உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

189


கட்டுரைகள் எழுந்தன. டிரைடனை இலக்கியக் கட்டுரைகட்கு ஒரு வகையான புது மெருகேற்றினார். இந்நாளைய ஆங்கிலக் கட்டுரைகள் போல அவருடைய கட்டுரைகளில் புதுமையும் எழிலும் விளங்கின. நடையழகும், கருத்தாழமும், தெளிவும் அவருடைய கட்டுரைகளை அழகு செய்தன டிரைடனை போலவே முயன்று, ஜான் லாக் என்னும் பேரறிஞரும் கட்டுரையெழுதி வெளியிட்டார். எனினும் டிரைடனுடைய நடையழகையும் இலக்கியச் சுவையையும் இவருடைய கட்டுரைகளில் காண முடியவில்லை.

ஆங்கில இலக்கியத்தின் பொற்காலம் என்று போற்றப்படுவது பதினெட்டாம் நூற்றாண்டில்தான் ரிச்சர்டு ஸ்டீல், அடிசன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் செய்தித்தாள்கள் மூலம் ஆங்கிலத்திற்குத் தொண்டு செய்தார்கள். இவர்களின் இலக்கிய கட்டுரைகள் வாழ்க்கையைத் தழுவியிருந்தன. சமுதாயத்திலுள்ள சீர்கேடுகளையும் மக்களுடைய குறைகளையும் இவர்கள் எடுத்துக்காட்டி நன்றாகக் கண்டித்தார்கள். சிறப்பாக அடிசனுடைய கட்டுரைகள் அனைத்தும் தெள்ளிய நடையிலும் அறிவை வளர்க்கும் போக்கிலும் மனத்தைப் புண்படுத்தாமல் பரிகாசமாகப் புத்தி புகட்டும் முறையிலும் சிறந்து விளங்கின.படிப்போர்க்கு இன்பத்தை யூட்டுவதே கட்டுரையாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டுமென்பது அடிசனுடைய எண்ணம். இதனைப் பின்பற்றியே பிற்கால ஆசிரியர்கள் கட்டுரையெழுதினார்கள்.

அடிசனைப் பின்பற்றி சாமுவேல் ஜான்சன் உயர்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். எனினும் அடிசனுடைய எளிய நடையைக் கையாள இவரால் இயலவில்லை. இவருடைய நடை கடினமானது; பெருமிதம் உடையது. இவர் காலத்தே வாழ்ந்த கோல்டுஸ்மித்தும் அடிசனைப் போன்று கட்டுரையெழுதினார். இவருடையள கட்டுரை களில் எளிமையும் நகைச்சுவையும் நிறைந்திருக்கும்.