யாராலோ படைக்கப்பட்டன அல்ல. கடவுளைப் போலவே உயிர்களும் என்றும் உள்ளவை.

"என்று நீ அன்று நான்”

என்பர் தாயுமானார். உயிர்கள் தோற்றமும் அழிவுமில் லாதன. கடவுள் ஒன்று; உயிர்கள் பலப் பல. உயிர்கள் என்றும் உள்ளன என்பதே திருக்குறளின் கொள்கை.

"மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது”

(68)

"தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"

(190)

"மன்னுயிர் ஓம்பி"

(244)

"மன்னுயிர் எல்லாம் தொழும்"

(268)

"மன்னுயிர்க்கு இன்னா செயல்”

(318)

என்ற குறட்பாக்களில் திருவள்ளுவர் உயிர்களை மன்னுயிர்' என்றே குறித்தல் காண்க. மன்னுதல் என்பதற்கு நிலைபெறுதல் என்று பொருள்.

"புரத்தல், துஞ்சல், அற்கல், மன்னல்
நிலைத்தல் ஐந்தும் நிலைபே றாகும்".

(சேந்தன் திவாகரம்: செயல் தொகுதி: 5)

என்பது சேந்தன் திவாகரம். ஆதலால் உயிர்கள் என்றும் உள்ளன என்பதே திருக்குறளின் கொள்கை. உயிர், அறிவுப் பொருள்; உயிர் அறிவு பெறுதற்குரியது. ஆயினும் அது இயல்பில் அறியாமையைத் தழுவிக் கிடக்கிறது. உயிர், தான் தழுவிக் கிடக்கும் அறியாமை யினின்றும் விலகி அறிவினைப்பெறும் முயற்சியே வாழ்க்கை . உயிர்க்கு அறியாமை இயல்பு என்பதை,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”

(358)

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணியது உடைத்து"

(353



"அறிதோறு அறியாமை கண்டற்றால்”

(110)



ஆகிய குறள்வழி அறிய முடிகிறது. உயிரைப் பிணித்துள்ள இந்த அறியாமையை விளக்குவதற்குத்தான் கல்வி, கேள்வி, அறிவுடைமை மெய்யுணர்தல் போன்ற பல்வேறு அரிய முயற்சிகளையும், பிற வாழ்க்கை முயற்சிகளையும் அமைத்துக்காட்டுகிறது திருக்குறள். உயிர் அறியாமை உடையது; கடவுள், அறிவே திருவுருவானவன்; அறியாமை யுடைய உயிர், அறிவே திருவுருவான கடவுளின் துணையை நாடி, அறிவினைப்பெற்று வளர்தற்குத் துணை செய்தலே வழிபாடு. அதுவே வாழ்க்கையின் பயன், கடவுள் வாழ்த்தில் திருவள்ளுவர் இறைவனை 'வாலறிவன்' அதாவது 'தூய்மையான அறிவினன்' என்று பாராட்டுகின்றார். வாலறிவன்வழி நின்று அறிவைப் பெறுதலே வழிபாடு; வழிபாட்டின் பயன், உயிர் முற்றாக அறியாமையினின்றும் விடுதலை பெற்று, அறிவு நிலையை அடைதலே இறுதி நிலை. அந்நிலையிலேயே அவா அற்றுப்போகும். அந்நிலையே இன்ப நிலை; அந்நிலையே அன்பு நிலை. அதுவே ஞான நிலை. அதுவே வள்ளுவம் காட்டும் சமய வாழ்க்கையில்.

<poem>"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”

(370)

வினைகள்

உயிர்கள் தொழிற்படும் திறத்தன. உயிர்கள் தொழிற்படுதல் இயற்கை. உலக இயக்கமே தொழிற்படுதலில்தான் அமைந்து கிடக்கிறது. உயிர், உயிர்ப்போடு உள்ளமைக்கு அதன் தொழிற்பாடே அடையாளம். உயிர் தொழிற்படாது சோம்பிக்கிடத்தல், பிறப்பின் நோக்கத்திற்கு முரண்; உலக இயக்கத்திற்கு மாறுபட்டது; இயற்கைக்கு இசைவில்லாதது. இம்மையில் துன்பத்தைத் தந்து மறுமை இன்பத்தையும் இழக்கச் செய்வது சோம்பிக்கிடத்தல். ஆதலால், ஓயாது தொழிற்படுதல் உயிர் செய்தற்குரிய தவமாகும். தொழிற் படுதலை வினைசெய்தல் என்று தமிழ்மரபு கூறும். வினை செய்தல் நன்மையும் தரும்; தீமையும் தரும். நன்மையும் தீமையும் செய்யும் வினைகளிலா? வினை செய்யும் நோக்கங்களிலா? வினை செய்தலின் பயனை, அது நன்றாயினும் தீதாயினும் அவரவர்களே அடைந்து அனுபவித்தல் வேண்டும் என்பது வள்ளுவத்தின் கோட்பாடு. இந்த நியதி இருந்தால்தான், தீவினைசெய்ய அஞ்சுவர்; நல்வினையில் நாட்டம் செலுத்துவர்.

