பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ்த் தாத்தா

கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றை வைத்துக்கொண்டு ஆராய்ந்து, ஒருவகையாகச் செப்பம் செய்து 1918-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நூலை வெளியிட்டார்.


வேலையிலிருந்து ஓய்வு பெறுதல்

1919-ஆம் ஆண்டு ஆசிரியர் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் இருக்கவேண்டுமென்று பலரும் விரும்பினாலும் ஆசிரியர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டார். கல்லூரி முதல்வரிடம் விடைபெற்றுக்கொள்ளும் போது, "இதுவரை இந்தக் கல்லூரியில் சிறந்த தமிழாசிரியர்கள் இருந்து வந்ததுபோலப் பின்னும் திறமை வாய்ந்த நல்லவர் ஒருவர் நியமிக்கப் பெறுதல் வேண்டும்" என்று தெரிவித்துக் கொண்டார். உடனே முதல்வர், தாங்களே அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும்' என்று சொல்ல, ஆசிரியர் இ. வை. அனந்தராமையர் பெயரைத் தெரிவித்தார். ஆசிரியர் விருப்பப்படி அவரையே சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் ஆசிரியராக ஆக்கினார்கள்.


தாகூர் தரிசனம்

1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்திருந்தார். அவர் டி.எஸ். இராமசாமி ஐயருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க ஆசிரியர் அங்கே சென்றிருந்தார். ஆசிரியரைப்பற்றித் தாகூருக்கு எடுத்துக் கூறினார்கள்.

ஆசிரியர் பதிப்பித்த நூல்களை எல்லாம் பார்த்து வியந்து, "இவற்றை எல்லாம் நீங்கள் எப்படிப் பதிப்பித்தீர்கள்?" என்று தாகூர் கேட்டார். "தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று தேடி ஓலைச் சுவடிகளை எடுத்து வந்து, அவற்றை ஆராய்ந்து செப்பம் செய்து கடிதப் பிரதி எடுத்துப் பதிப்பித்து வருகிறேன்" என்று இவர் தெரிவித்தார். ஆசிரியர் சொல்வதை எல்லாம் கேட்டு மிகவும் வியப்படைந்த மகாகவி, "நான் உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்" என்று தெரிவித்தார். அவ்வாறு அன்று மாலையே தியாகராஜ விலாசத்திற்கு வந்து, அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளையும், கடிதப் பிரதிகளையும் பார்த்து வியந்தார். ஏட்டுச் சுவடியில் எப்படி எழுதுவது என்பதையும் ஆசிரியர் அவருக்கு எழுதிக் காட்டினார். ரவீந்திரர் ஆசிரியப் பெருமான் வீட்டிற்கு