உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/நிறைமொழி

விக்கிமூலம் இலிருந்து

நிறைமொழி


இறைவனின் இன்னருளுக் கென்று முரியோன்
நிறைகுணன் முத்தப்ப னென்றே, முறையாக
நன்னூல்க ளாய்ந்தறியும் நாவலர் தம் மகத்தில்
பொன்னாக வைப்பர் பொதிந்து.

உச்சிப் பொழுதா யுறைவோரு முள்ளத்திற்
கச்சந் தருமிரவே யாவோரும் - மெச்சிடவே
பொய்கை மலரரசி புன்முறுவல் பூத்தளிசெய்
வைகறையாய் வாழ்ந்தா னவன்.

துள்ளிப் பறவாத் துணையன்னப் பார்ப்புறங்கும்
பள்ளிக் கமலப் பழனத்துள் - வெள்ளம்
பெருகிப் பரந்து பயிர் பேணும்தாய் நாட்டுக்
குருகி யுலைந்தானுளம்!

பன்னிரண்டா மாண்டு பதமாய்ப் பழனமெலாம்
சென்னெல் விளைவறுக்கும் திங்களிலோர் - நன்னூல்
அணிவதில் சூழ்புறத்துக் குன்றேறி யாங்கம்
மணிக்கடலைப் பார்த்தான் மகிழ்ந்து!

பஞ்சு சிதறிப் பரந்து கிடந்ததெனும்
பஞ்சுப் படலத்தி னூடேதன் - நெஞ்சும்
நெகிழ்ந்து நினைவு நிறைவேறிற் றென்றே
மகிழ்ந்தான் மரக்கலம் கண்டு!

காதல் கரைகடக்கக் காத்திருந்த காதலிதன்
நாதன் வரவும் நடுநிசியில் தீதில்லா
தில்லக் கதவுதிறந் தேற்க விருப்பதுபோல்
நல்லவனு மானான் நயந்து.

தாழை மடலில் தவிக்குமிள நாரையைநீர்
கோழி யணைத்துக் குறைதீர்த்து - வாழும்
தடம்பொழில் சார்ந்ததன் தாய்நாடு காணல்
கடனென்றான் கால மறிந்து.

முல்லைப் புறங்கமழ மொய்த்த முகிற்குலங்கள்
மெல்லத் தவழ்ந்துதன் மேலார - நல்லோனும்
வண்ணமலர்த் தாளிறையை வாழ்த்தி வணங்கினான்
கண்மெல்ல மூடிக் கசிந்து.

கன்றுடனே காலி கடுகிப்புல் லார்ந்துவக்கும்
குன்றம்நீத் தூரைக் குறுகியவன் - நின்றதுமே
என்றுமே யில்லாத இன்பத்துள் துன்பமுமொன்
றொன்றிப் புகுந்த துளத்து.

எங்கனம் செல்வே னெழில்மிக்க இவ்விடம்விட்
டங்கனம்நா னின்னலுறா தேகுவேன்? - எங்கனமிங்
குள்ளம்புண் ணாகா துருகியுகா தூர்செல்வேன்
கள்ளளெனை யாக்கல் கடிந்து!

மயிலாடும் மாட மதில்புறம் சார்ந்த
கயிலாடு மேரிக் கரைமேல் - வெயிலாடும்
தீங்கரும்பின் சாறாய்ச் செவிமடுக்கத் தேமாவின்
பாங்கிருந்து பாடுங் குயில்!

இந்த எழிலிடத்தி லென்னிதயப் பொன்மலர்கள்
சிந்தித் தொடுத்தேன் செண்டுகளாய் - அந்தநெடுங்
குன்றுகளில் வாழும் குழந்தைகளின் நல்வாழ்வுக்
கின்றியமை யாமை யறிந்து.

