உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/பாரதி ஒரு யுகசந்தி

விக்கிமூலம் இலிருந்து

2

பாரதி ஒரு யுகசந்தி


தமிழ், ஒரு வளர்ந்த மொழி. தமிழ், கவிதை மொழி. தமிழ் இலக்கியச் செல்வம், கவிதையிலேயே செழித்து வளர்ந்ததாகும். காலத்துக்குக் காலம் நாட்டு மக்களின் தேவையறிந்து இலக்கியங்கள் செய்து தந்த பெருமை தமிழ்க் கவிஞர்களுக்கு உண்டு.

தமிழகத்துக் கவிஞர்களில் பலர், மக்களைச் சார்ந்தே நின்றவர்கள்; அதாவது மக்களுக்காகப் பாடியவர்கள். மக்களுக்காகப் பாடிய கவிஞர்கள் வரிசையில் பாரதி, தலை சிறந்து விளங்குகின்றான். பாரதி பிறவிக் கவிஞன். பாரதிக்குக் கவிதைதான் தொழில். பாரதியின் படைக்கலம் கவிதையே தான். பாரதி, அடிமை நாட்டில் பிறந்து, அடிமையாக வாழ்ந்து, அடிமையாகவே செத்தவன். ஆனால், பாரதியின் ஆன்மா சுதந்திரம் பெற்று விட்டது. அவன் ஆசைப் பட்டதைப் போல அவன் சுதந்திரமான சிட்டுக்குருவி போலத்தான் வாழ்ந்தான்; பாடினான்.

நாடு அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதற்கு முன்பே பாரதி, இந்த நாட்டுத் திருக்கோயில்களுக்குள் இருக்கும் உமையம்மை திருமேனிகளுக்கெல்லாம் "சுதந்திர தேவி" யென்று பெயர் சூட்டினான். பாரதி, சுதந்திர தேவியின் உபாசகன். பாரதி, பழைமையைப் பாராட்டியவன்; புதுமையைப் போற்றியவன். சிந்தித்து வாழும் சமுதாயத்தில் பழைமைக்கும் புதுமைக்கும் சண்டை இருக்காது; வளர வேண்டிய சமுதாயத்தில் பழைமை-புதுமைக்கிடையே மோதல் இருக்கக் கூடாது. இருந்தால் வளர்கின்ற சமுதாயம் பாதிக்கப்படும். பாரதி, பழைமையை வெறுத்தவனல்ல. பழைமையைப் பாராட்டினான். ஆனால் பாரதி புதுமையைக் காணக் கூசியவனுமல்ல. நல்ல பழைமை, ஒரு புதுமையை ஈன்றெடுத்துத் தரும். அது போலவே புதுமை, பழைமையை முழுதாகப் பயன்படுத்திக் கொண்டு வளரும். பாரதி, பழைமையில் காலூன்றி நின்று பாடினான். பாரதி, விநாயகர் நான்மணி மாலை பாடும் பொழுது பக்தனாகவே திகழ்கின்றான். சோவியத் புரட்சியை வரவேற்றுப் பாடும் பொழுது புரட்சி செய்பவனாகி விடுகின்றான். பாரதி, "ஆலைகள் வைப்போம்” என்று பாடும் பொழுது தொழில் முனைவனாகத் திகழ்கின்றான்.

பாரதி, வளர்ந்த முழுமையான ஒரு கவிஞன். பாரதி, பாரத சமுதாயத்தை முழு விடுதலைப் பெற்ற சமுதாயமாகக் காண விரும்பினான். பாரதியின் கவிதை ஆவேசித்து நின்றதெல்லாம் "விடுதலை, விடுதலை" என்ற மையத்தில் தான்! பாரதி, ஒரு விடுதலைக் கவிஞன் முழு விடுதலைக் கவிஞன்.

பாரதி, பாரத சமுதாயத்தின் வரலாற்றை உந்திச் செலுத்திய கவிஞன். பாரத சமுதாயத்தின் வரலாற்றைப் பொருளுடையதாக்கிய பெருமை, பாரதிக்கு உண்டு. பாரதி, சில்லறைச் சிந்துகள் பாடியவனல்ல. பாரதி, ஆவேசித்து நின்றது, பொழுதுபோக்கும் சீர்திருத்தமல்ல. ஒய்வு நாற்காலியின் உபதேசமுமல்ல. பாரதி, யுகாந்தரமாக வளர்ந்து வந்த அறியாமைக்கு-அடிமைத்தனத்திற்கு அதிர்வேட்டு என வந்தான். பாரதி, ஒரு யுகத்தையே அழிக்க நினைக்கின்றான். அதாவது, ஒரு யுகம் என்று சொல்லப்படுகின்ற - பல நூற்றாண்டுகள் வளர்ந்த அடிமைத்தனத்தை-நிர்வாணமான சுயநலத்தைச் சுட்டுப் பொசுக்குகின்றான். பாரதியின் கவிதைத் தீ, கல்வியில்லாத ஊரை மட்டும் கொளுத்தவில்லை, மடமையைக் கொளுத்துகிறது. "எனக்கே உடைமை, உடைமைக்காக உடன் பிறந்த சகோதரனையும் கொல்வேன், பழகிய நட்பையும் பகையாக்குவேன்" என்று பிறக்கிறது கலியுகம். கலியுகப் பிறப்பை இங்கனம்தான் மகாபாரதம் கூறுகிறது. உடைமை வர்க்கம் தோன்றி, உழைப்பைச் சுரண்டும் பொய்ம்மைத்தனமான வாழ்க்கைக்கு வித்திட்டதே கலியுகம்தான். உடைமைப்பற்று, கள்ளைவிடக் கொடியது; உடைமைப் பற்று, உடன் பிறந்த சகோதரனையும் வஞ்சிக்கக் கற்றுக் கொடுக்கும், ஊக்கத்தையெல்லாம் உறிஞ்சும். உடைமைக் குணம் நச்சுத் தன்மையுடையது. உடைமைக் குணம் தோன்றி வளர்ந்துவிட்டால், உடைமை அனுபவத்திற் குரியது வாழ்க்கைக்குரியது. ஒப்புரவு வாழ்க்கைக்குரியது என்ற தத்துவம் போய்விடும். உடைமைகளை ஒன்று பலவாக இவறிக் கூட்டவே செய்யும் உடைமை வர்க்கம் தோன்றிய பிறகு, சமுதாய வரலாறு தடம் புரண்டுவிடும். பிறர் பங்கைத் திருடும் களவு வரும். கடவுள் முதல் கவிஞன் வரையில் உள்ள அனைவரையும் உடைமை வர்க்கம் தனது ஒலிபெருக்கி களாகவே இயங்கச் செய்யும். விநோதமாக வளமும் வளரும்; வறுமையும் வளரும்.

இத்தகைய கலியுகத்தில் பிறந்து, கலியுகத்தைக் களத்தில் சந்தித்து, கலியுகத்தோடு போராடி, கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைக் கொண்டுவரப் பிறந்தவன் கவிஞன் பாரதி. எனவே, பாரதி, ஒரு யுகப் பிரளயக் கவிஞன், பாரதி, ஒருயுக சந்திப்பாக விளங்கியவன். பாரதி, தானே தனது இலட்சியத்தை ஐயத்திற்கு இடமின்றி வைக்கின்றான். இதோ அவன் பாடல்:

"பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதிஇஃதே!


(விநாயகர் நான்மணிமாலை-39)

என்று பாடுகின்றான்!

மானிட சாதியின் வரலாறு உயிர்ப்புள்ளது. உயிர்ப் புள்ள அனைத்தும் மாற்றங்களைப் பெறும். மாற்றங்களே உயிரின் இயற்கை, மாற்றங்களே மனித உலகத்தின் வரலாறு. மாற்றங்களை விரும்பாதவர்கள் பகலை விரும்பாது இருளை விரும்பி நச்சி வாழும் கூகையைப் போன்றவர்கள். கூகையைப் போன்றவர்கள் இருளை ஆவாகித்துக் கொண்டு குரல் கொடுக்கலாம்; கூச்சல் போடலாம்; ஆரவாரம் செய்யலாம். ஆனாலும் கூகை, கூகைதான்! மானுடம் வெற்றி பெறும். இதுவே பாரதியின் நம்பிக்கை.

"பழைய பயித்தியம் படீரென்று தெளியுது” என்பான் பாரதி, அறிவின் தெளிவும், ஆற்றலின் உறுதியும், ஆள்வினைத் திறனும், வளமும் ஒளியும் இல்லாத கலியுகத்தைப் "போ: போ' என்று விரட்டுகின்றான். புதிய ஒளிபடைத்த பாரதத்தைக் கிருதயுகத்தின் பொலிவு பெறும் பாரதத்தை வரவேற்கின்றான்! பாரதி. பழைமையை வேரொடும், வேரடி மண்ணொடும் கல்லி வெந்நீர் விட்டவனல்ல. இத்தகு மருத்துவச் செயல்முறை பாரதிக்கு உடன்பாடன்று. பாரதி, இன்றைய புதிய மருத்துவ இயலைப் போன்றவன். அதாவது நச்சுத் தன்மையடைந்த உடலின் குருதியை அறவே வெளியே எடுத்துவிட்டுப் புதிய குருதியைப் பாய்ச்சி மனிதனை நடமாட வைக்கும் வியத்தகு சாதனை, மருத்துவ உலகத்தில் வந்திருக்கிறது. பாரதி, இத்தகைய மருத்துவன். பாரதி, பாரத தேசத்தின் உருவத்தைச் சிதைக்கவில்லை. ஆனால், மட்கிப்போன பழைய உணர்வுகளை மாற்றிப் புதிய உணர்வுகளைப் பாய்ச்சுகின்றான். பாரதி, திருக்கோயில்களை இடிக்கவில்லை மாறாக, ஆங்குள்ள தேவி சிலைகளைச் சுதந்திரதேவியாக மாற்றுகின்றான். சாமியார்களைப் பாரதி எதிர்க்கவில்லை உழைக்க வைத்து அவர்களின் தொப்பையைச் சுருக்குகின்றான். பாரதி, யுக சந்திப்புக் கவிஞனாக இருந்து விளைவித்த அற்புதங்கள் எண்ணற்றவை.

பாரதி, தருமமெல்லாம் தாழ்ந்து, பாவச் செயல்கள் மிகுந்து, பாதகமே மேலோங்கி நின்ற பாழ்த்த கலியுகத்தில் வாழ்ந்தான். ஆயினும் அவனைக் கலியுகக் கொடுமைகள் தொட்டு அழித்து விடவில்லை. ஏன்?' அவன் வீரன்! மாவீரன்! "சுடுதலும் குளிரும் உயிர்க்கில்லை” என்ற தத்துவத்தின் உருவமாக வாழ்ந்தவன், அவன் கலியுகத்தில் நின்று, கலியுகத்தை அதன் எல்லைக்கு விரைந்து செலுத்தினான்; கிருதயுகத்தையும் விரைந்து கொணர முயன்றான்.

“வீழ்த்தல்பெறத் தருமமெலாம், மறம் அனைத்தும்
கிளைத்துவர, மேலோர் தம்மைத்
தாழ்த்த, தமர் முன்னோங்க, நிலைபுரண்டு
பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்தகலி யுகம்சென்று மற்றொர் உகம்
அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்தமன வீரமுடன் யுகாந்தரத்தின்
நிலையினிது காட்டி நின்றான்."

(பூபேந்திரர் விஜயம்)

என்று பூபேந்திரரைப் பாடிய அவனது பாடல் பாரதிக்கும் பொருந்துவதாகும்.

பாரதி, "கவலைப்படுகிற பிறவியல்ல. கவலை, மானுடத்தை அழிக்கும்.. நூறாயிரம் கோடி படைகளாலும் அழிக்க முடியாத மானுடத்தைக் கவலை. அழித்துவிடும். கவலை, ஆக்கப் புனைவுடன் வரும். ஆனால், புனைவுதான் ஆக்கம்; விளைவு அழிவு. வாழ விரும்புகிறவர்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்காமல் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறு துளியாகக் கவலை வந்தாலும் அதனை வரவேற்கக் கூடாது. கவலை, சென்ற கால நிகழ்வுகளை வாயிலாகக் கொண்டு வரும்; சென்ற கால நிகழ்வுகளை எண்ணி வருந்தும்படி கற்றுக் கொடுக்கும், வீழ்ந்து விடுதல் பெரிய துன்பமன்று. இழப்பையும் கூட அவ்வளவு பெரிதாகத் தந்துவிடாது. ஆனால், வீழ்ந்ததைப் பற்றி எண்ணிக் கவலைப் படுதல் வீழ்ச்சியைப் பலவாக்கும்; ஆக்கத்தின் வாயில்களைத் தூர்த்து விடும்; சோர்வே மிஞ்சும்; பிழைப்பறியா நிலையில் கணியனை நாடச் சொல்லும், அவன், தன் வாயில் வந்தபடியெல்லாம் சொல்லி வைப்பான். இந்த வாழ்க்கை விரும்பத்தக்கதன்று. இகழ்ச்சி நிறைந்த வாழ்க்கையினை, அறிவும் ஆண்மையும் உழைப்பும் இல்லாத வாழ்க்கையினை நச்சுதல் கலியுகத்து இயற்கை. ஆனால், இது வாழும் வழியன்று. இதனை பாரதி,

"புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக்கு இனிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர, -இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி"

என்று குறிப்பிடுகின்றான்.

இத்தகு கலியுகத்தைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு, கிருதயுகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றான் பாரதி. கலியுகம், நம்மைச் சமுதாயத்திலிருந்து விலக்கியது; தன்னயப்பையே வளர்த்தது; “எனக்குத்தான் எல்லாம்” என்ற உணர்வையே வளர்த்தது. இதனால் எண்ணத் தொலையாத ஏற்றத் தாழ்வுகள்! எளிதில் தீர்வுகாண முடியாத மனிதச் சிக்கல்கள்! கலியுகத்தின் ஆட்சி நடப்பதற்குரிய களம் எது? "நான்", "எனது” என்ற சொற்களும், அவ்வழி தோன்றி வளரும் தனியுடைமைச் சமுதாயமும், தன்னிச்சைப் போக்கும், சமுதாயச் சார்பில்லாத வாழ்க்கையுமேயாம். இவற்றை அறிந்து மாற்றினால் கிருதயுகம் பிறந்துவிடும்.

அதனால் பாரதி, இந்தியாவைக் கிருதயுகத்தின் சின்னமாக ஒரு குடும்பமாக்கினான். கலியுகத்தில் “வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்” என்று சொன்னானே பாரதிதாசன் அந்தப் பேதங்களின் பெயர்கூட இல்லாமல் சாகடிக்கின்றான்.

"எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்;
முப்பது கோடியும் வாழ்வோம்,-வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!

(வந்தே மாதரம்-5)

என்பது பாரதியின் முழக்கம்.

பாரதி, சமுதாயத்தை நச்சுத் தன்மைக்கு ஆளாக்கிய கலியுகத்தின் படைப்பாகிய தனி உடைமைக் குணத்தை மாற்றுகின்றான். முதன் முதலில் தமிழ் மக்களுக்கு - இந்திய நாட்டு - மக்களுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிமுகப்படுத்துகின்றான். இந்திய சமுதாயத்தை ஒரே பொது வுடைமைச் சங்கமாக அமைக்கின்றான். பாரத சமுதாயம், பொதுவுடைமைச் சமுதாயமாக உருமாற்றம் பெறுதலை,

"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை;
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை”

என்றும் பாராட்டுகின்றான்.

பாரதி, பொதுவுடைமைச் சமுதாயம் அமைவதைத் தான் கிருதயுகம் என்று கூறுகின்றான். பாரதி, சோவியத் புரட்சியை வரவேற்கின்றான்; பாராட்டுகின்றான்; சோவியத் புரட்சி, மாகாளி பராசக்தியின் கடைக்கண் அருளால் நிகழ்ந்ததென்கின்றான், கலிவீழ்ந்தால் கிருதயுகம் பிறப்பது தானே அடுத்து நிகழும்! ஆதலால், "கிருதயுகம் எழுக மாதோ!” என்கின்றான்.

கலியுகம், தனி உடைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கிருதயுகம், பொது உடைமையைப் பிரதி நிதித்துவப் படுத்துகிறது. பொதுவுடைமைச் சமுதாயம் என்பது உரிமைகள் நிறைய உடைய சமுதாய அமைப்பு. பொது வுடைமைச் சமுதாயத்தில் “எல்லாம் எல்லாருக்கும்” என்ற நியதி கால் கொள்ளும். பொதுவுடைமைச் சமுதாயத்தில், ஒருவர் எல்லாருக்காகவும் வாழ்வார்; எல்லாரும் ஒருவருக்காகவும் வாழ்வர். இத்தகு பொதுவுடைமைச் சமுதாயத்தில் ஒரு மனிதர் மற்றொரு மனிதர் நோக வாழ மாட்டார்; ஒரு மனிதர் மற்றவர் உணவை அடித்துப் பறித்துத் தின்ன மாட்டார். உரிமைகள் போற்றப்பெறும். எப்பொழுது? ஒருவர் உரிமை மற்றவர் உரிமையைப் பாதிக்காத பொழுதுதான்! இதனை பாரதி,

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ?-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ?-நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ ?

(பாரத சமுதாயம்-1)

என்று கேட்கின்றான்.

குடிமக்கள் நலனுக்காகக் குடிமக்கள் சொன்னபடி ஆளும் ஆட்சியாக அமைய வேண்டும். குடிமக்கள் சொன்னபடி என்றால் கவனத்திற்குரியது. குடிமக்களும் குடிகள் மேன்மையுறத்தக்கன. சொல்ல வேண்டும்; வல்லாண்மையுடையோர் அறியாமையில் ஆழ்த்தியும், கையூட்டு வழங்கியும் அச்சமுறுத்தியும் பெரும்பான்மையைத் திரட்டி வைத்துக் கொண்டு 'குடிமக்கள் குரல்' என்று சொல்வது பொதுவுடைமையாகாது; மக்களாட்சியும் ஆகாது. தலைகளின் எண்ணிக்கை மிகுதி மட்டும் மக்களாட்சி முறையின் அளவுகோலன்று. ஒரு சராசரிக் குடிமகனின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதே பொதுவுடைமையாகும்: குடிமை நீதியுமாகும். இதனை பாரதி,

"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததுபார்; குடியரசென்(று)
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை; யாருமிப்போ(து)
அடிமையில்லை அறிக என்றார்:
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ! (புதிய ருஷியா-6)

என்று பாடுகின்றான்.

பாரதி, பொதுவுடைமைச் சித்தாந்தத்தை எளிதில் விளக்குகின்றான். பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் அடிப் படை, உழைப்பை மதிப்பது; உழைப்பாளியை மதிப்பது. பாரதி, இத்துறையில் மிக மிக வளர்ந்து விளங்குகின்றான்.

"கைவருந்தி உழைப்பவர் தெய்வம்" என்று உழைப்பாளியைப் பாராட்டுகின்றான் பாரதி. உழைக்கும் உலகம் மெருகேற, வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சிறக்க, உழைக்கும் உலகம் சிறக்க வேண்டும். கலியுகம், எல்லா வற்றையும் பொய் என்னும்; மாயை என்னும். வயிற்றைச் சுருக்குதலும், பரதேசிகள் ஆவதும் தான் வாழ்க்கையின் இலக்கணம் என்பது கலியுகத் தத்துவம். பாரதி, இந்தப் பொய்ம்மையான மாயா தத்துவத்தைச் சாடுகின்றான். புலன்கள் ஆரத் துய்க்கும் வாழ்க்கை பெருகி வளராது போனால், தொழில் வளராது. தொழில் வளராது போனால், மகிழ்ச்சி இல்லை! துன்பம்தான்! எனவே பாரதி, பொதுவுடைமைச் சமுதாயத் தோற்றத்திற்கு இன்றியமையாத தொழிற் புரட்சியைத் தமிழ் இலக்கிய உலகில் முதன் முதலாக வரவேற்கின்றான். தொழில் திட்டங்களை வகுத்துத் தருகின்றான்.

மானுட சாதியின் நுகர்வுப் பொருள்கள் இரு அணி யினரால் படைக்கப்படுகின்றன. ஓர் அணி, உழவர் அணி. பிறிதோர் அணி, தொழிலாளர் அணி. இந்த இரு அணியினரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் படைக்கும் பொருள்களினால்தான் உலக இயக்கம் நடைபெறுகின்றது. உழைக்கும் சக்தியால் படைப்புப் பலபடைத்துப் பாரினை உயர்த்தும் உழவுத் தொழில்ையும், தொழில் திறனையும் பாரதி போற்றுகின்றான்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை - செய்வோம்" என்று பாரதி முழங்குகின்றான்; அதே போழ்து உழைக்காமல் மற்றவர் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் எத்தரை நிந்தனையும் செய்யக் கற்றுக் கொடுக்கின்றான். "வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்!” இந்த மனப்போக்குத்தான் கிருதயுகத்தின் வாயில்.

மானுட சாதியில் பிறந்த ஒவ்வொருவனும் உழைத்து, அவனவனுடைய உழைப்பிற்குரிய பங்கை அவனவன் எடுத்திக் கொண்டு வாழ அனுமதித்தால் எங்கேயும் சொத்து சேராது; குவியாது. ஆனால், வல்லாண்மையுடையோர் மற்றவர் உழைப்பிற்குரிய பங்கைத் தர்ாமல் திருடிச் சேர்த்துக் கொள்கின்றனர். கலியுகத்தில் திருடு என்றால், ஒருவருக்குச் சொந்தமான பொருளைத் திருடுதல் என்றுதான் பொருள். ஒருவருக்குப் பொருள் சொந்தமாவது எப்படி? என்று ஆராய்ந்தறியுமாறு கலியுகம் சொல்வதில்லை. கிருதயுகம், ஒருவர் உரிமையுடையவராய் இருத்தலினாலேயே உடைமை அவர்க்குச் சொந்தம் என்று கூறாது. உரிமைக்குத் தகுதி, அரசின் சட்டங்களும், சார்புநிலை மதப் புரோகிதர்கள் வகுத்துக் கொடுத்த ஊழ்வினையும் என்பதைப் பொது வுடைமை ஏற்காது. உழைப்பவனுக்குரிய பங்கைக் கொடுக் காமல் திருடுவதை பாரதி கண்டிக்கின்றான்.

"பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்கின்றான் பாரதி. இன்னமும் மானுட சாதியில் உழைப்புக்குரிய கூலியை, உழைப்பை வாங்குவோனே நிர்ணயிக்கின்றான்; உழைப்பாளி நிர்ணயிப்பதில்லை. கூலிநிர்ணயிப்பு, உழைக்கும் சந்தையின் மலிவு அல்லது கிராக்கி அடிப்படையிலும், உழைக்கும் நேர அளவிலுமே கணக்கிடப்படுகிறது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் தடை செய்வதில் வேலையில்லாத் திண்டாட்டமும் கணிசமான பங்கை வகிக்கிறது. உழைத்து உற்பத்தி செய்த பொருளின் மதிப்பீட்டு அடிப்படையில் கூலி நிர்ணயம் செய்யும் நியாயப் புத்தி இன்னமும் வந்தபாடில்லை. ஆயிரக் கணக்கான உழைப்பாளர்கள் கடுமையாக உழைத்துப் பொருள்களை உற்பத்தி செய்து குவிக்கின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை செழிக்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: உழைப்பவன் ஏழையாக இருப்பது கலியுகத்தின் அடை யாளம்; இலக்கணம்; உழைப்பவன் உரிய பங்கை அடைந்து செழித்து வாழ்வது கிருதயுகத்தின் அடையாளம். இதனை பாரதி தெளிவாக்குகின்றான்.

பாரதி, கலியுகத்திலும் கிருதயுகத்திலும் ஒருசேரக் காலூன்றி நிற்கின்றான். "கலியுகத்தில் எல்லாவற்றையும் மந்திரம் செய்யும்" என்று கற்றுக் கொடுத்த மந்திரத்தை மறந்தானில்லை. ஆனாலும் மந்திரத்தை மட்டும் நம்பி மதிமோசம் போகவுமில்லை. இஃது ஒர் யுக சந்திப்பு.

"மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்:
வானையளப் போம். கடல் மீனையளப்போம்;
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்;
சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்."

(பாரத தேசம்- 1)

என்று பாடுகின்றான். கடவுளை, சாத்திரங்களை அறிந்து வாழாது போனாலும் இவைகளைப் பற்றி ஆர்ப்பரவம் செய்யும் சாத்திரங்களை, அவைகளின் உண்மைகளை அறிந்து கலியுகத்தார் ஆராயமாட்டார்கள். சமுதாயத்தை மோசம் செய்யும் ஒருவன், பொய்ச் சாத்திரங்களைக் கட்டுக்கதையாகச் சொன்னாலும் கேட்பார்கள்-கலியுகத்தில் பிரிவினைகள் தோன்றும். கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் பிரிந்தே விடுவார்கள். பிரிதல் மட்டுமன்று. ஒருவரோடொருவர் பகையும் கொண்டு இகழ்ந்தும் கொள்வார்கள். சூது செய்யும் நீசர்கள் போற்றப்படுவார்கள். ஒன்று பரம் பொருள் என்று துணியாது, சிவன் என்றும், விட்டுணு என்றும் சண்டை போட்டுக் கொள்வார்கள். இத்தகைய கலியுகத்தின் நடை முறையால் மக்கள் பஞ்சத்தில் வாடுகின்றனர்; குடிக்கக் கஞ்சியுமில்லை! கஞ்சிதான் இல்லை! ஏன், கஞ்சியில்லை என்று கேட்டால் சொல்லத் தெரியுமா? என்றெல்லாம் கலியுகத்தின் துன்பத்தைச் சித்திரமாக்கி பாரதி காட்டு கின்றான். ஆதலால், பாரதி இந்தக் கலியுகத்தைக் கடிந்து கிருதயுகத்தைக் கொணர முயற்சி செய்கின்றான்.

பாரதிக்குச் சாத்திரங்களில் நம்பிக்கையில்லாமற் போய் விட்டது என்று சொல்ல முடியாது.

"... மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர்நாடு!”

என்று பாடுகின்றான். ஆனாலும் இந்த நாட்டில் கலியுக தேவதையின் கொடிய படைப்புக்களாகிய சாதிகளைப் பார்க்கின்றான். அந்தச் சாதி வேற்றுமைகள் சழக்குகளாக உருவெடுத்துச் சமுதாயச் சீரழிவைத் தருவதைப் பார்க் கின்றான். இந்தப் பொல்லாத சாதிகளைச் சில பொய்ம்மைச் சாத்திரங்கள் அரண் செய்கின்றன. கடவுளை இந்தச் சாதியார்தான் பூசனை செய்யலாம்; மடத்தின் தலைவராக இந்தச் சாதியார்தான் வரலாம் என்று இப்படி எண்ணத் தொலையாத சாதிகள்! அதுவும் கடவுள் பெயரால் கற்பித்துக் காட்டும் பொய்ம்மைச் சாத்திரங்களை பாரதி சாடுகின்றான். "சாத்திரமின்றேல் சாதியில்லை" என்கின்றான்.

பொய்ம்மையான சாத்திரம் நாட்டில் புக அனுமதித்தால் மக்கள் புழுவென மடிவர் என்று எச்சரிக்கை செய்கின்றான். சாதிப்பாகுபாட்டில் உயர் இடத்தைப் பெற்றவர்கள் சாத்திரத்தை வகுக்கும் உரிமை பெற்றனர். ஆனால், ஐயகோ! அவர்கள் நெறிபிறழ்ந்துத் தாழ்வான சாத்திரங்களை - பொய்ம்மையைச் செய்து தந்தனர். அதனால், பாழ்த்த கலியுகம் மூண்டது என்பான் பாரதி.

கலியுகத்தின் மிகப் பெரிய கொடுமை பெண்ணை அடிமைப்படுத்துதல், கலியுகத்தில் சிலர் ஈசனின் திரு. வுள்ளத்திற்கு எதிராகவே செயல்பட்டனர் என்கின்றான் பாரதி. ஆம்! புவி பேணி வளர்த்திடும் ஈசன், பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான். ஆனால் இந்த மூடர்கள் மாதரறிவைக் கெடுத்தார்கள். எனவே பாரதி, கிருத யுகத்தைப் படைக்கும் வழியில் பெண்களுக்கு விடுதலை கேட்கின்றான். பெண்களறிவை வளர்க்கச் சொல்கின்றான்.

"கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்” (முரசு-10)

என்று பாடுகின்றான்.

அது மட்டுமா? கலியுகம் சொத்தில் மட்டும் தற்சார் புடையதல்ல. எல்லாவற்றிலும் ஆடவர் கொலை பாதகமான ஆதிக்கம் புரிந்தனர். நிலத்திற்கு வேலி போட்டனர்; பெண்ணுக்குக் கற்பென்று கூறி வீட்டில் பூட்டிப் போட்டனர். ஆம்! கலியுகப் பெண், கணவன் பரத்தை வீட்டுக்குப் போகத் துணை போவாள். ஏன்? தூக்கிச் சுமந்து கொண்டு போய்க் கூட விடுவாள்! இது கலியுகப் பெண்ணின் பத்தினித் தன்மை. ஒருபால் கோடிய அநியாயம் இதினினும் வேறுண்டோ ? ஆனால், கிருதயுகத்துப் பெண், கற்புக்குப் புது இலக்கணம் வகுக்கின்றாள். இல்லை; அவள் ஆடவனுக்கும் கற்பு கூறுகின்றாள். இதோ, கிருதயுகப் பெண் என்ன கூறுகிறாள்? கேளுங்கள்!

"கற்புநிலை யென்று சொல்ல வந்தார்-இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!

(பெண்கள் விடுதலைக் கும்மி-5)

இது மட்டுமா, பெண்ணின் விடுதலை? இல்லை, இல்லை! மாட்டைப் பூட்டிக் கொடுத்தல்போலப் பெண்ணைக் கட்டிக் கொடுத்தல் என்பது கலியுக வழக்கு, இந்த மூடப் பழக்கத்தை பாரதியின் கிருதயுகப் பெண் மறுக்கின்றாள். பெண், தான் விரும்பியவனை மணக்க உரிமையுடையவள். காதல் ஒருவனைக் கைப்பிடிக்க அவளுக்கு உரிமை உண்டு.

"வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”

என்று பாரதியின் கிருதயுகப் பெண் முழக்கம் செய்கின்றாள். கிருத யுகத்துப் பெண் அடங்கிக் கிடந்த ஆற்றலென வெளிக் கிளம்புகின்றாள், இன்று பட்டங்கள் ஆள்கின்றாள்; சட்டங்கள் செய்கின்றாள். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று, பாரதியின் கிருதயுகப் பெண் ஆர்ப்பரிக்கின்றாள்.

