விநோதரசமஞ்சரி/10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது
விநோத ரச மஞ்சரி
[தொகு]வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்
[தொகு][[]]
- மாட்சிமை தங்கிய திருவெண்ணெய் நல்லூரிற் கொஞ்சங்குறைய ஆயிரம் வருஷத்திற்குமுன் வசித்திருந்த அந்தக் கிராமாதிபதியும், கனம்பொருந்திய பிரபுவுமாகிய சடையப்பமுதலியார் என்பவர், தமிழ் வித்துவான்களுக்குள் அதிசிரேஷ்டராகிய கம்பரை நோக்கி, ‘ஐயா, நீர் பிரபல கவிஞராயிருக்கிறபடியால், உமது பெயர் நெடுங்காலம் நிலைபெற்று நிற்கும்படி சம்ஸ்கிருத பாஷையிலிருக்கின்ற ஸ்ரீமத் ராமாயணம் என்னும் மகா காவியத்தைத் தமிழ்ச்செய்யுளாகச் செய்தால், லோகோபகாரமாயிருப்பதுமன்றி, உமக்கும் சுகிர்தமாம்,” என்று சொல்ல, கம்பர், ‘நல்லது! அப்படியே செய்கிறோம்!’ என்று சொல்லி, அனேக நாளாய் ஒன்றுஞ்செய்யாமற் காலஹரணம் பண்ணிக்கொண்டு வந்தது கண்டு, அவர், ‘நாம் சொல்வது இவருக்கு உறைக்கவும், அக்கறை பிறக்கவுமில்லை; ஆதலால், ‘சடையைப் பிடித்திழுத்தாற் சந்நியாசி கிட்ட வருவான் என்கிறபடி குலோத்துங்க சோழனைக் கொண்டு சொல்லுவித்தால் ராஜாதிகாரத்திற்கு அஞ்சியாவது தமது அபிப்பிராயத்தை நிறைவேற்றுவார்” என்று நினைத்து அரசனுக்கு அதை அறிவித்தார்.
- அரசன் அதைப்பற்றித் தனக்குள்ளே யோசித்து, ‘நாம் கம்பரை மாத்திரம் பாடச்சொன்னால் எவ்விதத்திலும் தாமதப்படும், கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் தனித்தனி பாடச்சொன்னால், அவர்கள், ‘கூழுக்கு மாங்காய் தோற்குமா?’ என்பதாக ஒருவருக்கொருவர் முந்தவேண்டிச் சீக்கிரத்தில் பாடி முடிப்பார்கள்,” என்று அவ்விருவரையும் அழைப்பித்துச் சொல்ல, ஒட்டக்கூத்தர் பாலகாண்டமுதல் ஐந்துகாண்டம் பாடி, ஆறாவது காண்டத்திற் கடல்காண் படலமட்டும் பாடினார். அதுவரையிற் கம்பர் தெய்வ வணக்கமுஞ் செய்யவில்லை என்பதை முதலியாரறிந்து, வேந்தனிடத்திற் போய்க் “கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் நீங்கள் இராமாயணம் பாடச் சொன்ன பின்பு அவர்களை ஏனென்று கேளாதிருப்பது தர்மமா? என்ன, சோழன் கவிஞரிருவரையும் வரவழைத்து, “இராமசரிதம் எவ்வளவு பாடியாயிற்று?” என்ன ஒட்டக்கூத்தர், “கடல்காண் படல பரியந்தம்,” என்றார். கம்பர் ஒரு பாட்டும் பாடாதிருந்தும், தாம் ஒட்டக்கூத்தரினும் அதிகமாகப் பாடினதாய்ச் சொல்லவேண்டுமென்று நினைத்ததனால் அத்தருணத்திற் பொய் பேசுவது ஆவசியகமாயிருந்தது. அவர், “நாமிப் பொழுது சொல்லும் பொய் பிறருக்குத் துன்பத்தைச் செய்யாதாதலால், நமக்குத் தோஷமில்லை,” என்று குறித்துக் “கடல்காண் படலத்திற்கு அப்புறத்துள்ள திருவணைப் படல மட்டும் பாடினோம்,” என்றார்.
- “அப்படியா! அதைச் சற்றே பிரசங்கியும் கேட்போம்,” என்று அரசன் சொல்ல, கம்பர் உடனே அதை மாத்திரம் எழுபது செய்யுளிற் பாடிப் பிரசங்கித் தொடங்கி, சமுத்திரத்தில் வாராவதி கட்டும் பொருட்டுச் சுக்கிரீவன் ஆணையால் வானர வீரரும் படைத்தலைவர்களும் காட்டிலுள்ள மலைகளைப் பிடுங்கிக் கொண்டு வருவதைப் பற்றிப் பேசுமிடத்தில்,
’குமுத னிட்ட குலவரை கூத்தரின்
திமித மிட்டுத் திரையுந் திரைக்கடல்
துமித மூர்புக வானவர் துள்ளினார்
அமுத மின்னு மெழுமெனு மாசையால்’
- என்ற பாடலைச் சொல்லிக் ‘குமுதன் என்னும் படைத்தலைவனொருவன் பூமியினின்று வேரோடு பிடுங்கி அந்தரத்திலே பந்தாடிக் கொண்டே வந்து, மற்றவர்களைப் போலத் தெய்வத்தச்சனாகிய நளன் என்பவன் கையிற் கொடாமல், தானே விட்டெறிந்த பிரமாண்டமாகிய மலையானது வந்து விழுந்து, கூத்தாடிகள் போலத் ‘திமிதம்’ என்று ஒலித்துச் சுழலுதலால், நுரைத்துத் திரைத்துக் குமிழியிட்டெழுந்த கடல் நீர்த்துளிகள் விசையாய் வந்து தங்களுக்கிருப்பிடமாகிய சுவர்க்கத்திற் பிரவேசித்ததை அங்குள்ள தேவர்கள் பார்த்து, ‘பூர்வகாலத்தில் நம்மினத்தாராகிய தேவர்களும் மகா விஷ்ணுவும் கூடி ஒருமலையை மாத்திரங்கொண்டுபோய்ப் போட்டு அமிர்தமெழும்படி பாற்கடலைக் கடைந்தார்கள். இப்பொழுது அந்த விஷ்ணுவே ஸ்ரீராமனாய் அவதரித்தும், அத்தேவர்களே வானரர்களாக ஜெனித்தும் வந்து, அனேக மலைகளைப் பிடுங்கி இந்தத் தென்சமுத்திரத்திற் போடுகிறார்கள். இனி, இதையுங்கடைவார்கள். இதில்முன்போலச் சொற்பமாகவன்றி, அமிதமாக அமிர்தம் உண்டாகும். நாமெல்லாம் சலப்பிராயமாய் வேண்டிய மட்டும் புசிக்கலாம்!’ என்று ஆசை கொண்டு, தலை தெரியாத சந்தோஷத்தை உடையவர்களாய்த் துள்ளி யாடினார்கள்,’ என்றார்.
- அதுகேட்டு ஒட்டக்கூத்தர் கம்பரை நோக்கி, ‘துளியைத் ‘துமி’ என்றீரே! இது நிகண்டு திவாகரங்களில் வழங்குகிறதா? அல்லது ஏதாவது இலக்கியப் பிரயோகங் கண்டதுண்டா?’ என்ன, கம்பர், ‘இது அவைகளிலெல்லாமில்லை; உலக வழக்கு,’ என்ன, அவர், கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை,’ என்பதுபோல, இவர் துளியைத் துமி என்று வழுவாய்ச்சொல்லிச் சமாளிக்கும்படி, உலகவழக்கெனச் சாதிக்கிறார்’ என்றெண்ணி, ‘உலக வழக்கில் வருவது மெய்யானால், அதை மெய்ப்பிக்க வேண்டுமே!’ என்ன, ‘நல்லது!’ என்று பிரசங்கம் முடிந்த பிறகு கம்பர் வீட்டிற்கு வந்து சரஸ்வதியைப் பிரார்த்திக்க, அவள் பிரசன்னமாகி, ‘என்னவேண்டும்?’ என, ‘தாயே ஜகதம்பா, பிரமாதி தேவர்களும், வசிஷ்டர், பராசரர் வியாசர் முதலாகிய மகருஷிகளும் பிரார்த்திக்கும்படி அவர்களுடைய மேன்மை தங்கிய நாவினிடத்தில் வீற்றிருக்கின்ற நீ, எளியேனுடைய புன்மையாகிய நாவிலுமிருந்து அருளிச் செய்த வண்ணம், ‘நானுமறியேன் அவளும் பொய் சொல்லாள்’ என்பதாக அடியேன் சொன்ன ‘துமி’ என்பதை ஒட்டக்கூத்தன் ஆக்ஷேபித்து மெய்ப்பிக்க வேண்டுமென்று போராடுகிறானே! அதற்கென்ன செய்கிறது?’ என, கலைமகள், ‘நாளைக்குப் பொழுது விடிய ஜாமநேரத்தில் அவனை இடைத் தெருவில் அழைத்து வா,’ என்று சொல்லிப் போனாள்.
- கம்பர்அப்படியே ஒட்டக்கூத்தரையும் குலோத்துங்க சோழனையும் அவ்விடத்திற்கு அழைத்துப் போகையில், ஒரு வீட்டில் வேதமே தயிர்த்தாழியும், வேதாந்தமே தயிரும், சாஸ்திரமே தயிர்கடை மத்தும் கயிறும், இதிகாச புராணங்களே சிறுபிள்ளைகளுமாய் உருவெடுத்துவர, தான் இடைப் பெண்ணாக வடிவுகொண்டு அந்நேரத்தில் தயிர்கடைந்து கொண்டிருந்த வாணியானவள், அவர்கள் சமீபத்தில் வருகையில், அவர்களுக்குக் கேட்கும்படி தன் கிட்டவிருந்த சிறுவர்களை, ‘பிள்ளைகளே! உங்கள்மேல் மோர்த்துமி தெறிக்கப்போகிறது! எட்டவிருங்கள்,’ என்று சொல்ல, கம்பர் ஒட்டக்கூத்தரைக் ‘கேட்டீரா?’ என்ன, அவர் சரிதான்,’ என்று ஒப்புக்கொண்டு, பிறகு, ‘இந்த வீடு குடியில்லாத வீடென்று எனக்கு நன்றாய்த் தெரியுமே! இப்பொழுது ஆரிங்கே வந்திருக்கிறவர்கள்’ அறிவோம்!’ என்று மடியிற் செருகியிருந்த சமுதாட்டை உருவிக்கொண்டு ஓடிப்பார்க்கையில், அங்கே ஒரு ஸ்திரீயும், சில சிறு பிள்ளைகளும் தயிர்த்தாழி முதலியவைகளும் பிரத்தியக்ஷமாகத் தமது கண்ணுக்குத் தோன்றினவுடனே மறைந்து போனமையால், ‘இது சாரதையின் திருவிளையாட்டு!’ என்று கருதி, ஆச்சரியப்பட்டுத் திரும்பினார்.
அப்புறம் கிட்டத்தட்ட
[தொகு]- அப்புறம் கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்குட் கடல் காண் படலத்தினின்று மற்றதையும் ஒட்டக்கூத்தர் பாடி முடித்தார். முடித்ததும் அவர் மனத்தில் ‘கம்பருக்குச் சரஸ்வதி கடாக்ஷம் விசேஷமாயிருக்கிறது; அதனால், அவர் கவிக்கு முன்னே நமது கவி மகிமைப்படவில்லை,’ என்று வெறுப்புண்டாகி, ஒருநாள் தாம் பாடிய இராமாயண புஸ்தகத்தைச் சஞ்சிகையாக உருவிக் கிழித்தெறிந்து கொண்டிருக்கையில், ஏதோ ஒரு நிமித்தத்தாற் கம்பர் அவ்விடத்திற்குப் போய்ப் பார்த்துக் ‘கிழித்தெறியப்படுகின்றதே! இஃதென்னை? என அவர், ‘நான் பாடின ராமாயணம்,’ என்ன, ‘இதை ஏன் கிழித்தெறிகிறீர்?’ என, அவர், ‘வரகவியே கவி மற்றைக் கவி என்ன கவி?’ என்று சொல்லி மற்றதையும் கிழிக்க எத்தனிக்கையில், இவர் அவர் கையிலெடுத்த ஏடுகளைச் சீக்கிரமாய்ப் பறித்துப் பார்த்து, உத்தர காண்டம் என்று தெரிந்துகொண்டு, கிழிக்கவொட்டாமல் தடுத்து, ‘இராக்கதர்களுடைய பிறப்பு வளர்ப்பு முதலானவைகளேயொழிய வேறொன்றும் உத்தரகாண்டத்திற் சொல்லப்படாமையால், அதை நாம் பாட வேண்டுவதில்லை,’ என்றும், ‘அதற்குப் பிரதியாக இவர் பாடினதையே வைத்துக் கொள்ளலாம்’ என்றும், ‘வைத்துக் கொண்டால், இவர் வாக்கும் நமது வாக்குக்கும் உள்ள தாரதம்மியம் உலகத்தாருக்குத் தெரியவரலாம், என்று யோசித்து, ஒட்டக்கூத்தரை நோக்கி, ‘ஐயா! அருமைப்பட்டுப் பாடினதை ஏன் வீணாகக் கிழித்தெறிய வேண்டும்? நான் ஆறு காண்ட மாத்திரம் பாடி, அதன் பின்னே நீர் பாடிய ஏழாவது காண்டமாகிய இந்த இரண்டாயிரம் பாடலையுஞ் சேர்த்துக் கொள்ளுகின்றேன்,’ என்றார். அவர், ‘அப்படியே செய்யும்,’ என்றார்.
- உலகத்தில் யாரானும் படித்தாலும் பிறர் கேட்கப் பிரசங்கித்தாலும், விக்கினமின்றி நிறைவேறுவதற்கும், தத்தம் மனோரதம் கைகூடுவதற்கும், பாரதத்தை விராடபர்வதத்திலிருந்தும், இராமாயணத்தைச் சுந்தரகாண்டத்திலிருந்தும் ஆரம்பிக்கிறது சம்பிராதமாகையால் அவ்வாறே சுந்தர காண்டத்திலிருந்து நல்ல நாட்கொண்டு பாடத்தொடங்கி, அன்றுமுதல் சூரியாஸ்தமன காலத்தில் சந்திய வந்தனக்கடன் கழித்துவிட்டு, சமஸ்கிருத வித்துவான்களாகிய பிராமணோத்தமர்களைக்கூட வைத்துக்கொண்டு, இராமுழுதும் வான்மீகம், வாசிஷ்டம், போதாயனம் முதலிய இராமாயணங்களையும், மற்றப் புராணாதிகளையும் விசதமாகக் கிரமத்துடனே ஆராய்ந்தறிந்துகொண்டு சிறிது நேரம் நித்திரை செய்து, உதயத்திலெழுந்து, நித்திய கர்மானுஷ்டானம் முடித்துக்கொண்டு, தம்மிடத்திலுள்ள கற்றுச்சொல்லிகளிற் சிற்சிலர் ஏடுமெழுத்தாணியுமெடுத்து எழுதும்படி ஆளுக்கு ஐம்பது அறுபது எழுபது எண்பதாக அஸ்தமன பரியந்தம் நாளொன்றுக்கு எழுநூறு செய்யுள் விழுக்காடு ஒரு பக்ஷத்திற்குள் சரஸ்வதியின் அனுக்கிரக விசேஷத்தால் ஸ்ரீராமர் மகுடாபிஷேகம் வரையிற் பதினாயிரம் பாட்டில் ஆறு காண்டமும் பூரணமாகப் பாடினார். நாளொன்றுக்கு எழுநூறு கவி வீதம் பாடினாரென்பதைக் குறித்துச் சொல்லிய பாடல்,
‘கழுந்த ராயுன கழல்பணி யாதவர் கதிர்மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடுசிலை ராகவ அபிநவ கவிநாதன்
விழுந்த ஞாயிற தெழுவதன் முன்மறை வேதிய ருடனாராய்ந்(து)
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்கவி பாடின தெழுநூறே.’
- என்பதாம்.
- இவ்விதமாகக் கம்பர் தாம்பாடின ஆறு காண்டங்களுடனே ஒட்டக்கூத்தர் பாடிய உத்தரகாண்டமும் சேர்த்துப் பன்னீராயிரங் கவிகளையும் எழுதுவித்துச் சோழன் முதலானவர்களுக்கு இராமாயணம் பாடிமுடித்த செய்தியை அறிவித்து, இது விஷ்ணுபரமாகையால் இதை அவ்விஷ்ணுவின் திவ்யதேசங்கள் எல்லாவற்றினும் முக்கியமாகிய திருவரங்கம் பெரிய கோயிலில் அரங்கேற்றம் செய்யவேண்டும்,’ என்று அவர்களனுமதிபெற்று ஸ்ரீகோசத்தை (புஸ்தகத்தை) எடுப்பித்துக்கொண்டு ஸ்ரீரங்கத்திற்குப் போய், அக்காலத்தில் அந்த ஸ்தலத்திலிருந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் செய்தி தெரிவிக்க, அவர்கள் மேற்படி காவியத்தில் நரஸ்துதி பண்ணப்பட்டிருக்கிறதென்பதனாலும், மற்றுஞ்சில அபிப்பிராயத்தினாலும் அசூயை கொண்டு, அக்கருத்தை வெளிப்படுத்தாமல், ‘சம்ஸ்கிருத பாஷையாயிருந்தால் ஒன்றும் யோசனை பண்ண வேண்டுவதில்லை; இது தமிழாதலால் எப்படி இருக்குமோவென்று எங்களுக்கு அனுமானமாயிருக்கிறது; நீரோ, பிரபலவித்துவான்! உமது பாண்டியத்தைக் குறித்தும், யோக்கியதையைக் குறித்தும் சொல்கிறதற்கு நாங்கள் அருகர்களல்லேம்; தமிழிலே மகா வித்துவான்களாக இருக்கிறவர்கள் தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்ளும், மற்றும் சிற்சில பெயர்களுமாதலால், அவர்கள் குற்றஞ் சொல்லாதபடி கொஞ்சம் பிரயாசைப்பட்டாவது அங்கே போய் அவர்களுக்குக் காட்டி, அவர்களுடைய கையொப்பம் வாங்கி வந்தால், உமது காவியத்திற்கும் உமக்கும் அதிக கௌரவமாயிருக்கும் என்றார்கள்.
அவர்கள் சொற்படியே கம்பர் சிதம்பரத்திற்குப் போய்த் தில்லை மூவாயிரவர்களிற் சிலரைக்கண்டு இந்தச் செய்தியை அறிவிக்க, அவர்கள், ‘நாங்கள் மூவாயிரம் பெயரும் கூடினாலல்லாமல் ஏகதேசத்தில் இதற்கு உத்தரம் சொல்லுகிறதெப்படி? நீர் இன்னாரிடத்திற் போம்’ என்று சிலரைக் குறித்து, அவர்களிடத்தில் அனுப்ப, அங்கே போனபொழுது அவர்களும், ‘மூவாயிரம் பெயர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆகவேண்டிய காரியத்திற்கு நாங்களென்ன செய்யலாம்?’ என்று வேறுசிலரைக் குறித்து அவர்களிடத்திற்போம்’ என்று அனுப்பினார்கள். அவர்களும் மற்றுமுள்ள யாவரும் இந்தப்படியே பலரிடத்திலும் போகச்சொல்ல, கம்பரும் அங்கங்கே ‘பாவோடுங் காலாக’ நாள்தோறும் போய்ப்போய்க் காலோய்ந்து போனதேயல்லாமல், ஒரு பயனுமில்லை. எவர்களுடனே சொன்னாலும், ‘மூவாயிரம் பெயரும் ஏககாலத்திலே கூடினால்தான் உமது எண்ணம் முடியும்; இல்லாவிட்டால், ஒரு யுகஞ்சென்றாலும் நீரெடுத்த காரியம் சித்தியாகமாட்டாது,’ என்று சொல்லக்கேட்டு, ‘இஃதென்ன! ஊர்கூடிச் செக்குத்தள்ள வேண்டியதாயிருக்கிறதே!’ என்று வெகுநாளாக வியாசங்கப்பட்டு, ஒருநாள் இராத்திரி போஜனஞ்செய்து சயனித்துக் கொள்ளும் பொழுது, தில்லைத்திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளிய ஸ்ரீகோவிந்தராஜப் பெருமானைத் தியானித்து, ‘ஓ!ஜனார்தனா, பக்த பராதீனா, ஆபத்பாந்தவா, அநாதரட்சகா, எம்பெருமானே அடியேன் இலவு காத்த கிளிபோல எத்தனைக் காலமாகத் தில்லை மூவாயிரவருடைய தலைவாசல் காப்பேன்? ஆரையடுத்தாலும், ‘நமக்கென்ன!’ என்று உபேக்ஷையாயிருக்கிறார்களேயல்லாமல், ஒருவர்க்காவது இடைப்பற்றி எள்ளளவும் சிந்தையில்லையே! இந்தக் காவியம் லோகப்பிரசித்தமாகவேண்டுமென்று உனக்குத் திருவுளமில்லையோ? நீ சூத்திரதாரி; நான் சூத்திரப்பிரதமை; ஆதலால், நீ அசைத்தபடியல்லது நானாக இயங்க மாட்டுவனோ? உன் சங்கற்பம் அப்படியிருந்தால், எளியேன் என்ன செய்வேன்!’ என்று அதிக விசனத்துடனே கண்ணுறக்கங் கொண்டார். அப்பொழுது அவருடைய சொப்பனத்தில் அந்தத் தீனதயாளன் எழுந்தருளி, ‘ஏன் பிள்ளாய் துக்கிக்கிறாய்? நீ இராமாயணம் அரங்கேற்ற வேண்டித் தில்லை மூவாயிரவரை, சபைகூட்டுவிப்பதற்காக வெகு பிரயாசைப்பட்டாய்; இனி உனக்கொரு வருத்தமுமில்லை; இதுவரையில் நீ பசியேப்பக்காரனாயிருந்தாய்; அவர்கள், புளியேப்பக்காரர்களாயிருந்தார்கள்; ஆகையால், உனக்குண்டான ஆவசியகம் அவர்க்கில்லாமற் போயிற்று. நாளை உதயத்திலே அத்தில்லை மூவாயிரவரில் ஒருவருடைய பிள்ளை பாம்புதீண்டி இறந்து போகும்; அதைத் தகன சம்ஸ்காரம் செய்வதற்காக அவர்கள் மூவாயிரம் வீட்டுக்காரரும் அந்தப்பிள்ளை இறந்த வீட்டினிடத்தில் வந்து கூடுவார்கள்; அத்தருணத்திற்போய் நீ பாடின இராமாயணத்தில் நாகபாசப் படலத்தை எடுத்து இன்ன இன்ன பாடலை வாசித்தால், விஷதிருஷ்டமான பிள்ளை பிழைக்கும்; அதைக்கண்ட மாத்திரத்தில் அவர்கள் தடையின்றிக் கையொப்பம் கொடுப்பார்கள்’ என்று அருளிச் செய்தார்.
- விடிந்தபொழுது பெருமாள் அருளிச்செயலின்படி கம்பர் எழுந்துபோய் மூவாயிரம் பெயருங் கூடியிருப்பதைக் கண்டு, ‘இராமாயணம் அரங்கேற்ற வேண்டும்,’ என்ன அவர்கள், ‘நாங்கள் குழந்தையைப் பறிகொடுத்துப் பரிதவிக்கிற சமயத்திற் ‘கிடக்கிறதெல்லாங் கிடக்கட்டும், கிழவனையெடுத்து மனையில் வையுங்கள்’ என்பதாக, உம்முடைய இராமாயணத்தை அரங்கேற்ற வேண்டுமென்கிறீர்! இதுதானா ஏற்றசமயம்?’ என்றார்கள். இவர், ‘நான் பன்னிரண்டு வருஷம் காத்ததற்காக இன்றைக்குத் தானே நீங்கள் மூவாயிரம் பெயரும் ஒருசேரக் கூடும்படி சம்பவித்தது? இது தப்பினால் இனி எந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சமயம் கிடைக்கும் என்று சொல்லி, ‘குழந்தை எவ்விதத்தால் இறந்தது?’ என்ன, அவர்கள், ‘பாம்பு கடித்து இறந்தது; விஷமிறங்குதற்குத் தலையிலே குடாரியிட்டும் மற்றும் எத்தனையோ மணிமந்திர ஔஷதங்களைச் செய்தும் அனுகூலப்படவில்லை,’ என்றார்கள். கம்பர், ‘அந்தப் பிள்ளையை நான் பார்க்கவேண்டும்,’ என்ன, அவர்கள் எடுத்துவந்து காண்பிக்க, இவர் கடிவாயைப் பார்த்துப் ‘பல் ஒன்று இரண்டு மூன்று வரைக்கும் பதிந்தாற் பயமில்லை; இது பாம்புக்குள்ள காளி, காளாத்திரி, யமன், யமதூதி ஆகிய நான்கு பற்களும் பதிந்துள்ளபடியால், அசாத்தியமென்றே சொல்வார்கள். பிரம்புகொண்டு அடிக்கடி உடம்பில் தழும்பு கண்டாற் சாத்தியமாகும். அப்படி ஏதாவது செய்துபார்த்தீர்களா?’ என்ன, அவர்கள், ‘அதுவுஞ் செய்தோம்; கொஞ்சமாவது தழும்பு காணவில்லை’ என்றார்கள். அப்பொழுது ஊர்க்குடுமி வந்து, ‘ஐயா, இந்தக் குழந்தை எண்ணெய் தேய்த்துக்கொண்டு தலைமுழுகிவருமளவிற் கடித்தபடியினாலே விஷம் அதிசீக்கிரமாகத் தலைக்கேறிப் பற்கள் கருகக் கண் பஞ்சடைந்து போயிற்று. இனி என்ன பிரயத்தனஞ் செய்தாலும் பலிக்கிறது பிரயாசமே’ என்றான். கம்பரும், ‘மெய்தான்; அப்பியங்கனம் பண்ணியிருந்தாலும், மதுவுண்டிருந்தாலும் சீக்கிரமாக விஷஞ் சிரசுக்கேறிவிடும். எப்படியிருந்தாலுமிருக்கட்டும்; இப்பொழுது பகவத் கடாக்ஷத்தால் இந்தப்பிள்ளை உயிர்பெற்று எழுந்திருக்குமானால், நமது அபீஷ்டப்படி நடக்கிறீர்களா?’ என்ன, அவர்கள், ‘ஐயா! நீர் செத்தவர்கள் பிழைப்பார்களென்று சொல்வது ஆச்சரியமாயிருக்கிறது! ஒருவேளை அந்தப்படி நடந்தால், உமது இஷ்டத்திற்கு ஏற்க ஆடங்கமின்றி நடந்துகொள்வோம்,’ என்றார்கள்.
- அதுகேட்டுக் கம்பர் பகவானை மனத்தில் ஸ்மரித்துத் தாம்பாடிய இராமாயண புத்தகத்தை அவிழ்த்து, நாகப்பாசப் படலத்தை எடுத்து, லக்ஷ்மணன் முதலானவர்கள் இந்திரஜித்துப் பிரயோகித்த நாகபாசத்தாற் கட்டுண்டு மூர்ச்சையாய்க் கிடக்கையில், சகல புவன கர்த்தாவாகிய ஸ்ரீமந் நாராயணன் பூர்வம் சங்கற்பித்த பிரகாரம் கருடன் வந்ததனால், அந்த ஆபத்து நிவாரணமான சந்தர்ப்பத்திற் சில பாடல்களையெடுத்து, அவற்றுள்,
“பல்லாயிரத்தின் முடியா தபக்க மவைவீ சவந்த படர்கால்
செல்லா நிலத்தி ளருளோ சொல்ல வுடனின் றவாளி சிதறுற்(று)
எல்லா மவித்து முணர்வோடும் எண்ணி யறனே விளைக்கும் உரவோண்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடுவான மேனி வடுவும்,’’1
“வாசங் கலந்த மரைநா ளநூலின் வகையென் பதென்னை மழையென்(று)
ஆசங் கைகொண்ட கொடைமீ ளியண்ணல் சரரா மன்வெண்ணெ யணுகும்
தேசங் கலந்த மறைவா ணர்செஞ்சொ லறிவாளர் என்று முதலோர்
பாசங் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துறந்த உரகம்”2
1. இதன்பொருள்: பன்னக வைரி (பன்னகம்=பாம்பு; வைரி=பகைவன் அதாவது கருடன் என்பதாம்.) என்று சொல்லப்பட்ட கருடனாகிய ஆபத்சகாயன் திருப்பாற்கடலில் இருந்து கிருபையுடனே அநேகமாயிர காலம் கழிந்தாலும் ஓர் இறகேனும் உதிராது அழியாது இருக்கின்ற தனது கொடிய சிறகைத் திகந்தமட்டும் விரித்து அசைத்துக்கொண்டு, அதிவேகமாய்ப் பறந்துவர, அந்த சிறகடிக் காற்றானாது யுத்தபூமியிற் பிரவேசிக்க, அதனால் அங்குள்ளவர்களுடைய சரீரத்தை இறுக்கி ஒடுக்கி நிலைபெயரவொட்டாமற் கட்டியிருந்த நாகபாசங்கள் பட்டுப்பட்டென்று அற்றுப்போயின. அற்றவுடனே, சகல இந்திரியங்களையும் அடக்கி, மூவாசைகளையும் பற்றறவிட்டு, ஆத்தும உஜ்ஜீவனம் இதுவேயென்று விவேகத்தோடு நிச்சயித்து, எதியாச்சிரம தர்மத்தையே மேன்மேலும் வளர்க்கின்ற திடசித்தமுடைய ஒரு தத்துவஞானி விஷயத்தில், மூடாத்துமாக்கள் அகங்காரத்தில் விளைக்கும் பழிபாவங்கள் அவனை அணுகாது மாயுந்தன்மைபோல, அந்நாகபாசத்திற் கட்டுப்பட்ட இளையபெருமாள் முதலினோருடைய திருமேனி வடுக்களுந் தோன்றாமல் மாறிப்போயின’ என்பதாம்.
2. இதன் பொருள்: மகா பாதகனாகிய அந்த இந்திரஜித்துப் பிரயோகித்த நாகபாசந் தொலைந்தவகை எப்படியெனில், சிலர் தாமரைத் தாளிலிருந்து எடுக்கும் மெல்லிய நூல்போல் அற்றது என்பார்கள்; அஃது ஆச்சரியமன்று! மேகம் மழை சொரிகின்றதென்று ஆசங்கிக்கும்படி அமிதமாகக் கொடுக்கின்ற பெருங்கொடை வள்ளலாகிய சடையப்ப முதலியாருடைய தம்பிகண்ணப்ப முதலியாருக்குப்பின் பிறந்த சரராம முதலியானவர் சதாகாலமும் பிரபலமாகச் செய்யும் அன்னதானத்திற் பற்பல தேசங்களிலுமிருந்து, திருவெண்ணெய்நல்லூரை நாடிவரும் வைதிகப் பிராமணர்களும், வித்துவஜனர்களும் அவர்களைச் சார்ந்த பந்துவர்க்கத்தாரும், உசிதமான பஞ்சபட்சிய பரமான்னம் திருத்தியாகப் புசித்து, அவர்களுடைய பசி தொலைவது போலவே தொலைந்து போயிற்று என்பதாம்.”
- என்னும் பாடல்களையும், மற்றுஞ்சில பாடல்களையும் வாசித்து,
“ ஆழியான் பள்ளி அணையே! அவன்கடைந்த
வாழி வரையின் மணித்தாம்பே! - ஊழியான்
பூணே! புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுவித்த
நாணே! அகல நட.”
எனவும்,
மங்கையொரு பாகன் மணிமார்புள் ஆரமே
பொங்குகடல் கடைந்த பொற்கயிறே! - திங்களையுஞ்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
ஏறிய பாம்பே இறங்கு.”
எனவும்,
“பாரைச் சுமந்த படவரவே! பங்கயக்கண்
வீரன் கிடந்துறங்கு மெல்லணையே - ஈரமதிச்
செஞ்சடையான் பூணுந் திருவா பரணமே!
நஞ்சுடையாய் தூர நட.”
- எனவும், நூதனமாக மூன்று வெண்பாக்கள் பாடி,அனந்தன், வாசுகி, சங்கரன், குளிகன், பதுமன், மகாபதுமன், தட்சகன், கார்க்கோடகன் எட்டுத் அஷ்டமகா நாகமுதலான சகல சர்ப்பங்களுக்கும் அதிபதியாகிய ஆதிசேஷனைப் பிரார்த்தித்தவுடனே, அங்கொரு புற்றிலிருந்து ஒரு சர்ப்பம் வெளிப்பட்டு வந்து, யாவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதை அக்குழந்தையைக் கிட்டி, முன்பு கடித்தவாயில் மறுபடி கடித்து, தலைக்கேறின விஷத்தை மீட்டுக்கொண்டு திரும்பிச் சிறிது தூரம் போய் இறந்தது. பின்பு பிரக்கினை தப்பிக்கிடந்த குழந்தைக்கு உயிர் வந்தது. அது நித்திரை செய்து எழுந்ததுபோலக் கால்கைகளை அசைத்து, உசுவாச நிசுவாசத்துடனே கண்விழித்தெழுந்தது. இதைக் கண்டவர்களெல்லாம், கம்பரை, ‘விஷகண்டனாகிய சாட்சாது பரமசிவனே இப்படி மானுடவுருவெடுத்து வந்தான்!’ என்று அதிசயித்து, ஸ்துதி செய்தார்கள். எக்காலத்திலும் எப்படிப்பட்டவர்களையும் லக்ஷியம் பண்ணாத தில்லை மூவாயிரவர்கள், கம்பரை உள்ளபடியே மகாத்துமாவென்று மதித்துப் பயந்து, “நாங்கள் இவர் மகிமை தெரியாமல் காலதாமதம் பண்ணி, இவர் விஷயத்தில் அபசாரப்பட்டோம்!” என்று அனுதபித்து, கம்பரை மிகவும் உபசரித்தார்கள்.
பிறகு இறந்த பிள்ளைக்காக
[தொகு]- பிறகு இறந்த பிள்ளைக்காக மயானத்தில் அடுக்கிய காஷ்டத்தின்மேல் அப்பாம்பைக் கொண்டுபோய் வைத்துத் தகன சஞ்சயனம் முடித்துவிட்டு, முன்பு, ‘நமது காலின்மேல் வண்டியோடினது என்ன?’ அசட்டையாயிருந்தவர்கள், ‘தலையில் நெருப்பு விழுந்தவர்கள் போலப்’ பரபரப்பாக வந்து, கம்பரிடத்திலிருந்த இராமாயண புஸ்தகத்தை வாங்கித் தாங்களே அவிழ்த்துத் தனித்தனியே அனைவரும் பார்வையிட்டு, சொல்நடை, பொருள்நடை, கற்பனை, கருத்து, சுவை, ஓசை முதலானவைகளையும் விசதமாக ஆராய்ந்தறிந்து, ‘தமிழில் இந்தக் காவியத்திற்கொப்ப வேறொரு காவியமும் இருக்கிறதா!’ என்று நினைத்து மிகவும் வியந்து, தங்களுக்குள்ளே பரமானந்தமடைந்து, ‘குணத்தை மாற்றக் குருவில்லை’ என்பதற்கேற்ப, அவர்கள் சுவாபம் போகாமற் கம்பரை நோக்கிச் சில கேள்விகள் கேட்கத் தலைப்பட்டார்கள்.
“நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.”
என்னும் பாடலில், “நாடிய பொருள் கைகூடும்’ என்ற முதல்வாக்கியத்திலேயே, பின்னே சொல்வனவெல்லாம் அடங்கியிருக்க, ‘ஞானமும் புகழுமுண்டாம்’ என்று மிகைபடக் கூறியதென்னை?’’ என, கம்பர், “பொருளென்பது’ ஒரு பொருள், இருபொருள், முப்பொருள், நாற்பொருள், ஐம்பொருள் முதலியவாகப் பலவகைப்படும். அவைகளுக்குள், ஒருபொருள்-மோக்ஷம்; இருபொருள்- கல்வி, செல்வம்; முப்பொருள்- சித்து, அசித்து, ஈசுவரன்; நாற்பொருள்- அறம், பொருள், இன்பம், வீடு; ஐம்பொருள்- பரம், வியூகம், விபவம், அந்தரியாமித்துவம், அர்ச்சை என்னும் அர்த்த பஞ்சகம் ஆம். உலகத்தார் பிரதானமாக நாடும்பொருள், கல்விப் பொருள் செல்வப்பொருள் இரண்டுமே; ஆதலால், இவ்விடத்தில் அவ்விரு பொருளையுமே சுட்டி ‘நாடிய பொருள் கைகூடும்’ என்றும், அவற்றுட் கல்வியால் ஞானமும், செல்வத்தால் புகழுமுண்டாவது பற்றிச் சாதன சாத்திய முறையாக அவற்றின்பின், ‘ஞானமும் புகழும் உண்டாம்’ என்றும், ஞானத்தால் மோட்சமும், புகழினாற் புருஷகாரியாகிய இலக்குமி கடாட்சம் உண்டாவது பற்றி அவைகளின் பின், ‘வீடியல் வழியதாக்கும், வேரியங்கமலைநோக்கும்’ என்றும், இப்பயன் அனைத்தும் எவர்களுக்குச் சித்திப்பது எனில், வாழையடி வாழையாக வந்து அனேகந் தலைமுறை அழிவின்றி அபிவிர்த்தியாய் வரும் இராக்கத சேனைகள் நீறாகி நாசமடையும்படி வென்று வெற்றிமாலை சூடிய உக்கிர கோதண்டத்தைத் தாங்கிய ஸ்ரீராகவனுடைய புயபராக்கிரமத்தைச் சொல்லுகின்றவர்களுக்கே என்பது தோன்ற, ‘நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை/ சூடிய சிலைஇராமன் தோள்வலி கூறுவோர்க்கே’ என்றுஞ் சொல்லியது,” என்றார்.
- பின்னும் அவர்கள், “சகல கிரந்த கரத்தர்களுடைய சங்கேதமும், கடவுள் திருவடியைக் குறித்தே வாழ்த்துதல் செய்வதாயிருக்க, நீர் அத்திருவடியை வாழ்த்தாது ‘தோள்வலி கூறு வோர்க்கே’ என்று மாறுகொளக் கூறலாய்த் தோளைப் பற்றிச் சொல்லியதென்னை?” என்ன, கம்பர், “தாடகையைச் சங்கரித்து, சுவாகுவைக் கொன்று, கௌசிகமுனி வேள்வியைக் காத்து, மிதிலையிற் சிவனது வில்லை ஒடித்து, சீதையைத் திருமணம் முடித்து அயோத்திக்கு மீண்டும் வரும்வழியிற் பரசுராமனை வென்று, வனத்தில் கரதூஷணாதியரை அதமாக்கி, மாயமானைக் கொன்று, கவந்தனை மாய்த்து, மராமரத்தைத் தொளைத்து, வாலியை வதைத்து, சுக்கிரீவனுக்கு அரசளித்து, மகாராக்ஷனை மடித்து, இராவணாதி இராட்சதர்களை யெல்லாம் கருவறுத்து, விபீஷணனுக்கு முடிசூட்டியது இராகவனது புயபலமேயாதலால், ஆதிதொடங்கி அந்தம் மட்டும் அவன் தோளாண்மையைச் சொல்வதே இராமாயணம் என்பது ஆராய்வோர்க்கு நன்கு விளங்குதற் பொருட்டு, ‘இராமன் தோள்வலி’ என்றும், இராமாயண காலக்ஷேபஞ் செய்வோரைக் ‘கூறுவோர்’ என்றும் குறிப்பித்ததாம்” என்றார்.
- அதற்குமேலும், அவர்கள் ஆங்காங்கு வினாவிய வினாக்களுக்கெல்லாம் கம்பர் தக்கவாறு மறுமொழி சொல்லக் கேட்டு, அவருடைய வித்துவ சாமர்த்தியத்தைக் குறித்து மெச்சிச் சந்தோஷப்பட்டு, “மேற்படி, நாடிய பொருள் கைகூடும்’ என்ற பாடலில், ‘நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய’ என்றதற்கு, நீர்வேறெதைச் சொன்னாலும் சொல்லிக்கொள்ளும்; அந்த ராட்சச சேனை எங்கள் சுவாமியின் நீறுபட்டுத்தான் அழிந்தது” என்று சாதுரியமாகச் சொல்லி, ‘சரி சரி’ என்று ஒப்புக்கொண்டு கையொப்பங்கொடுத்தார்கள். அதைக்கம்பர் பெற்றுக்கொண்டு வந்து ஸ்ரீரங்கத்தாருக்குக் காண்பிக்க, அவர்கள் அதிசயப்பட்டுப் பின்னும் ‘திருநறுங்கொண்டை’ என்னும் ஸ்தலத்திலுள்ள ஜைனர்களுக்குள் அனேகர் தமிழிற் பெயர்பெற்ற வித்துவான்களும், சமயத் துவேஷிகளுமாகையால், இதைப்பற்றி ஏதாவது குற்றஞ்சொல்ல வகை தேடுவார்கள்; அவர்கள் வாயை அடக்க அவர்களிடத்தில் கையொப்பம் வாங்கி வந்தால் யுக்தமாயிருக்கும்,” என்றார்கள்.
- இவர், ‘நல்லது!’ என்று அவ்விடத்திற்குப் போனபொழுது, அவர்கள் இராமாயணம் பாடித் தில்லை மூவாயிரவர் சமுகத்தில் பாம்பு தீண்டி இறந்த பிள்ளையைஉயிர்ப்பித்து அரங்கேற்றிய கம்பர் வந்தார் என்கிற செய்தி கேள்விப்பட்டவுடனே, என்றுங்காணாத பொருளைக் கண்டவர்கள்போலப் பரம சந்துஷ்டியடைந்து, எதிர்கொண்டழைத்துப்போய், உபசரித்து, ‘எங்கே வந்தீர்கள்?’ என்ன, கம்பர், ‘நாம் பாடின இராமாயணத்திற்கு உங்கள் கையொப்பம் வாங்க வந்தோம்,’ என்ன, அவர்கள், “தில்லை மூவாயிரவர்களுடைய கையொப்பம் வாங்கிய உமக்கு எங்கள் கையொப்பம் அத்தனை சிலாக்கியமானதோ? எங்களுக்குக் கௌரவமேயன்றி வேறன்று” என்று சொல்லி, இராமாயண காவியத்தை அவ்வவ்விடங்களில் ஒரு பார்வையிட்டுத் தாங்களும் சில கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்துக் கம்பரை நோக்கி,
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.”
என்ற பாடலில், எப்பொருட்கும் இறைவன் செயலை விளையாட்டு என்று என்ன நிமித்தத்தாற் சொன்னது? ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள் விளையாடுவாரானால், அவரைச் சிறுபிள்ளை என்றல்லவோ நினைக்க வேண்டியிருக்கிறது?’ என்றும், ‘எல்லாம் வல்ல கடவுள் கிர்த்தியம், சிருஷ்டி, திதி சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என ஐந்துவகைப்படும் என்று ஆகமங்களிற் சொல்லியிருக்க, முத்தொழில் என்றது என்ன? மூன்று செய்யுளாற் கடவுள் வணக்கம் சொல்லவேண்டியது என்னை? ஒன்றே போதாதோ?’ என்றும், இம்மூன்று கேள்வி கேட்டார்கள். இம்மூன்றில் முதல்கேள்விக்குக் கம்பர், ‘சகலாண்ட சராசரங்களையும் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் அவர்க்குப் பாரமானவையல்ல; அலட்சியமாகிய விளையாட்டுச் செய்கைபோல இச்சா மாத்திரத்தாற் சாதாரணமாய் நிகழ்வனவாதலால், ‘விளையாட்டு’ என்றோம்; அன்றியும் விளையாட்டாகச் செய்யும் செய்கையே இவ்வளவாக வியக்கத்தக்கதாயிருக்குமாயின், அவர் வேண்டுமென்று கண்ணூன்றிச் செய்யும் செய்கை எப்படிப்பட்டதாயிராது? அவாங்மனகோசரமாய் இருக்குமல்லவோ?’ என்றும்,
இரண்டாவதற்கு, ‘பஞ்சகிர்த்தியங்களில் திரோபவம் சங்காரத்திலும், அனுக்கிரகம் ஸ்திதியிலும் அடங்குதலாலும், வேதத்திற் சொல்லப்படுவன முத்தொழிலேயாதலாலும் அவ்விரு தொழிலும் வேறுபிரித்து உரைக்க வேண்டா,’ என்றும்;
மூன்றாவதற்கு, ‘வஸ்து நிச்சயம் பண்ணுமிடத்து நாயிரூப கிரியைகளை ஆவசியமாகச் செல்லவேண்டுமாதலால், அவற்றுட் கடவுளின் கிரியை, உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ என்ற பாடலினாலும், குணம், ‘சிற்குணத்தர் தெருவரு நன்னிலை’ என்ற பாடலினாலும், நாம்மஃம் ‘ஆதியந்தமரியென யாவையும்’ என்ற பாடலினாலும் சொல்லப்பட்டன,” என்றும் சமாதானமாக உத்தரம் சொல்லக்கேட்டு, அவர்கள், ‘சரஸ்வதி அமிசமாகிய உமது வல்லமையை நாங்கள் என்னென்று சொல்லுவோம்! என்று அதிசயித்து, பின்பு, ‘பாரகாவியமாதலால், இதில் எங்களுக்கு ஆதாரம் ஏதாவது உண்டோ?’ என்ன, இவர் ‘உண்டு’ என்று, யுத்தகாண்டத்தில் இந்திரஜித்து வதைப்படலத்தில், ‘இளையபெருமாள் ஏவிய பாணத்தால் இந்திரஜித்துத் தலையறுபட்டு விழுந்தபோது, அவனால் முன்பு உபத்திரவப்பட்ட தேவர்கள் நிர்ப்பயமாய் ஆகாசவீதியிற் கூடி நின்று, வில்லெடுத்துப் போர்செய்யும் வீரர்களுக்கெல்லாம் மேலான வீரனாகிய இந்திரஜித்து இறந்தபடியினாலே இலங்காபதி நெடுங்காலம் அவிச்சின்னமாய்ச் சென்றுவந்த அரசாட்சியானது இனி ஒருபொழுதும் செல்லமாட்டாது என்று பெருங்களிப்புற்று, அரையில் உடுத்த உடையையும், தோள்மேலிட்ட உத்தரீயம் முதலானவைகளையும் ஒக்க உரிந்து, பந்துபோலச் சுருட்டி மேலே வீசியெறிந்து, கொல்லாவிரதிகளென்னும் சமணர்களுடைய உபாசனா தேவர்களாகிய அருகர் கூட்டம் போல நிர்வாணிகளாய் ஆனந்தக் கூத்தாடினார்கள்,’ என்னும் கருத்தை உள்ளிட்ட,
“வில்லாள ரானார்க் கெல்லா மேலவன் விளித லோடுஞ்
செல்லாதி லங்கை வேந்தர்க் கரசெனக் களித்த தேவர்
எல்லாரும் தூசு நீக்கி யெழுந்தவ ரார்த்த போது
கொல்லாத விரதத் தார்தங் கடவுளர் கூட்ட மொத்தார்”
- என்ற பாடலைச் சொன்னார். அதையவர்கள் கேட்டு வியந்து, கையொப்பங் கொடுத்தார்கள்.
அக்கையொப்பத்தைக் கொண்டுவந்து...
[தொகு]அக்கையொப்பத்தைக் கொண்டுவந்து காட்டியும், ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள், “மாவண்டூரிற் பண்டித சிரேஷ்டனாகிய ஒரு கருமான் இருக்கின்றான்; அவனுடைய கையொப்பமும் வாங்கி வாரும்,’ என்றார்கள். கம்பர் மாவண்டூருக்குப் போய், அந்தக் கருமானுக்குத் தமது வரவை அறிவிக்க, அவன், ‘இதற்காக நீங்கள் இவ்வளவு தூரம் பிரயாசப்படு வரவேண்டுமா? அப்படிப்பட்ட தில்லை மூவாயிரவர்களும், திருநறுங்கொண்டையிலுள்ள சமணர்களும் அங்கீகரித்த நூலுக்குச் சங்கை என்னையிருக்கிறது? மேலும், சாரதா விக்கிரகமாயிருக்கிற உங்களுக்குச் சிற்றறிவுள்ள நான் எம்மாத்திரம்!’ என்று சொல்லி, புஸ்தகத்தை அவிழ்த்துச் சிற்சில சந்தர்ப்பங்களுற் சோதித்து, இரண்டொரு கேள்வி கேட்டுப் பிறகு, ‘இந்த மகா காவியத்தில், எங்களுக்கு ஆஸ்பதம் ஒன்றுமில்லையா?’ என்று கேட்க, கம்பர், ‘உங்களுக்கு இல்லாமற் போவானேன்?’ என்று, ‘இராமராவண யுத்தத்தில் பிரதாபலங்கேசுரன் இராமர்மேல் மாயாஸ்திரப் பிரயோகஞ் செய்த பொழுது அவர் விபீஷணாழ்வானை நோக்கி, ‘இஃதென்னை?’ என, விபீஷணன், ‘கைளுமையா; கருக்கொண்டு நிறைந்த கார்மேகம் போன்ற கரிய திருமேனியையுடைய ஸ்ரீராமரே, திக் கஜங்களின் கொம்புகளை ஒடித்த இராவணன், இழைநுழையும் ஊசி ஒன்றை உண்டாக்கி, அதைக் கருமாரிடத்திற் கொண்டுபோய்க் காட்டி இவ்வூசி நல்ல வேலைப்பாடாகச் செய்யப்பட்டது. இதைத் தக்க விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்,’ என்று கொல்லத்தெருவில் ஊசி விற்கிறவர்களைப் போல, மூலப் பிரகிருதி மாயைகளுக்கும் உற்பத்தி ஸ்தானமாயிருகின்ற மாயராகிய உம்மேலே தானே மாயாஸ்திரத்தைப் பிரயோகித்தான்,’ என்று சொன்ன இக்கருத்தை உள்ளிட்ட,
“இருப்புக் கம்மியர்க் கிழைநுழை யூசியொன் றியற்றி
விருப்பிற் கோடுரால் விலைக்கெனும் பதகரின் விட்டான்
கருப்புக் கார்மழை வண்ணவக் கடுந்திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீளகு மாயை.”
- என்ற பாடலைச் சொன்னார். அதற்கவன் சந்தோஷப்பட்டுக் கையொப்பங் கொடுத்தான்.
அதைக்கொண்டு வந்து காண்பித்த பொழுது, ஸ்ரீரங்கத்தார், ‘தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்ற தாசி பிரபல வித்துவாமிசையாய் இருக்கிறாள்; அவள் அதிக கர்வமுடையளாகையால், ஏதாவது பிதற்றுவாள். அவள் கையொப்பமும் வாங்கி வந்தாற் சர்வோத்தமாயிருக்கும்,” என்று சொல்ல கம்பர், “ஆராயினுமென்னை?
“கடைநிலத் தோராயினுங் கற்றுணர் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.”
- என்பதனால், தோஷமில்லை,” என்று அவளிடத்திற்குப் போனபொழுது அவள் உளம் நடுங்கித் ‘தேவரீர் இவ்வளவு தூரம் வந்தது ஆர் செய்த பாக்கியமோ! ஆயினும், என்ன காரியம்?’ என, இவர் தமதுகருத்தை வெளியிட, ‘இதற்குத் தானா இத்தனை பிரயத்தனம்! நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே அடியாளை வரும்படி நியமித்தால் தலையாலே நடந்து வாரேனா? இஃதென்னை அபசாரம்!’ என்று வருத்தமுற்று, மற்றும் ‘உமது கல்விக்கு முன்னே எளியேன் கல்வி எம்மாத்திரம்? சூரியனுக்கு முன்னே மின்மினியும், கடலுக்கு முன்னே கால்வாயும் போல்வதுதானே?’ என்று நைச்சியமாகச் சொல்லிப் பின்பு, ‘இந்தப் பெருங்காப்பியத்தில் எங்களுக்கெவ்வளவாவது பற்றுண்டோ?’ என்னக் கம்பர், ‘அனேக இடங்களில் இருக்கின்றன; அவற்றுள் ஒன்று சொல்லுகிறோம்; கேள்,’ என்று, பாலகாண்டம் மிதிலைக்காட்சிப் படலத்தில், ‘மிதிலை நகரத்தின் ராஜவீதியிலுள்ள விசித்திரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே விசுவாமித்திர முனிவருக்குப் பின்னே சென்ற இராம லக்ஷ்மணர்கள், அங்கங்கே அனந்தம் ஸ்திரீகள், ஆணி முத்திழைத்த பந்துகளை எறிந்து விளையாடுகையில் அப்பந்துகள், சரீரசம்பந்தத்தால் உண்டாகும் போக சுகத்தைத் தங்களைத் தழுவும் புருஷர்களுடனே சமானமாய்த் தாமும் அனுபவிப்பதல்லாமல், அதற்காக அவர்களிடத்தில் விலையும் பெற்றுக் கொள்ளும் சாமர்த்தியவதிகளாகிய வேசையருடைய துவிதப்பட்ட மனம் போலவும், அடுத்த பொருள்மயமாய்க் காண்கின்ற பளிங்கு போலவும், மைதீட்டிய கண்ணொளி பாய்ந்த பொழுது கறுத்த நீலப்பந்தாகவும், செங்காந்தள் மலர் போன்ற கையில் வந்து சேர்ந்த பொழுது சிவந்த பவளப்பந்தாகவும் காட்டும் அதிசயத்தைக் கண்டார்கள்,’ என்னும் கருத்தை உள்ளமைத்துப் பாடிய,
“மெய்வரு போகம் ஒக்க வுடனுண்டு விலையும் கொள்ளும்
பையர வல்கு லார்தம் உள்ளமும் பளிங்கும் போல
மையரி நெடுங்கண் நோக்கம் படுதலுங் கருகி வந்து
கைபுகிற் சிவந்து காட்டுங் கந்துகம் பலவுங் கண்டார்.”
என்ற பாடலைச் சொன்னார். அது கேட்டு அவள் மனமகிழ்ச்சி கூர்ந்து, ‘உங்களுக்கு நான் கையொப்பம் கொடுப்பது மரியாதையன்றே!’ என்று ஸ்தோத்திரமாக,
”அம்பரா வணிசடை யரன யன்முதல்
உம்பரால் முனிவரால் யோக ராலுயர்
இம்பராற் பிணிக்கரு மிரம வேழஞ்சேர்
கம்பராம் புலவரைக் கருத்தி ருத்துவாம்.”
என ஒரு பாடல் பாடிக்கொடுக்க, கம்பர் அதைக் கொண்டுவந்து நம்பெருமாள் கோயிலின் முதலிகளாகிய வைஷ்ணவர்களுக்குக் காட்டினார்.
அந்தக் கவியைப் பார்த்ததும் ஸ்ரீரங்கத்தார்கள் வாய் கூசாமல் பின்னும் சிற்சிலரைக் குறித்துக் கையொப்பம் வாங்கிவரச் சொல்ல, கம்பர் அப்படியே வாங்கி வர அவர்கள் எல்லாம் சரிதான்; இன்னம் அம்பிகாபதி என்பவருடைய கையொப்பம் ஒன்று மாத்திரம் குறைவாயிருக்கிறது. அவர் சிறந்த வித்துவானாகையால், அவருடைய கையொப்பமுமிருந்தால் உம்முடைய காவியத்திற்குச் சிறப்பென்று நினைக்கிறோம். அஃது உமக்குத் தெரியாததன்று. அப்புறம் உமதிஷ்டம்,’ என்றார்கள். கம்பர், அம்பிகாபதி என் பிள்ளை தானே! அவனுடைய கையொப்பம் எனக்கு அத்தனை சிலாக்கியமானதா? என்று நினையாமல், ‘முன்னே பிறந்த காதைப் பார்க்கினும், பின்னே முளைத்த கொம்பு வலியது அல்லவா?’ என்றெண்ணி, தம்முடைய கற்றுச்சொல்லிகளில் இருவரை அனுப்பி, அம்பிகாபதியை அழைத்து வரச்சொல்லி, அவன் வந்தவுடனே, ‘அப்பா, இராமாயணத்திற்கு எல்லாரும் போல நீயும் கையொப்பங்கொடுக்க வேண்டாவா?’ என்ன, அவன், ‘ஐயா, அதில் எனக்கென்ன ஆஸ்பதமிருக்கிறது?’ என, கம்பர், தமக்கு அவன் பிள்ளையாகையால், அவனுடனே விளையாட்டாகவும் வித்துவ சாதுரியமாகவும் ‘உனக்கும் நான்கு அதிசயம் வைத்திருக்கிறேன்; அந்நான்கும் யாவை யெனில்,சளசள, களகள, கொளகொள, கிளுகிளு என்பனவாம். அவைகளுள், சளசளப்பு, பாலகாண்டத்தில் திருவவதாரப்படலத்தில், ரோமபாத மகாராஜனுடைய நாட்டிற்குக் கலைக்கோட்டு மாமுனி வந்தபொழுது, அதற்குமுன் பன்னிரண்டு வருஷ காலமாய் மழை பெய்யாமையால் அந்நாட்டிலுள்ள ஏரிகள் ந்திகளுக்கு உண்டாகிய குறைவு தீரவும், மேற்படி ராச்சியத்தாரைப் பிடித்த துவாதச வருஷக்ஷாமம் நீங்கவும், மேகமானது ஆகாயத்தில் தோன்றிச் சிவனது கண்டத்திலிருக்கும் விஷம் போலக் கறுத்துச் சந்தத்தாரையாக மழை பெய்தது,’ என்பதைச் சொல்லிய,
’வளநகர் முனிவரன் வருமுன் வானவன்
களனமர் கடுவெனக் கருதி வான்மிசை
சளசள வெனமழை தாரை சான்றன
குளனொடு ந்திகடல் குறைகள் தீரவே,”
என்னும் பாடலிலும்; களகளப்பு, மேற்கூறிய காண்டத்தில் உண்டாட்டுப் படலத்தில், ‘சீதா கலியாணத்திற்குப் பிரயாணப்பட்டுச் சென்ற தசரதமகாராஜாவின் சேனையில் இரண்டு பெண்டுடைய புருஷனொருவன் இளையாளை வீட்டில் விட்டு மூத்தாளைக் கூட அழைத்துக்கொண்டுபோய் மார்க்கமத்தியில் ஒரு சோலையில் இறங்கிப் புனலாடி மதுவுண்டு களித்திருக்கையில் அம்மது மயக்கத்தால் மறந்து தன்னருகிலிருக்கின்ற மூத்தாளை அவ்விளையாள் பெயரைச்சொல்லி அழைத்ததனால், அவளுக்குத் தன் கணவன் தன்னை இளையாளுக்குச் சமானமாகப் பாவித்தானென்பது பற்றிப் பிறந்த சந்தோஷத்தால் நகைப்பு வந்தது; அக்கணத்திலேயே தன் சக்களத்தியை அவன் வீட்டில் விட்டு வந்தவிடத்திலும் அவள்மேல தனக்குள்ள மோகத்தால் அவள் பெயர் மறக்கவில்லையேயென்று ஜனித்த துக்கத்தால் கண்ணீர் வந்தது, என்பதைச் சொல்லிய,
‘வளையமர் முன்கையோர் மயிலனாள் தனக்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்
முளையெயிறு இலங்கிட முறுவல் வந்தது
களகள வுதிர்ந்தது கயற்கண் ஆலியே.”
- என்னும் பாடலிலும்;
கொளகொளப்பு யுத்தகாண்டத்தில் கடல் சுட்ட படலத்தில், ஸ்ரீராமர் வருணன் வரவில்லையென்று கோபங்கொண்டு சமுத்திரத்தின்மேல் அக்கினி சாஸ்திரப் பிரயோகஞ் செய்தபொழுது, பிரமாண்டத்திற்கு அப்புறத்திலுள்ள பெரும்புறக் கடலும் கொதித்தது என்றால், அதற்கு உட்புறத்திலுள்ள சத்த சமுத்திரமும் பட்ட பாட்டைச் சொல்ல வேண்டியதென்னை! அன்றியும், சிவனது ஜடாமகுடத்தில் அனேக காலமாயிருக்கின்ற கங்கையுங் கொதித்தாள், அதுவும் அதியசமன்று, பிரமனது கனண்டலத்திலுள்ள கங்கா ஜலமும் அதிகமாகக் கொதித்தது” என்று சொல்லிய,
”அண்டமு கத்துக் கப்பா லாழியுங் கொதித்தது ஏழு
தெண்டிரைக் கடலின் செய்கை செப்புவ தெவனோ! சென்னிப்
பண்டைநா ளிருந்த நங்கை கங்கையுங் கொதித்தாள் பார்ப்பான்
குண்டிகை யிருந்த நீருங் கொளகொள கொதித்த தன்றே.”
-என்னும் பாடலிலும்; கிளுகிளுப்பு, அக்காண்டத்திற் கும்பகருணன் வதைப்படலத்தில், ‘இராவணன் அசோகவனத்தில் இருக்கையிற் கும்பகருணன் மடிந்தான் என்ற செய்தியைச் சுகசாரணர் ஓடிவந்து சொல்லக்கேட்டுத் தன் குரலோசை வானத்தளவும் எட்டும்படி அவனது பெயரைச் சொல்லிக் கூவி அழைத்து, முன்பு கைலாசகிரியை எடுத்த காலத்தில் அதை உமாபதியானவர் கண்டு திருவடியினால் அழுத்த, அம்மலையின்கீழ் அகப்பட்டு மூட்டுப்பூச்சி போல நசுங்கித் தான் அழுத காரணத்தால் தனக்குண்டான இராவணன் என்னும் பெயர்ப்பொருளை வெளியிட்டான். (அழுதான் என்றபடி, ராவணம்- அழுமோசை.) அது கண்டு சீதையானவள் ஆதொண்டைக் கனி போன்ற வாயிதழ் துடிக்க, சரீரம் மயிர்க்குச்செறியத் தனக்குள்ளே மிகவுஞ் சந்தோஷித்தாள்,’ என்பதைச் சொல்லிய,
”அண்டத் தளவு மணையப் பகர்ந்தழைத்தான்
பண்டைத்தன் னாமத்தின் காரணத்தைப் பாவித்தான்
தொண்டைக் கனிவாய் துடிப்ப மயிர்பொடிப்பக்
கெண்டைத் தடங்கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்.”
-என்னும் பாடலிலும் குறிக்கப்பட்டுள்ளன,” என்றார்.
அவைகளை அம்பிகாபதி கேட்டுச் சந்தோஷித்து, “நான் கையொப்பம் அல்லது சாற்றுகவி கொடுப்பது விசேஷமன்று,” என்று ஸ்தோத்திரமாக,
கம்ப நாட னுமைசெவி சாற்றுபூங்
கொம்ப னாள்தன் கொழுநனி ராமப்பேர்
பம்ப நாடழைக் குங்கதை பாச்செய்த
கம்ப நாடன் கழல்தலை யிற்கொள்வாம்”
- என ஒரு கவி பாடிக் கொடுக்க, அதைக் கம்பர் ஸ்ரீரங்கத்தாருக்கு அறிவிக்கப் போனவிடத்தில், வைஷ்ணவ சமயாசாரியர்க்குள்ளே பரமாசாரியாராகிய ஸ்ரீமந்நாத முனிகள் எழுந்தருளியது கண்டு, அவருடைய திருவடிகளிலே சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்துத் தமது கருத்தை விண்ணப்பஞ் செய்ய,அவர் கம்பர் பாடிய இராமாயணத்தைக் கடாட்சித்தருளி, அது சொற்சுவை பொருட்சுவை செறிந்ததாயும் பகவத் விஷயமானதாயும் அற்புதமாயிருப்பது நோக்கி, ‘இவருடைய புலமை கேவலம் மானுஷிகமாயிருக்கவில்லை!’ என்று அதிசயித்து, ‘இந்தக் காவியத்தை அவசியம் பிரசித்தம் பண்ணுவிப்பது நமது கடமை’ என்று திருவுளங் கொண்டு, கம்பரை மண்டப கைங்கரியம் ஒன்று செய்யச் சொல்லி நியமித்து, அதை அவர் செய்து முடித்தவுடனே சுபதினம் பார்த்து அரங்கேற்ற எத்தனமாயிருக்கையில், நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதர் அர்ச்சகன் முகத்தால் ஆவிர்ப்பவித்து, ‘கம்பா! நீ நம் சடகோபனைப் பாடினையோ? பாடினால்தான் நாம் உமது இராமாயணத்தைத் திருவுளம் பற்றுவோம்; அல்லாவிடில், அது நமக்கு அங்கீகாரமாகாது பிள்ளாய்,’ என்றார். அதைக்குறித்துப் பின்னடியார் பாடிய பாடல்,
“நஞ்சட கோபனைப் பாடினை யோவென நம்பெருமாள்
விஞ்சிய வாதரத் தாற்கேட்பக் கம்பர் விரைந்துரைத்த
செஞ்சொலந் தாதிக் கலித்துறை நூறுந் தெரியும்வண்ணந்
நெஞ்சடி யெற்கருள் வேதந் தமிழ்செய்த நின்மலனே!”
- என்பது.
ஸ்ரீரங்கநாதர் அருளிச்செய்தது கொண்டு கம்பர் ஆழ்வார் விஷயத்தில் நூறு கட்டளைக் கலித்துறையில் ‘வேதத்தின் முன்செல்க’ என்று தொடங்கி ஆழ்வாரந்தாதி அல்லது சடகோபரந்தாதி என்னும் ஓரந்தாதி பாடினார்.
வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணங்கடந்த
போதக் கடலெங்கள் தென்குரு கூர்ப்புனி தன்கவியோர்
பாதத்தின் முன்செல்லு மோதொல்லை மூலப் பரஞ்சுடரே?”
- என்பது அவ்வந்தாதியின் முதற்பாடல். இம்முதற்பாடலுக்குப் பொருள் வருமாறு: ‘புராதனமாயும், சர்வத்திற்கும் மூலகாரணமாயும், மேலானதாயும் ஜோதி ஸ்வரூபமாயும் விளங்காநின்ற ஸ்ரீமந்நாராயணன் வேத சாஸ்திரங்களுக்கெல்லாம் அதீதனாகையால், அவன் அவைகளைக் கடந்து சென்றாலும் செல்லட்டும்; அன்றியும் உண்மைநிலை கண்ட பிரமன் முதலானவர்களுடைய குற்றமற்ற ஞானத்தின் முடிவைக் கடந்து சென்றாலுஞ்செல்லட்டும்; ஏய குணமில்லாத ஞான சமுத்திரமாய்த் தென்திசைக்கண் தாமிரவருணி நதி தீரத்திலுள்ள திருக்குருகூரில் அவதரித்த பரிசுத்தனாகிய எங்கள் சடகோபன் அருளிச்செய்த கவியின் ஒரு பாதத்தைக் கடந்து செல்வானோ? செல்லமாட்டான்,’ என்பதாம்.
குணங்கடந்த போதக் கடல்...
[தொகு]‘குணங்கடந்த போதக் கடலெங்கள் தென்குருகூர்ப் புனிதன் கவியோர் பாதத்தின்முன் செல்லுமோ?’ (அதாவது, ஸ்ரீமந்நாராயணன் சடகோபனுடைய கவியின் ஒரு பாதத்தைக் கடக்கமாட்டான்) என்பது என்னையெனில், பாண்டி நாட்டிலுள்ள திருக்குருகூர் என்னும் திவ்யதேசத்தில் ஆழ்வாருக்குக் கோயிலிலும் வீதிப்புறப்பாட்டிலும் வெகுகாலமாக ‘வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபன்’ என்பது முதலாகப் பற்பல விருது கூறித் திருச்சின்னம் ஊதிவருவதையும், பிரமோற்சவங் கண்டருளப்பண்ணுவதையும் பற்றி ஒரு காலத்தில் மதுரைச் சங்கத்தார் கர்வத்தால் அசூயை கொண்டு, ‘இந்த ஆழ்வார் பத்தரேயல்லாமல் பகவானல்லவே! இவருக்கு விருது கூறித் திருச்சின்னம் ஊதுவதும் உற்சவம் நடத்துவதும் வியர்த்தமே! இஃது ‘அணிற்பிள்ளையின் தலைமேலே அம்மிக்கல்லை வைக்கிறது போல’ இருக்கிறது. இவர் பாடின திருவாய்மொழி என்ன சங்கமேறிய செய்யுளா? அதை வேதத் தமிழென்று அவ்வளவாகச் சிலாகிப்பது தகுதியல்லவே!’ என்று வாய்மதம் பேசி அபசாரப்பட்டார்கள். அத்தருணத்தில் ஆழ்வார் திருநகரியிலிருந்த வைஷ்ணவர்களுக்கு மனஞ்சகியாமல் பதைத்தமையால் குருகைப்பிரான் சந்நிதியிற்போய் அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, ‘ஆழ்வாரே, உம்மையும் உமது திருவாய்மொழியையும் அவமதித்த சங்கத்தாருக்குக் கர்வபங்கமாம்படி தேவரீர் ஏதாவது பிராயச்சித்தஞ் செய்வித்தாலொழிய, அடியோங்கள் எழுந்திருக்கக் கடவோமல்லோம்,’ என்று தீர்க்க வைராக்கிய சித்தர்களாய் மூன்றுநாள் வரையில் ஸ்நானம் அனுஷ்டானம் ஜபம் ஹோமம் வேதபாராயணம் பகவதாராதனம் முதலானவைகளும் இல்லாமற் கிடையாய் எழுந்திராதிருந்தார்கள்.
அதுபற்றி ஆழ்வார் ஒரு விருத்த பிராமணனாகி வந்து, ‘ஆர்காணும் மூன்று நாளாக இந்தக் கோயிலின் வாசலிற் கிடக்கிறவர்கள்? என்ன நிமித்தத்தால் இப்படிச் செய்வது?’ என்று கேட்க, அவர்கள், ‘நம்மாழ்வாரையும் அவரது திருவாய்மொழியாகிய திராவிட வேதத்தையும் சங்கத்தார் இகழ்ந்த படியினாலே அவர்களுக்கு ஆழ்வார் யாதேனும் பிராயச்சித்தஞ் செய்விக்க வேண்டும் என்பது எங்கள் அபிமதம்,’ என்ன, பிராமணன் ‘இந்தக் கலி காலத்திலும் அப்படி நடக்குமா? இஃதென்னை பைத்தியம்!’ என, வைஷ்ணவர்கள், ‘நடந்தால் எழுந்திருக்கிறோம், நடவாவிட்டால் இங்ஙனமே அன்னபானாதிகள் இல்லாமலிருந்து பிராணனை விட்டுவிடுகின்றோம்,’ என்ன, ஆழ்வார் அவர்கள் மனோநிச்சயத்தை அறிந்து, குறுநகை கொண்டு, ‘நீங்கள் சடகோபர் அருளிச்செய்த திருவாய்மொழியில் இன்ன பாடலின் இத்தனையாம் பாதத்தை ஒரு சிறு நறுக்கில் எழுதிக் கொண்டுபோய்ச் சங்கப்பலகையின்மேல் வையுங்கள், உங்கள் அபீஷ்டப்படி நடக்கும்,’ என்று சொல்லி அந்தர்த்தானமாய்விட்டார். வைஷ்ணவர்கள் திருக்குருகைப் பிரானாரே இத்தன்மையாக எழுந்தருளினாரென்று தெரிந்து, அவர் அருளிச்செய்தபடி செய்தார்கள்.
அவர்கள் அந்தத் திருவாய்மொழிச் செய்யுளிடியை எழுதிய ஒரு சிறு முறியைக் கொண்டுபோய் வைத்த மாத்திரத்தில் சங்கப்புலவர்கள் ஏறியிருந்த பலகையானது பொற்றாமரைத் தடத்தில் ஆச்சரியமாய் மூழ்கிவிட்டது. அதிலிருந்த புலவர்களெல்லாம் நீரில் திடீரென்று விழுந்து அமிழ்ந்து, தத்தித் தடுமாறி எழுந்து மெல்ல நீந்திக் கரை சேர்ந்து பார்க்கும்பொழுது, அமிழ்ந்த பலகை உடனே குபீரென்று கிளம்பித் தன்னிடத்தில் வைக்கப்பட்ட சிறு முறியை மாத்திரம் ஏந்திக்கொண்டு மிதந்தது. அவர்களதை எடுத்து, அதில் எழுதியிருக்கிற ஆழ்வாரருளிச்செய்த ஆயிரப் பிரபந்தத்தின் தொண்ணூற்றைந்தாந் திருவாய்மொழியில்,
“கண்ணன் கழலிணைகள்
நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமம்
திண்ண நாரணமே.”
என்னும் முதற்கவியின் முதற்பாதத்தை வாசித்தறிந்து, ‘உலகெலாம் உள்ளடக்கிய கண்ணன் கழலிணைகளைத் தன்னிடத்தில் அடங்கிய இச்சிறு முறிக்கு இடங்கொடுத்த சங்கப்பலகை இதனோடு சமான ஸ்கந்தமாக நமக்கும் இடங்கொடுக்குமா? கொடாதாலால், நம்மை அகற்றிவிட்டது,’ என்றும், ‘சகல வேத சாஸ்திரங்களையும் பிறராற் கற்பிக்கப்படாமல் தாமே உணர்ந்த சாக்ஷாத் பகவதாமிசமாகிய ஆழ்வாருடைய தெய்விகமான பாண்டித்தியத்திற்கு நமது பாண்டித்தியம் சதாமிசத்தில் ஏகாமிசமுங் காணாதே!’ என்றும் நினைத்துத் துக்கித்து, மற்றும் திருவள்ளுவர் குறள் செய்த காலத்தில் அவரும் ஔவையும், இடைக்காடரும் சந்தித்த சமயத்தில் வள்ளுவரை நோக்கி மற்றை இருவரும், ‘நீர் செய்த நூல் எத்தன்மையது?’ என்று வினவ, அவர் ‘அகஸ்தியராற் பிரசித்தம்பண்ணப்பட்ட இயல் இசை நாடகம் என முத்திறத்ததாகிய தமிழும், என்னாற் செய்யப்பட்ட குறளும், உடைய நங்கையின் திருக்குமாரராகிய சடகோபர் அருளிச்செய்த திருவாய்மொழியின் புத்திர ஸ்தானமாகிய வழி நூலாம்,’ என்னும் கருத்தை உள்ளமைத்து,
“குறுமுனிவன் முத்தமிழும் என்குறளு நங்கை
சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்.”
- என்று சொன்னதையும்;
அதுகேட்டு ஔவை, ‘அர்த்த பஞ்சகத்தையும் சதுர்வித புருஷார்த்தத்தையும் அறப்பால் முதலிய முப்பாலுள் அடக்கி அமைக்கப்பட்ட உண்மைப் பொருளாகிய எவ்வகைப்பட்ட வேதங்களுக்கும் சம்மதமான மேலான பொருளைக் குளிர்ச்சி தங்கிய தாமிரவருணி தீரத்திலிருக்கும் திருக்குருகூரிற் காரி முதலியார் புதல்வராய் அவதரித்த நம்மாழ்வாரது திருவாய்மொழியாகிய திராவிட வேதமென்று சிலர் சொல்லுவார்கள்; நான் அவர்கள் சொல்லை மறுத்து அக்குறளை இந்த உலகிற்குத் தாயாகிய ஸ்ரீமந் நாராயணனாற் பிரமனுக்கு உபதேசிக்கப்பட்டு வந்த கீர்வாண வேதமென்றே சொல்லுவேன்’ என்னுங் கருத்தை உள்ளிட்டு,
“ஐம்பொருளு நாற்பொருளுள் முப்பொருளிற் பெய்தமைத்த
செம்பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளை - தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியா னிவ்வுலகின்
தாய்மொழிய தென்பேன் தகைந்து.”
- என்று சொன்னதையும்;
இடைக்காடர், ‘திராவிடவேதமாகிய சேய்மொழியையும், கீர்வாண வேதமாகிய தாய்மொழியையும் ஆய்ந்து சொல்லுமிடத்தில் இரண்டும் ஒன்றேயாம்; திருவாய் மொழியை யாவரும் சங்கையின்றிச் சிறந்த வேதமென்றே சொல்லுவார்கள். திருவாய்மொழியைப் போலச் சிறந்த நூல்கள் அனேகம் உண்டென்று சிலர் குதர்க்கஞ் செய்தாலும், நானவர்களை மறுத்து, அவைகளும் இந்தக் குறளும் அத்திருவாய்மொழியினது சாயையிருப்பவை களென்றே சொல்லுவேன்,’ என்னுங் கருத்தை அடக்கி,
“சேய்மொழியோ தாய்மொழியோ செப்பி லிரண்டுமொன்றவ்
வாய்மொழியை யாரு மறையென்ப - வாய்மொழிபோல்
ஆய்மொழியை சால வுளவெனினு மம்மொழியின்
சாய்மொழியென் பேன்யான் றகைந்து.”
- என்று சொன்னதையும் நினையாமற் போனாமே! அவைகளை நினையாவிடினும், ஒரு காலத்தில் தாமிரவருணி நதியின் வடகரையில் வசித்திருந்த யோகியொருவர் வளர்த்த நாயொன்று தென்கரையிலுள்ள ஆழ்வார் திருநகரிக்குப் பிரதிதினமும் மத்தியானவேளையிற்போய், வீதியிலிருக்கும் வைஷ்ணவர்களுடைய உச்சிஷ்டத்தைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டு வருகிற வழக்கப்படி, ஒரு நாள் போய்த் திரும்பி வர நேரப்பட்டதனால், யோகியானவர், ‘நாய் இன்னும் வரவில்லையே!’ என்று ஆற்றோரத்தில் வந்து பார்க்கும் பொழுது, அந்நாய் நட்டாற்றில் வருகையில் அகஸ்மாத்தாய் வெள்ளம் வந்தமையால் நீந்திக் காலோய்ந்து போய் நீரில் அமிழ்ந்து கிளம்பிற்று. அத்தருணத்தில் அதன் கபாலம் வெடித்தது, அந்தரத்தின் வழியாய் நாயின் ஆத்துமாவாகிய ஜோதியானது எழுந்து, அமாவாசை இருளில் அனேகம் மத்தாப்புக் கொளுத்தினது போலப் பிரகாசித்ததைப் பிரத்தியக்ஷமாகப் பார்த்து, ‘அசேதனமாகிய நாயும் பெறுதற்கரிய பேறு பெற்றதே! இஃதென்னை சாதனத்தை உடையதாயிருந்தது? ஒன்று மில்லாதிருந்தும், ஆழ்வார் திருநகரியின் உச்சிஷ்டத்தை உண்டதனாலல்லவோ இப்படிச் சம்பவித்தது! இது தபசிகள், யோகிகள், ஞானிகள் முதலானவர்களுக்குஞ் சித்திக்க மாட்டாதே!’ என்று நினைத்து, மனமுருகிக் கண்ணீர் விட்டு அழுது, அவர்,
“வாய்க்குங் குருகைத் திருவீதி யெச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரம பதமளித் தாயாந்த நாயொடிந்த
பேய்க்கு மிடமளித் தாற்பழு தோபெரு மாள்மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவிசொல்லு ஞானத் தமிழ்க்கடலே.”
- என்பது முதலாகச் சில பாடல்களாய் ஆழ்வாரை ஸ்தோத்திரித்ததையாவது, அல்லது வல்லப தேவன்என்னும் பாண்டியன் சபையிற் பெரியாழ்வார் கிழியறுத்துப் பரத்துவ நிர்ணயஞ் செய்தபொழுது நாம் கர்வபங்கப்பட்டதையாவது நாம் நினைக்கவேண்டுமே! அப்படியுஞ் செய்யாமற் செருக்கினால் ஆழ்வார் விஷயத்தில் அபசாரப்பட்டோமே! அவர் திருவாய்மொழியையும் அவமதித்தோமே!’ என்று எண்ணியெண்ணி அனுதாபப்பட்டுப் பின்பு அவர்களெல்லாம் நிகர்விகளாய், அவ்வபசாரத்தை ஆழ்வார் க்ஷமிக்கும்பொருட்டு அவருடைய மகிமை தங்கிய பிரபாவத்தைக் குறித்து,
“சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசமோ, நாரணமோ? - தாமம்
துளவோ, வகுளமோ? தோளிரண்டோ, நான்கும்
உளவோ பெருமா னுனக்கு.”
- என்று பாடி ஸ்துதி செய்தார்கள். சங்கப்புலவர்கள் அத்தனைபெயரும் ஆழ்வார் விஷயத்தில் பாடிய பாடல்களெல்லாம் ஒன்றுக்கொன்று ஒரு சொல்லாவது, ஓரெழுத்தாவது, எழுத்தின் உறுப்பாவது, அசை சீர் தளை முதலியவைகளிற் ஏதாவது சிறிதும் பேதமில்லாமல் இவ்வொரு பாடலின்படியே இருக்கக்கண்டு ‘இஃதென்னை அற்புதம்!’ என்று அதிசயப்பட்டு, பின்பு அவரது திருவாய்மொழியின் ஏற்றத்தைப் பற்றி,
“ஈயா டுவதோ கருடற் கெதிரே? இரவிக் கெதிர்மின் மினியா டுவதோ?
நாயா டுவதோ வுறுவெம் புலிமுன்? நரியா டுவதோ நரகே சரிமுன்?
பேயா டுவதோ அழகூர் வசிமுன்? பெருமான் வகுளா பரணன் னருள்கூர்ந்
தோவா துரையா யிரமா மறையின் ஒருசொற் பெறுமோ உலகிற் கவியே?”
-என்றும்,
“நீயே அறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கை
ஆயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத்
தாயே! பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற
சேயே! நினது திருவாய் மொழியின் செழும்பொருளே.”
- என்றும் சிற்சில கவிகள் பாடி ஸ்தோத்திரஞ்செய்து, அவ்வாழ்வாருக்கு அன்றுமுதல் விருதுகூறல் முதலிய சகல விபவங்களும் முன்னிலும் விசேஷ நிராடங்கமாய் நடக்கும்படி செய்தார்கள் என்பதாம்.
இது நிற்க. சடகோபரந்தாதி பாடி...
[தொகு]இது நிற்க. சடகோபரந்தாதி பாடி முடிந்தவுடனே ஸ்ரீரங்கநாதன் சந்நிதியிற் கடல் போல விசாலமும் மலைபோல உன்னதமுமாகிய பெரிய ஆயிரக்கால் மண்டபத்திற் சதுர்சாஸ்திர பண்டிதர்களாகிய சம்ஸ்கிருத வித்துவான்களிலும், பூரண பாண்டித்தியமுள்ள தமிழ்க் கவிஞர்களிலும், உபய கவிகளிலும் வைதிக சம்பிரதாயத்தையுடைய ஸமார்த்தர், மாத்துவர் வைஷ்ணவர்களென்னுந் திரிமதஸ்தர்களிலும், ராஜாக்கள் பிரபுக்கள் முதலானவர்களிலும் வெகு பெயர்கள் திரண்டு நிறைந்திருக்க, பிரபத்தி நிஷ்டாபரராகிய ஸ்ரீமந்நாதமுனிகள் திருவோலக்கத்திற் கம்பர் தெய்வ வணக்கஞ் செய்து, அவையடக்கமும் கூறிக் கிரமமாக இராமாயணத்தை அரங்கேற்றினார்.
அரங்கேற்றும் பொழுது, ஆரணியத்திற் சூர்ப்பநகை மூக்கறுக்கப்பட்டு இராவணனை நினைத்துக்கொண்டு புலம்பினதைச் சொல்லிய பாடல்களில் ஒன்றாகிய,
“உருப்படிவ மன்மதனை யொத்துளரே யாயினுமுன்
செருப்படியிற் பொடியொவ்வா மானுடரைச் சீறுதியோ!
நெருப்படியிற் பொறிசிதற நின்றமதத் திசையானை
மருப்பொடியப் பொருப்பிடியத் தோணிமிர்த்த வலியோனே!”
- என்பதை வாசிக்கக்கேட்டு, அதில் ‘உன் செருப்படியிற் பொடியொவ்வா மானுடரைச் சீறுதியோ?’ என்பதைக் குறித்து அவ்விடத்திருந்த வைஷ்ணவர்களில் ஒருவர் கம்பரை, ‘ஏன்காணும், சாக்ஷாது பரமபிரமமாகிய சக்கரவர்த்தித் திருமகனையும் இளையாழ்வானையும் இராட்சசப் பட்டி மகனாகிய இராவணனுடைய செருப்புக்காலில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற பொடிக்கும் ஒவ்வாத மானுடரென்று சொல்லி அபசாரப்படுகிறீர்?’ என்ன, கம்பர் பக்கத்திலிருந்த அம்பிகாபதி அவருக்குத் தண்டன் சமர்ப்பித்து, ‘சுவாமி, ஒரு விண்ணப்பம்: யுத்தத்திற் கும்பகருணன் இறந்த செய்தி அறிந்து இராவணன் அழுததைக் குறித்துச் சொல்லுமிடத்தில் அவன் சுத்தவீரனாகையால், அழுதானென்று சொல்வது கௌரவத்தாழ்வென்று நினைத்து, பூர்வம் தனக்கு உண்டாகிய இராவணன் என்னும் பெயரின் காரணத்தை அவன் வெளியிட்டானென்று உபசார வழக்காகச் சொன்னவர், ஒப்பற்ற பகவான் விஷயத்தில் அபசாரப்படுவாரா?’ என்ன, ஸ்ரீமந்தாதமுனிகள் நகைத்தருளி, அவ்வைஷ்ணவரை நோக்கி, ‘உன் செருப்படியிற் பொடியொவ்வா மானுடர்’ என்றது, கம்பர் தாம் சொல்வதாகக்கூறாமல், துஷ்ட ராக்ஷசியாகிய சூர்ப்பநகை கூறும் கூற்றாகச் சொல்வதாதலால், ராமலக்ஷ்மணர்கள் அவள் அபீஷ்டப்படி நடவாததனாலும், அவள் மூக்கை அறுத்ததனாலும் அவர்களை விரோதித்து அவ்வரக்கி தூஷிக்கையில் இப்படியே சொல்லுவாளாகையால், இவ்வாக்கியத்திற்கு இது ஒரு கருத்தும், ‘செருப்படி’ என்பதைச் செரு+படி எனப் பிரித்து, ‘உனது யுத்தபூமியில் ஒரு தூசுக்கும் ஒப்பாகாத மனிதர்,’ என வேறு ஒரு கருத்துங் கொள்ளும்படி சிலேடையால் இரட்டுற மொழிதலாகச் சொன்னமையால், இது வித்துவ சாமர்த்தியமேயல்லது, அபசாரமன்று,’ என, அதைப்பற்றிச் சகலரும் பரம சந்துஷ்டி அடைந்தனர்.
அப்பால், யுத்த காண்டத்திற் கடல்காண் படலத்தில், ‘சீதையைப் பிரிந்த பின்பு, தன் திருக்கண்களுக்கு இனமாக அவளைப் போன்றிருக்கின்ற தாமரை மலர்களும் இதழாகிய இமை மூடி உறங்குகின்ற இராக்காலத்திலும் நெடுநாளாகக் கண்ணுறக்கங்கொள்ளாத ஸ்ரீராகவன் இராவணன்மேற் படை எடுத்துப்போய்த் தென்சமுத்திரத்தின் வடகரையிற் பாளயமிரங்கித் தனக்குத் துணை செய்யும்பொருட்டுப் பொங்கி எழுந்து எங்கும் பரந்து வந்த பெரிய வானரசேனை தன் புறத்திலும் அகத்திலும் புடை சூழும்படி அச்சமுத்திரத்தைக் கண்டான்’ என்பதை உள்ளமைத்த,
“பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்து மகத்தும் புடைசுற்றச்
சங்கிற் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கினமாம்
கொங்கிற் பொலிந்த தாமரையின் குழுவுந் துயிலுற்றிதழ் குவிக்கும்
கங்குற் பொழுதுந் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.”
-என்னும் பாடலை வாசிக்கும் பொழுது, ‘பெருஞ்சேனை புறத்துப் புடைசுற்ற’ என்றது சகஜமே; ‘அகத்தும் புடைசுற்ற’ என்றது விளங்கவில்லையே! அஃது என்னை!’ எனச் சிலர் ஆசங்கிக்க, ஸ்ரீமந்நாதமுனிகள், ‘சுவாமியானவர் வானர சேனாவீரர்கள் தத்தம் தாய், தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன் முதலாகிய இனத்தாரையெல்லாம் விட்டுப்பிரிந்து, தம்பொருட்டு படைத்துணை வந்திருப்பதுபற்றி, அவர்களுக்கு ராட்சசர்களால் ஏதாவது அபாயம் நேரிடுமானால் அவர்களினத்தார், ‘இந்த ராமன் பகைவரைச் சண்டை செய்து வெல்வதற்கு நம்முடைய குடும்பத்தாரை அழைத்துப் போனானே! போனவிடத்தில் தன்னுயிரை மாத்திரம் திதிப்பாக நினைத்து உபாயமாய் ரக்ஷித்துக்கொண்டு, அவர்களைச் செவ்வையாய் பராமரிக்காமல் ராட்சசப் பேய்களுக்கு அநியாயமாய்ப் பலி கொடுத்துவிட்டானே! பாவி!’ என்பதாகத் தம்மைப் பலவிதத்திலும் நொந்துரைப்பார்களாதலாலும், ஒரு சிக்குச் சிலுக்கில்லாமல் அவர்களைப் பாதுகாத்து மறுபடி நிலையிலே கொண்டுபோய்ச் சேர்ப்பது தமது கடமையாதலாலும், ‘எல்லாரும் வந்து சேர்ந்தார்களா? அவர்கள் க்ஷேமமாயிருக்கிறார்களா?’ என்று அவர் ஒரு நொண்டிக் குரங்கையுந் தப்பவிடாமல் மதிப்பிட்டுத் தமது திருவள்ளத்தில் வைத்தாரென்பதுகொண்டு, ‘அகத்தும்புடைசுற்ற’ என்று சொல்லப்பட்டது,’ எனக் கம்பரது கருத்தை வெளியிட்டருள, அவர்கள், ‘அப்படியா!’ என்று அதிசயித்தார்கள்.
அதன் பிறகு இரணியவதைப்படலம் வாசிக்கையில் அங்குள்ளவர்களுள் வேறு சிலர், ‘இராமாயணத்தில் எங்கும் இரணியவதை சொல்லக் காணோமே! இஃதேது நவீனமாயிருக்கிறது!’ என்று கேட்க கம்பர், ‘இது புராணாந்தரம்’ என்ன அவர்கள், ‘புராணாந்தரமாயினும், சமஸ்கிருத பாஷையினால் இராமாயணஞ் செய்த வான்மீகி முதலானவர்களாற் சொல்லப்படாததை நீர் சொன்னமையால், எவ்விதத்தில் ஒப்புக்கொள்வது? இதற்கு ஏதேனும் ஒரு திட்டாந்தங் காண்பிக்க வேண்டும்; அதாவது, இது சிங்கப்பெருமாள் சரித்திரமாதலால், இதை இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் மோட்டழகிய சிங்கரானவர் சிரக்கம்ப கரக்கம்பஞ் செய்து திருவுளம் உவந்தருள்வதுதான். அப்படி அவர் அங்கீகரிப்பாரானால், ஒப்புக்கொள்ளுகிறதற்கு எவ்வளவுஞ் சந்தேகமில்லை,’ என்றார்கள். அதைப்பற்றி ஸ்ரீமந்தாதமுனிகள் ஒன்றும் வார்த்தை சொல்லாதிருக்க, கம்பர், ‘ஆகாத பஞ்சாங்கத்திற்கு அறுபது நாழிகையுந் தியாச்சியம்’ என்பது போல இக்காவியத்தை ஆரம்பித்த நாள்முதல் இடையூறு சம்பவித்தபடியிருக்கிறதே! இஃதென்னை தவக்குறை! நல்லது! தெய்வசங்கற்பம் உள்ளபடியாகிறது!’ என்றெண்ணி, அவ்விரணிய வதைப்படலத்தில், ‘பிரகாலாதாழ்வானை நோக்கி, ‘நீ சொல்லிய அரியென்பவன் எவ்விடத்திலிருப்பான்?’ என்று இரணியன் கேட்டதற்குப் பிரகலாதன், ‘அந்தப் பரமாத்துமன் அகண்டிதனாகையால், அவனை இன்ன இடத்தில் இருப்பான் இரானென்று கண்டிதப்படுத்திச் சொல்லவும், அவனுடைய அணுத்துவ விபுத்துவ அதிசயங்களை இன்னபடியென்றறியவும் முடியா; ஆயினும், ஒருவாறு சொல்லுகிறேன், அவன் ஒரு சாணளவாகிய சிறு திரும்பிலுமிருப்பான்; ஓரணுவைச் சதகூறு செய்து பார்த்தால், அக்கூறுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி இருப்பான்; அன்றியும், பெரிய மேருமலையிலும் இருப்பான்; இங்கே நிற்கின்ற தூணிலும் இருப்பான்;நீ சொன்ன சொல்லிலும் இருப்பான்; அவனில்லாத இடம் எதுவுமில்லை; இவ்வுண்மையை அறியவேண்டுமாகில், தாமதியாமற் சோதித்துப்பார்,’ என்றான். அது கேட்டு இரணியன் சொல்லத் தொடங்கினான்,’ என்ற கருத்தைத் தன்னிடத்திற் கொண்ட
“சாணினும் உளனோர் தண்மை யணுவினைச் சதகூ றிட்ட
கோணினும் உளன்மா மேருக் குன்றினும் உளன்இந் நின்ற
தூணினும் உளன்நீ சொன்ன சொல்லினும் உளன்இத் தன்மை
காணுதி விரைவின் என்றான்; நன்றெனக் கனகன் சொன்னான்.”
- என்னும் பாடலையும்;
இரணியன், ‘தேவர்களுக்கும் உனக்கும் ஒரு தன்மையாய் இவ்வுலகமெங்கும் நிறைந்திருக்கின்ற அரியென்பவன், மற்ற இடங்களிலெல்லாம் இருப்பானென்பது அப்படியிருக்கட்டும்ந இத்தூணின் இடத்திலும் இருக்கின்றானென்று நீ சொன்னமையால், இதனிடத்தில் நான் காணும்படி அவனைப் பிரத்தியக்ஷமாகக் காட்டவேண்டும்; காட்டாமற் போவாயானால், மஸ்தகத்தையுடைய யானையைச் சிங்கமானது அறைந்து கொன்றாற் போல உன்னைக் கொன்று, என் பசி தீர உன்னுடலைத் தின்று உதிரத்தைக் குடித்து, தாகத்தைத் தணித்துக் கொள்ளுவேன்!’ எனப் பிரதிக்கினை பண்ணினான்,’ என்ற கருத்தை உள்ளிட்ட,
“உம்பர்க்கும் உனக்கும் ஒத்திவ் வுலகெங்கும் பரந்து ளானைக்
கம்பத்தின் வழியே காணக் காட்டுதி; காட்டா யாயிற்
கும்பத்தின் கரியைக் கோண்மா கொன்றென நின்னைக் கொன்றுன்
செம்பொத்த குருதி தேக்கி உடலையுந் தின்பேன் என்றான்.”
-என்னும்பாடலையும்;
அப்பிரதிக்கினையைக் கேள்வியுற்ற பிரமஞானியாகிய பிரகாலாதாழ்வான், ‘ஐயா, இப்பொழுது என்னுயிரைக் கொல்லுகிறதாகப் பிரதிக்கினை பண்ணினையே! இதுவீண்தான்; முன்பு எண்ணெய்க் கொப்பறையில் தள்ளினாய்; கற்பாறையோடு கட்டிக் கடலில் விடுத்தாய்; வாள் வேல் முதலான ஆயுதங்களைக் கொண்டு வெட்டிக் குத்தி எய்தி எறிந்தும் பார்த்தாய், நான் இறக்கும்படி மரணயாகமுஞ் செய்வித்தாய்; என்மேல் அஷ்டதிக்கஜங்களையும் ஏவினாய்; அஷ்டமா நாகங்களையும் விட்டுக் கடிப்பித்தாய்; பைக்குள்ளே போட்டு இறுக்கிக் கட்டிச் சம்மட்டி கொண்டும் அடிப்பித்தாய்; மற்றும் எத்தனையோ வாதைகளுஞ்செய்வித்தாய்; அவைகளினால் எல்லாம் நான் இறந்தேனோ? என்னுடைய உயிர் உன்னாலே கொல்லப்படுவதற்கு அத்தனை எளிதானதன்று; இதோ என் பிரதிக்கினையைக் கேள்; உனக்கு நான் முன்பு சொன்ன சர்வ வியாபகன், நீ தொட்ட தொட்ட இடந்தோறும் அவசியம் தோன்ற வேண்டும், தோன்றாமற் போவானானால், என்னுயிரை யானே மாய்த்துக் கொள்ளுவேன்; அப்படிச் செய்யாமற் பின்னும் உயிரோடு வாழ்ந்திருக்க விரும்புவேனாகில், நான் அந்த லோகராட்டியனுக்குத் தாச பூதனல்லேன்!’ என்றான்,’ என்னும் கருத்தை உட்கொண்ட,
“ என்னுயிர் நின்னாற் கோறற் கெளியதொன் றன்றி யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறுந் தோன்றா னாயின்
என்னுயிர் யானே மாய்ப்பன், பின்னும்வாழ் வுகப்ப னேயென்னின்
அன்னர்க் கடிய னல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்”
-என்னும் பாடலையும்;
‘இப்படிப் பிரகலாதன் செய்த பிரதிக்கினையை இரணியன் கேட்டவுடனே, தன் பகுவாயைத் திறந்து, ‘நல்லது! நல்லது!’ என்று அதட்டி, தந்தங்களெல்லாம் குப்பென்று பிரகாசிக்கும்படி நகைத்து, உக்கிரத்துடனே தனக்கெதிரே இருந்த நெடிய வச்சிரத் தூணிற் பெரிய பர்வதத்தின்மேற் பிரளயகால இடி இடித்து விழுந்ததுபோல, வெற்றிபெற்ற புகழ் விளங்கிய தன் கையினால் ஓங்கி விசைகொண்டு ஓரறை அறைந்தான்; அறைந்த மாத்திரத்தில் சர்வாந்திரியாமி என்னும் தைத்திரியானவன் சிங்கவடிவு கொண்டு ஆர்ப்பவித்து, அந்தத் தூணைப் பிளந்து, அதில் நின்று, அஷ்டதிக்குகளையும் திறந்து, அண்டத்தையுங் கீறி, அப்புறத்திலும் ஓங்கி, அகிலபுவன சராசரங்களுந் திடுக்கிடும்படி கலகலவென்று சிரித்தான்,’ என்பதைக் கூறும்,
“நசைதிறந் திலங்கப் பொங்கி நன்றுநன் றென்று நக்கு
விசைதிறந் துருமு வீழ்ந்த தென்னவோர் தூணின் வென்றி
இசைதிறந் தமர்ந்த கையா லெற்றினா னெற்ற லோடுந்
திசைதிறந் தண்டங் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்.”
-என்கிற பாடலையும்;
‘ஜகத்ரக்ஷகன் சிங்கவடிவெடுத்துத் தூணைப் பிளந்து அதன் நடுவில் அவதரித்து, பிரசன்னமாய்ச் சிரித்தது கண்டு பிரகலாதன் ஆனந்தத்தால், ஆடிப் பாடி அழுதுதொழுதான்,’ என்பதைக் குறிப்பிக்கும்,
“நாடினான் தருவன் என்ன நல்லறி வாளன் நாளும்
தேடிநான் முகனுங் காணாச் சேயவன் சிரித்த லோடும்
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்திச் செங்கை
சூடினான் தொழுதான் ஓடி உலகெலாம் துகைத்தான் துள்ளி”
-என்கிற பாடலையும் வாசித்தார்.
வாசித்த மாத்திரத்தில் மோட்டழகிய சிங்கர் தமது திருக்கரங்களை நீட்டி, திருமுடியைத் துளக்கிப் பவளம் போலுஞ் சிவந்த வாயைத் திறந்து கடகடவென்று அந்த மண்டபமும் அதிர, அங்குள்ள சகல மகாஜனங்களும் நடுங்கச் சிரித்து ஆர்ப்பரித்தார். அப்பொழுது எல்லாரும் அதிசயித்து, ‘சிதம்பரத்திற் பாம்பு கடித்து இறந்த தில்லை மூவாயிரவர் பிள்ளை நாகபாசப் படலத்தை வாசிக்கப் பிழைத்தது. இங்கே இரணியவதைப் படலம் வாசிக்கச் சுதைவடிவாய் எழுந்தருளியிருக்கின்ற மோட்டழகிய சிங்கர் திருவுளமுவந்து, அவ்வுவப்பு யாவர்க்குந் தெரியும்படி சிரக்கம்ப கரக்கம்பமுடனே அட்டகாசமுஞ் செய்தார்; ஆதலால் இந்தக் காவியம் அதிக மகத்துவம் உடையது,’ என்றும், இம்மகத்துவம் சகலருக்கும் பகிரங்கமாக வேண்டும் என்றல்லவோ இந்நூலில் அந்தச் சந்தர்ப்பங் கண்டு அதற்குத் தக்கவாறு விசேஷார்த்தஞ் சொல்லிச் சமர்ப்பித்து வந்த ஸ்ரீமந்நாத முனிகளும் இது விஷயத்தில் மாத்திரம் வார்த்தை சொல்லாமல் மௌனமாயிருந்தார்?’ என்றும் எண்ணி, கம்பரைக்குறித்து மிகவும் மெச்சிக் கொண்டாடினார்கள்.
அதற்கு மேலும் அச்சபையில்...
[தொகு]அதற்கு மேலும் அச்சபையில்உள்ள அறிஞர்கள் ஆங்காங்குக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஏற்றபடி சமாதானஞ் சொல்லி, இராமாயணம் முழுவதும் வாசித்து முடித்த பின்பு ஸ்ரீமந்தாதமுனிகள், ‘இந்தக் காவியம் இவ்வளவு சிறப்புடையதாக இயற்றப்பட்டும், பாலில் விஷங் கலந்தாற்போல, இடையிடையே நரஸ்துதி பண்ணப்பட்டதனால் அல்லவோ, இங்கிருக்கும் வைஷ்ணவர்கள் அசூயை கொண்டு, தில்லை மூவாயிரவர் முதலியோருடைய கையொப்பம் வாங்கிவரும்படி இவரைப் பலவிடங்களிலும் ஓடியுழலச் செய்தார்கள்?’ என்று உய்த்துணர்ந்து, கம்பரை நோக்கி, ‘இதிகாசமாயும் பகவத் சரிதமாயும் இருக்கின்ற இதில் என்ன நிமித்தத்தால் நரஸ்துதி செய்ய வந்தது?’ என்று வினவ, கம்பர் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியார் இளமைமுதல் தமக்கு நெடுநாளாக அன்னவஸ்திராதிகள் கொடுத்து ஆதரித்ததையும், அவரது பிரயத்தனத்தால் திருவெண்ணெய் நல்லூரிலே இந்நூல் சொல்லப்பட்டதையும், அம்பிகாபதி விவாகத்திற் பாதபூஜை நடக்கும் சமயத்தில் சகலமான ஜனங்களும் வந்து நிறைந்திருக்கும் கலியாண வாசலில், மேற்படி முதலியார் வர, ‘ஆயிரம் பனை அப்பனுக்குப் பல்லுக்குத்த ஈர்க்குக் கிடையாது,’ என்பது போல கிராமாதிபதியாகிய அவருக்கு இடம் இல்லாததனால், அங்கிருந்தவர்களெல்லாம் எழுந்து அவரை, இங்கே வரலாம் இங்கே இருக்கலாம் என்று உபசரித்தபொழுது அவர், ‘நீங்கள் யாரும் எழுந்திருக்க வேண்டா; சும்மா விருங்கள்; எனக்கு இதோ இடமிருக்கிறது,’ என்று சொல்லி அவர்களை அங்கிருக்கச்செய்து, ஒருவரும் இருப்பதற்கு யோக்கியமின்றி ஒழிந்திருந்த சாக்கடை வரம்பின்மேல் நின்று கொண்டிருக்க, தாம் அவரைப் பார்த்து, ‘அத்தான், அவ்விடத்திலேயா இருக்கின்றீர்கள்? நல்லதிருங்கள்,’ என, அதுகேட்டு தம் மனையாள் சகிக்காமற் பரிதபித்து, ‘இத்துனை ஜனங்களுக்கும் இங்கே இடமிருக்க, எங்கள் அண்ணா அவர்களுக்கு மாத்திரம் அந்தச் சாக்கடையா கிடைத்தது?’ என்ன, ‘அடி பைத்தியக்காரி, உங்கள் தமையனாரை இந்த இடத்திலேயா வைக்கிறது! நான் வைக்குமிடத்தில் வைக்கிறேன்!’ என்று தாம் சொன்னதையும் விவரணமாக விண்ணப்பம் செய்து, ‘இக்காரணங்கள் அனைத்தையும் கருதித்தான் அந்தப் பிரபுவை அடியேன் இதிற் சொல்லி வைத்தேன்,’ என்றார்.
ஸ்ரீமந்நாதமுனிகள், ‘இஃது உபகார ஸ்மிருதி,’ என்று திருவுளங்கொண்டு, கம்பரை நோக்கி, ‘நீர் செய்வதெல்லாஞ் சரிதான்; உம்மாலே பாடப்பட்ட பதினாயிரம் பாடலுக்குள் நூற்றுக்கொன்று விழுக்காடு நூறு பாடலில் அவர் பெயரைச் சொல்லியிருக்கிறீரே? இப்படி மகா காவியத்தில் அடிக்கடி சொல்லுவது யுத்தமன்று; அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்,’ ஆதாலால், ஆயிரத்துக்கொன்றாகப் பாத்துப்பாடலில் மாத்திரமிருந்தாற்போதும்,’ என்ன, கம்பர் அதுகேட்டு, ‘அருமைப்பட்டுப் பாடிய தொண்ணூறு பாடல் வீணாயப் போய்விடுகின்றனவே!’ என்று மனவருத்தப்படாமல், ‘சுவாமி, மகாபாக்கியம்! கற்பகமும் காமதேனுவும் நாணத்தக்க ஔதாரியமுடைய அந்தப் பிரபுவின் குணாதிசயம் அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டாமையால், விலையுயர்ந்த மாணிக்கத்தைக் குருவிந்தக்கல்லுக்கு ஒப்பாக மதிப்பவரைப் போல அவரை நூற்றுக்கொருவராக மதித்தேன்; தேவரீர் ஆயிரத்துக்கொருவராக மதித்தது விசேஷமே!’ என்று சாதுரியமாகச் சொல்ல, ஸ்ரீமந்தாதமுனிகள் திருவுளமகிழ்ந்து, கிருபைகூர்ந்து, கம்பருக்கு, ‘கவிச்சக்கரவர்த்தி’ எனப் பட்டப்பெயர் கொடுத்து, அவர் பாடின ராமாயணத்திற்கு அச்சபையிலிருந்த வித்துவஜனர்களிற் சிலர் சாற்றுக்கவி கொடுக்கவும், அதில் இரண்டு கவியை எடுத்துத் திவ்வியப் பிரபந்தத்தோடு சேர்க்கவும், அந்தத் திவ்யதேசத்தில் நடக்கும் உற்சவாதிகளில் அழகிய மணவாளன் திருவீதிப் புறப்பாடாகித் திரும்பிக் கோயிலுக்குட் செல்லும் போதெல்லாம் அப்பெருமானைக் கம்பர் கட்டுவித்த மண்டபத்தில் எழுந்தருளப்பண்ணித் திருவந்திக்காப்பு நடப்பிக்கவும், சடகோபரந்தாதியில் இரண்டு பாடலைத் திருக்குருகூரில் ஆழ்வார் சந்நிதியில் நித்தியப்படியாகச் சேவிக்கவும் வேண்டும் என்று கட்டளையிட்டு, தமது கோஷ்டியிலுள்ள வைஷ்ணவர்களைக் ‘கம்பர் கவிச்சக்கரவர்த்திக்குப் பெருமாள் சேவை பண்ணுவித்து, ஸ்ரீ சடகோபம் முதலானவைகளும் பிரசாதியுங்கள்,’ என்று நியமித்தார்.
அந்நியமனப்படி அவர்கள் கம்பரை அழைத்துப்போய்ச் சுவாமிக்குத் திருமஞ்சனமுதலானவைகளுஞ் சமர்ப்பித்து, பிரணவாகார விமானத்தில் சேஷசாயியாய் எழுந்தருளிய அப்பிரணவப் பொருளான்ஸ்ரீரங்கநாதனையும், ஸ்ரீரங்கநாயகியாரையும் அவர் சேவிக்கும்படி செய்து, அவருடைய இராமாயண புஸ்தகத்தைச் சுவாமி திருவடியிற் சமர்ப்பித்து, அவருக்குத் திருமாலை தீர்த்தம் பிரசாதம் ஸ்ரீசடகோபம் முதலானவைகளுஞ் சாதிப்பித்து, விசேஷ மரியாதை நடப்பித்தார்கள். அவைகளைக் கம்பர் பெற்றுக்கொண்டு, ‘அன்று நான்பிறந்திலேன்,’ என்று திருமழிசைப்பிரான் அருளிச் செய்தபடி, கீழப்போன ஜன்மங்களனைத்தையும் அறிவின்றி அவலமாய்க் கழித்ததனால் அப்பொழுதெல்லாம் அடியேன் பிறந்தேனல்லேன்; இப்பொழுது ஜன்ம சாபல்யமாகிக் கிருதர்த்தனாகும்படி சதாசாரிய கடாக்ஷம் வாய்க்கப் பெற்றமையால், இந்த ஜன்மமே உத்கிருஷ்டமான ஜன்மம்; என் பாக்கியமே மகா பாக்கியம்!’ என்று நெஞ்சு குழையச் சரீரம் புளகிக்கக் கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகப் பரவசமானார்.
“ எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழன்மேற் சடையன்வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய விராம காதை பங்குனி யத்த நாளில்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே.”
இஃது இராமாயணம் பாடிய இடத்தையும், அரங்கேற்றிய ஸ்தலத்தையும் காலத்தையும் குறித்து ஸ்ரீரங்கத்தாரில் ஒருவர் பாடியது.
“அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கன் றமுத மீந்த
தம்பிரா னென்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்
கம்பநா டுடைய கோமான் கவிச்சக்ர வர்த்தி பார்மேல்
நம்புபா மாலை யாலை நரர்க்குமின் றமுத மீந்தான்.”
இது கவிச்சக்கிரவர்த்தி என்னும் பட்டப்பெயரைக் குறித்து ஒருவர் பாடிய சாற்றுக்கவி.
“இம்பர் நாட்டிற் செல்வ மெல்லா மெய்தி யரசோ டிருந்தாலும்
உம்பர் நாட்டிற் கற்பகக்கா வோங்கு நீழ லிருந்தாலும்
செம்பொன் மேரு வனையபுயத் திறல்சே ரிராமன் திருக்கதையிற்
கம்ப நாடன் கவிதை யிற்போற் கற்றோர்க் கிதயங் களியாதே.”
-என்பது முதலாக மற்றுஞ்சிலர் பாடிய சாற்று கவிகளை மேற்படி ராமாயண புஸ்தகத்திற் காண்க.
இப்படிச் சாற்று கவி கொடுக்கப்பட்ட பின்பு, கம்பர் ஸ்ரீமந்தாதமுனிகளையும் முற்றுமுள்ள பிரபன்னர் முதலானவர்களையுஞ் சேவித்து, அவர்களிடத்தில் நியமனம் பெற்றும் கொண்டு, நம்பெருமாள் கோயிலிருந்து திருவெண்ணெய் நல்லூருக்கு வந்து, சடையப்ப முதலியாரைக் கண்டு பேசி அவருக்குத் தாம் அரங்கேற்றிய செய்திகளையெல்லாம் விவரித்து, அவரால் உபதேசிக்கப்பெற்று, அங்கிருந்து உறையூருக்குப் போய்க் குலோத்துங்க சோழனைக் கண்டார். அவன் கம்பரை நோக்கி, ‘அரங்கேற்றப்போய் வெகுகாலமாகிறதே! இவ்வளவு காலஞ் சென்றது என்ன விதத்தால்?’ என, அவனுக்கு அங்கே நடந்தவைகளையெல்லாம் ஆதியோடந்தமாகச்சொல்ல, அரசன், ‘அப்படியா!’என்று ஆச்சரியப்பட்டு, ‘இது விஷயத்தில் வெகு பிரயாசைப்பட்டீர்! பட்டாலும், உமக்கும் காவியத்திற்கும் மிகுந்த சிறப்புண்டாயிருக்கிறது!’ என்று சொல்லிச் சந்தோஷப்பட்டு, ‘நல்லது! இவ்விடத்தில் நானும் நம்முடைய முதலியாரும் மற்றுமுள்ளவர்களும் ஒருமுறை உமது வாக்கினாலே இராமாயணம் முழுவதும் கிரமமாகப் பிரசங்கிக்கக் கேட்க வேண்டாவா?’ எனக் கம்பர், ‘தடையென்ன? அப்படியே செய்யலாம்,’ என, அரசன், பாண்டியன் சேரன் முதலானவர்களுக்குப் பதிரிகை மூலமாக இந்தச் சமாசாரந் தெரிவித்துச் சகலமானவர்களையும் தன் தேசத்தில் வரவழைத்துச் சபை கூட்டுவிக்க, அச்சபை நடுவிற் கம்பர் வந்திருந்து, தமது கற்றுச்சொல்லி கையேடு பிடித்து வாசிக்க, பிரசிங்கத் தலைப்பட்டார்:
“பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக்
காத்த அங்குசம் நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப்
பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப்பொடி யாகத்
காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு.”
- என்னும் வரைக்காட்சிப் படலத்துப் பாடலைச்சொல்லி, ‘மிதிலைக்குப் போன தசரத மகாராஜன் சேனையிலுள்ள மிருகமதங்கம், ராஜமதங்கம், பத்திர மதங்கம் என மூவகையாகப் பகுக்கப்பட்ட யானைக்குள்ளே ஒரு யானையானது, தான் செல்லும் வழிகளிலே ஏழிலைப் பாலை மரம் புஷ்பித்து யானை மதம் நாறக் காற்றின் வழியே மோப்பம் பிடித்து, அங்குசம் நிமிர்ந்து போம்படி பாகன் மஸ்தகத்திற் குத்தி குத்திக்குத்தித் திருப்பியும் திரும்பாமல் காட்டுக்குள் ஓடி, அவ்வேழிலைப் பாலையைப் பிடுங்கித் தரையுடனே மோதிப் பொடிப்பொடியாக முன்னங்கால்களால் தேய்த்தது,’ என்று பிரசங்கிக்கக்கேட்டு, அங்கிருந்த குடகு தேசாதிபதி கம்பரை நோக்கி, ‘ஐயா, அனேகந்தலைமுறையாக யானைகளைப் பிடிப்பதும் போஷிப்பதும் விக்கிரயிப்பதும் எங்கள் குலத்தொழிலாயிருப்பதனால், யானைகளின் சாதி குணம் செய்கை உற்பத்தி ஸ்தானம் முதலானவைகளைப் பலகாலும் ஆராய்ந்து அறிந்துவரும் பெருவழக்கமுடைய எங்களுக்கு, இந்நாள்வரையில் ஏழிலைப்பாலை யானைமத நாற்றம் நாறுகிறதென்பதும், அது யானைக்கு விரோதமாயிருப்பதென்பதும் தெரியா; இப்படிப்பட்ட அபூர்வமான விஷயத்தையும் நீங்கள் அறிந்து சொன்னதைக் குறித்து நானென்னசொல்லமாட்டுவேன்! ஆந்திரபாஷையில் ‘ரவியெருகடிதாவு கவியெருகுனு’ என்பது வாஸ்தவந்தான்,’ என்று சொல்லிக் கம்பரை மெச்சி, அவருக்கு அதற்காக ஒரு கடகம்¶ யானை வெகுமதி செய்தான்.
(¶கடகம்=பன்னிரண்டு; யானைத்திரளுமாம்.)
அப்பால்,
“தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினு மவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவ ரெனுமிது வழக்கே
உருண்ட வாய்தொறும் பொன்னுரு ளுரைத்துரைத் தோடி
இருண்ட கல்லையுந் தந்நிற மாக்கின இரதம்.”
-என்னும் பாடலைக் குறித்து, ‘பலநூல்களையும் கற்றுத்தெளிந்த பெரியோர்கள் கல்லாத முழுமூடர்களைச் சேர்ந்தாலும், அவர்களுடைய மயக்கமாகிய பேதைமைப் புத்தியையும் மாற்றித் தங்களைப்போல அறிவுடையவர்களாகச் செய்வார்களென்னுமிது ஆன்றோர் வழக்கமாதலால், சந்திர சைலத்தின் சாரலிலே பொன்னாற்செய்யப்பட்ட தேர்ச்சக்கரங்கள் உருண்ட இடந்தோறும் அப்பொன்னுருளைகள் தேய்த்துத் தேய்த்து ஓடுதலால், அந்தத் தேர்கள் அங்குள்ள இருண்ட கருங்கற்பாறைகளையும் தந்நிறமாக்கிவிட்டன,’ என்று பிரசிங்கத்தபொழுது, சோழன், ‘இந்தத் தர்மம் உம்மிடத்திலே தான் விளங்கக் கண்டேன்,’ என்ன, கருணாகர பாண்டியன், ‘அஃதென்னை?’ என்று கேட்க, சடையப்ப முதலியார் சொல்லத் தொடங்கினார்:
‘பூர்வம் சோழராஜாவின்மேற் கவிபாடிப் பரிசு பெறும் புலவர்களை ஒரு விறகுத் தலையன் பெண்சாதி பார்த்து, ‘இவர்களெல்லாம் ஒருவேலையுஞ்செய்து கஷ்டப்படாமற் பாட்டுப்பாடி எளிதிற் பணம் சம்பாதித்துச் சுகமாக ஜீவனஞ் செய்துவர, நம்முடைய புருஷன் மாத்திரங் காட்டுக்குப் போய்க் காலிற் கடுமுள் தைக்க, கட்டை வெட்டிக் கை காய்க்க, நாள்தோறும் மாடு போல உழைத்து விறகு விற்று அரை வயிற்றுக் கஞ்சிக்குமில்லாமல் அவதிப்பட வேண்டுவதென்னை? இதுவரையில் இந்த உபாயம் தெரியாமற் போயிற்றே!’ என்று தனக்குள்ளே சிந்தித்து, ‘காரிகை கற்றுக் கவிபாடு வதினும் - பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று’ என்பதை அவள் சிறிதும் உணராமையால், அது சுளுவென்று நினைத்து, தன் புருஷனை, ‘நீ சீக்கிரமாய்ச் சோழராஜனிடத்திற் பாட்டுப்பாடிக் கொண்டுபோ, நமக்கு நல்ல காலம் வந்தது!’ என்றாள். அவன், ‘எனக்கோ, பாட்டுத் தெரியாது; ஆயினும், பெரிதன்று; இதோ கற்றுக்கொண்டு வருகிறேன்,’ என்று தெருவிலே புறப்பட்டு வருகிற பொழுது, சில சிறுபிள்ளைகள் மரப்பாவைகளை வைத்து விநோதமாக விளையாடு மிடத்தில் அவர்கள், ‘மண்ணுண்ணி மாப்பிள்ளையே’ என்று சொல்லக்கேட்டு, அதை ஞாபகப்படுத்திக்கொண்டு அப்புறஞ் செல்லுகையில் ஒரு காக்கை, கா என்று கத்தக்கேட்டு, ‘காவிறையே’ என்றும், ஒரு சோலையில் குயில் கூவக்கேட்டு, ‘கூவிறையே’ என்றும், ஒரு பிள்ளையார் கோயில் பெருச்சாளி ஓடக்கண்டு, அதைக்கல்லெடுத்து அடிக்கப்போய், ‘உங்களப்பன் கோயிற் பெருச்சாளி’ என்றும் பாடம் பண்ணிக்கொண்டு திரும்பும்பொழுது தன் சினேகன் ஒருவன் எதிர்ப்பட்டு, ‘எங்கேபோய் வருகிறாய்?’ என இவன் ‘பாட்டுக்கற்றுக் கொண்டு வரப்போனேன்; நீயும் கொஞ்சம் கற்பிக்க வேண்டும்,’ என, அவன், ‘அடா! கற்பிக்கிறதென்ன? கன்னா பின்னா மன்னா தென்னா வென்று பாடுகிறதுதானே!’ என, இவன் அதையும் பாட்டென்றே நினைத்து, முன்பு தான் விளையாட்டுப் பிள்ளைகளையும்,காக்கையையும், குயிலையும், பெருச்சாளியையும் பார்த்துக் கற்றுக்கொண்டதனோடு சேர்த்துக்கொண்டு, ‘இந்த மட்டிற் போதும்,’ என்று வீட்டுக்குப்போய், அதைத் தன் பெண்சாதியுடனே சொல்ல, அவள் கொஞ்சம் புத்திசாலியாகையால், ‘இதிற் சோழன் பெயரில்லை. அஃதவசியமாய் இருக்கவேண்டும்’ என்று இவனுக்குச் சொல்லிக்கொடுத்த, ‘சோழங்கப்பெருமானே’ என்பதையும் அந்தப் பாட்டுக்கு அங்கிதமாகக் கடைசியில் வைத்துக்கொண்டு, அச்சமில்லாமல் ராஜசபைக்கு வந்து கம்பரைக்கண்டு கும்பிட, அவர் இவனை, ‘நீ யார்?’ என்ன, ‘நான் ராஜாவின்மேற் பாட்டுப்பாடி வந்தேன்,’ என்ன, அவர், ’இவன் விறகு தலையன்,’ என்றும், ‘நம்மைக் குறித்து ஆரோ சொல்லக்கேட்டு வந்து அடுத்தான்,’ என்றும், ‘அடுத்தவனைக் கைவிடலாமா? ஆசிரித சம்ரக்ஷணை செய்ய வேண்டுமல்லவா?’ என்றும் எண்ணி, அபிமானித்து, அவனுக்கு ராஜாவைக் காட்டிக் ‘கும்பிடு’ என்று குறிப்பித்து, அரசன் முதலானவர்களைப் பார்த்துப் ‘பெரியோர்கள் இப்படித்தான் நீறு பூத்த நெருப்புப் போலிருப்பார்கள். அவர்களை ஆரறியத்தக்கவர்கள்?’ என்றுசொல்லிச் சிவுக்கென்றெழுந்து தாமிருந்த ஆசனத்தில் அவனை, ‘இருமிரும்!’ என்று உபசரித்து, பிறகு, ‘நீர் பாடினை பாடலைச் சொல்லும்,’ என்றார்.
அவன் எள்ளளவும் அச்சமில்லாமல்...
[தொகு]அவன் எள்ளளவும் அச்சமில்லாமல், தைரியத்துடனே
‘மண்ணுண்ணி மாப்பிள்ளையே,
காவிறையே,
கூவிறையே உங்களப்பன் கோவிற் பெருச்சாளி,
கன்னா பின்னா,
மன்னா, தென்னா, சோழங்கப் பெருமானே,’
- என்று தான் கற்றுவந்த பாட்டை அசுவதாட்டியாய்ச் சொல்லக்கேட்டுச் சபையிலுள்ளவர்கள் யாவரும், ‘இது நல்ல பாட்டு!’ என்று சிரித்தார்கள். கம்பரானவர், ஒட்டக்கூத்தர் முதலான வித்துவஜனர்களை நோக்கி, ‘இது வெண்பா முதலிய பாக்களிலாவது, பாவினங்களிலாவது எதனோடு சம்பந்தப்பட்டது? இதன் பொருள் யாதென்று அறிந்து சொல்வதல்லவோ வித்துவ சாமர்த்தியம்? அதைவிட்டு நகைப்பதென்னை? பாடினவரைச் சொல்லச் சொன்னால் பிரயாசமில்லாமற் சாதுரியமாக நொடிக்குள்ளே சொல்லுவார்; ஆயினும் நூல் செய்தவனே உரை செய்கிறது சம்பிரதாயமன்று; அதுபற்றி இவரைச் சொல்லச் சொல்லுகிறது நியாயமன்று. ஆன்றியும் நாம் வித்துவான்களாயிருந்து பிறரைப் பொருள்சொல்லும் என்று கேட்டால் நமக்கென்ன பெருமையிருக்கிறது? நம்மிலே ஆராவது ஒருவர் சொல்வதே யுக்தம்,’ என்றார். அவர்கள் இவனெவனோ பைத்தியக்காரன், தன் வாயிலே வந்தபடி தாறுமாறாக எதையோ குழறினால், அதைப் பாடலென்றும், அதற்குப் பொருள் சொல்லவேண்டுமென்றும் சொல்லுகிறாரே! இவர் இவனிலும் பெரிய பைத்தியக்காரராயிருக்கிறாரேயல்லாமல் வேறல்லர். பொருள் சொல்லுங்களென்று பரீக்ஷிக்கிறது போல நம்மைக் கேட்கிறது என்னை? சொல்லத்தக்கதாய் இருக்குமானால் இவரே சொல்லலாகாதோ?’ என்று கம்பரை நோக்கி, ‘நீங்களே சொல்லலாம்,’ என, அவர், ‘உங்களுக்கு நானும் ஒருவனாகையால், நான் சொல்வது நீங்கள் சொல்வதுதான்; உங்கள் அபீஷ்டம் அப்படியிருக்கிறபடியினாலே நானே சொல்லுகின்றேன்,’ என்று கூறத் தொடங்கினார்.
‘இப்பாடல் இடையிடையே சில சீர் குறைந்தியல்வதனால் இணைக்குறளாசிரியப்பாவாகும். இதன் பொருள்: மண்= பூமியை, உண்ணி= உண்டவனே!, மா= இலக்குமியின், பிள்ளையே= புதல்வனே, கா= கற்பகத்திற்கு, இறையே= தலைவனே, கூ= பூமிக்கு, இறையே= அரசனே, உங்களப்பன்= உங்கள் தந்தை, கோ=ராஜன், வில்= விற்போரில், பெரிசு= பெரிதாகிய, ஆளி= சிங்கம் போல்வாய், கன்னா= கன்னனே, பின்னா= தருமனே, மன்னா= நிலை பெற்றவனே, தென்னா= பாண்டியனை ஒத்தவனே, சோழங்கம்= சோழதேசமாகிய அங்கத்தையுடைய, பெருமானே= பெருமையுடையானே என்பதாம். இது பதவுரை.
மகாவிஷ்ணு பிருதிவி பதி என்றபடி, உலகாள்பவனாதலால், ‘நீ விஷ்ணு அமிசம் பெற்றாய்’ என்பார்,, மன்னுண்ணி என்றும்; ‘குறைவற்ற செல்வமுடையாய்’ என்பார், மிக்க செல்வமுடையோனை லக்ஷ்மி புத்திரனென்னும் உலகவழக்குப் பற்றி, ‘மாப்பிள்ளையே’ என்றும், ‘போகத்தாற் சுரேந்திரனை ஒப்பாய்,’ என்பார், ‘காவிறையே’ என்றும், மக்களாய்ப் பிறந்தவர்களில் மிகச் சிறந்தோனாதலால், ‘நரேந்திரனே’ என்பார், ‘கூவிறையே’ என்றும், ‘நீயே அன்றி உன் தந்தை முதலினோரும் அரசாளப்பெற்றவர்தாம்,’ என்பார், ‘உங்களப்பன் கோ’ என்றும், ‘விற்போரிற் சிங்கம்போலப் புறங்கொடாது பகைவரை வெல்வாய்,’ என்பார், ‘விற்பெருச்சாளி’ என்றும், ‘பெருங்கொடை வள்ளலே’ என்பார், ‘கன்னா’ ஃன்றும், ‘பொறுமையிற் கன்னனுக்குப் பின்னானாகிய தருமனே’ என்பார், ‘பின்னா’ என்றும், ‘நெடுங்காலம் அழிவின்றி வாழ்வாய்’ என்பார், ‘பின்னா’ என்றும், ‘தமிழ்ப் புலமையிற் பாண்டியராஜனைப் போல்வாய்’ என்பார், ‘தென்னா’ என்றும், ‘மலை கடல் நாடு முதலிய தசாங்கத்தில் ஒன்றாகிய நாட்டிற் பெரியோய்,’ என்பார், ‘சோழங்கப் பெருமானே’ என்றும் கூறினார். இது பதசாரம்.
‘உங்களப்பன்- எழுவாய், கோ- பயனிலை. அன்றியும், நீ தோன்றா எழுவாயும், விற்பெருச்சாளி- பயனிலையுமாம்,’ என்றும், ‘இச்செய்யுளில் இடை இடையே உவமை உருவகம் முதலிய சில அலங்காரங்களும் அமையப்பட்டன,’ என்றும், அவைகளையெல்லாம் எடுத்துக் காட்டி, வீரம் முதலிய எண்சுவைகளுந் தோன்றி அனைவர்க்குங் கார்ணானந்தத்தை விளைக்கும்படி அற்புதமாகப் பிரசங்கித்துச் சமர்ப்பித்தார்,’ என்றனர். ன் ‘குலோத்துங்க சோழராஜன் முதலானவர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு, ‘இந்தப் பாட்டுப் பாடினவன் மூடனும், பாடல் அரைக்காசு jபெறாததுமாயிருந்தும், அவனை வித்துவானென்றும், அதைப் பாடலென்றும் ஸ்தாபித்து, அதற்கு இலக்கணத்தோடு பொருந்தப் பதப்பொருள் சொல்லிப் பதசாரங்கூறி மேற்கோளுங் காட்டி மெய்ப்பித்தாரே! இவருடைய வித்தியா சாமர்த்தியமே சாமர்த்தியம்! இவரைச் சாரதா பீடமென்றே சொல்லவேண்டும்,’ என்று வியந்தார்கள். சோழராஜா, ‘வழியே போகிற விறகு தலையனுக்காகப் பாத்தியப்பட்டு அவன் குழறி வழிந்ததையும் பாடலாகக் கொண்டு அதற்கு இவ்வளவாக நுட்பித்துப் பொருள்சொல்லித் சமர்த்தித்த இவரைப் பற்றியாவது அவனைப் பெருமைப்படுத்த வேண்டும்,’ என்று அவனுக்குச் சகல வெகுமதியுஞ் செய்தனுப்பினார். அது கண்டு கம்பர், ‘நாம் முழு மூடனை ராஜசபையில் மகாவித்துவானென்று சொல்லி, அவன் குழறலையும் பாடலென்று வற்புறுத்திப் பிரசங்கித்தது பற்றிச் சன்மானத்துடனே அவனுக்கு வெகுமானஞ் செய்தனுப்பின அரசன், இனியொரு காலத்தில், ‘அன்று கவி பாடி வந்த வித்துவான் வெகுநாளாகியும் மறுபடி வரவில்லையே! அவரை அழைப்பியுங்கள்; அவரது வாக்கைக் கேட்கவேண்டும்’ என்றால், அப்பொழுது அவன் பண்டோலம் வெளிப்பட்டுப் போம். அதனால், நம்முடைய கௌரவத்திற்கும் குறைவு வரும்,’ என்று அந்த நாள்முதல் கற்றுச்சொல்லிகளை விட்டு அவனுக்கு இலக்கண இலக்கியத்துடனே கல்விப்பயிற்றி அதிசீக்கிரத்தில் மகாசமர்த்தனாகும்படி செய்து, ‘அப்புறம் ஒரு நாள் அவனைச் சோழமகாராஜாவின் சபைக்கு வரவழைத்து, வேந்தரைக்கொண்டு சமிசை கொடுப்பித்துக் கவிபாடச் சொல்லி, அதை அவன் வாக்கினாலேயே பூரித்தும் பிரசங்கிக்கும்படி செய்தார்; அதைப்பற்றித்தான் சோழமகாராஜா இந்தத் தர்மத்தை உங்களிடத்திலேயே கண்டோம் என்பதாகக் கம்பரைக் குறித்துச் சொன்னார்,’ என்று சடையப்ப முதலியார் சொல்லக்கேட்டு, பாண்டியன் அதிக சந்தோஷப்பட்டு, ‘இப்படிப்பட்ட வித்துவசிரோமணியானவர் நாள்தோறும் கால்நடையாய்ப் போக்குவரவு பண்ணப்பார்ப்பது நமக்கு அழகல்லவே! இவரை இன்று தொட்டாவது வாகனப் பிரதிஷ்டையோடிருக்கச் செய்யவேண்டும்,’ என்று அபிமானித்து, அவருக்கு யானைத் தந்தத்தால் விசாலமான தொட்டி சமைத்து கணைக்குப் பொற்றகடு சித்திரித்து வேய்ந்து, அடியிலே நீலத்தாற்கால் கடைந்து பொருத்தி, மரகதரத்தினத்தாற் குமிழ் நிரைத்து, மேலுக்கு விசித்திரமாகிய சரிகை முகமற் பன்னாங்கு விரித்து, நெருங்க முத்துக்குச்சுத் தூக்கி, கணையின் இருபுறமும் தங்கத்தால் சிங்க உருவமைத்து, அதற்கு அதியுசிதமாகக் கொத்துவேலை செய்து கண்ணுக்கு நீலமும், பல்லுக்கு வச்சிரமும் வாய்க்குப் பதுமராகமும் அழுத்திய சிங்க லலாடம் அமைத்த விலையுயர்ந்த பல்லக்கொன்று வெகுமதியாகக் கொடுத்தான். பின்பு,
“தீயவரொ டொன்றிய திறத்தரு நலத்தோர்
ஆயவரை யந்நிலை யறிந்தனர் துறந்தாங்
கேயவரு நுண்பொடி படிந்துட னெழுந்தே
பாய்பறி விரைந்துதறி நின்றன பரந்தே.”
- என்ற பாடலைக் குறித்து, ‘துர்ச்சனருடைய குணதோஷங்களை ஆராயாமல், அவருடனே நட்புச்செய்த சற்சனர்கள், அந்தத் தோஷங்களைப் பழகியறிந்த பொழுது, அவைகள் தங்களுக்குச் சகிக்க முடியாமையால், அவரது நட்பைச் சீக்கிரத்திற் கைவிட்டது போல, சந்திர சைலத்தின் அடிவாரத்தில் தசரத மகாராஜாவின் சேனை போயிறங்கினபோது, அங்கே வரிசையாகக் கட்டப்பட சிந்துஜம், வனாயுஜம், காம்போஜம், ஆரட்டஜம், பாரசீகம், பாகலீகம் முதலான குதிரைகள் நிலத்திற்படுத்துப் புழுதியிற் புரண்டு, உடனே எழுந்து தத்தம் உடலை அசைத்து, அதில் ஒட்டிய அப்புழுதிகளைப் பற்றற உதறிவிட்டு நின்றன,’ என்று பிரசிங்கக்கேட்டு, அருகிருந்த சிந்து தேசாதிபதி, ‘இந்த உபமானம் ரசமாயிருக்கின்றது!’ என மனமகிழ்ந்து ‘இவருக்கு உசிதமாக நாமென்ன கொடுக்கப்போகிறோம்!’ என்று, எடுத்த முகமும் நெறித்த செவியும் நீண்ட வாலும் நெற்றி முதலிய ஸ்தானங்களில் நற்சுழிகளுமுடைய நூறு உத்தம ஜாதிக் குதிரைகள் வெகுமதி செய்தான்.
இந்தக் காவியத்தில் ஒவ்வொரு நயங்கண்டு குடகு தேசத்திற்கும் பாண்டிய தேசத்திற்கும் சிந்து தேசத்திற்கும் அதிபதிகளானவர்கள் மெச்சி, அவரவர் தனித்தனியே யானை குதிரை பல்லக்குகள் வெகுமதி செய்ததைப் பார்த்திருந்த கூர்ஜர தேசத்தரசன், அதற்கு முன் கம்பர்,
“தள்ள ரும்பரந் தாங்கிய வொட்டகம்
தெள்ளு தீங்கரும் பியாவையுந் தின்கில
உள்ள மென்னத்தம் வாயு முலர்ந்தன
கள்ளுண் மாந்தரிற் கைப்பன தேடியே.”
- என்ற எழுச்சிப்படலப் பாடலைக் குறித்து, ‘தசரதன் சேனையில், அனேகர் கூடித் தள்ளினாலும் தள்ளக்கூடாத அதிகபாரமாகிய சுமைகளைத் தாங்கிச் செல்லும் ஒட்டகங்கள், தாம் செல்லுகின்ற மார்க்கத்திற் கண்ட கண்ட இடந்தோறும் தொடைளவு பருமனாய்க் கமுகுபோல நெடுக வளர்ந்து மிக முதிர்ந்து கணுக்களின் இடையே இடையே வெடித்துத் தேனொழுகுகின்ற தீங்கரும்புகள் அபரிமிதமாயிருக்கக்கண்டும், அவைகளைத் தின்னாமல் கள்ளுண்பவர்கள் தங்களுக்குச் சுவைதங்கிய நல்ல பால் தயிர் முதலானவைகள் விசேஷமாகக் கிடைத்தாலும், அருந்தாமல், வயிற்றிற் பசி துள்ள, தாகத்தால் நெஞ்சு வறளக் கள்ளு எங்ஙனம் விறகின்றதென்று அதை நாடிச் செல்வதைப் போல, கசப்பாகிய வேப்பிலை எங்கிருக்கிறதெனத் தேடிப்போய்த் தம்முள்ளம் போல வாயும் அடிக்கடி அசைபோடுவதனால் உலர்ந்து போயின,’ என்று பிரசங்கித்தது கேட்டிருந்தும், அப்பொழுது அதைப்பற்றித் தான் அவருக்கு ஒன்றுஞ் செய்யாமற் போனதைக் குறித்து லஜ்ஜையடைந்து, ‘இவர்களைப்போல நாமும் ஏதாவத செய்வதல்லவோ நமக்குக் கௌரவம்?’ என்றெண்ணிப் பிறகு தன் தேசத்திலுண்டாகிய ஒட்டகங்களில் இருபது ஒட்டகங் கொடுத்தான்.
“அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென அமைக்கு மாபோல்
உமிழ்சுடர்க் கலன்க ணங்கை யுருவினை மறைப்ப தோரார்
அமிழ்தினைச் சுவைசெய் தென்ன அழகினுக் கழகு செய்தார்
இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ.”
- என்ற ‘கோலங்காண் படல’ப் பாடலைக் குறித்து, ‘பிரமனானவன் ஸ்திரி புருஷர்களுடைய கண்களுக்கு மேலிமை கீழிமை இரண்டும் அழகென்று நினைத்து அவை பார்வையை மறைக்குமென்பதை நினையாமற் படைத்ததுபோல, வண்ணமாதர்கள் குற்றமற்று ஒளி வீசுகின்ற மாணிக்கம் மரகதம் முதலிய முழுமணிகள் இழைத்துச் சமைத்த நாநாவித திவ்வியாபரணங்களைக் கொண்டு அவை சீதையின் திருவுருவத்தை மறைக்கு மென்பதை யோசியாமல், சுவையுடைய பொருள்கள் எல்லாவற்றினும் மிக்க சுவையுடைய தேவாமிர்தத்திற்கு இயல்பாயுள்ள அச்சுவை போதாதென்று, பால் பழம் சீனி தேன் என்னும் இவைகளினாற் சுவை கற்பித்தது போல, ஜனகியின் இயற்கை அழகுக்கு ஏற்றத்தை உண்டாக்க வேண்டுமென்று செயற்கை அழகு செய்தார்கள்; இங்கனம் கடல் சூழ்ந்த உலகமானது அறியாமையை உடையதாயிருக்கின்றது?’ என்று பிரசிங்கித்த பொழுது, காஷ்மீர தேசாதிபதி கம்பரை நோக்கி, ‘உலகம் அறியாமையுடையதென்பதற்குத் திருஷ்டாந்தம் சொல்லவேண்டும்,’ எனக் கம்பர், ‘அனேகம் இருக்கின்றன; அவற்றுள் ஒன்று கேளுங்கள்: ஆடி மாதத்தில் மாமி வீட்டில் வாழ்கின்ற பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்துவந்து விடுகிறதும், தாய் வீட்டிலிருக்கிற பெண்ணை மாமி வீட்டுக்கு அனுப்பாமலிருக்கிறதும் நெடுநாளைய வழக்கமாயிருக்கின்றது; இதன் காரணமென்னவெனில், ஆடி மாதத்திற் கர்ப்பம் தரிக்குமென்றும், பத்தாமாதம் பிள்ளை பிறக்குமென்றும், அப்பத்தாமாதம் சித்திரைமாதம் என்றும், சித்திரை மாதத்திற் செல்வன் பிறந்தால் ஆனகுடிக்கு அனர்த்தமாம்,’ என்று நினைக்கின்ற பிராந்தியே, இவர்கள் ஸ்ரீராமர் அவதரித்தது சித்திரை மாதமென்பதை அறியார்போலும்! அந்த ஆடி மாதத்திலே கர்ப்பம் தரிக்குமென்ற நிச்சயந்தானென்னை? ‘ருஷி பிண்டம் ராத்தங்காது,’ என்பதோ? அப்படியின்றி, ஆவணி புரட்டாசிகளிற் கர்ப்பந் தரிக்கிறதில்லையா? நல்லது, கர்ப்பந் தரித்த பத்தாமாதத்தில்தானா பிள்ளை பிறக்கிறது? பத்துக்குமேல் பதினோராமாதம் பன்னிரண்டாமாதம் பிறக்கிறதில்லையா? அல்லாமலும் ஒன்பதாம் மாதம் எட்டாம் மாதங்களிலும் பிறக்கின்றதே! கோசலைப் பிராட்டியானவள் கர்ப்பம் தரித்த பன்னிரண்டாம் மாதத்திலல்லவோ பிரசவித்தாள்? இத்தனை கொள்ளையும் பிரவிடையான பெண்ணுக்குத்தானே? பிரவிடையாகாத பெண்ணுக்கு வந்த விதி என்ன? அவளையும் தாய் வீட்டுக்கு அழைத்துப் போய்விடுகிறார்களே! இதுவும் விவேகமா? பூ மலர்ந்த பின்பல்லவோ மணம் வீசும்? மலராத பூவுக்கு மணமேது? இஃதென்னை பேதைமை?’ என்று சொல்லக்கேட்டு, இவருக்கு உலக வழக்கங்களும் விசேஷமாய்த் தெரிந்திருக்கின்றன!’ என்று அதிசயித்து, அவ்வரசன் தன் தேசத்தில் நெசவு செய்யப்பட்டு, ஒவ்வொன்று ஆயிரம் இரண்டாயிரம் விலையேறப்பெற்ற சால்வைகளில் மிகவும் உயர்ந்த பத்துசால்வைகள் வெகுமானம் பண்ணி, அவற்றுள் ஒன்றை எடுத்து விரித்துத் தன் கையாற் கம்பருக்குப் போர்த்தனன்.
பின்னும் அப்படலத்தில்,
“கோளணி சங்கம் வந்து குடியிருந் தனைய கண்டத்து
ஈனமில் கலன்கள் தம்மில் இயைவன அணிதல் செய்தார்
மானணி நோக்கி னார்தம் மங்கலக் கழுத்திற் கெல்லாம்
தானணி யாய போது தனக்கணி யாது மாதோ!”
- என்ற பாடலைக் குறித்து, ‘சீதைக்கு மணக்கோலஞ் செய்வோர், மான் போன்ற அழகிய பார்வையுடைய பெண்களின் மங்கலமாகிய கழுத்துக்கெல்லாம் சீதை பிரதான பூஷணமாயிருக்கும் பொழுது, அவளுக்குப் பூஷணமேதுக்கென்று நினையாமல், பூஷணத்திற்குப் பூஷணமிடுவது போல, ஸ்ரீமந்நாராயணன் கரத்தில் ஏந்துவதும் ஆயிரஞ்சலஞ்சலச் சங்கம் புடைசூழ அவைகளின் நடுவே அரசு வீற்றிருப்பதுமாகிய மாட்சிமை தங்கிய பாஞ்ச சன்னியம் வந்து குடிபுகுந்தது போன்ற அவளது திருக்கழுத்தில் ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னிற் களங்க ரகிதமாய் மாற்றுயர்ந்த ஒருவகைப் பொன்னாற் செய்து, மாசற்ற மணி பதித பூஷணங்களுக்குள் கழுத்துக் கிசைந்து சிறந்தவைகளாகிய பல பூஷணங்களையும் அணிந்தார்கள்,’ என்று பிரசங்கிக்கக் கேட்டு, கூர்ச்சரதேசத்து இரத்தின வணிகன் ஒருவன், ‘பெண்கள் கழுத்திற்குச் சீதை ஆபரணமாயிருக்கிறாள் என்பது என்னை?’ எனக் கம்பர், ‘மாதர்கள் கழுத்திற்கு மங்கலக்குறியாய் இருப்பது தாலி; அது திருவாகிய லக்ஷ்மி விலாசம் பெற்றமையால், அதற்குப்பெயர் ‘திரு’ என்றும், இச்சீதையே அத்திருவாதலால், இவளை அப்பெண்கள் கழுத்திற்கு ஆபரணமாயிருப்பவள் என்றும் இங்ஙனம் கூறியது,’ என்றார். அதற்காக அவ்வர்த்தகன் சந்தோஷமுற்றும் கம்பருக்குப் பச்சை கெம்பு வச்சிரம் நீலம் முதலான நவரத்தினமிழைத்த பற்பல ஆபரணங்களை வெகுமதி செய்தான்.
ஆரணிய காண்டத்திற்...
[தொகு]ஆரணிய காண்டத்திற் ‘சரபங்கப் படல’த்தில், சரபங்கர் ஆசிரமத்துக்குச் சென்று அவரிடத்தில் தான் குறித்துப்போன செய்தியைப் பற்றிப் பேசிப் பயன்படாமையால் திரும்பிவரும் இந்திரன் தனக்கெதிரே ஸ்ரீராகவர் வரக்கண்ட மாத்திரத்தில் ஆனந்த பரவசமாய் அவரை ஸ்துதி செய்கையில்,
“நாழி நவைதீ ருலகரெலா மாக நளினத்து நீதந்த நான்முகனார் தாமே
ஊழி பலவும் நின்றளந்தா லொன்றும் உலவாப் பெருங்குணத்த வுத்தமனே மேனாள்
தாழி தரையாகத் தண்டயிர்நீ ராகத் தடவரையே மத்தாகத் தாமரைக்கை நோவ
ஆழி கடைந்தமுத மெங்களுக்கே யீந்தாய் அவுணர்கடா முனக்கடிமை யல்லாமை யுண்டோ?”
- என்ற பாடலைக்குறித்து, ‘குற்றமற்ற அண்டங்களையெல்லாம் அளவு கருவிகளாக, திருநாபிக் கமலத்தின் வழியாக நீ ஈன்றருளிய சதுமுகப் பிரமன் அளவுகாரனாக, அவன் தன் வாழ்நாளாகிய ஒரு கற்ப காலமேயன்றி அனேக கற்பகாலம் உன் கடாக்ஷத்தால் முடிவின்றியிருந்து உன் கல்யாண குணங்களைத் தானியராசிகளாகக் கொண்டு அளந்தால், அவற்றுள் ஒரு ராசியாயினும் மாளாது; அப்படி மாளாதிருக்கின்ற அனந்தமாகிய பெருங்குணத்தையுடைய புருஷோத்தமனே! பூர்வம் பூமியே தயிர்த்தாழியாக, தண்ணீரே தயிராக, பெரிய மந்தரகிரியே மத்தாக, தாமரை மலர்போன்ற உன் திருக்கைகள் நோவக் கடலைக்கடைந்து அமுதத்தை எடுத்து, ‘பள்ளமிறைத்தவனுக்குப் பங்கு’ என்ற பழமொழிப்படி, எங்களுடனே கூடப் பாடுபட்ட அசுரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க நியாயமுண்டாயிருந்தும், அவர்களுக்குக் கொடாமல் எங்களுக்கு மாத்திரம் கொடுத்தருளினாய்; அப்படிச் செய்தது உனக்கு நாங்கள் அடிமையாயிருப்பது பற்றியோ? வேதாகமங்கள் ஆத்துமாக்கள் எல்லாம் அனாதியே ஈசுவரனுக்கு அடிமையென்று பிரதிபாதிக்கின்றதை நோக்குமிடத்தில், அவ்வசுரர்கள் தாம் உனக்கடிமையாகாது ஒழிந்திருப்பதுண்டோ?’ என்பதாகப் பிரசங்கிக்கக் கேட்டு சடையப்ப முதலியார், ‘பரமாத்துமனுடைய சுகுணங்களைத் தானியராசியாகவும், பிரமனை அளவுகாரனாகவும் உருவகப்படுத்தினது மிகவும் அழகாயிருக்கின்றது!’ என்று பரம சந்துஷ்டி அடைந்து, கம்பருக்கு அன்று முதல் அவருடைய ஆயுள் வரையிற் பிரதி வருஷமும் ஊசிபோன்ற நல்ல சன்னச்சம்பா நெல் பப்பத்துக் கரிசைக்குக் குறையாமற் கொடுத்து வந்தார்.
கிட்கிந்தா காண்டத்தில், ‘வாலி வதைப்படல’த்தில், இராமபாணம் வந்து மார்பில் தைத்த சமயத்தில்,
“ அரக்கரோர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு மற்றோர்
குரக்கர சதனைக் கொல்ல மனுநெறி கூறிற் றுண்டோ?
இரக்கமெங் குகுத்தாய் என்பால் எப்பிழை கண்டா யப்பா?
பரக்கழி விதுநீ பூண்டால், புகழையார் பரிக்கற் பாலார்?”
- என்ற பாடலைக் குறித்து, வாலி இராகவனைப் பார்த்து, அப்பா, இரகு நாயகா, இராக்கதர்கள் வந்து உன் மனைவியை அபகரித்துக்கொண்டு உனக்குக் குற்றஞ் செய்துபோனால், உன் விஷயத்தில் அப்படி அபராதிகளானவர்களைச் சிட்சியாமல், ‘அடுப்பெரியாத கோபத்தை அம்மையார் மேல் காட்டுவது போல’ காட்டிலே நிரபராதியாயிருக்கின்ற குரங்குகளுக்கு ராஜாவாகிய என்னைக் கொல்லும்படி நீ வாசித்தறிந்த மநுநீதி ஏதாவது சொல்லியிருக்கின்றதுண்டோ? உங்கள் வமிசத்திற்கு இயற்கையாயிருக்கின்ற ஜீவகாருணியத்தை எங்கே சிதறிவிட்டாய்? என்னிடத்தில் என்ன தோஷங் கண்டாய்? கௌரவத் தாழ்வாகிய பழிக்கு நீ உடன்பட்டையேயானால், இனிப் புகழென்பதைப் பரிக்கத்தக்கவர்கள் ஆரிருக்கிறார்கள்?’ என்று சொல்லக்கேட்டு, ஸ்ரீராமன் அவனை முன்னிட்டு, ‘அடா வாலி, அரக்கர் செய்த குற்றத்தைக் குறித்து நானுன்னைக் கொன்றதாக நீ தவறாய்ச் சொல்லுகிறாய்; உன்னைக் கொன்றது அதைப் பற்றியன்று; மேலும் நான் இரக்கத்தைக் கைவிட்டதாய்ப் பேசினாய்; நல்லது! துர்ச்சனர்களுக்கு இரக்கம் காட்டலாமா? என்னிடத்திலே என்ன பிழை கண்டாய்?’ என்று கேட்டாய்; சுக்கிரீவன் மனைவியை அபகரித்ததை மறந்து போயினையோ? பழியை நான் தேடிக் கொண்டதாய்ச் சொல்லவந்தாய்; துஷ்டநிக்கிரகஞ்செய்வது பயிர்க்குக் களையெடுக்கிறது போல அல்லாமல் ஒரு பொழுதும் பழிபாவம் ஆகாதென்பதை அறியாயோ?’ எனச் சொன்னதாகப் பிரசங்கித்தார்.
சபையிலிருந்தவர்கள் கம்பரை நோக்கி, ‘சுவாமி, பின் புறத்திற் பதுங்கியிருந்து வாலியின்மேற் பாணப்பிரயோகஞ் செய்தது, வீரதர்மமா?’ என, கம்பர், ‘இந்தக்கேள்வி வாலியே கேட்டிருக்கிறான்,’ என, ‘அவர்கள் அஃது யாது?’ என, ‘வாலி சுவாமியை எதிரிட்டு, ‘இராமா! நான் சுக்கிரீவன் மனைவியை அபகரித்ததாகச் சொன்னையே, தம்பி பெண்சாதியை அண்ணன் சுதந்திரிப்பதற்குப் பாத்தியம் இல்லாமற் போயிற்றா? அதற்காக நீ என்னைக் கொல்ல ஏற்பட்டது அநியாயந்தானே!’ என சுவாமி, ‘இஃதென்னை முறை கேடான பாத்தியம்? நீ என்ன சொன்னாலும் அக்கிரமஞ் செய்தவர்களை அரசர்கள் தண்டியாமல் விடமாட்டார்கள்,’ என, வாலி, ‘மிருகங்களுக்கு முறையென்பதும், முறை கேடென்பதும் உண்டோ? இல்லையே! ஆதலால், இஃது அக்கிரமம் அன்று,’ என, சுவாமி, ‘மிருகம் இப்படிக்கெல்லாம் நியாயங்கேட்குமா? கேளாதாகையால் நீ சொல்வது சரியன்று,’ என, வாலி, ‘அஃதிருக்கட்டும்; நாங்கள் இருவரும் தொந்தயுத்தஞ்செய்கையில் நீ என்னைக் கொல்வது தர்மமா?’ என, சுவாமி, ‘தன் கன்றைப் புலியடிக்க வரும்பொழுது பசு அப்புலியைப் பாயாமல் அதனிடத்திற் கன்றைக் காட்டிக் கொடுத்திருக்குமோ?’ என, வாலி, ‘தமயன் தம்பிகளாயிருக்கும் எங்கள் இருவருக்குள் நீ ஒருவன் பக்ஷத்தில் நட்பும், மற்றவன் பக்ஷத்தில் பகையும் பாராட்டலாமோ?’ என, சுவாமி, ‘சுக்கிரீவன் வந்து என்னை அபயம் என்று அடுத்தபடியினாலே உதவிசெய்து அவனை ரக்ஷித்தேன்; நீ அவனுக்குத் தீங்கு செய்ததனால் உன்னைச் சிக்ஷித்தேன்’ என, வாலி, ‘செங்கோல் முடி முதலான ராஜசின்னங்களையும் அதிகாரத்தையும் பரதனுக்குக் கொடுத்துவிட்ட நீ, என்னைத் தண்டித்தது எவ்விதத்தால்? என, சுவாமி, ‘என் அதிகாரமுதலானவைகளையும் பரதனுக்கு நான் கொடுத்துவிட்டாலும், அவன் சித்திரகூட பர்வதத்திற்கு வந்து என்னைக் கண்டபொழுது வனத்தில் ராக்ஷசர் முதலிய துஷ்டாத்துமாக்களைக் கண்டாற் சிக்ஷியாமல் விடவேண்டாவென்று எனக்கு ஆக்கியாபித்திரிக்கிறான்,’ என, வாலி, அப்படியானால் எனக்கெதிரே வந்து போர்செய்யலாமே! பின்னிருந்து அம்பெய்தது என்னை?’ என, சுவாமி, ‘திருடனைப் பதுங்கிப் பிடித்தாலல்லவோ அவன் அகப்படுவான்?’ என, மற்றும் இவ்வாறு அனேகம் கேள்விகள் வாலி கேட்க, அவைகளுக்கெல்லாம் சுவாமி தக்கபடி உத்தரஞ்சொல்லியிருக்கிறார்,’ என்று சொல்ல, யாவருஞ் சந்தோஷித்தார்கள்.
“ஆழ நீர்க்கங்கை யம்பி கடாவிய
ஏழை வேடனுக் கெம்பியுன் றம்பிநீ
தோழன் நங்கை கொழுந்தி யெனச்சொன்ன
ஆழி நண்பனை உன்னி அழுங்குவாள்”
-என்கிற சுந்தர காண்டக் ‘காட்சிப் படல’ப் பாடலைக் குறித்து, ‘ஆஞ்சநேயர் அசோகவனத்தில் எழுந்தருளியிருக்கும் பிராட்டியை ஒரு மரத்தின் மேலேறி, ‘இவர் எப்படிப்பட்ட ஸ்திதியில் இருக்கிறாரோ! அறிவோம்,’ என்று பார்த்துக் கொண்டிருக்கையில், அவள் வேறோர் எண்ணமுமின்றிச் சர்வதா சுவாமியினிடத்திற் சிந்தை வைத்தவளாய், அவரைச் சொப்பனத்திலும் மறவாமல், உலகத்தில் யாவராயினும் ஒருவரை யொருவர் நேசிக்குங்கால், குணம் கல்வி செல்வம் ஈகை வீரம் புகழ் ஞானம் ஒழுக்கம் முதலியவைகளில் மிக்குயர்ந்தவர்களையே நேசிக்க வேண்டுமென்பது முக்கிய தர்மமாயிருக்க, உத்கிருஷ்டமாகிய க்ஷத்திரிய குலமும், சரஸ்வதியும் நாணத்தக்க பூரணமான கல்வியும், குபேர சம்பத்திலும் அதிகமாய் அளவிடப்படாத சம்பத்தும், கற்பகம் போன்ற மாறாத ஈகையும், எவர்களாலும் வெல்லப்படாத வீரமும், அண்டமுற்றும் அளாவிய புகழும், திவ்விய ஞானமும், இடையறாத நல்லொழுக்கமும் உடையவராகிய சக்கிரவர்த்தித் திருமகனார் ஆழமாகிய நீரையுடைய கங்காந்தியிற் படவு ஓட்டுகின்றவனும், மேற் சொல்லிய கல்வி முதலானவைகளில் ஏழையுமாகிய குகனென்னும் வேடனைக் கங்கைக்கரையிற் கண்டு, தமது மேன்மையையும் அவனது கீழ்மையையும் பொருள் செய்யாமல் நேசித்த காலத்தில் அவனுக்கும் தமக்கும் வேறுபாடில்லாமல் ‘என் தம்பி, உன் தம்பி என்றும், ‘என் பெண்சாதி உன் மைத்துனி,’ என்றுஞ் சொல்லி, அன்பு பாராட்டிய அந்தக் கடல்போலும் பெரிய நட்பை நினைத்து வருந்தத் தலைப்பட்டாள்,’ என்று பிரசங்கித்தார்.
அதுகேட்டு, அங்கிருந்தவர்களிற் சிலர், ‘சுவாமியானவர், சகலத்தையும் கைவிட்டு வனத்திற் பிரவேசித்த சமயத்தில் மிகவுந் தாழ்ந்த ஸ்திதியில் இருந்தபடியினாலே ‘காலத்திற்க்கேற்ற கோலம்’ என்பதாக, அங்கேவந்த கிராதனைத் தாரதம்மியம் பாராமற் சமான ஸ் கந்தமாக நேசித்தார்; அப்படியின்றி, மண்டலாதிபத்தியம் பெற்று அகண்ட சாம்பிராச்சியத்தை அனுபவிக்குங்காலத்தில் அவன் வருவானானால் இவ்வண்ணமே நடப்பாரா?’ என்ன, கம்பர் அவர்களை நோக்கி, ‘அந்த அதிசயத்தைச் சற்றுக்கேளுங்கள்; ஸ்ரீராகவர் பிதுர் வாக்கிய பரிபாலனம் பண்ணும்பொருட்டுப் பதினாலாண்டுங் கழித்துத் திருவயோத்திக்கு மீண்டும் போய் மகுடாபிஷேகம் பெற்று மகுடவர்த்தனர் பட்டவர்த்தனர் முதலாகிய பல அரசர்களும், பிரமசரியர் கிருகஸ்தர் வானப்பிரஸ்தர் சந்நியாசிகளாகிய பற்பலரும் சுக்கிரீவன் அங்கதன் அனுமன் முதலானவர்களும், வானர சேனைகளும் மற்றுமுள்ள சகல மகாஜனங்களும் புடைசூழ, பிரமபுத்திரராகிய வசிஷ்டரென்னுங் குலகுருவும், சுமந்திரன் முதலாகிய அனேக மந்திரிகளுஞ் சேர்ந்திருக்க, உன்னதானத்திற் சீதா சமேதராயெழுந்தருளியிருக்கும் பிரபலமான அந்த மகா வைபவத்தைப் பார்த்துப் பிராட்டியானவள் பிரமித்து, இப்படிப்பட்ட தருணத்திற் கங்கைக்கரையிற்கண்டு சினேகித்த வனசரனாகிய குகன் வந்தால், சுவாமியானவர் பழையபடியே அவனிடத்தில் அந்நியோந்நியமாக நட்புப் பாராட்டுவாரோ அல்லது சத்தியந் தப்பிப்போவாரோ! இவர் நிலைமை எங்ஙனமாமோ!’ என்று திருவுளத்தில் ஐயமுற்றிருக்கையில், தெய்வ யத்தனமாய்க் ‘குபேரன் பட்டணத்திலும் விறகு கட்டுக்காரனுண்டு’ என்ற பழமொழிப்படி, அயோத்தியில் நித்திய தரித்திரனாய்ப் பிச்சையெடுத்துச் சீவிப்பவனொருவன் இரகுநாயகரைக் குழந்தைப் பருவத்தில் வீதியிற்காணுந்தோறும் ஆசையுடனே எடுத்து அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சுபவன், இராமர் காட்டுக்குப் போன நாள்முதல் அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாயிருந்து, அவர் வந்த செய்தி அறிந்த மாத்திரத்தில் அதிசீக்கிரமாக ஓடிவந்து, சபாரத்தினமாய்ச் சிங்காதனத்தின் மேலிருக்கும் இராம சந்திரரைக் கண்டு, வாயிற் காவலாளிகள், ‘ஆரங்கே போகிறவன்!’ என்று கேட்குங் கேள்விக்கும் உத்தரஞ் சொல்லாமல் உட்சென்று, அச்சபை நடுவே புகுந்து தன் அசுத்தமாகிய காலினால் அனைவரையும் மிதித்துத் துவைத்துக்கொண்டு, சுவாமிக்கு அருகிற் கிட்டிச் சேர்ந்து, ‘அடா ராமா, நீ எப்பொழுது வந்தாயடா?’ என்று கட்டிக்கொண்டழுதான். சுவாமியும் அவனைக் கட்டிக்கொண்டழுது துக்கித்தார்.
இவ்வாறு அவனழத் தாமழக்கண்ட அரசர் முதலானவர்களும் ‘இதென்ன காரணம்! ஆரோபைத்தியம் பிடித்த பிச்சைக்காரன் திடுதிடென்று ஓடி வந்து கட்டிக்கொண்டழுதால், சுவமியும் அவனைக் கட்டிக்கொண்டழுகிறாரே! அவனைத்தொடர்ந்த பைத்தியம் இவரையுந் தொடர்ந்ததே! என்று பிரமிக்குஞ் சமயத்தில், அவன், ‘அப்பா, ஏன் சும்மா அழுகிறாய்? இனி, அழவேண்டா; முகம் வீங்கிப் போகிறது!’ என்று சொல்லித் தன் அழுக்குப்பற்றிய பீற்றல் துணியினாற் சுவாமி கண்ணைத் துடைக்க, அவர் துக்கமாறி எல்லாரையும் பார்த்து, ‘பதினான்கு வருஷத்திற்கு முன்பு இறந்த எங்கள் பிதாவாகிய தசரத மகாராஜாவை இன்று கண்டேன்!’ என்றார். அதுகேட்டு யாவரும், ‘இஃதென்னை ஆச்சரியம்! பிச்சைக்காரனைத் தம் பிதாவென்கிறாரே! இவருக்குப் பைத்தியம் பிடித்தது மெய்,’ என்றே நிச்சயித்தார்கள். சுவாமி அவர்களை நோக்கி, ‘கேளுங்கள்; என்னை முனிவர்கள் பிரேம ஸ்வரூபனென்றும், தேவர்கள் நாதனென்றும் பந்து வர்க்கத்தார் இரகுநாதனென்றும், உலகாள்வோர் தாசரதியென்றும், எங்கள் மாமியார் வீட்டார் என் பெயரைச் சொல்லக்கூடாதாகையால் சீதாபதி என்றும், சினேகர்கள் இராமபத்திரனென்றும், மற்றுஞ் சிலர் இராமசந்திரனென்றுஞ் சொல்வார்கள்; எங்கள் பிதா மாத்திரம் ‘அட ராமா’ என்று அழைப்பதுண்டு; அந்தப்படியே இந்த மகாராஜனும் அழைத்தபடியினாலே எங்கள் பிதாவை இன்று நான் கண்டேன் என்பதாகச் சொன்னேன்,’ என்றார். அப்பொழுது யாவரும், ‘இவருக்குள்ள சௌலப்பிய குணம் மற்றாருக்குண்டு?’ என்று பலகாலுஞ் சொல்லி ஆனந்தித்தார்கள். பிராட்டியார் திருவுள்ளத்திலுதித்த சந்தேகமும் நிவர்த்தியாயிற்று,’ என்று சொல்லிப் பின்னுங் கம்பர், ‘சுவாமி தம் திரு நாமங்களைக்குறித்து அருளிச் செய்தபடியே முன்னோர்களால்,
“ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாயப் பதயே நம:”
-எனச் சுலோக பூர்வமாய் அவர் ஸ்தோத்திரம் பண்ணப்பட்டுமிருக்கிறார்,’ என்றார். அதற்காகச் சேரசோழபாண்டியர் முதலானவர்களும் அதிக சந்தோஷப்பட்டார்கள்.
யுத்தகாண்டத்தில், ‘கடல்காண் படல’த்தில்,
“நென்னற் கண்ட திருமேனி யின்றி பிறிதாய் நிலைதளர்வான்
தன்னைக் கண்டு மிரங்காதே தானே கதறுந் தடங்கடல்வாய்
பின்னற் றிரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல் உள்ளுயிர்க்கும்
புன்னைக் குறும்பூ நறுஞ்சுண்ணம் பூசா தொருகாற் போகாதே.”
-என்ற பாடலைக்குறித்து, ‘ஸ்ரீராமர் வானர சைனியங்களுடனே இராவணன் மேற் படையெடுத்துப் போய்த் தென்சமுத்திரத்தின் வடகரையில் இறங்கியிருக்கும் பொழுது, பிராட்டியின் பிரிவாற்றாமையால் தமக்கு இரா முழுவதும் நித்திரை வராதது கண்டு, திருப்பள்ளி ஸ்தானத்தை விட்டெழுந்து, கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருக்கையில், சீதையைப் பிரிந்தது முதல் ஒவ்வொரு நாளும் நேற்றுக்கண்ட தம் திருமேனி இன்று வேறுபட்டுக் காணுதலால், உருத்தெரியாமல், அறிந்து பழகினவர்களும் மயங்கும்படி உயிர்நிலை தளர்கின்ற அவரைக்கண்டும் இரங்காமல், தானே கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்ற விசாலமாகிய கடலினிடத்திற் பின்னி விழுகின்ற நீர்த்திரைகளின்மேல் தவழ்கின்ற இளந்தென்றலானது, தேனைச் சொரிகின்ற மணம்பொருந்திய புன்னைப் புஷ்பத்தின் மகரந்தப்பொடிகளை வாரிக்கொண்டு வந்து அவ்விராகவர் மேற் பலகாலும் பூசத் தலைப்பட்டது,’ என்று கம்பர் பிரசங்கித்தார்.
