உள்ளடக்கத்துக்குச் செல்

அருள்நெறி முழக்கம்/கற்பவை கற்க...

விக்கிமூலம் இலிருந்து

கற்பவை கற்க...!

நாள்தோறும் புற்றீசல்கள்போல் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் வாசகசாலை எத்தகைய தொண்டு செய்ய வேண்டும் என்பதை எண்ணித்தான் “கற்பவை கற்க” என்று பேச விரும்புகின்றோம். இன்று இலக்கிய வளர்ச்சியைப் பற்றிச்சொல்ல வேண்டியதில்லை. நேற்று முன்தினம் சென்னை நகரிலே நடைபெற்ற பாரதி விழாவிலே அமைச்சர் ஒருவர், “முன்னைய இலக்கியங்களைப் போற்றிக் கொண்டிருப்பதிலே பயனில்லை. இன்னும் புதுப்புது இலக்கியங்கள் தோன்ற வேண்டும். திருவள்ளுவரைப் போல், கம்பரைப் போல் இலக்கியங்கள் ஆக்கித்தர முன்வருதல் வேண்டும்” என்று பேசி இருக்கின்றார். அதைப் பற்றி நமது கருத்தைச் சொல்கின்றோம்.

பழைய இலக்கியங்களை உணர்ந்து பேசுகின்ற படிக்கின்ற - பாராட்டுகின்ற நிலை இன்னும் இந்த நாட்டில் வளரவில்லை. திருவள்ளுவரை முற்றிலும் இன்னும் உணர்ந்தாரில்லை. ஒருசிலர் உணர்ந்திருந்தாலும் மாறுபட்ட நிலையில்தான் உணர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் திருவள்ளுவரைப் போல் இலக்கியம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாகப் பகற்கனவுதான். முதலில் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நாட்டிலே நன்றாகப் பரவவேண்டும். அதனுடைய அறநெறிக் கொள்கைகள் பரவவேண்டும். அதன்பின்தான் புது இலக்கியங்கள் தோன்ற வழிவகுத்துக் கொடுக்கலாம். அப்படி இல்லாமல் இலக்கியம் தோன்றினால் அது இலக்கியமாக இராது.

சிறந்த இலக்கியத்திற்கு ஒரு சான்று அறிஞர் ஒருவர் சொல்லுகின்றார்: "உன்னுடைய இலக்கியத்தைக் குறைந்தது ஒன்பதாண்டுகளுக்கு மக்கள் முன் வை. அதன் பிறகும் மக்கள் அதனை விரும்பிப் படிப்பார்களேயானால் உன்னுடைய இலக்கியம் சிரஞ்சீவி இலக்கியம்” என்றார். இன்று தோன்றுகின்ற இலக்கியங்கள் இப்படிக் காட்சியளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் “கற்பவை கற்க” என்று சொன்னால் பிழையில்லை அல்லவா?

திருவள்ளுவர் பிறர் மனம் நோகக்கூடாது என்று நூல் செய்த பெருந்தகையாளர். "கசடறக் கற்க” என்று சொல்லி நிறுத்த மனம் வரவில்லை. "கற்க கசடறக் கற்பவை” என்று சொல்லுகின்றார். கற்க வேண்டுவனவற்றைக் கற்க என்று ஆணையிடுகின்றார். திருவள்ளுவர் காலத்தில் அப்படிச் சொல்ல வேண்டிய நிலை இருந்திருக்க முடியாது. திருவள்ளுவர் எதிர்காலத்தை நோக்கிச் செய்த குறள்களில் இதுவும் ஒன்றாகும்.

திருவள்ளுவர் காலத்தில் ஏடெடுத்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்லர் - பாடத் தெரிந்தவர்கள் எல்லாம் கவிஞர்கள் அல்லர். உலகம், உலகமக்கள், வாழ்க்கை இவையெல்லாங் கருத்திற்கொண்டு, சிந்தித்து நாட்டு மக்களை நல்லாற்றுப் படுத்துதற்காக இலக்கியங்கள் ஆக்கினார்கள். நல்ல நீண்டகால அனுபவத்திற்குப் பின்தான் இலக்கியங்கள் தோன்றின. எனினும் திருவள்ளுவரது அனுபவ உள்ளம் “கற்பவை கற்க” என்று சொல்லிற்று.

