உள்ளடக்கத்துக்குச் செல்

கவியகம், வெள்ளியங்காட்டான்/மனமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து


மனமாற்றம்

எட்டடித்து நிமிடமிரு பதுவு மாயிற்
றின்னும்மோர்க் காரிவர வில்லை; நேற்றே
வெட்டொன்று துண்டிரண்டாய்க் காசு கேட்டாள்.
வெகுளாது. 'பொறுத்தி'டென வேண்டிக் கொண்டேன்;
பட்டணத்தில் கைதனிலே பைசா யின்றிப்
படுந்துயர மெடுத்துரைக்கப் படுவதன்றே!
ஒட்டுமொத்தம் பட்டினிதா னொருநாள் பூரா!
உடல்வற்றி வுருக்குலைந்தா ரெனது மக்கள்!

'எப்போது மூலஇயல்புக் கேற்கா நூல்கள்
எழுதுவதுங்கற்பதுவு மியல்பா யிற்று!
அப்பப்போததிசயமா யைந்தும் பத்தும்
அனுப்புகிறார் யார்யாரோ அதுவு மன்றி
ஒப்புக்கென் னப்பாவு முதவு கின்றார்
உலகத்தின் மெச்சுதலுக்குள்ள மின்றி,
எப்போது தானிதற்கோர் விடிவு காலம்
ஏற்படுமோ என்றலுத்துக் கொண்டாள், தாரா!

கோபமெனக் குத்தாங்கக்கூட வில்லை:
குணங் குறைத்துக் கொள்வதற்கும் துணிய வில்லை!
பாபுபடும் பசியிசிவைப் பரிந்து பார்த்துப்
பரிதபித்துக் கொள்வதிலும் பயனொன்றில்லை!
'ஆபத்துச் சமயத்தில் பாப மில்லை!
அம்மணியே அட்டாயிற் றைமது வீட்டில்;
தீபத்துக் கெண்ணெயெனச் சோற்றை யூட்டித்
தேற்றிடுக, சிறுவனை நீ யென்றாள் செல்லம்!



பக்கத்து விட்டம்மாள் பரிவி னாலே
பாபுபசி யொருவாறாய்ப் படிய லாச்சு!
துக்கத்தைக் கண்ணீராய்ச் சொரிய விட்டென்
துணைவிதுடி துடித்தவரை யென்முன் தோன்றி,
"அக்கிரம மில்வாறாய் நீங்க ளிங்கே
அலுங்காமல் குந்திக்கொண் டிருப்ப தந்தோ!
மக்களொடு மனைவியென வுங்க ளுக்கும்
மண்ணுலகி லெதற்காக வேண்டு" மென்றாள்.

எதுவொன்று மியலவில்லை யென்னால் பேச;
இத்தனைக்கும் காரணமென் னியல்பே யன்றோ?
பதுமையென இருந்தவனைப் பார்த்து மேலும்,
'பசிதணிய வேண்டுமெனின் பரிந்து சென்று
கதுமெனவே பணந்தேடி வாரீர்! இல்லை,
கருணையுட னெமைப்பிறந்த வீட்டிற் கேனும்
பதிலின்றி யனுப்பிவைப்பீ ரென்றாள், தாரா!
'பார்க்கலா மப்படித்தா னென்றேன். நானும்!

பார்க்கலாங் கீர்க்கலா மெல்லாம் வேண்டாம்;
பரபரப்பா யெழுந்திருங்க ளென்றாள், தாரா! '
ஊர்க்காக நானழுது தீர்த்தால் கொஞ்சம்
உபயோக மாயிருக்கு' மென்றெழுந்து,
தாற்கச்சி பட்டவொரு மாட்டைப் போலத்
தடதட'வென் றங்கிருந்து, நடக்க லானேன்;
மோர்க்காரி யெதிர்ப்பட்டாள்; "ஐயா! மொத்தம்
முன்பாக்கி கொடுத்துவிட்டுப் போங்க" ளென்றாள்.