"எனைப்பகை யுற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்” (207)

என்ற திருக்குறள் கருத்தினை உணர்க. அவரவர் செய்த வினைப் பயன் அவரவர்களை வந்தடைதல் தவிர்க்க முடியாதது என்பதை,

"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று" (206)

என்ற குறள் வழி உணர்தல் நன்று. வினைகள் பயனைத் தருமா? வினைகளியற்றும் நோக்கங்கள் பயனாகப் பரிணமிக்குமா? வினைகளுக்குப் பயனில்லை. வினைகளை இயற்றும் நோக்கம், வினைகளைச் செய்யும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் இவைகளுக்குத்தான் பயன், செயலால் நல்வினை போலத் தோன்றும். கட்புலனுக்கு நல்லன போலத் தோன்றுவன - பூசை செய்தல், கொடை, ஈதல் முதலியன; ஆனால் பூசை செய்யும் ஒருவன் இன்ப அன்பு நிலையைத் தவிரப் பிறிதொன்றைப் பெற விரும்பிச் செய்வானானால் அவன் எல்லையற்ற இன்பநிலை யடையமாட்டான். அவன் எதை நினைத்துச் செய்தானோ அதுதான் பயனுக்கு வரும். மீண்டும் அது அவன் நினைப்பிற் கேற்ற நல்வினையாகவோ தீவினையாகவோ பயனுக்குவரும்; நல்வினை வழிப்பட்ட பயனைஇன்பத்தைத் துய்க்கும்பொழுது ஏற்படும் உணர்வு மாறுபாடுகள், தீவினையாகவும் உருமாற்றம் பெறலாம். நோயின் கொடுத்துன்பத்தால் ஒருவன் துன்புறுகிறான். அதனைக் கண்ணுறும் மருத்துவர், அறுவை முதலியன செய்யும்போது நோயாளி இறந்து விடலாம். காட்சியளவில் இது கொலை போலத் தோன்றும். ஆனால் நோக்கம் மருத்துவம்; ஆதலால் கொலையாகாது; இது தீவினையாகாது. ஆனாலும் தக்க ஊதியம் பெறவில்லையென்ற காரணத்தாலோ பணியின் சோர்வினாலோ அறுவை மருத்துவத்தைக் கவனமாகச் செய்யாது இறப்பு நேரிடுமானால் அது தீவினை யாகும். அவ்வழிப்பட்ட துன்பத்தைத் துய்த்தேயாகவேண்டும். இஃதொரு நியதி. புவி ஈர்ப்பு ஆற்றலைப் போல இஃதொரு இயற்கை நியதி, கோள்களின் இயக்கம், எங்ஙனம் நியதிப்படி நடக்கிறதோ அதுபோல வினைகளை வினைகளின் பயனை வினைகளைச் செய்தார் துறத்தல் வேண்டும் என்ற நியதி செயற்படுகிறது. இந்த முறைபிறழாத செயற்பாட்டுக்குக் காரணம், உயிர்செய்யும் வினைகளுக்குரிய உணர்வுகளில் அழுத்தங்கள் அல்லது பதிவுகள் உயிருக்குள் அடங்கிக்கிடப்பதேயாகும். அவை உரிய காலத்தில் ஊழ்த்து வெளிப்பட்டுச் செயற்பாட்டுக்கு வருகின்றன. - அந்த நிலையில், துய்ப்புக்கு - பயனுக்கு உரிய வினையை “ஊழ்”, என்று குறிப்பர். ஊழின் பயனைத் துய்த்துக் கழிக்காமல் அதாவது ஊழிற்குக் காரணமாக அமைந்த உயிரில் பதித்த உணர்வுத் தடத்தை அழித்து எழுதாமல் வேறு ஒரு வகையாக வாழ்தல் அரிது; இயலாது. அதனால் ஊழின் வலிமையைப் பெரிது என்பர். அதன் பொருள் ஊழின் பயனைத் தட்டிக் கழிக்க முடியாது என்பதேயாம். ஆனால் ஊழின் நடத்தை அழித்து எழுத முடியாது என்பது பொருளன்று, முன்னர்ச் செய்த வினைகளின் வழியாக அமைந்த தீயூழ், நல்லூழ் இவைகளிலும் விஞ்சிய நல்வினைகளை நன்னோக்கத்துடன் அயர்விலாது செய்தால் ஊழின் தடத்தையும் அழித்தெழுதலாம். அனுபவத்திற்கு வந்த ஊழின் விளைவு களையும் எளிமையாகத் துய்த்து நீக்கமுடியும். ஆதலால் சம்யத்துறையில் ஊழைப் பயன்படுத்தி முன்னேற்றத்திற்குரிய தடை உணர்வை உருவாக்குதல் நெறியும் அன்று; முறையும் அன்று.

வினைகளின் பயன் மீண்டும் சுழற்சியாக வாராமல் தடுத்து நிறுத்தி உயிரை இனிய அன்பில் நிறுத்துவதற்குரிய ஒரே வழி வினைகள் செய்யாதிருத்தலன்று. வினைகளைச் செய்யாதிருத்தலும் ஒரு வினையாகும். ஓயாது வினைகள் இயற்றி உயிர்ப்பாக வாழ்தலே வாழ்க்கை. சமய வாழ்க்கையில், இறைநெறியில் நின்று மனித உலகத்தை நேசித்துத் தூய்மையான நோக்கத்துடன், “இறைவனின் கருவியாகத் தொழிற்படுகிறோம்” - என்ற உணர்வுடன் வினைகளைச் செய்தும் அவைகளின் பயனை இறை வனுக்கும் மக்களுக்கும் என்று அர்ப்பணித்தால் அவ்வினை கள் அருள்சேர் வினைகளாகும். இத்தகு வினைகளுக்கு உயிரைக் கறைப்படுத்தும் குணம் இல்லை. ஆதலால் வாழும் ஊழும் வாராது. இதுதான் வள்ளுவத்தின் ஊழியற்கொள்கை.