வள்ளுவனாரின் இந்த அருமையான கருத்தை நகைச்சுவைபடச் செல்லுகின்றார் "ரஸ்கின்” என்ற பேராசிரியர். “நாள்தோறும் நோய்கள் மலிந்து கொண்டிருக்கின்றன. எந்த மனிதனை எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒருநோய் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வீட்டில் ஒருபகுதியிலே மருந்து சாமான்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருக்கின்ற மருத்துவ நிலையங்கள் போதாவென்று புதிதாக மருத்துவ நிலையங்கள் கட்ட அரசியலார் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

செய்தித்தாளை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் மருந்து விளம்பரங்கள்தான் இருக்கின்றன. நோயால் வருந்துகின்ற ஒருவன் அந்த விளம்பரங்களைப் பார்த்து மருந்து சாப்பிட்டால் அவன்நிலை என்னவாகும்? ஒரே வயிற்று வலிக்குப் பலப்பல மருந்துகள் விளம்பரம் செய்யப்படும். இன்று வருகின்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்து அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டவன் அடுத்த வாரத்தில் மற்றொரு மருந்தின் விளம்பரம் வந்தால் அதையும் வாங்கிச் சாப்பிட்டால் அவன் நிலை என்னாகும்? சில நாட்களுக்குப் பின் மரிக்கவிருக்கின்றவன் சில நாட்கட்கு முன்னேயே மரித்து விடுவான். அதைப் போலத்தான் புத்தங்களும்.

“பெயரைக் கண்ட மாத்திரத்தில் மட்டும் அதனைப் படிக்கத் தொடங்காதே" என்று கூறுகின்றார் ரஸ்கின். “தன்னுடைய நோய் எது? அதற்கு ஏற்ற மருந்து எது?” என்று மருத்துவரை நாடிச் சென்று அவர் ஆலோசனையின் பேரில் மருந்து உண்டால்தான் அது பயன்தரும். அதைப்போல, அறிஞர் பெருமக்களின் ஆலோசனையின் பேரில் நூல்களைப் படித்தால்தான் கல்வி பயன்தரும் என்று ரஸ்கின் சொல்லுகின்றார்.

படிக்கத் தக்கவை எவை என்ற துறையில் பல பேராசிரியர்கள் தமது கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். "பிரான்சிஸ் பேக்கன்” என்பவர் “ஒருசில நூல்கள் படிக்கத்தக்கவை; ஒரு சில அனுபவிக்கத்தக்கவை” என்று சொல்லுகின்றார். இன்றைய சூழ்நிலையில் ஒரு சில பார்க்கத்தக்கவை என்று சொல்லலாம். பேக்கன் காலத்தில் இப்படிச் சேர்த்துக் கொள்ள வேண்டிய இன்றியமையாமை இருந்திராது. இன்று வரும் இலக்கியங்கள் இந்த நிலைமையில் இருக்கின்றன. நச்சுக் கருத்துக்கள் மிக மிக எளிதாக வீடு தேடி வருகின்ற நிலையில் பரப்பப்படுகின்றன.

நம்முடைய வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அதிகமாகக் காணப்பெறுவது போரே. அறத்திற்கும் அறத்திற்கு மாறுபட்டவற்றுக்கும் போராட்டம். ஆனால் என்றும் அறம் பிறரால் பாராட்டப்படுகின்ற நிலையில் போர்க்களத்தில் வெற்றி பெற்றதில்லை. அறத்தை மறம்தான் போலி வெற்றி கொண்டது. அறத்தின் உயிர்ப்பு நிலையில் பல உத்தமர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றார்கள். பலி கொடுக்கப்பெற்ற அவர்கள் கருத்து, சிந்தனை இன்றும் உலகத்தில் வாழ்கின்றது. இன்னும் பல்லூழிக் காலம் வாழும். அதனால்தான் இப்போராட்டம் இலக்கியங்களிலெல்லாம் பேசப்பெறுகின்றன.

சீனஞானி "கன்பூஷியஸ்” என்பார். அவருக்கும் திருவள்ளுவருக்கும் எத்தனையோ இடங்களில் ஒன்றுபட்ட எண்ணங்கள். அறத்தைத் தென்றல் என்று சீனஞானி கூறுவார். அறத்திற்கு மாறுபட்டனவற்றை வாடையென்பார். இந்நாட்டில் தான் தென்றலை அனுபவித்திருக்கின்றோம் என்று எண்ணியது உண்டு. ஆனால் தென்றலும் வாடையும் அங்கே பேசப் பெறுகின்றது. உடல் நலத்துக்கு ஏற்றது. தென்றல். அதற்கு மாறுபட்டது வாடை. அதுபோல, அறம் இன்பம் தரும். மறம் துன்பம் தரும். இவ்வாறு சீனஞானி விளக்கியிருக்கின்றார். இத்தகைய அறவுணர்ச்சியையூட்டும் இலக்கியங்கள்தான் தேவை. இன்று ஆங்கில மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு. எது இலக்கியம் என்று அவர்கள் அறிந்து சொல்லியிருக்கின்றனர். "வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுவது இலக்கியம்” என்று அட்சன் சொல்லுகின்றார்.