ஆன அவர்தம்பே ராவ லவமாக
ஊனமின்றி யுள்ளஞ் சுமையின்றி - நானுமினி
யிவ்விடத்தை விட்டேகற் கென்று மியலுவதோ
எவ்விடத்திற் கேனு மிசைந்து.

ஆடையை மாத்திரமே யன்று களைவதுடல்
மூடிய தோலை முழுவதுமே - கூடி
யிருப்பவர்கண் காணுமா றின்றென்கை கொண்டே
வுரிப்பவனு மாவே னுலைந்து.

எண்ணத்தை மாத்திரமே யன்று பிரிந்தின்று
திண்ணமுடன் விட்டினிநான் செல்லுவது - உண்ணப்
பசிவேட்கை கொண்டு பரபரக்கும் நெஞ்சை
விசித்தழவே செல்குவன் விட்டு.

நேயர்தா மென்றும் நிலைத்திருக்கும் பேரன்புத்
தாயர்தாம்! தாங்கும் தனையர்தா - மாயினுமென்
என்னாலுந் தங்கற் கியலாத தால்செல்வேன்
பன்னூறு காதம் படர்ந்து!

அன்னை கடலு மலைக்கரங்கள் தாமரைத்துந்
தன்னை யணுகச் சாற்றுகிறாள் - என்னை?
புறப்படவே வேண்டும், பொழுதுடன்நா னென்றன்
பிறப்பிடம் சேரப் பிரிந்து.

இரவின் சிறிய நாழிகைக ளின்றும்
எரியொத்து வெந்து படினும் - வரையில்
பனியொத் துறைந்து, பளிங்கொத் திறுக்கி
எனைவார்த் தெடுக்கு மினிது!

கொங்குலவுங் குன்றைக் குலவிக் கவினுலவச்
சங்குலவிச் செல்லும் தடங்கரையை - யிங்கிருந்
தென்னே டெடுத்துக் கொண்டேகவே யேங்குகிறேன்
முன்னோடி யாகி முனைந்து.

எடுத்துக்கொண் டேக வியலுவதோர் இன்பம்
வடித்து வடிவளித்த வாயைத்- தொடுத்து
மிதந்தினிய மென்காற்றின் மீதூர்ந்து செல்லும்
இதயங் கனிந்த இசை!

பாடுபட்டு பன்னாள் முயன்று பரவசமாய்க்
கூடுகட்டி வாழ்ந்த குருவியும்தான் - நாடி
வசித்த இடம்விட்டு வண்ணச் சிறகை
விரித்துப் பறத்தல் விதி!

மன்றருகில் தன்னை மறந்து மனமுருகி
நின்றவனும் கண்டான் நெடுந்திசைகள் - நன்றியும்
மன்னும் நகரம் மகிழ்ந்து மாக்கலத்தைத்
துன்னிவர வேற்குந் துறை!

மனத்தை மகிழ்விக்கும் மாலுமிகள்; மற்றும்
தனதருமைத் தாய்நாட்டு மக்கள் - புனிதப்
பணிவகத்துள் வைத்துப் பரபரப்பாய் நின்றார்.
துணிவகத்தில் தோன்றத் துதைந்து.

உள்ளங் கரைய வுணர்வு கரைகடந்த
வெள்ள மெனக்கிளர்ந்து வெளியாக - வள்ளலுமென்
தொன்மைத்தாயீன்றளித்தா தோழர்காள் ளென்றழைத்தான்
உன்மத்தன் போலு முவந்து.

'சலிப்புடன் சற்றிரவில் சாய்ந்துகண் துஞ்சின்
அலைப்புரவி மீதூர்ந்த வாறே - மலைப்பக்
கனவிலும் வந்து களிப்பித்தீர்! காண
நனவிலும் வந்தீர், நயந்து!

பிரிந்தாலும் துன்பம்; பிரியாமல் மேலு
மிருந்தாலும் துன்ப மெனவே - சரிந்தாலும்
பாய்விரித்தும் பாங்காயப் பயணப் படாக்கலம்போல்
ஓய்வுகுத்தாங் குள்ள துளம்!