பாரதி, கலியுகத்தை-கலியைக் கொல்ல நினைக்கின்றான்; கிருதயுகத்தைப் படைக்கவும் நினைக்கின்றான். ஆயினும், பொதுவுடைமைச் சமுதாயத் தத்துவத்தைக் கண்ட மார்க்சினிடமிருந்து பாரதி: மாறுபடுகின்றான், கலியுக கொடுமைகளுக்குக் கடவுள் காரணமல்ல என்று. கருது கின்றான். கடவுள் ஒரு தத்துவம்; மூலப் பொருள்; உண்மை. ஆதலால் பாரதி, கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைப் படைக்கும் பணி முன்னோன் அருளைத் துணையாகக் கொண்டே நிகழும் என்று கூறுகின்றான்.

"மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கி
பொய்க்குங் கவியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதி இஃதே."

(விநாயகர் நான்மணிமாலை-39)

என்று பாடுகின்றான். இதனையே, வேறோரிடத்தில்

"ஒன்று பரம் பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி"

என்றும் பாடுவான். ஆதலால் யுகத்தின் விளைவுகள் மனிதர்களின் ஆசாபாசங்களால் விளைவதே தவிர, அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. முன்னவன் துணை கொண்டு கிருதயுகம் அமைப்போம் என்னும் பாரதியின் நெறி வெல்க!

பாரதி, இந்தச் சமுதாயத்தை ஆழ நினைந்து பாடியவன். பாரதி தீமைகளின் வேர் ஓடியுள்ள மட்டும் கண்டுபிடித்து வேரொடும் மண்ணொடும் கல்லி எறிய முயற்சி செய்தவன். சமுதாய மாற்றங்கள் எளிதில் நிகழா சமுதாய மாற்றங்களுக்கு அடிப்படையில் நிகழ வேண்டியது அறிவுப் புரட்சி. அறிவு, சமுதாயத்திற்கு வழங்கப்பெறாத வரையில் சமுதாயம் இருட்டறையில்தான் கிடக்கும். எடுத்துத் துரக்கினாலும் எளிதில் தேறாது. ஆதலால் பாரதி, அறிவுப் புரட்சிக்கு வித்தான கல்வியை வழங்குவதில் கவலை கொண்டான். இந்திய நாட்டுக்குக் கல்வியில் பஞ்சமா? இந்திய நாட்டு மக்கள் ஆண்டுதோறும் மறக்காமல் கலை மகளுக்குப் பூசை போடுவார்கள். அப்பம், அவல், பொரிஇவற்றுக்குப் பஞ்சமில்லை. இவற்றைக் கலைமகள் முன்னால் படைத்து வயிறு புடைக்கத் தின்பார்கள். பிறிதொன்றையும் மறந்து விடாதீர்கள்! ஏடுகளை வரிசையாக அடுக்கி மந்திரங் களை முணுமுணுத்து வணங்குவர். ஆனால், ஏடுகளைப் பிரித்துப் பார்ப்பதுமில்லை; படிப்பதுமில்லை. இவை கலைமகள் பூசைக்குரிய நெறியல்ல என்று பாரதி எடுத்துக் கூறுகின்றான். ஏன், பாரதி நல்லறங்கள் பலவற்றைப் பட்டியல் போடுகின்றான். நிழல் தரும் கனிச் சோலைகள் அமைத்தல், சுவைமிக்க தண்ணீர் தரும் ஊற்றுக்கள் அமைத்தல், பசித்தவர்க்குச் சோறிடும் அன்ன சத்திரங்கள் அமைத்தல், ஆலயங்கள் கட்டுதல் இவையெல்லாம் அறங்கள்! ஆனால், இந்த அறங்களைவிடச் சிறந்த அறம் ஒன்று உண்டு. அஃது ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தலாகும். அது பேரறம் என்று சொல்கின்றான்.

"இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம்பதினாயிரம் நாட்டல்;
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்;
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்.

(வெள்ளைத் தாமரை-9)

என்று பாடுகின்றான்.

கல்லியை மக்கள் தேடிச் சென்று பயிலும் நிலையில் , விடாமல் அவர்களுக்கு எளிதில் கல்வி கிடைக்க வேண்டும். அதுவும் அச்சடித்ததைப் போல ஒரே பள்ளியாக- ஒன்றையே கற்கும் பள்ளியாக இருத்தல் கூடாது. பல மொழிகளை, பல தொழில்களை, பல கலைகளை எளிதில் கற்கத் தக்கவாறு பலப்பல பள்ளிகள் அமைய வேண்டும் என்று பாரதி ஆசைப் படுகின்றான். கல்வி மட்டும் வாழ்க்கையை வளர்த்து விடாது. வாழ்க்கை பொருளுடையதாக, சுவையுடையதாக, மகிழ்வு நிறைந்ததாக அமைந்து விளங்கவேண்டும். வாழ்க்கையில் வறட்சித் தன்மையை விரட்டியடிக்க வேண்டும். இத்தகு புத்துணர்வுடைய வாழ்க்கையை அமைத்துத் தருதல் கலைக்கே உண்டு.

வீடுகள் துக்கத்தின் களமாக இருக்கக் கூடாது. இன்று பல வீடுகள் மகிழ்ச்சி தருவனவாய் இன்மையின் காரணமாக உணர்வையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும் வெளிப்புறச் சூழல்களுக்கு வீட்டிலுள்ளோர் மனம் தாவுகிறது. அங்கன மின்றி வீடுகள் கலையின் விளக்கத்துடன் அமையுமாயின் அவை சிறப்புறும். வீட்டிலுள்ளோர் வாழ்க்கையும் சிறப்புறும், இதனை நன்குணர்ந்த பாரதி, "வீடுதோறும் கலையின் விளக்கம்” வேண்டுமென்று பாடுகின்றான்.

பாரதிக்கு, வாழ்க்கையைச் சுவைத்து மகிழ்ந்து வாழத் தெரியும். அங்ஙனம் எல்லாரும் வாழ வேண்டுமென்று விரும்புகின்றான். பாரதி, குடும்பத் தலைவனாக எப்படி வாழ வேண்டும் என்றும் கற்பனை செய்கின்றான். காணி நிலம் வேண்டும். அந்தக் காணி நிலத்தின் நடுவே அழகுற அமைந்த மாளிகை வேண்டும். வீட்டுக்கும் நிலத்துக்கும் தண்ணீர் தரும் கிணறு வேண்டும். அக் கிணற்றோரத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் வேண்டும். அத் தென்னை மரங்கள் இளநீர்க் குலைகளோடு விளங்குதல் வேண்டும். உடலுக்குக் குளிர்ச்சி தந்து, உயிருக்கும் . இதம் தரும் தென்றற்காற்று வீச வேண்டும். மாளிகை முற்றத்தில் முழு நிலாப் பொழிவு வந்து சேர வேண்டும். குயில் மெல்லிசை இசைக்க வேண்டும். பாட்டுக் கலந்திட ஒரு பத்தினிப் பெண் வேண்டும். கூடிக் கலந்து மகிழ்ந்திடும் பொழுது கவிதை கொழிக்க வேண்டும். இந்த மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையில் இடையீடின்றித் திளைத்திருக்கக் காவலும் வேண்டும். இது பாரதி விரும்பிய வாழ்க்கை, "வீடு தோறும் கலையின் விளக்கம்” என்று பாடியதற்கு இது விரிவுரை, மீண்டும் பாரதியின் பாடலைக் கேளுங்கள்!

“வீடு தோறும் கலையின் விளக்கம்;
வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயினுக் கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!”

(வெள்ளைத் தாமரை-5)

பாரதி, இங்ஙனம் வாழ்தலே வாழ்க்கையென்று எண்ணுகின்றான். இத்தகு மகிழ்ச்சி நிறைந்த சிந்தனையிலும் பாரதிக்குக் கோபம் வராமல் இல்லை. சிறந்த கல்வியைத் தராத ஊர் இருக்குமானால் அந்த ஊரைத் தீக்கொளுத்தி விட வேண்டும் என்று பாடுகின்றான். கல்வி இல்லாத மக்களை வைத்திருக்கும் ஊர் கேடு தரும், அதனால் அந்த ஊரைத் தீக்கொளுத்தி விடுதலே கேடு தவிர்க்கும் என்கின்றான். பாரதி, கல்வியின் கலையின் இன்றியமை யாமையை வலியுறுத்தும் பாங்கை அறிந்து, இத்தகைய சமுதாயம் அமைய நாம் அனைவரும் முயலவேண்டும்.

பாரதி, எல்லாருக்கும் கல்வி கிடைக்காத கலியுகத்தில் பிறந்தான். அதுவும் பாரதி வாழ்ந்த கலியுகத்தில் ஏழைக்குக் கல்வி - கிடைக்கவில்லை என்பதை "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்பதன் மூலம் விளக்கினான். எல்லாருக்கும் கல்வி கிடைக்கும் யுகமே கிருதயுகம் என்கின்றான். நம் நாடு விடுதலை பெற்ற பிறகு பாரதியின் ஆணையை மேற் கொண்டு எல்லாருக்கும் கல்வி கொடுப்பதை நாட்டுக் குடியரசு, கடமையாகக் கொண்டது, எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஏன்? கலியுகத்தில் பிறந்து கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்குக் கூட முதியோர் கல்வி வகுப்புக்களைத் தொடங்கி இன்று கல்வியை வழங்கி வருகிறது மக்களாட்சி. இன்று பாரதியே இந்த மண்ணுக்கு வந்தாலும் அவன் கல்வியில்லாத ஊரைத் தேடிப் பார்த்தாலும் காண முடியாது. இந்த வகையில் பாரதியின் ஆணை நிறைவேற்றப் பெற்றிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. ஆனால், பாரதி நினைத்ததைப் போலப் பல வகைக் கல்வி தரும் பல வகைப் பள்ளிகள் தோன்றவில்லை. நாள் முழுதும் ஒரே வகுப்பறையில் வளரும் தலைமுறை அடைக்கப்பட வேண்டுமா? காலையில் எண் எழுத்தோடு கூடிய படிப்பு, மாலையில் தொழிற் படிப்பு, பின்மாலையில் கலைப் படிப்பு என்றெல்லாம் படிக்கும் வாய்ப்புகள் இந்த நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும். இத்துறையில் நம் அரசுகளின் கவனம் செல்வது நல்லது. எனவே, பாரதி ஒரு யுகச் சந்திப்புக் கவிஞனாகிறான்.

பாரதி, கல்வியில் ஆர்வம் காட்டினாலும், பலப்பல கற்க வேண்டுமென்று எடுத்துக் கூறினாலும் வீட்டு மொழியும் நாட்டு மொழியும் கற்காமல் வேறு வேறு மொழிகளைக் கற்பதை பாரதி விரும்பவில்லை. விரும்பாதது மட்டுமன்று; வெறுக்கிறான், வீட்டு மொழியாகிய தமிழ் வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். அவனறிந்த மொழிகளிலே தமிழ்தான் இனிமையானது என்று போற்றி மகிழ்கின்றான். அவன் அறிந்த உலகக் கவிஞர்களிலே கம்பனையும் வள்ளு வனையும் இளங்கோவையும் போல் பூமியில் எங்கேயும் பிறக்கவில்லையென்று கூறிப் பெருமைப் படுகின்றான். ஏன், மேற்கே வளர்கின்ற புத்தம் புதிய கலைகளெல்லாம் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றான். . இவை தமிழில் வராது என்று யாரோ ஒருவன் சொல்லுகிறான். இச்சொல் அவச்சொல் என்று பாரதி நினைக்கின்றான்; ஆற்றொணாத் துயருறுகின்றான்; அந்த அவச்சொல் நீங்க,

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!”

என்று தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுகின்றான்.

பாரதி, தமிழில் ஒன்றுமில்லை; ஆங்கிலத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று சொல்கிற அடிமைப் புத்தி நிறைந்த கலியுகத்தில் பிறந்தான்; வாழ்ந்தான்; வளர்ந்தான். அவன் கலியுகத்தில் தமிழ்த் தாய்க்கு இழைத்த கொடுமையை மாற்ற நினைக்கின்றான். தமிழ்த்தாய் அனைத்துத் துறையிலும் வளர்ந்து பொலிவுற அமையுமாறு தமிழ் மக்களைத் தூண்டு கின்றான். இத்துறையில் தமிழக மக்கள் முழுமையாகக் கலியுகத்தை மாய்த்துவிடவில்லை. இன்னமும் தமிழ், அறிவியல், தொழிலியல் மொழியாக வளர்ச்சியடைய வில்லை. தமிழக இளைஞர்கள் இவ்வகையில் போதிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். பாரதி, எண்ணிக்கையில் பல நூல்களைக் கற்க வேண்டும் என்று விரும்பவில்லை, நூல்கள் காடுகள் போல் மண்டலாம். பயனற்ற நூல்களைப் படிப்பதில் என்ன பயன்? மெய்ம்மை விரித்துரைக்கும் நல்ல நூல் ஒன்றைத் தேடிக் கற்க வேண்டும். அந்நூலுக்கு இசைந்தாற் போல் வாழவேண்டும். எந்தக் கருத்தோடும் யாரும் மாறுபட முடியும். மாறுபாடு கொள்ளுதலுக்கு எளிதில் இடம் கிடைக்கும். மாறுபாட்டினைக் கொண்டு வாதங்களை நீட்டிப்பது வாழ்க்கை நெறிக்கு உகந்ததன்று, கலியுகத்தில், படித்தவர்கள் அதிகம். ஏதோ ஒரு வகையில் பெரியவர்கள் என்று நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களும் கூட அற்பச் செய்திகளின் காரணமாகக் கூட மாறுபட்டுப் போட்டிகளை வளர்த்திருக்கின்றனர், வாதப் பிரதிவாதங்களை வளர்த்திருக் கின்றனர். ஏன் பகையைக்கூட வளர்த்து அழிவு செய்திருக் கின்றனர். பாரதி, இந்தக் கலியுகத்தை விரும்பவில்லை . ஒத்துப்போகக் கூடிய செய்திகளிலெல்லாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதுகின்றான். ஒத்துப் போதல் என்பது முதற்கொள்கை, அக்கொள்கை வந்த பிறகுதான் பல செய்திகளில் ஒத்துப் போக இயலும். எப்படியும் ஒத்துப் போதல் என்பது கிருத யுகத்தின் குணம். இதனை பாரதி,

"வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய்; மெய் கூறும்
நூலில் ஒத்தியல்கிலாய் போ போ போ
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ!”

(போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்-3)

என்று பாடுகின்றான்.

மேலும் கலியுகத்தில் வேதம் எது? என்று துணிய முடியாத குழப்பம், பலர் தாம் விரும்பிய நூல்களை யெல்லாம் வேதம் என்று சொல்லத் தொடங்கினர். வேதம் என்பதிலும், இந்தச் சமுதாய அளவில் வேதம் எது என்ற கொள்கையிலும், வேதம் சொல்லும் கொள்கையிலும் நிறைய மாறுபாடுகள் தோன்றின. பொதுவாகப் பழைமை எனப் போற்றப் பெற்ற வேதங்கள் மனிதகுலத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் . மேம்பாட்டுக்கும் இசைந்ததாக இல்லையென்று பாரதி நினைக்கின்றான் போல் தெரிகிறது. அதனால் "வேதம் புதுமை செய்” என்று கூறுகின்றான். பாரதி, எது வேதம்? என்ற சர்ச்சையில் இறங்கத் தயாராக இல்லை. பாரதி உண்மையை ஆராதிப்பவன். பாரதிக்குப் பொய்ம்மை கட்டோடு பிடிக்காது. பொய்ம்மையை விரித்துரைக்கும் நூல்களை எற்றி எறியச் சொல்கின்றான். பாரதி; வளர்ந்த தகுதி மிகுதியும் பெற்ற, தெளிவும் துணிவுமுடைய நெஞ்சினரை விரும்புகின்றான். ஆனால், கலியுகம் அப்படியில்லை. மெய்ம்மைக் குணம் இல்லாத வராய், பேதங்கள் பல கற்பித்து எளிதிற் பகை வளர்த்து நாட்டைப் பாழடித்துக் கொண்டிருந்தனர். உள்ளத்திலும் சமூகத்திலும் பரவிக்கிடந்த நோய்களுக்கேற்ப உடலிலும் நோய், உடல் நோயின் காரணமாகத் துன்புற்றனர். கல்லைத் தின்று செரிக்க வேண்டிய காலத்தில்கூட எதைச் சாப்பிடலாம்? இதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்றெல்லாம் ஆய்வு செய்யக்கூடிய பரிதாப நிலைக்கு ஆளாயினர், காற்றோடு கலந்து விண்ணேறிச் சாடும் திறன் வேண்டியவர்கள் காற்றைக் கண்டாலே காத தூரத்தில் ஓடி ஒதுங்கி வாழும் நிலையினராயினர். இது பாரதிக்கு கட்டோடு பிடிக்கவில்லை. கலியுகத்தின் பழைய பாரதத்தைப் 'போ, போ' என்று வெறுத்து ஒதுக்கித் தள்ளுகின்றான். அதே போல், கிருதயுகத்தின் புதிய பாரதத்தைக் கட்டியம் கூறி வரவேற்கின்றான். பாரதி, புதிய பாரதத்தை வரவேற்கும் பாடல் இதோ!

"மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேத மென்று போற்றுவாய் வாவாவா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வாவாவா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வாவாவா
நோய்ம்மை யற்ற சிந்தையாய் வாவாவா
நோய்க ளற்ற உடலினாய் வாவாவா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வாவாவா!

(போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்-6)

கலியுகத்தில் மிகமிக மோசமான அழுகும் மலத்தில் கிடந்து நெளியும் புழுக்களைப்போல மக்கள் வாழ்கின்றனர். அவர்களை நாள்தோறும் தின்று அழிக்கும் துன்பம் ஒன்றல்ல, இரண்டல்ல. வஞ்சகரும் சூதரும் வாழ்க்கையைச் சூறை யாடுகின்றனர். இவ்வளவுக்கும் ஆளான பிறரும் கூட அவர் களுக்குக் கோபம் வருவதில்லை. “எல்லாம் கொடுத்து வைத்தது”; “காலம் வந்தால் சரியாய்ப் போய் விடும்” என் றெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டே அழிந்தார்கள், 'நாட்டில் நல்ல சுகாதார வசதிகள் இன்மையால் பெருநோய் வந்தாலும் நாட்டின் அரசைத் தட்டிக் கேட்க மக்களுக்குத் துணிவு வரவில்லை. அரசைக் கண்டு பயந்தனர். அரசைக் கண்டு பயப்படுவதை பாரதி நையாண்டி செய்கின்றான்; கேலி செய்கின்றான். குடிமக்கள் கொடுக்கும் வரியை வைத்து' நாட்டைக் காக்கும் வேலையைச் செய்யும் அரசைக் கண்டு பயப்படுவானேன்? என்று கேட்கிறான். அது மட்டுமா? கலியுகத்து மக்கள் அச்சமே கொள்கையாக வாழ்வதைக் கண்டு பொருமுகின்றான். எதைக் கண்டு அஞ்சுவது என்று ஒரு வரையறை இல்லை என்ற கருத்தில் இவர், கண்டு அஞ்சாத பொருள் எதுவுமில்லை என்று எடுத்துக் காட்டு கின்றான். கொடுமையைக் கண்டு கோபம் கொள்ளாது போனால் வாழ்க்கையில் உயிர்ப்பில்லை என்பது பொருள். . சின்னத்தனங்களைக் கண்டு சீறாது போனால் வாழ்க்கையில் கொடுமையே மிஞ்சும், அதனால் பாரதி, இந்த நாட்டுக் குழந்தைகளை கிருதயுகத்திற்குத் தயார் செய்ய எண்ணி ‘புதிய ஆத்திசூடி' செய்கின்றான். பழைய ஆத்திசூடி கலியுகத்தில் பிறந்தது. ஔவையார். அருளிச் செய்தது என்பர். நமது நாட்டில் ஔவையார் என்ற பெயரில் வாழ்ந்தவர் பலர். அவர்களுள் எந்த ஔவையார் ஆத்திசூடி' செய்தார் என்பது துணிய முடியாத கருத்து. அந்த ஆத்திசூடி கல்லும் மண்ணும் கலந்த அரிசி போன்றது. அதாவது சில நல்லவைகளும் உண்டு. ஆனாலும் ஏற்கெனவே எய்த்துக் களைத்துப் போய், ஊர்வதை ஓட்டம் என்று கருதிக் கொண்டிருந்த சமுதாயம் அது, ஔவையாரின் ஆத்திசூடி ஊர்வதைக் கூடத் தடுத்துப் படுக்க வைத்துவிடும் தன்மையதாக இருந்தது. அதனால் கிருதயுகத்தைப் படைக்க நினைத்த பாரதி, கிருதயுகத்தைப் படைக்கும் சக்திகளாகத் தாம் வளர்க்கும் பாரதக் குழந்தைகளைப் பயிற்றுவிக்க புதிய ஆத்திசூடி செய்கின்றான். இந்தக் கலியுக சமுதாயத்தில் மரத்துப்போன குழந்தைகளைப் பார்த்து "ரௌத்திரம் பழகு” என்று கோபத்தைக் கற்றுக் கொள்ளும்படி சொல்கின்றான். சமூகத்தின் தீயசக்திகளாக விளங்கும் தீயமனிதர்களைப் பார்த்துச் "சீறுக” என்கின்றான். “சீறுவோர்ச் சீறு” என்பது பாரதியின் வாக்கு. இதையே விரித்து பாப்பாப் பாட்டிலும் பாடுகின்றான், கலியுகத்தின் ஔவைப் பாட்டி தீயோரைக் கண்டால் விலகு என்றாள். தீயோரைக் கண்டு விலகினால் தீமை போய் விடுமா? தீயோர்க்கு உரிய தண்டனை தராமல் - தப்பிக்கச் செய்துவிட்டால் தீயோர் எண்ணிக்கை ஒன்று, இரண்டு என்று கூடிப்போனால் என்ன செய்வது? தீயவர் எண்ணிக்கை கூடிப்போன பிறகு, எங்கு ஒதுங்குவது? அது மட்டுமா? தீயவர்கள் ஒதுங்கிப் போவதை நாகரிகம் என்று கருத மாட்டார்களே! அதனால் பாரதி. தீமையை எதிர்த்து நிற்கத் தூண்டிப் பழக்குகின்றான். "பாதகம் செய்பவரைப் பார்த்தால் விட்டு விடாதே பாப்பா! தாவிப் பிடி! பிடித்து மோது! மோதி மிதி! மிதித்ததோடு மட்டுமின்றி அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிடு” என்று பாப்பாவுக்குப் பயிற்சி தருகின்றான் பாரதி.

"பாதகம் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ள வாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

(பாப்பாப் பாட்டு-8)

கலியுகம் என்பது உழைக்காமல் உண்ணும் வாழ்க் கையைச் சிறப்புடையது என்று கருதுவது. கலியுக ஆவணங்களில் உழைக்காமல் உண்ணும் வசதி வாய்ப்புப் பெற்றவர்களின் தொழிலைக் குறிக்கும் பொழுது "சுக ஜீவனம்” என்று எழுதுவது மரபாக இருந்தது. அது மட்டுமன்று. கூடி வாழ்தல், கூடித் தொழில் செய்தல் ஆகியன அடியோடு வெறுக்கப்பட்ட காலம். கூடித்தொழில் செய்தால் தனது தொழில்நுட்பம் பலருக்குத் தெரிந்து விடுமே என்ற பயம். பலர், தொழில் தெரிந்தவராக வந்துவிட்டால் தனக்குரிய பெருமை போய்விடுமே என்ற அச்சம். அதைப் போலவே செய்யத் தெரியாதவராக இருந்தால் தன் தெரியாமை வெளியில் தெரிந்து விடுமே என்ற அச்சம். இன்னபிற எண்ணங்களால் கூடித் தொழில் செய்யாமல் ஒவ்வொருவராக வாழ்ந்ததால் ஒவ்வொருவரும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்து பயனற்றுப் போயினர். இதனைக் கண்ட பாரதி, கிருதயுகத்தில் இங்ஙனம் வாழக்கூடாது என்று முடிவெடுக்கிறான். வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு வேலைப் பங்கீடுகள் தேவை. கூடித் தொழில் செய்யவேண்டும். கூடித் தொழில் செய்தால்தான் கோடி சேர்க்கலாம்; மனிதனின் அறிவும் ஆற்றலும் விரிவடையும்; வீணே செலவழிக்காமலும் எஞ்சும், ஆதலால் கிருதயுகத்தின் இயல்பு கூடித் தொழில் செய்தலே. இத்துறையில் பாரதம் பாரதி வழியில் வளர்ந்து வருவது பாராட்டுதலுக்குரியது.

பாரத நாட்டில் நாட்டு மக்கள் கூடித் தொழில் செய்யும் பொதுத்துறையும் கூட்டுறவுத் துறையும் வளர்ந்து வருகின்றன. ஆனால், பல ஜென்மங்களாகத் தனித்துத் தனித்துத் தனிவுடைமை பேணி வாழ்ந்த சமுதாயத்தில் 'பொதுமைக் குணம் போதிய அளவு வளரவில்லை. தனியார் துறையில் நடைபெறும் தொழிலில் இருக்கிற நிர்வாகக் கட்டுக்கோப்பும், ஈட்டும் இலாபமும் பொதுத் துறைக்கு- கூட்டுறவுத் துறையில் போதிய அளவு இல்லை. இதற்குக் காரணம் பொதுமையுணர்வு செழிப்பாக ளராதுதான். ஆயினும் பொதுமைத் திசையில் நாடு திரும்பி விட்டது. மெல்ல வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பாரதி, ஆசிரியனாக இருந்தும் குழந்தைகளைப் பயிற்றுவிக்கிறான். அதேபொழுது வேடிக்கை, விளையாட்டுப் போக்கிலும் கூட குழந்தைகளின் சிந்தனைகளை வளர்க்க புதிய கோணங்கியாக நின்று பாடுகின்றான். கலியுகத்தின் கொடுமைகளைப் பார்த்து, திகைத்து நிற்கும் குழந்தைகளைப் பார்த்து பலன் சொல்பவன் போல கிருதயுகத்துக் குணங்களைச் சொல்லுகிறான்; கிருதயுகத்துச் செயல்களைச் சொல்லுகிறான். பாரதி, கலியுகத்தில் தோன்றி வளர்ந்த ஜாதிகள் எல்லாம் ஒரு குலமாகச் சேருது; சாதிச் சண்டைகள் போகுது என்று சொல்லுகிறான். கலியுகத்தின் பரிசாக இருந்த தரித்திரம் போகுது; கிருதயுகத்தின் கொடையாகச் செல்வம் பெருகுது என்கிறான். செய்யத் தக்கனவும் தகாதனவும் அறிந்து, பாவங்களைச் செய்யாது தவிர்க்க உதவும் படிப்பு வளருது என்கிறான். இதனைக் கேட்டவர்கள் படித்தவர்கள் சூது பண்ணுகிறானே என்று கேட்கின்றனர். படித்தவன் தானே சாமர்த்தியமாகச் சூது செய்கின்றான். ஆம்! இந்த நாடு இவ்வளவு இழி நிலைக்கு வந்ததற்குக் காரணம் படித்தவர்கள் என்ற பெயரில் அரைகுறைகள் செய்த சூதுகள் தான் காரணம் இல்லையானால் உழைப்பவருக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்பவருக்கு ஒரு நீதி என்றெல்லாம் இருக்குமா? இங்ஙனம் சொல்லும் நீதி சாத்திரங்களைச் சாத்திரமன்று என்று மறுத்து சதியென்று கூறுகின்றான். ஆதலால் படித்தவனாக நடித்துக் காட்டி நம்பிக்கையை உண்டாக்கிக் கொண்டு சூது பண்ணினால் ஐயோ என்று போவான் என்று பாரதி கடுமையாகவே சொல்கிறான்.

"படிச்சவன்சூதும் பாவமும் பண்ணினால் ஐயோ
என்று போவான். போவான்!”

என்று ஆத்திரமடங்கக் கூறுகிறான்.

ஆக, கிருதயுகத்தில் படித்தவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். சமூகத்திற்குத் தீமை செய்யமாட்டார்கள்; எந்தக் காரணத்தை முன்னிட்டும் சமூகத்தில் பிரிவினைகளை, பேதங்களை உண்டாக்க மாட்டார்கள். சமூகத்தின் வாழ்க்கையை மூடத்தனத்தால் கெடுக்காமல் வளர்ப்பர்; வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நம்பிக்கையைக் கொடுப்பர்; ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையை எப்படிப் பெரிதென நினைக்கிறார்களோ அதைவிட ஒரு மடங்கு கூடவே மற்றவர் நலனைப் பெரிதாகப் போற்றுவர். இதுவே பாரதியின் கிருதயுக இலட்சியம்.

"சாதிகள் சேருது: சண்டைகள் தொலையுது
...........................
தரித்திரம் போகுது செல்வம் வருது:
படிப்பு வளருது பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான் ஐயோவென்று போவான்”

பாரதி வேதம், சாத்திரம், சூத்திரம், மந்திரம் என்ற சொற்களிலே வெறுப்புக் கொண்டவனல்லன். கலியுகத்தில் இவை பயன்பட்ட வகையிலே தான் பாரதிக்குக் கோபம். வேதத்தின் பெயரால் வேற்றுமைகள் வளர்ந்தன. சாத்திரத்தின் பெயரால் சதிகள் நடந்தன. மந்திரங்கள் என்ற பெயரால் மாய்மாலங்கள் நடந்தன. இவைகளை பாரதி அடியோடு வெறுத்தான். இவை கலியுகத்தின் புன்மைகள் என்று போக்க நினைத்தான். அதே பொழுது வேதங்களும் சாத்திரங்களும் மந்திரங்களும் இல்லாமல் கிருதயுகத்தை ஆக்கவும் விரும்பவில்லை. இவைகளை நாட்டு மக்களுக்குரியவாறு, பயன் படுத்த நினைத்துத் திட்டமிடுகிறான். மந்திரங்களால் மட்டும் சமுதாயம் வளர்ந்து விடாது. தந்திரமும் வேண்டும். தந்திரம் என்பது இன்றைய உலக வழக்கில் வழங்குவது போல் கொச்சைத்தனமானதன்று. இன்று பெரும்பாலும் தந்திரம் என்பது ஏமாற்றுவது என்ற கொள்கையிலேயே வழங்கப்படு கிறது. ஆனால் தந்திரத்தின் நோக்கம் அதுவன்று. மிகப் பெரிய அரசியலோடு தந்திரம் என்ற சொல் பிணைக்கப் பெற்று "இராஜ தந்திரம்" என்று வழங்கப் பெறுகிறது. மிகப் பெரிய இராஜ தந்திரங்கள் போர்களைத் தவிர்க்கவும், குடிமக்களின் தீய பழக்கங்களைத் தவிர்க்கவும் பயன்பட்ட யுக்திகளேயாகும். தந்திரம் பெருகினாலும் எந்திரங்களும் பெருகி வளரவேண்டும். வியாபாரம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல. அதைச் செய்யும் முறைப்படி செய்தால் அஃது ஒரு தொண்டு. பாரதி புதிய கோணங்கியில்

"வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்.
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது:
மந்திர மெல்லாம் வளருது, வளருது."

