பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்/மண்ணின் மாண்பு
“உலகம் வேறு, நீ வேறு அல்ல;–
உள்ளது ஒன்றே.”
–அத்வைதம்
அமலாபுரம் ஒர் அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். தென்னை, மா, பலா போன்ற மரங் களினால் அடர்ந்து செழித்து வளர்ந்த தோட்டம் துரவுகளுடன் கூடிய இயற்கை வளம் பொருந்திய கிராமம்.
ஊரைச் சுற்றிலும் வேலி போட்டாற் போன்று அழகிய பாலாறு வளைத்து, நெளிந்து சென்று கொண்டிருந்தது.
நாகரிகத்தின் வாடை படியாத அந்தக் கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம். சிலர் தச்சுத் தொழில், கட்டிட வேலை போன்ற தொழில்களும் செய்து வந்தனர்.
அந்த ஊரிலுள்ள இளஞ்சிறுவர்களுக்கு கடிதம் படிக்கவும், கையெழுத்துப் போடவும் தெரிந்தால் போதுமென்கிற அளவில் கிராமத்து மத்தியில் ஓர் ஆரம்பப் பாடசாலை இருந்தது. ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன் அதை நிர்வகித்து வந்தார்.
அவருடைய கண்டிப்புக்குப் பயந்தோ-அல்லது பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணந்தடனோ, பிள்ளைகள் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல மாட்டார்கள். கல்வியின் பெருமையையும்; படிப்பின் அவசியத்தையும் புரிந்து கொள்ளாத அவர்களில் பலர் ஆடு, மாடு மேய்க்கவும், வயல்களில் பெற்றோருக்கு உதவவும், மாலை நேரங்களில் விளையாடவும் சென்று விடுவார்கள்.
ஆனால், அவர்கள் அனைவரும் பொழுது சாய்ந்ததும் ஊரின் கோடியிலுள்ள பாழடைந்த மண்டபத்தில் ஒன்று கூடத் தவற மாட்டார்கள்.
ஒவ்வொருவரும், தங்கள் தங்களது தாத்தா, பாட்டி கூறிய விக்கிரவாதித்தன் கதை; வேதாளம் சொன்னகதை நல்லதங்காள் கதை; மதன காமராசன் கதை ஆகியவற்றிற்கு கண், காது மூக்கு வைத்து தங்கள் மனம் போனபடிக் கூறுவார்கள். இப்படிக் கதை கேட்பதிலும்; பிறருக்குக் கூறுவதிலும் அந்தச் சிறுவர்களுக்கு அலாதி குஷி.
ஆனால்–
இவர்களினின்றும் முற்றிலும் மாறு பட்டவனாக அழகப்பன் விளங்கினான்.
அவன் அந்தக் கிராமத்திற்கு வந்து ஆறு ஏழு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள்ளாகவே அவனுக்கு அந்தக் கிராமத்து சூழ்நிலை அலுத்து விட்டது.
அழகப்பனுடைய அப்பா சென்னையில் ஆயுள் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். பெற்றோருக்கு அழகப்பன் ஒரே மகன். மிகவும் செல்லமாக வளர்த்த தன் மகனை, உயர்ந்த் படிப்பெல்லாம் படிக்க வைத்து: பெரிய ஆபீசராக ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது அழகப்பனின் தந்தையின் மிகப் பெரிய ஆசை.
ஆங்கிலம் பள்ளியில் சேர்த்துப் படிக்க் வைத் தார் அழகப்பனும்-எல். கே. ஜி. யு. கே ஜி என்று படிப்படியாக ஐந்தாவது படிவம் - வரை-ஒரு வகுப்பிலும் தோற்காமல் நன்றாகவே படித்து வகது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.
இந்த சமயத்தில் அழகப்பனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனை ஒன்று நிகழ்ந்தது.
உறவினர் ஒருவரது வீட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில் ஒரு விபத்திற்குள்ளாகி அழகப்பனின் தாயும் தந்தையும் அதே இடத்தில் இறந்து விட்டனர்.
பள்ளியிவிருந்து வீடு திரும்பிய அழகப்பன் வீடு நிறையக் கூட்டம் கூடி இருப்பதையும்; பெற்றோர் இருவரும் இறந்து கிடப்பதையும் கண்டு கதறி அழுதான்.
அதன் பிறகு காரியங்கள் வேகமாக நடந்தேறின. சில நாட்கள் சென்னையில் இருந்து அவனது தந்தைக்குச் சேர வேண்டிய கம்பெனி பணத்தையெல்லாம் அவனது மாமாப் பெற்றுக் கொண்டு, அழகப்பனையும் தன்னோடு கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டார்.
