பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

வாசித்துப் பல குறைகளைத் தீர்த்திருக்கின்றனர். இங்கிலீஷில் அசோகனைப்பற்றிய வியாசங்களும், புஸ்தகங்களும், விசேஷமாக ஸ்ரீ. வின்ஸெண்ட் ஸ்மித்தின் "அசோகன்" என்ற புஸ்தகமும் ஸ்ரீ பூலரின் சாஸன மொழிபெயர்ப்பும் எனக்கு மிகுந்த உபயோகமாயிருந்தன. இந்தியன் ஆன்டிக்குவரி முதலிய ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் அசோக சாஸனங்களில் வரும் சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் முதலியவற்றின் கருத்தைப் பற்றிப் பல வாதங்கள் வந்துள்ளன. இவற்றையும் நான் இயன்றவாறு உபயோகப்படுத்தி யிருக்கிறேன்.

70-ம் பக்கத்திலுள்ள சித்திரமும் 150-ம் பக்கத்திலுள்ள கல்வெட்டும் "எப்பிக்ராபியா இந்திக்கா" VIII, V ம் வால்யுங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

சாஸனங்களின் மூலத்தையும் தேவநாகர எழுத்திலோ கிரந்த எழுத்திலோ எழுதி இத்துடன் பிரசுரஞ் செய்யவேண்டுமென்ற என் விருப்பம் விரைவில் கைகூடுமென்று நினைக்கிறேன். மொழி பெயர்ப்பை மூலத்தோடு ஒப்பிடச் சௌகரியப்படுமாறு ஒவ்வொரு சாஸனமும் மூலத்தில் இத்தனை வாக்கியங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்று அதன் கீழுள்ள குறிப்புக்களிற் காட்டப் பட்டிருக்கின்றன, அசோக லிகிதங்கள் 'எப்பிக்ராபியா இந்திக்கா' I, II, III, V, VIII வால்யுங்களிலும் இந்தியன் ஆன்டிக்குவரி. XIX, XX, XXII வால்யுங்களிலும் ஆங்கில எழுத்திற் பிரசுரமாயிருக்கின்றன. கல்கத்தா யூனிவர்விட்டியின் பதிப்பு இச்சாஸனங்களை கைக்கு அடக்கமாக ஒரு சிறு புத்தகமாக்கியிருக்கிறது. இவற்றில் ஆங்கில எழுத்தில் எழுதிப் பிரசுரஞ் செய்யப்பட்டிருக்கும் மூலத்தை இத்தமிழ் மொழிபெயர்ப்புடனும் அச்சிட உத்தேசிக்கின்றேன்.