கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்/001-005
1. அரசியல்
இந்தியா, வரலாற்றுப் பழைமைமிக்க ஒரு பெரிய நாடு. பல பேரரசுகளைக் கண்ட நாடு. அரசியல் ஞானிகளைத் தந்த நாடு. வடக்கே கௌடில்யரும், தெற்கே திருவள்ளுவரும் சிறந்து விளங்கிய நாடு. பழங்காலத்திலேயே தொழிலிலும் வாணிகத்திலும் சிறந்து விளங்கிய நாடு. ஆயினும் இந்தியா மெள்ளத் தன் ஆற்றலை இழந்து அடிமைப்படும் நிலைக்கு வந்தது; ஏன்? பெரும்பகுதி உள்நாட்டுச் சண்டைகள் காரணம். நுகர்பொருள் அதிகமாகிச் சண்டை சச்சரவுகள் ஆயின. அத்தடுத்து யுத்தங்கள் நடந்தன; அவற்றுள் மூன்று படையெடுப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. ஜீலம் நதிக் கரையின் பேரரசுகளுக்கும் மகா அலெக்சாந்தருக்கும் நடந்த யுத்தத்தில் இந்தியா தன் ஆத்மாவை இழந்தது. அடுத்து முகம்மது கோரிக்கும் பிரிதிவிராஜனுக்கும் நடந்த யுத்தத்தில் இந்தியாவின் அரசியல் போய்விட்டது. அடுத்து ராபர்ட் கிளைவ் நடத்திய பிளாசி யுத்தத்தில் இந்தியாவின் பொருளாதாரம் போய்விட்டது. இங்ஙனம் இந்தியா தனது மகத்தான் பெருமையை இழந்து மங்கி வந்தது; அடிமைப்பட்டது. திரும்பவும் எழுந்து நின்று போராடி 1947-ல் சுதந்திர உயிர் பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தியா இன்று சுதந்திர நாடு. இந்தியாவில் நடைபெறுவது சுதந்திரக் குடியரசு; மக்களாட்சி. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களுக்கு அரசியல் அறிவு வேண்டும்; அரசியல் ஞானம் வேண்டும்; பொருளாதார அறிவு வேண்டும்; சமூக விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையுடன் கூடி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களாட்சி முறை வெற்றிக்கு மக்கள்தான் பொறுப்பு. ஆதலால், நமது நாட்டு இலக்கியங்கள் அரசியலை மையமாகக் கொண்டு ஊடும் பாவுமாகத் தோன்றின. நமது நாட்டு மக்களிடையில் அரசியல், சமூக, பொருளாதார, அறிவு வளரவேண்டும் என்று அடிப்படையில் கம்பனின் அரசுகள் என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப்பெற்றது. ஆயினும் அரசியல், சமுதாயம், பொருளியல் ஆகிய இன்றையச் செய்திகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெற்றுள்ளன.
இன்று நமது நாட்டில் வசதியும் வாய்ப்புமுடையோர் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. அது மட்டுமல்ல; அரசியலை அலட்சியப்படுத்துகின்றனர். அவர்கள் ஆட்சியினர்க்குக் கப்பம் கட்டிக் காரியங்களை முடித்துக் கொள்ள எண்ணுகின்றனரேயன்றி அரசியலில் ஈடுபடுவதில்லை. இவர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பது கூட இல்லை. நடுத்தர வர்க்கத்தினர் நுகர்வுச் சந்தையை விரிவாக்கியதன் மூலம் சுக வாழ்வில் நாட்டம் செலுத்துகின்றனர். அறிஞர்கள் நிலை, அரசியலைப் பொறுத்த வரையில், அஞ்ஞாத வாசமே! சிந்தித்தும் பலர் வாக்களிப்பதில்லை. இந்த நிலையில் இந்தியா சிறந்த அரசியலை ஆட்சியியலைப் படிப்படியாக இழந்து வருவதை உணர முடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பாதுகாப்பின்மை, உத்தரவாதமின்மை ஆகியவற்றால் தனி மனிதனுடைய சுதந்திரம் மறைமுகமாக வில்லங்கப்படுதல் நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டு மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வு வேண்டும். கம்பனின் இராமகாதையில் வரும் பாத்திரங்கள் பலவும் அரசியல் நெறி பேசுவதை உய்த்துணர்க. கம்பனின் அரசியல் பேச்சு, நம்மனோரை அரசியலில் ஈடுபடுத்துமானால் அது பேச்சுக்கு வெற்றி! ஏவி.எம். அறக்கட்டளைக்கு வெற்றி! இனி, பொதுவாக அரசியலுக்கும், அடுத்துக் கம்பனின் அரசியலுக்கும் போகலாம்.
அரசியலின் தோற்றம்
மனித குலம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மனிதகுல வரலாறு ஒரு தொடர் வரலாறு. தொடக்கத்தில் மனிதகுலம் அரசியலில், ஆட்சியியலில் பரிபூரண சுயேச்சையுடன் வாழ்ந்திருந்தது. அப்போது சொத்துரிமை இல்லை; பணப்புழக்கம் இல்லை; பண்டப்புழக்கம் மட்டும்தான். அதுவும் தேவைக்குத்தான்! அந்தக் கால வாழ்வியல் முறையை ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் என்று கூறுவர். அந்தக் காலத்தில், பழக்கங்கள் வழக்கங்களாகி மரபுகளாக இடம் பெற்று, மக்கள் இயற்கையாகவே ஒழுங்கும் ஒழுக்கமும் உடையவர்களாக வளர்ந்தனர்; வாழ்ந்தனர்; வாழ்வித்தனர். தேவைக்கே பொருள். பொருள், மனிதனின் கருவியாக இருந்தது. வரலாற்றுப் போக்கில், மெள்ளமெள்ளப் பொருள் தேவைக்காக மட்டும் அல்லாமல் கௌரவம், அந்தஸ்து, ஆதிக்கம், பிற்காலப் பாதுகாப்பு என்ற நிலைகள் தோன்றின. இந்தப் பொய்ம்மையின் அடிப்படையில் அல்லது அவசியமற்ற காரணங்களின் அடிப்படையில், மக்கள் தலைவன் தோன்றுகின்றான். காலப்போக்கில் மக்கள் தலைவன் வேந்தனாகின்றான்; அரசியல் தோன்றியது; சட்டங்கள் இயற்றப்பட்டன; சிறைக்கூடங்கள் தோன்றின; படைகள் தோன்றின; போர்கள் தோன்றின; பெருகின. இவ்வளவு தீமைகளும் மனிதனின் ஒழுங்கு, ஒழுக்கம் கெட்டுப் போனமையால் விளைந்த விளைவுகள். இதற்கு மூல காரணம் தனிச் சொத்துடைமை தோன்றியதோடு, காவல் என்ற பெயரில் வேலிகள் இடப் பெற்றதாகும். வீடுகளுக்கிடையே சுவர்கள் தோன்றின. பின் சொத்துடையவர்கள் எல்லாரும் கூடித் தங்களுடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள, புயபலமுள்ள தலைவனைத் தேர்வு செய்தனர். இங்ஙனம் தலைவனிடம் தொடங்கிய அரசியல், ஏகாதிபத்யமாக இன்று உருக்கொண்டு பூதாகாரமாக வளர்ந்துள்ளது. இங்ஙனம் வளர்ந்த ஆட்சிமுறை, முடியாட்சி என்றும் குடியாட்சி என்றும் இருவகையாகப் பிரிந்தன. நமது நாடு மக்களாட்சி முறை தழுவிய நாடு.
கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய ‘சான்றோர் கவிதை’க்கு ஓர் எடுத்துக்காட்டு. மனிதரில் சிறந்தோர் சான்றோர். சான்றோர் யார் மாட்டும் எவ்வுயிர் மாட்டும் சம பார்வையுடையவர்கள். கம்பனின் இராமகாதையில் அவனுடைய பொருள்நோக்கு எளிதில் விளங்குகின்றது. என்றுமுள இனிய தமிழில் இராமகாதையைப் பாடி இசைகொண்டு புகழ்மிக்க கவிச்சக்கரவர்த்தியாகக் கம்பன் விளங்குகின்றான். கம்பனின் இராமகாதையில் ஏற்றம் பெற்றோர் உண்டு. ஆனால், முற்றாக இகழப்பட்டோர் யாரும் இல்லை என்று துணிந்து கூறலாம். அந்தப் பாத்திரங்களை நடுவுநிலையுடன் குறைகளையும் நிறைகளையும் மதிப்பீடு செய்து, தமது காவியத்தில் இடம் பெறச் செய்துள்ள அருமை உணரத்தக்கது. ஆதலால், சான்றோர் கவிதைக்குக் கம்பனின் இராமகாதையே எடுத்துக்காட்டு.
கம்பனின் இராமகாதை முழுதும் வாழ்வியலைச் சார்ந்த அறிவியல் பொதுளுகிறது. கம்பனின் இராமகாதை ஓர் அரசியல் சாத்திரம், கம்பனின் இராமகாதை ஒரு நெடிய காதை. நீதிகளின் ஊற்று; அறநெறிகளை நாடு முழுதும் எடுத்துச் சென்ற இலக்கியப் பேராறு; உயிர்ப்புள்ள இலக்கியம். கம்பன் கடவுளைப் பாடியது உண்மை. அதுபோலவே விண்ணையும் பாடியது உண்மை. ஆனால் கம்பன் மண்ணை— பூமியை மறக்கவில்லை. மண்ணிற் பிறந்து வாழும் மானுடத்தையும் பாடி இருக்கிறான். மானுடன் வெற்றிபெற வேண்டும் என்பது அவனது கொள்ளை ஆசை! மாந்தரில் பலவகை. பலவகை மாந்தரையும் பாடியிருக்கிறான். மாந்தரின் குறை— நிறைகளை உணர்ந்தவன் கம்பன். ஆயினும் மாந்தரின் குறைகளைக் கண்டு புழுதி தூற்றவில்லை. குறைகளை நீக்கவே முயற்சி செய்திருக்கிறான். குறைகளிடையே நிலவிய நிறைகளையும் கண்டு காட்டக் கம்பன் தவறவில்லை. கம்பனின் இராமகாதையில் ஒரு சமுதாயத்தைக் காண முடிகிறது. இல்லை, பல்வேறு நாடுகள், பல்வேறு சமுதாய அமைப்புக்களைக் காண முடிகிறது. கம்பன் இராமகாதையை இயற்றியது 800 ஆண்டுகளுக்கு முன் ஆயினும், சமுதாய இயக்கத்தில் கம்பன் பல திருப்பு மையங்களைக் காப்பியத்தில் அறிமுகப்படுத்தியுள்ளான். கம்பன் காலம் முடியாட்சிக் காலம். ஆயினும் மக்களாட்சி அறிமுகம் ஆகிறது.
இந்திய கலாசாரத்தில்—தமிழர் சமுதாய வாழ்க்கையில் ‘ஊழ்’ (கர்மாவின் பலன்) மிகவும் முக்கியமான இடத்தை வகித்து வந்திருக்கிறது; இன்றுவரை வகித்து வருகிறது. ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்று திருக்குறள் கூறுகிறது. ஆனால், தமிழக வரலாற்றில் ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றும்
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
என்றும் கூறி, ஊழையும் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் திருவள்ளுவர் தந்தார். ஆயினும் ஊழ் பற்றிய சிந்தனையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ஊழை மையமாகக் கொண்டு ‘ஊழ்வினை உருத்து வந்தூட்டும்’ என்ற கோட்பாட்டையே மையமாகக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். ஆனால் சமய ஆசிரியராகிய திருஞானசம்பந்தர், உய்யுமாறு தேடிச் செய்யும் வினை செய்யாது ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்று சொல்லித் திரிவாரை மறுக்கிறார்.
“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்”
என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.
ஊழ் என்பதுதான் என்ன? ஆன்மாவின் பழக்கங்கள், வழக்கங்களே! பிறப்புதோறும் ஆன்மாவினிடத்தில் புலன்களில் முகிழ்ப்பதே ஊழ். எனவே, பழக்கங்களையும் வழக்கங்களையும் மனிதன் சிந்தித்து அறிவார்ந்த முயற்சியில் ஈடுபட்டானானால் ஊழை வெற்றி பெறமுடியும். ஊழின் ஓய்வு ஒழிவு இல்லாத தாக்குதலிலிருந்து தப்ப, துன்பங்கள் துயரங்கள் ஆகியவற்றால் கலங்காத துணிவுடன் கூடிய முயற்சி தேவை. ஒவ்வொரு நாளும் முந்தைய வினையைவிட எந்த வகையிலும் குறையாத கூடுதல் முயற்சி தேவை. அப்பொழுதுதான் ஊழை வெற்றி பெற இயலும். ஆதலால் இலக்குவன்,
“உதிக்கும் உலையுள் உறுதீ என ஊதை பொங்க
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதிஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்
விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில் காண்டி”
(கம்பன்-1735)
என்றான்.
“விதிக்கு விதியாகும் என் வில் தொழில்” என்று இலக்குவன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இலக்குவனால் முடியும். ஆனால், இராமனுடைய செந்தண்மை இலக்குவனைச் செயற்படத் தடுத்தமையினாலேயே இலக்குவனால் விதிக்கு விதி செய்ய இயலவில்லை. இன்று நம்முடைய நாட்டில் ஏராளமான மக்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணம் விதியின்பால் உள்ள நம்பிக்கையே. தாம் முயன்றாலும் முன்னேற முடியாது என்று முயற்சியின்றி வாழ்கின்றனர். திருவருட் சிந்தனையுடன் இடையறாது அறிவறிந்த ஆள்வினையில் ஈடுபட்டால் ஊழினை வென்று நமது நாட்டை வளமுடைய நாடாக ஆக்கமுடியும். இது உறுதி.
ஆதலால் நாம் அன்றாட வாழ்க்கையில் பழக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பொழுது, நன்றாக ஆலோசனை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பழக்கங்கள் சில கால எல்லையில் வழக்கங்களாக மாறும். ஒரு பழக்கம் வழக்கமாக மாறிய பிறகு அந்த வழக்கத்திலிருந்து விடுபடுவதும் கடினம். ஆதலால், பழக்கம், வழக்கமாகும் முன் தீர ஆய்வு செய்து பொருந்தா வழக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிட்டால், ஊழ் உருவாக்கம் பெறுதலைத் தவிர்த்துவிடலாம். கம்பனின் காலம் ஊழ்—விதியின் ஆட்சிக்காலம். ஆயினும், ‘விதிக்கு விதியை’ அறிமுகம் செய்கிறான். அறியாமல் செய்யும் தவறுகள் கம்பனின் இராம காதையில் மன்னிக்கப்படுகின்றன. கம்பனின் காலம் நிலப்பிரபுத்துவ காலம். ஆனாலும் “உடையாரும் இல்லை; இல்லாரும் இல்லை” என்று பொதுமை நலச் சமுதாயம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கம்பனின் இராமகாதையில் ஐந்து நாடுகளின் அரசுகள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றுள் இரண்டு பேரரசுகள், மூன்று சிற்றரசுகள். பேரரசுகளில் ஒன்று அயோத்தி. மற்றொன்று இலங்கை, சிற்றரசுகளில் மிதிலை அரசு ஒன்று; கங்கைக்கரை அரசு ஒன்று; கிட்கிந்தை அரசு ஒன்று. இந்த ஐந்து அரசுகளில் கிட்கிந்தை அரசைத் தவிர, மற்ற நாட்டு அரசுகளில் குழப்பங்கள் இல்லை. மிதிலை (ஜனகர்) அரசு கதைப் போக்கிற்காக அமைந்த அரசு, விரிவான செய்திகள் கிடைக்கவில்லை.
அரசுகளின் நிலை
மனித சமுதாயத்தில் அரசுகளின் தோற்றமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதல்ல. நல்லதைக் கருவாகத் தாங்கி அரசுகள் தோன்றவில்லை. நிலப் பிரபுத்துவமும் — தனி உடைமையும், உழைப்பும்—கூலியும் என்ற சமுதாய நெறிமுறை தோன்றிய பிறகு, உடைமைக்காரர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக அரசைத் தோற்றுவித்து, அதிகாரங்களை வழங்கினர். அரசுகள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை - மக்களாட்சியிலும் கூட - அரசுகள் உடைமை வர்க்கத்தைப் பாதுகாப்பதாகவே இயங்கி வருகின்றன. பின், காலப்போக்கில் அரசே ஓர் அசுர அமைப்பாகிவிட்டது. அரசுக்கு நிலம்; கஜானா; படை என்றெல்லாம் அமைந்துவிட்டன. ஏன்? அரசுகளே ஒரு காரணமும் இல்லாமல் மக்கள் விரோத அமைப்பாக மாறின; இயங்கின; இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் பெரும்பான்மையான அரசுகள் கொடுங்கோல் அரசுகளாக விளங்கின. உலக வரலாற்றின் ஏடுகளில் போர்ச் செய்திகளே நிரம்பியுள்ளன என்பதே இதற்குச் சான்று. காலப்போக்கில் முடியாட்சிகளை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இந்தக் கிளர்ச்சியில் பல அரசர்கள் முடியிழந்தனர்; கொல்லப்பட்டனர். சில அரசுகள் விழித்துக் கொண்டு, மக்களாட்சி முறையைத் தழுவிய ஆட்சியை நடத்தித் தப்பித்துக் கொண்டன. இதற்கு இங்கிலாந்து சிறந்த எடுத்துக்காட்டு. ஆயினும் வரலாற்றுப் போக்கில் நல்லரசுகள் சில அமைந்திருந்தன என்பதை மறக்க இயலாது; மறக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவிலும், அதிலும் தமிழகத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் பண்டு நல்ல அரசுகள் இருந்துள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசுகளில் பல அரசுகள் மக்கள் நல அரசுகளாகவே திகழ்ந்தன. அதனாலேயே அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்த வரலாறு தமிழக வரலாற்றில் இல்லை. மக்கள் சமுதாயத்திற்கு அரசு இன்றியமையாதது. அரசுக்கு மக்கள் தேவை. ஆதலால், இலக்கியங்கள், குறிப்பாக இந்திய இலக்கியங்கள் அரசியலை மையமாகக் கொண்டே தோன்றி விளங்குகின்றன. கம்பனின் இராமகாதை ஓர் இலக்கியம் மட்டுமல்ல, அரசியல் நெறி விளக்கும் அரசியல் நூலாகவும் விளங்குகின்றது. கம்பனின் இராமகாதையில் இரண்டு பேரரசுகளும் மூன்று சிற்றரசுகளும் பேசப்படுகின்றன என்பது அறிந்ததே. இந்த அரசுகளின் அமைப்பு, செயல்முறை ஆகியனவற்றை ஆய்வு செய்து எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று உரிமை கொண்டாடும் இக்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பேச்சு அமைகிறது.
அயோத்திச் சிறப்பு
கோசல நாட்டு அரசு பேரரசு; அதன் தலைநகரம் அயோத்தி. இன்றும் அயோத்தி பழைய வரலாற்றுச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நாகரிகத்தில் வளர்ந்த மக்கள்; இயல், இசைப் பயன் துய்த்து மகிழ்ந்து வாழ்வர். கேள்வி ஞானம் வளரும். நாட்டு மக்கள், ஆழ்ந்து அகன்ற பல்துறை அறிவுடையோராக விளங்குவர். அயோத்தி நாட்டு மக்கள் செவியிற் சுவையுணரும் கேள்வியை ‘மருந்தினும் இனியது என்று மாந்துவார்’ எனக் கம்பன் சொல்லும் அருமை நோக்குக. திருவள்ளுவரும் கூடக் கேள்வியைச் ‘செவிச் செல்வம்’ என்றார். கம்பன் பிணி அகற்றும் மருந்தினும் இனியது என்று கூறுவது உற்றறிதலுக்குரியது. அறியாமைக்குக் கேள்வி ஞானத்தைப் போல் பிறிதொரு மருந்தில்லை.
‘வெண்மை இல்லை; பல் கேள்வி மேவலால்’ என்று கூறுவதையும் ஒப்பு நோக்குக. விருந்தினரை ஓம்பலும், விழாக்கள் நிகழ்த்தலும், நல்ல நாட்டின் நிகழ்வுகள், அடையாளங்கள்.
“பொருந்திய மகளி ரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல் சென் றன்ன
இயல்இசைப் பயன்துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
செவியுற மாந்து வாரும்
விருந்தினர் முகங்கண் டன்ன
விழாவணி விரும்பு வாரும்”
(கம்பன்-46)
என்று பாடுகிறான் கம்பன்.
நமது நாட்டில் பெண்களுக்குக் கல்வி தருதல் என்பது இன்று ஒரு பெரிய பிரச்சினை. நமது நாட்டில் பெண்களில் படித்தவர்கள் 24.8% பேர். பெண்களில் இந்த அளவுக்குப் படித்தவர்கள் உருவானதற்குக் காரணம் பெண்கள் முன்னேற்ற இயக்கம், பாரதியின் பாடல்கள் ஆகியனவாம். பழந்தமிழகத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது; ஆட்சியுரிமையும் கூட இருந்தது. இதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் சான்று. சமுதாய நடைமுறைகளே திருக்கோயில்களிலும் அமைகின்றன என்பதை நினைவிற் கொள்க. நமது சுதந்திரக் குடியரசின் அரசியல் சட்டத்தில் பெண்களுக்கெனக் கல்விக்கும் சொத்துடைமைக்கும் விதிகள் இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் 10 விழுக்காட்டுப் பெண்களுக்குக்கூட இந்தியாவில் சொத்துரிமை இல்லை. ஆனால், அயோத்தியில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர் என்று கம்பனின் காவியம் கூறுகிறது. இது பற்றிப் பாடும் பாடலில் கம்பன், ஒரு வாழ்வியல் தத்துவத்தை— உண்மையைக் கூறுகின்றான். பிறர் வருத்தத்தை மாற்ற, செல்வம் கருவி, அறிவு உடையோரே பிறர் வருந்தும் வருத்தம் அறிவர். மனிதம் போற்றும் அறிவில்லாதவர்களிடம் செல்வம் இருந்தாலும் பிறர் துன்பம் மாற்றார். இவ்விரண்டில் செல்வம் இல்லாது போனாலும் அறிவு இருந்தால் முயன்று, மற்றவர் துன்பத்தை மாற்றுவர். பிறருடைய வருத்தத்தை மாற்றும் முயற்சியினையே ‘நோன்பு’ என்று தமிழ் நெறி கூறுகிறது. ‘பிறர்க்கென முயலா நோன்றாள்’ என்பது புறநானூறு. பிறிதின் நோய்— பிறர் வருத்தம் பொறா மனம் அறிவுடையோருக்கே உண்டு என்ற கொள்கை கம்பனுடையது. கோசல நாட்டுப் பெண்கள் வருந்தி வந்தவர்க்கு ஈதலிலும், விருந்து ஓம்புதலிலுமே ஈடுபட்டுள்ளனர். கோசல நாட்டில் ஏற்றுமதி— இறக்குமதி பெருகி வளர்ந்திருந்தன. வளம் கொழிக்கும் நிலம், கோசல நாட்டு மக்கள் ஒழுக்கம்; சிறந்த குலமரபினர் என்றெல்லாம் புகழ்கின்றான் கம்பன்.
ஒழுக்கம் சிறந்த மக்களைப் பெற்றுள்ள நாடே வளரும் நாடு. இதனால் ஆட்சிச் செலவு குறையும். குலம், குடி என்ற சொற்கள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. குலம் வேறு, சாதி வேறு. சமூக அமைவுக்கும் குடும்ப அமைவுக்கும் இடையில் அமைந்து விளங்குவது குலம் என்பது. இது வழிவழியாகச் சிறந்து விளங்கி வரும் தலைமுறையைக் குறிக்கும். குலத்திற்குத் திருக்குறள் மிகவும் ஏற்றம் தருகிறது. கம்பனும் ‘குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்’ என்று விளக்குகின்றான். ஒழுங்குகள், ஒழுக்கங்களாக உருப்பெறுகின்றன. ‘நல்ல ஒழுங்குகள்தான் எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை’ என்றார் எட்வர்டு பர்க்,
ஒருவன், தான் பிறந்து வளரும் குடும்பம், குலம், ஊர், அந்நாட்டு அரசின் நடைமுறை இவைகளுக்கேற்பவே உருவாகின்றான்; உருவாக்கப்படுகின்றான். ‘ஒழுக்கத்திற்குப்’ பிறப்பின் சார்பு காரணம் என்பதைச் சேக்கிழார்,
(பெரிய புராணம், கண்ணப்பர்-8)
என்று பாடுவார். ஒழுங்கு என்பது கட்டுப்பாட்டுடன் வாழ்தல். சுதந்திரம் இல்லாத கட்டுப்பாடு அடிமைத்தனத்தைத் தோற்றுவிக்கும். கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் அராஜகத்தைத் தோற்றுவிக்கும். ஆதலால், கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே கடலும் பாலைவனமும் உருவாகின்றன. ‘நல்நடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே!’ என்றது புறநானூறு. இன்றைய அரசுகள் மக்களை இரவலர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் ஏமாற்றுபவர்களாகவும் குடிகாரர்களாகவும் ஆக்க முனைகின்றன. கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். கம்பன் காட்டும் கோசல நாட்டில்,
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் யுரைஇ லாமையால்
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்”
(கம்பன்-84)
ஆக, கோசல நாட்டில் வறுமைத் துன்பமும் இல்லை, பகைவரால் வளரும் துன்பமும் இல்லை என்றால் அயோத்திப் பேரரசு, ஒரு நல்ல பேரரசாக அமைந்து விளங்கியது என்பது புலப்படுகிறது.
கோசல நாடு பேரரசாக விளங்கியது என்பதைக் கம்பன் ‘மன்னவர் தருதிறை அளக்கும் மண்டபம்’ பற்றிக் கூறுவதன் மூலம் உய்த்துணர முடிகிறது. அயோத்தியில் கள்வரும் இல்லை; காவல் செய்வாரும் இல்லை. கொள்வாரும் இல்லை; ஆதலால் கொடுப்பார்களும் இல்லை.
கள்வர், காவலர் இவர்களுள் யார் முதலில் தோன்றினர்? நடைமுறையில் கள்வர் தோன்றின பிறகே காவலர் தோன்றுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் காவலுக்குப் பின்தான் கள்வர் வருகின்றனர். ஆம்! பிறருடைய செல்வத்தையெல்லாம் அழக்கொண்டு இவறிக் கூட்டிப் பிறர் வாட, வருந்தப் பூட்டி வைத்து அழகு பார்க்கும், சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வர்கள்செல்வத்தைக் காப்பவர்கள். ‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்ற நெறி போற்றாமையினால் காவற்காரராகின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் கள்வர்கள் தோன்றுகின்றனர். ஆனால் கோசல நாடு குறைவற வளர்ந்த நாடாக விளங்கிற்று.
கோசல நாட்டின் பேரரசர் அன்பில் தாய், நலம் பயப்பதில் தவம், விண்ணில் உய்த்துச் செலுத்தும் சேய்; நோய்க்கு மருந்து அறிவு என்று கம்பன் பேரரசின் புகழ் பாடுவதைக் காப்பியத்தில் படித்து அனுபவிக்க முடிகிறது.
மக்களுக்காகவே மன்னன்
மக்களை உடம்பாகவும் மன்னனை உயிராகவும் கண்டு பாடியது புறநானூறு. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பது புறநானூறு. ஆனால், கம்பன் குடிமக்களை உயிராகவும் அயோத்தியில் இருந்த பேரரசன் தசரதனை— மன்னனை— உடம்பாகவும் கூறுவதை அறிந்து அனுபவிக்க வேண்டும். உயிர்தான் முக்கியமானது. உயிருக்குக் கருவிதான் உடம்பு. ‘உயிர் எலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்றான் கம்பன். அதாவது, மக்களுக்காகவே அரசு, மன்னன் எல்லாம். இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் அரசனைக் கடவுளாகவும் அரசனது ஆணையைக் கடவுளின் ஆணையாகவும் போற்றப்பட்டிருப்பதை நோக்கும்பொழுது, கம்பன் கண்ட அரசு, மக்கள் அரசாக விளங்குவதைக் காண மகிழ்வு மேலிடுகிறது. ஆனால், இன்றோ மக்கள் சட்ட ரீதியாக உரிமை பெற்றிருந்தாலும் அரசின் நடைமுறையில் குடிமக்களாகக் கூட நடத்தப்படவில்லை. அரசின் உடைமையாக — வாக்களிக்கும் எந்திரங்களாக மதிக்கப்படுகின்றனர்; நடத்தப்படுகின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை.
இராமனின் எளிமை
இன்று ஆள்வோருக்கு அச்சம் மிகுதி. காவலர்கள் புடைசூழவே உலா வருகின்றனர். குண்டுகள் துளைக்காத கார்கள், மேடைகள் இன்றைய ஆள்வோருடைய தேவையாகிவிட்டன. கோசல நாட்டில் அப்படியில்லை.
இராமனுக்குப் பகைவர் என்று யாரும் இல்லை. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனிடம் பகை கொண்டானில்லை. இராவணனை அழிக்க நினைத்தானில்லை. தூதுவர்கள் மூலம் சீதையை விட்டுவிட்டு உயிர் பிழைத்துப் போகும்படி சொல்லியனுப்பியதை நினைவிற் கொள்க. செருகளத்தில் கூட இராமன், ‘இன்று போய் நாளை வா!’ என்று கூறும் அறநெஞ்சினன் என்பதைப் புரிந்து கொண்டால், இராவணன் அழிவு இராமனால் ஏற்பட்டது என்பதைவிட, வீரத்தின் பேரால் பொய்மையான மானத்திற்கு அஞ்சி, இராவணன் கடைசிவரையில் போரிட்டு அழிந்தான் என்பதுதான் உண்மை.
இராமன் இளவரசன். விளையாடிவிட்டு அரண்மனைக்கு திரும்பும் பொழுது தேரூர்ந்து வருகின்றான். தேரோடும் வீதியின் இருமருங்கிலும் தன்னைக் காணக் கூடியிருக்கும் மக்களைக் கண்டவுடன் தேரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி நடந்து வந்து அணுகுகின்றான். மக்களிடம், ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? துன்பத் தொடக்கில்லாமல் வாழ்கின்றீர்களா? உங்களுடைய மனை வளமாக அமைந்திருக்கின்றதா? உங்களுடைய பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குகின்றார்களா? வலிமையுடையோராக வாழ்கின்றார்களா?’ என்றெல்லாம் கேட்டறியும் பாங்கினை நோக்கின்— கோசல நாட்டுப் பேரரசு, மக்கள் நல அரசாகவே விளங்கியது என்பது மட்டுமல்ல, இன்றைய மக்களாட்சி முறை அரசுகளை விடக் கூடச் சிறந்து விளங்கியமையை உய்த்துணர முடிகிறது.
எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிர
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்?’ எனவே!
(கம்பன்-311)
அயோத்திப் பேரரசு நடுவுநிலை பிறழ்ந்ததாக வரலாறு இல்லை. நல்ல அமைச்சர்கள், பேரரசனைச் சூழ்ந்து நன்னெறியில் அரசை உய்த்துச் செலுத்தினார்கள்.
நடுநிலை பிறழாத அரசு
அயோத்திப் பேரரசு வீரமும் வளமும் திருவும் பெற்று விளங்கினாலும் அதற்கு யாரோடும் பகை கொள்ளும் பழக்கமும் இல்லை; வழக்கமும் இல்லை.
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங் காது; தன்
தார் ஒடுங்கல் செல் லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண் டாகுமோ?
(கம்பன்-1419)
என்பதறிக. இங்ஙனம் அயோத்திப் பேரரசு பலவகையில் சிறந்து விளங்கினாலும் குற்றங்களே இல்லாத அரசாகவும் அது இல்லை என்பதையும் நாமறிதல் வேண்டும். கோசல நாட்டு மக்கள் அரசியலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை வரவேற்றனர் என்றும் தீயனவற்றைக் கண்டு அழவும் செய்தனர் என்றும் தெரிய வருகிறது. இராமன் முடிசூடிக் கொள்ளும் விழாவை நினைத்து மக்கள் மகிழ்ந்தனர். எதிர்பாராத நிலையில் இராமன் முடிசூடாமல் காடு செல்ல இருப்பதறிந்து அழுதனர். அதாவது உடலும் உயிரும் போல அரசியலில் மக்கள் பங்கேற்றமை பாராட்டுதலுக்குரிய செய்தி. பேரரசனுக்கு நல்ல அமைச்சர்கள் இருந்ததாகக் கம்பன் பாடுகின்றான். இராமனுக்கு முடிசூட்டும் விஷயத் தில் அமைச்சர்கள் கலந்து ஆலோசிக்கப் பெற்றனர். தசரதன் கோசல நாட்டைச் சேர்ந்த பல சிற்றரசர்கள் கூட்டமும் கூட்டி அவர்களுடைய இசைவும் பெற்றான். எனினும் ஒரு நாட்டின் முடிசூட்டு விழா அக்குடும்பத்தில் பிறந்த ஒருவனாகிய பரதன் இல்லாமலேயே ஏற்பாடு செய்யப் படுவது எந்த நியாயத்தைச் சேர்ந்தது? அது மட்டுமல்ல. கடைசியாக ‘நாட்டை ஆள்வது யார்?’ என்பது கைகேயியின் அந்தப்புரத்தில் முடிவு செய்யப்படுகிறது. இது விடை காண முடியாத வினாவாக இன்றும் விளங்குகிறது.
கைகேயி மனம் திரிந்தது ஏன்?
அரசியல், அழுக்காற்றுக்கும் காமத்துக்கும் பலியாகிறது. அது போலவே, ஆட்சிபுரியும் அதிகாரம் உடையவர்களிடத் செல்வம் இருக்கும்— மற்றவர்களுக்கு ஒன்றும் இல்லை என்ற கருத்தும் அறிவுலகுக்கு, நீதி சார்ந்த உலகத்திற்கு, ஏற்புடையதாக இல்லை. இராமனுக்கு முடிசூட்டுவதில் கைகேயிக்கு மறுப்பில்லாதது மட்டுமல்ல, விருப்பமும் கூட இருந்தது.
மனிதகுலத்திற்குத் தீமை செய்யும் தீயொழுக்கங்களில் அழுக்காறே தலைமை ஏற்கிறது. ‘அழுக்காறு என ஒரு பாவி’ என்று திருக்குறள் திட்டுகிறது. அழுக்காறு பொறாமை இவை ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்கள். அழுக்காறு, என்னும் உணர்ச்சி நல்ல மனிதனைக்கூட நச்சரவமாக மாற்றிவிடும். புனிதமானவையும் கூட அழுக்காற்றின் வசப்பட்டால் அழிந்துவிடும். இதற்குக் கைகேயி ஓர் எடுத்துக்காட்டு.
கைகேயி மிகவும் நல்லவள்; உயர்ந்த பண்பினள். ஆயினும் கூனி, கைகேயியின் நெஞ்சத்தில் ஏற்றிய அழுக்காறு, பகை உணர்ச்சி கூட உடனடியாகப் பலன் தரவில்லை— பலன் தராதது மட்டுமின்றி, கூனியின் மீது கைகேயி சினம் கொண்டு பேசிக் கூனியை ஒதுக்க முயற்சி செய்கிறாள். ஆனால், வஞ்சினம் கொண்ட கூனி பழிவாங்கும் எண்ணத்துடன் அவமானத்தையும் பொருட்படுத்தாமல் நின்று, கைகேயியின் மனத்தைத் திரிபுறச் செய்ய முயற்சி செய்கிறாள். கைகேயி, கூனியின் பேச்சக்குச் செவி கொடுக்காமல் விலகியிருந்தால் கைகேயி காப்பாற்றப்பட்டிருப்பாள். ஆயினும் இராமகாதை நீள வேண்டுமே! அதனால், கைகேயி தொடர்ந்து கூனியின் பேச்சைக் கேட்கிறாள். மெள்ள மெள்ள, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது. முதலில் கூனியிடம் கைகேயி, ‘இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?’ என்று வினவுகின்றாள். இடர் இல்லை என்பது கைகேயியின் துணிபு: முடிவு. இராமனை, தான் ஈன்றெடுத்த மகன் என்றே உரிமை கொண்டாடிய பால்மனம் உடைய கைகேயியின் உள்ளத்தில் சொட்டுச் சொட்டாக நஞ்சைக் கலக்கிறாள் கூனி. பின் மனம் திரிந்த கைகேயி இப்போது பரதனை என் மகன் என்று கூறுவதுடன் தன் மகன் பரதன் ஆட்சியைப் பெறக் கூனியிடமே ஆலோசனை கேட்கிறாள். திரிந்த சிந்தையளாகிய கைகேயி தசரதனிடம் வரம் கேட்டபொழுது, பரதனை ‘என் செல்வன்’ என்றும், இராமனைச் ‘சீதை கேள்வன்’ என்றும் குறிப்பிடுவதை ஓர்க. ‘இராமனைப் பயந்த எற்கு’ என்று உரிமையுடன் பேசிய கைகேயி, அழுக்காற்றின் வழிப்பட்டு இராமனைச் ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுவது, மூலம் படிமுறையில் மனந்திரிந்த போக்கினை அறிவது நல்லது.
கூனியின் சூழ்ச்சி தொடக்கத்தில் பலிக்கவில்லை. கடைசியில் கைகேயியின் மனம் மாறுகிறது. கைகேயியின் மன மாற்றத்துக்குக் கூனியின் திறமை காரணமல்ல; அயோத்தியில் இருந்த நிலவரம்—சமூக அமைப்பே காரணம் என்று தெரிய வருகிறது. இன்ப துன்ப உணர்வுகளுக்குத் தந்தி சேவகன் காரணம் ஆகான். தந்தியின் செய்தியே காரணமாக அமையும். கோசல நாட்டில் சமூக உத்தரவாதம் இல்லை. அதிகாரம், செல்வம் எல்லாம் பதவியில் உள்ளோரையும் அவர்களைச் சார்ந்தோரையுமே சென்றடைந்தன—மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற நிலவரத்தைக் கூனி கருவியாக்கிக் கொள்கிறாள். இராமனுக்கு முடி சூட்டிவிட்டால் அதன்வழி சொத்துக்களும் அதிகாரங்களும் கோசலைக்குப் போய்ச் சேர்ந்துவிடும். உன் மகன் பரதனுக்கு ஒன்று தேவையானால் நீ, கோசலை இடத்தில் கேட்டுத்தான் பெற வேண்டும். கேகய நாட்டு இளவரசியாகவும், தசரதச் சக்கரவர்த்தி மனைவியாகவும் திகழும் நீ, உனக்கொன்று தேவையானால் கோசலையைக் கேட்டுத்தான் பெறவேண்டும் என்று கூறுகிறாள். தற்சார்பும் பாதுகாப்பும் உத்தரவாதமும் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பார்த்த கைகேயி எதிர்காலத்தை நினைவிற் கொண்டு மனம் மாறுகிறாள்.
- புரியும் தன்மகன் அரசு எனின் பூதலம் எல்லாம்
- விரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமை ஆம்; என்றால்
- பரியும் நின்குலப் புதல்வற்கும் நினக்கும் இப்பார் மேல்
- உரியது என், அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்!
(கம்பன்-1477)
- சிந்தை என்செயத் திகைத்தனை? இனி, சில நாளில்
- தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க
- உந்தை, உன்ஐ, உன்கிளைஞர், மற்று உன்குலத்து உள்ளோர்
- வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்!
(கம்பன்-479)
என்னும் பாடல்களை எண்ணுக. ஆக, கம்பன் உடையாரும் இல்லை; இல்லாரும் இல்லை என்று கூறியது கோசல நாட்டின் அமைப்பு அல்ல; கம்பன் காண விரும்பிய இலட்சிய நாடு இது. மேலும், கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை என்றும் அல்லவா பாடுகிறான். ஆனால், இராமன் அயோத்தியை விட்டுப் புறப்படும் பொழுது பார்ப்பனன் ஒருவன் இரந்து வருகிற செய்தியைக் கம்பன் பாடுகின்றான்.
- பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
- அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து, அவன்
- கருத்தின் ஆசைக் கரை இன்மை கண்டு. இறை
- சிரித்த செய்கை நினைந்து, அழும் செய்கையாள்
(கம்பன்-5094)
என்ற பாடல் கவனத்திற்குரியது.
இதனால் கம்பன் ஒரு சிறந்த பொதுமை நலம் கெழுமிய நாட்டை இலட்சியமாகக் கொண்டிருந்தான் என்பது உணரத்தக்கது. இன்னமும் கம்பனின் இலட்சியம் நிறைவேறவில்லை. கம்பனின் ஆர்வலர்கள்-மனிதநேயம் உடையவர்கள்—கம்பனின் இலட்சியத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
கம்பன் கோசல நாட்டில், பெண்கள் மதிக்கும் சமூக அமைப்பு இருந்ததாகப் பாடுகிறான். ஆனால் மீட்சிப்படலத்தில் சீதையை இராமன் கண்டபடி திட்டுகிறான்.
- “ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம்: பாழ்பட
- மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மாநகர்
- ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
- மீண்டது என் நினைவு, எனை விரும்பும் என்பதோ?”
(கம்பன்-10013)
- “யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
- சேதியா நின்றது உன் ஒழுக்கச் செய்தியால்
- சாதியால்; அன்று எனின் தக்கது ஓர் நெறி
- போதியால் என்றனன்–புலவர் புந்தியான்”
(கம்பன்-10019)
என்றெல்லாம் இராமன் திட்டுகின்றான். இதில் என்ன நியாயம் இருக்கிறது? அறிஞர்களில் சிலர் சமாதானம் கூறுகின்றனர். நாடாளும் அரசனாக இருந்தால் சொல்லினால் சுடும் உரிமை உண்டா? நெருப்பினால் சுட்டதை வேண்டுமானால் நியாயப்படுத்தலாம். நாவினால் சுட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனால் பெண்களைப் பெருமைப்படுத்தும் ஒழுக்கம் அயோத்தியில் இருந்ததா என்பதே கேள்விக் குறியாகிவிட்டது.
ஆக, அயோத்திப் பேரரசு நிறைகளும் குறைகளும் உள்ள அரசாகவே விளங்கியுள்ளது என்று அறிகின்றோம்.
கோசல நாட்டில் நிலவிய பேரரசின் குறைபாடுகளினாலேயே இராமகாதை நீளுகிறது. கூனியின் துன்பம் மாற்றப்படாமை; தயரதனின் வரம், இராமனுடைய முடிசூட்டும் விழாவில் பரதனைப் புறக்கணித்தது ஆகியனவே இராமன் முடியிழந்தமைக்குக் காரணம். காட்டுக்குச் சென்றதற்குக் காரணம் கூனி, கருவி கைகேயி,
கோசல நாட்டு அரசில் குறைகள் காணப்படினும் கோசல நாட்டு அரசு அறம் சார்ந்த அரசு என்பதை மறக்க முடியாது. கம்பன் தன்னுடைய இலட்சிய நாடாகக் கோசலநாட்டைத்தான் பாடுகின்றான். கம்பனுக்குத் தன்னுடைய இலட்சிய அரசை அமைக்கும் ஆற்றல் அயோத்திப் பேரரசுக்கே உண்டு என்ற நம்பிக்கை போலும். ஆதலால், அயோத்திப் பேரரசில் கம்பன் அரசியலை முறையாகப் பாடுகின்றான். பாத்திரங்கள் பலவற்றையும்— அரசியல் சிந்தனையாளர்களையும்— அரசியல் பேசுபவர்களையும் படைத்துக் காட்டுகின்றான். கம்பனின் அரசியலறிவு அயோத்தியா காண்டத்தில் பூரணமாக வெளிப்படுகிறது. அயோத்தி அரசில் கம்பன் அரசியல் கோட்பாடுகளையும் வலியுறுத்துகிறான். கம்பன் தன் இராமகாதையில் ஒரு நல்ல ஆட்சியமைந்த நாட்டை உருவகம் செய்து காட்டுகிறான்.
மிதிலை அரசு
அடுத்துக் காணப்படும் அரசு மிதிலை அரசு. மிதிலை அரசைப் பற்றி விரிவான செய்திகள் இல்லை. மிதிலை அரசு புகழ்மிக்க அரசு. மிதிலை அரசன் சனகன் இராமகாதையில் பேசப்படுகிறான். சனகனை ‘ராஜரிஷி’ என்று கூறுகிறார்கள் சிறந்த அறிஞர்கள். சனகன் வரலாற்றிலும் புகழ்பெற்றவன். சனகனின் தலைநகரம் மிதிலை. செல்வச் செழிப்பின் காரணமாக மிதிலையின் தெருக்களில் ஆடவரும் மகளிரும் வெறுத்துப் போட்ட பொன்னணிகள் குவிந்து கிடந்தன. மிதிலை நகரத்து இளைஞர்கள் வெஞ்சினமே உருவு கொண்டனையர். ஆயினும் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் நெஞ்சினையும் பெற்றிருந்தனர். அகழியும் அரணும் ஓங்கி உயர்ந்த மாடங்களும் அமைந்தது மிதிலை என்று கூறுவதால், மிதிலை செல்வவளத்தில் சிறந்திருந்தது என்பது புலனாகிறது.
கங்கைக்கரை அரசு
இராமன், தந்தையின் ஆணைப்படி முடி துறந்து வனத்தில் பயணம் செய்யத் தொடங்கினான். இராமன் பயண வழியில் கங்கைக்கரையை அடைகிறான். கங்கைக்கரையின் வடகரையில் இரவு தங்குகின்றான். உடன் சீதையும் இலக்குமணனும் உள்ளனர். கங்கைக் கரையில் வேடுவகுல அரசு ஒன்று அமைந்திருந்தது. அதன் தலைவன் குகன். ஆயினும் படகுகளுக்கு உரிமை உடையவன். ஆழ நீர்க் கங்கை போல் நெடிய உருவினன்; நெடுந்தானை உடையவன்; முரட்டு வடிவினன்; சினம் இல்லாத போதும் அவன் நெருப்பைப் போன்ற கண்ணினன்; கையில் வில்லும் இடையில் வாளும் கொண்டவன். ‘குகன்’ என்றும் ‘கங்கை நாவாய்க்கு இறை’ என்றும் கம்பன் இவனைக் குறிப்பிடுகின்றான்.
இவன் இராமனைக் காணும் விரும்பினனாய்த் தேனும், மீனும் திருத்தி எடுத்துக் கொண்டான். இராமனைக் காண நெடுந்தானை சூழச் சென்றான். குகனுடைய சுற்றம் உடன் வந்தது. இராமன் இருக்கும் இடத்தை அண்மித்தவுடன் நெடுந்தானையையும் சுற்றத்தினையும் உடன் வராதவாறு நிற்கப் பணித்தான். அது மட்டுமல்ல, தன்னிடமிருந்த வில்லையும், வாளையும் ஒதுக்கிவிட்டுத் தனிமையில்—தனி மனிதனாகக் கருவிகள் சுமக்காத உடலையும் இராமன்பால் கொண்ட அன்பு நெஞ்சத்தினையும் சுமந்து கொண்டு, இராமன் இருக்கும் இடத்திற்குச் செல்கின்றான் குகன். போர்க் குகன், ஆயிரம் நாவாய்க்குரிய தலைவன். ஆயினும் அடக்கம், எளிமை, பத்திமைப் பண்பு மிகுந்தவன். இராமனைக் கண்ணினால் நோக்கிக் கனிந்தனன், மண்ணுறப் பணிந்து வணங்கினான். கையினால் வாய் புதைந்து நின்றான். இராமனை, தன் உயிர் தந்து காப்பேன் என்று உறுதி கூறினான்; ஆனால் இராமன் ‘நீ இந்த உலக முழுவதும் உடையாய்’ என்று சொல்லி ‘நான் என்றும் உனக்கு உரிமையுடையேன்’ என்று ஆறுதல் கூறினான். ஆக, குகன் நெடுந்தானையுடைய அரசனாக இருந்தும் அவனுடைய எளிமையை நோக்கும் போது, அமைதி தழுவிய அரசு கங்கைக்கரை அரசு என்று தெரிய வருகிறது.
- “புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
- இரவன் மாக்களின் பணி மொழி பயிற்றி”
என்ற சங்கப் பாடலுக்கு இலக்கணமாகக் குகன் அமைந்திருந்தான்.
போர்க் குகனின் படகுத் துணை கொண்டு இராமன் கங்கையைக் கடக்கின்றான். குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று நட்புரிமை கொண்டாடுகின்றான். இராமன் செல்லும் இடத்தில் தனது உயிர்மேவ, குகன் தங்கினான்.
அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்கிறாள். அந்தப் பழைய நிகழ்வுகளில் சீதையின் மனத்தில் பசுமையாக நின்றது, இராமன் குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று அழைத்துப் பாராட்டியது ஆகும். சீதை, இராமன் குகனைக் தோழமையாகக் கொண்ட நிகழ்ச்சியை,
- ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
- ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
- தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
- வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.
(கம்பன்-5091)
என்று நினைத்துப் பார்க்கிறாள்.
மனித வாழ்க்கையில் பெறும் பேறுகளில் சிறந்தது நட்பு. ‘செயற்கரிய யாவுள நட்பினது போல்’ என்று வள்ளுவம் கூறும். நட்பு, பழக்கத்தாலேயே வளரும்; பழக்கத்தாலேயே நிலைபெறும். ஆனால், குகன் போன்ற உத்தமர்களுக்கு நன்மை அடிப்படையில் நட்புத் தோன்றுகிறது. எல்லாம் வல்ல கடவுளே, நம்பியாரூரருடன் தோழமையுறவு கொண்டதை ஓர்க. நட்பில்லா வாழ்க்கை சுவையற்றதாகவும் இறுதிக் காலத்தில் பயனற்றதாகவும் போய்விடும். காட்டிற்கு வந்த இராமன் தோழமைத் தம்பியர் உறவுகளைத் திசைதோறும் வளர்த்துக் கொண்டு வலிமை பெற்றான்; அமைதி பெற்றான்; ஆறுதல் பெற்றான். குகனுக்கும் இராமனுக்கும் இடையில் வளர்ந்த நட்பு வழிப்பட்ட அன்பு இருதய சுத்தமானது; அர்ப்பணிப்புத் தன்மையுடையது. அவர்களுடைய நட்பு எல்லையற்றது—இன்றும் நட்புக்கு எடுத்துக்காட்டு குகன்தான்- இன்றுவரை வேறோர் உதாரணம்— சான்று கிடைக்கவில்லை.
கிட்கிந்தை அரசு
அடுத்து, இராமன் அடைந்த நாடு கிட்கிந்தை. இஃது ஒரு அரசு, வானர அரசு. வானர அரசு என்றாலும் ஒரு அரசுக்குரிய அமைப்பு, மந்திரி சபை முதலியன அமைந்திருந்ததாகக் கம்பன் கூறுகின்றான். சுக்கிரீவன் இரண்டு தடவை மந்திரி சபையைக் கூட்டி ஆலோசனை செய்ததாக இராமகாதை கூறுகிறது. முதல் மந்திரி சபைக் கூட்டம் இராம—இலக்குமணர்களைச் சந்திப்பது குறித்து நடந்தது. இக்கூட்டத்தில் இராம—இலக்குமணர்களைச் சந்திக்கும்படி சுக்கிரீவன் கேட்டுக் கொள்ளப்படுகிறான். இந்த மந்திரி சபை, சுக்கிரீவன் வாலியால் முடி பறிக்கப் பெற்று மலைக்குகைகளில் வாழ்ந்த போது கூடியது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
இலக்குவன் கிட்கிந்தைக்கு வந்தபொழுது, கிட்கிந்தை அரசிடம் வலிமை வாய்ந்த வானரப்படை இருந்தமையை இராமன் முன் அணிவகுத்து நிரூபணம் செய்கின்றான் சுக்கிரீவன். இராமனும் இலக்குமணனும் வானர சேனையின் அளவையும் ஆற்றலையும் கண்டு பிரமிக்கின்றனர் அல்லது அதிசயிக்கின்றனர்.
கம்பனின் படைப்பில் சுக்கிரீவன் நல்ல பாத்திரம். மிகவும் உத்தமமான பாத்திரம். வாலிக்கும் மாயாவி என்ற அவுணன் ஒருவனுக்கும் போர் மூண்டது. போரிட்டுக் கொண்டே மலையின் குகையில் நுழைந்தனர். பல காலம் வாலி திரும்பவில்லை. வாலியொடு பொருத்திய அவுணனும் வரவில்லை. சுக்கிரீவன், வாலி அந்தப் போரில் மாண்டிருப்பானோ என்று ஐயப்பட்டான். ‘நான் குகைக்குள் சென்று அண்ணனைத் தேடுவேன். அவன் இறந்து விட்டிருந்தால் மாயாவியைத் தேடிச் சென்று அழிப்பேன். அஃது இயலாவிடின் உயிர் விடுவேன்’ என்று குகைக்குள் செல்ல முயன்றான். ஆனால் மற்றவர்கள் அவனுக்குச் சமாதான்ம் கூறித் தடுத்து அரசாட்சியை ஏற்கச் செய்தனர். வாலியை மாயாவி கொன்றிருந்தால் அவன் குகைவாசல் வழி மேலேறி வருவான் என்று பயந்து மலைகளைக் கொண்டு குகை வாசலை அடைத்து வைத்தனர். எனவே, வாலி வரக்கூடாது என்றோ, வாலியின் ஆட்சியைத் தான் கவர்ந்து கொள்ள வேண்டும் என்றோ சுக்கிரீவன் எண்ணவில்லை. எதிர்பாராமல் வாலி மீண்டும் வந்தபோது, சுக்கிரீவன் ஆட்சி செய்வதைக் கண்டு சினம் கொண்டான்; சுக்கிரீவனை அடித்து விரட்டினான். சுக்கிரீவன் மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டான், எதிர்பாராமல் நடந்த சம்பவங்களைத் தேர்ந்து தெளிதல் வாலியிடத்தில் இல்லாதது ஒரு குறையே. குற்றமற்ற சுக்கிரீவன் துன்பத்திற்கு ஆளானான். பின் இராமனால் மீட்சி ஏற்பட்டது.
கிட்கிந்தையில் சமுதாய அமைப்பு இருந்ததா? குரங்கினம் ஆனாலும் கம்பன் மானுடம் போலவே அமைத்துப் பாடுகிறான்.
கிட்கிந்தா நாட்டில் சொல்லின் செல்வனாகிய அனுமன், சாம்பவான், அங்கதன் முதலிய சிறந்த பாத்திரங்களையும் அந்தப் பாத்திரங்களின் இயல்புகளையும் திறன்களையும் அறிந்து அனுபவிக்க முடிகிறது. ஆதலால், கிட்கிந்தையில் சமுதாய அமைப்பும் உயர்ந்து விளங்கியது என்று நம்பலாம்.
இராமன் கூறிய அரசியல் நெறி
கிட்கிந்தை அரசு எவ்வளவுதான் வலிமையுடையதாக இருந்தாலும் ஆங்கு உள்நாட்டுச் சண்டை நிலவியது; பதவிச் சண்டை நடந்தது. வாலி, சுக்கிரீவனிடமிருந்த அரசையும், சுக்கிரீவன் மனைவி அருமருந்தன்ன உருமையையும் கூடக் கவர்ந்து கொண்டான். பின் இராமனின் உதவியால் அனுமனின் வழிகாட்டுதலுக்கிசைய, வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராமன் முடி சூட்டுகிறான். முடி சூட்டியதோடன்றி ஒரு நல்ல அரசியல் அறிவுரையையும் வழங்குகின்றான்.
- “வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
- தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும்
- தூய்மைசால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி
- சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி.”
(கம்பர்-4122)
வாய்மையோடு பொருந்திய அறிவுரை தரும் அமைச்சர் பெருமக்களோடும் தீமை ஒன்றும் செய்யாத மறவரோடும் தூய்மையான உறவைப் பேணி வளர்த்துக் கொள்க என்கிறான் இராமன். அறிவு, கூர்மையாகும் பொழுது பொய்யும் தீமையும் நிகழ்தல் உண்டு. ஆதலால் ‘வாய்மையொடு பொருந்திய அறிவு’ என்றான் போலும்! அமைச்சர்களுடனும் மறவர்களுடனும் நல்ல உறவு பேணுதல் வேண்டும். அவர்களை விட்டு அகலவும் கூடாது. அதிகமாக அணுகவும் கூடாது என்பது அரசியல் நெறிமுறை.
பகைமை ஒரு தீய பண்பு. மனிதகுலம் தோன்றிய நாள் தொடங்கிப் பகை இருந்து கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டு வருகிறது. ஏன் பகைமை? சண்டை? பொருள் காரணமாகப் பகைமை வரும். பொதுவுடைமை வந்தால் பகைமை நீங்குமா? நீங்காது என்பது பொதுவுடைமை நாடுகள் தந்துள்ள படிப்பினை. அழுக்காறு அகன்றால் பகைமை வராது தவிர்க்கலாம். பழங்காலத்தில் மூன்றின் அடிப்படையில் பகைமை தோன்றியது. அவை முறையே பொன், பெண்; மண், அல்லது மண், அதிகாரம், பெண் என்றும் கூறலாம். இன்று இவற்றுடன் பதவியும் புகழும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. பகைமைக்கு மூல காரணம் அழுக்காறேயாம். இவ்வுலகில் எந்தக் காலத்திலும் பகைமை, பகைமையால் தணிந்ததாக வரலாறில்லை. பகைமை அன்பினாலே தணியும். இதுவே அறநெறி. பகைமை தீ என்றால், அத்தியைத் தணிக்கும் தண்ணீர் நட்பு.
பகை உடைய சிந்தையார்க்கும்
பயன்உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி
இன் உரை நல்கு
(கம்பன்-4123)
என்று இராமன் சுக்கிரீவனுக்கு அரசியல் நெறி உணர்த்தினான்.
‘தீயன சிந்தித்தல் ஆகாது. பகையே யாயினும் நீ திரும்ப இனியனவே கூறு. சிறியர் என்று கருதித் தீமை செய்யாதே, துன்புறுத்தாதே’ என்று கூறிய இராமன், தன் வாழ்க்கையையே முன்னுதாரணமாக எடுத்துக் கூறுகிறான். ‘நான் நெறிமுறை பிறழ்ந்து கூனிக்கு ஒரு தீமை செய்ததால், இன்று நாடு விட்டுக் காடு வந்து, அரசை இழந்து, மனைவியை இழந்து அல்லலுறுவதைச் சான்றாக எடுத்துக்கொள்’ என்று இராமன் கூறும் அறிவுரையை உன்னுக.
‘சிறியர் என்று இகழ்ந்து நோவு
செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை
இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய
கூனியால் குவவுத் தோளாய்
வெறியன எய்தி, நொய்தின்
வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்’
(கம்பன்-4126)
என்பான் இராமன்.
கூனிக்கு நான் இழைத்த தீமையால் கூனியின் பகைமை உணர்ச்சி நீண்டது. ஆயினும் காலம் வந்துழி அந்தச் சாதாரணக் கூனியும் கூடப் பகை முடித்துக் கொள்ள முடிந்தது. அதனாலேயே நான் நாடு இழந்தேன்; காடு வந்தேன்; மனைவியை இழந்தேன்!” என்று இராமன் கூறுவதால், கூனிக்கு இழைத்த தீமை அவன் நெஞ்சத்தை உறுத்திக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது. ஆனால், அந்த உறுத்தல் ஏன் செயலாக்கம் பெறவில்லை. காரணம் அவள் சிறியள் என்ற எண்ணம்தானே! இன்று நமது நாட்டு அரசியலில்—ஆட்சியில்— அல்லற்படுவோர் சிறியோர்தாம் என்பதை எவரேனும் மறுக்க இயலுமா? ஏன் நமது அன்றாட வாழ்விலும் கூடப் பெரியோர் பெரும்பிழை செய்தாலும் பார்த்தும் பாராமல் இருக்கிறோம். சிறியோர் ஒரு சின்னத் தவற்றைச் செய்தாலும் சினந்து வீழ்கின்றோம். இது தவறு என்று சுக்கிரீவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இராமன் வாயிலாகக் கம்பன் அறிவுறுத்துகின்றான்.
காமம் கொடிது. நாடாள்வோர் பெண்வழிச் சேறல் ஆகாது என்றார் திருவள்ளுவர். இங்கு இராமனும் ‘மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்’ (அரசியற் படலம்—12) என்று கூறுகிறான். இதற்கு வாலியும் தயரதனும் சான்றாவர் என்பது உணர்க. நமது தலைமுறையில்கூட இத்தகு நிகழ்வுகள் உண்டு. பரபரப்பான உலகம் ஆதலால் நினைவில் தங்கவில்லை. மக்கள் மறந்து போயினர். ‘தாய் ஒக்கும் அன்பில்’ என்று முன்கூறிய கம்பன் இங்கு இராமன் வாயிலாகத் தம்மைத் தாங்கி நிற்பாரைத் தாங்குதல் வேண்டும். அதாவது யாதொரு துன்பமும் வராது பாதுகாத்தல் வேண்டும், என்று அறிவுரை கூறுகின்றான். நாடாள்வோருக்கு அறமே உயிர்; உறுதி; ஆக்கம்; பயன். அறம் கெடுமாயின் நாடாள்வோர் வாழ்நாள் கெடும். அவர்களுக்கு அறமே கூற்று. கோவலனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாற்றை நினைவிற் கொள்க.
ஆக, கிட்கிந்தை அரசில் அரசின் வடிவம் இருந்தது, வலிமை இருந்தது. படை வலிமை இருந்தது. ஆயினும் உட் சண்டைகள் இருந்தன. அறம் மெலிந்து இருந்தது. இதற்குக் காரணமாகிய வாலியின் வதைக்குப்பின் கிட்கிந்தை அரசு நிமிர்ந்து நிற்கிறது. கிட்கிந்தை நாட்டுக்கு அரசன் சுக்கிரீவன். ஆனாலும் அந்நாட்டு அரசு நிலைபெற்று உயர அனுமனும் அங்கதனுமே கருவிகள் என்பது காவியம் உணர்த்தும் உண்மை.
இலங்கை அரசு
கடைசியாக நாம் காண இருப்பது இலங்கைப் பேரரசு. இலங்கைப் பேரரசு சிறந்த முறையில் இயங்கியது என்று கருதுவோரும் உண்டு. ‘இல்லை, இல்லை! இலங்கை அரசு அரக்கத் தன்மையுடையது’ என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியாயினும் இலங்கை அரசு, பேரரசு, வலிமை வாய்ந்த அரசு. இலங்கை அரசின் தலைநகர் அமைப்பை இராமனே கண்டு வியப்புற்றான் என்று கம்பன் பாடுவது, இலங்கையில் இருந்த அரசு பேரரசு என்பதை உறுதி செய்கிறது. அயோத்தியில் மக்கள் வாழ்ந்ததைப் போலவே இலங்கையிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் என்பதை,
‘களிக்கின்றார் அல்லால் கவல் கின்றார்
ஒருவரைக் காணேன்!’
(கம்பன்-4864)
என்று கம்பன் அனுமன் வாயிலாகக் கூறுவதை ஓர்க. இராவணனின் இலங்கை நகர அமைப்பு மாடமாளிகைகள், அகழிகள், அரண்கள் ஆகியன இலங்கைப் பேரரசு வன்மையில் அமைந்த ஒரு பேரரசு என்பதை உணர்த்து கின்றன. அது மட்டுமல்ல; இராவணனது வலிமை, தேவர்களை எல்லாம் ஏவல் கொண்டு விளங்கிய பேரரசு என்பது இராமகாதை வாயிலாக அறியக்கிடைக்கும் செய்தி.
இராவணன் செயல்முறைகள்
இங்ஙனம் சிறந்து விளங்கிய பேரரசுக்குக் கூற்றாக வந்தாள் சூர்ப்பணகை. சூர்ப்பபணகை இராமனை நெறிமுறை தவறி விரும்பி, மூக்கறுபட்டாள். மூக்கறுபட்ட வேதனையால் தனது மூக்கை அறுத்த இராமனைப் பழி வாங்கத் திட்டமிடுகிறாள். இராவணன் அவையில் அழுகிறாள். சூர்ப்பணகையின் நாடகத்திற்கு முதலில் இராவணன் உடன்படவில்லை. ‘நீ என்ன செய்தனை?’ என்றே இராவணன் கேட்கிறான். சூர்ப்பணகை சீதையைப் பற்றி வருணித்த செய்திகள் தொடக்கத்தில் இராவணனைக் கவர்ச்சிக்கவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் மெள்ள மெள்ளக் கரையுமல்லவா? இராவணன் மனம் திரிந்தது. சீதையைக் கவர்ந்துவரத் திட்டமிட்டு மாரீசனை மாயமானாக அனுப்பி, தான் சந்நியாசி வேடத்தில் சென்று, சீதையைக் தனிமைபடச் செய்து எடுத்து வருகிறான். சீதையைக் கைபடாமல் மண்ணோடு எடுத்து வந்ததாகக் கூறுவது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உத்தி. இராவணன் எளிதில் நெறிமுறை பிறழாதவன் என்று கம்பன் உணர்த்த ஆசைப்பட்டதின் விளைவு இந்த உத்தி! சீதையைக் கவர்ந்த இராவணன் தனது அரண்மனையிலோ அந்தப்புரத்திலோ அவளைத் தனிமைப்படுத்தி வைக்காமல், திறந்த வெளியில் அசோகவனத்தில் பல மகளிர் சூழக் காவலில் வைத்தது இராவணனுடைய நடையைப் பற்றிய ஆய்வுக்குரிய செய்தி.