திருவள்ளுவர், இந்த நாட்டிற்குக் கொடுத்த ஆணை "கற்பவை கற்க” என்பது. இதனை நீங்கள் கடைப்பிடியுங்கள். புதிதாக இலக்கியங்கள் தோன்றத்தான் வேண்டும். பண்டை இலக்கியங்கள் படிப்பாரற்றுக் கிடக்கப் புதிதாக இலக்கியம் செய்தவதென்றால் அதைவிடப் பித்தேறிய செயல் வேறு எதுவுமில்லை.

தமிழ்நாட்டின் இலக்கியத்திற்குத் திருவள்ளுவர் குறள் ஒன்றே போதும். அதற்கு ஒப்பத் திருவாசகம் உண்டு. இதனை எரியில் இடவேண்டும் என்று சொல்கின்றார்கள். ஏன் என்று நமக்குப் புரியவில்லை. முன்னெல்லாம் ஏதோ புராணங்களைக் கொளுத்த வேண்டுமென்று பேசிக் கொண்டு வந்தனர்.

புராணங்களில் மெய்யானவையும் உண்டு. பொய்யானவையும் உண்டு. சாதாரணமாகக் குழந்தைகட்கு ஏதேனும் கற்பனை மூலந்தான் அறிவு புகட்டல் இயலும், அப்படிப் புகட்டுதலே பயன்தரும். அப்படிப் பொய்யான இலக்கியங்கள் பல இருக்கலாம். நாட்டு மக்களுக்கு நல்லன சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அங்ஙனம் செய்திருக்கலாம்.

இன்று மக்கள் அறிவு வளர்ந்து விட்டது என்று சொல்கின்றனர்.அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் கற்பனை மூலம் - கட்டுக் கதைகளின் மூலம் பலவற்றைச் சொல்லியிருக்கலாம். ஆனால் “மனிதனை மனிதனாக வாழ வைக்கின்ற” உள்ளத்திலிருந்து எழுந்த நல்ல அன்பு பொருந்திய அறந்தழுவிய வாழ்க்கையிலிருந்து வந்த மொழியை எரியில் இட வேண்டும் என்று சொன்னால் “விலங்கொடு அனையர் மக்கள்” என்று வள்ளுவர் சொல்லுகின்ற சொல்லைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அறத்திற்கு மாறுபட்டன வருகின்றபொழுது வள்ளுவனார் தம்மையும் அறியாது தமிழ்நாட்டு இரத்தம் ஒடுவதால் கோபமாகப் பேசுகின்றார்.

அந்தக் கோபம் அல்லவர் தம்மையும் நல்லவர் ஆக்குதற்காகவே. எரியில் இட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களைப் பார்த்து எச்சரிக்கின்றார். இவ்வாறெல்லாம் சொன்னால் பேய்த்தன்மையைப் பெறுகின்றாய் என்று சொல்லுகின்றார். சமயத்தைப் பரப்புவதற்கென்றே பாடுபட்ட மாணிக்கவாசகர் கூட இப்படிப்பட்டவர்களை, "ஆப்தமானார்” என்று பரிவுடன் பேசுகின்றார். ஆனால் திருவள்ளுவரோ, பேய்க்கூட்டம் என்று சொல்லுகின்றார்.

“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்”

உலகத்தார் உண்டு என்று சொல்லுகின்ற பொருளை இல்லை என்று சொல்லுகின்றவர்கள் வையத்தில் பேயாக மதிக்கப்படுவார்கள்.