என்று பாடுகின்றான்.

இப்பாடலில் "தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்" என்ற சொற்றொடர் கவனத்திற்குரியது. மானிட சாதி தொழில் செய்யத் தொடங்கிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. வரலாற்றில் தொழில் செய்யும் கருவிகளைக் கற்களால், உலோகத்தால் செய்து பயன்படுத்திய காலத்தை கற்காலம், உலோக காலம் என்பர். ஆனால், யாரோ சிலர் பிழைப்புக்காகத் தொழில் செய்து கொண்டிருந்தனர். அதனால் தொழில் பல்கிப் பெருகி வளரவில்லை. தொழிற் கல்வி பெருகி வளராததால் தொழில்துறையிலும் வளர்ச்சியும் மாற்றங்களும் இல்லாமல் போயிற்று. அதுமட்டுமல்ல, தொழிலாளியும் உரிமைகளற்றவனாக, தன் தொழிலை, உழைக்கும் சக்தியை அன்றாடப் பிழைப்புக்கு விற்பவனாக இருந்தான். இது கலியுகத்தின் அவலம், பாரதி, கிருதயுகத்தில் தொழில் வளரும் என்று அறைகூவல் விடுக்கின்றான். தொழிலாளி வாழ்வான் என்று உறுதி கூறுகிறான். ஆம்! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடியவனல்லவா? தொழிலாளியை வாழ்விக்காத யுகத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே தொழிலாளி வாழ்வான் என்று சொல்லுகிறான்.

பாரதி, கடவுள் நம்பிக்கையுடையவன். அழுத்தமான கடவுள் நம்பிக்கையுடையவன். ஆயினும் அவனுடைய கடவுள் நம்பிக்கை கலியுகச் சார்புடையதல்ல. மானிட சமுதாயத்தில் மதத்தை வளர்ப்பதற்காகச் சிந்திய வேர்வையை விட, மதச் சண்டைகளில் சிந்திய செங்குருதி மிகுதியென்பதை வரலாற்று ஏடுகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. கடவுள் உண்டா? இல்லையா? இவர்தான் கடவுள். அவர்தான் கடவுள் என் மதமே மதம் என்றெல்லாம் சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம். கடவுள் உண்டு என்று ஒருவர் கூறுவதாலேயே அவர் கடவுளை மற்றவர் களுக்குக் காட்டிவிடப் போவதில்லை. ஒருவர் கடவுள் இல்லையென்று கூறுவதாலேயே உள்ள கடவுளை இல்லாமற் செய்துவிடப் போவதில்லை! ஆம். அது போலவே எல்லாப் பொருள்களிலும் எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளே தெய்வம். அஃதொன்றே தெய்வம். பலர் வணங்கும் தெய்வம். அத்தெய்வத்தை எப்பெயர் கொண்டு எவர் வாழ்த்தினால் என்ன? தீ வேள்வியை செய்து வணங்கும் பார்ப்பனர், நாள்தோறும் திசை நோக்கி தொழும் துருக்கர், சிலுவையின் முன்னே நின்று வணங்கும் கிறித்தவர்இவர்கள் எல்லாரும் வணங்குவது ஒன்றைத்தானே! ஏன் சண்டைகள்? என்று கேட்கின்றான். கலியுகம் மதச் சண்டைகள் நிறைந்த யுகம். இந்த மதச் சண்டைகளை புரோகிதர்கள் வளர்த்தனர். "இவர் தேவர், அவர் தேவர்" என்று கடவுள் போட்டிகளை உண்டாக்கினர். இந்தப் பொல்லாத கலியுகத்தை மாற்றிச் சமயங்களைக் கடந்த பொது நெறியைக் கிருதயுக நெறியாக்குகின்றான் பாரதி.

சமயங்களைக் கடந்த சன்மார்க்க நெறிகாண வேண்டு மென்று வள்ளற் பெருமானும் வற்புறுத்தினார். பாரதி, கிருத யுகத்தில் சமயங்களைக் கடந்த பொதுமைப் பண்பிருக்கும் என்று வலியுறுத்தினான். இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் இந்த அரிய பண்பு வளராமல் போய்விடவில்லை. ஆனாலும் இந்த சன்மார்க்க நெறி அணி வலிமை பெறவில்லை. இன்றும் மத மாற்றங்கள் மதச் சண்டைகள் முதலிய வீணான வேலைகளில் சிலர் ஈடுபடுவது பாரதிக்கு உடன்பாடன்று. நாட்டின் நன்மைக்கும் ஏற்றதன்று. நாட்டின் மதச் சார்பற்ற தன்மை குடிமக்களின் ஒழுக்கமாக இடம் பெறவேண்டும். நான் கடவுளைத் தொழுகிறேன். நான் பலனை அடைகிறேன். கடவுளைத் தொழாமல் கடவுளே இல்லையென்பவனோடு எனக்கேன் சண்டை? நான் என்ன கடவுளைக் காப்பாற்றப் பிறந்தேனா? இல்லை கடவுள்தான் என்னைப் போன்றவர்களால் காப்பாற்றப்படுகிற அளவுக்கு பலமற்றவனா? அதுபோலவே கடவுள் உண்டு என்கிற நான் தொழுகிறேன். கடவுளே இல்லையென்று சொல்லி என் நம்பிக்கையைச் சிதற அடிப்பானேன்? கடவுள் நம்பிக்கையை மறுப்பது என்பது வேறு. கடவுள் நம்பிக்கையால் நடக்கும் சமூகப் படுகொலைகளை மறுப்பது என்பது வேறு? என்ற நியாயங்கள் தெரிந்ததாக வேண்டும். அது போலவே யார்; எப்பெயரில் எந்த உருவத்தில் தொழுதாலும் கடவுள் ஒன்றே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகும் வரை மதத்தால் மக்களுக்குப் பயன் ஏற்படாது. இதனை பாரதி,

"தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் ஏசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்."

என்று கூறுகின்றான்.

மேலும் புதிய ஆத்திசூடியை பரம்பொருளை வாழ்த்தித் தொடங்குகின்றான். இந்தப் பரம் பொருள் வாழ்த்து டிறை மொழியென ஏற்றுப் போற்றத் தக்கது. இப்பரம்பொருள் வாழ்த்தை நாள்தோறும் படித்தல், ஒதுதல் எல்லாச் சமய நிறுவனங்களிலும் நிகழ்தல் வேண்டும். எல்லாக் கல்விக் கூடங்களிலும் இதனையே கடவுள் வாழ்த்தாக்கலாம். இப்பாடலை நாள்தோறும் ஓதுவதனால் இறைமை உணர்வு வளரும். பொதுமையுணர்வும் வளரும். அமர வாழ்வையும் அடையலாம்.

பாரதி கிருதயுகத்தின் பரம்பொருள் வாழ்த்தெனப் பாடித்தந்த பாடல் இதோ!

ஆத்திசூடி, இளம்பிறை யணிந்து
மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம் பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்.

பாரதி கலியுகத்தில் பிறந்தவன்; வாழ்ந்தவன். கலியுகத்தில் தவம், புண்ணியம், யோகம், யாகம், ஞானம் என்ற சொற்கள் தாராளமாகப் புழங்கின. இவையனைத்தும் இந்த நாட்டு மக்களை இம்மியும் உயர்த்தவில்லை. புல்லிய அடிமைச் சகதியில் புரண்டு பொய்ம்மையிலே மூழ்கித் துன்பத்திலே துவண்டு வாழ்ந்தனர். ஏன் இன்றும்கூட நம்மில் சில பெரியார்கள் இந்தப் பொருந்தாப் பொய்ம்மை நெறியையே நெறியெனக் காட்டி விளம்பரம் செய்வதைக் காணத்தான் செய்கிறோம். கேட்கத்தான் செய்கிறோம். இவர்கள் திருந்தும் நாள் எந்நாளோ? அல்லது வையகம் சிறியெழுந்து திருத்தும் நாள் எந்நாளோ? தவம் என்றால் உண்ணாதிருத்தல், உறங்காதிருத்தல், வாழ்க்கை இன்பங் களை நுகராதிருத்தல், ஒதுங்கியிருத்தல், கண்மூடி மௌனி யாயிருத்தல் என்றெல்லாம்.சொன்ன தவநெறியினை பாரதி மறுக்கிறான். பாரதி, எந்த வகையிலும் வறட்சித் தன்மையுடைய துறவை, சமுதாயத்தை விட்டு விலகியோடும் துறவை விரும்பினானில்லை. பெண்மையை இழிவென்று துறக்கும் துறவுக் கொள்கையை விவாதம் செய்து மறுக்கிறான். கடவுளர்கள்-சிவன், திருமால் போன்றவர்கள். மணம் செய்து கொண்டது தவறா? என்று கேட்கிறான். இங்ங்ண்ம் தவம் செய்தவர்கள்கூட உயிர்த் துன்பம் நீக்கவில்லையே என்று நினைந்து சாம்புகிறான். எனவே, பாரதி இத்துறையிலும் புதுமை காணும் யுக சந்திப்புக் கவிஞனாக விளங்குகிறான். இன்று நாட்டில் எத்தனையோ பேர் எது நல்லது? எது கெட்டது? எது இனியது? எது துன்பம்? எது வாழும் வழி? என்றெல்லாம் அறியாமல், அறிந்து கொள்ள முடியாமல் திகைத்துத் தேம்பி நிற்கின்றனர். நாள்தோறும் இவர்கள் சிலரைச் சந்தித்து இனிய சொற்களால் நல்லன எடுத்துக்கூறி, அவர்களுக்கு உரிய இன்பம் பயப்ப்னவாகிய நன்மைகளைச் செய்தல் தவம் என்கிறான். இல்லை, பெருந்தவம் என்கிறான். கிருதயுகத்தின் தவம் இதுவேயாம்.

புண்ணியம் எது? புண்ணிய மூர்த்தி யார்? இந்தக் கேள்வியை கலியுக மனிதனிடத்தில் கேட்டால் விடை விநோதமாக இருக்கும். யார் எத்துன்பத்தை அனுபவித் தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாது ஆண்டவன் திருக்கோயில் முன்றிலிலேயே பிச்சைக்காரரை வாழவிட்டு பிச்சையெடுத்தும் வாழவும் முடியாமல் ஒரு முழக்கயிற்றைத் தேடி நான்று கொள்ளும் அளவுக்கு வையகத்தின் துன்பம் ஆர்: பக்கத்திலிருக்கும் மனிதன் புழுவாய்த் துடித்தாலும் இவற்றையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் பூசை மட்டும் செய்து என்ன பயன்! பாரதி, கிருதயுகக் கவிஞன். அவன் புண்ணிய மூர்த்திக்குப் புது இலக்கணம் தருகின்றான்.

"பக்கத் திருந்தவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி"

யோகம் என்பது மூச்சை அடக்கி வாழ்தல், மோனத்திருத்தல் என்றெல்லாம் கலியுகம் கூறியது. ஆனால், நாகரிகக் கலியுகத்தின் யோகம் பெரிய நிறுவனங்களாக வளர்ந்து விட்டன. தனி விமான தளம் அமைத்துக் கொள்ளும் அளவுக்கு யோகம் வெற்றி பெற்று விட்டது. அடேயப்பா! இந்திய நாட்டின் ஏழ்மைக்கும் வறுமைக்கும் துணை செய்ய முடியாத யோகத்திற்கு மேற்கு நாடுகளில் எவ்வளவு யோகம் என்கிறீர்கள்! ஒருபுறம் உலகத்தை வணிகச் சந்தையின் மூலம் சுரண்டியும் புதுப் புதுக் கொலைக் கருவிகளைக் கொண்டு கொலை வெறி கொண்டாடும் நாடுகளுக்கு நம்முடைய யோகிகள் மீதும் பற்று உண்டு. பற்றுக்குப் பொருள்தான் புரியவில்லை. கலியுகம் குழப்படி செய்வதிலும் விஞ்சியதுதான். பாரதி கிருதயுகத்தின் யோகம் இதுவெனக் காட்டுகின்றான். ஊருக்கு உழைத்திடல் யோகம் யாகம் என்பது என்ன? தீயை மூட்டி அதில் நெய்யை ஊற்றுவதா, என்ன? இது கலியுகத்தின் யாகம்! பாரதி, ஊரவரும் உலகத்தவரும் நலமுற்று வாழ்ந்திட உடல் வருந்த உழைத்திடுதல் யாகம் என்கிறான். ஞானம் எது? கலியுகக்காரரைக் கேளுங்கள்! படித்தவைகளையெல்லாம் 'சளசள என்று ஒப்பிப்பவர்களைப் பார்த்து ஞானி என்பர். குறுக்கே ஒரு கேள்வி கேட்டு விட்டால் அல்லது ஐய விளக்கம் கேட்டு விட்டால் இந்த 'ஞானவான்'களுக்குக் கோபம் வரும்; பொங்கி எழுவர். பிடி சாபம் என்பர்.

பாரதி கிருதயுகத்துக் கவிஞன். அவன் ஞானம் என்பதற்கு ஒர் புது விளக்கம் தருகிறான். போருக்கே நின்றாலும் உளம் பொங்கக் கூடாது என்கிறான். உளம் பொங்காது அமைதியாக இருத்தல் ஞானம் என்கிறான். பானையில் இருக்கிற தண்ணிர் கொதிக்கலாம். பானையும் கொதிப்பதா? எனவே ஞானம் என்பது என்ன? எந்த அநீதியைச் சந்தித்துப் போராடினாலும் உள்ளத்தில் அன்பும் அருளும் தழுவிய அமைதி வேண்டும். இந்தச் சூழ்நிலையில் போரிடும் போரே நியாயமான போர். ஆத்திரத்தில்-பகையில் போரிடும் போர் நியாயமாகாது. நீதியுமாகாது. ஆதலால், ஞானம் என்பது,

"போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்.”

பாரதி கிருதயுகத்தில் வளர்ந்த இந்த முடிவைச் சித்திரித்து இப்பாட்டில் காட்டுகிறான். இப்பாட்டு தமிழர் உயிர் பெற்ற பாட்டில் இருக்கிறது. கிருதயுகம் வந்தால்தான் தமிழர் உயிர் பெறுவர். நூற்றாண்டு விழாக் கொண்டாடும் தமிழகம் பாரதியின் கிருதயுகத்தைக் காண்பதாக!

ஊருக் குழைத்திடல் யோகம்-நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்.

(திருச்சி, அகில இந்திய வானொலியில்
121.82-இல் ஆற்றிய இலக்கியப் பேருரை)

(நன்றி, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம்,)

எந்நிலையும் பொதுவே!

பாரதி, தமிழ்க் கவிஞர்கள் உலகத்தின் ஒரு புதிய தொடக்கமானவன்; பாரதி, பாரத நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்பு மையமானவன். பாரதி, அவன் வாழ்ந்த காலத்திற்குக் கருத்துக்களைத் தந்தான்; எழுச்சியைத் தந்தான். பாரதி, அவன் காலத்திய மானிட சாதியை ஆவேசப்படுத்தினான். பாரதி, வரலாற்றுக் கவிஞனானான்.

பாரதி, அடிமை நாட்டில் பிறந்தான்! அரசியல் போக்கில் அடிமையாகவே வாழ்ந்தான்! ஆனால், பாரதியின் ஆன்மா விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் ஆகித்தான் நாடு விடுதலை பெற்றது. தன்னளவில் விடுதலை பெறாத கவிஞன், எழுத்தாளன், பேச்சாளன், அரசியல் தலைவன் ஆகியோரால் நாடு விடுதலையும் பெறாது வளரவும் வளராது.

ஒரு நாடு திடீரென்று எதிர்பாராமல் அடிமையாகி விடுவதில்லை. அடிமைப்படுவதற்குரிய தீய இயல்புகள் தோன்றி, பல தலைமுறைகள் வளர்ந்த பிறகுதான் நாடு அடிமையாகிறது. பாரதம் அடிமைத்தனத்தை, அடிமைப் புத்தியைப் பல தலைமுறைகளாகப் படிப்படியாகப் பெற்று வளர்ந்து வந்தது, நெறிமுறை பிறழ்ந்த நிலையில்! இங்கு வளர்ச்சி, ஆக்க வழியில் அன்று; அழிவு வழியில்!

பாரத சமுதாயத்தின் வாழ்க்கையைக் கெடுத்தவை சாதி, மத உணர்ச்சிகளேயாம். பாரத சமுதாயத்தில் எண்ணத் தொலையாத சாதிகள்! இதற்குச் சாத்திரங்களின் ஆதாரம்! இந்தச் சாதிமுறைகளுக்குக் கடவுள், பாதுகாப்பாளர் என்று கூறும் அளவுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது. அடிமையாகப் பிறந்த பாரதி, நாட்டின் அடிமைத்தளத்திற்குக் காரணமான மூல நோயைக் கண்டு பிடிக்கிறான். நோய் முற்றிய நிலையில் தமது கவிதை வழி மருத்துவம் செய்கிறான்.

சாதிகளைப் பார்த்துப் பழகுதல் கூடாது; அன்பு காட்டுதல் கூடாது. அதுபோலவே சாதி காரணமாகப் பகை பார்ாட்டுதல் கூடாது. இது பாரதியின் முதற்பாடம். சாதிக் கொடுமைகளைவிட மதவேற்றுமை பாராட்டுதல் பெரும் தீது, சாதி வேற்றுமைகள்கூட எளிதில் நீங்கும். மத வேற்றுமைகள் எளிதில் நீங்கா ஏன்? கடவுள்கள் சண்டை போட்டுக் கொண்டதாகப் புராணங்கள் செய்து பிழைப்பு நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் வாழும் நாடு இது. கடவுள்கள் பலவென்று ஆகி இந்தக் கடவுள் அந்தக் கடவுள் என்று கடவுள்களின் சக்தி பற்றிய சர்ச்சை; இந்த சர்ச்சைச் சந்தடியில் கடவுளேகூடத் தன்னை மறைத்துக் கொண்டு விட்டார். மதவேற்றுமைகளைப் பேணிவளர்த்து மனித குலத்தை அழிக்க மத நிறுவனங்கள் தோன்றிவிட்டன. புரோகிதர்கள் பெருகிவிட்டனர். இவர்களுக்குக் கடவுளைப் பற்றியும் கவலையில்லை! மனிதகுலத்தைப் பற்றியும் கவலையில்லை! ஆதலால், வேற்றுமைகள் பல்கிப் பெருகித் தெருவுக்குத் தெரு கோயில்-கடவுள்விழா என்கிற பெயரில் மனிதன் நிர்வாண விளம்பரப் பண்டமாகிக் கெட்டொழி கின்றான். இந்த மூல நோய்க்குப் பாரதி முதல் மருத்துவம் செய்கிறான். சாதியைப் பார்க்காதே! கேட்காதே! சாதி முறைகளுக்கு உடன்படாதே! இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு குலம்! ஓரினம்! புகழும் பெருமையும் அனைவருக்கும் உண்டு. சாதி, மத வேற்றுமைகள் என்கிற தீமை பெற்றெடுத்த தீமை அழுக்காறு, ஒருவர் உயர்ந்தால் மற்றவர் பொறார். பொறாமையால் சாதியைக் காட்டி, ஊரைக் கூட்டிப் பழிப்பர்! இத்தகு சூழ்நிலையில் தகுதி பெற்றவரும் அத்தகுதி தமக்கே உரியது என்றும் சமுதாயத்திற்கு அதில் என்ன பங்கு இருக்கிறது என்றும் பாதுகாப்பு உணர்வால் தருக்கி நடக்கத் தலைப்படுவர். இதன் விளைவாகத் 'தகுதி' 'பதவி' என்பனவற்றிற்கு யாரும் உரியரல்லாமல் இழப்பர்; அடிமைகளாவர்; அல்லற்படுவர். அதனால் பதவியும் தகுதியும் தனிமனிதருக்குரியனவல்ல. சமுதாயத்திற்குரியன. வாழ்வும் வீழ்ச்சியும் தனி மனிதர்களைச் சார்ந்தவையல்ல. சமுதாயத்தைச் சார்ந்தவை. இந்தப் புத்திசாலித்தனம் வந்துவிட்டால், பொதுமை உணர்வு தோன்றி விட்டால் பாரத சமுதாயம் விடுதலை பெற்றுவிடும். இது பாரதியின் நம்பிக்கை.

"எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்!"

பாரதியார்

பாரதியின் திட்டங்கள்

பாரதி ஒரு கவிஞன். கவிதைகள் மட்டும் பொழியத் தெரிந்த கவிஞனல்லன். பாரதி, திட்டமிடும் ஒரு சமுதாயப் பொருளியல் விஞ்ஞானி! பாரதி இந்த நாட்டின் முன்னேற்றத்திற்குப் பல செயல் திட்டங்களை எண்ணிச் செய்ய வேண்டும்-இல்லை, செய்வோம் என்று உறுதி பூணுகின்றான். பாரத நாட்டின் வடஎல்லை, இமயப் பனிமலை! இமயம், இந்த நாட்டு வளத்தின் ஊற்று. அதன் வளம் முழுவதையும் அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும். வெள்ளிப் பனிமலை மீது ஏறுதல் வீரம் செறிந்த முயற்சி. பாரத மக்கள் வீரம் செறிந்தவர்களாக விளங்க வேண்டும். இமயப் பணிமலை நமது எல்லைக்கோடு. அந்நியர் ஆக்கிரமிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாத்திடப் பனிமலை மீது சுற்றுதல் அவசியம். ஆதலால், "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்கிறான். பாரதியின் கனவு இன்று உண்மையாகி வருகிறது. இன்று, ஆண்களும் பெண்களும் அணி அணியாகப் பனிமலை ஏறும் சாதனையைச் செய்து வருகின்றனர்.

மலைக்கு எதிர் கடல்! மலை உயரமானது; கடல் ஆழமானது; அகலமானது. பாரத நாடு மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப் பெற்ற நாடு இக்கடலில் உள்ள செல்வம் அளப்பிலாதது. கிழக்குக் கடலில் முத்து! மேற்குக் கடலில் எண்ணெய் வளம்! இவைகளையெல்லாம் கண்டு அனுபவத்திற்குக் கொண்டு வரவேண்டும். அது மட்டுமா? கடல் சூழ்ந்த நாடாதலால், கடல் வழிப் படையெடுப்பு வராமல் பாதுகாக்கக் கடல்களில் காவல் தேவை. இது பாரதியின் திட்டம். இன்று விசாகப் பட்டினத்தில் கப்பல் கட்டும் தளம் இருக்கிறது. பாரதம் சொந்தக் கப்பல்களைக் கட்டுகிறது.

வீதிகள் தோறும் பள்ளிகள் தேவை. ஆனால், பள்ளிகள் புத்தகப் புழுக்களை, ஒப்புவிக்கும் எந்திரங்களை, குமாஸ்தாக்களை, தேடித் திரியும் தன்னம்பிக்கையில்லாதவர்களை உற்பத்தி செய்து அனுப்பி என்ன பயன்? கல்வி கற்றவர்கள் உயிருணர்ச்சி உடையவர்களாக, எழுச்சியுடையவர்களாக விளங்க வேண்டும். இத்தகைய ஆற்றலை சமய வாழ்க்கையால், கடவுள் வழிபாட்டால் தான் பெறமுடியும் என்பதை, பாரதி உணர்ந்து, "பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடுகின்றான்.

சிங்களத் தீவாகிய இலங்கை, நமது நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த உறவை மேலும் வளர்ப்பது பாரதியின் நோக்கம், ஆதலால் எளிதில் பயணம் செய்ய பாலம் அமைக்க ஆசைப்படுகின்றான். இஃது இதுவரை நடைபெறவில்லை. இனி எதிர் வரும் காலத்தில் நடக்காமற் போகாது. அடுத்து சேது என்பது தென் கடற்கரையிலிருந்த ஓர் ஊர்ப்பகுதி. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்ற ஊரருகில் இருந்த ஊர், இந்த ஊரைக் கடல் கொண்டுவிட்டது. இராமன் இலங்கைக்கு அணைகட்டிச் சென்ற இடம் இது. பழைமை போற்றும் நெறியிலும் புதுமை படைக்கும் முனைப்பிலும் "சேதுவை மேடுறுத்தி விதி சமைக்க"த் திட்டம் தந்தான். நடுவண் அரசு இத்திட்டத்தை ஆராய்ந்தது; எடுத்துக் கொண்டிருந்தது; பின் கைவிட்டு விட்டது. ஏன்? என்பது புரியவில்லை. சேதுத் திட்டத்தைப் பாரதியின் நினைவாக வற்புறுத்த வேண்டும்.

பாரதியின் அடுத்த திட்டம் மிக மிக முக்கியமானது. இத்திட்டத்தைத் தந்ததின் மூலம் பாரதி எவ்வளவு பெரிய அறிஞன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. காதலையும், வீரத்தையும், கடவுளையும், அரசனையும் மட்டும் பாடிக் களித்துக் கொண்டிருந்த கவிஞர்களின் உலகத்தில் ஓர் அறிஞன்-விஞ்ஞானி தோன்றியது அதிசயம். வடபுலத்தில் கங்கை ஓடுகிறது! கங்கை வற்றாத ஆறு. ஏன்? பல சமயங்களில் வெள்ளப் பெருக்காக ஓடக் கூடிய ஆறு! வெள்ளம் பெருகி வரும் பொழுது நிறைய இழப்பு ஏற்படுகிறது. கங்கையின் வெள்ளம் கடலிற் சென்று கலந்து வீணாகிறது. கங்கையைக் குமரிக் கடலில் கொண்டு வந்து சேர்க்கத் தக்கவாறு கால்வாய் அமைத்தால் தண்ணிர் வசதியில்லாத பிற பகுதிகளைச் செழிக்கச் செய்யலாம். குமரிக் கடலிலிருந்து கங்கை வரை பயணம் நீர்வழி மேற்கொள்ளலாம். இஃதோர் அருமையான திட்டம். இத்திட்டத்தைப் பாரதி தந்துள்ளான். இதன் அவசியத்தைத் தேவையை நாடு உணர்ந்து வருகிறது; அறிஞர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், நடுவண் அரசுக்கு இன்னும் இந்த எண்ணம் வரவில்லை. எப்பொழுது வரும் என்பதும் தெரியவில்லை. குமரி-கங்கை இணைப்பு இல்லை-காவிரிகங்கை இணைப்பு உடனடியாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய திட்டம். பாரதி நூற்றாண்டில் பாரத அரசுக்கு இந்த உணர்வை உண்டாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

அடுத்து, மண்ணின் மடியில்-சுரங்கத்தில் குவிந்திருக்கும் செல்வங்களைத் தோண்டி வெளியே கொணர்தல்: மண், வளமுள்ளது! பலவகை வளமுள்ளது. மண்ணின் செல்வத்தை அனுபவத்திற்குக் கொண்டுவர மண்ணைக் குடைந்து வேலை செய்யத் தூண்டுகிறான் பாரதி, நெய்வேலி நிலக்கரியும், சேலத்து இரும்பும், கோலார் தங்கவயல் தங்கமும் பாரதியின் சிந்தனை வழி மலர்ந்த செயல்கள்! மண்ணில் தோண்டி எடுக்கப்படும் பொருள்களை விற்கச் சந்தை வேண்டும். நாடு செழிக்க அயல் நாடுகளில் செய்யும் வர்த்தகம் வளர வேண்டும். உலகின் கண் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நம் நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்று உலக நாடுகளில் இந்தியப் பொருள்கள் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. இது பாரதியின் ஆசைகளுள் நிறைவேறிய ஒன்று.

அடுத்து, தென்கடலில்-தூத்துக்குடியில் முத்துக் குளிக்க வேண்டும் என்பது. தென்கடல், வணிகர்கள் வந்து மொய்க்கும் துறைமுகமாகச் சிறந்து விளங்க வேண்டும். இது பாரதியின் எண்ணம். இன்று, தூத்துக்குடியில் புதிய துறைமுகம் அமைக்கப்பெற்று, ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பெற்று வருகின்றன. பாரதியின் நினைவாகிய இது நிலையான செயலாக உருப்பெற்றுள்ளதில் தலையாயது.

அடுத்து, பாரதியின் தொழில் திட்டங்கள்! மேலும் வளர்ந்து ஆலைகள் அமைக்கவும், தொழிற்சாலைகள் அமைக்கவும் தூண்டுகின்றான். பாரத நாடு விடுதலைப் பெற்ற பிறகு பல தொழிற்சாலைகள் நிறுவப்பெற்றுள்ளன. தொழிற்புரட்சி நடைபெற்று வருகிறது. இது போதுமா? நாடு வளர வள்ர, வல்லரசுகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். பெங்களுர் விமானத் தொழிற்சாலையும், திருச்சி கனரகத் தொழிற்சாலையும், ஆவடி டாங்கு தொழிற்சாலையும் பாரதியின் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. பாகிஸ்தான் சண்டையில் அமெரிக்க வல்லரசின் டாங்கு களையெல்லாம் சந்தித்து நின்று பெற்ற வெற்றி பாரதிக்குரிய காணிக்கையாகும்.

ஒரு நாடு வலிமையும் பொருளும் பெற்று, வளர்ந்து வாழ, அந்நாட்டு மக்கள் ஆவேச உணர்ச்சியுடன் உழைக்க வேண்டும். அப்பொழுதுதான் வற்றாத செல்வம் பெருகும். ஓய்வு என்பது வேலை மாற்றமே தவிர, உறங்குதல், ஊர் கற்றுதல், வம்பளத்தல் அல்ல, ஓயாது உழைக்கும் உணர்ச்சி நம் நாட்டு மக்களிடத்தில் சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகள் வரையிருந்தது; நாடும் வளர்ந்தது. இப்பொழுது ஓயாது உழைக்கும் ஆவேசம் இல்லை; எங்கணும் இல்லை. இன்று எங்குப் பார்த்தாலும் வேலையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி! விடுப்பு வியாதி உழைக்காமல் வாழும் ஆசை வளர்ந்து நாட்டில் வறுமை வளர்ந்து கொண்டிருக்கிறது. இது, பாரதிக்குச் சற்றும் பிடிக்காத ஒன்று. பாரதி நூற்றாண்டில் புதிய எழுச்சியினைப் பெறுவோமாக! உடலுக்கு நோய் வந்தாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு உழைக்க வேண்டுமே தவிர, தலைசாய்த்துப் படுக்கக்கூடாது. இது பாரதியின் ஆணை! பாரதியின் ஆணையை இந்த நூற்றாண்டிலிருந்து செயலாக்குவோமாக!