'அமைதி யளிக்கு மழகு மலைக்குன்றை
இமையாது நின்றிறுதி யாகச் - சுமையாய்
அரும்புங்கண் ணீர்சிதறி ஆர்வமுடன் கண்டு
விரும்பநான் கொள்வேன் விடை!

நீலக் கடல்மார்பில் நேச மகவென்னச்
சாலத் தவழும் தனிக்கப்பல் - மாலுமிகாள்!
பின்னேநான் வந்து பிறிதுமொரு மாலுமியாய்
முன்னாகி நிற்பன் முனைந்து.

மென்றுயில் கொள்ளும் விரிகடலே! மேவுமலைக்
குன்றுடைய வூற்றுக்குங் கூடநீ - யென்றும்
உரிமைகொண் டாடி வுரைகின்றா யுன்பால்
பெருமையுடன் சேர்குவன் பின்!

யாரிடமும் பேசாதமைதியா யோடுகிற
நீரோடை கூட நினைத்துருகிப் - பாருடனே
பின்னு மொருதடவை பேசி விடைபெற்று
மன்னுகடல் மேவு மடுத்து!

என்பன சொல்லி யிவன் மெல்லச் செல்லக்கண்
டன்பர்க ளெல்லாரு மங்கங்கே - துன்பமுடன்
நின்று நினைத்துருகி நெட்டுயிர்த்து நேசத்தால்
ஒன்றி யுடைந்தா ருளம்!

கழனிகள்மேல் வைத்த கருத்தழிந்து காண்பான்
விழவணி மூதூரின் மேவி - யுழவரெலாம்
பண்ணைக்குப் பண்ணை பரிந்து விளிப்பதுநம்
கண்ணுக்கோ காணாக் கவின்.

'அரிய துணைவ ரனைவரையும் விட்டுப்
பிரியும்நாள் பேணும்நா ளாயின் - பெரிதும்
உளங்கவரு மென்மாலைப் போதே வுவக்கு
மிளங்காலை யாயிற் றெனக்கு!

கொத்தாகிக் காய்த்துக் குலுங்குமோ என்னுள்ள
முத்தமர்கட் கெல்லா முவந்தீய - இத்தினத்தில்
ஏரை யிடையி லிருத்திவருவோர்தேவை
தீரநா னிவ தேவை?

பெருமழை தம்மீது பெய்ததெனப் பேச
அரும்பும் வியர்வையர்தா மாகி - வரம்பில்
கரும்புத் திரிகை களமிருத்தி வந்தோர்
விரும்ப நானீவ தேவை?

மனக்குடங்க ளெல்லாம் மடுத்து மறிய
எனக்குடன் பட்டென்னிதயம் - இனிக்கவொரு
வற்றாத வூற்றாய்ச் சுரந்து வழங்கிடுமோ
வுற்றார் முகக்க வுவந்து?

வல்லா னொருவன்தன் வாய்வைத் திசைக்குமொரு
புல்லாங் குழலினைப் போல்வேனோ? - அல்லவெனில்
காதாரப் பெய்து களிப்பிக்கும் யாழேயோ
யாதா யமைகுவன் யான்?

நீடிய குன்றின் நிலைத்தசிக ரத்திருந்து
நாடினேன் நான்மௌன நன்னிலைமை - நாடி
நனியினிய நல்லதெதைக் கண்டெடுத் தேன்நானே
இனியதனை வேண்டா மெனற்கு!

இதுவென் வினைவறுக்கும் நாளாயினிங்கே
விதியா யுழுது விதைத்தேன் - அதுவும்
எருவைத்து நீரிறைத் தேமுற்றாங் கெந்தப்
பருவத்தில் செய்தேன் பயிர்?