திருவள்ளுவர் நூலைப் போலத் தலைசிறந்த நூல் வேறில்லை என்று சொல்லலாம். அதிலே கூடச் சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டாத பகுதிகளைத் தள்ளி விடுகின்றார்கள். அவர்கள் திருவள்ளுவரை முழுதும் கண்டார்களா என்றால் இல்லை. திருவள்ளுவரைப் பற்றி இன்று வருகின்ற ஆராய்ச்சியைப் பார்த்தாலே நீங்கள் வருத்தம் கொள்வீர்கள். தமிழகத்திலே பிறந்த திருவள்ளுவருக்கு இந்த நிலை. “ஒரு நல்ல மனிதனைக் கொல்லுவதை விட ஒரு நல்ல புத்தகத்தைக் கொல்லுதல் கொடுமையுடையது” என்று மில்டன் கூறுகின்றார். ஒரு நல்ல மனிதரைக் கொன்றுவிட்டால் அவரைச் சார்ந்தவர் அவரோடு தொடர்புடைய பலர் இந்த நாட்டிலே அந்த உணர்ச்சியைப் பரப்புவார்கள். ஏசு கிறித்து மறைந்து விட்டாலும்கூடப் பல ஆண்டுகளாக அவருடைய அறவுரைகள் உலகம் எங்கும் பரப்பப்பெறுகின்றன.

திருவள்ளுவர் நூலுக்குப் பத்துப்பேர் உரை எழுதியிருக்கின்றார்கள். குழந்தையுரை என்று ஒன்று வெளிவந்திருக்கின்றது. திருவள்ளுவர் இன்று இந்த நாட்டில் வாழ்ந்தால் இவ்உரையைப் பார்த்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பார். இப்படியெல்லாம் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்பொழுது கற்பவை கற்க என்று சொல்ல வேண்டுவது அவசியம் எனக் கருதுகின்றோம். கடைப்பிடிக்க வேண்டிய மொழியது.

பண்டைத் தமிழக இலக்கியங்கள் அனைத்தும் நன்மையையே அடிப்படையாகக் கொண்டு எழுந்தன. தீமையின் பெயரைச் சொல்லக்கூடத் திருவள்ளுவர் அஞ்சி நல்லனவற்றின் பெயரை வைத்துத் தீமையை உணர்த்துகின்றாரே தவிரத் தீமையை நாவால் சொல்ல முன்வரவில்லை. இந்தநிலையிலே, பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பார்த்தல் வேண்டும்.

இன்று வருகின்ற இலக்கியங்களைப் பற்றிச் சிந்திப்போம். பழம்பெரும் இலக்கியங்கள் எப்படித் தோன்றின? தமிழ்நாட்டு இலக்கியங்கள் அனைத்தும் சிறந்த அறத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றின. தமிழன் என்று அறிவுடன் உலவத் தொடங்கினானோ அன்றே காதலொடு வாழ்ந்தான். தலைவனும் தலைவியும் இக்காலத்துத் தலைவன், தலைவிபோல் காட்சியளிக்கமாட்டார்கள். அடிப்படை வாழ்க்கை முறையிலேயே இருக்கும். அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை எல்லாம் அகத்துறை இலக்கியங்கள். அவைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். எளிமையான முறையில் நல்லன சொல்லிய பெருமை நமது புலவர்களுக்குண்டு.

நீங்கள் திருவள்ளுவரை இலட்சிய புருடராகக் கொள்ளுங்கள். திருவள்ளுவர் இந்த நாட்டிலே அன்பு நிலவ வேண்டும் என்பதற்காக வேறெந்த எண்ணமும் கொள்ளாது ஒப்பற்ற எண்ணங்களைக் கொடுத்தார். திருவள்ளுவர் தொடங்குகின்றபோதே அறத்தை வலியுறுத்துகின்றார். அறம்தான் மனிதனை முன்னேற்றும் என்று சொல்லுகின்றார். அறத்திற்கு அடிப்படைக் குணம்தான் அன்பு என்பதை எல்லோரும் உணர்ந்து வாழவேண்டும். உள்ளத்தில் தூய்மை நிலவவேண்டும் என்றெண்ணி,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

என்று பாடிய பெருமை வேறு எந்த இலக்கிய ஆசிரியருக்கும் இல்லை. தனிப்பட்ட மனிதனிடத்திலே அறத்தை வைத்துப் பேசிய பெருமை திருவள்ளுவருக்குத்தான் உண்டு. அதனை உணர்ந்து நடவாததால்தான் நாடு வறுமைப்படுகின்றது. வள்ளுவர் கூறிய அறம் இந்த நாட்டில் வளருமானால் இன்பம் பெருகும்.

“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல

அறத்தினால் வருவதுதான் தலைசிறந்த இன்பம். அதனால் வரும் புகழ்தான் புகழ் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்.