நாடு வளர கருத்து வளர்ச்சி தேவை. மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குரிய கருத்துக்கள் எல்லாப் பகுதிகளிலும் எல்லா மொழிகளிலும் தோன்றலாம்; தோன்றும். கருத்துக்களைத் தேர்ந்தெடுப்பதில் எல்லைக் கோடுகள் வைத்துக் கொண்டால், சமுதாயம் தேக்கமடையும். வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள் அருகும்; உயிர் சுருங்கும். இது கூடவே கூடாது. மனித உலகம் சொல்லியும் கேட்டும் வாழ்ந்தால்தான் வளர முடியும். அறிந்ததைச் சொல்லுதலும் அறியாததைக் கேட்டறிந்து கொள்ளுதலும் வாழ்க்கையின்பொறிகளின் அமைப்பு அறிவை வளர்க்கவும், அறியாமையை அறிவாக மாற்றி வளர்க்கவும் வாயும் செவிகளும் பயன்படவேண்டும். இன்று நூற்றுக்கு எழுபத்தைந்து பேருக்கு இந்த வகையில் பொறிகள் பயன்படுவதில்லை, ஊமையும் செவிடும் சேர்ந்தால் என்ன ஆகும்? பயங்கரமான தீமை! அதுபோலத்தான் இன்றைய மக்கள் சேருகின்றனர்; கூடுகின்றனர். இது தவறு. காசியில் சொல்லப்படும் ஒன்றைக் காஞ்சியிலிருப்பவர்கள் கேட்க விரும்ப வேண்டும். அங்ஙனம் கேட்டறிந்து கொள்ள மொழியோ, இனமோ தடையாய் அமைதல் கூடாது. காசியும் காஞ்சியும் பல்கலைக் கழகங்கள் அமைந்து விளங்கிய பெருநகரங்கள். காசி, வடபுல நகரத்தின் தலைநகரம், காஞ்சி, தென்புல நகரத்தின் தலைநகரம், கங்கையும் காவிரியும் இணைந்தால் போதாது. இவ்விரு

ஆற்றங்கரை நாகரிகங்களும் கலக்க வேண்டும். இவ்விரு நாகரிக மக்களும் ஒன்றாக, ஒருமையுடையராகிக் கலந்து வாழவேண்டும். இதுவே பாரதியின் இலட்சியம், பாரதியின் சொற்கள் வெற்றி பெற்று இவ்விரு நகரங்களையும் தொலைபேசி வழி இணைத்துவிட்டது. பாரதி சொல்லும் பொருள் வழி, உணர்வு வழி இணைப்பு வரவேண்டும்? அவ்வகையில் உருவாகும் சாதனை, பாரதிக்கு நிலையான நினைவாகும்.

வேறுபட்ட சூழ்நிலைகளைக் கடந்து ஒருமையுணர்வு, உண்டாக்க இயற்கையான காதலும், கனிவு தரும் இசையும் துணை செய்யும்! பாரத மக்கள் தம் இனத்திலேயே காதலித்துத் திருமணம் செய்யாமல் அயல் மாநிலப் பெண்களைக் காதலிக்கவும் வழிகாட்டுகிறார். அவ்வழி உறவுகள் வளரும்! ஒருமைப்பாடு வளரும்! பாரத சமுதாயமும் செழித்து வளர்ந்து வாழும்!

பாரதியின் தொழிற் புரட்சி

பாரத நாடு வேளாண்மைத் தொழிலிற் சிறந்த நாடு. ஒரு நாடு முன்னேற, பொருள் வளத்தில் செழிக்க தொழில் வளர்ச்சியும் தேவை. தொழிற் புரட்சி நடந்தால்தான் சமுதாயம் செழித்து வளரும். என்பது மார்க்சியக் கொள்கை. இந்தத் தத்துவத்தை பாரதி, நன்கு உணர்ந்திருந்தான். உழவர்களும் தொழிலாளர்களும் இணைந்தால்தான் சமுதாய மாற்றங்கள் நிகழும்; செழிப்புறும் என்ற சமுதாய அறிவியல் கொள்கைக்கு, பாரத நாட்டில் பாரதிதான் முதன் முதலில் முழக்கம் செய்தான்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடினான்.

தொழிற் புரட்சியில் வேலை வாய்ப்பு பெருகும்; வளம் கொழிக்கும்; அறிவியல் பெருகி வளரும். இந்தியா இங்கிலாந் திற்குத் தேவையாக இருந்தது. வளத்தைச் சுரண்டுவதற்காக மட்டுமல்ல, இங்கிலாந்தின் பொருள்களுக்கு ஒரு விற்பனைச் சந்தை தேவை என்பதும் ஆகும். ஆதலால், இங்கிலாந்து என்ற ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி இந்த நாடு தொழிலில் சிறந்து விளங்கவேண்டும்; அன்னியப் பொருள்களின்றி இந்தியா வாழக்கூடிய பலத்தினைப் பெற வேண்டும். இது பாரதியின் கனவு. பெரிய பெரிய ஆலைகளை அமைக்க வேண்டும்; தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும். பஞ்சினில், பட்டினில் ஆடைகள் உற்பத்தி செய்ய வேண்டும். ஆயுதங்கள் செய்ய வேண்டும். ஆம்! உற்பத்திக்குப் பயன்படும் கருவிகள் செய்ய வேண்டும். மீண்டும் கூறுவான், "உழு படைகள் செய்வோம்" என்று! போருக்குப் பயன்படும் ஆயுதமும் செய்ய வேண்டும். ஏகாதிபத்திய வல்லரசுகளின் கொட்டம் இன்னமும் அடங்கிய பாடில்லை. இந்து மா கடலில் அமைதியில்லை. நமது நாடே படை வலிமையுடையதாக இருப்பது வலியச் சென்று போர் செய்ய அல்ல. தற்காப்புக்குத் தான்! விசாகையில் கட்டுமானம் ஆகும் கப்பல்களும், ஆவடியில் உற்பத்தியாகும் விமானங்களும், திருச்சி-திருவெறும்பூரில் உற்பத்தியாகும் துப்பாக்கிகளும் பாரதி நினைத்த தொழிற் புரட்சியின் மையங்கள்! பாரதத்தை வலிவும், பொலிவும் உடையதாக்கும் சக்திகள்!

பாரதி, அடிமையாக-ஏழையாகப் பிறந்தான். அடிமையாக-ஏழையாகச் செத்தான். ஆயினும், பாரதி குடிசைத் தொழில்களோடு நின்றுவிட விரும்பவில்லை. இன்று சிலர், பாரத நாடு-குடிசைத் தொழில்களினாலேயே வாழ்ந்துவிடும் என்று நம்புகின்றனர். இது தவறான கருத்து, குடிசைத் தொழில்கள் வளர வேண்டும். குடிசைத் தொழில்கள் மூலம்தான் குறைந்த மூலதனத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு தர முடியும். ஆனால், நாட்டின் மொத்தப் பொருளாதார மேம்பாட்டிற்காக-கனரகத் தொழில்கள் தேவை. பாதுகாப்புக்குப் படைக் கருவிகள் செய்யும் தொழில் தேவை. அணுகுண்டுகள் செய்யும் வரை நாம் வளர்ந்தாக வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தொழிற் புரட்சியே உதவி செய்ய இயலும் என்பது. பாரதியின் திடமான நம்பிக்கை. அத் தொழிற் புரட்சிக்குத் திட்டங்களை வகுத்துப் பாடிய பெருமை பாரதிக்கு உண்டு. உலகத்தில் தொழிற் புரட்சிக்குரிய திட்டங்களை வகுத்துத் தந்த முதல் கவிஞன் பாரதி, அவனுக்குப் பின்னும் பாரதியின் ஆவேசவுணர்ச்சியுடன் யாரும் பாடவில்லை.

வாழ்க பாரதியின் புகழ்!
வளர்க தொழிற் புரட்சி!

பாரதியின் சமுதாயம்

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்;
எல்லாரும் இந்தியா மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை;
எல்லாரும் இந்நாட்டு மன்னர்

என்பது பாரதியின் பாடல். பாரதி இந்த நிரல் நிறை முறைவைப்பை உயர் குறிக்கோளோடு அமைத்திருக்கிறான். பாரதி, சமுதாய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கவிதை செய்தவன்; நாட்டுக்கு உழைத்தவன். பாரதி, அவன் காலத்திலிருந்த சமுதாய அமைப்பை நகர்த்தி, தனது குறிக்கோளின் எல்லைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். இஃதொரு கவிதைப் பயணம் கருத்து வளர்ச்சிப் பயணம்; நாட்டு வரலாற்றில் நடக்க வேண்டிய பயணம்.

இந்திய சமூகத்தில் எண்ணத் தொலையாத சாதிப் பிரிவினைகள்; கோத்திரங்கள்! குலங்கள்! இந்தப் பிரிவினைகளாலேயே இந்திய சமூகம் உள்ளிடழிந்தது; உருக்குலைந்தது; அந்நியர்க்கு அடிமைப்பட்டது. அடிமைத் தனத்திற்குரிய காரணத்தை நீக்கினாலொழிய விடுதலை வராது; வந்தாலும் நிலை பெற்றிருக்காது என்பது பாரதியின் முடிவு. எனவே, இந்திய சமூகத்திலிருந்தே சாதிகளை அறவே நீக்கப் போராடு கின்றான்; ‘சாதிகள் இல்லை' என்றே சாதிக்கின்றான்; குலத்தில் உயர்வு, தாழ்வு கற்பித்துப் பேசுதல் பாபம் என்கின்றான்; பறையருக்கும் புலையருக்கும் விடுதலையை வழங்குகின்றான். நந்தனைப் பார்ப்பானாக்குகின்றான். சாதிகளின் பெயரால் விளங்கும் அநீதிகளைத் தகர்த்து நீதியை நிலைநாட்டுகின்றான்; தண்டச் சோறுண்ணும் பார்ப்பைச் சாடுகின்றான்; சாதி, குலம், கோத்திரம் இவற்றைக் கற்பிக்கும் சாத்திரத்தைச் சூது என்கின்றான். இது பாரதி வாழ்ந்த காலம். பாரதி குலம், கோத்திரங்களைக் கடந்த ஒரு குலம் அமைக்கின்றான். இது அவன் படைத்த சமுதாயத்தின் தொடக்கப்பணி.

இந்தியா ஒரு பெரிய நாடு. இமயம் முதல் குமரிவரை அகன்ற பெரிய நாடு, பல நூறு மொழிகள் பேசும் மக்களையுடைய நாடு. மொழி வழியிலிருந்து இனங்கள் பலப்பல உண்டு; எண்ணற்ற சமயங்கள் விளங்கும் நாடு. பாரதி, இந்தியாவில் வாழும் மக்களை இந்தியராகவே ஆக்க விரும்புகின்றான். மொழிவழி இனப்பிரிவு பாரதிக்கு உடன்பாடில்லை; சமய வழிப்பிரிவு பாரதிக்கு உடன் பாடில்லை. இதனால் பாரதிக்கு மொழிகள்மீது பற்றில்லை என்பது பொருளன்று சமயப் பற்றில்லை என்பதும் பொருளன்று. மொழியானாலும், சமயமானாலும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் துணையாக இருக்க வேண்டும். இந்திய நாட்டு மக்களை இந்தியர் என்று எண்ணும்படி செய்யத் தூண்ட வேண்டும்; இந்திய மக்களிடத்தில் இனவழிப் பற்றுகளைக் கடந்த இந்தியர் என்ற மனப்பான்மை தோன்றுதல்தான் விடுதலையார்வத்திற்கு எழுச்சியூட்டும், நாட்டின் ஆக்கத்திற்குத் துணை செய்யும். அதனால் மொழிகளை, இனங்களை, சமயங்களைக் கடந்து ‘எல்லாரும் இந்தியர்' என்று கூறி ஓரணியில் திரட்டுகின்றான். இது கவிஞனின் அபார சாதனை.

பாரதி, இந்திய நாட்டின் கடந்தகால வரலாற்றைக் கூர்ந்து படித்திருக்கிறான். இந்திய வரலாற்றில் சாதிகள்,இனங்கள், பதவிகள் இவைகள் காரணமாகச் சமூகத்தில் ஏற்பட்ட மதிப்புகளையும் அவமதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எல்லாரையும் சமநிலையில் மதிக்கும் உணர்ச்சியின்மையை நினைந்து வருந்தியுள்ளான். சொல்லப்படும் செய்திக்கு மரியாதையன்று. சொல்லுபவரை நோக்கியே மரியாதை இருந்தது. சாதாரணச் சமூகத்தில் பிறந்த ஒருவர் எவ்வளவு அருமையான செய்திகளைச் சொன்னாலும் அதற்கு வரவேற்பில்லை. ஆனால் சாதியிலோ பணத்திலோ பதவியிலோ உயர்ந்த மேட்டுக் குடியிலிருப்போர் 'தத்துப்பித்து' என்று உளறினாலும் அபாரஞானம் என்று பாராட்டப் பெற்றது. சராசரி ஒரு மனிதரை அவர் ஒரு மனிதர் என்ற அளவில் மதிக்காமல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மரியாதை-மதிப்பு என்ற அவலநிலை பாரதி காலத்தது. நந்தனாரின் திருக்கோயில் வழிபாட்டார்வம் கூட எளிதில் ஏற்றுக் கொள்ளப் பெறவில்லை. நிலப்பிரபுத்துவத்தின் நச்சுச்சேயான தீண்டாமைக் கொடுமையில் நந்தனாரின் சமய ஆர்வம் கூடக் கருகிப் போயிற்று. ஆதலால் மதிப்பு ஆள் நோக்கியன்று; அறம் நோக்கியே. இது பாரதியின் கோட்பாடு. எல்லாரும் சமநிலையில் வைத்து மதிக்கப் பட்டால்தான் மனிதரிடத்தில் தாழ்வுணர்ச்சி தலைகாட்டாது. ஒரு சிலரிடத்தில் உயர்வுணர்ச்சியென்ற அகத்தையும் தலைகாட்டாது. ஆள்வோராயிருந்தால் என்ன ? ஆளப்படுவோராயிருந்தால்தான் என்ன? தரத்திற்கும் தகுதிக்கும்தான் மரியாதையே தவிர நாற்காலிகளுக்கல்லவே! இந்த மனப்பான்மை சமுதாயத்தில் வளர்ந்தால்தான். சிந்தனை வளரும், அச்சமின்றிச் சிந்தனை வெளிப்படுத்தப் பெறும். கருத்துக்கள் வளரும்; பயமின்றிக் கருத்துக்கள் சொல்லப்பெறும். ஆதலால் பாரதி இந்திய மக்கள் எல்லோரையும் ஒரு நிறையாக்குகின்றான்.

பாரதி குலம், மொழி, சமயம், இன வேற்றுமைகளிலிருந்து மீட்டுக்கொள்ள வந்த பாரத சமுதாயத்தை 'விலை'யுடையதாக்க முயலுகின்றான். இங்கு விலை என்பது பொருளாதார சமத்துவத்தைக் குறிப்பது, பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாட்டில் நிலப்பிரபுத்துவம் கொழுத்து வளர்ந்திருந்தது. வளர்ச்சியடையாத முதலாளித்துவமும் இருந்தது. இந்திய நாட்டு மக்களில் பெரும்பாலோர் உழைப்பாளிகள், சிலரே வளமான வாழ்க்கையுடையவர்கள். இந்திய செல்வம் உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்டாலும் அவர்களுக்கு சொந்தமாக இல்லை. இந்திய உழைப்பாளிகளால் படைக்கப்பட்ட செல்வம், அவர்களைத் தெரு வோரத்தில் நிறுத்திவிட்டு மாடமாளிகை, கூட கோபுரத்துக்குள் சிறைப்பட்டுவிட்டது. இந்தக் கொள்கைக்கு ஒருபுறம் மதப் புரோகிதர்கள் காவல், இன்னொருபுறம் பேயரசு காவல், இந்தியர்களுக்கோ "கோடீசுவரர்", “இலட்சாதிபதி” என்றெல்லாம் விலை வந்து விட்டது. ஒருபுறம் உழைப்பை விலைக்கு விற்கும்-ரூபாய் இரண்டுக்கும் மூன்றுக்குமாக விலைக்கு விற்கும் ஏழைத் தொழிலாளிகள்விவசாயிகள். இன்னொருபுறம் மலிவான முறையில் உழைப்பை விலைக்கு வாங்கி அடுக்கிய செல்வத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய விலைப்புள்ளி இலட்சம்; கோடி இந்த வித்தியாசத்தைப் பாரதி மறுக்கின்றான். சோஷலிசப் புரட்சிக்கு வித்திடுகின்றான். எல்லாருக்கும் ஒரே விலை என்ற கொள்கையை முன் வைக்கின்றான். மொழியால், இனத்தால், குலத்தால் உயர்வு தாழ்வு இல்லையானாலும் பணத்தால் உள்ள ஏற்றத் தாழ்வு எளிதில் போகாது. கொழுத்த பணம் இருப்பதனாலேயே பள்ளிக்கூடத்தின் நிழலில் ஒதுங்காதவன் படித்தவனாகிவிடுவான். ஏமாந்து போன சமுதாயம், தான் ஏமாந்த நேரத்தில் ஏற்றம் பெற்றோரின் வார்த்தைகளையே கேட்டு வாழ நேரிடும். அதனால் மனித நாகரிகம் நச்சுத் தன்மை அடைந்து விடும். பொருளாதார சமத்துவம் இல்லாத நாட்டில் அறம் வளராது; அன்பு வளராது. அதனால் பாரதி, இந்தியர் அனைவரையும் ஒரே விலை மதிப்புடையவராக ஆக்க முயல்கின்றான். இது கவிஞனின் எதிர்பார்ப்பு. ஆனால், நடக்கத்தான் இல்லை.

இந்தியர்களில் சரி பாதிப் பேர்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குள் வீழ்ந்து கிடக்கின்றனர். இரண்டு கைவிரல்களின் எண்ணிக்கையுடையோரிடத்தில் இந்தியச் செல்வம் குவிந்து கிடக்கிறது. இன்று கடவுள், கல்வி, வாக்கு, நீதி அனைத்தையும் விலைக்கு வாங்கும் அளவுக்குச் செல்வம் ஒரு புறத்தில் குவிகிறது. இன்னொரு புறத்தில் விலையற்ற மனிதர்கள் உடல் உழைப்பையும் அதுவும் விலை போகாத நேரத்தில் உயிரையும் விலை பேசி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பாரதியின் எல்லாரும் ஓர் விலை என்ற இலட்சியம் நிறைவேறினால்தான் இந்திய விடுதலை முழுமை பெறும்.

கடைசியாக பாரதி 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று முடிக்கின்றான். பாரதிக்கு 'மன்னர்' என்ற சொல் மீதோ, மன்னராட்சி மீதோ காதல் இல்லை. 'குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு' என்று விரும்பிய பாரதி, எப்படி மன்னரை விரும்புவான்; அது மக்களுக்குத் தீராத் துன்பங்கள்! எல்லாரும் மன்னராகிவிட்டால் என்ன ஆவது? பாரதியின் இந்நாட்டு மன்னர் என்ற வரிக்குச் சரித்திர கால மன்னர்களை நினைத்துக் கொண்டு அர்த்தம் செய்துவிடக் கூடாது. பாரதி வாழ்ந்த காலம் எல்லா அதிகாரங்களும் மன்னரிடத்தில் இருந்த காலம். சாதாரண மக்களுக்கு மன்னர்தான் அறிமுகம்! சாதாரண மக்களுக்குத் தெரிந்தது மன்னரின் அதிகாரம்தான். ஆதலால் மக்களுக்கே எல்லா அதிகாரமும் என்ற கொள்கையை வேறுவார்த்தையில் பாரதி சொல்கின்றான். ஆனால், பாரதியின் மன்னர்கள் நாட்டின் மக்கள். இந்த மன்னர்கள் அதிகாரம் செலுத்துபவர்கள் அல்லர்; ஆட்சி செலுத்துபவர்கள். இவர்களின் ஆட்சி, வாக்குகளால் அமையும் ஆட்சி! வாக்குகளால் ஆட்சியை அமைக்கும் பொறுப்புள்ள மக்களாகிய மன்னர்கள் வாக்குகளைத் தேர்ந்து தெளிந்து பயன்படுத்த வேண்டும். வாண வேடிக்கைகள், அழகொழுகும் பேச்சுகள், பகட்டான பேரணிகள், அணி அணியாக ஊர்ந்துவரும் கார்கள்இவைகள் மக்களாகிய மன்னர்களின் அதிகாரத்தைக் கெடுக்கும் முதலாளித்துவத்தின் நச்சுப் பூச்சிகள்; இந்த மயக்கத்தில் வாக்காளர்களாகிய மன்னர்கள் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல முறை பிறழ்ந்து விடாது குடியாட்சி என்ற செங்கோலைத் தாங்கி, வாக்காகிய நீதியை சமுதாய நீதியின் பக்கமே வழங்க வேண்டும். இங்ஙனம் இவர்களை பாரதி இந்நாட்டு மன்னர் என்று போற்றுகின்றான்.

பாரதியின் படிமுறை வளர்ச்சியில் இன்றைய இந்திய நாடு எந்தப் படியிலும் வெற்றி பெறவில்லை. எங்கு பார்த்தாலும் சாதிச் சண்டைகள், மொழிக் கலகங்கள், மதக் கலவரங்கள். வறுமைக்கும் வளத்துக்குமிடையே அகன்ற இடைவெளி! வாக்குரிமைகள் பறிக்கப்படுகின்றன! இதுதான் இன்றைய இந்தியா,

நம் பாரதியின் வழியில் சாதி வேற்றுமைகளை நீக்கி, எல்லாரையும் ஓரினமாக்கி, இந்தியராக்கி ஒருநிறையில் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு விலையுடையவராகச் செய்து சமுதாய நீதி காக்கும் மன்னர்களாக்குவோமாக!

அஞ்சோம்! துஞ்சோம்!

வாழ்க்கை என்பது மலர்களின் மீது நடப்பதன்று. வாழ்க்கை என்பது இன்னல்களும் நிறைந்தது; இன்பங்களும் நிறைந்தது. உண்டு, உடுத்துக் கூடிவாழ்வது மட்டும் வாழ்க்கை இல்லை. இவற்றிற்கு மேலும் வாழ்க்கைக்குக் குறிக்கோள்கள் உள்ளன. குறிக்கோளுடைய வாழ்க்கை சிறப்புடையது. ஆனால், இன்னல்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். உயர் குறிக்கோளும் ஆர்வமும் ஆளுமையும் உடைய வாழ்க்கையை விரும்பி மேற்கொள்பவர்கள் இன்பத்தை விரும்பமாட்டார்கள். இடும்பை.துன்பம் இயல்பென்பர் சிலர். இத்தகையோரைத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் துன்புறுவதில்லை. உலைக்கள்த்தில் அடிபடும் இரும்பு, எஃகாதல் போல, உயர் குறிக்கோளுடையார், துன்பம் சுடச்சுட உரம் பெறுவர். அவர்கள் நலிவதில்லை. அரைக்கீரை கிள்ளக் கிள்ள வளரும். அதுபோல் குறிக்கோளும் அதனை அடையும் ஆர்வமும் திறனும் உடையவர்களைத் துன்பம் துவளச் செய்யாது. மாறாக வளர்க்கும்.

இடர்களுக்கு அஞ்சாது நாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும். எந்தக் காலத்திலும் உண்மைக்கு உழைக்கும் பணி, பொதுப்பணி இன்பமாய் இருந்ததாக வரலாறு இல்லை. சமுதாயத்தில் களைகளே கழனியின் பயிர்களைச் சாப்பிட்ட வரலாறு தான் மிகுதி. அறிவால் சிந்தனை செய்! அறிவாளியாக இரு என்ற கிரேக்கச் சிந்தனையாளனை அன்றைய முட்டாள் உலகம் நஞ்சு கொடுத்துக் கொன்றது. உலகம் உருண்டை என்று உண்மை சொன்ன கலிலியோ பெற்ற பரிசு என்ன? ஏசுவிற்குத்தான் இந்த உலகம் எதைப் பரிசாகத் தந்தது? அப்பரடிகள் வாழ்க்கையிலும் சோதனைகள் தானே மிகுதி. இதுதான் வரலாறு. ஆதலால் இடுக்கண்களுக்கு அஞ்சாமல் பணி செய்யவேண்டும்.

இந்தியாவின் விடுதலைப்போர் இடுக்கண் நிறைந்தது என்று பாரதி உணர்கிறான்; உணர்த்துகிறான். அடுத்து பாரதி நயம்பட ஓர் உண்மையைச் சொல்கிறான்; "ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்” என்று. என்ன பொருள்? ஏழையர் இயற்கையில் ஏழையரல்லர். மற்றவர்கள் யாரும் ஏழைய ராக்கவுமில்லை. பாரதநாடு ஏழை நாடா? இல்லைஇல்லவே இல்லை. ஆனால், ஏழையர் நாடாக இருக்கிறது. "கணக்கின்றித் தரும் நாடு" என்று கூறுகிறான். "கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்” என்றும் பாடுகின்றான். அப்படியானால் ஏன் ஏழையராகின்றனர். பாரதியே விடையும் கூறுகின்றான். கையை விரித்து இல்லை என்று கூறும் வாழ்க்கை கேவலமானது. பரிதாபத்திற்குரியது. இல்லை என்று அயர்ந்து உறங்குவானை நிலமகள் கேலி செய்கிறாள். ஏன்? நிலமகள் தன் மடியில் ஆயிரமாயிரம் பொருள்களை வைத்திருக்கிறாள்; இனிய சுவை நல்கும் கரும்பு வைத்திருக்கிறாள்; வாழ்விக்கும் வாழை வைத்திருக்கிறாள். இவற்றை எடுத்து அனுபவிக்கும் ஆள்வினை வேண்டும். இரந்து கேட்கும் விரித்த கையை மடக்கி உழைத்திடும் கரங்களாக்கினால் என்ன கிடைக்காது? எல்லாம் கிடைக்கும். இதற்கு மனம் இல்லாமல் ஏழையராகி-ஏங்கித் தவிக்கும் மனப்போக்கை மறுக்கிறார். தூங்காதே! உழைக்கும் நேரத்தில் உறங்காதே! உழைக்கும் நேரத்தில் உறங்கினால் ஏழையராதல் இயற்கை-தவிர்க்க முடியாத இயற்கை நியதி: ஆதலால் உழைத்து வாழவேண்டும்.

உழைத்தால் மட்டும் போதுமா? போதாது. படைப்புப் பல படைத்தாலும் பலரோடு உண்ணும் அறிவு தேவை உணர்வு தேவை; தொழில் செய்தல் இயற்கை மனிதனின் கடமை. ஒருவர் செய்யும் தொழிலே கூட தொண்டாகவும் விளங்கும் தன்மை உடையதாக அமையும். தொண்டாக மற்றவர் நலனுக்கு உதவியாக இருப்பது தொழிலாயினும், அத் தொழில்வழி வருவாய் பெற்றாலும் கூட தொழில் உயர்வான தொழிலே! பாராட்டுதலுக்குரிய தொழிலே; ஆயினும், தொழிலில் சில இழி தொழிலாகக் கருதப்பெறுகின்றன. தொழிலில் ஏது இழிவு! உயர்வு? ஆம்! தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. இது உறுதி பாரதியே விஞ்ஞானியாகத் தொழில் புரிதலையும் சந்தி பெருக்கும் தொழில் புரிதலையும் சமநிலையினதாகப் பாடியுள்ளான்.

செய்கின்ற தொழிலில் இழிவே இல்லை என்று கூறுதல் முடியாது. வட்டிக் கடை ஒரு தொழில் தானே? ஆம்! தொழில் தான். ஆனால் அஃது இழி தொழில்தான்! அது போலவே ஒரே தொழில் கூட உயர்வாகவும், இழிவாகவும் விளங்குதல் உண்டு. எழுத்தும் பேச்சும் சிறந்த தொழில்கள். மற்றவர்க்கும் பயன்படும் தொழில்கள். ஆனால், எழுத்தும் பேச்சும் மக்களின் உணர்ச்சிகளைப் பொறுத்ததாக அமையின் இழி தொழில்களாகும். மக்களின் தேவைகளை அறிந்து அமையின் உயர் தொழில்களாகும். தன்னலம் தீது, தன்னலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு வாழ்க்கை வழங்காத, வழங்கும் இயல்பில்லாத தொழில்களை மேற்கொள்வது இழி தொழில்களாகும். தன்னலம் என்பது நஞ்சு, தன்னலம் வாழ்விப்பது போல் காட்டி அழித்துவிடும். தன்னலம் பொது உரிமையில் பொது நலத்தில் பாதுகாப்பாக இருக்கும். பொதுமை சிறப்பாக இல்லாத போழ்து தனித் தன்மையும் கூட இல்லாது அழிந்து போகிறது. அப்பப்பா! தன்னலம் என்ற பேய் பெரிய நாடுகளைக் கூட அடிமைப் படுத்தி வருகின்றது. கோளும் பொய்யும் புறங்கூறலும், காட்டிக்கொடுத்தலும் தன்னலத்தின் நச்சுறுப்புகள். இவைகளை அறவே புறக்கணிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் நாட்டுப் பற்று உடையவராக வாழ்ந்திடுதல் வேண்டும். வாழ்க்கை குறிக்கோளுடையதாக அமைதல் வேண்டும். இன்பத்தைத் தேடி அலையக்கூடாது. இடர்ப்பாடுகளைக் கண்டு அஞ்சுதல் கூடாது. ஆள்வினை யற்று உறங்கி வாழ்தல் கூடாது. செல்வங்கள் பல வழங்கிடும் நாட்டில் ஏழையராக வாழ்தல் கூடாது. தன்னலத்தைத் துறக்க வேண்டும். பொது நலத்திற்குத் துணை நிற்க வேண்டும். தன்னலச் சார்பான தொழில் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் இழி தொழிலேயாம்.

இந்நெறி முறைகளில் நின்று நாட்டினைப் போற்றுக! பணி செய்க! "இன்னல் வந் துற்றிடும் போததற் கஞ்சோம்! ஏழையராகி

இனி மண்ணில் துஞ்சோம்!"

பாரதியார்

உலகம் இன்பக் கேணி!