இதுவென் விளக்குயர்த்தும் நாளாயி னிங்கே
புதியவொளி புகுந்த போதும் - அதிலே
எரிவதா மென்சுடரன் றெண்ணெயென தன்றிவ்
விரவினிலே யேற்றுவேன் நான்!

இரவினது காவலனே யென்னையும் பார்த்துத்
திரியிட்டுச் சாலத் திகழ - எரியிட்டு
விண்ணில் சுடரும் விளக்காக்கி வைத்தினிய
தண்ணொளியுந் தந்தருளா வான்!

இவ்வளவும் வாய்விட் டியம்பியவை, இன்னுமவன்
எவ்வளவோ நெஞ்சிலிருத்தியவை - அவ்வளவும்
சீராகச் சிந்தித்துச் சேர்த்துவந்து பேணினவை
யாராலு மாயா தவை!

நல்லோனும் பின்பு நகரத்துக் குள்வரவும்
எல்லாருங் கூடி யெதிர்கொள்ளப் - புல்லி
ஒரேஎ குரலிலுரைத்தார் களோடிச்
சரேஎ லெனவந்து சார்ந்து:

'எங்களைவிட் டேகவே வேண்டாங்கா ணெங்களது
மங்கிய மாலை மயக்கத்தில் - இங்கிதம்சேர்
உச்சிப் பொழுதா யுறைந்தீருமதுரைகள்
கச்சிதம்யாம் கண்ட கனவு.

நீங்க ளெமக்கயலா ரன்றே, நினைத்தென்றும்
நாங்கள் வழிபடும் நல்லரசாண்ட ஏங்கியினி
உங்கள் திருமுகத்தை யுன்னி யுருக்குலைய
எங்களைவிட் டேகா திரும்!

தாழ்ந்த குரலில் தாயனையர் தாமுரைத்தார்;
ஆழ்ந்தகடல் நம்மைப் பிரிப்பதோ? - வாழ்ந்தநாள்
வெற்றுநினை வாக விடுவதோ, வெம்புவதோ
எற்றைக்கும் ஏலா தினி!

அல்லும் பகலும் மனவரத மெங்களுடன்
இல்லுறையும் தேவா யியங்கினீர்! - சொல்லின்
உமதுநிழ லெங்க ளுறையுட் கொளியா
யமைய மகிழ்ந்தோ மகம்!

உத்தமரே! யும்மை யுயிர்போ லுளத்துன்னி
மெத்த விழைந்தின்று மேவினோம்;- ஒத்த
உரையாற்றே மாகவெம் முள்ளத்தை மூடித்
திரையேற்றி வைத்தோம் தினம்!

ஆயினுமின் றும்மை யழைக்கின்ற தன்புடனே
தாயினும் சாலத் தவிக்குமுளம் - சேயெனவே
ஆரா விருப்ப மகத்தின் வெளிப்போந்து
நேராக வந்து நெகிழ்ந்து.

தொன்றுதொட்டுட்கிடக்கை தோன்று மியல்பிதுவோ!
ஒன்றிப் படிந்திருந் துள்ளத்தி - லின்று
பிரிவென்ற போதெ பெரிதும் வெளிப்போந்
துரியவரை யூக்க லுடைத்து!

வேறு பலரும் விரைந்தங்கு வந்தவராய்க்
கூறுவது கேட்டுக்கை கூப்பியே - ஏறனையோன்
மாறாகக் கூடி மனமின்றிக் கண்ணில்நீர்
ஆறாக விட்டா னழுது!

பின்னே அவனும், பெருமக்க ளும்கோவில்
முன்னே யமைந்தவெழில் முற்றத்தை - 'அன்னோ' யென்
றேங்கும் குரலி லுருகி யழைத்தவ ராய்ப்
பாங்குடன் சேர்ந்தார் பரிந்து.

கோவிலுக் குள்ளிருந்து வந்தாள் குவலயமே
ஆவலுடன் போற்று மலமம்மா! - தேவதைபோல்
முக்கால மோர்ந்துரைக்கும் மூதாட்டி, முத்தமிழை
யெக்காலு மாய்வா ணிருந்து.