திருவள்ளுவர் ஒப்பற்ற நாகரிகத்தைப் பேசுகின்றார்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

நாகரிகம் என்ற சொல் இன்று மிக எளிமையாகி விட்டது. ஆனால் வள்ளுவர் நஞ்சூட்டுவார்க்கும் நல்லருள் பொழியும் உளப் பண்பை “நாகரிகம்” என்ற சொல்லாற் குறிப்பிடுகின்றார்.

சில சமயங்களிலே சிறந்த சிறுகதை ஆசிரியராகத் திருவள்ளுவர் காட்சியளிக்கின்றார். நம்மேல் ஒருவர் பொறாமை கொண்டு நஞ்சு வைத்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்; ஏன்? சாக்ரடீசுக்குக் கிடைத்தது. அதுதானே? நாம் அதை உண்ண வேண்டுமாம்! அப்படி எண்ணாது உண்ண வேண்டுமாம். எப்பொழுதும் வள்ளுவர்க்கு உள்ளத்தில் ஒரு பற்று. ஆகையால் நஞ்சு என்று எண்ணாதே. அப்படி எண்ணினால் உன்னுடைய முகம் பேசும் என்ன இருந்தாலும் வெறுப்புணர்ச்சி தோன்றினால் முகம் அதனை எடுத்துக்காட்டும் அல்லவா? ஆகையால் நஞ்சு என்று எண்ணினால் அந்த நினைவை முகம் எடுத்துக்காட்டிவிடும். அப்பொழுதும் நம்முடைய முகத்தை நஞ்சு வைத்தவர் பார்த்து விட்டால் வருத்தப்படுவார். அந்த வருத்தத்தைக் கூட அவனுக்குக் கொடுக்காதே என்று சொல்லுகின்றார்.

நஞ்சுண்டமைந்தவர் இந்த நாட்டிலேதான் உண்டு. நஞ்சுண்டு இறந்தவரைத் தான் பிறநாடுகளிலே கேள்விப்பட முடியும். சாக்ரடீஸ் நஞ்சுண்டு மாண்டார். உடனே, அவருடைய தொண்டர்கள் உண்மையைக் கொன்று விட்டார்கள் என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் நம் நாட்டிலே திருநாவுக்கரசர் இதனை எண்ணித்தானோ என்னவோ நஞ்சுண்டு இறந்துவிட்டால். பிறர்க்கு இழிசொல் கிடைக்கும் என்று எண்ணி இறப்பு வாராதிருக்க வேண்டும் என்று எண்ணி இருப்பார் போலும்.

எப்பொழுதுமே தமிழன் கண்ட அறம் உயர்ந்த அறம். பிறரைச் செய் என்று சொல்ல மாட்டார்கள். செய்தால் நல்லது என்று சொல்லுவார்கள். நல்லது செய் அல்லது தீமையைச் செய்யாமலிரு என்று சொல்லுவது இந்த நாட்டுப் பண்பாடு. இதுதான் இன்று கிராமத்துப் பழமொழியாக விளங்குகின்றது. நரி வலம் போனாலும் சரி, இடம் போனாலும் சரி மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்று சொல்லுவார்கள்.

எதிலும் நம்பிக்கை வேண்டும். நமக்குத் தெரிந்தவரையில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் நம்பிக்கை நம்பிக்கை என்றுதான் அவர்கள் எல்லாம் மூச்சு விடுகின்றனர். நம்பிக்கை ஒன்றுதான் முதுமைக்காலத்தில் தாதியாய் நின்று துணை செய்யும்.

நான் தமிழன் என்று பூதத்தாழ்வார் சொல்லுகின்றார். வெறும் தமிழன் என்று கூறிலர். பெரும் தமிழன் என்று சொல்லுகின்றார்.

"யானே தவம்செய்தேன் ஏழ்பிறப்பு மெப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை யிணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது"

பெரிய தமிழன் - நல்ல தமிழன் என்று பூதத்தார் புகல்கின்றார். இத்தகைய நெறியில் வாழ்ந்த மக்களைக் கண்ட பெருமக்கள் அதற்கு மாறுபட்ட நெறியிலே வாழ்கின்றவர்களைக் கண்டபொழுது கோபப்படுதல் இயற்கைதானே!

இத்தகைய இலக்கியங்களை ஆக்குவது என்பது முடியாததொன்று. மனச்சுருள் நீக்கி மலர்விக்கும் இத்தமிழ் இலக்கியங்களைச் செம்மையாகக் கற்று, கற்றவாறு ஒழுகி எல்லா நலன்களும் அடைவோமாக!

ஓங்குக தமிழ்! உயர்க ஒழுக்கம்!



சிவகங்கை கோகலே ஹாலில்
தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை