கவியகம், வெள்ளியங்காட்டான்/பதற்றம்

விக்கிமூலம் இலிருந்து
பதற்றம்


அரைநூறு வருட வாழ்வில்
அறவழி யறிந்து றைந்தென்
னுரைசெய லொன்றி யோயா
துழைத்துப்பார்த் தாயிற் றுள்ளம்
பெரிதும் நொந் துறுதி தேய்ந்து
பெற்றது பிணிமூப் பன்றி,
ஒருசிறு நலனு முற்றிங்
குருப்படக் காண்கி லேனே!

எனவுளஞ் சலித்துத் தேக
மிளைத்தெலும் புக்கூ டாகி,
இனிவளஞ் செய்த லென்னா
லியலாதென் றிருந்தே னேங்கி!
கனிவுளங் காட்டிக் கண்ணில்
வேலையும் காட்டிக் காக்கும்
மனைவியும், 'மக்கள்' வாயில்
மண்விழுந் ததுகா' ணென்றாள்.

உகிர்சுற்றின் மீது லக்கை
ஊன்றிய தெனவே, உள்ளம்
மிகமிகப் பதறி “யென்ன?
என்னடீ! விழுந்த" தென்றேன்.
சிகையினை முடிந்த வாறே
சிரிப்பொடு வெறுப்பும் சிந்திச்
‘சுகமுடன் பூனை பாலைச்
சுடச்சுடக் குடித்த தென்றாள்.

'குடியடி யோடு குன்றிக்
குலைந்தது போலச் சீவன்
நடுங்கிட வோடி வந்து
நவின்றது மிதற்குத் தானா?
கிடக்குதின் றொருநாள் தானே
குடித்தது சரி, போ!" வென்றேன்
மடமட வெனவே மேலும்
மலர்த்தினா ளவள்தன் வாயை!

கரும்பூனை காலை மாலை
கட்டாயம் வந்து திரும்! ஒ
ரு நாளா! இரண்டு நாளா?
ஒன்றரை மாத காலம்!
வரும்போது பார்த்து நானும்
வைததை விரட்டி வைப்பேன்;
இருப்பினும் வந்தின் றந்தோ!
யேய்த்தெனை வென்ற' தென்றாள்.

ஒன்றரை மாத காலம்
ஓயாமல் விரட்டி வைதும்
நின்றபா டின்றிப் பூனை
நிலையாக முயன்ற தாலே,
இன்றதற் கிணையில் லாத
வெற்றியாய் விட்ட தன்றோ?
நன்றது! நானும் பூனை
நடப்பைமேற் கொள்ளவே னென்றே.

துள்ளியே எழுந்தேன், 'வீட்டின்
துயர்தீர்க்கும் வழியுன் னாலே
கள்ளி நான் கண்டே' னென்று
களிப்புடன் தழுவ லானேன்.
உள்ளுணர் வோராப் பேதை
ஒட்டாளா யொதுங்கி நின்று
பிள்ளையைப் போன்று, நீங்கள்
பிதற்றுவ தென்னிஃ' தென்றாள்.