சீதை உணர்த்திய அரசியல் நெறி
சீதையை இராவணன் வேண்டுகின்றான். அப்போது சீதை இராவணனுக்கு ஒரு அரசியல் நடைமுறையை உணர்த்துகின்றாள். ஆட்சியாளர்களை—அரசை—விமர்சனம் செய்பவர்களும் அரசின் தவறுகளைக் கடிந்து கண்டனம் செய்பவர்களும் இல்லாதுபோனால் அந்த அரசு அழியும் என்பது திருக்குறள் கருத்து.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்
கெடுப்பா ரிலானும் கெடும்’
என்பது திருக்குறள்.
சீதை இராவணனை நோக்கி,
“கடிக்கும் வல் அரவும் கேட்கும்
மந்திரம்; களிக்கின் றோயை
‘அடுக்கும், ஈ(து) அடாது’ என்று ஆன்ற
ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை; உள்ளார்;
எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர்; என்ற போது
முடிவு அன்றி முடிவது உண்டோ”
(கம்பன்-5204)
என்று சீதை, இராவணனுக்கு அரசியல் நெறிமுறையை உணர்த்தியதை ஓர்க, உணர்க.
தம்பியர் தகவுரை
இராவணனின் உரிமைச் சுற்றத்தினர் இராவணனின் செயலை அறமாகாது, தகாது என்றே கூறினார்கள். தூதுவனாக வந்த அனுமனை இராவணன் கொல்ல முயன்றபோது வீடணன் தலையிட்டுத் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றான்.
“அந்தணன், உலகம் மூன்றும்
ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன், அன்புக்கு ஆன்ற
தவசெறி உணர்ந்து, தக்கோய் !
இந்திரன் கருமம் ஆற்றும்
இறைவன் நீ; “இயம்பு தூது
வந்தனென்” என்ற பின்னும்
கோறியோ, மறைகள் வல்லோய்!”
(கம்பன் - 5916)
என்பது வீடணன் அறிவுரை.
இலங்கைக்கு அனுமன் வந்து போனபின், இராவணன் தனது மந்திரி சபையைக் கூட்டி ஆலோசனை செய்கின்றான். மந்திரிசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கும்பகருணன் இராவணன் செய்கையை மறுக்கின்றான்; கண்டிக்கின்றான்.
ஆக இல் பர தாரம்.அவை அம் சிறை அடைப் பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம், வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!
(கம்பன்-6122)
இப்பாடலில் கும்பகருணன் ‘குற்றமற்ற பிறருடைய மனைவியைச் சிறையில் வைப்பது நல்லரசுக்குரிய நடைமுறையன்று, காமமும் மானமும் ஓரிடத்தில் இருத்தல் இயலாது’ என்றெல்லாம் கடிந்து கூறுகின்றான். ஆதலால், திருக்குறள் அரசியலில் கூறுவதுபோல, மடவார் கற்புக்கு அரசு காவலாக விளங்க வேண்டும். அங்ஙனம் இன்றி ஆள்வோரே மற்றவர் மனைவியைச் சிறையில் வைப்பாராயின் அவ்வரசு எங்ஙனம் நல்லரசாக விளங்க முடியும்? என்பது கும்பகருணன் வினா.
வீடணன் இராவணனை எங்ங்னம் மதித்தான், உறவு கொண்டான் என்பதை,
“எந்தை நீ; யாயும் நீ எம்முன் நீ; தவ
வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ;
இந்திரப் பெரும் பதம் இழக்கின் றாய்!” என
நொந்தனென் ஆதலில் நுவல்லது ஆயினேன்.
(கம்பன்-6143)
என்ற பாடலால் அறியலாம். இவ்வளவு பெருமதிப்பை வீடணன் இராவணனிடம் கொண்டிருந்தாலும் இராவணன் சீதையைக் கவர்ந்த செய்கையைக் கண்டிக்கத் தவறவில்லை. அது மட்டுமன்று. இராவணனையே துறந்து விடுகின்றான். கும்பகருணன் செஞ்சோற்றுக் கடன் அடிப்படையில் பொருகளத்தில் போரிட்டு உயிரிழக்கிறான்.
இந்திரசித்து அறிவுரை
இராவணனை அவனுடைய மகன் இந்திரசித்துவும் இடித்துக் கூறுகின்றான். ஆனால், இராவணன்தான் திருந்தவில்லை. இராவணனுடைய உரிமைச் சுற்றத்தினராகிய கும்பகருணன், இந்திரசித்து ஆகியோர் இராவணன் சீதையைச் சிறைப்படுத்தியிருப்பது தவறு மட்டுமன்று, அறநெறி பிறழ்ந்த பாவமும் ஆகும் என்று உணர்ந்திருந்தனர், இராவணனுக்கும் உணர்த்தினர். ஆனால், இராவணன் திருந்தியபாடில்லை. இவர்களுக்கு உறவா? அறமா? கடமையா? என்ற போராட்டம். கடைசியில் உறவு நலமே வெற்றி பெற்றது. உறவுக்காகப் போராடி இராவணனுக்காகச் செருகளத்தில் மரணத்தைத் தழுவ அனைவரும் ஆயத்தமாயினர். இராவணன் சுத்த வீரன். அதனால், அடைக்கலம் புக நாணப்படுகிறான். இராமனின் பகையை நல்ல பகை என்று பாராட்டுகின்றான்.
‘என்னையே நோக்கியான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்’ என்கிறான்; தனித்து நின்று போராடுகின்றான்.
இராவணன் மரணம் உறுதியான பிறகும் கூட, அவன் நெறிமுறை பிறழ்ந்த காமத்தின் வழி செல்லாமல் செருகளத்தில் போரிட்டு மாயவே விரும்பினான். இறுதி நாள் செருகளத்துக்குச் செல்லும்போது, இன்று போர் முடியும். போரின் முடிவில் இராமனின் மனைவி சீதை வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவாள் அல்லது என் மனைவி மண்டோதரி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவாள் என்று கூறிவிட்டுப் போர்க்களத்திற்குப் புறப்படுகின்றான்.
“மன்றல் அம் குழல் சனகிதன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்” என்றான்.
(கம்பன்-9667)
இறுதிக் காலத்தில் இராமனின் மனைவி சீதை என்பதை இராவணன் உறுதிப்படுத்துகின்றான். இராவணன் சீதையை வலிய அணுகாததற்குக் காரணம், விரும்பாத ஒரு பெண்ணை இராவணன் தீண்டுவானாகில் அவனுடைய தலை வெடிக்கும் என்ற சாபம் உண்டு என்று திரிசடை வாயிலாகக் கூறப்படுகிறது. மரணம் உறுதியான நிலையில், காமவெறியனாக இராவணன் இருப்பின் சாபத்தைப் பற்றியா யோசித்திருப்பான்? அது அன்று. இராவணன் முற்றிலும் கெட்டவன் அல்லன். சராசரி மனிதனுக்குள்ள பலவீனம் இருந்தது உண்மையாயினும், அரசியல் நெறி பிறழ்ந்து சீதையைத் துன்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ இராவணன் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆக, ஒரு பெரிய இலங்கைப் பேரரசு ஒரு சிறு தீப்பொறியால் அழிந்தது. பிறர் மனை நயந்த தீமையால் வன்மை பொருந்திய பேரரசு அழிந்தது. இலங்கைப் பேரரசு வன்மை சார்ந்த பேரரசு, வன்மையில் முடிந்த பேரரசு, அயோத்திப் பேரரசு அறம் சார்ந்த பேரரசு, அது வெற்றி பெற்றது அறநெறியாலேயே!
கம்பனின் இராமகாதை பல்வேறு அரசுகளை நமக்கு அறிமுகப்படுத்தியது. அவற்றில் இலங்கைப் பேரரசு திருந்தாமல், வல்லாண்மை மீதிருந்த நம்பிக்கையால் அழிந்தது. கிட்கிந்தை அரசு திருந்தி வரலாற்றிலும் காவியத்திலும் இடம் பிடித்துக் கொண்டது. கங்கைக் கரையரசும், மிதிலை அரசும் விவாதங்களைக் கடந்த அரசுகளாக விளங்கின. அயோத்திப் பேரரசு, குறைகளும் நிறைகளும் உடைய பேரரசாக விளங்கி, எந்தச் சூழ்நிலையிலும் அறம் சார்ந்த நெறிமுறைகளையே பின்பற்றியதால் வெற்றி பெற்றது. நம்முடைய காலத்திலும் கம்பன் அடிச்சுவட்டில் அறஞ்சார்ந்த அரசு காண்போமாக.