இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை


உங்கள் கரங்களில் தவழும் இந்நூல் 1998ஆம் ஆண்டு துபாய் உட்பட வளைகுடா நாடுகளில் நடைபெற்ற மீலாது விழாக்களில் நான் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கமாகும். இந்த அரிய வாய்ப்பை நான் பெறக் காரணமாயமைந்தவர் சமுதாயச் சேவைச் செம்மல் தாவூத் பாட்சா அவர்களும் ஈமான் பேரவையின் செயலாளராக அரும்பணியாற்றிவரும் அருமை நண்பர். அல்ஹாஜ் எம்.அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்களும் மற்றும் ஈமான் அமைப்பினரும் ஆவர்.

வளைகுடா மீலாது கூட்டங்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாக்களில் கலந்து கொண்டவர்களும் பேரார்வமிக்கவர்களாக இருந்ததால் அவர்களோடு சேர்ந்து நாயகத் திருமேனியின் வாழ்வையும் வாக்கையும் அடியொற்றி, திருமறை ஒளியில் இஸ்லாத்தைப் பற்றி சற்று உரக்க சிந்திக்க முடிந்தது. இச்சிந்தனைகள் காற்றோடு போய்விடாமல் எழுத்து வடிவில் தமிழ்கூறு நல்லுலகெங்கும் செல்ல வேண்டுமென நண்பர்கள் கருத்து வெளியிட அதற்கு ஈமான் அமைப்பின் ஆற்றல்மிகு செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் உருக்கொடுக்க ஈமான் பேரமைப்பின் ஆதரவோடு இன்று நூல் வடிவில் என் பொழிவுகளின் சுருக்கம் உங்கள் பார்வையில்.

பெருமானாரின் பெரு வாழ்வும் அவர் உலகுக்குரைத்துச் சென்ற வாக்கும் திருமறையின் அதியற்புதச் செய்திகளும் இன்றைய அறிவுலகை முனைப்புடன் சிந்திக்கச் செய்துள்ளன. இஸ்லாத்தை வழக்கமான ஆன்மீகக் கண்ணோட்டத்தோடு மட்டுமல்லாது, இன்றைய வாழ்வின் இன்றியமையா பேரங்கமாக உருவெடுத்துள்ள அறிவியல் கண்ணோட்டத்தோடும் காண அறிவுலகு முனைந்துள்ளது. இவ்விருகண்ணோட்டங்களும் இஸ்லாத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள பேருதவியாக அமைந்துள்ளதெனில் அஃது மிகையன்று. அத்தகைய சிந்தனைக் கோணங்களைச் சுட்டிக் காட்டுவதுதான் இவ்வுரைச் சுருக்க நூலின் தலையாய நோக்கம். அது ஓரளவு நிறைவேறியிருப்பதாக எண்ணி மனநிறைவடைகிறேன்.

நான் துபாயில் தங்கியிருந்த இருபது நாட்களும் எனக்குத் தோன்றாத்துணையாக இருந்த ஈமான் அமைப்பின் துணைச் செயலாளர் ஜனாப் லியாகத் அலி அவர்களையும் என்னை நிழல் போல் தொடர்ந்து என் தேவைகளைக் கவனித்துக் கொண்ட எழுச்சி மிகு இளைஞர்கள் ஜனாப் முஹம்மது நியாஸ், சாதிக், இசைக் கவிஞர் அஷ்ரஃப் அலி ஆகியோரையும் என் மீது அன்பு பொழிந்த சமுதாயப் பெருந்தகை அல் ஹாஜ் பி.எஸ்.ஏ.ரஹ்மான் சாஹிப் அவர்கள், ஈமான் பேரமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யத் எம்.ஸலாஹுத்தீன் சாஹிப் அவர்கள், ஈமான் பேரமைப்பின் பேரங்கமாகத் திகழும் அல்ஹாஜ் ஹபீபுல்லா சாஹிப் அவர்கள் மற்றும் அல்ஹாஜ் அப்துல் கதீம் சாஹிப், கவிஞர் அப்துல் சம்ஸ்தீன் சாஹிப் சடைன் அமானுல்லா மற்றும் தாஹா போன்றவர்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னால் என்றும் மறக்க முடியாதவை.

இந்நூல் வெளிவர ஆதரவுக்கரம் நீட்டிய ஈமான் அமைப்புக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். ஈமான் அமைப்பு தோன்றிய காலம் முதலே அதனோடு எனக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு இருந்தே வருகிறது. சமுதாய எழுச்சிக்கு, குறிப்பாக, இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆக்கமான முறையில் அருந்தொண்டாற்றி வெள்ளி விழாக் கொண்டாடி மகிழும் நேரத்தில் இந்நூல் வெளி வருவது பெரு மகிழ்வளிக்கிறது. சென்ற ஆண்டே இந்நூல் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், எனது ஐரோப்பிய பயணமும், அமெரிக்கா, கனடா பயணங்களும் அதற்கு இடம் தரவில்லை . அந்நூல் ஈமான் அமைப்பின் பெருமைமிகு வெள்ளி விழாவில் வெளிவர வேண்டும் என்பது வல்ல அல்லாஹ்வின் நாட்டம் போலும். அனைத்து புகழும் வல்லோனுக்கே.

வளைகுடாவில் என் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெறவும், நூலுருவாக்கம் பெறவும் துணை நின்ற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்வதில் பெருமையும் பேருவகையும் அடைகிறேன்.

சென்னை - 40
5.6.2000
அன்பன்
மணவை முஸ்தபா

 
இந்தியத் திருநாட்டிற்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மேம்பாட்டிற்கு இடையறாது உழைத்து மறைந்த சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் A.K.A. அப்துல் சமத் சாஹிப் அவர்களின் இனிய நினைவுக்கு இந்நூல் காணிக்கையாகிறது.
நூலாசிரியன்