ஊழின் வலிமையை வள்ளுவம் வலியுறுத்துகிறது; "ஊழிற் பெருவலி யாவுள!” என்று வினவுகிறது. ஊழிற்குத் திருக்குறள், எந்தக் குறளிலும் வெற்றியைச் சேர்க்கவில்லை. ஆனால் ஆள்வினையுடைமை அதிகாரத்தில் ஊழை எதிர்த்து மானுடம் வெற்றி பெற முடியும் என்பதனை,

"மெய்வருத்தக் கூலி தரும்" (615
"ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்" (620)

என்று கூறுதல் அறிக. ஊழ் அனுபவத்திற்கு வருவதற்கும் உயிர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் தொடர் பில்லை. ஊழிற்குக் காரணமான பழைய பழக்கம் அதாவது உழுதகால் வழி உழுதல் போன்ற பழக்க வாசனை காட்டும். கற்றல், கேட்டல், சிந்தித்தல், முதலிய முயற்சிகள் மூலமும், புத்தறிவைப் பெற்றுப் புதிய பழக்கங்களை ஏற்றுக் கொள்வதன் மூலமும், பழைய பழக்கத்தை மாற்ற முடியும். ஊழுக்குக் காரணமான பழைய உணர்வு ஊழ்த்து வெளிப்படுகிறது. உயிர் பெற்றுள்ள பொறி புலன்கள் தன்னியல்பில் சிந்தித்தும், அதைவிடச் சிறப்பாகப் புறத்தே இருந்து புதிய கொள்முதல் செய்தும் ஊழ்த்துவரும் ஊழின் ஆற்றலை அடக்கியும் வெற்றிகாணமுடியும். இதற்குத் தேவை புதியன நாடும் ஆர்வம், தற்சலுகையின்மை, தன்னயப் பின்மை ஆகியனவாம். இந்த உணர்வுகள் மேலோங்கினால் ஊழ் அதற்குள் அடங்கும்; செயற்பாட்டைக்கூட இழந்துவிடும். ஆனால் அது எளிதான காரியமன்று. அதற்கு விலை கொடுக்க வேண்டும். எளிதில் செரிக்காத உணவைச் சுவையூற்றத்தின் காரணமாக உண்டுவிட்டால் கொஞ்சம் வயிற்று வலியைத் தாங்கித்தான் ஆகவேண்டும். ஒரு வேளைக்கு உணவை மறந்து வாயைக் கட்டிப்போடத்தான் வேண்டும். இது நடைமுறைப் பழக்கம்தான். நேற்றைய பழக்கத்தின் வழித் தவறுகளை இன்றைக்குத் திருத்தமுறச் செய்ய வேண்டுமானால், கடுமையான விலை கொடுத்தேயாக வேண்டும். ஊழை மாற்றும் ஆற்றல் நேரிய உழைப்புக்கே உண்டு. அதனால் "மெய் வருத்தக் கூலி தரும்" என்றார். இந்த இயற்கை நியதி உணர்வுகளுக்கும் அவ்வழிப்பட்ட ஒழுக்கங்களுக்கும்தான் பொருந்தும், சாதிக்கும், கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழிற்கும் யாதொரு தொடர்புமில்லை. ஊழின் காரணமாக இன்ன சாதியில் பிறந்தான் என்று கூறுதல் பிழையான கருத்து, அவன் ஒழுகும் ஒழுக்கத்தின்வழி வேண்டுமானால் கீழ் மேலாகும்; மேல், கீழாகும். இத்தனையாண்டுகள் வாழ்தல் என்பது ஊழின்பாற்பட்டதன்று. அஃது உடல்நலம் பேணிய பாங்கையும் பொறுத்தது. ஊழின் காரணமாகப் பணக்காரன் ஆனான் என்பது நெறிமுறை பிறழ்ந்த கொள்கை. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு மனிதரின் ஏற்பாடே என்பது வெளிப்படை. இந்தத் தீவினையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். பரம்பரைச் சொத்து உரிமைக்குத் தடை ஏற்பட்டுச் சுரண்டி வாழ்கிற சமுதாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் செல்வம் பெறுதற்குரிய ஆகூழ் இன்று ஏழைகளாக இருப்பவர்களுக்கே இருக்கும். இன்றைய செல்வந்தர்களில் பலர் வறுமைக்கு ஆட்படுவர். ஏற்றதாழ்வு உலகியல் நடைமுறையின் பிறழ்வு. . செல்வத்தைப் படைப்பதற்குரிய அறிவறிந்த ஆள்வினை பெற்றிருக்கின்றனரா? இல்லையா? என்பதுதான் ஊழ் பற்றிய ஆய்வு, ஆதலால் ஊழியல் தத்துவத்தை உலகியல் முறைப்பிறழ்வுகளுக்கு நியாயப்படுத்தக் கூடாது.