இன்று கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் கேலிக் கூத்தாகிக் கொண்டு வருகிறது. பல பெயர்களில் விளங்கிடும் கடவுள் வழிபாடு, வேற்றுமைகளுக்கு உள்ளாக்கப் பெற்று மதச் சண்டைகளும் கடவுட் சண்டைகளும் நடைபெறுகின்றன. தத்தம் மதமே உயர்ந்தது என்னும் மத வெறியும், தத்தம் கடவுளே உயர்ந்தது என்ற கொள்கையும் மக்கட் சமுதாயத்தில் எதிர் விளைவுகளை உண்டாக்கியிருக் கின்றனவே தவிர, சமய நம்பிக்கைகள் வளரவில்லை. மதமாற்றங்கள் தொடர்ந்து செய்யப் பெறுகின்றன. மத மாற்றங்களுக்குரிய காரணங்கள் அற்பமானவை. கடவுள்-மத நம்பிக்கையுடையவர்கள் வேற்றுமைகளை மறந்து தத்தம் நெறியில் நிற்றல் சமயத்திற்கு ஆக்கம் தரும். அது போலவே ஒரே மதத்தில் உள்ள பல்வேறு மக்களும் தத்தம் கடவுளே பெரிது என்று சண்டை போடக் கூடாது. கடவுள் ஒருவர் தான்! ஒருவரே தான்! இந்துக் கடவுள், கிறிஸ்துவக் கடவுள், முஸ்லீம் கடவுள் என்றெல்லாம் கடவுள்கள் பல அல்ல. அனுபவ மெய்யுணர்வு வேறுபாட்டால் சமயங்கள் பலவாயின.

நிலம், நீர், தீ, வளி, வெளி இவை உலகனைத்திற்கும் பொது. இந்த ஐம்பெரும் இயற்கையிலமைந்த உள் பொருள்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இவைகளின் பெயர்கள் நாடுதோறும் மாறுபடலாம். ஆனாலும், பொருளில், பொருளின் தன்மையில் மாற்றம் இல்லை என்பது உண்மை. இப்பொருள்கள் உயிர்க் குலத்திற்குப் பயன்படும் வகையிலும் மாறுபாடுகள் இல்லை. அதுபோலத்தான்.'கடவுள்' என்பதும் உலகிற்கு ஒன்றேதான்! கடவுள் பலவாகியது, மதங்கள்தோறும் வேறு வேறாகியது கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் செய்த சிறுபிள்ளைத்தனம். அதனால், கடவுள் ஒன்றே என்னும் நம்பிக்கை வேண்டும். கட்டுக்கதைகளுக்கு அப்பாற் பட்டதாக, பேராற்றலுடையதாக, பேரின்பம் உடையதாக, எங்கணும் நீக்கமற நிறைந்திருப்பதே கடவுள். நாம் எல்லாரும் கடவுளின் மக்கள். ஆம்! ஒரே கடவுளின் மக்கள்தான்!

பாரதியாரின் தத்துவம் விரிந்தது; பரந்தது. சாதிகளைக் கடந்தது; மதங்களைக் கடந்தது; கடவுளின் மக்கள் நாம் அனைவரும். இந்த அரிய கொள்கை இந்தியாவில் வெற்றி பெறவில்லையே! இந்திய சமூகம் இன்று பாரதியின் அடிச்சுவட்டில் நடைபோடவில்லையே! சாதிகளைக் காப்பாற்ற சங்கங்கள், மாநாடுகள் அமைத்து ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்களே! சாதிகள், மதங்கள் தம்முள் முரணி மோதிக் கொள்கின்றனவே! இந்து, கிறிஸ்துவர், முஸ்லீம் என்கிற பிரச்சினைகளை வைத்தே எத்தனை இயக்கங்கள்! போராட்டங்கள்! கலகங்கள்! அடக்கு முறைகள்! ஏன் இந்த அறியாமை?பாரதி, இந்த நாட்டு மக்களுக்குத்தானே சொன்னார். சாதிகள் மட்டுமா? சாதிகள் வாரியாக கடவுள் படைப்பு விளையாட்டுக்கள்! இன்று இந்தியாவில் சராசரி ஒரு நபருக்கு 10 கடவுள்களுக்குக் குறைவில்லை. ஆனால், நடப்பது என்ன? உயிர்க்குலப் பகை வளர்கிறது! வறுமை வளர்கிறது. கடவுளை வழிபடும் நாட்டு மக்களுக்கு இது என்ன தண்டனையா?

இந்த உலகு இன்பக்கேணி என்று பாராட்டுகின்றான் பாரதி. இந்த உலகை இன்பக்கேணியாக அமைக்கவேண்டும். துன்பத்தின் சாயலையும் துடைத்தெறிய வேண்டும். கடவுள் ஒன்று என்று நம்பு! கடவுளை வழிபடு! கடவுள் வழியில் நட! கடவுளை நினைப்பற நினைப்பதன் மூலம் கடவுளுடைய பேரறிவு, பேராற்றல், பேரின்பம் ஆகியவற்றை மானிட சாதி உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது மானிட சாதி படைப்பாற்றல் உடையதாக விளங்கும். உலகின் துன்பத்திற்குக் காரணமாக இருப்பவைகளை மானுடம் வென்று விளங்கும். அப்போது உலகு இன்பக்கேணியாக மாறும்.

பாரதியின் நூற்றாண்டு நினைவு பெறவிருக்கிறது. அவனுக்கு இந்த நாடு என்ன செய்திருக்கிறது! ஒன்றும் செய்யவில்லை. பாரதியின் தத்துவங்களுக்குச் செயலுருவம் கொடுக்க வேண்டாமா? ஆம்! கொடுத்தேயாக வேண்டும். ஒரே கடவுள் நம்பிக்கை கொள்ளுவோம்! மதவேற்றுமைகள் பாராட்டாது ஒழுகுவோம்! சாதி வேற்றுமைகளை அடியோடு நீக்கி ஒரு குல உணர்வை வளர்க்க வேண்டும். இந்த உலகைத் துன்பமானது என்று பாடிய கவிஞர் வரிசையில் வந்தவனல்லன் பாரதி. புதுமைத் திறம் பாடியவன்; இந்த உலகை இன்பக்கேணியாக எண்ணிப் பாடியவன். நாம் இன்பக்கேணியாக அமைக்க வேண்டாமா?

"ஒன்று பரம் பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி"


சிந்தனையில் தெளிவு தேவை !

உலகு இயங்குகிறது. மனிதகுல வரலாறு நடக்கிறது. நடந்து கொண்டேயிருக்கிறது. மனிதகுல வரலாறு பொருளுடையதாக, பயனுடையதாக அமைவது மானிட சாதியின் சித்தத்தைப் பொறுத்தது. வாழ்க்கையை உந்திச் செலுத்தும் மனிதனின் மனம் எதையும் பற்றும். புற உலகிற்கும் அக உலகிற்கும் இடையில் உள்ள வாயில் மனமே. மனம் அடைபட்டிருந்தால் செய்திகளின் வாயில்கள் அடைபட்டுப் போகும். அதனால், மனம் தன்னலம் மிக்க மிருகத் தனமான குணங்களுடன் விளங்கும் அல்லது பொதுமையற்ற, அருள் நோக்கமில்லாத ஆயினும் பயனற்ற தூய்மையும் தவமும் உடையதாக விளங்கும். இவ்வேறுபாடுகள் உயிரியற் கையைப் பொறுத்தது. மனம் பற்றியதை புத்தி ஆராயும்; கழிப்பன கழிக்கும். ஏற்பன ஏற்றுச் சித்தத்திற்குத் தரும். சித்தம் மீண்டும் காரண காரியங்களுடன் ஆராய்ந்து தெளிந்து துணிந்து ஏற்கக்கூடியதை நிச்சயித்து ஏற்றுக் கொண்டு செயற்களனுக்கு, தான் ஏற்றுக் கொண்டுள்ள முடிவுகளை அனுப்பும். இது மனிதனின் அகநிலை வாழ்க்கை வளர்ச்சி முறை.

"மனம் போன போக்கில் போகாதே!” என்ற பழமொழி ஏன் பிறந்தது? மனம் எளிதில் பற்றும். ஆனால், ஆராய்ந்தறியும் தகுதியும் செயற்பாடும் அதற்கு இல்லை. ஆராயும் தகுதி புத்திக்கே உண்டு. அதனால்தான் ஏதாவது தவறுகள் நிகழின் "புத்தி இருக்கிறதா?” என்று கேட்கின்றனர். புத்தி இருந்தால் மட்டும் போதாது. சிந்திக்கும் இயல்பும் வேண்டும். சிந்தனையில் தோன்றும் முடிவுகளே நல்லவையாக, ஆக்க வழியிலானவையாக, இன்பந்தருவனவாக அமையும். துணிவும் சிந்தனையின் வரம்பில்தான் தோன்றுகிறது. முறையாகச் சிந்திப்பவர்களிடம் "இதுவா? அதுவா?” என்ற ஊசலாட்டம் இருக்காது. தெளிவும் துணிவும் இருக்கும். அங்ஙனம் சிந்தனையில் பிறந்த முடிவுகளால் இந்த உலகம் இயங்குகிறது.

இந்த உலகமே சித்தமயம் என்கிறான் பாரதி. சிந்தனையில் உறுதி தேவை. தன்னயப்புடையவர்களிடம் முடிவுகள் அடிக்கடி மாறும். மனம், புத்தி இவைகளுடன் உடன்பட்டும் வேறுபட்டும் சிந்தித்தல் அவசியம். பலர், மனம் புத்தி இவைகள் வழியிலேயே தமது சிந்தனையையும் செலுத்துவர். இத்தகையோரிடத்தில் பொறிகளுக்கு மனம் "ஆமாம் சாமி!” யாகும். புத்திக்குச் சித்தமும் ஆமாம் சாமி! போடும். எல்லாம் ஒரே மாதிரியான ஆமாம் சாமிகளானால் ஆய்வு நிகழாது, தெளிவும் இருக்காது துணிவும் இருக்காது; உறுதியும் இருக்காது. தத்தம் நிலையில் முடிவு எடுக்காது பொறிகள் வழியிலேயே செல்லும் மனம், புத்தி, சித்தம் பயன்படாதன; துன்பம் தருவன.

இத்தகு பொறி, புலன்களையுடையோர் உறுதி இல்லாதவர்களாயிருப்பர். பயந்தவர்களாயிருப்பர் கோழை களாகவும் இருப்பர். ஆனால், வாய் மிடுக்கும் இருக்கும். இவர்கள் குரைக்கும் நாய்கள் போன்றவர்களே! தெளிவும் உறுதியும், சிந்தனையுடையாருக்கே உண்டு. இச்சிந்தனையில் நாம் வாழப் பிறந்தவர்கள். வேடிக்கை மனிதர்களாய்ச் சாகக் கூடாது; ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது; கலகப் பூச்சிகளாய் வாழக் கூடாது. அறிவறிந்த ஆள்வினை மேற்கொள்ள வேண்டும். பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். எல்லாரும் ஒரு குலமாய் ஒத்து வாழ்தல் வேண்டும் என்று உறுதி தோன்றிவிட்டால் இந்தியாவிற்கு ஏன் இடர்ப்பாடு? இந்தியர்களுக்கு ஏது.துன்பம்? கொள்கையில் கோட்பாட்டில் தெளிவும் உறுதியும் இருக்குமாயின் எத்துன்பத்தையும் வெற்றி காணலாம். தொகுதி தொகுதியாக வரும் சோதனைகளையும் வெற்றி காணலாம். வாழ்க்கையில் தோல்வி, துன்பம் என்றால் அதற்குக் காரணம் வேறு யாரும் அல்ல. தோல்வியைத் தழுவித் துன்புறுபவர்கள். பழியை யார் மீதாவது போடுவார்கள். ஆனால், அது உண்மையன்று, சித்தம் இருக்கிறது. ஆனால், சிந்திப்பதே இல்லை, ஏன்? அவர்கள் சித்தமே அவர்களை இடித்துக் காட்டலாம். அதனை அறிய விரும்பாதவர்கள் சிந்திக்கப் பயப்படுவார்கள்; சிந்திக்க மாட்டார்கள். வேறு சிலர் எல்லாம் தெரிந்தது தானே என்று சிந்திக்க மறுப்பார்கள். தெரிந்தவையானாலும் மீண்டும் மீண்டும் சிந்திப்பதில் பயன் மிகுதியும் உண்டு. அரைக்க அரைக்க சந்தனம் மணமுடையதாதல் போல் சிந்திக்கச் சிந்திக்க தெளிவு மிகும். சற்றும் குழப்பமும் ஊசலாட்டமும் இல்லாத நிலை தோன்றுவதோடன்றி, புது நெறிகளும் தோன்றும். ஆதலால், சிந்தனையில் உறுதி தேவை.

இன்று, இந்தியா அடிமையாவதற்கு முன் இருந்த நிலையை அவாவி நிற்கிறது. அடிமை நிலையை எய்துதற்குரிய குணக்கேடுகளை முயன்று அடையத் துடிக்கிறது. சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாகி வருகிறது. மனம் போன போக்கில் அவரவர் விருப்பப்படி நடப்பது சுதந்திரம் என்று கற்பித்துக் கொண்டுள்ளனர். சக்தி படைத்தவர்கள் கிடைத்ததைச் சுருட்டுகிறார்கள். சாதிமதச் சண்டைகள் தலைகாட்டுகின்றன. இந்தப் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல. நமக்கும் நல்லதல்ல என்ற சிந்தனைத் தெளிவு நமக்குத் தேவை.

"முப்பது கோடியும் வாழ்வோம்-விழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்"

என்ற தெளிவான முடிவில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அங்ஙனம் நின்றால் எத்துன்பத்தையும் எதிர்த்து வெற்றி பெறலாம். இது பாரதியின் ஆணை!

அச்சம் தவிர்!

மனித குலத்தில் அரசு-ஆட்சி முறை தொடங்கிய காலத்திலிருந்தே அரசுக்குப் பயப்படுகிற உணர்வும் ஒருசேர வளர்ந்து வந்துள்ளது. ஏன்? ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களில் நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேர்கள் ஏதோ ஒரு பெயரில் மக்களை அடக்கியே ஆண்டனர்; தம் வழி வராதாரைத் துன்புறுத்தினர். அதிகாரத்தில் உள்ளவர்கள் நேரிடையாகச் செய்யாது போனாலும், ஆட்சியாளர்களைச் சார்ந்தவர்கள்கூடத் தொல்லை கொடுப்பர்.

இப்போது நடப்பது மக்கள் ஆட்சி. ஆளுங் கட்சியினைச் சார்ந்தவர்கள், "ஆட்சி, மக்களாட்சி” என்று உணர்வதில்லை. தங்கள் கட்சியே ஆள்கிறது-தாங்கள் நினைத்தவெல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவர்கள், மக்களையோ அரசு அலுவலர்களையோ அணுகும் போதெல்லாம் தனித் தோரணைகள்! ஏன், இந்த நிலை: அரசுகளுக்கு ஏது பணம்? அவர்கள் என்ன நிலையான அதிகாரம் பெற்றவர்களா? ஒன்றும் இல்லை. ஆனாலும், மக்கள் பயப்படுகின்றனர். சாதாரண மக்கள் மட்டுமா பயப்படுகின்றனர்? அறிஞர்கள்கூட அஞ்சு கின்றனர்! இங்ஙனம் பலர் அஞ்சுவதை ஆட்சியாளர்கள் வரவேற்பது அவர்களுக்கும் நல்லதல்ல. மக்கள் அஞ்சி வாழ்தலும் நல்லதல்ல.

"அச்சமே கீழ்களது ஆசாரம்” என்று திருக்குறள் கூறும். ஆட்சிக்கு அஞ்சுவதால் தவறுகள் சுட்டிக் காட்டப் பெறுவதில்லை. அதனால், தவறுகளே நியாயங்களாகி விடுகின்றன. அஞ்சி வாழ்வதால் தெளிவும், ஆண்மையும் நாளடைவில் மங்கிப்போய்ப் பிண வாழ்க்கை வந்தடைகிறது. ஆதலால், அச்சம் தீது! யார் மாட்டும் அச்சம் தீதே! ஆதலால்தான் "அச்சம் தவிர்” என்று பாரதி கூறினான்.

அச்ச உணர்வு தோன்றுதற்குரிய களங்கள் என்னென்ன? ஆசையிலிருந்துதான் அச்சம் தோன்றுகிறது. தவறுகளுக்கெல்லாம் ஆசைதான் மூலகாரணம். அப்படியானால் ஆசையில்லாமல் துறவிகளாக வாழ்ந்தால்தான் அச்சமின்றி வாழ முடியுமா? அப்படி இல்லை. தனக்குத் தகுதியுடையதல்லாத ஒன்றைக் குறுக்கு வழிகளில் - முறைகேடான வழிகளில் அடைய முயல்வதற்கு ஆசை என்று பெயர். நன்றாக உழைத்து, உழைப்பால் உறுபொருள் ஈட்டினால் அப்பொருள் அச்சத்தைத் தராது; இன்பத்தைத் தரும். குறுக்கு வழிகளில் பொருள் ஈட்டினால் அப் பொருளைத் துய்க்கவும் முடியாது; அச்சமே ஆட்கொள்ளும்.

ஒரு பெண்ணைக் காதலித்து, அவளுக்கு இன்ப மூட்டித் தான் இன்புறுதல் ஆசையன்று. இரவலனாகவும் பாவியாகவும் கடவுள் முன்னால் நின்று அழுது தொழுதல் அச்சத்தின் வழிப்பட்டது. ஆதலால், அச்சமில்லாத வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமானால் ஆசைகளைத் தவிர்க்க வேண்டும். இவை மட்டுமே அச்சத்திலிருந்து தப்பிக்கப் போதா. உலகியல் ஆட்சியமைப்பில் நியாய வாதிகள்கூட ஆணைக்குக் கட்டுப்படவில்லை என்று நினைத்து அழிக்கப்படுவர். கிரேக்க நாட்டு அறிஞன் சாக்ரட்டீசு சிறந்த சிந்தனையாளர். ஆனால் அவர் காலத்தில் அவரை ஏற்க உலகம் தயாராக இல்லை! ஆட்சியாளரால் நஞ்சு கொடுக்கப்பட்டுச் சாகடிக்கப் பெற்றார். ஏசு, நல்லறிஞர்; சான்றாண்மையாளர். அவரையும் உலகு காட்டிக் கொடுக்க - அநியாயமே ஆட்சியின் இலக்கணமெனக் கொண்ட அரசு, சிலுவையில் அடித்துச் சித்திரவதை செய்து கொன்றது. அப்பரடிகளை நீற்றறையில் இட்டுச் சித்திரவதை செய்தது பல்லவப் பேரரசு. இப்படிப் பல நூற்றுக்கணக்கான சான்றுகள் காட்டலாம்.

இத்தகு கொடுமைகளை-ஆட்சியின் அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டுமானால் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்களிடத்தில் பிரிவினைகள் வேற்றுமைகள் இருப்பது இத்தகைய ஆட்சியாளர்களுக்கு நல்லது. ஆதலால், பிரிவினைகள் இல்லாதுபோனாலும் பிரிவினைகளைத் தோற்றுவிப்பர். நமது மக்களிடத்தில் பிரிவினைக்குப் பஞ்சமே இல்லை. ஒன்றுக்கும் உதவாத அற்பக் காரியங்களுக்குக்கூடத் தந்தையும் மகனும் நெஞ்சு பிரிந்து வாழ்வர் என்று கவிஞன் பாரதி கூறுகின்றான். அப்பன் ஐந்து தலைப்பாம்பு என்றான்; மகன் ஆறுதலை அதற்கென்றான். போதாதா? தகப்பனுடைய கௌரவம் போய்விட்டது. இருவரும் நெஞ்சு பிரிந்துவிட்டனர். பிரிந்து இருப்பதோடு நிற்பார்களா, என்ன? தகப்பனும் மகனும் பகைவர்களாகி விடுவர். இங்ஙனம் மக்களுக்குள் பிரிவினையும் பகையும் இருக்குமானால் ஒருவருக்கொருவர் தீமை செய்து கொள்வர். அதனால் அஞ்சி வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுத் தீரும். ஆதலால், பிரிவினைகளைத் தவிர்த்து, பகையைத் தவிர்த்து மக்கள் ஒற்றுமையாக வாழ்தல் ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சாதிருக்கத் துணை செய்யும்.

அடுத்து, வறுமையும் அச்சத்தைத் தரும். வறுமை என்பது ஒரு கொடிய நோய் வறுமையைத் "தொல்விடம்" என்று திருவாசகம் கூறும். மனிதனின், மனித குலத்தின் பல்வேறு திறன்களை வறுமை அழித்துவிடும். வறுமை கொடிது. வறுமையிலும் கொடியது வேறொன்றில்லை.

வறுமை இயற்கையா? செயற்கையா? வறுமையை அவரவர்களே படைத்துக் கொள்கிறார்களா? அல்லது வேறு யாராவது திணிக்கிறார்களா? உழைக்காத சோம்பேறிகள் தமக்குத் தாமே வறுமையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகையவர்கள் மோசமானவர்கள். உண்ண, உடுக்க ஆசைப்படுவார்கள். ஆனால், உழைப்பதற்கு மட்டும் அவர் களுக்கு மனம் வராது. உடலைக்கூட "ஊர்க்காளை" போல வளர்த்துக் கொள்வர். ஆனால், அவர்கள் மனம் உழைப்பில் நாட்டம் கொள்வதில்லை. இத்தகையோரே வறுமையின் படைப்பாளர்கள். இவர்கள் சமுதாயத்தின் நச்சுப் பூச்சிகள். விழிப்பாக இருந்து ஒடுக்கப்பட வேண்டியவர்கள். உழைப்பிருந்தும் பலர் வறுமைக்குட்பட்டுள்ளனர். இவர் களிடம் உள்ள வறுமை மற்றவர்களால் திணிக்கப்பெற்றது. உழைப்பாளிகளின் வறுமைக்குக் காரணம் உழைக்காத உலுத்தர்கள், மற்றவர்களின் உழைப்பை அட்டை போல உறிஞ்சுவதுதான். இத்தகையோரை எதிர்த்து, தமது நியாயமான பங்கைப் பெறப் போராடும் குணம் வேண்டும். உழைக்கும் வர்க்கத்தினரிடையில் ஒற்றுமை வேண்டும்.

வறுமையில் கிடப்பவர்கள் சிந்தனை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிந்தன்ை - கவலையெல்லாம் "கஞ்சியில்லையே!" என்பதுதான். கஞ்சி இல்லையே என்ற கவலை கஞ்சியைத் தராது. கஞ்சியில்லாததன் காரணத்தை அறிந்து அக்காரணத்தையே தாக்கினால்தான் கஞ்சி கிடைக்கும்.

"கஞ்சி குடிப்பதற் கில்லார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லார்”

என்று பேசுவான் பாரதி.

அச்சம், வறுமை ஆகியன தனித்து நிற்பன அல்ல, இவைகளுக்கு நெருக்கமானதாக அமைந்து திரும்ப எழுந்திருக்கவிடாமல் படுக்க வைத்து வெற்றி காண்பது நோய். நோய் வந்துற்றால் ஐயோ பாவம்; பார்க்காத சோதிடம் இல்லை; கும்பிடாத கடவுள் இல்லை; நேர்த்திக் கடன் செலுத்தாத தெய்வங்கள் பாக்கியில்லை. சுயமாகச் சிந்திக்க மாட்டார்கள். யார் யார் எதைச் சொன்னாலும் அதைச் செய்து திரும்பத் திரும்பத் துன்பப் படுகுழியில் வீழ்வர். ஏன் இந்த அவலம்? அஞ்சி வாழ்வதற்குப் பதில் ஆண்டுகள் சிலவே வாழ்ந்தாலும் அச்சமின்றி உழைத்து உண்டு புகழுடன் வாழ்வதே பாரதி காட்டும் வாழ்க்கை.


இனி ஒரு விதி செய்வோம்!

ஒரு நாடு என்றால் அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துணர்ந்து சமநிலையில் வாழ்வதேயாம். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாட்டின் மக்கள் தொகை முப்பது கோடி தான். இன்றோ அறுபத்து நான்கு கோடியைத் தாண்டி விட்டது. பாரதி இந்திய சமுதாயத்தை ஒரே சமுதாயமாக காண்கிறான். நாட்டின் உடைமைகள் அனைத்தும்அனைத்து மக்களுக்கும் பொதுவுடைமை என்று பாடுகின்றான். பாரதிக்கு முன் தமிழில் "பொதுவுடைமை" என்கிற சொல் இல்லை. தமிழுக்கு இந்தச் சொல்லை வழங்கியவனே பாரதிதான்.

"வல்லமை உடையது வாழும்; வலிமையற்றது அழியும்." இதுவே உயிரியல் வாழ்க்கை நியதி. வல்லமை யுடையவர்கள் வல்லமையற்றவர்களை அடக்கியும், அழித்தும் தங்கள் வாழ்க்கை மாளிகையைக் கட்டி வருகின்றனர். ஒரு மனிதனின் உணவைப் பறித்துத் தின்று கொழுத்து வளராத செல்வந்தன் இருத்தல் அரிது. பாரதி சமூக விஞ்ஞானக் கவிஞன், ஏன் ஒரு மனிதனின் உணவைப் பிறிதொரு மனிதன் பறித்து உண்ணவேண்டும்? இது அநீதி என்று கண்டிக்கின்றான். ஒரு மனிதன் நோவதை இன்னொரு மனிதன் பார்த்தும், அந்த நோவை மாற்றாது மகிழ்ந்து வாழ்கிற கேவலமான வாழ்க்கை இனியும் வேண்டுமா? அந்நிய ஆட்சியில்தான் நடந்தது; விவேகமில்லாத காலத்தில் நடந்தது. இனிமேலும் இந்தக் கேவலம் தொடர வேண்டுமா? என்று கேட்கிறான். அறிவு இல்லாத-அறிவின் பயன் இல்லாத-காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை இனியும் வேண்டுமா? கூடவே கூடாது. உடனே தவிர்த்திடுக. இது பாரதியின் ஆணை.

இந்திய நாடு வளம் குன்றிய நாடு அல்ல. வளம் பல கொழிக்கும் நாடு. நான்கு நில அமைப்பும் பெற்று விளங்கும் திருநாடு. குறிஞ்சி நிலவளம்-வானுயர் தோற்றமுள்ள மலைகள்; மலைவீழ் அருவிகள்; மலைகளை மூடி மறைக்கும் காடுகள்! முல்லை நிலவளம்-இனி பொழில்கள் செழித்த மருத நிலவளம் - பாரதத்தைப் பசுமைத்தோல் போர்த்த போர்வை எனத்தகும் நெடிய வயல்வளங்கள். நெய்தல் நிலவளம்-அலை கடல்கள் கடல்படுமுத்துக்கள். இயற்கையில் கனிகளும், கிழங்குகளும் கணக்கின்றித் தரும் நாடு. இவ்வளவு வளமிக்க நாட்டில் வறுமை ஏது? எப்படி வந்தது? மனிதனின் வஞ்சனையினாலேயே வந்தது. வஞ்சனை உலகம் வறுமையை வறியவன் தலையில் "தலைவிதி" என்று எழுதியது. பாரதிக்குத் தாங்கொணாத கோபம். அந்தத் தலை விதியை அழித்து எழுதத் துடிக்கின்றான். புதுவிதி இயற்றுகின்றான். பாரதிக்குக் கோபம் உணவில்லாது வறுமையில் வாழ்கின்றவன் மீதல்ல. வறுமையாளனைப் படைத்த சமுதாயத்தின் மீதுதான். அந்தச் சமுதாய அமைப்பைத்தான் சாடுகின்றான். ஆம், ஒரு சராசரி தனி மனிதனுக்கும் வாழ்க்கை உத்தரவாதம் அளிக்கும் சமுதாயமே சமுதாயம். அங்ஙனம் இல்லாத சமுதாயம் குறையுடையது. அந்தச் சமுதாயத்தை அழித்து விடலாம் என்கிறான். அதற்கென ஒரு புதுவிதி இயற்றித் தருகின்றான்.

"இனி யொரு விதி செய்வோம்-அதை
எந்தநாளும் காப்போம்:
தனியொரு வனுக் குணவிலை
யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்."

என்பது பாரதியின் பாட்டு,

பாரதி உருவாக்க விரும்பிய புது விதி நாடு விடுதலை பெற்று முப்பது நான்கு ஆண்டுகள் ஆகியும் உருவாகவில்லை. இது இரங்கத்தக்கது. பாரதியின் நூற்றாண்டு நினைவாக இந்த விதி ஏற்கப் பெற்று வாழ்க்கை உத்தரவாதம் வழங்கினால் நாட்டுக்கு நல்லது. மனித சமுதாயத்தில் ஏது தனி மனிதன்! எல்லா உயிர்களிலும்-உயிர்க்குயிராக உறைபவன் ஒரே கடவுள். ஆதலால் வேற்றுமை இல்லை. எல்லாரும் அமர நிலை எய்த முடியும். எல்லாரும் அமரநிலை எய்தக் கூடிய மெய்ஞ்ஞானக் கலையை இந்தியா உலகிற்கு அளிக்கும். இந்திய மக்கள் அனைவரும் ஒரு குலத்தினர்; ஓரினத்தவர்; இந்திய மக்கள் அனைவரும் ஒரே நிலையினர்; உரிமைகள் பொது, கடமைகள் பொது. இந்திய சமுதாயத்தில் ஏழை இல்லை, பணக்காரன் இல்லை. எல்லாரும் ஒரே விலையினர்; இந்த நாட்டு மக்கள் அனைவரும் மன்னவர்கள். இது பாரதியின் முழக்கம்.

பாரதியின் உயர்ந்த எண்ணங்கள் செயல்களாக மலரவில்லை. இந்தியாவில் வறுமையின் கொடுமை வளர்ந்து வருகிறது. உழைக்கும் சக்தி விலைப் பொருளாக்கப்பெற்று இலாப வேட்டைக்காரர்களால் சுரண்டப்படுகிறது. எங்கும் சாதிச் சண்டைகள்; "மண்ணின் மைந்தர்கள்” என்ற கொள்கை இன்று பாரதம் பாரதியின் அடிச்சுவட்டில் செல்லவில்லை. இன்றைய இளைய சமுதாயம் பாரதியின் கனவை நினைவாக்க முன்வரவேண்டும்! பாரதியின் புதுவிதியைப் பாரதத்தின் விதியாக சட்டம் இயற்றவேண்டும். நாடு பொதுவுடைமை நெறியில் நடைபோடவேண்டும். பொதுவுடைமை நெறி இந்த நாட்டின் ஆன்மீக வளத்தை அடித்துக்கொண்டு போகாமல் பாதுகாக்க வேண்டும். இதுவே பாரதிக்கு நாம் செய்யும் தொண்டு.


