வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/ஒரு புத்தகத்தை

விக்கிமூலம் இலிருந்து
3
ஒரு புத்தகத்தை வாங்க இயலாதவர்


டாக்டர் ஏ.எம். ரோஸ் என்பவர் எழுதிய “கனடா தேசத்துப் பறவைகள்” என்ற புத்தகத்தை வாங்கவே, எர்னஸ்ட் தாம்சன் ஸெடான் என்பவர் ரொம்பவும் கஷ்டப்பட்டவர். 90 சென்ட் விலையுள்ள அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற அவா அவருக்கு அளவு கடந்து இருந்ததால் அவர் கஷ்டங்களைப் பொருட்படுத்தவில்லை. மிகுந்த முயற்சியின் பேரில் அவர் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தார்.

இவ்வளவு வறுமை நிலையிலிருந்த ஸெடான் பிற்காலத்தில், ஒரு பிரபல பிராணி நூலாசிரியராகவும், பிராணிகளை வரையும் சிறந்த சித்திரக் காரராகவும் ஆனார் என்றால், அவருடைய ஆவல் எத்தகையது என்பதை பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஸெடானுடைய தகப்பனார் ஒரு காலத்தில் பெரிய பணக்காரராக இருந்தார். அவருக்குச் சொந்தமாகப் பல
கப்பல்கள் இருந்தன. ஸெடானுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, அவருடைய தகப்பனாருக்கு, வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதன் காரணமாக எல்லா சொத்துக்களும் பறிபோயிற்று. வறுமை நிலையை எய்திய ஸெடானின் குடும்பம் கனடா தேசத்தை விட்டு வெளியேறி டோரன்டோவுக்கு சென்று குடிபுகுந்தது. அங்கு சென்ற பிறகு ஸெடான் பள்ளியில் படிக்கத் தொடங்கினார். அவருக்குப் பிராணி நூலில் அதிகப் பற்றிருந்தது. ஆனால் அவருடைய தகப்பனாருக்கோ அது பிடிக்கவில்லை. பிராணி நூல் படிப்பின் மூலம் எதிர்காலத்தில் யாதொரு பலனும் ஏற்படாது என்று அவர் கருதினார் இச்சமயத்தில்தான் முன்னர் குறிப்பிட்டதுபோல் டாக்டர் ரோஸுடைய பறவை நூல் வெளியாயிற்று. மிகவும் கஷ்டப்பட்டு அதை வாங்கிய ஸெடானுக்கு, அதைப் படித்தபிறகு பிராணிகள் சம்பந்தமாக ஆராய்ச்சி நடத்தவேண்டும் என்று தோன்றிற்று. அதற்காக அருகில் உள்ள காடுகளுக்கு அடிக்கடி அவர் போய்விடுவார். அங்கு பறவைகளையும் பிராணிகளையும் கண்டு அகமகிழ்வார். அவருடைய செய்கையை தகப்பனார் ரொம்பவும் கண்டித்துப்பார்த்தார். அதனால் ஒன்றும் பயனில்லை என்றதும் பையனை வேறு வழியில் திருப்ப நினைத்தார். பையனைச் சித்திரக்காரனாக ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்துக்கு அவரை அனுப்பினார். வாரம் மூன்று டாலர்கள். அவருடைய செலவுக்காக அனுப்பி வந்தார்.

இங்கிலாந்தை அடைந்த ஸெடான், வாழ்க்கையை மிகவும் சிக்கனமான முறையில் நடத்திக் கொண்டிருந்தார். அவர் சித்திரத் தொழிலை கற்றுக்கொண்டே பிராணி நூல் ஆராய்ச்சியையும் நடத்திக் கொண்டிருந்தார். இங்கிலாந்தில பிராணிகள் சரித்திர நூலகம் ஒன்றிருந்தது அதில் சாதாரணமானவர்களை அனுமதிப்பதே இல்லை. அந்த நூலகம் உலகத்திலேயே மிகப் பெரியது, உன்னதமானது என்று எல்லோரும் சொல்வதைக் கேட்ட ஸெடான் அதில் தான் ஒரு உறுப்பினராக வேண்டும் என்று முயற்சிசெய்தார். அதற்காக இங்கிலாந்தின் பிரதமமந்திரிக்கும், சக்கரவர்த்திக்கும் கூடக் கடிதம் எழுதினார். அவருடைய ஆர்வத்தைக் கண்ட பிரதமமந்திரி நூலக நிர்வாகிகளுக்கு அவரை அனுமதிக்கும்படி கடிதம் எழுதினார்.

இந்த நூலகத்திலிருந்து தான் ஸெடான் வாழ்க்கையே உதயமாயிற்று எனலாம்.

அவர், பல வருஷங்கள் பிராணிகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்தினார். புதிய புதிய பறவைகள், பிராணிகள் முதலியவற்றைக் கண்டுபிடித்தார். அவைகளைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் எல்லாம் அவராலேயே எழுதப்பட்டவை. அப்புத்தகம் வெளிவந்ததிலிருந்து ஸெடான் புகழ் உலகமெங்கும் பரவலாயிற்று. தற்காலம் பிராணிகளைப் பற்றியவரை, அவரை ஒரு அத்தாட்சிக் காரராக உலகத்தவர் மதிக்கின்றனர்.

அன்று ஒரு புத்தகத்தை வாங்கக் கஷ்டப்பட்ட ஸெடான், பிறகு பல புத்தகங்களுக்கு ஆசிரியராகி இருக்கிறார். அத்துடன் பெரிய பணக்காரராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில்தான் அவர் தமது 42வது புத்தகத்தை எழுதி முடித்தார்.