பிறப்பின் தத்துவம்

உயிர்கள், பல்வேறு பிறப்புக்கள் உடையன என்பது வழிவழி வரும் ஒரு கொள்கை. உயிரைப்பற்றிய விளக்கத்தில் உயிருக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை என்று பார்த்தோம். அப்படியானால் பிறப்பு என்பது உயிர் தன்னுடைய நிகழ்கால நோக்காகிய இன்ப அமைதியைப் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட உடுத்திக் கொள்ளும் ஒன்றே உடல், உடம்பு என்ற சொல்லில் முதல்நிலை 'உடு' என்பது. உயிர் இந்த உடம்பினைப் பொருத்திக் கொள்ளும், உடுத்தி கொள்ளும் நிகழ்வுதான் பிறப்பு. தன்னுடைய நோக்கத்திற்காக உயிர் எடுத்துக்கொண்ட உடம்பு, பல்வேறு காரணங்களால் பயன்படாதொழியும்போது அதை நீக்கு தலை இறப்பென்றும் புதிய உடம்பைப் பெறுதலைப் பிறப் பென்றும் அறிக. பொறிகள் உடம்பினைச் சார்ந்தவை; புலன்கள் உயிரினைச் சார்ந்தவை. செயற்படும் கருவிகள் உடலினைச் சார்ந்தவை; இக்கருவிகளை இயக்கிச் செய்விக்கும் அறிவுக் கருவிகள் உயிரைச் சார்ந்தவை. உயிரினைச் சார்ந்த புலன்களும் அறிவுக் கருவிகளும் என்றும் உடலுறுப்புகளாகும்; பிரிக்க முடியாதனவாகும்; அதுவே நுண்ணுடம்பு. திருக்குறள் எழுவகைப் பிறப்பு என்று எடுத்தோதுகிறது.

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ::ஏமாப்பு உடைத்து" (396)
"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்" (62)
"எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு" (107)

ஆகிய குறள்கள் நினைவுக்குரியன. 'ஏழு பிறப்பு' என்பது வழி வழி வழக்கத்தில் கூறப்பெறும் ஒரு தத்துவம். ஓர் உயிர், தன் குறைகளினின்று நீங்கி நிறைபெற்று வளர்ந்து இன்ப அன்பினில் நிலைபெற ஏழு தடவை பொதுவாக முயற்சி செய்கிறது என்பது பொதுவிதி; நியதி. ஒன்றிரண்டு கூடுதலும் ஒன்றிரண்டு குறைதலும் நிகழக்கூடும். உயிரின் படிமுறை வளர்ச்சியில் ஆறுவகைப் பிறப்புகளைப் பொதுவாகத் தொல்காப்பியம் கூறும். அவையாவன:

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூத்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

(தொல். மரபு 27)

படிமுறை வளர்ச்சியில் உயிர் ஓரறிவில் தொடங்கி ஆறறிவுவரை வளர்ந்து அதனைக் கடந்த பெருநிலை எய்துதல் ஏழாவது நிலை. இந்தப் படிமுறைகளை நினைவிற்கொண்டு 'ஏழுபிறப்பு' என்றார்களா? வள்ளுவம் 'எழு' என்றே குறிப்பிடுகிறது. ஆதலால் புதிதாகத் தோன்றி வரும் பிறப்பு என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், எழு பிறப்பு என்றால் இனிவரும் பிறப்பு என்பது தெளிவாகப் புலப்படுகிறது. திருவள்ளுவர் தெளிவாகவே உயிர், உடலை நீக்கிப் புது உடலைப் பெறும் என்று கூறுகிறார்.

"குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போடு
உயிரிடை நட்பு”. (338)

குடம்பை என்ற சொல்லுக்கு முட்டை என்றும் கூடு என்றும் இரு வேறு பொருள் கொள்கின்றனர். இப்பொருள் வேறுபாடு அடிப்படைக் கொள்கைக்கு ஒன்றும் பெரிய வேற்றுமை தந்துவிடவில்லை. உடம்பை விட்டு உயிர் பிரிகிறது; பிறிதொரு உடம்பைச் சார்கிற தென்பதுதானே பொருள்! அதுமட்டுமன்று. ஒருடம்பில் நின்று தொழிற்பட்ட உயிர் அந்த உடம்பு எய்த்துக் களைத்துப் போனதால் இறப்பைக் களைப்பு நீக்கத்துக் குரிய உறக்கம் போலவும், உலகியல் அனுபவத்திற்குரிய பிறப்பை உறங்கி எழுவது போலவும் என்று விளக்க,

"உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு" (339)

என்கிறார். உயிர்க்கு இறப்பு என்பது களைப்பாறும் பணியே தவிர அதுவே முடிவன்று. களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி யோடு எழுந்து நடமாடுதலே புதிய பிறப்பு. பல்வேறு பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடைந்து வருவதை, உயிரியலில் காண்கின்றோம். சிலரிடத்தில் இயல்புக்கு மாறான நுண்ணறிவு தொழிற்படுகிறது. சிலரிடத்தில் இயல்பாகவே சான்றாண்மை குடிகொண்டிருக்கிறது. இவையிரண்டும் உயிரின் இயல்பானவையல்ல. அவை எடுத்த பிறப்புக்களில் எல்லாம் ஈட்டியவையே! எடுத்த அந்த ஒரு பிறப்பிலேயே ஈட்டப் பெற்றவையல்ல என்பதும் நமக்குத் தெரிகிறது. பல்கலைக் கழகங்களின் வாயிற்படிக்கே போகாதவர்கள் கூட சீரிய சிந்தனைத்திறனுடனும் செயல் திறனுடனும் விளங்குவதன் அருமைப்பாடு என்னே! முன்பே அவர்கள் கற்றுத் தேடிவைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை . பலகாலம் சிந்தித்துப் பழகியிருப்பதால் சிந்தனைப் புலன் எளிதில் தொழிற்படுகிறது என்பதுதானே அறிவியல் உண்மை. ஆதலால் திருக்குறள், பலபிறப்பு உண்மையை நம்புகிறது. அதனை மறுத்துரைக்கக்கூடிய மார்க்சியம் தோன்றியுள்ளது. மார்க்சியம் பொருளியல் விஞ்ஞானநூல். ஆயினும் உயிரியல் பற்றிய அறிவியல் உலகம் இன்னமும் தெளிவாக உயிரின் பல பிறப்பு உண்மையை மறுக்கவில்லை. வள்ளுவத்தின் கொள்கை உயிர்கள் பல பிறப்புடையன; அவை பல்வேறு பிறப்புகளில் படிமுறையில் வளர்ந்து வருகின்றன என்பதேயாம்.

கடவுள் உண்மை

இன்றைய உலகியலில் அடுத்துப் பெரிய விவாதத்திற் குரியது கடவுளேயாம். “கடவுள் இல்லை; இல்லை! இல்லவே இல்லை" என்று கூறி இந்த நூற்றாண்டின் வரலாற்றைத் தலைவர் பெரியார் எழுத முயன்றார். தலைவர் பெரியாரின் பல்வேறு கொள்கைகள் வெற்றி பெற்றிருந்தாலும் கடவுள் மறுப்புக் கொள்கை எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது ஆய்வுக்குரியது. திருக்கோயில் எண்ணிக்கைப் பெருக்கமும் உண்டியல் பெருக்கமும் இதற்கு எதிரிடையான விடையே தருகின்றன. 'மூலதன'த்தின் முதல் ஆசிரியராகிய மாமுனிவர் கார்ல் மார்க்ஸ் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர். பொதுவுடைமைத் தத்துவம் கடவுள் மறுப் பிலிருந்து பிரிக்க முடியாதது. கடவுள் மறுப்புத்தன்மையுடைய இந்தப் பொதுவுடைமைத் தத்துவம் உலகில் ஐந்தில் ஒரு பகுதி மக்களைக் கவர்ந்திருக்கிறது; ஆட்சியில் அமர்ந் துள்ளது. இந்திய நாட்டிலும் கூட மத ஆசாரங்களுக்கும் மந்திரங்களுக்கும் பெயர் போன கேரளத்தை இக்கொள்கை பெரிதும் கவர்ந்திருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் சமய உலகத்திற்குப் புத்தொளி காட்டிய இராமகிருட்டிணர் விவேகானந்தர் முதலியோர் தோன்றி விளங்கிய மேற்கு வங்கத்திலும் இக்கொள்கை பெருவாரியாக வளர்ந்துள்ளது. அக்கொள் கையை ஏற்பளித்து வாக்களித்துள்ளனர். இவையெல்லாம் கடவுள் உண்டு என்பார் நினைவிற்கொள்ள வேண்டிய வரலாற்றுச் செய்திகள். மக்கள் மன்றத்தில் நிகழும் வரலாற்று நிகழ்வுகள், தத்துவங்கள், கொள்கைகள் தோன்றுதலுக்கும் மாறுதலுக்கும் அல்லது மறைதலுக்கும் அடிப்படையாக அமையும் என்பதை மறந்து விடுதல் கூடாது. இன்றைய நிகழ்வுகள், நேற்றைய வரலாற்றில் வாழ்ந்தவர்களின். தகுதிப்பாட்டினை இயம்புகின்றன. இன்றைய நிகழ்வுகள் எதிர்வரும் வரலாற்றுக்கு உந்துசக்திகள். எதிலிருந்தும் ஒதுங்கி வாழலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகள் அவற்றின் பின் நிகழ்வுகள் இவைகளிலிருந்து ஒதுங்கி வாழலாம்; தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அதைவிடப் புத்திசாலித்தனக் குறைவானது வேறொன்றுமில்லை. அது நிற்க, கடவுள் உண்டா? இல்லையா? தெளிவான அறிவு பூர்வமாக உறுதிப்படுத்தக் கூடிய விடையை யாரால் கூற முடியும்? உண்டு என்பார்களும் கண்டு காட்டவில்லை. நம்பிக்கை அடிப் படையிலேயே உண்டு என்கின்றனர். அல்லது, தர்க்கவியல் அடிப்படையில் விவாதித்துச் செல்லும்போது விவாதங்கள், படுக்கும் எல்லையில், அதைக் கடந்து நிற்பதாகக் கூறுகின்றனர். அது ஒருபுறம் இருக்க, இல்லையென்பவர்கள் தாம் எங்கே பார்த்து, எவ்வழிப் பார்த்து இல்லையென்று கூறுகின்றனர். உலகம் விரிந்தது; பரந்தது; பருமையுடையது; நுண்மையுடையது. ஓர் அணுவிற்குள் ஓராயிரம் கோள்கள் (நுண்அணுக்கள்) நெருங்கிக் கிடக்கின்றன என்று விஞ்ஞானம் கூறுகிறது. கண்ணுக்குப் புலனாகாத ஓரணுவில் ஆயிரக்கணக்கான அணுத்திரள்கள்; அவற்றிற்கு ஆற்றல் இருப்பதாக அணு அறிவியல் கூறுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சிந்தனை எல்லைக்கும், செவிப்புலன் எல்லைக்கும் பாடல்கள் வாயிலாக வந்த நிலவை எட்டிப் பிடிக்கவே இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடவுள் நம்பிக்கையுடையவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லும் இலக்கணத்தைப் பார்த்தால் அதனை ஆராய்ந்து அறிந்து 'உண்டு' அல்லது 'இல்லை'யென்று எளிதில் கூற இயலாது. "ஐயா, என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்” என்பது திருவாசகம். இந்த இலக்கணத்தின்படி வானியல், நிலத்தடியியல் உயிரியல் அனைத்தும் கடைபோக ஆராய்ந்து முடிவுகளைக் கண்ட பிறகுதான் இல்லையென்று கூறுவதை அவர்கள் உறுதிப்படுத்த முடியும். அதற்குரிய அறிவாற்றலை, தகுதியை இன்னும் மானிட சாதி பெறவில்லை. ஆதலால் இங்கொருவர் அங்கொருவர், தாம் அறியாததனாலோ வாழ்க்கையில் ஏற்பட்ட அதிருப்தியாலோ இல்லையென்று கூறியதை நம்பக்கூடாது. கடவுள் இல்லையென்று கூறுவோரில் பெரும்பான்மையோர் உலகியலில் பொருளியலில் உயிர் இயலில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் காட்டி இம்முரண்பாடுகளுக்குக் காரணமாக உள்ள பொருள், கடவுளாக, இருக்க முடியாது என்று கூறி மறுக்கின்றனர். இந்தக் கருத்து கடவுள் உயிர்களைப் படைத்தார் அல்லது தோற்றுவித்தார் என்ற கொள்கை யுடைய வளர்ச்சி பெறாத சமயங்களைச் சார்ந்த பிழையான கருத்தால் தோன்றியதாலும், திருவள்ளுவரின் சமயம் உயிர் ஒரு படைப்புப் பொருளன்று, உயிர் இயற்கையாகவே உள்பொருள் என்று கூறுவதால் இந்தக் கொள்கைத் தோற்றத்திற்குரிய களமே இல்லாமல் போகிறது. கார்ல் மார்க்ஸ் கடவுளை மறுப்பதற்குக் காரணம் கடவுள் நம்பிக்கையுடைய ஒரு சில சமயத்தினர் உயிரின் இயல்பினை -ஆற்றலைசுதந்தரத்தை மறுத்து உயிர் அப்பட்டமான மையொட்டித் தாள் அல்லது கடவுளின் உயிருள்ள ஒரு விளையாட்டுப் பொம்மை என்று கூறுவதேயாகும். திருவள்ளுவர், உயிரின் திறனையும் அறிவுப்பாங்கினையும் ஆள்வினைத்திறனையும் ஐயத்திற்கிடமின்றி விளக்குவதால் அதற்கும் இடமில்லை. அது மட்டுமன்று. வள்ளுவம் காட்டும் கடவுள் 'வாலறிவ'னேதவிர ஆதிக்க சக்திகளின் தலைவனல்லன். அவன், வழி நடத்துபவனே தவிர, ஆட்டிப்படைப்பவ னல்லன்; அவன் கையூட்டுகளைப் பெற்றுக்கொண்டு, கையூட்டு வழங்கியவர்களுக்குச் செல்வத்தையும் துறக்கத் தையும் வழங்குபவனல்லன்; கையூட்டுத் தரமாட்டாதாரை ஒதுக்குபவனுமல்லன். வள்ளுவம் காட்டும் கடவுள், தூய்மை யான அறிவேயாம். தனக்குவமையில்லாத தன்மையேயாம். எண் குணங்களின் உருவமேயாம். அஃது ஒரு பண்பு. அஃது ஒரு குணம். அந்தத் தன்மையை - பண்பை - குணத்தைத் திரும்பத் திரும்ப உயிர் நினைத்தலின் மூலம் அத்தன்மை களையெல்லாம் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு வளரும் நெறிதான் வழிபாட்டு நெறி, வழிப்படுதல் (வழிப்படுதல் - வழிநிலை நிற்றல்) என்பது மருவி வழிபாடானது. ஆனால் அகத்தொடு தொடர்பில்லாத பொறிகள் மட்டும் தொழிற்படும் வழிபாடும், அதற்குக்கூட வாய்ப்பில்லாத தரகர் முறை வழிபாடும் நாட்டில் மலிந்தன. சமயத்தின் முறை பிறழ்வு இங்கேதான் தொடங்குகிறது. இம் முறை, பிறழ்வு, முறையாகவளர்ந்து நெடியதூரம் விலகி வந்து இன்று கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கு இடம் கொடுத்துள்ளது. வள்ளுவம் கடவுள் வாழ்த்தில்,

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இவ” (4)
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்” (6)
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது” (8)
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தரளை வணங்காத் தலை" (9)

என்ற குறள்கள் நேரிடையான வழிபாட்டு முறையை வலியுறுத்துகின்றனவேயன்றித் தரகர் முறை வழிபாட்டைப் பற்றிக் கூறாமையை உய்த்துணர்க.

