உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/தவிப்பு

விக்கிமூலம் இலிருந்து

தவிப்பு

பாதி இரவும் கழிந்தது - நல்ல
பால்வெண் ணிலவுடனே
காத லன்வரக் கண்டிலேன் - என்னைக்
களிப்பி லாழ்த்திடவே!

உறங்க லாமெனக் கண்களை - மூடி
உடல்கி டந்திடி னும்
பிறங்கு காதலின் பெட்பது - நெஞ்சைப்
பீறி எழுகிறதே!

தூய மல்லிகைப் பூக்களும் - தொகையாய்த்
துன்பம் தருகிறதே!
பாயும் தலையணை யாவுமே - அனலாய்ப்
பற்றி எரிகிறதே!

கண்ணைக் காத்திடற் காகவே - உள்ள
கதவு போன்றிமைகள்
எண்ணி யேங்கும் மனத்தினுக் - கில்லை
இணைந்து காத்திடவே!

பருவ காலம் பொருந்தவே - நெல்லில்
பசிய முளை வருமேல்
உரிய ஐம்புல உணர்வினோர் - இதனை
ஒறுக்க இயலுவதோ!

நாண மாகிய கட்டினை - விட்டு
நழுவும் நல்லறிவைக்
காண வேண்டு மெனின் இனி - விடியக்
காக்க வேண்டியதே!

கரியில் மூட்டும் நெருப்பிலே சிவக்கக்
காய்ந்த பொன்னெனவே
இரவி தோன்றுதற் கின்னமும் - ஊழி
எத்த னை செலுமோ?