இந்திய சமயம்

இந்தியா, உலக நாடுகளைவிடச் சிறந்தது என்று உலகத் தத்துவ ஞானிகள் பாராட்டியுள்ளார்கள். உலகத்தின் எல்லா நாடுகளிலும் ஆறுகள் உண்டு. இந்தியாவிலும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் மலைகள் உண்டு. இந்தியாவிலும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் இயற்கைவளம் உண்டு. இந்தியாவிலும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் பொருள் செழிப்பும் வறுமையும் உண்டு. இந்தியாவிலும் இவ்விரண்டும் உண்டு. உலகத்தின் எல்லா நாடுகளிலும் மனிதர்கள் உண்டு. இந்தியாவிலும் உண்டு. அப்படியானால் என்னதான் வேறுபாடு? உலகத்தின் வேறு எந்த நாட்டிற்குமில்லாத பெருமை இந்தியாவிற்கு உண்டு. அது என்ன?

உயிரைப் பற்றி அறியவும், ஆராய்ந்து தெளியவும் உயிர்க்கு உறுதி சேர்க்கவும், உயிர்க்கு உய்தி சேர்க்கவும், முயன்ற ஒரே நாடு இந்தியாதான். உடல் வாழ்க்கை வேறுஉயிர் வாழ்க்கை வேறு என்று பகுத்தறிய முடியாத நாட்டு மக்கள் இன்னும் உள்ளனர். உடல் வாழ்க்கையினும் உயிர் வாழ்க்கை சிறந்தது. உயிர் வாழ்க்கைத் துணையே உடல் வாழ்க்கை. "உயிர் நிறை நலம் எய்துதலே வாழ்க்கையின் குறிக்கோள்" என்று வாழ்ந்த மக்கள் நிறைந்த நாடு இந்திய நாடு. இன்றும் இந்தக் குறிக்கோளைத் தொடர்ந்து வற்புறுத்தி வரும் நாடு இதுவே.

உயிர்கள் ஒன்றல்ல. பலப்பல. உயிர்களிடையில் வேறுபாடுகள் இல்லை. எல்லா உயிர்களும் பிறப்பில் ஒத்தவை. பிறந்த எல்லா உயிர்களும் வாழமுடியும்; வாழ்வாங்கு வாழமுடியும். எல்லா உயிர்களும் இன்ப அன்பு நிலையை எய்த முடியும். இங்ஙனம் உலகத்திற்குச் சொல்லுகின்ற ஒரே சமயம் இந்திய நாட்டுச் சமயம்தான். உலகிற் பிறந்த எந்த மனிதரையும் "அஞ்ஞானி’ என்றும் யாரை நோக்கியும் "உனக்கு நரகம்"தான் என்றும் இந்திய சமயம் கூறாது. அப்படிக் கூறுவதை ஓர் உயர்ந்த சமயம் என்றும் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்திய சமயம், கட்டுக்கோப்பான வலிமை பொருந்திய சமய அமைப்பை அமைக்காததற்கும்,நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய வாழ்க்கை முறைகளைக் கொண்டதற்கும், சமயத்தை, பிரச்சாரத்திற்குரியதல்லாமல், வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டதற்கும், மதமாற்றம் முதலியவற்றிற்கு முயற்சிக்காமல் இருந்ததற்கும் இந்திய சமயத்தின் பரந்த கொள்கையே காரணம்.

இந்திய சமயம் பிணக்குகளைக் கடந்தது; வேற்றுமைகளைக் கடந்தது. எந்தச் சூழ்நிலையிலும் உயிர் உய்திப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடையது. இந்திய சமயம் மக்களை இரும்புப் பிடியாகப் பிடித்து அலைக்கழிப்பதில்லை. இந்திய சமய வழிப்பட்ட புரோகிதர்கள், மதத் தலைவர்கள் ஆகியோருக்கும் சமுதாயத்தின்மீது இரும்புப் பிடியான ஆதிக்கப் பிடிப்பில்லை. அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததே அவரவர் மேற்கொள்ளும் சமயம், ஒழுகலாறு. இஃது இந்திய சமயத்தின் சிறந்த கொள்கை, கோட்பாடு, உலகியலில் எந்தப் பெயர் சொல்லி எப்படிக் கடவுளைத் தொழுதாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியவொன்றே. இத்தகைய பரந்த, நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய சமயத்தைத் தான் இந்திய சமயம் என்கிறோம். இது காலப்போக்கில் "இந்து சமய"மாயிற்று. இந்திய சமயம் இந்து சமயமான போது வேண்டாத சில பழக்கங்களை உரிமையாகக் கொண்டது. பரந்த மனப்பான்மைக்கு இழுக்குத் தரக்கூடிய சில குறுகிய பழக்கங்களையும் வழக்கங்களையும்கூட அனைத்துக் கொண்டது. உயர்ந்த இந்திய சமயத்தில் ஆழ்ந்து திளைத்த கவிஞன் பாரதி.

உயிர்கள் வேறுபாடுடையன அல்ல. எவ்வுயிரும் இறைவன் சந்நிதியே என்பது இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை உயிர்க்கு உயிராக இறைவன் இருந்து இயக்கி எல்லா உயிர்களையும் வழி நடத்துகின்றான். நோயுற்ற உயிராயின் மருத்துவ முறையில் வழி நடத்தி, நோய் நீக்கி, நல்லுயிராக்கி, நன்னெறியில் நிறுத்தி இன்புறும் நிலையில் அமைத்திடுவான். நல்லுயிராக இருப்பின் மேலும் நன்னெறியில் உய்த்துச் செலுத்திச் சென்று இன்ப அன்பினில் அமைத்திடுவான்.

எல்லா உயிர்களிடத்தும் இறைவன் தங்கியிருக்கிறான். உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், இறைவனுக்கு அன்பு காட்டுதல் போலாகும். எல்லாவுயிர்களும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவை என்ற கொள்கை உறுதிப் பட்டுவிடுமாயின் போரற்ற உலகத்தைக் காணலாம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் இனிய சமுதாயத்தைக் காணமுடியும். இன்றுள்ள நிலை என்ன? உள் நாட்டில் சாதி, வகுப்பு கலவரச் சண்டைகள்! மதமாற்றத்திற்குரிய முயற்சிகள்! உயர்ந்த மனித சமுதாயத்தைப் படைக்க வேண்டிய மதங்கள் இத்தகைய இழிநிலையான போட்டிகளில் ஈடுபடுகின்றன. ஏன் இந்த அவலம்? வேறு ஒரு சமயத்திலிருந்தால் இறைவன் அருள் கிடைக்காது என்று சொன்னால் கடவுள் எப்படிப் பூரணமானவன் எனப்படுவான். நிறைவு இல்லாத ஒன்று எப்படி நிறைவைத் தர முடியும்? மதமாற்றம் என்பது மதத்துக்காகச் செய்யப்படுவதுமில்லை கடவுளுக்காகச் செய்யப்படுவதுமில்லை.

உலகத்தில் முறைகேடான வழிகளில் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் அதிகாரத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளவும் செய்யும் சூழ்ச்சியேயாகும். இந்தியா உலகத்திற்கே ஞானத்தைத் தரக்கூடிய ஆன்ம வலிமையுடையது. இந்திய மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வேறு சமயநெறி தேவையில்லை. காலச் சூழ்நிலையின் காரணமாக இந்திய சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களுடைய முறைகேடான பழக்க வழக்கங்களின் மூலம் இந்திய சமயத்தைக் கறைப்படுத்தியிருக்கலாம் அல்லது குறைப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் இந்திய சமயம் பொதுமையுடையது. இந்திய சமயத்திற்குச் சாதிகள் இல்லை. தீண்டாமை இல்லை. எல்லையே இல்லை. இந்திய சமயத்தின் கொள்கை உயிர்க்குல ஒருமைப்பாடேயாகும். இந்திய சமயத்தைக் குறைப்படுத்துகிறவர்களை எதிர்த்து நிற்க முடியாமல், திருத்திய நிலைகளுக்கு முயற்சி செய்யாமல், மதம் மாறுவது தன்னம்பிக்கைக்கு மாறான செயல். இந்திய சமயத்தின் உயர்வை அறியாதவர் செய்கை, உலகத்திற்கே உயிரின் மேன்மையை, உயிர்க்குல ஒருமைப்பாட்டை எடுத்துக்கூறி வழி நடத்தும் இந்திய சமயத்தில் இல்லாத மேம்பாடா வேறொரு சமயத்தினால் வரப்போகிறது?

ஆதலால், இந்திய சமயத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மனித குலத்தைப் பிரிக்கும் வேற்றுமைகளை எதிர்ப்போம்! வெற்றி காண்போம்! பாரதியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இந்திய ஆன்ம ஞானத்தை உலகத்திற்கு அளிப்போமாக!

"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
என்றுரைத் தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்

இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்! ஆம்!
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க

பாரதி

ஓர் குலம்! ஓர் இனம்!
ஓர் நிறை! ஓர் விலை!

இந்தியா ஒரு பழம் பெரும் நாடு. பரப்பளவில் பெரிய நாடு. இவ்விரண்டின் இயல்புக்கு ஏற்றவாறு வேற்றுமைகளும் பல்கிப் பெருகி வளர்ந்த நாடு. இந்தியா அடிமைப்பட்டதற்கே காரணம் வேற்றுமைகளின் வழி உள்ளிடழிந்ததேயாகும். இந்தியா ஒரு சுதந்திரமான வலிமையான நாடாக இருக்க வேண்டுமானால் இந்திய மக்கள் வேற்றுமைகளை வென்று ஒருமையுணர்வு பெற்றாக வேண்டும். பாரதி, இந்த ஒருமையுணர்வின் அவசியத்தை உணர்கிறான். ஆதலால், இந்திய மக்கள் அனைவரும் ஒரு குலம் என்கிறான்.

குலவேற்றுமைகளை நியாயப்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாரதி உபதேசிக்க விரும்பவில்லை. காரணம் அவன் ஒரு மதத் தலைவன் அல்லன். அவன் ஒரு சுதந்திர சமுதாயச் சிற்பி. மதத் தலைவர்களாக இருந்தால் வேற்றுமைகளை நியாயப்படுத்துவர். ஒரு மதத்தலைவர் வேற்றுமைகளை நியாயப் படுத்தும் பாங்கினைப் பாருங்கள்; "இந்து சமயத்தில் பன்னெடுங் காலமாகவே வேற்றுமைகள் இருந்து வந்துள்ளன. ஐந்து விரல்களுக்குள் வேற்றுமை இல்லையா?” என்று அவர் கூறுகிறார். என்னே அற்புதம்! இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர், பார்ப்பனர் என்ற இரு வகுப்பாருக்கிடையில் வேற்றுமையும் ஐந்து விரல்களுக் கிடையேயுள்ள வேற்றுமையும் ஒன்றா? ஐந்து விரல்கள் உருவத்தில் வேற்றுமையுடையனவே தவிர, உடலிலிருந்து பிரிக்க முடியாத ஒட்டுறவுடையன அல்லவா? அது போலவா, தாழ்த்தப்பட்டோர் பார்ப்பனர் உறவு இருக்கிறது? அவர்களுக்கும் மேட்டுக் குடியினருக்கும் ஒட்டுறவு இல்லாமையால்தானே தீண்டத்தகாதவர் என்ற சொல் பிறந்தது. தமிழர்களில் தாமும் ஒருவர் என்று கூட அவர்கள் சிந்திப்பதில்லையே!ஆதலால் இந்திய சமூகத்தில் உள்ள வேற்றுமைகள் ஒற்றுமை காணும் அடிப்படைக் குரியன அல்ல.

ஆதலால், இந்திய சமூக வேற்றுமைகளைப் புறக்கணித்து ஒரு குலம் காண ஆசைப்படுகிறான் பாரதி. ஒரு குலம் மட்டும் அமைந்தால் போதுமா? குலம் என்பது ஒரு மொழி, ஒரு சமயம் இவற்றுக்குள் காணப்படும் உட்பிரிவுகள். இந்தியா பெரிய நாடாயிற்றே! இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு; பல்வேறு சமய நெறிகளை மேற்கொண்டொழுகும் மக்கள் வாழும் நாடு. இந்த இன வேற்றுமைகளை நீக்கி ஓரினமாக-இந்தியராக ஆக்க வேண்டும் என்று பாரதி விரும்புகின்றான். பாரதி, அம்மையை வழிபடும் உளப்பாங்கினன்; சக்தி உபாசகன். ஆயினும் இந்தியாவில் வாழும் மக்கள் வழிபடும் அனைத்துக் கடவுள்களையும் ஏற்றுப் போற்றுகின்றான்.

"ஆத்திசூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந் துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்.

(புதிய ஆத்திசூடி-பரம்பொருள் வாழ்த்து)

என்றும்,

"விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி
அல்லா! யெஹோவா! எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்தவான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
...பூமியில் எவர்க்கும் கடமை யெனப்படும்...

(விநாயகர் நான்மணி மாலை-8 வரி-11)

என்றும் பாரதி பாடுகிறான்.

இந்தியாவை மதச் சார்பற்ற நாடாக அரசியற் சட்டம் அறிவிப்பதற்கு முன்பே, தேசீயக் கவிஞன் கொள்கைப் பிரகடனம் செய்கிறான். ஆம்! பழுத்த கவிஞன்! மக்களுக்காகப் பிறந்து பாடிய கவிஞன்! அவன் எப்படி வேற்றுமையைத் தாங்கிக் கொள்வான்? பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இந்த ஆண்டில் இந்தியா எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது? அன்று ஆங்கிலேயன் அடிமைகளாக வாழும் இந்தியர்களைப் பார்த்துக் கேட்டானே, "உங்கள் சாதிச் சண்டை போச்சோ?” என்று! ஆம்! இன்னமும் இந்தியாவில் சாதிச் சண்டை போகவில்லை! இல்லை! சாதிச் சண்டை போக, அனுமதிக்க மறுக்கிறார்கள் இந்து மதத் தலைவர்கள்! சாதி வெறியர்கள்! சாதி மனப்பான்மையைக் கட்சிகள் வளர்க்கப் பயன்படுத்தும் புன்மை அரசியல்வாதிகள்! மதங்கள் தான் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இன்று மக்களுக்காக மதம் இல்லை! மதத்திற்காக மக்கள் இருக்கிறார்கள்! இல்லை, சில பல குழுக்களாகப் பிரிந்து, மதத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டு ஜிவிப்பவர்கள் கையில் மதம் சிக்குண்டுவிட்டது. எனவே இந்தியாவில் அநாகரிகமான மதச் சண்டைகள், மதத் தலைவர்களின் சண்டைகள், மத மாற்றங்கள் அனைத்தும் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டுவருகின்றன. இன்றைய மதம், செய்ய வேண்டிய பணிகளைச் செய்யவில்லை. அது மனிதகுல ஒருமைப்பாட்டுக்கும் உலக அமைதிக்கும் போராட மறுக்கிறது. ஆதலால் இன வேற்றுமைகளும் களையப்பட வேண்டுமென்பதே பாரதியின் நோக்கம். எனவே "எல்லாரும் ஓரினம்" என்கிறான். ஆம்! இந்தியர், எல்லாரும் ஓரினம்! - இதுவே பாரதியின் இலட்சியம்.

எல்லாரும் இந்தியர் என்று சொன்னால் மட்டும் போதுமா? எல்லாரும் எல்லாம் பெற்று ஓர் நிறையாக வாழ வேண்டாமா? அப்படி வாழ்ந்தால்தான் இந்தியா ஒரு நாடாகும். "ஓர் குலம்!", "ஓர் இனம்" என்ற கொள்கை உறுதிப்படும். அடுத்து "எல்லாரும் ஓர் நிறை” என்று பாடுகிறான். ஓர் நிறை என்ற சொல்லில் சோஷலிசப் புரட்சியின் கருத்தை உள்ளடக்கம் செய்துள்ளான். பாரதியின் நூற்றாண்டு விழா வருகிறது. நாடு நிச்சயமாக விழாக் கோலம் கொள்ளும். விழா, முழக்கொலிகளுக் கிடையில் பாரதியின் சுதந்திரமும் அழுகையும் நிறைந்த குரல் கேட்கும்! உய்த்துணர்வார்க்குக் கேட்கும். இந்தியர்கள் அனைவரும் இன்று ஓர் நிறையிலா வாழ்கிறார்கள்?67 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். ஏகபோகங்களும் உண்டு. நாளைக்கு என்ன? என்ற உத்தரவாதமின்றி வாழ்வோர் எண்ணிக்கை ஒன்றா? இரண்டா? எல்லாரும் ஓர் நிறை என்ற சமுதாயத்தை அமைக்காதவரை பாரதியின் ஆன்மா சாந்தி பெறாது. ஓர் நிறை மட்டுமின்றி "ஓர் விலை" என்றும் பேசுகிறான் பாரதி. நிறை என்பதை கல்வி, அறிவு, தறுகண்மை முதலியவற்றை எண்ணிச் சொல்லியிருப்பான் போலும்! விலை என்பதைப் பொருளாதார சமத்துவத்தை எண்ணிப் பேசியிருப்பான் போலும். நிறை, விலையைச் சார்ந்தது. விலை, நிறையைச் சார்ந்தது. இன்று இந்தியர்கள் எல்லாரும் ஓர் நிறையும் பெறவில்லை! ஓர் விலையும் பெறவில்லை!

அடுத்து, பாரதிக்கு உரிமை-அதிகார உணர்வுகள் வருகின்றன. இந்திய மக்கள் அனைவரும் மன்னர்கள் என்று பாடுகின்றான்! மன்னர்கள் என்றால் இங்கு முடிசூடியவர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. இன்றையக் குடியாட்சியில் கூட சிலர் முடிசூட்டிச் செங்கோலேந்தி விழாக் கோலம் காட்டுகின்றனர். இல்லை! வேடிக்கை காட்டுகின்றனர். பாரதி, இந்த உணர்வோடு இதைக் கூறவில்லை. ஆளும் வாய்ப்பினைப் பெற்றவர் மற்றவரை மதித்தல் வேண்டும். மக்களாட்சியில் மக்களே ஆட்சிக்கு மூலம் என்ற உணர்வினைப் பெறுவதற்காக இங்ங்னம் பாடுகிறான். இன்றோ, ஆளுங்கட்சியின் அடிமட்டத்தி லிருக்கும் சராசரி மனிதர்கூட அதிகார போதை பிடித்து அலைகிறார். அதனால் கட்சிச் சார்பு இயல்பாக இல்லாதவர்களுக்குக்கூட ஏதாவதொரு கட்சியைப் பிடித்துக் கொள்ளும் ஆவல் தோன்றியுள்ளது. இது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் வலிமைக்கும் நல்லதல்ல. ஆதலால், பாரதியின் நூற்றாண்டு விழாவில் நாம் அனைவரும் பாரதி கண்ட சமுதாய அமைப்பை அமைப்போம் என்று உறுதி கொண்டு முயல்வோமாக!

"எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர்இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்!-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்"

பாரதி

தமிழ்மொழி வளர்ச்சி

ஒரு மொழி காலத்தின் தேவைகளை அறிந்து வளர்க்கப்பட வேண்டும். மொழி வளர்ச்சி, மொழியைப் பேசும் இனத்தின் அறிவு வளர்ச்சியாகவும் அறிவு வளர்ச்சி அவ்வினத்தின் தொழில் மேம்பாட்டு வளர்ச்சியாகவும், தொழில் மேம்பாட்டு வளர்ச்சி அவ்வினத்தின் பொருளாதார வளர்ச்சியாகவும், பொருளாதார வளர்ச்சி அவ்வினத்தின் நாகரிக மேம்பாட்டு வளர்ச்சியாகவும் படிமுறையில் துணை செய்வன. மொழி வளர்ச்சியைச் சாதாரணமாகக் கருதினால் அம்மொழி வளர்ச்சியொடு தொடர்புடைய அனைத்து வளர்ச்சிகளும் கெடும். அதோடு உலகத்து நாடுகள் தத்தம் மொழியை வளர்த்து அறிவை வளர்த்து மேம்பாடுற்று வளரும்போது நாம் உரியவாறு தமிழை வளர்க்கத் தவறினால் நாம் முன்னேறாதது மட்டுமின்றி, காலப்போக்கில் அடிமைகளாகவும் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை பாரதி, தெளிவாக அறிந்து தமிழ் நாட்டை, தமிழ் மக்களை மொழி வளர்ச்சியில் ஆற்றுப்படுத்துகின்றான்.

மேற்கு நாடுகளின் மொழி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி பாரதிக்கு ஓர் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நாடுகளிலே கலைகள் வளர்வதைப் பாரதி கணக்கில் எடுத்துக் கொள்கிறான். அதுபோலத் தமிழ் வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆனால் தமிழரில் சிலர், தமிழில் அந்தக் கலைகள் வாரா என சொல்லுகின்றனர்; இன்னும் சொல்லி வருகின்றனர். அதனாலன்றோ தமிழ் பயிற்று மொழி இயக்கம் நிறைவான வெற்றி பெறவில்லை. தமிழில் அறிவியல் உண்மைகளைத் தாங்கி வெளிவரும் தாள்கள் குறைவு இல்லை! "கலைக்கதிர்" தவிர மற்றொன்று இல்லை. வழக்கமான அரை நிர்வாண படங்கள், காமவெறியூட்டும் கதைகள், தன்னம்பிக்கையை இழக்கத்தூண்டும் கிரகப் பலன்கள் ஆகியவைகளைக் கொண்ட மலிவான சரக்குகளையுடைய இதழ்களே மிகுதி மக்களை மேலும், மேலும் அறியாமையில் ஆழ்த்துவதற்கே இந்த இதழ்கள் முயற்சி செய்கின்றன.

ஆதலால், தமிழில் புதிய கலைகளைக் காணும் ஆர்வமில்லை. வளர்ச்சியில்லை. படித்தவர்களானாலும் சரி, படிக்காதவர்களானாலும் சரி அறிவியற் செய்திகளைப் படிப்பதில் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நாட்டில் எப்படி மொழி வளரும்? சிந்தித்து விவாதிக்கப் பெறும் பட்டிமன்றங்களை எதிர்க்கிறார்கள்; தரங்குறைந்து போவதாகச் சொல்லுகிறார்கள். ஆனால், சிந்தனைக்குப் பயனில்லாத, சிந்தனையைத் துரண்டாத, மலிவான தரம் குறைந்த நகைச்சுவைகள் நிறைந்த கதாகாலட்சேபங்களை யாரும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? சிந்திக்கும் அறிவு வளர்ச்சியை எப்படியோ முடக்கப் பார்க்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் சமயத் துறையில் பிற்போக்கானவர்கள், "விஞ்ஞானம் வளர்த்ததன் பயன் என்ன? அணுகுண்டு கண்டதுதான்? அழிவுதான்!” என்று வளர்ந்துவரும் அறிவியலைக் கிண்டலும் கேலியும் செய்கின்றனர். இறைவனை நோக்கித் தவம் செய்தவர்கள் கூட அழிவாற்றலை வரமாகப் பெற்று அமரர்களுக்கும், மானுட சாதிக்கும் தீராத தொல்லைகள் தந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் தவம் செய்யும் முயற்சியும் கெட்டதுதான், என்று ஒத்துக் கொள்வார்களா? இந்த மாதிரியான பிற்போக்கு எண்ணங்களின் காரணமாகத் தமிழ் மக்களிடத்தில் அறிவு வளரவில்லை. எந்த ஒன்றையும் அறிவியல் பார்வையில் அணுகும் அறிவும் வளரவில்லை. புறத்தே வளர்ந்துவரும் விஞ்ஞான சாதனங்கள் தமிழ் நாட்டைக் கவ்விப் பற்றிக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களின் வாழ்க்கைப் போக்கில் அறிவியல் பாங்கில்லை. ஏன்? சிலர் அறிவியல் தமிழில் வராது என்றும் அறிவியலுக்கு உரியது ஆங்கிலம்தான் என்றும் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உலகத்தின் எல்லா மொழிகளிலும் அறிவியற் கருத்துக்கள் கால் கொள்ளும் முன்பே தமிழ் மொழியில் அறிவியற் கருத்துக்கள் கால் கொண்டன. "வலவன் ஏவா வானவூர்தி" 'சீவகனின் மயிற்பொறி" ஆகியவை வானூர்தி விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டுக்கள்! பூம்புகாரிலிருந்த சதுக்கங்கள் இன்றைய "கம்ப்யூட்ட"ருக்கு முன்னோடிகள். இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலும், கரிகாலன் கட்டிய கல்லணையும் பொறியியலுக்குச் சரியான எடுத்துக்காட்டுக்கள்! இங்ஙனம் வளர்ந்த தமிழ் மொழி, காலப்போக்கில் அயல் மொழிகளின் ஊடுருவல்களாலும், வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறிக்கு மாறான மாயாவாதக் கருத்துகளாலும் வளர்ச்சியில் தேக்க முற்றது. அதனால், தமிழின் வளர்ச்சியும் தடைப்பட்டது. அதன் காரணமாகத் தமிழின் திறனை உள்ளவாறறியாத ஆங்கிலம் படித்த சிலர், தமிழில் அறிவியல் வராது என்றும் அதற்குரிய நூல்கள் தமிழில் இல்லை என்றும் கூறித் தங்கள் அறியாமையைஅயல்மொழிக் காதலை வெளிப்படுத்துகின்றனர்.

பாரதிக்கு இந்த மனப்போக்கு பிடித்தமில்லை. தமிழில் அறிவியல் வராது என்று சொல்பவர்களைப் பேதைகள் என்று திட்டுகிறான். கடலில் கலம் ஒட்டி அயல் நாடுகளைக் கண்ட தமிழினம் காலப் போக்கில் நாட்டு எல்லைக்குள் முடம்பட்டுப் போயிற்று. கடல் கடத்தல் நன்றன்று என்ற சித்தாந்தம் வேறு மூடத்தனத்தை வளர்த்தது. அதனால், பாரதி எல்லைகளை-வரையறைகளை உடைக்கச் சொல் கிறான்; எட்டுத்திக்கும் செல்லச் சொல்கிறான். உலகத்தின் பல்வேறு நாடுகளில் வளர்ந்து வரும் சிந்தனைகளைத் தமிழுக்கு உரிமைப் பொருளாகக் கொண்டுவந்து சேர்க்கச் சொல்கிறான். பாரதி, தாய்மொழி என்ற எல்லைக்குள் நின்றானே தவிர சிந்தனையில் அறிவியலில் எல்லைகளுக்கு உட்பட்டவனல்லன். அவன், உலகத்தின் எத்திசையில் தோன்றும் சிந்தனையும் அது சிறந்ததாக இருப்பின் தனது சொந்தக் கருத்தாக ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை. மொழி எல்லையில் பாரதி நின்றதுகூட மொழிப் பற்றினால் மட்டுமன்று. மனித குலத்தின் சிந்தனை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி தாய்மொழியில் ஏற்படுவதைப் போல், பிற மொழிகள் வாயிலாக ஏற்படுவதில்லை. இஃதோர் இயற்கை நியதி. இந்த நியதியை எளிதில் மாற்ற இயலாது. அங்கனம் மாற்ற முயன்றால் அஃது இயற்கையாகவும் இருக்காது. காலமும் பொருளும் அதிகம் பிடிக்கும். ஆக, மனித சமுதாயத்தின் நலம் கருதித்தான் மொழி எல்லையில்கூட நின்றான் பாரதி.

ஐந்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தும் அளவுக்கு நாம் வளர்ந்திருந்தாலும் உலகத்தில் நாள்தோறும் வளர்ந்து வரும் அறிவியல், தொழிலியல் நுட்பங்களை விளக்கும் நூல்கள் தமிழில் போதுமானவை வெளிவரவில்லை. சில நாடுகளில் உலகத்தில் எந்த ஒரு மொழியிலாவது ஒரு சிறந்த நூல் வெளிவருமானால் இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் மொழிபெயர்க்கப்படுவதாகக் கூறுகின்றனர். அத்தகைய விரைந்த முயற்சிகள் தமிழில் இல்லை. ஒரு கருத்துத் தோன்றிப் பல ஆண்டுகள் ஆனபிறகுதான் அந்தக் கருத்தைத் தாங்கித் தமிழில் நூல் வெளிவருகிறது. இந்த நூல் தோன்றி வெளியில் உலாவரும்போது அந்தக் கருத்து வளர்ந்து மாற்றம் அடைந்துவிடுகிறது. இது வாழ்க்கைக்கு உதவாத பழைமையாகி விடுகிறது. இந்த நிலைமைகளை மாற்ற, சிறந்த முறையில் இயங்கும் ஒரு தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்க வேண்டும். இக் கழகம் தமிழை அறிவியல் முறையில் சிந்தித்து வளர்த்தலும், பிற மொழிகளில் தோன்றும் நூல்களை விரைந்து தமிழில் கொண்டுவந்து சேர்த்தலும் ஆகிய பணிகளை செய்யத் தக்கவாறு அமைய வேண்டும். அப்போதுதான் தமிழ் வளரும்; தமிழகத்தின் எதிர்காலம் சிறப்புறும்; அப்போதுதான் மேற்றிசை மொழிகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தலாம்; தமிழ் மொழியின் இளமையையும் என்றும் காப்பாற்ற முடியும்.

தமிழ்நாடு அரசு, இந்த வகையில் சிந்திப்பது, சிந்தித்து செயல்படுவது நல்ல பயனைத் தரும். அப்படி தமிழ்நாடு அரசு முன்வராது போனால் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் முன்வந்து ஒரு மக்கள் நிறுவனத்தைத் தோற்றுவித்துச் செயற்படுவது அவசர அவசியக் கடமை. காலத்தின் கடமை என்பது நமது கருத்து.

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.


சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை.
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவியிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
இந்தவசை யெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர்எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்."பாரதி


தேமதுரத் தமிழோசை...


பாரதி, பன்மொழி பயின்றவன். ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் அவனுக்குப் பயிற்சி உண்டு. ஆனாலும் பாரதியைக் கவர்ந்த மொழி தமிழ் ஒன்றேதான். தமிழ் இனிமை நிறைந்த மொழி.

"கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப்
பாகிடை ஏறியசுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிர்இள நீரும்
இனியன என்பேன் எனினும்-தமிழை
இன்னுயிர் என்பேன் கண்டீர்!"

என்கிற பாவேந்தன் பாரதிதாசன் பாட்டு அனுபவத்தில் முகிழ்த்த பாட்டு.