அவளை யவனு மயராத வன்போ
டுவகைமிக நோக்கினா னொன்றி -யவனை
நுணுகி யறிந்து நுவன்றாள் முதலி
லணுகினவ ளாவா ளவள்.

'இப்பொழுதும் சிந்தனையில் மூழ்கி முழுவதுஉம்
அப்பழுக்கற் றாய்ந்துரைக்கு மாசானே! இப்பொழுதும்
எத்தும்தாய் நாட்டுக் கெடுத்தேக வந்ததுநீர்
காத்திருந்து பார்த்த கலம்!

சொந்த வுறைவிடத்தைச் சுற்றி யலமந்த
சிந்தனைகள் தேங்கும் திருநாட்டை - முந்தி
அடைய விழைகின்றி ராழ்ந்தவெம் மன்பும்
தடையாக நிற்கா தினி!

ஆயினு மீதொன்றை யாவலுடன் கேட்கின்றோம்
தேயத்தை நீத்தினிநீர் செல்லும்முன் - நேயத்தால்
உங்கள் திருவுள்ளத் துள்ளுறையு முண்மைகளை
எங்கட்குச் சொல்வி ரெடுத்து!

அதைநாங்க ளெங்களது மக்களுக் கன்புப்
புதைபொருளாய்ப் போற்றிப் புகல்வேம் - அதையவர்கள்
தங்களது மக்கட்குத் தாமுரைக்க அங்கனமஃ
தெங்கும் வழங்கு மிருந்து!

உமது தனிமையில் கண்டீ ருளதாம்
எமதுவாழ் நாளி னியல்பை - யுமது
விழிப்பினில் கேட்டீர் விளங்காவெம் வேட்கை
எழுப்பு மிதயத் தொலி!

இறப்புக்கு மேற்ற பிறப்புக்கு மூடே
சிறப்பிக்க வுள்ளதனைச் செப்பிக் - குறிப்பாகக்
கங்கு லகற்றும் கவின்விளக்காய்க் காட்டுங்கள்
எங்களை யெங்கட் கெடுத்து!

'சதுரரும், சாந்தரும், சத்தியரும் சார்ந்து
மதுர முறவுறையும் மக்காள்! - இதரவும்
என்ன விருக்கு மியம்பிடுதற் கிங்கேநீர்
உன்னியதொன் றன்றி யுளத்து?’

அப்பொழுது சொன்னா ளலமம்மாள்; அன்புபற்றி
யிப் பொழுது சொல்வீ ரெமக்கென்றே - ஒப்பெழுத
ஒன்றுமே யின்றி யுரைப்பான் தலைநிமிர்ந்தான்
நின்றமைதி யாக நினைத்து.

அன்புறுத்தி நோக்கி யழைக்கி னதனுடனே
இன்புறுத்தி யூக்கிவிரைந் தேகுங்கள் - துன்புறுத்திச்
செல்லும் வழிமுழுதும் செங்குத்தாய்ச் சீர்க்குங்கால்
கல்லும்முள் ளேனும் கடந்து!

வதனம் மலர்ந்து வயப்படுங்கள், வாய்த்த
அதன்சிறகு கள்ளணைக்க நேரின் - உதிரம்
பெருகவே லம்புகளும் பேதுறவே நெஞ்சி
லுருவத்தைத் தாலு முவந்து.

உங்களை நாடி யுரையாடு மன்புக்குச்
செங்கைகள் சேர்த்துச் செவிகொடுங்கள் - யங்கமுறப்
பூங்காவை வாடை புடைப்பது போல் பூரணமாய்த்
தீங்காகு மேனும் தெளிந்து.

அன்புமுடி சூட்டி ஆள அமைப்பதுபோல்
துன்பக் கொடுமையும் தோற்றுவிக்கும் - இன்பமும்
தொட்டு வளர்த்ததுபோல், தோண்டி யடியோடு
வெட்டவும் செய்யும் விழைந்து!

பதரகலத் துாற்றிப் பதமா யுலர்த்திக்
குதிருரலிற் பெய்தொளிரக் குற்றும்; - அதிரப்
புடைத்துப் புறம்போக்கும்; போற்றியே வாரி
யிடித்துமா வாக்கு மெடுத்து.

மென்மையுற வுங்களை மேலும் பிசைந்தினிய
தன்மையுறத் தட்டித் தணலிட்டு - நன்மையுற
தூய விருந்தாய்த் துலங்கவே செய்விக்கும்
ஆய இறைவற் கமுது!

உங்களது நல்லுள்ளத் துண்மைகளை நீங்களே
உங்கட் குணர்த்தி யுவந்திடவே - உங்களை
உய்விக்க வந்த வுரிமைசால் பேரன்பு
செய்விக்கும் மாற்ற மிவை!

அச்சங் கருதி யமைதியை மாத்திரமே
நச்சிடுவீ ராயின் நனிவிரைந்து - நிச்சயமாய்
போரடிக்கும் போதே புறம்போந் தொழியுங்கள்
பாரிடுக்கில் வித்தாய்ப் படிந்து.

என்ன கொடுத்தாலு மென்னதான் கொண்டாலும்
தன்னையே தான்கொடுத்துத் தன்னிடமே தான் கொள்ளும்
மன்னுங் குணங்கொண்டு மாண்புறும் மாநிலத்து
ளன்னதா மன்பி னியல்பு.

ஆன பிறவொன்றை யண்டிப் பணியாது;
தானும் பிறவொன்றைத் தாழ்த்தாதஃ-தேனென்றாள்
இன்பமும் துன்பமு மென்னா வியல்புடைய
அன்பினுக் கன்பே அடைவு.

இறைவனுள னென்னுள்ளத் தென்னாது நானே
இறைவ னுளத்துள்ளே னென்மின் - இறைவனின்
நீங்காத அன்பை நிகழ்த்துங்கால் நீங்களின்
ஓங்குங் குரலி லுவந்து.

அன்பின் வழியை யடுத்தவழிக் குத்திருப்ப
லென்பதியலா தெவராலும் - மன்பதைக்குள்
தக்கோ னெனக்கண்டால் தன்வழிக்குத் தான்திரும்பும்
மிக்கோரின் மேலும் மிகுத்து.

தன்னையே தானடைவ தன்றிமற் றன்பினுக்
கென்னபிற வாசையு மில்லைமன் - பின்னையும்
வேறுசில வாசைகள் வேண்டி னவைகளுமிவ்
வாறமையக் கூடு மடுத்து.

உருகி யிரவுக் கிசைபாடி யோடும்
பெருகு புனலாகிப் பேணத் - துருவி
அளவிறந்த மென்மைத் துயரறிய; வாங்கறிய
வுளமறிந் தூக்கு முணர்வு!

குறுகு மினிய வைகறையில் கோதிச்
சிறகடித்துக் கண்விழித்த சிந்தை - பிறகும்
பிறிதுமொரு நந்நாளைப் பெற்றபல னாக
மறவாது கூறமுக மன்!

தண்பொழில் சார்ந்து தனித்துத் தணியாத
நண்பகலுக் கோய்ந்திருந்து, நல்லன்பின் - பண்புகளில்
ஆராத வின்ப வமுதருந்தி யாராயச்
சீராகக் குந்தச் சிறிது!...

என்பன சொல்ல விதயங் குளிர்ந்தவர்கள்
இன்பம் பெருகவெழுந் தெல்லாரும் - அன்புடனே
கேட்டறி யாதனவும் கேட்டுவந்தோ மென்றுரைத்துத்
தாட்டுணையில் வைத்தார் தலை!


(கருத்து : கலில் ஜிப்ரான்)