பெற்றோரை இளமையில் இழந்த துயரம் அவன் உள்ளத்தில் ஆறாத வடுவாக ஒரு ஓரத்தில் இருந்தாலும்; தனது பள்ளிப் படிப்பு முடங்கி விட்டது தான் அவன் உள்ளத்தில் பெரும் துயரமாக மூண்டு இருந்தது.
ஆரம்பத்தில் அந்தக் கிராமத்து சூழ்நிலையும்; அவனை ஒத்த பையன்களுடன் ஓடி ஆடி விளையாடுவதிலும் சிறிது இன்பமிருப்பதாகத் தோன்றினாலும்; அவன் மனம் எல்லாம் சென்னையில் அவன் படித்த பள்ளியையும்; படிப்பில் சிறந்து விளங்கிய தன் நண்பர்களையுமே எண்ணி ஏங்கியது.
அழகப்பனின் மாமாவோ; அவனது தந்தை மூலம் வந்த ஏராளமான பணத்தையெல்லாம், அழகப்பனுக்காக நிலம், வீடு, என்று வாங்கிச் சொத்து சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரே தவிர; அவனது கல்வியைப் பற்றிக் கவலைப்படவில்லை. சமயம் வாய்த்தபோதெல்லாம் அவனும், தன்னுடைய பள்ளிப் படிப்பிற்காக மாமாவை விடாமல் கேட்டுக் கொண்டேதான் இருந்தான்.
அன்றும் வழக்கம் போல அவனுடைய மாமா வயலுக்குப் போகும்போது நினைவு படுத்தினான். அதற்கு அவர்-
"எனக்கும் உன் படிப்பு மேலே அக்கரை இருக்கு அழகப்பா. கொஞ்சம் பொறுமையாயிரு. உன் ஒண்னு விட்ட பெரியப்பா பட்டணத்திலே தான் இருக்கார். லெட்டர் எழுதியிருக்கேன் கவலைப்படாமே இரு," என்று ஆறுதல் கூறிச் சென்று விட்டார்.
அழகப்பனும் பட்டணத்திலுள்ள பெரியப்பா எப்படி இருப்பார்; என்ன பதில் எழுதுவார்? என்று யோசித்துக் கொண்டே பொழுதைக் கழித்தான்.
அன்று மாலை, வழக்கம் போல அவனுடைய நண்பர்கள் அழகப்பனையும் கதை கேட்க மண்டபத்திற்கு அழைத்தார்கள்.
மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு, இருட்டுகிறவரை அந்தச் சிறுவர்கள் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டுவந்து சொல்கிற, ராஜாராணிக் கதைகளையும், புராணக் கதைகளையும், மந்திரவாதிக் கதைகளையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க அழகப்பனுக்குப் பிடிக்காது.
திடீரென்று பாதியில் எழுந்து வந்துவிடுவான். ஆயினும், அதைப் பற்றி எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாமல்-ஆசையோடு அழைக்கும் அந்தக் கிராமத்துச் சிறுவர்களின் ஆசையை அழகப்பனால் புறக்கணிக்க முடியவில்லை.
அழகப்பன் வர ஒப்புக் கொண்டதில் அந்தச் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஏனெனில் அழகப்பன், வாழ்க்கையோடு ஒட்டிய மனிதர்களின் வீர சாகலங்களையும், சரித்திரக் கதைகளையும் கூறுவான்.
பிருதிவிராஜன் சம்யுக்தையைத் தூக்கிச் சென்றதையும்; ராஜாதேசிங்கு வெண்குதிரையை அடக்கி அதன் மீது சவாரி செய்து வெற்றி வாகை சூடியதையும் அழகப்பன் விவரிக்கும் போது அந்தச் சிறுவர்கள் வியந்து போய் கேட்பார்கள். எனவே-மகிழ்ச்சியோடு அவர்கள் கை தட்டிக் கொண்டும்; விசிலடித்துக் கொண்டும் ஆரவாரமாக எல்லோரும் மண்டபத்தை அடைந்தனர்.
வேதாளம் மீண்டும் முறுங்கை மரத்தில் ஏறிக் கொண்டு விட்டதை முருகப்பன் கூறி முடிக்கும் போது வானம் பெரிதாக இருண்டு மழைவரும் போல் இருந்தது.
மாடசாமி, பத்ரகாளியின் கதையை உணர்ச்சி வசப்பட்டுக் கூறிக் கொண்டிருந்தபோது, வானம் 'சடசட' வென்று சப்தமெழுப்பிக் கொண்டு 'சோ' வென்று பெருமழை கொட்டத் துவங்கியது.
இடியும், மின்னலும் மாறிமாறிப் பளிச்சிட்டன. எல்லோரும் மண்டபத்தின் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டனர். மழைநீர் சிற்றோடை போல், மண்டபத்தைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
பயத்தில் மாடசாமி பத்ரகாளியின் கதையைப் பாதியில் நிறுத்தி விட்டான். அப்போது 'பளிர்' என்று ஒரு மின்னல் கண்ணைப் பறிப்பது போல் பிரகாசித்துக் கொண்டு பூமியை நோக்கி இறங்குவது போலிருந்தது.
மறுநிமிஷம்-
அமலாபுரத்துச் சிறுவர்கள் இருந்த மண்டபத்தின் மத்தியில்; அழகே உருவான ஐந்து சிறுவர்கள் வந்து நின்றார்கள்.
தலையில் கிரீடமும்; தங்கத்தை உருக்கி வார்த்தாற் போன்று பளபளக்கும் உடைகளையும் கோண்டிருந்த அவர்கள் பார்ப்பதற்கு அரச குமாரர்கள் போல் கம்பீரமாக இருந்தனர். அவர்களது கழுத்துக்களில் தவழ்ந்து கொண்டிருந்த விலையுயர்ந்த முத்து மாலைகள், பார்ப்பவரது கண்களைக் கூசச் செய்தன.
நிமிஷநேரத்தில் நிகழ்ந்த இந்த அதிசயத்தைக் கண்ட கிராமத்துச் சிறுவர்கள் பயந்து நடுங்கிப் போய் அழ ஆரம்பித்து விட்டனர். அவர்கள் தினம் கூறுகிற கதைகளில் வருவது போன்ற ஏதோ அரக்கர்கள் தான் இப்படி மாறு வேஷத்தில் வந்து தங்களைத் தூக்கிச் செல்ல வந்திருப்பதாக எண்ணிக் கொண்டு நடுங்கினர்.
இதைக் கண்டு ஆகாயத்திலிருந்து வந்த சிறுவர்களில் ஒருவன், "நண்பர்களே; எங்களைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்; நாங்கள் உங்களுடன் நட்புக் கொண்டு; விளையாட ஆசைப்பட்டே இங்கே வந்திருக்கிறோம்," என்று கூறினான்.
இதைக் கேட்டதும் அனைவருடைய பயமும் நொடிப் பொழுதில் பறந்து போய் விட்டது. உடனே வீரய்யன் "அப்படியானால் நீங்கள் யார்? எங்கிருந்து இப்படித் திடீரென்று வருகிறீர்கள். இப்படிக் கொட்டுகிற மழையில் வந்தும் கூட உங்கள் ஆடைகளில் துளியும் ஈரம் இல்லை; புத்தம் புதியதாய் ஜொலிக்கிறதே" என்று கேட்டான்.
இதைக் கேட்டதும் அந்தப் புதியவர்கள் ஐவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். அப்போது அழகப்பள் அவர்களை நோக்கி, "நீங்கள் யார் என்று இன்னும் சொல்ல வில்லையே? உங்களைப் போலவே-நானும், எனது இந்த நண்பர்களும்கூட உங்களுடன் நட்புக் கொள்ள மிகவும் ஆசைப்படுகிறோம்? நீங்கள் யாரென்று நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?" என்று அன்புடன் கேட்டான்.
உடனே அந்தப் புதியவர்களில் ஒருவன், "நண்பர்களே, நாங்கள் உங்களைப் போல இந்தப் பாரத மண்ணில் பிறக்கும் பாக்கியம் பெற்றவர்கள் அல்ல. விண்ணுலக வாசிகள், என் பெயர் உலகநாதன் இந்த பூமண்டலத்தைப் படைத்து ஆட்சி புரியும் பிரமனின் முழுப்பொறுப்பையும் ஏற்கும் பூமித்தாயின் மகன் நான்.
இதோ என் அருகில் இருக்கும் சகோதரனின் பெயர் கங்காதரன். வருண தேவனுடைய குமாரன். மூன்றாவன் பெயர் அக்கினி புத்திரன். அக்கினி தேவனின் திருக்குமாரன், நான்காமவன் பெயர் தென்றலழகன். வாயு தேவனின் மகன். ஐந்தாவது சகோதரனின் பெயர் மேகநாதன். ஆகாயத்திற்கு அதிபதியான மகாவிஷ்ணுவின் மைந்தன். இதுதான் எங்கள் ஐந்து பேருடைய பெயர்களும், பெற்றோரின் வரலாறுகளும்” என்று கூறினான்.
உடனே கூடியிருந்த சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க "அப்படியானால் நீங்கள் எல்லாம் தேவகுமாரர்களா?” என்று வியப்புடன் கேட்டனர்.
"ஆமாம்," என்று தலையசைத்தனர் ஐவரும்.
உடனே அழகப்பன் மிகவும் தயங்கியபடி. அவர்களை நோக்கி, “புதிதாக எங்களுடன் உறவு கொள்ள ஆசைப்பட்டு வந்துள்ள என் இனிய நண்பர்களே; நான் கூறப் போவதைக் கேட்டு கோபப்படவோ; எங்களைப் பற்றித் தவறாக எண்ணவோ கூடாது. அதற்கு உறுதி கூறினால், என் மனதிலுள்ள ஒரு சந்தேகத்தைக் கூறுவேன்” என்றான்.
உடனே அந்த ஐவரும் ஒருமித்த குரலில், "நண்பனே, உன் மனதிலுள்ள சந்தேகம் எது வானாலும் தாராளமாய்க் கேட்கலாம்; அவற்றிற்கு விடை கூற நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்" என்றனர்.
உடனே அழகப்பன் தயங்காமல், உங்களை நாங்கள் எப்படி நம்புவது?" என்று கேட்டான்.
உடனே உலக நாதன், “எங்கள் கழுத்திலிருக்கும் மாலைகள் வாடாதிருப்பதால்; கொட்டுகிற இந்த மழை நீர் எங்களைத் தீண்டாதிருப்பதால்; எங்கள் இமைகள் இணையாமல் இருப்பதிலிருந்தெல்லாம் எங்களைத் தேவர்கள் என நீங்கள் கண்டு கொள்ளலாமே” என்றான்.
உடனே அழகப்பன், "இதையெல்லாம் பட்டணத்தில் மாஜிக் நிபுணர்கள் செய்து கூட நான் பார்த்திருக்கிறேன்” என்றான்.
உடனே, "அப்படியா?" என்று கேட்ட அக்கினி புத்திரன் தன் வலக்கரத்தை நீட்டினான். அங்கே- கொட்டுகிற மழையின் நடுவிலிருந்த ஒரு மரம் 'குப்'பென்று பற்றி எரிந்தது.
வாயு குமாரனான தென்றலழகன் தன் ஒரு கரத்தை நீட்டினான். பற்றி எரியும் மரத்தைச் சுற்றிலும் பெரும் சூறாவளி ஒன்று எழுந்தது. அந்தப் பேய்க் காற்றினால் ஒன்றனபின் ஒன்றாய்ப் பல மரங்கள் பற்றி எரியத் துவங்கின.
அதிலிருந்து பயங்கரமாகப் பொங்கி எழும் கரும்புகைகளை நோக்கி மேகநாதன் கையை உயர்த்தினான். சூழ்ந்திருந்த அத்தனை புகை மண்டலமும் சுழன்று சுழன்று ஒரு பந்து உருவம் பெற்று புகை சூழ்ந்த தீப்பந்தாக ஆகாயத்தில் அந்தரத்தில் எரிந்து கொண்டிருந்தது.
அருகிலிருந்த கங்காதரன் தன் வலக்கரத்தை உயர்த்தினான். பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்திற்கு மேல் அருவியாக மழை கொட்டி அந்தத் தீயை அணைத்தது.
அந்தப் பிராந்தியம் முழுவதும் சிதறியிருந்த நீரும், நெருப்புத்துண்டுகளும், கரிக்கட்டிகளும், மழை நீரும் பூமித்தாயின் மடியில் சரணடைந்திருந்தன. அவற்றை முக மலர்ச்சியுடன் நோக்கிய உலகநாதன் தன் வலக்கரத்தை உயர்த்தினான். அனைத்தும் மாயமாய் மண்ணுக்கடியில் சென்று, முன்பு போல் அங்கே, மரமும், செடி கொடிகளும் எழும்பி நின்றன.
இவற்றையெல்லாம் பிரமிப்போடு பார்த்துக் கொணடிருந்த கிராமத்துச் சிறுவர்கள் தங்களையுமறியாமல், “எங்களை மன்னித்து விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள்,” என்று பயந்து போய் அவர்களின் கால்களில் விழுந்தனர். அழகப்பன் மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
அவர்களை வாரித் தழுவியபடி தூக்கி நிறுத் திய தேவ குமாரர்கள், "நட்புத் தேடி வந்த எங்களிடம் நீங்கள் இப்படி நடந்து கொண்டு எங்கள் மனதை வருத்தலாமா? எழுந்திருங்கள் நாம் அனைவருமே சகோதரர்கள். இனிய நண்பர்கள்" என்றனர். அப்போது உலகநாதன் அருகிலிருந்த அழகப்பனிடம், "உங்கள் பட்டணத்து மாஜிக்காரன் இப்படியெல்லாம் கூடச் செய்து காட்டுவானா?” என்று கேட்டான்,
உடனே அழகப்பன், உலகநாதனை நோக்கி, "என்னை மன்னித்து விடு நண்பா. இந்தக் கிராமத்துச் சிறுவர்களைவிட நான் சற்று அதிகமாக-ஐந்தாம் வகுப்புவரைப் படித்திருக்கிறேன் என்கிற கர்வத்தினால்- அறியாமல் அப்படிக் கூறிவிட்டேன்." என்றான் குரல் தழுதழுக்க.