மந்திரத்தால் கட்டுண்ட மாநா கம்போல்,
மறுமொழியொன் றுரைக்காமல் நின்றேன்; மாறாய்ச்
“சுந்தரமென் றொருகவிஞ ரிங்குள் ளாரா?
சொல்லுங்க ளவரிருந்தால், சுருக்காய்ப் பார்க்க
வந்தேன்நான் நெடுந்தொலைவி லிருந்திங் கென்றே
'வனப்புடனே கைகுவித்தான்; 'வருக' வென்றேன்
இந்தமனி தன்வரவால் மோர்க்கா ரிக்கும்
எதுவும்சொல் லாதுதுளி யிருந்தே னெண்ணி.

வாலிபனென் பதுமட்டு மன்று; சால
வளர்ச்சியொடு பேரழகன்; வருத்த மற்றோன்!
மேலுமுப சரிப்புக்குக் கொஞ்சம் பேசி
மெதுவாக “வந்ததுநீ யெதற்கா” யென்றேன்.
“வேலுமயி லென்றழைப்பா ரென்னை! மேற்கே
விநயபுரம் மிட்டாதா ரெனது தந்தை!
நாலேநா ளுள்ளதினி யென்கல் யாணம்!
நானும்மை யழைத்தேக வந்தே” னென்றாள்.

கனவொன்று காண்பதெனக் கடுகி நானும்
கண்துடைத்துக் கொண்டவனைக் கனிந்துபார்த்தேன்
மனைவிகத வருகினிலே மறைந்து நின்று
மகிழ்வதனை யறிந்து கனவன்றென் றோர்ந்தேன்.
எனதுமனம் வாலிபனைப் பற்றி யன்றங்
கெதையெதையோ இசைவுபட எண்ணும் போது,
தனது திரு மணவழைப்புத் தாளொன்றொடு,
தாராள மாய்ப்பணமும் வைத்துத் தந்தான்.

“காசுபண மிதுவெல்லா மெதற்கா” யென்றேன்
“கவிஞர்புறப் படுங்கால்கைச் செலவுக்” கென்றாள்.
நேசமொடு நின்பணத்தை யெடுத்துக் கொண்டு
நேரத்தி லூர்போய்ச்சே' ரென்று சொல்ல
யோசித்தேன்; யோசனையைத் தன்யூ கத்தால்
உணர்ந்தவுடன் தாரா, 'வேண்டாமே' யென்று
பாசத்தால் கண்சமிக்கை செய்தாள்; வீட்டில்
படும்பாட்டை யுங்குறிப்பால் படிக்க லானாள்.

திறந்தவிட வாய்திறந்த படியே நின்று
திருதிருவென் றிதைப்பார்த்துத் திகைத்துத் தன்னை,
மறந்திருக்கும் மோர்க்காரி பாக்கி வேறு
மனத்தைமிக வருத்திற்றங் கென்ன செய்ய?
இறந்தாலுந் தேவலைபோ லிதய மென்னிற்
றிவ்வுலகத் தியல்பிழிந்த தாயிற் றென்றே
பறந்து பறந் தழைத் தவனும் பரிவாய்ப் போனாள்;
பரவசமாய்ப் பணமெண்ணிப் பார்த்தாள், தாரா!

சற்றுவெளி யேசென்று வந்தா லிந்தச்
சங்கடமெல் லாமும்சா மெனநா னெண்ணி
முற்றத்தில் காலிட்டேன், தாரா வந்தென்
முன்னின்று வழிமறித்து முகத்தூ டென்னை
உற்றுப்பார்த் தாள்; வெளியே போகா தீந்நீர்!
ஒருநொடியி லுணவளிப்பே னுண்டு குத்தி
இற்றைக்கே னும்சற்றிங் கின்னல் தீர
இளைப்பாறி யின்புறுங்க ளென்றா ளன்றே!