பொறிவாயில் ஐந்தவித்தலாவது யாது? அது நுண்ணிய பொருளாக்கமே உடையது. பொறிகள் ஐந்தின் உணர்வுகளை அழித்தல். இயற்கைக்கு முரணான செயல்முறை, முறையற்ற வழியில் அடக்குதல் இயலாது. முறையற்ற வழியில் அடக்க முயன்றால் புறத்தோற்றத்தால் அடங்கியது போலத் தோற்ற மளித்து, ஒரோவழி முறைபிறழ்ந்த வழிகளில் மேவிச் செல்லும். எந்த ஒன்றையும் போக்கிடமில்லாது அடைத்து அடக்குதல் இயற்கையறிவியலுக்கு முரணானது; நடைபெறக் கூடியதுமில்லை. அது போலவே அழித்தல் என்பது இயற்கைக்கும் அறநெறிக்கும் இசைந்த கருத்தன்று. அளித்தல் என்ற சொல் பக்குவப்படுத்துதல் என்ற பொருள் தரும். நெல், கிழங்கு முதலியனவற்றைப் பக்குவப்படுத்தும் முறைக்கு 'அவித்தல்' என்பது வழக்கு. அந்த வழக்கை ஒப்பு நோக்குக. சுவைத்துப் பயன்படுத்துவதற்குத் தக்கவையாக இல்லாத பொருள் களைச் சுவைத்துப் பயன் கொள்ளத்தக்கவாறு பக்குவப்படுத்துதலை அவித்தல் என்று கூறுவது வழக்கம். அதுபோல உயிர், பயன்கொள்ளத்தக்கவாறும் அவ்வுயிரைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் அண்ணித்து நின்று சுவைக்கு மாறும், பயன்படுத்துமாறும் இல்லாமல் கரடு முரடாக இருக்கும் புலங்களையும் பொறிகளையும் பக்குவப்படுத்தி நிறைநலமும் நிறை இன்பமும் பொதுளும் தன்மையதாக மாற்றியமைத் தலே அவித்தல் என்பது. மனிதனின் இந்தக் குணமாற்றச் செயல்முறையை - பண்பாட்டுப் பக்குவமுறையைப் பெற ஆர்வங்களையும் ஆவல்களையும் தன்னை நோக்கியதாக அல்லாமல் உயிர்க்குலத்தை நோக்கியதாக, உயிர்க் குலத்திற்குத் தண்ணனிதருவதாக. விளங்கும் கடவுளை நோக்கியதூக மடைமாற்றம் செய்தலே உரிய வழி.

இறைவன் அல்லது கடவுள் என்பது எல்லா உயிர்களும் இன்புற்றமரும் பெருநிலையின் எல்லையையே குறிக்கும். அப்படியானால் “நற்றாள்”, “மாணடி”, “அடி", "தாள்” என்றெல்லாம் திருவடிகளை மட்டுமே குறிப்பிடுகிறாரே! ஏன்? பிற்காலத்தில் பொய்ம்மை நிறைந்ததாகவும், மனிதகுலத்துக்குத் தீமை செய்வதாகவும் புகுந்த நால்வருணத் தோற்றத்தின்படி பார்த்தால் திருவடிகள் ‘சூத்திரர்'களையே தந்தன; இழி மக்களையே தந்தன என்று கூறுகிறது.

ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய; க்ருத
ஊருத தஸ்ய யத் வைச்ய பத்ப்யாம் சூத்ரோ அஜாயத;

(புருஷஸூக்தம் 1: 13)

(இவருடைய முகம் பிராம்மண ஜாதியாக ஆயிற்று; கைகள் க்ஷத்திரிய ஜாதியாகச் செய்யப்பட்டன; இவருடைய தொடைகள் எவையோ அவை வைசிய ஜாதியாக ஆயிற்று; பாதங்களினின்று சூத்திர ஜாதி உண்டாயிற்று)

உண்மையான சமய அனுபவமிக்க எந்த ஞானியும் இறைவனின் தலையை நினைந்துருகிப் பாடியதில்லை. ஆனால் சூத்திரன் பிறந்ததாகக் கூறப்படும் திருவடிகளையே திருவள்ளுவர் முதலிய சான்றோர்கள் போற்றியுள்ளனர். திருவள்ளுவர் 'தாள்' - திருவடி என்று இறைவனை உருவகம் செய்தது ஒரு மாறிலாத் தத்துவத்திற்குக், கொடுத்த உருவகமேயாகும். உலகைத் தாங்குவது தாள். தாள், உழைப்பின் சின்னம்; தாளாற்றுதல் என்பது உழைப் பியற்றுதல். தாளாற்றித் தந்த பொருளால் வேளாண்மை செய்தல் வேண்டும். வேளாண்மை செய்தலுக்கு 'யான்', 'எனது' என்ற உணர்வுகளைக் கடந்த உழைப்புத் தவம் செய்யும் உத்தமநிலையேயாம். இதுவே வள்ளுவத்தின் தெளிவு!

வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல; பெண்ணுமல்ல. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை வள்ளுவத்தின் கடவுளுக்கு கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை. அது பேரறிவு; தூய்மையான அறிவு; குணங்களின் திருவுரு: இன்பத்தின் திருவுரு; அன்பின் திருவுரு; அறத்தின் அடையாளம்! அஃது ஓரூரில், ஓரிடத்தில் இருப்பதன்று; எங்கணும் நீக்கமற நிறைந்து நிற்பது! உய்த்துணர்வார்க்கு உள்ளத்தின் துணையாய்த் தோழமையாய் நின்று தொழிற் படுத்துவது; வெற்றிகளைத் தருவது; இன்பங்களைத் தருவது. இத்தகைய வள்ளுவத்தின் கடவுள் நெறியை மறுப்பார் யார்? வள்ளுவத்தின் கடவுள் நெறி வையகத்திற்கு உரிமையாக வேண்டும்! மனித குலத்தில் சமய நெறிகளில் மண்டியிருக்கும் புறச் சமயப் புதர்க்காடுகளை அழித்து வள்ளுவத்தின் சமய நெறியை உலகப் பொதுச் சமயமாக்க வேண்டும்.

இன்று, உலகெங்கும் சமய வேறுபாடுகள் மலிந்து காழ்ப்புணர்ச்சிகளைத் தோற்றுவித்திருக்கிறது. சென்றகால வரலாற்றில் சமயம் மனித உலகத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் செய்த பணிகள் நினைவிற்குரியன; போற்றுதலுக்குரியன. ஆனாலும் இடையிடையே சமய அமைப்புகள் மக்களிடையே பரப்பிய மூட நம்பிக்கைகளும். சமய நிறுவனங்களுக்கிடையே நிகழ்த்த போர்களும் அந்த நற்பணிகளை மறைத்து விட்டன. விஞ்சியது சமயநெறிக்குப் புகழும் பெருமையுமல்ல; பழியாகவே அமைந்துவிட்டது. சமய நம்பிக்கையுடையோர் இதனை நினைந்து வருந்த வேண்டியிருக்கிறது. மீண்டும் இந்தத் துன்பியல் வரலாறு" தொடர்ந்து நிகழாமல் தூய சமய நெறிவழியே சமுதாயத்தை வழிநடத்தி வாழ்விக்க விரும்பினால் மனிதகுல வேறு பாடுகளை, சமய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாத வள்ளுவத்தின் சமயம் உலகப் பொதுப்பெருஞ் சமயமாக இடம் பெறச் செய்ய வேண்டும். மனித குலத்தின் உரிமைகள் இயற்கையில் அமைந்தவை. அந்த உரிமைகளை நாடுகளின் அமைப்பின் மூலமோ அரசியல்களின் மூலமோ சமய அமைப்புகளின் மூலமோ, புன்மையான சாதி குல அமைப்புகளின் மூலமோ யாருக்கும் பறிக்க உரிமையில்லை. உயிர்கள் பிறப்பிலேயே ஒத்த உரிமையுடையன.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)

இது திருவள்ளுவர் சமயத்தின் உயரிய கோட்பாடு. இந்தக்கோட்பாடு உலகில் இடம் பெற்றால் தான் வெள்ளையர், கறுப்பர், தீண்டத்தகாதவர் என்று மனித குலத்தினைப் பிரித்து ஆட்டிப்படைக்கும் தீமைகள் மறையும். கடவுள் அருச்சனைகளால், ஆராதனைகளால், படையல் களால் திருப்தி செய்யத்தக்கவரல்லர் என்ற வள்ளுவத்தின் கொள்கை இடம் பெற்றால்தான் வாழ்க்கையோடிசைந்த அறிவியல் சமயம் உலகில் வளரும். வாழ்வாங்கு வாழ்தலே சிறந்த வழிபாடு என்ற வள்ளுவத்தின் சமயநெறி வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் புரோகிதர்கள் உலா வர மாட்டார்கள்; சமய நிறுவனங்கள் தோன்றா; அவைகளுக்குள் ஆதிக்கப் போட்டிகளும் இரா. வள்ளுவத்தின் சமயம் வெற்றிபெறுமானால் தொண்டு நிறுவனங்கள் எங்கும் தோன்றும்; தொண்டர் குலம் தழைக்கும்; மனிதகுலமும் தழைக்கும். எனவே வள்ளுவத்தின் சமயம் உலகப் பொதுச் சமயமாக மலரும் நாளே மனித குலத்திற்குப் பொற்காலம் படைக்கும் நன்னாளாகும்.

திருவள்ளுவர் தந்த திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று. அது சமயச்சார்பற்ற நூல், ஆயினும், மனித குலத்தைச் சிந்தனையில், அறிவியலில், வாழ்க்கையில் வழி நடத்தும் பொழுது திருக்குறட் கொள்கை சமயமாக உருப்பெறுகிறது. வள்ளுவத்தின் சமயம் நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது; நம்பிக்கையுடன் கூடியது: நல்லெண்ணத்தின் பாற்பட்டது; இயற்கைக்கு இசைந்தது; மெய்யுணர்தலின் பாற்பட்டது; ஒரு வாழ்க்கை முறையாக அமைவது! வள்ளுவத்தின் சமயம் வையகத்திற்கு உரிமையாகுக.