கவியகம், வெள்ளியங்காட்டான்/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து
பதிப்புரை...

'நீங்கள் நினைப்பதை சொல்லாவிட்டால், நீங்கள் நினைக்காததை சொல்லும் கட்டாயம் ஏற்படும்” என்ற ஆரி லீவின் வாழ்வியல் சிந்தனை யாவற்றிற்கும் பொருத்தமாக அமைகிறது. இலக்கியப் பதிவும் அப்படித்தான். அவை காலத்தே மக்களிடம் சென்றடையாவிட்டால் பிற்போக்கான கருத்தியல் சமூகத்தில் வேரூன்றிவிடும்.

கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்கள், தனது படைப்புகள் அனைத்தும் பதிப்பிக்கப்பட்டும், புதுப்பிக்கப்பட்டும் தமிழ் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற கனவு இறுதி மூச்சு வரை மெய்ப்படாமல் போனது. கவிஞர் மறைந்து பதினான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த நீண்ட இடைவெளியில் நூலாக்க முயற்சி என்பது விழலுக்கு இரைத்த நீரானது. இருப்பினும் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்து வந்திருக்கிறது.

கவிஞர் இலக்கியத்தை வெறும் பொழுது போக்காக எப்போதும் கருதியதில்லை. சுவாசமாகக் கருதியவர். இலக்கியம் சமூகத்தின் மனசாட்சியாகவும், மனித குலத்தின் ஆன்மாகவும் இருக்கிறது என்ற கருத்தியலோடு வாழ்ந்தவர். கவிஞரின் அனைத்துப் படைப்புகளையும் தொடர்ச்சியாகத் தமிழ் கூறும்

நல்லுலகிற்கு வழங்க இருக்கிறோம்.

"கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிதைகள்” தொகுப்பைத் தொடர்ந்து எங்களது யதி வெளியீட்டுக் குழுமத்தின் இரண்டாவது படைப்பாக "கவியகம்” கவிதை நூலை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.

இந்நூலை சிறப்பாக கொண்டு வருவதற்கு அனைத்து வகையிலும் உதவி புரிந்த நண்பர்களுக்கும், பிழை திருத்தம் செய்துதவிய கவிஞர் புவியரசு அவர்களுக்கும், பாவலர் இரணியன் அவர்களுக்கும், மிகுந்த ஈடுபாட்டுடன் கவிஞரின் கவிதைகளைத் தொகுத்தும், அச்சுப்பணிக்கும் உறுதுணையாயிருந்த கவிஞர் தங்க. முருகேசன் அவர்களுக்கும், மிகக் குறைந்த காலத்தில் அழகிய முறையில் அச்சிட்டு வழங்கிய திலகா ஆப்செட் பிரஸ் வேனில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அச்சகத் தோழர்களுக்கும் பகிர்ந்தால் குறையாத நன்றிப் பூக்களை உரித்தாக்குகிறேன்.

அன்புடன்
என். மகேந்திரன்
யதி வெளியீடு