தமிழுக்கு இனிமை எப்படி வந்தமைந்தது? தமிழ், காலத்தால் மூத்த மொழி. வையகத்தில் உள்ளோர் கையசைத்து அடையாளங்காட்டி வாழ்ந்த காலத்தில் தமிழ்த் தாய் தமிழ் மக்களின் நாவை அசைத்தாள். தமிழில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றியது இலக்கண நூல். இலக்கியம் கண்டு வளர்ந்த பின்னர்தான் இலக்கணம் தோன்றும் என்பது மொழி நூலறிஞர் கருத்து. இன்று. கிடைத்திருக்கும் பழந்தமிழ் இலக்கணநூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்திற்கும் முந்தியது அகத்தியம். அந்த அகத்திய நூற்பாக்கள் சில கிடைத்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகள் மக்கள் நாவில் பழகிப் பழகி இனிய தமிழாக விளங்குகிறது.

தமிழ் இனிமையானது என்றால் செவிப்புலனுக்கு மட்டுமன்றி வாழ்க்கைக்கும் இன்பமளிக்கும் இனிமையுடையது. உலக மொழிகளிலெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. ஆனால் தமிழில் உள்ள தொல்காப்பியத்தில் வாழும் மனிதருக்கும், வாழ்க்கைக்கும் கூட இலக்கணம் செய்யப் பெற்றுள்ளது. காதல் மனை வாழ்க்கைக்கு 'அகத்திணை' என்றும், சமுதாயக் களத்தில் நிகழ்த்தும் வாழ்க்கைக்குப் 'புறத்திணை' என்றும் இலக்கணம் செய்யப் பெற்றுள்ளது. அன்று மனையற வாழ்க்கையும் சமுதாய வாழ்க்கையும் சிறந்திருந்ததனாலேயே புகழ் பூத்த வாழ்க்கையாகத் தமிழினத்தின் வாழ்க்கை விளங்கியது; பொருள் வாழ்க்கையில் வளம் இருந்தது. ஒப்புரவுப் பெருநெறியும் வளர்ந்து இருந்தது. கொற்றம் சிறந்திருந்ததால் நீதி இருந்தது. வீரத்தில் சிறந்து விளங்கியதால் பனிமலை தொடங்கி, குமரிக்கடல் விழுங்கிய நிலப்பரப்பு உள்ளிட்ட பெருமைக்குரிய பேரரசு நிலவியது. உரோமானிய எழுத்தாளர்கள், உரோம் நாட்டு செல்வத்தைத் தமிழ்நாடு கொள்ளை கொள்வதாக அழுது புலம்பினார்கள். இங்ஙணம் புகழ்பூத்து வாழ்ந்த தமிழினத்தில் கடவுள் நம்பிக்கை நிலவியது. விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் திருக்கோயில்களைத் தமிழர்கள் கண்டனர். நகரமனைய பெரிய திருக்கோயில்கள் அமைத்தனர். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் தழுவி முத்தமிழ் கண்டு வளர்ந்து முழுமையாக வாழ்ந்தனர்.

இங்ஙணம் புகழ் பூத்த தமிழினத்தின் வாழ்க்கையில் அயல்வழி ஊடுருவல்கள் தோன்றிப் பாழடித்து விட்டன. பாரதி, இந்த இழி நிலையை நினைந்து வருந்துகின்றான். உலகனைத்தும் புகழ வாழ்ந்த இனத்தின் இந்தத் தலைமுறையினர் அறியாமையில் பிணைப்புண்டு பாமரர்களாய், மனித நாகரிகத்துடன் வாழாமையால் விலங்குகளாய் வாழும் இழிநிலையை இடித்துக் காட்டுகிறான். தமிழ்நாட்டில் பிறந்து விட்டால் தமிழரா? தமிழில் பேசிவிட்டால் தமிழரா? இல்லை என்பது பாரதியின் கருத்து. இங்கனம் வாழ்பவர்கள் பெயரளவில்தான் தமிழர்கள். உயிரில், உணர்வில், வாழ்க்கையில் பழந்தமிழ் வாழ்க்கையைப் பேணுபவர்களே உண்மைத் தமிழர்கள். தேமதுரத் "தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று பாரதி கனவு காண்கிறான். இக்கனவு ஒரளவு நினைவானாலும் நிறைவாக நடைபெறவில்லை. தமிழ் நாடு அரசு உலகத் தமிழ்ச் சங்கம் பற்றி, உலகத் தமிழ் மாநாட்டின்போது அறிவித்தது. இது குறித்து விரைந்தினிது முடிக்கும் செயற்பாடு தேவை. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழரல்லாதவர்களும் தமிழ் கற்கும்படியும் தமிழிலக்கியங்களைச் சுவைத்திடும்படியும் செய்ய உலகத் தமிழ்ச் சங்கம் தேவை. இது பாரதியின் வேணவா.

பாரதியின் எச்சரிக்கை

உயிரினம், வளர்ச்சித் தன்மையுடையது. ஓயாது வளர்ந்து வரும் இனம்தான் வரலாற்றில் இடம் பெறும்; சிறப்புடன் வாழும் ஓர் இனத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்திகளாக அந்த இனத்து வாழ்க்கையின் படிப்பினைகள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு இனங்களின் வளர்ச்சியும் காரணமாக அமையும். ஒன்றோடொன்றை ஒப்பு நோக்கும் போதுதான் வளர்ச்சி அறிந்துணரப் பெறும்.

ஒப்பு நோக்கிற்கு எப்பொழுதும் சான்றோர், உயர்வு நலஞ்சார்ந்ததையே எடுப்பர். ஆதலால் எந்த ஓர் இனத்தின் வளர்ச்சியிலும் சார்பு இருக்கும்; இருக்க வேண்டும். அதாவது உலகின் மற்ற இனங்கள் வளரும் போதெல்லாம் உலகின் ஒவ்வோரினமும் தம்மையும் வளர்த்து உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாது ஓரினம் பின்தங்கிப் போனால் பின்தங்கிய இனம் வரலாற்றில் நிற்க முடியாது. காலப் போக்கில் அழியும் அல்லது அடிமைப்படும்.

சான்றாக, நமது இந்து சமயம் என்று கூறப்பெறும் சைவ வைணவ சமயங்கள் காலத்தால் மூத்தவை; கருத்தாலும் மூத்தவை. ஆயினும் உலகின் மற்ற சமய நெறிகளாகிய கிறித்துவ-இசுலாமிய சமய நெறிகளின் பணி நிலை, சமய நிலை, சமூக நிலைகளை அறிந்து ஆராய்ந்து, தனது நிலைகளை மாற்றிக்கொள்ள முன் வராததால் ஒரு தேக்கம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறதல்லவா? அது ஒருபுறம் இருக்கட்டும்.

எந்த ஒரு சமுதாயமும் உயிர்ப்புடன் வாழ்ந்தால் கொள்வனவும் கழிப்பனவும் நிச்சயமாக இருக்கும். அதுவே உயிர்ப்பின் அடையாளம்! மாறுதல் உலகியற்கை. மாறாது அழியும் என்பது இயற்கையின் விதி. அதனாலன்றோ மாணிக்கவாசகர்,

"முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!"

என்று அருளிச் செய்தார். அதாவது பழைமையே புதுமையாகிறது. பழைமை புதுமையானால் புதுமை பழைமையிலேயே ஊடுருவி உயிர்ப்புடன் விளங்குமானால் பழைமை புதுமைச் சண்டைகள் வாரா!

ஆனால், நமது நாட்டில் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகம். பழைமை வளர்ந்து வரும் காலத்தின் தேவையான புதுமையை ஏற்பதில்லை. புதுமை பழைமையை அலட்சியப்படுத்துகிறது. அதனால், நிலையான வளர்ச்சியில்லாமல் பழைமையாளர்களுக்கும், புதுமை வேட்கையுடையவர்களுக்கும் இடையில் ஓயாத சண்டை! பழைய சமய அமைப்புகள் புதிய சிந்தனையாளர்களாகிய அப்பரடிகள், விவேகானந்தர், வள்ளலார் ஆகியவர்களின் சிந்தனைகளை-கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. புறத்தேயே ஒதுக்கிவிட்டன. இதனால் உலகப் பொதுச் சமயம் ஆவதற்குரிய தகுதியுடைய ஒரு சமயம்-நமது சமயம் வளரவில்லை. இந்தச் சிந்தனைகள் பாரதியை வருத்தியிருக்க வேண்டும்.

தமிழ்ச் சாதி காலத்தால் முந்தி தோன்றியது. கருத்தாலும் மூத்து வளர்ந்தது. ஆயினும் தமிழ்ச் சாதி காலத்தின் தேவைகளுக்கும் ஏற்றவாறு வளர வேண்டும் என்று பாரதி ஆசைப்படுகின்றான். அதே நேரத்தில் மாற்றங்கள், தனித் தன்மையை தனது அடிப்படை அறங்களை இழந்து விடுவனவாகவும் அமையக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கின்றான். பாரதியின் எச்சரிக்கை நியாயமானது. ஆனாலும் பாரதியின் எச்சரிக்கை வழக்கம் போல நமது தமிழ்ச் சாதியின் காதில் விழவில்லை. அல்லது விழுந்தும் விழாததைப் போல் வாழ்கிறது. ஆக்கமான புதுமைகளைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், சமுதாயத் துறையில் பயனற்ற, நெறிப் பிறழ்வுகளைத் தரக்கூடிய கலப்படங்கள் உண்டாகி செழுந்தமிழ் வழக்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழரின் பொருளியல் திறம் இன்று இல்லை. தமிழர் போற்றிய மனையறம் இன்று இல்லை. போலித் துறவுகள் அத்தாணி மண்டபம் ஏறுகின்றன. பெண்ணின் பெருமை பேணப்படவில்லை. கடவுள் வாழ்வுப் பொருளாக இல்லை. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் பெருநெறி இல்லை. ஒப்புரவு நெறியில் நடைபெறும் வாழ்க்கையும் இல்லை. இந்தச் சீரழிவுகள் தமிழ்ச் சாதி தனது தனித்தன்மையை மறந்ததால் வந்த கேடு. இதனை நினைத்து பாரதி "மாறுக! சார்புகளுக்குத் தக்கவாறு மாறுக! மாற்றம் வளர்ச்சியின் பாற்பட்டதாக இருக்கவேண்டும். மாற்றம் தமிழ்ச் சாதியின் தனித் தன்மைக்கு ஊறு செய்யக் கூடாது; தனித் தன்மையை இழக்கக்கூடாது" என்று எச்சரித்த எச்சரிக்கையை இனிமேலாவது தமிழர்கள் கேட்பார்களா? பின்பற்றுவார்களா?

"சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா இருந்து நின் னருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?”

(தமிழ்ச் சாதி-வரி 7-10)


சிதைவுற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

பாரதி ஒரு தத்துவஞானி. பழைமையை அறிந்தவன்; பழைமைகளைப் பாராட்டுபவன். ஆயினும், மாற்றங்களை புதுமைகளை வரவேற்பவன். காலம் புதுமைகளைப் படைத்துத் தரவே செய்கிறது. ஆயினும் தேக்கத்தை விரும்புவோர் இல்லாமல் இல்லை. ஆனால், மாற்றங்கள், புதுமைகள் தோற்றத்தில் காணப்படுதல் பயன் இல்லை. தொழில் முறைகளில் மாறுதல் மட்டும் பயன் தரா.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், புதுமை வேட்டல் என்பது புறத்தோற்றங்களிலேதான். அடுத்து ஆவேசமான பேச்சில்தான்! சீர்திருத்தம் என்பது பழிதூற்றல் அல்ல. "சிறுமை குற்றமே தூற்றி விடும்” என்பார் திருவள்ளுவர். காலத்தினாலாய மாறுதல்களைப் பெறாத எந்த இனத்திலும், அமைப்பிலும் ஒழுக்கக் கேடுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இன்னும் உண்மையைச் சொன்னால், ஒழுக்க நெறிகள் ஒழுக்கக் கேடுகளாகவும் தோன்றும். ஏன்? ஒழுக்கம் என்பதற்கு உலகம் கொண்டுள்ள பொருள் வேறு. எப்போதோ பாட்டன் காலத்தில் அவன் வாழ்ந்த சமுதாய அமைப்பில் அவனுக்கும், அவனுடன் வாழ்ந்தவர்களுக்கும் இசைந்ததாக இருந்த ஒரு ஒழுகலாறு, ஒழுக்கம் ஆயிற்று. அது பேரன் காலத்துக்கும் பொருந்தி வந்தால் நல்லதுதான். ஆனால், பெரும்பாலும் பொருந்தி வராது. ஒரே வழி பொருந்தி வந்தாலும், மனச் செழுமையுடன் எடுத்துக் கொள்ளும் இயல்பு இருக்காது.

நமது நாட்டின் குடும்ப, சமூக, சமுதாய, சமய அமைப்புக்களில் இந்த முரண்பாடுகளை நிறையக் காண்கிறோம். நமது குடும்பங்கள் தோற்றத்தில் குடும்பங்கள்தாம். ஆயினும், வரதட்சணைக் கொடுமையும், பெண்ணடிமைத்தனமும் பல இடங்களில் ஒத்த உணர்வுகளைக் குடும்பத்தின் உள்ளிட்டை, காதற் செழுமையைச் சீரழித்து வருகின்றன. உடல்கள் கூடுகின்றன; உயிர்கள் கலப்பதில்லை. அதனால் தரமில்லாத மக்கட் பெருக்கத்தை நாட்டில் காண்கிறோம். 'சமூகம்' இருப்பது போல ஒரு தோற்றம். கூட்டங்களில் கூட்டமாகக் கூடுவதெல்லாம் சமூகமாகிவிட முடியுமா? சமூகப் பொறுப்புக்களில் கடமைகளில் வளரவில்லை. சமுதாயம் இல்லவே இல்லை. சமயத் துறையிலும் அவை கூறும் தத்துவங்களுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் இன்று ஒட்டும் உறவும் இல்லை. வழிபாட்டில் அமைந்துள்ள அம்மை அப்பன் கடவுள் தத்துவம் வழிபாட்டிற்கும்தான்; நாட்டு நிலையிலும் அப்படியேதான்.

இந்தியா ஒரு நாடு. இந்தியர்கள் ஒருநாட்டு மக்கள். ஒரு குடியாக வாழ வேண்டியவர்கள். ஆனாலும் எண்ணத் தொலையாத வேற்றுமைகள்! பகைமை உணர்ச்சிகள்! சமுதாய மாற்றங்கள் புறத்தே நிகழ்கின்றன. பல்கலைக் கழகங்கள் தோற்றமளிக்கின்றன. ஆனால், அறிவு பெருக்கத்தைக் காணோம். தொழிற்சாலைகள் தோன்றுகின்றன. வாழ்வித்து வாழும் பெருந்தன்மை தோன்றவில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் 67% மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊராட்சி மன்றங்கள் காட்சியளிக்கின்றன. ஆள்வோரைக் காணோம். ஆள்வோருக்குப் பதிலாக அச்சுறுத்துவோரே காணப்படுகின்றனர். "ஆளுதல்’ உயர்ந்த பண்பின் வழிவரும் தொழில் உரிமை. ஆளுதற் பணி அறிவித்து, தெளிவித்து, உணர்த்தி, நெறிப்படுத்தி, வழிநடத்தி, வாழ்வித்தல் என்பதே. இப்பணிக்கு நிறைந்த அன்பு தேவை, அருள் உள்ளம் தேவை. இங்ங்னம் ஆளப்படுதல் பெரிய பேறு.

ஆனால், இன்று "ஆளுதல் அதிகாரச் சார்புடையதாகி உயர்வுடையதாகக் கற்பிக்கப் பெற்று அச்சுறுத்தல்களுக்குரியதாக மாற்றம் அடைந்திருக்கும் அவலத்தை யார்தான் மறுக்க இயலும்? கோட்டைகள் உயர்ந்து தோற்றமளிக்கின்றன. குடிமக்கள் இளைத்து இழக்கின்றனர். உரிமைகள் பரிமாற்றம் செய்தல், குற்றங்களைக் கண்டு பிடித்தல், தண்டனை வழங்கல் ஆகியன ஆளுமையின் புறத்தோற்றங்கள்! தகுதியிழந்த நிலைகள்! இத்தகு முறைப்பிறழ்வால் மக்கள் காலப்போக்கில் அடிமைகளாகி விடுவர்.

சோறு கிடைப்பது மட்டுமே வாழ்க்கையன்று. அதற்கும் அப்பால் ஆன்மா இருக்கிறது; உள்ளம் இருக்கிறது. உள்ளத்திற்குரிய அறம் இருக்கிறது. அந்த அறம் அழியக் கூடாது. உதியமரம் பெருத்து வளர்ந்து என்ன? உள்ளீடும் உள்ளீட்டில் உறுதியும் இல்லாத மரம் அது. அதாவது வயிரம் பாயாத மரம்! அதுபோலத் தமிழ்ச்சாதி தமிழ்க் கூட்டமாகிப் பயனில்லை. புறத்தோற்றத்தில் கவர்ச்சியிருந்து பயன் இல்லை. தமிழ்ச்சாதி உள்ளத்தால் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். உள்ளத்தால் ஓரினமாக உரம்பெறுதல் வேண்டும். பழந்தமிழ் நெறிகளைப் புதுமைப்படுத்தி, பொலிவுறுத்தி வாழ்ந்தால் தமிழினம் வாழும்! இல்லையெனில் விளக்கொளியில் விழுந்து மாளும் விட்டில்களைப் போலக் கவர்ச்சிகளில் சிக்கிச் சீரழியும். தமிழ், தமிழினம் என்றிருக்க வேண்டிய உள்ளார்ந்த உணர்வில் 'புகழ்' என்ற புல்லுருவி தோன்றி உள்ளிட்டை அழிக்கும். அப்புறம் நம்மவர் அயலவராகி விடுவர். அயலினத்தார் உறவினராகி விடுவர். விளைவு என்ன? தமிழினம் சிதையும்; சீர்ழிவு தோன்றும். இது பாரதியின் எச்சரிக்கை ஒருநூறு ஆண்டுகள் கழித்தும் கவிஞன் பாரதி தேவைப்படுகிறான்.

"தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்து மற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மினோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழ்ச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்"


(தமிழ்ச்சாதி-11-9) 

பாரதி கண்ட விடுதலை

பாரதி ஒரு நாட்டுக் கவிஞன். சமுதாயத்தின் தேவைகள் அனைத்தையும் அறிந்து பாடியவன். அவன் ஒரு விடுதலைக் கவிஞன். ஏன்? விடுதலை, சுதந்திரம் என்கிற சொற்களை தமிழ் இலக்கியத்தில் பாரதி தலைமுறையிலேயே பாரதியே முதன்முதலில் கொண்டு வருகின்றான். நாட்டு மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டி வளர்த்தவன் பாரதி. பாரதி அடிமையாகவே பிறந்தான்; அடிமையாகவே வாழ்ந்தான்; அடிமையாகவே மாண்டான். ஆனாலும் பாரதியின் ஆன்மா கவிதா உலகத்தில் சுதந்திரத்தைப் பெற்று விட்டது. பாரதி தன்னம்பிக்கையுடைய ஒரு கவிஞன். இலட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு பாடியவன். அதனால், இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, "ஆடுவோமே. பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே" என்று சுதந்திரப் பள்ளு பாடுகிறான். வெறும் ஆவேசமான சுதந்திரப் பள்ளுவா? இல்லை; சுதந்திரத்தின் இலக்கணத்தை விரித்துப் பாடியுள்ளான். ஒரு சில நாடுகளில் சுதந்திரம் வரும். அந்தச் சுதந்திரம் ஒரு சிலருக்கு அதாவது வாழும் பேறு பெற்றவர்களுக்கே வரும். ஆனால், பாரதியின் சுதந்திரம், அத்தகையதன்று. முற்றாகச் சமுதாயச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் ஆகியனவற்றையும் சேர்த்தே பாரதி சுதந்திரம் என்கிறான். ஆனால், பாரதி பிறந்த நாட்டில் பாரதி கண்ட சுதந்திரம் இன்னும் வந்தபாடில்லை.


"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளை
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே”

என்று பாரதி சமுதாயச் சுதந்திரத்தைப் பாடுகிறான். இந்த வரிகளில் உள்ள மாற்றங்கள் எதுவும் இன்னும் நடந்துவிடவில்லை. ஓர் அரங்கில் ஆறேழு சந்தியாசிகள் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பீடாதிபதிகள் மடாதிபதிகள். ஆயினும், அந்த அவையில் கூட அதாவது சந்நியாசிகள் கூட்டத்தில் கூட "பார்ப்பனர்-தமிழர்” என்ற பேச்சு அடிபடுகிறது. சந்நியாசிகளுக்குச் சாதி இல்லை என்பர். ஆனால் இந்தச் சாதிச் சனியன் இன்று பிடித்தாட்டுவது சந்நியாசிகளைத்தான்! அதுவும் பீடாதிபதிகளைத்தான்!

இன்று, பார்ப்பனரை ஐயர் என்று வழங்கும் வழக்கு பெரு வழக்கு வெள்ளைப் பரங்கியர் இல்லை. ஒடி விட்டனர். ஆனாலும் நமது நாட்டின் பெரிய அதிகாரிகளைக் குறிப்பாக காவல்துறை அலுவலர்களை "துரை” என்றுதான் இன்னும் அழைக்கின்றனர். பாவமன்னிப்பு என்று கூறியும், காரிய சாதனைகள் என்று கூறியும் கையேந்திப் பணம் வாங்குகின்றனர். ஆனால், கொடுப்பவன். பணிகின்றான். வாங்குபவன் நிமிர்ந்து நடக்கின்றான். இது பாரதி காலத்திலிருந்த கொடுமை. இன்றும் அதே நிலைதான்.

அடுத்து, ஏய்ப்போருக்கு ஏவல் செய்ய வேண்டும் என்பது. இன்று எங்கும் எத்திசையிலும் ஏய்ப்போர் கூட்டத்தின் கொட்டம் தானே! நமது செல்வத்தைக் கொள்ளை கொண்டு திரும்ப அதை நமக்குக் கிள்ளி வழங்கி, வள்ளல்கள் ஆகிறவர்களுக்கு ஏவல் செய்து தானே இந்த நாட்டு ஏழைகள் பிழைக்கின்றனர். இந்த நிலையிலும் மாற்றமில்லை.

"எல்லாரும் சமம் என்பது உறுதியாச்சு” என்று பாரதி பாடுகிறான். ஆனால், இன்று சமநிலை எங்கும் இல்லை. பாரதி வெறுத்துத் தொலைக்க வேண்டும் என்று எண்ணிய பொய்யும் ஏமாற்றும் இன்று எங்கும் தலைவிரித்தாடுகின்றன. நல்லோர் நாடறியாமல் ஒதுங்கி வாழ்கின்றனர். ஆனால், பேதங்களை வளர்த்து, பொய்ம்மையைப் பெருக்கி வாழ்பவர்கள் பெரியோர் என்று விளம்பரப்படுத்துகின்றனர். பாரதியின் சித்தாந்தப்படி இன்னும் நல்லோர் பெரியோரில்லை. சுதந்திர நாட்டில் உழைப்புக்கு மரியாதை, உழைத்து வாழ்பவருக்குத் தகுதி இருக்கவேண்டும் என்பது பாரதியின் எண்ணம். கழனிகளில் உழுது உலகத்திற்கு உணவளிக்கும் தொழிலை வாழ்த்துகின்றான். பாரதி, ஆலைகளில் செய்யப் பெறும் தொழிலை வாழ்த்துகின்றான். நாட்டில் உழவரும், தொழிலாளரும் ஒருங்கிணைந்து செயற்படும் போதுதான் சமூக மாறுதல்கள் நிகழும்; புரட்சி தோன்றும்; சமுதாயம் வளரும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் முடிவு. இதனை பாரதி. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடுகின்றான். ஆனால், நாடு விடுதலை பெற்று 34 ஆண்டுகளாகியும் உழவுத் தொழில் உயர்ந்தபாடில்லை. எந்த ஒரு மனிதனும் 'உழவன்' என்று கடிதத் தலைப்பு வைத்துக் கொள்ள முன்வரவில்லை. இன்னமும் உழவனும் தொழி லாளியும் கூலி உயர்வு கேட்டுக் கொண்டுதான் கொடி தூக்கிக் கொண்டிருக்கிறான். உழவனும் தொழிலாளியும் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குரிய விலையை நிர்ணயிக்கும் உரிமை கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பாரதி நிந்தனை செய்து ஒதுக்கிய கூட்டம் வளர்ந்து வருகிறது. அதாவது வீணில் உண்டு களித்திருப்போர் வளர்ந்து வருகின்றனர். பாரதி போற்றிய உழவனும் தொழிலாளியும் இன்னமும் உயர்வினைப் பெறவில்லை.

'நாம் இருக்கும் நாடு நமது' என்னும் அறிவு வந்து விட்டதாக பாரதி பாடுகிறான். பாரதிக்கு அந்த அறிவு வந்திருக்கலாம். அவன் காலத்திய சில தலைவர்களுக்கு வந்திருக்கலாம். இன்றைய நிலை என்ன? நம் ஒவ்வொருவருக்கும் நமது வீடு மட்டும் தானே நமது நாடு போலத் தெரிகிறது. நாடு என்னும் ஒன்று நம் நினைவில் இருக்கிறதா? அப்படியே நினைவிலிருந்தாலும் நாடு நமக்குத்தான்; நாட்டுக்காக நாம் இல்லை என்னும் நினைப்பே ஆட்சி செய்கிறது.

எங்கும் சட்ட ரீதியான அடிமை இல்லையென்றாலும் அடிமைப் புத்தி அகன்றபாடில்லை. ஏன்? நாட்டில் பரவலான கொத்தடிமைத்தனத்தை நெருக்கடி காலத்தில் தான் அகற்ற முடிந்தது. அதுவும் இன்னும் முற்றாக நீங்கியபாடில்லை. இது நெற்றியில் கொத்தடிமை என்று எழுதிக் கொண்டு வாழ்வோரின் இலக்கணம், சுதந்திரமாகத் திரிபவர் போலத் திரிந்து கொண்டிருப்பவர்களிடத்திலேயே அடிமை உணர்வு நீங்கியபாடில்லை. நீங்க வேண்டும் என்ற ஆசையும் ஆட்சியாளர்களிடத்தில் அரும்பவில்லை. இங்ங்ணம் மனிதர்கள் - மனிதர்களிடத்தில் அடிமை உணர்வுடன் பழகுவதிலிருந்தே நாடு இன்னும் விடுதலை பெற்றுவிடவில்லை என்பதாகிறது. ஆனால், அதற்குள் சிலர், இறைவனுக்கு அடிமை பூணவாவேண்டும் என்று கேட்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், பாரதி தெளிவாகவும் உறுதியாகவும் சொல்கிறான். "பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடுகிறான். இறைவன் பரிபூரணனாக இருப்பதாலேயே நாம் அடிமை செய்கிறோம். அந்த அடிமை விரும்பி அன்பினால் ஏற்றுக் கொள்ளப்படும் அடிமை என்ற சமயத் தத்துவம் பாரதியின் கவிதையில் அடங்கிக் கிடக்கிறது.

ஒருமைப்பாடு வேண்டும்
1965ஆம் ஆண்டில் அடியிற் கண்ட வரிகள் நாடு முழுவதும் பாடப்பெற்றன.

{{block_center|

"பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்"

என்னும் வரிகள் தாம் அவை. பாரதியின் இந்த வரிகள் இந்திய மக்களின் ஆவேச உணர்வாக மாறி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையே நடந்த போரில் வெற்றியைப் பெற்றுத் தந்தன. ஆனால், போரின் வெற்றிக்குப் பிறகு இந்த நினைவு நாம் இந்த நாட்டின் மக்கள் என்னும் நினைவு தொடர்ந்து இல்லை. ஏன்? ஒரு நாட்டின் வளத்திற்கும் வலிமைக்கும் அந்நாட்டின் இயற்கை வளங்கள் மட்டும் காரணமாக அமையா. நாட்டில் வாழும் மக்களின் நினைப்புகளும் செயல்களுமே அயல்நாட்டிற்கு வளம் சேர்ப்பன; வலிமை சேர்ப்பன. நாட்டில் பிறந்து வளர்ந்து நாட்டிடைக் கிடைக்கும் வளங்களை நுகர்ந்து வாழும் மக்கள், தாம் வாழும் நாட்டிற்குத் தம்மை வாழ்விக்கும் நாட்டிற்கு வளம் சேர்க்க வேண்டாமா?

ஒரு நாட்டின் வளம் என்பது எடுத்தலும் வைத்தலும் என்கிற சுழற்சி முறையில் அமைய வேண்டும். நாம் எந்த அளவிற்கு வளங்களை எடுத்துப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நம் நாட்டின் மண்ணுக்கும் மரத்திற்கும் மக்களுக்கும் கூட வளத்தைத் திருப்பித் தர வேண்டும். கொண்டும் கொடுத்தும் வாழ்தல் சமயநெறி மட்டுமன்று: அதுவே சமுதாய நெறி; நாட்டை வளர்த்துப் பாதுகாக்கும் பெரு நெறியும்கூட

வாழ்க்கை என்றால் வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டை உருக்குலைக்கச் செய்யும் வகையில் வேற்றுமைகளைப் பாராட்டுதல் நாட்டிற்கு நல்லதல்ல. மனித வாழ்க்கையில் எத்தனையோ தேவைகள்! ஆனால், எல்லாத் தேவைகளிலும் ஒத்துப்போதல், ஒன்று படுதல், ஒருமைப்பாடு பேணல் ஆகியவை முதன்மையானவையாகும். மொழி, சமயம், இனம் இவைகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குத் தடைகளாக அமையக்கூடாது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான். ஆனால், வாழ்வித்து வாழ்வதுதான் நாகரிக வாழ்க்கை மற்றவர்க்குப் பயன்படாமல், மற்றவர்களை வாழ்விக்காமல் தாம் வாழ்வது கொச்சைத்தனமானது, கீழ்மையானது. உயர்ந்த வாழ்வியல் ஒருமையுணர்வு பரந்த நாட்டு அடிப்படையில்தான் தோன்ற முடியும். இன்று பரந்த நாட்டுணர்வு அழிந்துவிடவில்லையானாலும் மெல்லச் சிதைக்கப்படுகிறது என்பதை  யாரும் மறுக்க முடியாது. அஸ்ஸாமில் மண்ணின் மைந்தர் கொள்கை, பாஞ்சாலத்தில் காலிஸ்தான்-கொள்கை, தமிழகத்தில் திராவிட நாடு எண்ணம் இவைகள் இமயம் முதல் குமரி வரையில் ஒரு நாடு என்னும் உணர்விற்கு மாறானவை. இது மட்டுமா? அரசியல் கட்சிகளுக்கிடையிலும் சமயநெறியாளர்களுக்கிடையிலும் வளர்ந்து வரும் சண்டைகளால் ஒரு நாட்டில் ஒருவருக்கொருவர் நட்பாக உறவு கொண்டு உடன்பிறப்பாளர்களாக வாழ்வதற்குப் பதில் பகைவர்களாக வாழும் பண்பின்மையைப் பார்க்கிறோம். இன்று இந்திய மக்களின் பெரும்பான்மையான ஆற்றல் வெறுப்பிலும் பகையிலும் செலவழிக்கப் பெறுகிறது. இவை மட்டுமா? சாலை ஒரத்தில் உள்ள குளிர்தரு மரங்களை-நிழல்தரு மரங்களை நாட்டுடைமையாகக் கருதிப் பாதுகாக்கும் உணர்வில்லையே! கருத்து வேற்றுமைகள் அல்லது கட்சிச் சண்டைகள் ஏற்படும்பொழுது நாட்டுடைமைகளாகிய பேருந்துகளையும் பொதுச் சொத்துக்களையும் எளிதாக அழிக்கும் உணர்வினைப் பார்க்கிறோம். ஏன்? நாட்டிற்கு, நாட்டின் நலனுக்கு நாடு நமது வாழ்வுக்குச் செய்யும் பணிகளுக்கு நாம் செலுத்தக்கூடிய வரிகளை ஒழுங்காகச் செலுத்தும் மனப் போக்கில்லையே. இந்தச் சீரழிவுகளுக்கு எல்லாம் காரணம் நாம் இந்த நாட்டின் மக்கள் என்னும் உணர்வைப் பெறாமைதான் என்றால் மிகையாகாது.

பாரதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாடும்போது இதைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பாரதியின் நூற்றாண்டு விழாவின் நினைவாக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை மேலும் வலிமைப்படுத்தவேண்டும். ஒருமைப்பாட்டிற்கு விரோதமாக நிலவும் எந்த வேற்றுமைகளையும் கடுமையாகக் கணித்து ஒதுக்க வேண்டும். நாட்டில் சாதி, இன அமைப்புக்களின் பெயரால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்சிகளை, நிறுவனங்களை, இயக்கங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது. நாட்டு மக்களைத் தனி நலம் சார்ந்த வாழ்க்கையிலிருந்து கூட்டுப் பொது நலம் சார்ந்த வாழ்க்கைக்கு வளர்த்தாக வேண்டும்.

இந்திய மாநிலங்களுக்கிடையில் உள்ள உறவுகளை, எல்லைகளை நிர்ணயிக்க மாநிலங்களின் பேராளர்கள் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழு அமைய வேண்டும். நாடு ஒன்று என்னும் நினைவு தோன்றிய பிறகும் ஆட்சி முறைகள் அமைந்த பிறகும் காவிரிச் சிக்கல் தீரவில்லையென்றால் ஒரு நாடு என்ற உணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை. இதற்கு ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ஏற்பதற்கில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களைத் தழுவி நிற்பவை அனைத்தும் நாட்டுடைமைகளாக வேண்டும். கங்கை காவிரி போன்ற, ஆறுகள் நாட்டு ஆறுகளாக எண்ணப் பெறுதல் வேண்டும். மாநிலங்களை இணைக்கும் சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகளாக ஆக்கிய நமக்கு இவைகளை நாட்டு ஆறுகளாக ஆக்குவதில் என்ன தயக்கம்? அது போலவே இந்திய மொழிச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாக வேண்டும். நாட்டு மொழிக் கொள்கையில் ஒதுங்குதல்-ஒதுக்குதல் போன்ற கொள்கைகள் ஆதிக்கம் பெறக்கூடா.

இங்ஙனம் பல்வேறு செயல் முறைகளால் நாட்டை வலிமைப்படுத்தும் இயக்கம் தேவை. மீண்டும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. உலக வல்லரசுகளின் போட்டி இந்தியாவை, பாதிக்கத்தக்க வகையில் மையம் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் நமக்கு ஆபத்து நீங்கியபாடில்லை. மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காகத் தோன்றிய அறிவியல் இன்று அழிவின் எல்லையில் போய் நிற்கிறது. உயிர்களை எல்லாம் அழித்து விட்டு உடைமைகளைப் பாதுகாக்கும் நீர்வாயுக்குண்டு தோன்றியிருக்கிறது. உடைமைகள் மனிதர்களுக்கு என்பதற்குப் பதிலாக மனிதன் வேண்டாம்; உடைமைகள் போதும் என்கிற இழிவான மனப்போக்கு உலகில் தோன்றிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பாரத நாட்டு மக்களுக்கு மகத்தான பொறுப்பு இருக்கிறது. அவர்கள் பாரத நாட்டின் மக்கள் என்னும் நினைவில் நிலைத்து நின்று இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அதுவே பாரதிக்குச் செய்யும் நன்றி; வழிபாடு; கடப்பாடு.

"பாரதநாடு பார்க் கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்”

பாரதி


என்ன செய்யப் போகிறோம்?

பாரதி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்த பாரத தேசத்தில் பிறந்தவன்; வளர்ந்தவன்; வாழ்ந்தவன். பாரதி, இந்த நாட்டு மக்கள் வறுமையில் வாடியதைக் கண்டவன்; வறுமைக்கு எதிராகப் பாடியவன்; வறுமையை எதிர்த்துப் போராடும்படி மக்களைத் துரண்டியவன். ஏன்? வறுமை, கவிஞன் பாரதியைச் சுவை பார்த்ததைப் போல வேறு யாரையும் சுவை பார்த்திருக்கமுடியாது. ஆயினும் பாரதி, தன் வறுமைக்கு வருந்தியதில்லை. "மூட்டைப் பூச்சி", "கொசு" முதலியன போன்ற வள்ளல்களைத் தழுவி நின்றவனுமில்லை; புகழ்ந்து பாடியவனுமில்லை.

பாரதிக்கு, அவன் பசியைவிட நாட்டு மக்களின் பசியே துன்பத்தைத் தந்தது.

{{block_center|

"நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!”

என்று பாடுகின்றான். இங்ஙனம் உண்பவர்கள்-நாட்டுளோர்

பசி நீக்க முயற்சி செய்யாமல் உண்பவர்கள், ஊனை வளர்க்கிறார்கள். அத்தகையோர் வெறும் பிண்டம் என்பது பாரதியின் கருத்து.



பாரதி சுதந்திரப் போராட்டத்தின் ஆவேசத்தை வளர்த்தவன். அவன் எண்ணற்ற தேசிய இயக்க-விடுதலை இயக்கப் பாடல்களைப் பாடியிருக்கிறான். ஊரவர் பசி தீர்க்க உடலை வளைத்து உழைக்காமல் உருப்படியான காரியங்களைச் செய்யாமல் "வந்தே மாதரம்” என்று முழக்கம் செய்து வயிறு வளர்ப்போர் அவன் காலத்திலும் இருந் திருப்பர் போலும்! இந்த மனப்போக்கைப் பாரதி மறுக்கிறான்! கண்டிக்கிறான்.

நாடு விடுதலை பெற்று 34 ஆண்டுகள் கடந்த பின்னும் நடப்பதென்ன? இன்று எங்கும் அரசியல்! எதிலும் அரசியல்? தன் வாழ்க்கைக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் யாதொரு தொழிலும் மேற்கொள்ளாமல் அரசியலையே பிழைப்பாகக் கொண்டவர் எண்ணிக்கை வரவர வளர்ந்து வருகிறது. இந்தக் காரணத்தால்தான் இந்திய நாட்டின் அரசியல் பொது வாழ்க்கையிலிருந்து ஊழலை ஒழித்துக் கட்ட முடியாமல் அந்த வட்டம் சுழன்று சுழன்று வருகிறது. நாட்டு மக்கள் மத்தியில் "யார் நல்லவர்?" என்கிற கேள்வி கூட இப்பொழுது, எழுப்பப்படுவதில்லை. "எவர் நல்லவர்?" என்று கேட்கின்றனர்! எவருமே நல்லவர் இல்லை என்பதே மக்கள் மன்றத்தின் பேச்சு! கிராமப்புறங்களில்கூட யாதொரு தொழிலிலும் முனைப்புக் காட்டாத இளைஞர்கள் அரசியற் கட்சிப் பணிகளில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றார்கள். சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் கவலைப்பட விரும்பாதவர்கள் தேர்தல் நேரத்தில் தெருத் தெருவாகச் சுற்றித் திரியும் வேடிக்கையைப் பார்க்கிறோம். மக்கள் நலத்துக்குரிய கொள்கை, செயல் ஆகியனவற்றைத் துணையாகக் கொண்டு மக்களின் ஆதரவைப் பெற யாரும் முயற்சி செய்வதில்லை. வண்ணச் சுவரொட்டிகள்! எடுப்பான ஊர்வலங்கள்! மிடுக்கானப் பேச்சுகள்! வளைந்து வளைந்து வரும் ஊர்திகள்! எதிரியைக் காரசாரமாகத் திட்டும். திட்டுக்கள்! செவிடனும் நொண்டியும் கூட்டுச்சேர்ந்ததைப்போல், கொள்கையில்லாத-தேர்தல் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்ட கூட்டணிகள்! இந்தத் திருவிளையாடல்களைப் பார்க்கிறோம்.

தேர்தல்கள், அரசியலைப் படிப்பிக்கும் கருவிகளாக மாறவேண்டும். நாட்டு மக்களின் நலிவு தீர்க்கும் கொள்கை, மக்கள் முன் வைக்கப்பெறுதல் வேண்டும். தேர்தல் என்பது ஒரு கொள்கைக்குத் தரும் வாக்கு. தேர்தல் என்பது ஒரு கொள்கை பெற்ற வெற்றிக்கு அளிக்கும் வாக்கு. இப்பொழுது நடைபெறும் தேர்தலில் கொள்கையாவது? செயலாவது? யாதொன்றும் இல்லை!

இத்தகு முறைகேடான அரசியல் வாழ்க்கை நடைபெறுவதால்தான் செல்வந்தர்கள் அரசியலை விலைக்கு வாங்குகின்றார்கள். திரும்ப அந்த அரசியலைக் கொண்டே செல்வத்தைக் குவிக்கின்றார்கள். இந்தத் தீயவட்டம் சுழன்று கொண்டேயிருக்கிறது. ஏழைகளோ அன்றாடம் காய்ச்சிகள்! அவர்களுக்கு அன்றாடம் பொழுது போனால் போதும் என்றாகிவிட்டது.

நாட்டில் கட்சிகளுக்கு என்ன குறைவா? அரசியல் பேச்சாளர்களுக்குக் குறைவா? யாதொரு குறைவுமில்லை. ஆனால், நாட்டு மக்களில் 67 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலை? நாட்டுப் பணி செய்ய ஆளைக்காணோம். கூட்டுறவு இயக்கங்களில் ஈடுபட்டு சமுதாயப் பொருளியற் புரட்சிக்குத் தொண்டு செய்யும் ஆட்களைக் காணோம். சுதந்திர தினவிழாக் கொண்டாட யாரையும் காணோம். குடியரசு தினவிழாக் கொண்டாட யாரையும் காணோம்! ஆனால், தேர்தல் காலச் சுற்றுலாக்களுக்குப் பலர் முனைந்துள்ளனர். அரசியல் மேடையில் பேச அப்பப்ப, எவ்வளவு போட்டி, அதுவும் நம் நாட்டு மக்கள் அரசியல் பேச்சாளர்களை மட்டமாக வளர்த்திருக்கிறார்கள். எதிர்க் கட்சியைக்கிண்டலாக, கேலியாகப் பேசினால் சுவையாகக் கேட்கிறார்கள். நமது நாட்டு மக்களின் செவிநுகர் சுவையின் தரம் குறைந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் இந்த நாடு வறுமைப்பட்டுக் கிடக்கிறது. நாட்டு மக்களில் பாதிப் பேருக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். அன்னை பாரத தேவி 5,000 கோடி கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். ஏன் இந்த அவலம்? நாட்டில் வெற்று அரசியல் வளர்ந்து வருகிறது. விவேகம் வளரவில்லை. பொருளாதாரப் புரட்சிக்கு முன்நின்று உழைக்கும் உத்தமர்களைக் காணோம். இந்த நிலை பாரதி காலத்தில் இருந்தபடியே இன்றும் இருக்கிறது. ஒரு தலைமுறை மடியப் போகிறது. அடுத்த தலைமுறை அதாவது இன்று வளரும் தலைமுறை நம்பிக்கை அளிப்பதாக இல்லை. யுகப் புரட்சி செய்த பாரதிக்கு என்ன செய்யப் போகிறோம்?

"தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சி யுறார்.
வாயைத் திறந்து சும்மா-கிளியே
வந்தே மாதரம் என்பார்”

- பாரதி


அறமே பெரிதென அறிக!

இன்று நம்முடைய நாடு சென்று கொண்டிருக்கும் நிலை இரங்கத் தக்கது. இந்தச் சூழ்நிலைக்குப் பாரதியைவிட சிறந்த மருத்துவனில்லை. இன்று இந்திய நாட்டு மக்களிடையில் "இந்தியர்” என்ற உணர்வு இல்லை. இந்தியர் என்ற உணர்வைச் சாதி, குலம், கோத்திரம், மொழி, சமயம் முதலிய உணர்வுகள் தோன்றாமல் அழியச் செய்கின்றன. எங்கு பார்த்தாலும் சிறு சிறு குழுக்கள்! அக்குழுக்களிடையிலும் கூட கூட்டமைப்பு உணர்வில்லை. ஏதோ ஒரு தன்னல நயப்பின் காரணமாகக் குழுக்களாய்க் கூடுகின்றனர்.

கடைசியில் கிடைத்த கொள்ளையில் பங்கு போட்டுக் கொள்வதில் தகராறு ஏற்பட்டு அக்குழுக்களும் கூட கலகத்தின் களங்களாக மாறிவிடுகின்றன. இது போதாதென்று குழுக்களிடையிலும் சண்டை எந்த ஆட்சி அமைப்பிலும் விருப்பு, வெறுப்புகள் தலைவிரித்தாடுகின்றன. கட்சி வேற்றுமைகள் தடித்துத் தம் கட்சியைத் தவிர மற்ற கட்சியினருக்கு ஆள உரிமையில்லை; கருத உரிமையில்லை; வாழ உரிமையில்லை என்ற அளவுக்குக் கட்சி வெறி உணர்வுகள் உச்ச கட்டத்தை அடைந்துவிட்டன. தேர்தல் திருவிழாக்கள் நடந்தாலும் மக்களாட்சிப் பண்பு வளரவில்லை. வளர்ந்துள்ள தீமைகள் இவைதாமா? இல்லை! மேலும் வளர்ந்துள்ளன.

நாடு என்பது பொது. ஆட்சியென்பது பொது. இந்த மனப்போக்குடன் நாட்டின் செயல்கள் நடைபெறுவதில்லை. உற்றார், உறவினர் என்றெல்லாம் கருதி வரம்பு, எல்லைகளைக் கடந்தும்கூட நலன்கள் வழங்கப்படுகின்றன. தம்மைச் சாராதவர்களுக்கு வாழும் உரிமை இல்லையென்றே மறுக்கப்படுகிறது. இந்த நிலைமை நீடித்தால் நாடு சிலருக்குச் சொந்தமாகிவிடும். பலர், வாழ்க்கையை இழப்பர்.

இதனைப் பாரதி, பாரதத்தின் குருச்சேத்திரப் போரை மையமாக வைத்து விளக்குகிறான். போர்க்களத்தில் விசயன் அரசியல் நீதியைப் பார்க்காது உற்றார் உறவினரைப் பார்த்துச் சோர்கிறான். உறவின் பாற்பட்டுச் சோர்ந்திருக்கும் விசயனைக் கண்ணன் தேற்றுகிறான். அறம், நீதி இவைகளைப் பாதுகாக்கும் பணியில் உற்றாரைப் பார்த்தல் கூடாது; உறவினரைப் பார்த்தல் கூடாது; அறநெறியே முதன்மையானது என்று கண்ணன் விசயனுக்குக் கூறுவது பாரதிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இந்தப் பண்பு நாட்டில் வளரவில்லை. பொல்லாத சிறு நெறிகளில் இந்த நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்கள் அவர்கள் கருத்தை, செயலை மற்றவர்கள் விமரிசிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரப்படுகின்றனர். தம்மை-தம்முடைய கட்சியைச் சாராதவர்களைப் பகைவர்கள் போல எண்ணுகின்றனர். அவர்களுக்கு ஏது உரிமை என்றுகூடக் கருதுகின்றனர். எல்லா அமைப்புகளிலும் எல்லா இடங்களிலும் தமது அணியைச் சார்ந்தவர்களே அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்த மனப்போக்கு முற்றி, கட்சிச் சார்பில்லாத ஒன்றியத் தேர்தல்கள் கட்சிச் சார்புடைய தாக்கப் பெற்றுவிட்டது. இனி, குடிக்கும் தண்ணீருக்கு ஏற்பாடு செய்வதிலும்கூட கட்சி புகுந்து வேலை செய்யும். இந்த மனப்போக்கு நாட்டின் பொதுமைக்கு நன்றன்று. வளரும் நாட்டுக்கு இயல்பன்று. பாரதி,

"வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்-இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதர ராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தம் செயலாம்"

(சத்ரபதி சிவாஜி)


என்று பாடுகின்றான்.

இன்று இந்தக் காட்சி எங்கே கிடைக்கிறது? ஒரு சாதாரண மனிதன் நாட்டின் ஆட்சியமைப்புக்கு உடன்படாத நிலையில் இயங்குகின்றான். ஏன்? காவல் துறையினரையே மிரட்டுகின்றான். பகல் வெளிச்சம் போல முறைகேடுகளை அவன் செய்ய வேண்டும். காவலர்கள் பார்க்காதிருக்க வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு எப்படி அந்தச் சராசரி மனிதனுக்கு எண்ணம் வந்தது? அவன் ஆளுங்கட்சியைச் சார்ந்தவன் என்ற ஒரே காரணம் தான்! இத்தகைய மனப்போக்கு நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதனை மூத்த தலைவர்கள் பார்த்தும் பாராதிருக்கிறார்கள். அதனால் முறைகேடுகள் என்பது பழக்கங்களாகிவிடும் போல் தோன்றுகிறது.

பாரதி தொடர்ந்து பேசுகின்றான். "அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்" வாழ்ந்திடுதல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். இன்று பொருளாதார நெருக்கடிகளுக் காளாகிச் சட்ட ஒழுங்குகள் சீர்குலைந்திருக்கும் நிலையில் பாரதியின் இந்தக் கருத்து மாமருந்தாகும். சென்ற காலத்தவறுகள் நடந்தவையாகப் போகட்டும். கவலை வேண்டாம். ஆயினும் பாரதி நூற்றாண்டு விழாக் காலத்தில் பாரதியின் ஆணைப்படி புதுவிதி செய்வோமாக! எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்று நம்புவோமாக! நடத்துவோமாக!

பாரதி விரும்பிய பாரத சமுதாயம்

பாரதி, விடுதலைக் கவிஞன். பாரதி விரும்பிய விடுதலை அரசியல் விடுதலை மட்டுமன்று. பாரதியின் விடுதலை முழக்கம் ஒரு முழு விடுதலைப் புரட்சியேயாகும். ஆம்! அரசியல் விடுதலை மட்டுமே அரை வயிற்றுக்காரனுக்குச் சோறு தந்து விடுமா? தொழிற் புரட்சி ஏற்பட வேண்டும்; பொருளாதாரப் புரட்சி நடக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலட்சியம் நிறைவேறினால் தான் விடுதலை அர்த்தமுள்ளதாகும். இத்தகைய விடுதலையே பாரதியின் இலட்சியம்.

இருள், துன்பத்தின் சின்னம்; அடிமைத்தனத்தின் அடையாளம்; அறியாமையின் கூறு. இருளின் விளைவால் அடிமைத்தனம், வறுமை, புன்மையான ஆதிக்கங்கள், கலகங்கள், போர்கள் ஆகியன கூத்தாடும். ஆதலால், மனித குலத்தை வாழ்விக்க விரும்பும் கவிஞர்களெல்லாம் இருள் நீங்கி ஒளி வரவே பாடுவர். பொழுது விடிவது எப்போது? என்ற வினா புரட்சிக்குக் கட்டியம் கூறும் வினா! பொழுது விடிவது என்பது இரவு போய், பகல் வருவது என்பது மட்டுமல்ல. இன்னல்கள் நீங்கி இன்பம் வருவது என்பதுமாகும்.

பாரதிக்கும் பொழுது புலர வேண்டும் என்பதே ஆசை; ஆர்வம்! பொழுது புலர்ந்த காலைப்பொழுதைக் கவிஞன் சித்திரிக்கின்றான். காலைப்பொழுதில் காக்கை கரையும். காக்கை கரைதல் பொழுது புலர்ந்ததன் அடையாளம்! சேவலும் கூவும். ஆனால், பாரதி காக்கையையே தேர்ந்தெடுத்தான். ஏன்? பறவையினத்தில் காக்கைக் குலமே உறவு கலந்து கூடி உண்டு வாழும் இயல்பினது. 'காக்கைக் கரவா கரைந் துண்ணும்' என்பது தமிழ்மறை. திருட்டுத் தனமுடைய காக்கைகளும் உண்டு, அவை அளவுகோல்களல்ல. யாரோ சிலருக்குப் பொழுது விடிந்து என்ன பயன்? மானிடரில் சிலருக்குக் கையும் மூளையும் வலிமையாக அமைந்து விடும். இந்த வலிமை மனிதகுல மேம்பாட்டுக்கு அல்லவா பயன்பட வேண்டும்! அதுதான் இல்லை. பிறர் பங்கைத் திருடிக் கொழுப்பவர்களுக்கு எந்த யுகத்திலும் விடியும்! மக்கள் கவிஞன் பாரதி, இங்கனம் சிலருக்குப் பொழுது விடிவதை ஏற்பானா? எல்லாருக்கும் பொழுது விடிய வேண்டும். அப்படியானால் என்ன பொருள்?

'சோற்றுக்குப் பஞ்சமில்லை
போரில்லை; துன்ப மில்லை'

(காலைப் பொழுது-20)

என்ற சமுதாய அமைப்பே பொழுது புலர்ந்ததன் உண்மையான அடையாளம்.

இன்றைய நிலை என்ன? முதலாளித்துவ நாடுகள் உணவுப் பொருள்களை நிறைய உற்பத்தி செய்து வளரா நாடுகளுக்கு வழங்கும் எண்ணத்தைப் பெறவில்லையே! போருக்குப் பயன்படும் ஆயுதங்களை உற்பத்தி செய்து, சின்னஞ்சிறு நாடுகளுக்கெல்லாம் கூட ஆயுதங்களை விற்பனை செய்து போர்ப்பதற்ற நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் இழிநிலையை என்னென்பது? முதலாளித்துவ உலகம் கொண்டுள்ள இந்தப் போர் வெறிக்கு ஓர் எல்லையில்லையா? நீர்வாயுக் குண்டைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம்! அந்தக் குண்டு வீசப்பெறும் நாடுகளில் பூதபௌதிகப் பொருள்களையெல்லாம் அழிக்காது. ஆனால், உயிர்க் குலத்தை அழிக்கும்! வையகமும் வானகமும் உயிர் குலத்திற்குத்தானே! உயிர்க் குலத்தை அழித்து உடைமைகளைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு முதலாளித்துவ உலகம் நச்சுத் தன்மையடைந்திருக்கிறது. இது கலியுகத்தின் திருவிளையாடல் போலும்! அதனால்தான் பாரதி,

"பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்! தெய்வ விதியிஃதே!”


(விநாயகர் நான்மணிமாலை - 39)


என்று வீரசபதம் கொள்கின்றான்!

இங்ஙனம் வீரசபதம் கொண்டு விளங்கிய பாரதிக்கு உருசிய நாட்டில் நடந்த புரட்சிச் செய்தி கிடைத்திருக்கிறது. அந்தப் புரட்சியை எழுச்சியுடன் வரவேற்கின்றான். தன்னுடைய நினைப்பு, உருசியாவில் நிகழ்ந்து விட்டதை அறிந்து ஆரவாரக் கூத்தாடுகின்றான்.

"இடிபட்ட சுவர்போல கவி விழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ!"

(புதிய ருசியா-6)

என்று உருசியப் புரட்சியை வரவேற்கின்றான்; வாழ்த்துகின்றான்! சோவியத் புரட்சியை முதன் முதலாக வரவேற்றவன் கவிஞன் பாரதியே!

சோவியத் புரட்சியை வரவேற்ற பாரதி, அதற்கு விளக்கங்களும் தருகின்றான். ஏன் புரட்சி? எதற்காகப் புரட்சி? என்று தெரியாமல் அர்த்தமில்லாதவைகளைச் செய்து புரட்சியென்று சொல்லிக் கொண்டிருக்கலாமா? தமிழ் இலக்கிய உலகிற்குப் 'புரட்சி'யென்ற சொல்லையே முதற்கொடையாகத் தந்தவன் பாரதிதான்! எந்தச் சூழ்நிலையில் புரட்சி தோன்றும்? எதற்காகப் புரட்சி வெடிக்கும்? புரட்சியின் பயன் என்ன? என்று கவிஞன் பாரதி ஐயத்திற்கிடமின்றி விளக்குகின்றான். நாட்டாட்சி, புரட்சிக்கு முன்பு புரட்சி தோன்றுவதற்குரிய களம். அங்கே உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை; பிணிகள் பல உண்டு; பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வச் செழிப்பு உண்டு; உண்மை சொல்வோர் ஒதுக்கப்படுவர்; . சிறையில் தள்ளப்படுவர். ஏன்? தூக்கும் உண்டு! நல்லோர் சான்றோர் நாட்டில் ஒதுக்கப்பட்டவர்கள். இத்தனை அநியாயங்களும் ஆட்சியின் பெயரால்! அது மட்டுமா? மதப்புரோகிதர்களின் வாழ்த்துக்களுடனும் நடந்தன: மனித உலகத்தை அன்பு நெறியில் வளர்த்து, அருள் நெறியில் வாழ் விக்க வேண்டிய சமயங்கள், புரோகிதர்களின் ஆதிக்கத்திற்கு ஆளானவுடன் கறைபட்டு விட்டது! களங்கப்பட்டுவிட்டது. சமயம், தன் நிலையில் இல்லாமல் பொருள், அதிகாரம் ஆகிய போதை மயக்கத்திலிருந்ததன் காரணமாகவே மாமேதை மார்ச்சு, மதத்தை அபின் என்று சொன்னார் போலும்! இந்தக் கொடிய சூழ்நிலையில் சோவியத்தில் புரட்சி-இரத்தம் சிந்தாப் புரட்சி பிறந்தது. புரட்சியை நேரில் கண்டு வரவேற்பவனைப் போல் பாரதி, கங்கு கரையற்ற களிப்புடன் வரவேற்கின்றான்!

'ஆகா! என்று எழுந்தது பார்,
யுகப் புரட்சி'

என்று வரவேற்கின்றான் !

இந்திய நாட்டு மக்களுக்குச் சோவியத் புரட்சியை அறிமுகப்படுத்த ஆவல் கொள்கின்றான். பாரதி, சமய நெறியில் நின்றொழுகியவன்; கடவுள் நம்பிக்கையுடையவன். பாரதி, கடவுள் நம்பிக்கை மூலமே சமுதாயத்தில் புரட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடையவன். இந்திய நாட்டு மக்களுக்கும் கடவுள் நம்பிக்கை மிகுதி. அதனால் கடவுள் பெயரால் யார் எதைச் சொன்னாலும் நம்பி விடுவர்; கேட்பர். எனவே, சோவியத் புரட்சியைக் கடவுள் சம்பந்தப்பட்ட புரட்சியென்று சொன்னால் இந்த நாட்டு மக்கள் கடவுளின் பெயரால் புரட்சி செய்வர். சோவியத்தைப் போல் இங்கேயும் ஒரு சோஷலிசப் புரட்சி தோன்றும் என்று நம்பினான். அதனால், சோவியத் புரட்சியை மாகாளி, பராசக்தி கடைக்கண் வைத்ததால் எழுந்த புரட்சி - நடந்த புரட்சி, அருளியல் வழியில் நடந்த புரட்சி என்று கூறிப் புரட்சிக்கு நம்மை ஆயத்தப்படுத்துகின்றான்.

பாரதி, புரட்சி தோன்றுதற்குரிய அடிப்படைத் தன்மைகளை நினைந்தேபாடுகின்றான். எந்த நாட்டிலும் தொழிற்புரட்சி ஏற்பட்டு நாடு வளரும் பொழுதுதான் பொருளியல் புரட்சி மலரும் என்பது வரலாறு. வேளாண்மைத் தொழில் செய்யும் உழவனும் தொழிலாளியும் ஒன்று சேரும் பொழுதுதான் புரட்சி தோன்றும். இவர்கள் உழைக்கும் அணியினர்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்பது பாரதியின் வாக்கு. வேளாண்மைத் தொழிலோடு தொழில் துறையும் சேர்ந்து சமுதாயப் புரட்சிக்கு அடித்தளம் அமைப்பதை நினைந்து பாடுகின்றான். பாரதி, "பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்று பாடியதன் மூலம் மனித உலகத்தின் நச்சுத் தன்மையுடைய முதலாளித் துவத்தை வளர்க்கும் வேலை, கூலி, உபரி உழைப்பு என்ற தத்துவத்தை எளிதில் விளக்குகின்றான். உழைப்பாளிகள் உழைத்து உற்பத்தி செய்யும் பொருள்களில் உரிய கூலி தராது வரும் பகுதியே சுரண்டலாகி மூலதனமாகிறது. உழைப்பிற்குப் பயன்படாது உடம்பில் சேரும் கொழுப்பு நாளடைவில் நீரழிவு நோயாகி உடலை வருத்துதல் போல், உழைப்பாளருக்கு உரியவாறு பயன்படாது சுரண்டலால் சேமிக்கப் பெறும் மூலதனம் காலப்போக்கில் மனித குலத்தை அடிமைத்தளத்திற்கு ஆளாக்குகிறது. நீரழிவு நோயினும் இது கொடுமையானது. அதனால் பாரதி, தான் விரும்பிய பாரத சமுதாயத்திற்கு,

"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை”

என்றே இலக்கணம் வகுக்கின்றான். அவனது முழக்கம் "எல்லோரும் ஒர்குலம்" என்பதேயாம்.

ஒரு நூற்றாண்டு ஓடிவிட்டது. பாரதி வழியில் பாரதம் நடை போடாமல் இல்லை. பாரதி வழியில் பசுமைப் புரட்சியும் தொழிற் புரட்சியும் நடைபெற்றுள்ளது. ஆயினும் பொதுமைப்புரட்சி நடைபெறவில்லை. நூற்றாண்டுவிழா நினைவாகவாவது பாரத நாடு புதுமை படைக்குமா? பொது உடைமை படைக்குமா?


(நன்றி-தாமரை டிசம்பர் 1981)