உடனே உலகநாதன், "நண்பா! கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு" என்று மாபெரும மேதைகள் எல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
உனது கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியே, நான் கற்றது போதாது; இன்னும் கற்க வேண்டியவை எண்ணிலடங்காது" என்று கூறாமல் கூறுவதுபோல் எப்போதும் தன் கரத்தில் புத்தகத்தை ஏந்திக் கொண்டிருப்பதை நீ பார்த்ததில்லையா?
இதோ உங்கள் முன்னால் நிற்கும் (பிருத்வி) நிலம்; (அப்பு)- நீர் (தேயு)- நெருப்பு; (வாயு)-காற்று; (ஆகாயம்)- இந்த பரத்த அண்டம், ஆகிய எங்கள் ஐந்து பேருடைய அருளின்றி இந்த உலகில் ஒரு புல்பூண்டுகூட முளைக்க முடியாது என்னும் போது, மானிடர்களாகிய நீங்கள் உயிர் வாழ்வது ஏது?
அப்படியிருந்தும் நாங்கள் எங்களுடைய சர்வ வலலமைகளையும் எண்ணிக் கர்வப்படாமல்; ஒற்றுமையாய்-நாங்கள் ஐவரும் இணைந்தே உலகையும்-உலகத்து மக்களாகிய உங்களையும் காக்கிறோம்.
அழகப்பா-நாளை நீ எவ்வளவு பெரிய கல்வி கற்று; எத்தனை பெரிய பட்டங்கள் வாங்கி னாலும்; அவை அனைத்திலும் நாங்கள் சம்பந்தப்பட்டிருப்போம். இந்த உலகமே எங்களைச் சார்ந்து சுழல்கிறது என்கிறபோது; இதனிலும் பெரியதை நீ எங்கு சென்று காண்பாய்?
அழகப்பா, உங்களிடமிருந்து மண்ணுலக கதைகளைக் கேட்டு அறியும் ஆவலில் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் அதற்கு முன் நாங்கள் எங்கள் ஒவ்வொருவருடைய கதையையும் கூறுகிறோம்.
அற்புதங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த எங்களின் கதைகளைக் கேட்டால் நீங்கள் பிரமித்துப் போவீர்கள். எங்கள் வலிமையைக் கண்டு மயிர்க் கூச்செறிவீர்கள். மிகச் சிறந்த வாழ்க்கைக் கல்வியின் அடிப்படையே எங்கள் கதை.
இனிய நண்பர்களே! இன்று நேரமாகி விட்டது. வீட்டில் உங்கள் பெற்றோர் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மழைகூட விட்டு விட்டது. இன்று போய் நாளை வாருங்கள். நாங்களும் நாளை இதே இடத்திற்கு இதே நேரத்திற்கு வருகிறோம். நாளை, உங்களுக்கு முதலில் உலக நாதன் தன் கதையைக் கூறுவான். மகிழ்ச்சி தானே,” என்று மேகநாதன் கேட்டான்.
அனைவரும் ஒருமித்த குரலில் “மகிழ்ச்சி மகிழ்ச்சி” என்று கத்தினார்கள்.
"நாளை உங்கள் ஐந்து பேரையும் வரவேற்க நாங்கள் முன்னமேயே வந்து விடுவோம், தவறாமல் வரவேண்டும். ஏமாற்றி விடாதீர்கள் என் இனிய நண்பர்களே” என்று அழகப்பன் வேண்டுகோள் விடுத்தான்.
"தேவகுமாரர்கள் பொய்யுரைக்க மாட்டார்கள். தவறாமல் வருகிறோம்” என்று அனைவரும் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டனர்.
மறுவினாடி- அவர்கள் ஐவரையும் அந்த மண்டலத்தில் மட்டுமல்ல; கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்குமே காணோம். மாயமாய் மறைந்து விட்டனர்.
வழிமுழுவதும் அந்தச் சிறுவர்கள் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றியே பேசிக் கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தனர்.