ஒட்டக்கூத்தர், ‘ஒலிக்கிறது கடலுக்கு என்றுஞ் சுபாவமாகையால், நீர் அது கதறுகின்றதென்றது மெய்தான்; ஆயினும், இராமரைக்கண்டும் இரங்காமல் தானே கதறுகின்ற தென்றீரே! கடலுக்கும் இராமருக்கும் என்ன சம்பந்தம்?’ என, கம்பர், ‘சீதையானவள் அச்சமுத்திரத்திற் பிறந்தமையால், அதற்கு அவள் மகளும், அவளுக்கு அது தாயும், அவள் கணவராகிய இராமருக்கு மாமியாரும், அவர் அதற்கு மருமகனாரும் ஆதலால், அம்முறை பற்றி மருமகனார் மாமியார் வீட்டிற்கு அழைக்கப்படாமல் வருவது தருமமன்றாயினும், அதை இராமர் நினையாமல் வலிய வந்ததைக் குறித்து இந்த மாமியார் எவ்வளவோ சந்தோஷத்தோடு ஆசார உபசாரஞ் செய்யவேண்டுமே! அதுவுஞ் செய்யாமல், இவர் தம் மனைவியை இழந்து ஏக்கம் பிடித்து உடல் மெலிந்து சோகங் கூர்ந்து வந்ததைப் பற்றியாவது, ‘என் செல்வ மருமகனே, வந்தையா? வா!’ என்றழைத்து, ‘உடலும் உயிரும்போல உன்னுடன் மருவிப் பிரியாமலிருந்த உன்னாசைக் கண்ணாட்டி எங்கே போனாள்? உனக்குப் பெண்டு பாக்கியமில்லாமற் போய்விட்டதா?’ என்று வினவித்துக்கத்தோடு ஓடிவந்து மேல்விழுந்து அலறி அழவேண்டுமே! அப்படியுஞ்செய்யாமல், தன்னருமைத் திருமகளை ராக்ஷசன் வஞ்சித்துக் கொண்டு போனதனால், அவளைப் பெற்ற வயிறு பற்றியெறிய, அக்கடலானது நீராயுருகிக் கரைந்து பிரக்கினை யில்லாமல் தன்னுடன் கூட அழுவார் ஒருவருமின்றி ஒற்றைக்குரலாய்த் தானே அழுதுகொண்டிருப்பதுபற்றி, ‘நிலை தளர்வான் தன்னைக் கண்டு மிரங்காதே தானே கதறுந் தடங்கடல் என்கிறோம்,’ என்று சொல்லி, பின்னும், ‘அந்தச் சமுத்திரம் அவ்வாறு கத்திக்கொண்டிருக்கையில், அலைகளாகிய கைகளின் மேல் தவழ்ந்து விளையாடும் இளந்தென்றலாகிய அதன் பிள்ளையானது ‘இஃதென்னை அவமரியாதை? இக்காலத்தில் நம் தாய் தன் சொந்த மருமகன் வந்தவிடத்தில் விசாரியாமலிருக்கிறாள். நம் அக்காளுக்கும் அத்தானுக்கும் விவாகமான தருணத்தில் நாம் அருகிலிருந்து அவ்விவாகச் சிறப்பைக்கண்டு அக்காலத்தில் நடத்த வேண்டிய மரியாதையை நடத்தப் பாக்கியம் பண்ணாமற் போனோம்; அப்பொழுது நடத்தாமற் போனாற்போகட்டும். இப்பொழுதாவது அதை நடத்தி அத்தானைச் சந்தோஷப்படுத்த வேண்டுமே! இத்தருணத்திலும் அப்படிச் செய்யாதிருந்தால் இதை ஆராவது கேட்பவர் ‘அக்களோடே போயிற்று மச்சான் உறவு,’ என்றல்லவோ சொல்லுவார்கள்? ஆதலால், சும்மாவிருத்தலாகாது,’ என்று, ‘இளம்பிள்ளை பயமறியாது’ என்பதற்கேற்கச் சமயாசமயந் தெரியாமல், புன்னைப் புஷ்பராகப் பொடியாகிய கந்தப்பொடியை அடிக்கடி வாரிக்கொண்டு வந்து தலைகால் தெரியாமல் அத்தான்மேல் வீசிப் பூசிக் கந்தப்பொடி வசந்தமாடி, மைத்துனங்கொண்டாடத் தலைப்பட்டது,’ என்றும் விரித்துரைத்தார். கேட்டவர்கள் எல்லாம், ‘இது நல்ல வேடிக்கை! என்று ஆச்சரியப்பட்டார்கள்.
யுத்த காண்டத்தில் இரணியன்...
[தொகு]யுத்தகாண்டத்தில் ‘இரணியன் வதைப்படல’த்தில், பிரகலாதன்குறித்த தூணில் அகண்ட பரிபூரணனாகிய பக்தற்சலன் ஆவிர்ப்பவித்து இரணியனை வதைத்தபொழுது, இந்திராதி பிரமாதி தேவர்களும் முனிவர்களும் வந்து ஸ்துதி செய்யுஞ் சமயத்தில்,
“தன்னைப் படைப்பதுவுந் தானே யெனுந்தகைமை
பின்னைப் படைத்ததுவே காட்டும் பெரும்பெருமை
உன்னைப் படைத்தாய்நீ யென்றா லுயிர்படைப்பான்
என்னைப் படைத்தா யெனுமிதுவு மேதாமே?”
-என்ற பாடலைக்குறித்து, ‘கலைமகள் கணவனாகிய பிரமன், சுவாமியை நோக்கித் தன் மனமானது வெயிலிடு வெண்ணெய்போல உருகி நெகிழ சர்வலோக சரணியனாகிய எம்பெருமானே, புகைக்குக் காரணம் அனல் என்பதுபோலப் பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணம் ஈஸ்வரன் என்பதேயல்லாமல், அவ்வீஸ்வரனுக்குக் காரணம் சொல்லக்கூடாமையால், அவனைத் தோற்றுவித்தவர் வேறில்லை என்றும், அனாதியிற் பரமாத்துமன் தன்னைத்தானே படைத்துக்கொண்டான் என்றும் வேதஞ்சொல்வதை இப்போது நீ இந்த ஸ்தம்பத்தினிடத்தில் அழகியசிங்கனாக உன்னைப் படைத்துக்கொண்டதே பிரத்தியக்ஷமாகக் காட்டாநின்றது; இவ்வாறு மகத்தாகிய பெருமை தங்கிய உன்னையே நீ படைக்கத்தக்க அற்புதமாகிய பரமசத்தியை உடையவனா யிருக்கின்றாயென்றால், இந்தச் சராசரங்களாகிய உயிர்களைப் படைக்கின்ற சத்திதான் உனக்கில்லாமற் போயிற்றோ? இவைகளைப் படைப்பதற்காக என்னை நீ படைத்தாயென்று சொல்லப்படும் இஃது எத்தன்மைத்தாம்?’ என்று ஸ்தோத்திரஞ்செய்தான்,’ என்பதாகக் கம்பர் பிரசங்கிக்கக் கேட்டவர்கள், ‘இக்கருத்துக் கடவுளில்லை என்று வாதிக்கும் நாஸ்திகர் நாவை அடக்குவதற்குத் தக்க கருவியாயிருக்கிறது!’ என்று மிகவும் வியந்து பேசினார்கள்.
மேற்சொல்லிய படலத்தில், அழகிய சிங்கனாய் வந்து அவதரித்த சர்வேஸ்வரர், பிராட்டி புருஷாகாரத்தால் உக்கிரந் தணிந்து கிருபை கூர்ந்து பிரகலாதனை நோக்கி, ‘அப்பா, குழந்தாய், என்னைப்பற்றி ஜன்ம சத்துருக்களாகிய இரணியன் முதலானவர்களாற் படாத பாடும் பட்ட உனக்கு நானென்ன செய்யப்போகிறேன்! வேண்டும் வரத்தைக் கேள்,’ என்ற சமயத்தில்,
“அன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை
பின்பு பெறும்பேறு முண்டோ, பெறுவனேல்
என்பு பெறாத விழிபிறவி யெய்திடினும்
அன்பு பெறுகை யரும்பே றெனக்கென்றான்.”
-என்ற பாடலைக் குறித்துக் கம்பரானவர், ‘பிரகலாதன் சுவாமிக்கு முன்பு அஞ்சலியஸ்தனாய் நின்று, ‘ஓ பத்தரட்சகா, பரமதயாளா, அடியேனுக்கு வேண்டிய பேறெல்லாம் இப்பொழுது நீ அருளிச்செய்வதாகக் கேட்கச் சொன்னமையால் என்ன பேறு பெறவேண்டுமென்று கேட்பேன்?அனாதியில் நான் மூலப்பிரகிருதியில் அழுந்தி ஜீவாத்தும பரமாத்தும ஸ்வரூபமும், அவ்விரண்டுக்கும் உள்ள சம்பந்தமும், அச்சம்பந்தத்தைத் தடுக்கும் விரோதமும், அவ்விரோதத்தை நிவர்த்திக்கும் உபாயமும், அவ்வுபாயத்தைச் செய்தவிடத்து அடையும் பரமார்த்தமும் இன்னவென்று விளங்காமல் நாசத்தை அடைந்திருக்கையில் நிரேதுக கிருபையினாலே கரசரணாதி அவயவங்களைத் தந்து, வேதாகமங்களைக் கொண்டு மேற்சொல்லிய ஸ்வரூபம் முதலானவைகளையுந் தெரிய விளக்கி, உன் திருவடியிற் சரணாகதி பண்ணுவதற்கேற்ற சேஷத்துவம் தலையெடுத்துப் பாரதந்திரனாகி உன் கைங்கரியத்தை இப்பிறப்பில் இடைவிடாது செய்து உச்சீவிக்கும்படி நீ அனுக்கிரகிக்க அவ்வாறு அடியேன் முன்னமே பெற்ற பேறுகளுக்கோ முடிவொன்றுமில்லை; அவையன்றி இனிப்பெறும் பேறுகளும் வேறேயுண்டோ? அப்படியே பெற விரும்புவேனாகில், விசித்திரமாகிய பூர்வ கர்ம சேஷத்தால் இன்னும் காலச்சக்கரத்தில் அகப்பட்டு இவ்விருள் தரு மாஞாலத்தால் எண்ணிறந்த ஜன்மமெடுத்து உழல வரினும் அஞ்சுவேனல்லேன்; எல்லாப் பிறப்பினும் மிகவும் தாழ்வாகிய சாக்கடைச் சேற்றிற்கிடந்து நெளியும் புழுவாய பிறப்பைப் பெற்றாலும், உன் திருவடிக்கண் மாறாத அன்பு செலுத்தப்பெற்றால் அப்பேறு சத்பக்தியை உண்டாக்கும்; சத்பக்தி சத்கர்மத்தை உண்டாக்கும்; சத்கர்மம் சத்போதத்தை உண்டாக்கும்; சத்போதம் வீடடைவிக்கும்; அதுபற்றி இயமநியமாதிகளாகிய அஷ்டாங்க யோகமும், அணிமா மகிமா முதலாகிய அஷ்டமாசித்தியும் மற்றுமுள்ள பலவகைப் பேறுகளும் வேண்டுவனவல்ல; அவ்வன்பொன்றும் பெறுவதே நாயேனுக்கு அரிய பெரிய பேறாம், அதையே அருளிச் செய்யவேண்டும்,’ எனப் பிரார்த்தித்தான்,’ எனப் பிரசங்கித்தார்.
“வாணாள் அளித்தி முடியாம னீபின் வருநா ளிறத்தி மறையாய்
பேணா யுனக்கொர் பொருள்வேண் டுமென்று பெறுவா னருத்தி பிடியாய்
ஊணா யுயிர்க்கு முயிரா கிநிற்றி யுணர்வாதி பெண்ணி னுருவாய்
ஆணாதி மற்றை யலியாதி யாரிவ் வதிரேக மாயை யறிவார்?”
-என்ற ‘நாகபாசப் படல’ப் பாடலைக் குறித்துக் கம்பரானவர், ‘இந்திரஜித்து பிரயோகித்த நாகபாசத்தாற் கட்டுண்ட இளையபெருமாள் முதலானவர்களை நோக்கிப் பிரலாபிக்கின்ற ஸ்ரீராகவரைக் கருடன் கண்டு, ‘வேதஸ்வரூபியாகிய ஜானகி மனோகரா’ எவ்வகைப் பற்றுகளையும் கைவிட்டு உன் திருவடியே தஞ்சமென்று பற்றிய சேதனர்கள் உன்னைப்போல நித்தியராம்படி அவர்களுக்கு அப்பிராகிருதமாகிய திவ்விய சரீரத்தையேயன்றி, உனது வாழ்நாளையும் அளிக்கின்றாய்; நீ அங்ஙனம் அளித்துப் பின்பு உன் திருவுருவுக்கு அழிவும் வாழ்நாட்கு அவதியுமின்றிக் காலவரையறை கடந்து நிற்கின்றாய்; உன் தேக போஷணைக்காகத் தானியம், தனம், வஸ்திரம், பூஷணம், காணி, பூமி முதலிய பலவகைப் பொருள்களுள்ளும் ஒன்றையாயினும் முன்னுக்காவது பின்னுக்காவது வேண்டுமேயென்று தேடி வைத்துப் பாதுகாக்கின்றாயில்லை; அல்லது யாதேனும் ஒன்றைப் பெறும்பொருட்டு அதனிடத்தில் இச்சையும் வைத்திருக்கின்றாயில்லை; இப்படிப் பசையற்றிருந்தும், பல்லாயிரங்கோடி அண்டங்களிலுமுள்ள அகில சராசரங்களுக்கும் நீயே தாரகபோஷகமாகி, அவ்வாத்துமாக்களுக்குள் அந்தரியாமியுமாயிருக்கின்றாய்; மெய்யினாற் பரிசத்தை உணர்தலும், நாவினாற் சுவையை உணர்தலும், கண்ணினால் உருவத்தை உணர்தலும், மூக்கினாற் கந்தத்தை உணர்தலும், செவியினால் ஒலியை உணர்தலுமாகிய ஐம்புலவுணர்வும் அவற்றிற்காதியாகிய மனவுணர்வும், அதிற்கதிஷ்டானமாகிய உயிருணர்வும் அவ்வுயிர் இத்தன்மைத்தாயதெனவும், இவை அனைத்திற்குங் காரணமாய் அதீதப்பட்டிருக்கின்ற பிரமசாக்ஷாத்காரமானது அகண்ட பரிபூரண சச்சிதானந்த ஸ்வரூபமாயிருக்கின்றதெனவும், தத்துவ நியதி பண்ணிச் சுருதி குரு சுவானுபவங்களால் ஐயந்திரிபற உணரும் மெய்யுணர்வுமாகி விளங்குகின்றாய்; சர்வலோகங்களையும் சகல உயிர்களையும் திருவுதரத்துள் அடக்கி வெளியிடுகின்றமையாற் பெண்ணுருவாகியும், புருஷோத்தமன்எனப் பெயர் பூண்டமையால் ஆணுருவாகியும், அவை இரண்டுமல்லாத அலியுருவாகியும், அதிசயிக்கத்தக்க அதிரேக மாயையைக் கொண்டு இங்ஙனம் நடிக்கின்றாய்! உலகத்திலே இந்த அகடித கடனா சாமர்த்தியத்தை அறிந்து ஆனந்திக்குமவர்கள், ‘கர்த்தா போக்தா ஜனார்த்தனா’ என்று சாஸ்திரஞ் சொல்லுகிறபடி, உன்னையன்றி வேறில்லாமையாற் சித்திரக்காரன் பலவகைச் சித்திரங்களையும் தானே எழுதித் தானே பார்த்துக் களிப்பது போல, நீயே இயற்றி நீயே பார்த்து நீயே சந்தோஷிக்கவேண்டியிருக்கின்றது,’ என்று ஸ்துதி செய்தான்,’ எனப் பிரசிங்கக்கேட்டுச் சேரமகாராஜன் முதலானவர்கள் பிரமானந்தமடைந்தார்கள்.
சானகி ‘களங்காண் படல’த்தில், சீதையைப் புஷ்பவிமானத்தின்மேல் ஏற்றியுத்தகளத்திற்குக் கொண்டுவந்து அவளுக்குப் பிரமாஸ்திரத்தால் இறந்த இளையபெருமாள் முதலானவர்களையும் காட்ட, அவர்கள் இறந்தது கண்டு துக்கித்து மெய்ம்மறந்து மூர்ச்சைபோல இருக்கின்ற, பெரிய பெருமாளையும் பாரென்று ராக்ஷசிகள் காண்பித்தபொழுது,
“மங்கை யழலும் வானாட்டு மயில்கள் அழுதார், மழவிடையோன்
பங்கி லுறையுங் குயிலழுதாள், பதும மலர்மேல் மாதழுதாள்
கங்கை யழுதாள், நாமகளு மழுதாள், கமலத் தளங்கண்ணன்
தங்கை யழுதாள், இரங்காத அரக்கி மாருந் தளர்ந்தழுதார்”
-என்பதைக் குறித்து, ‘பிராட்டியானவள் பிரமாஸ்திரத்தால் மற்றவர்களைப் போலச் சுவாமியும் பிராணவியோகமானார் என்று எண்ணித் தன் கனி வாயைத்திறந்து அழுத மாத்திரத்தில் சுவர்க்கத்திலுள்ள இந்திராணி முதலான மயில்போன்ற மாதர்களும் அழுதார்கள்; இடபவாகனத்தையுடைய சிவபிரானது வாமபாகத்தில் வசிக்கும் குயிலையொத்த உமாதேவியும் அழுதாள். தாமரைப் புஷ்பவனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமகாலட்சுமியும் அழுதாள்; சத்தியலோகத்திலுள்ள கங்கையும் அழுதாள்; பிரமன் நாவிலிருக்கும் வாணியும் அழுதாள்; கமலதளம் போலும் விசாலமாகிய விழிகளையுடைய நாராயணன் தங்கையாகிய துர்க்கையும் அழுதாள்; இரக்கமில்லாத ராக்ஷசிகளும் தளர்ச்சி கூர்ந்து அழுதார்கள்,’ என்று கூறி, பின்னும், சீதையானவள் தன்னமிசமாகையால், அவள் படும்பாடு தான் படுவதாகத் தோன்றக்கண்டு இலக்குமி துக்கித்ததும், சுபாவத்திலேயே நீராந் தன்மையளாதலால் கங்கை துக்கித்ததும் சகஜமே; இந்திராணி முதலானவர்கள் துக்கமென்பதன் பெயரையும் அறியாமற் போகத்திலேயே சுகித்திருப்பவர்களாகையாலும், உமாதேவி மலைபெற்ற மகளாகையாலும், அன்றியும் சேதனகோடிகளை ரக்ஷிக்கும்பொருட்டு ஸ்ரீமகாவிஷ்ணுவின் கருணையே சீதையாகத் திருவுருக்கொண்டு இங்ஙனம் நடிக்கின்றதென்னும் உண்மையை அவளறிந்தமையாலும், சரஸ்வதி சீதைக்கு மருமகளும், சீதை அவளுக்கு மாமியுமாகிய முறைமை பற்றி, ‘மாமியார் செத்த ஆறாமாதம் மருமகளுக்குக் கண்ணிலே தண்ணீர் வந்தது,’ என்று சொல்லுகிறபடி, வாணிக்குச் சீதை விஷயத்தில் விரோதஞ் சம்பவிக்கலாமாகையாலும், துர்க்கை சயமகளும் நீலியுமாயிருப்பவளாகையாலும், அவ்விந்திராணி முதலானவர்களுடைய மனத்தில் இரக்கமென்பது மருந்துக்குங் கிடைக்காமாட்டாதென்று நிச்சயிக்கப்படுதலால், இவர்களுக்குத் துக்கம் ஜனித்தது அதிசயமே! ஆராயுமிடத்து அதுவுமோர் அதிசயமன்று, இராட்சசிகள் தர்மாதர்மம் பாராதவர்களும், மிகவும் கடின சித்தமுடையவர்களும், நரமாமிச பக்ஷணிகளும், இராவணனாகிய இராட்சசனால் ஏவப்பட்டுச் சீதையைச் சித்திரவதை செய்கிறோமென்று நெஞ்சந் துணிந்து எந்நேரமும் அவளை மொய்த்துச்சுற்றி உபத்திரவப்படுத்திக் கொண்டிருப்பவர்களுமாகையால், அவர்கள் அழுததே உள்ளபடி அதிசயம்!’ என்றும் கம்பர் பிரசங்கித்தார்.
பாண்டியராஜன், ‘சர்வோத்தமியாகிய ஜானகியுடனே ஜகத்காரணராகிய சுவாமியும் இத்தனை ஈடுபாடுகள் பட வந்தவெல்லாம், மேற்படி தேவஸ்திரீகளுக்கும் அவர்கள் நாயகன்மார்களுக்கும் இராவணாதியரால் நேரிட்ட உபத்திரவத்தை நிவர்த்திக்கும்பொருட்டேயாதலால், அவர்கள் அக்காரணத்தை நினைப்பார்களாயின், அவர்களைத் துக்கிக்க வேண்டாவென்று தடுத்தாலும் கேட்கமாட்டார்கள்; இந்த அரக்கிமார்களுக்கோ, அப்படிப்பட்ட ஆபத்துச்சம்பவிக்கவுமில்லை; அதனிமித்தம் இராமராவது சீதையாவது சகாயஞ் செய்யவுமில்லை. இப்படி ஓரேதும் இல்லாதிருந்தும், இவர்கள் துக்கித்தது வைதேகியின் துக்கம் சகிக்க முடியாமையினாலேயேயாதலால், அதிலும் இஃது உசிதமாம் என்றது மெய்தான்!’ என, அது கேட்டு அச்சபையிலிருந்தவர்கள் அசேஷமும், ‘எம்பெருமாட்டியாகிய ஜானகியைக் கொல்லத் துணிந்த யமராக்ஷசிகளே அவளது துக்கங் கண்டு சகிக்காமல் உள்ளுருகி அழுதார்களானால் அவளருமைத் திருமேனி எப்படிப் பதைத்திருக்க வேண்டும்! அவள் எவ்வளவு கண்கலக்கங் கொண்டிருக்க வேண்டும்! ஏதேது நினைத்திருக்க வேண்டும்! என்னென்று புலம்பியிருக்க வேண்டும்!’ என்று பலவாறாக எண்ணி, அப்பிராட்டி விஷயத்தில் விசேஷ பத்தி சிரத்தையுடையவர்களாதலால், தங்கள் மனங்குழைய முகம்வாட மெய்சோரக் கண்ணீர் ஆறாய்ப் பெருகத் தென்றல் முற்றிப் பெருங்காற்றானது போல, அவர்களுக்குத் துக்கம் வர அதிகரிக்க, அலறியழுதார்கள். அஃதறிந்து சடையப்ப முதலியார், ‘இஃதேது! மதுபிந்து கலகமாய் முடிந்தது! என்றார். கம்பர் விரைவாகக் கற்றுச்சொல்லியை மருத்துப்படலத்தை எடுத்து வாசிக்கச்சொல்லி, ‘அனுமான் சஞ்சீவி கொண்டுவந்தான்,’ என்றும், ‘அந்த வாடைபட்டு இறந்தவர்களெல்லாம் உயிர் பெற்றெழுந்தார்கள்,’ என்றும் பிரசங்கித்தார். பிறகு அழுதவர்கள் அவ்வியசனம் மாறிச் சந்தோஷித்தார்கள்.
சோழராஜன் இவ்வதிசயம்...
[தொகு]சோழராஜன், ‘இவ்வதிசயம் குலசேகராழ்வார் இராமாயண காலக்ஷேபஞ் செய்தவாறாயிற்று,’ என்று சொல்லி நகைத்தான். கஜபதி என்னும் அரசன், ‘அஃதெவ்வாறு?’ என்று வினாவ, கம்பர், ‘பகவத் பாக்தர்களாகிய பன்னிரண்டாழ்வார்களுக்குள் சேரர் பிரானாகிய குலசேகராழ்வார் என்பவர், ஸ்ரீமந் வால்மீக ராமாயண காலக்ஷேபஞ் செய்து வருகையில், ஆரணிய காண்டத்தில் இராவணன் தங்கையாகிய சூர்ப்பநகை மூக்கறுப்புண்டு, ஜனஸ்தானத்திலிருந்த கர தூஷணாதியரிடத்திற் போய் முறையிட்டது கண்டு, அவர்கள் மகா உக்கிரத்துடனே எண்ணிறந்த சேனைகளைக் கூட்டிக் கொண்டு படையெடுத்து வந்த சமயத்தில், சுவாமியானவர் தமக்கொருவரும் துணையின்றித் தனியே யமகிங்கரர்களுக்கொப்பாகிய அத்தனை அரக்கர்கள் மேலும் போர்க்குச் சென்றாரென்று சொல்லக்கேட்டு, ஆழ்வார் இராமசரித்திரத்தில் அதிக பிரேமை உள்ளவராகையால், வெகுகாலத்திற்கு முன்பு நடந்த அந்தச் சரித்திரம் அன்றுதான் நடக்கிறதாக நினைத்துத் தமது திருமேனி பதைபதைக்க, ‘இஃதென்னை கொள்ளை! இளையபெருமாளாயினுங் கூடப்போகவில்லையா? அவர் இராகவரை விட்டு எங்கே போனார்?’ என, பௌராணிகர், ‘கோதாவரிதீரத்திற் பர்ணசாலையில் எழுந்தருளியிருக்கும் பிராட்டியாருக்குக் காவலாயிருக்கும்படி பெரிய பெருமாள் நியமிக்க, அந்நியமனப்படி அவரவ்விடத்திலிருந்து விட்டார்,’ என, ஆழ்வார், ‘ஆபத்துக் காலத்தில் சக்கரவர்த்தித் திருமகனாருக்கு லக்ஷ்மணரும் உதவி செய்கிறதற்கில்லை; அன்றியும், வேறோர் உபாயமுமில்லை; இரதம் முதலிய வாகனங்களுமில்லாமல் பாதசாரியாய்ப் போயிருக்கிறார், அவ்விராக்கதர்களோ, கொடிய துஷ்டர்கள்! இப்படிப் பலவிதத்திலுஞ் சங்கடமாயிருப்பதனால், கிளியை வளர்த்துப்பூனை வாயிற் கொடுப்பது போல, அந்தப் பாதகர்களிடத்தில் இரகுநாயகரை எப்படிக் காட்டிக் கொடுத்துவிட்டிருக்கிறது! இந்நேரம் அவர்கள் அங்கே ‘அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டாய்’ இருக்குமே! இத்தருணத்தில் நம்மாலேயான உதவியொன்றுஞ் செய்யாமற் சும்மா பார்த்துக்கொண்டிருக்கலாமா? ‘அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி’ என்பதாக நாம் உபேக்ஷை செய்வது தர்மமல்லவே! என்று அனுதபித்து உக்கிராகாரமாய் உடனே தம் சேனைகளை அவர்கள்மேற் படையெடுத்துப் போம்படி ஆக்கியாபித்து, ரத கஜ துரக பதாதிகளாகிய சதுரங்க பலமும் ஜனஸ்தானத்தை நோக்கி முன்னே போக, தாம் போர்க்கோலம் கொண்டு பின்னே போக யத்தனித்தார். அத்தருணத்தில், ‘சுவாமியானவர் நிர்ப்பயமாகப் பிரபல யுத்தஞ் செய்து சத்துருக்கள் அத்தனை பேரையும் ஜயித்து ஜயசங்கம் முழங்கத் தேவர்கள் புஷ்பமாரி பொழியப் பர்ணசாலைக்கு மீண்டு வந்தார்,’ என்ற சந்தர்ப்பத்தை எடுத்துப் பிரசங்கிக்கேட்டு, ஆழ்வார் கோபாவேசந் தணிந்து, தெற்கு நோக்கிப் போன சேனைகளைத் திரும்பி வரும்படி நியமித்தார்,’ என்று கூற, கஜபதி ‘சேரர் பிரானுக்கு அப்பொழுது பகவத் சங்கமத்திற்குப் பிரிவு சம்பவிக்குமேயென்னும் பயம் விளைக்கத்தக்க பரம்பத்தி தலையெடுத்திருக்க வேண்டும்; அஃது அவருக்கும் ‘அன்பு பெறுகை அரும்பேறெனக்கு என்றான்,’ என்று முன்பு சொல்லப்பட்ட பிரகலாதனுக்குமன்றி மற்றாருக்குண்டு,’ என்று மனம் நெகிழப் புளகாங்கமுற்றான்.
“தாதைக்குஞ் சடாயு வான தந்தைக்குந் தமிய ளான
சீதைக்குங் கூற்றங் காட்டித் தீர்ந்தில தொருவன் றீமை
பேதைப்பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பி லாத
காதற்றம் பியர்க்கு மூர்க்கு நாட்டிற்குங் காட்டிற் றன்றே.”
- என்ற ‘மாயா சீதைப்படல’ப் பாடலைக் குறித்து, ‘இந்திரஜித்து மாயா சீதையைத் துணித்தெறிந்துவிட்டு, ‘இதோ நான் அயோத்திக்குப் போய் அங்குள்ளவர்களையும் அதம் பண்ணுகிறேன்!’ என்று சொல்லிப் போக்குக் காட்டி நிகும்பலைக்குப் போய்விட்ட தருணத்தில் ஸ்ரீராமர் அவன் மெய்யாகவே அயோத்திக்குப் போனதாகக் கேள்விப்பட்டு, ‘ஐயோ! நான் வனத்திற் பிரவேசித்தபொழுது, ஒப்பற்ற மாயாவியாகிய என்னைப் பிடித்த சனியானது, பிரமத்திலே என்னை நாட்டிலிருந்து காட்டில் ஓட்டிவிட்டது; ஆயினும், அது பெரிதன்றென்று நினைத்திருந்தேன்; உடனே அடியை மிதித்தாற் போல என்னைப் பெற்ற சாக்ஷாத் பிதாவாகிய தசரதமகாராஜாவுக்கு முடிவை யுண்டாக்கிற்று; பின்பு தெய்வாதீனமாய் அந்த நிர்மானுஷிகமான காட்டில் எங்களுக்குத் துணை வந்திருந்த மெய்யன்புடைய பெரிய பிதாவாகிய ஜடாயுவுக்குமரணத்தை விளைத்தது; அதன்பின்பு தான் பிறந்தது புகுந்ததுமாகிய பெரிய கடல் போன்ற குடும்பத்தை என்பொருட்டுக் கைவிட்டு ஆரைத்துறந்தாலும் புருஷனைத் துறக்கலாகாதென்றெண்ணி, ‘நீயே கதி’ என்று நம்பி என்னுடனே கூடவந்து என் சாயை போலப் பிரியாதிருந்த என் பிராண நாயகியாகிய சீதைக்கு மிருத்துவைக் கொண்டுவந்து விட்டது. அப்பாழ்ஞ்சனியானது, அம்மட்டிலேயாவது தொலைந்து போமென்று பார்த்தால், அப்படியும் தொலையாமல், ‘ஒருவன் செய்த தீவினை அவன் காலைச் சுற்றி வேரையறுக்கும்,’ என்ற பழமொழிப்படி பேதைமைக்குணத்தை உடைய பெண்டிராய்ப் பிறந்து அருமையாகிய தவஞ்செய்து எம்மைப் பெற்ற தாய்மார்களுக்கும், எனக்குப் பின் பிறந்த குற்றமற்ற வாற்சல்யமுடைய பரத சத்ருக்னர்களாகிய என் தம்பிமார்களுக்கும், தாய்போல என்னிடத்தில் அன்பு பாராட்டிய அயோத்தி மகா ஜனங்களுக்கும், அவ்வயோத்தியைச் சூழ்ந்திருக்கும் கோசல தேசத்திலுள்ள பிரஜைகளுக்கும் நாசத்தை வருவித்ததே!’ என்றும், ‘என்னைப் பெற்ற பிதாவாகிய தசரத மகாராஜா எளிதில் இறக்கிறவரா! கல்லால் அடித்தாலும் அவருக்குச் சாவு வாராதே! அப்படியிருந்தும், அவரை என் பிரிவாற்றாமையல்லவோ மாய்த்தது! ஜடாயுவானவர் சீதைக்காகப் பரிந்துபோய் எதிர்த்தது பற்றிக் கோபம் மூண்டமையால், அவரை இராவணன் கொன்றான்; ஆதலால், இவ்விரண்டும் ஒருவாறாகவாவது ஒப்புக்கொள்ளத்தக்கவையாயிருக்கின்றன; இந்திரஜித்துச் சீதையைக் கொன்றது ஏது நிமித்தத்தால்? பெண்பிள்ளையாகிய அவள் ஆண்பிள்ளையாகிய அவனுக்கு என்ன தீங்கு செய்தாள்? அஃது ஒன்றுமில்லை; அப்படி இல்லாதிருந்தாலும், அவளை இராவணன் அபகரித்ததை முன்னிட்டு நாங்கள் அவன்மேற் படையெடுத்துப் போராடி ராக்ஷசர்களில் அனேகரை மாய்த்ததாவது அதற்கு ஒரு நிமித்தமாக வைத்துக்கொள்ளப்படும்; நிரபராதிகளையும், இது விஷயத்தில் எவ்வளவும் சம்பந்தப்படாதவர்களாயும் கண்காணாத சீமையிலிருக்கின்ற பரத சத்ருக்கினர்கள் என்ன பொல்லாங்கு செய்தார்கள்? அவர்களையும் கபடமில்லாத தாய்மாரையும், யாதொன்றும் அறியாத ஊராரையும், நாட்டாரையும் சண்டாளன் கருவறுக்கப் போயிருக்கிறானே! இதற்கு ஏதுவென்ன? நானொருவன் பிள்ளையாய்ப் பிறந்து செய்த தீமையே சகலமானவர்களும் அவதிப்படும்படி இந்தப் பிரமாதத்தை விளைத்தது!’ என்றும் எண்ணாததெல்லாம் எண்ணிப் பிரலாபித்தார்,’ எனக் கம்பர், பிரசங்கிக்கேட்டுக் காந்தார தேசாதிபதி, இயற்கையிலேயே விருப்பு வெறுப்பு, சுகம் துக்கம், பெருமை சிறுமை முதலாகிய பற்றொன்றுமில்லாத நிர்மல ஸ்வரூபமாகிய பரப்பிரமமே இவ்வாறு துக்கித்தால், துக்கசமுத்திரத்திலேயே மூழ்கியிருக்கின்ற பிரபஞ்சத்தாரைப்பற்றி என்ன சொல்லுகிறது! என்று ஆராமைப்பட்டான்.
‘இந்திரஜித்து வதைப் படல’த்தில், நிகும்பலையிலிருந்து வஞ்சகனாகிய இந்திரஜித்து இலக்குவனால் மாண்டபொழுது, அவன் தலையை அங்கதன் தூக்கிவந்து சுவாமி திருவடியின் கீழிட, அநுமன் முதலானவர்களுடனே இளையபெருமாள் வந்து அவரைச் சேவித்து நிற்கையில்,
“கம்ப மதமாக் களியானைக் காவற் சனகன் பெற்றெடுத்த
கொம்பு மின்றென் பால்வந்து குறுகி னாளென் றுளங்குளிர்ந்தேன்!
வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில்
‘தம்பி யுள்ளான் படைக்கஞ்சான்’ என்னும் மாற்றந் தந்தனையால்.”
-என்ற பாடலைக்குறித்து, ‘சுவாமியானவர் யமகாதகனாகிய அவ்விந்திரஜித்தைச் சுமித்திரை புதல்வன் கொன்றதைப்பற்றி அதிக சந்தோஷமடைந்து, அவனை நோக்கி, ‘தம்பி லக்ஷ்மணா, கொடுவிஷம் போலும் பொல்லாதவனாகிய இந்திரஜித்து உயிரோடிருக்கிறவரையில் இராவணாதி ராக்ஷசர்களை நான் ஜயிக்கிறதும், சீதையைச் சிறை மீட்கிறதும் சொப்பனத்திலும் இல்லை; அசாத்தியமென்றே நினைத்து ஏங்கியிருந்தேன், அந்தப் பரம துஷ்டனை மாய்த்து நீ செய்த சகாயத்தால் இனி இராவணாதியர் எனக்கொரு விஷயமேயல்லர்; இந்நொடியிலேயே அவர்கள் குலமுழுதும் பற்றற்றுப் போம்படி நிர்மூலப்படுத்திவிடுவேன். கம்பத்திற் கட்டப்பட்ட மதம் பொருந்திய செருக்கினையுடைய பெரிய பட்டவர்த்தன் யானையை ஏறி நடாத்தும் புவனசம்ரக்ஷகனாகிய ஜனகமகாராஜன் தவஞ்செய்து பெற்றெடுத்த பூங்கொம்பு போன்ற அழகிய மேனியையுடைய சீதையும் சிறை நீங்கி இன்றைத் தினமே என் பக்கலில் வந்து சேர்ந்தாள் என்பதாக மனம் குளிர்ந்தேன்; இப்படிப்பட்ட பேருதவி உன்னையன்றி மற்று ஆர் செய்வார்கள்? பரிமளம் பொருந்திய பத்மாலயத்தில் வாசஞ் செய்கின்ற பிரமன் படைத்த இவ்வுலகத்தில் ‘தம்பியுள்ளான் படைக்கஞ்சான்’ என்று நெடுநாளாக வழங்கிவரும் பழமொழியைக் கைகண்ட பலனாக எனக்கு அனுபவப்படும்படி செய்தாயே!’ என்று சொன்னார்,’ எனப் பிரசங்கித்தார்.
அதுகேட்டுக் கண்ணப்ப முதலியார்‡, தமையனுக்குத் தம்பி உதவிசெய்வது அதிசயமா? சகஜந்தானே! அப்படியிருக்க, சுவாமி இளையபெருமாளைக் குறித்து அவ்வளவாக வியந்துரைத்தது என்னை?, என்று கேட்கக் கம்பர்,
(‡கண்ணப்பமுதலியார், சடையப்பமுதலியாரின் தம்பி ஆவார்.)
“நேசரைக்கா ணாவிடத்து நெஞ்சார வேதுதித்தல்
ஆசானை யெவ்விடத்து மப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலைமுடி வில்.”
-என்னும் இச்செய்யுளில், ‘வேறுபாடின்றிக் கலந்து சினேகித்தவரை முகத்துக்கெதிரே புகழ்ந்து பேசினால், அவர்க்கது தம்நண்பன் தம்மைத் தன்னினின்றும் வேறுபிரித்ததாகத் தோன்றுமாதலால், அவரைக் காணாதவிடத்தே மனமாரப் புகழவேண்டும்; ஆசாரியன் தனக்குத் தெய்வமதலால், சீஷன் முன்பின் என்னும் விவஸ்தையில்லாமல் எவ்விடத்திலும் தான் கொண்ட குருபக்தி வெளிப்படும்படி நெஞ்சுருக ஸ்துதி செய்யவேண்டும்; தன்னிடம் வசிக்கின்ற மனையாளிடத்திற் கணவன் சமயாசமயம் பாராமல் இஷ்டம் பாராட்டினால், அவள் தனக்கமைந்து நடவாள். ஆதலால், தருணமறிந்து சயன ஸ்தானத்தில் அவளைச் சந்தோஷிப்பிக்க வேண்டும்; புத்திரர்களிடத்தில் பிதா அவர்கள்அறியும்படி வெளிப்படையாக அன்பு செலுத்தினால், செருக்குற்று ஒழுக்கம் தவறுவாராதலால், அவர்களது கல்வி அறிவு முதலியவற்றைக் குறித்து அவன் தனக்குள்ளே தானே மகிழ்ச்சிகூர வேண்டும். போர்த்தொழில் புரியும் வீரனை அல்லது மற்ற தொழில் செய்யும் வேலைக்காரனை யஜமானன் எந்நேரமும் சிலாகித்துப் பேசினால், அவ்வாறு சிலாகித்துப் பேசப்பட்டவன் தன்னைத் தலைவன் சமர்த்தன் என்று கொண்டாடுவதாக எண்ணிக் கர்விப்பானாதலால், அவனுக்கிட்ட வேலையை முற்ற முடித்த பின்பு, ‘நீ நன்றாய்ச் செய்தாய்!’ என்று அவனை வியந்து சன்மானிக்க வேண்டும்; இங்ஙகம் புரிவதனால் மேற்கூறிய சினேகனுக்கு வரவர நட்பும், ஆசாரியனுக்கு அருளும், மனைவிக்குஉ அமைந்து நடக்கையும், புத்திரர்களுக்கு ஒழுக்கமும், வீரனுக்கு அல்லது ஏவல் செய்வோனுக்கு ஊக்கமும் அதிகரிக்கும் என்று சொல்லும் வண்ணம் போர் செய்யுமிடத்து படை வீரர்களுக்கு உற்சாகமுண்டாகும்படி அவர்களைப் புகழ்ந்துரைப்பது தலைவனது கடமையாதலால், அக்கடமையைச் செலுத்துதற்பொருட்டும், கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்கிரீவன் வாலியைத் தமயனென்று மதியாமல் வலிதிற் போர்க்கழைத்தது கண்டு இளையபெருமாள் சகியாமல், ‘பெரியார் சிறியார் என்னும் தாரதம்மியம் பாராமற் சுக்கிரீவன் அதிக்கிரமிக்கிறானே! இஃதென்னை அநியாயம்!’ என்று சுவாமியிடத்தில் முறையிட்ட போது,
“அத்தா இதுகே ளெனவா ரியின்கூறு வானிப்
பித்தா யவிலங் கினொழுக் கினைப்பேச லாமோ?
எத்தா யர்வயிற் றினும்பின் பிறந்தார்க ளெல்லாம்
ஒத்தாற் பரதன் பெரிதுத் தமனாவ துண்டோ?”
- என்ற செய்யுளில், ‘சுவாமியானவர், லக்ஷ்மணரை நோக்கி ‘அப்பா, இந்தப் பித்துப்பிடித்த மிருகங்களின் நடக்கையைக் குறித்து ஒரு பொருளாக மதித்துப் பேசலாமா? இது நிற்க. முற்காலத்தில் நடந்த ஒரு சேதி கேள்:சுந்தோப சுந்தர்கள் என்ற அசுரேந்திரர் ஒரு தாய் வயிற்றிற் பிறந்தவர்களாயிருந்தும், அவர்களுக்குள் அந்நியோந்நியமென்பது எவ்வளவுமின்றிப் பகைத்துச் சரீரத்துடன் பிறந்து கொல்கின்ற வியாதி போல ஒருவரையொருவர் வியர்த்தமாக மடித்து மாண்டுபோனார்கள்; உலகத்தில் எந்தத் தாய் வயிற்றிலும் பின் பிறந்தவர்களெல்லாம் வரன்முறை பிசகாமல் முன் பிறந்தவர்களுடைய மனத்துக்கு ஒத்து நடந்தால், நம்முடைய பரதன் தமயன் சொற்கடவாது நடக்கின்ற உத்தமனெனப் பெயர் பெறுவானா?’ என்று அருளிச்செய்தபடி, இவ்விடத்திலும் தமயன் நியமனப்பிரகாரம் நடப்பவர்கள் பெறும் ஏற்றத்தை வெளிப்படையாலும் நடவாதவர்கள் அடையும் தாழ்வை அர்த்தாபத்தியாலும் வெளியிடுதற் பொருட்டுமே அவ்வாறு கூறியது,’ என்றார். அப்பொழுது அச்சபையிலிருந்தவர்கள் இவ்வரன்முறை கடவாமைக்குத் திருஷ்டாந்தம் மேற்படி கண்ணப்ப முதலியாரிடத்திலும், அவர் தமயனாராகிய சடையப்ப முதலியாரிடத்திலுங் கண்டோம்,’ என்று அவர்களுக்குள் உள்ள சகோதர வாற்சல்யத்தைக் குறித்துச் சந்தோஷித்தார்கள்.
‘களங்காண் படல’த்தில் இலங்கையின் மேலைக்கோட்டை வாயிலில் இராவணன் வந்து இளைய பெருமாளுடனே போராடி அபஜயப்பட்ட காலத்தில், ‘இத்தனை சங்கடமும் இவனால் அல்லவா நேரிட்டது!’ என்று மனமெரிந்து விபீஷணர்மேல் ஒரு சத்தியைப் பிரயோகிக்க சுக்கிரீவ மகாராஜா அதைத் தன்மார்பில் ஏற்றுக்கொள்ளும்படி அதற்கெதிரே போய் நிற்க அது கண்டு அங்கதன், ‘பிதாவுக்கு அபாயம் வரப்பார்ப்பது புத்திரனுக்கு அழகோ? சமயத்திற்கில்லாப் பிள்ளை துக்கப் பட்டழ இருக்கிறதா?’ என்று அதைத் தன் மார்பில் ஏற்கப்போக, அவனை விலக்கி அதைத் தன்மார்பில் ஏற்கப் போக, அதனை விலக்கி ஆஞ்சநேயர், ‘அரசரைக் காட்டிக் கொடுப்பது அமைச்சனுக்குத் தர்மமல்லவே!’ என்று தம் மார்பில் ஏற்கப்போக, இப்படிப் படைத்தலைவர்களும் ஒருவர் பின் ஒருவராக அதை ஏற்கப்போனதை அறிந்து ‘நீங்கள் யாரும் இறக்க வேண்டுவதேயில்லை; அதை நான் கண்டிக்கிறேன்; விலகியிருங்கள்,’ என்று உபாயமாகச் சொல்லி அனைவரையும் தடுத்துக் கடைசியில் அதை இலக்குவன் தன் மார்பில் ஏற்றுக்கொண்டு இறந்து, அநுமன் உதவியால் உயிர் பெற்றெழுந்து, அனைவருடனும் சுவாமியிடத்தில் வந்து அவரைச் சேவித்து நிற்கையில், விபீஷணாழ்வான் சுவாமிக்கு அஞ்சலி செய்து, ‘வைதேகி மணாளரே! இராவணன் அடியேன்மேல் ஒரு சத்தியை விட்டெறிந்தான்; அது தப்பாமல் உயிரை மாய்க்குமென்பது அறிந்து, அத்தருணத்தில் இளையபெருமாள் அதைத் தம் மார்பில் ஏற்றுக்கொண்டு பிராணனைக் கொடுத்தார்,’ என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது,
“புறவொன் றின்பொருட்டால் யாக்கை புண்ணுற அரிந்த புத்தேள்
அறவனு நின்னை யைய நிகர்க்கிலன்! அப்பா னின்ற
பிறவினி யுரைப்ப தென்னே! பேரரு ளாள ரென்பார்
கறவையுங் கன்றும் போல்வார் தமர்க்கிடர் காண்பா ராயின்”
-என்ற பாடலைக் குறித்து, ‘சுவாமியானவர் இளையபெருமாள் மேல் சந்தோஷப்பட்டு, ‘அப்பா, சுமித்திரை புத்திரா, துஷ்டாத்துமனாகிய இராவணனால் நம்மைச் சார்ந்தவர்களுக்கு இப்படிப்பட்ட ஆபத்தும் சம்பவித்ததா! அத்தருணத்தில் நா செய்தது நல்ல சகாயந்தான்! அற்ப ஜந்துவாகிய ஒரு புறாவினிமித்தம் தமது சரீரத்தைப் புண்படும்படி சித்திரவதையாகச் சின்ன பின்னமாய் அரிந்த தெய்வத்தன்மை பொருந்திய தர்மாத்துமாவாகிய நம்பாட்டனார் சிபிச்சக்கரவர்த்தியும் உனக்கு நிகராகமாட்டார் என்றால், இனி அப்பாலிருக்கின்ற மற்றவைகளைக் குறித்துச் சொல்ல வேண்டுவதென்னை? ஆயினும், பரம கிருபாநிதிகளாகியிருக்கின்றவர், தம் சுற்றத்தாருக்கு யாரேனும் ஆபத்துச் சம்பவிக்கக் காண்பாராயின், ‘நமக்கென்ன!’ என்று உபேக்ஷையாயிருப்பார்களா? ஒரு துஷ்டமிருகத்தால் தன் கன்றுக்குத் துன்பம் நேரிடக் கண்டவிடத்து அதனை ஈன்ற தாய்ப்பசுவானது தன்னுயிர்க்கு அபாயம் வருமென்பதையும் பாராமல், அக்கணமே அம்மிருகத்தின்மேல் பாய்ந்து விழுந்து தன் கன்றைப் பாதுகாக்காமலிருக்குமா? அப்படிப்பட்ட பசுவுங்கன்றும் போல, அவர்கள் தாங்கள் பிராணச்சேதப்படுவதையும் நினையாமல் அவ்வாப்தர்களுடைய உபத்திரவத்தை எவ்விதத்திலும் நிவர்த்திப்பார்களல்லரோ? அதை யோசிக்குமிடத்தில் நீ செய்தது சகஜந்தான். மேலும், இது நமது வமிசத்தார்க்குச் சுபாவ தர்மமேயல்லது அதிசயமன்று,’ என்று அருளிச்செய்தார்,’ எனக் கம்பர் பிரசங்கித்தார்.
அதைக்கேட்ட அசுவபதி...
[தொகு]அதைக்கேட்ட அசுவபதி என்னும் அரசன், ‘சிபிச்சக்கரவர்த்தி புறாவினிமித்தம் சரீரத்தை அரிந்த சரித்திரம் சொல்லவேண்டும்’ என, கம்பர், ‘பூர்வம் காட்டிலிருந்த புறாவொன்று சிபிச்சக்கரவர்த்தியைச் சரணமடைந்தது; அதற்கு அவர் ‘அஞ்சேல்’ என்று அபயப்பிரதானம் தந்தார். உடனே அதை எய்த வேடன் தொடர்ந்து வந்து, ‘ஐயா, உம்மிடத்தில் அடைந்து பதுங்கிய புறாவைத் துரத்திவிடும்,’ என்ன, அவர், ‘இஃது என்னை சரணமடைந்தது பற்றி இதை நானுன்னிடங் காட்டிக் கொடுக்கக் கூடாது,’ என்ன, அவன், ‘நீர் உலகாள்பவராகையால், யாவரையும் பது வாகவல்லவோ நோக்க வேண்டும்? அதை விட்டு ஒருவரை இடுக்கிக்கொண்டு, ஒருவரை நடத்திக்கொண்டு போவது போல புறாவை ஆதரித்துப் பசியால் வருந்தும் என்னை மாத்திரம் அனாதரணை செய்வது நீதியோ?’ என்ன, வேந்தர், ‘நானுன்னை அனாதரணை செய்ததாக எண்ண வேண்டா; பசிக்கு சாகமூலாதிகளில் எதையாவது புசித்தாலும் அது தணிந்து போகிறது; பறவை மாமிசம் வேண்டுமென்பதென்னை?’ என, வேடன், ‘நாங்கள் சாக மூலபலாதிகளைத் தின்றால் எங்கள் சரீரத்திற்குப் பலஞ்செய்ய மாட்டா, மாமிசமே எங்களுக்கு முக்கிய ஆகாரமாயிருக்கிறதாகையால் எங்கள் ஜாதி சுபாவப்படி நான் உணவுக்காக எய்த புறாவை என் கையிலே கொடுத்துவிட வேண்டும்,’ என்ன, சக்கரவர்த்தி, ‘அப்படியானால், என்னால் அபயப்பிரதானம் தரப்படு என்னடைக்கலத்திலிருக்கின்ற இடை நீ விட்டு, வேறெதையாகிலும் எய்து பிடித்துக்கொண்டு போ,’ என்ன, வேடன், ‘வில்லும் அம்பும் என் கையிற் காணும் பொழுதே வனத்திலிருக்கிற பசு பக்ஷி மிருகங்களெல்லாம் பயந்து காத தூரத்தில் தலை காட்டாமல் ஓடியொளிக்குமேயல்லாமல், எளிதில் அகப்படுவனவல்லவே!’ என்றான்; அரசர், ‘அப்படியானால், இதற்கு ஈடாக ஆடு கோழிகள் வேண்டுமென்றாலும், திரவியமாவது ராச்சியமாவது வேண்டுமென்றாலுந் தருகிறேன்,’ என்று சொல்ல, வேடன், ‘மண்டலாதி பதியாயிருக்கிற இவர் தமது ராஜாதிகாரத்தைக் கொண்டு நம்மை அச்சுறுத்தி ஓட்டிவிடாமல் இவ்வளவு சாந்தத்தோடே நமக்குப் பிரியவசனஞ் சொல்லுகிறாரே! இவர் சொற்படியே நாம் கேட்போம்!’ என்று அவருக்கு இணங்கி உத்தரஞ்சொல்லாமல், ‘காட்டிலே உழல்கிற வேடஜாதிக்கு ராச்சியமேன்? திரவியமேன்? நான் எய்து காயப்பட்டிருக்கிற பறவையை எடுக்குக் கொடுக்கிறதற்கு வழக்கென்னை? இதுதானா உமது ராஜ தர்மம்?’ என்றான். அரசர் ‘அடைக்கலமாக வந்தவர்களை ஆதரியாமற் கைவிடுவது தோஷமாகையால், இஃது ஒன்று தவிர,வேறெதைக் கேட்டாலுங் கொடுக்கத் தடையில்லை,’ என்ன, வனசரன், ‘வெந்த கறியைத் தின்று விதி வந்தால் சாகிற எங்களுக்கு வேறென்ன வேண்டுவது?’ என்ன, கோமானார், ‘ஆடு கோழி முதலானவைகளும் வேண்டாவென்கிறையே! பின்னை என்னதான் உனக்கு வேண்டும்?’ என்று கேட்க, கிராதன், ‘நீர் அற்பஜந்துவாகிய புறாவின்மேல் இவ்வளவு ஜீவகாருணியமுடையவராய் இருப்பதனால், உமது சரீரத்தில் இந்தக் கபோதத்தின் எடையளவுக்குச் சரியாக மாமிசம் அரிந்து கொடுத்தால் சம்மதிப்பேன்,’ என்ன, வேந்தர், ‘அப்படியே அரிந்தெடுத்துக் கொள்’ என்று உடைவாளை உருவி அவன் கையிற்கொடுக்க வேடன், ‘நீரே அரிந்துகொடும்,’ என்றான். அப்பொழுது சக்கரவர்த்தி, எவனாகிலும் தன் சரீரத்தைத் தானே அறுக்கப் பொறுக்குமா?’ என்றும், ‘அருமையாகப் போற்றிப் புனைந்த உடம்பைக் கூசாமல் அறுப்பதெப்படி?’ என்றும் யோசியாமல், வலத்தொடையின் தசையை அரிந்தெடுத்துத் துலைநாட்டி, ஒரு தட்டிற் புறாவையும், மறுதட்டில் அத்தசையையும் வைத்துத் தூக்கிப் பார்க்கக் குறைந்ததனால், மறுதொடைத் தசையையும் அரிந்து வைக்க, அப்படியும் ஒவ்வாததனால், பின்பு இரு தோளின் தசையையும், கொய்து வைக்க, அதுவும் சரிப்படாமையால், அப்புறம் கண்டம் முதலாக உடல் முழுதும் புண்ணாகி உதிரம் பெருகியோடக் கூறு கூறாகச் சேதித்து வைத்தும் புறாவின் தட்டு ஏறாதது கண்டு, பிறகு தாமே அத்துலைமீது ஏறினார். அவர் ஏறவே, புறா எடை குறையத் தசையெடை அதிகப்பட்டது. வேடன், ‘வீணாசைப்படுவானேன்? அதிகம் எனக்கு வேண்டா, என்று மறுக்க, ராஜா துலையைவிட்டிறங்கி மறுபடி தசையை மாத்திரம் தூக்கிப் பார்க்க அதுவும் அதிகப்பட்டிருக்க, வைத்த தசைகளையெல்லாம் எடுத்தெடுத்துச் சும்மா வைத்துவிட்டுக் கடைசியில் அரைச் சேருக்கும் குறைவான தசையைப் புறாவின் எடைக்குச் சரிவர நிறுத்துக்கொடுத்தும், மீந்த ஒரு பெரிய கூடை கொண்ட தசையைப் பார்த்து, ‘இவ்வளவு தசையும் உபயோகப்படாமற் போகிறதே!’ என்றும், ‘அருமைத்திருமேனி அநியாயமாக அறுபட்டுப் போயிற்றே!’ என்றும், இறையளவும் நினையாமல், ‘இத்தனையும் தெய்வச்செயலே!’ என்று நினைத்தார். அத்தருணத்தில் இந்திரனும் அக்கினியும் அவருக்குப் பிரசன்னமாகி, ‘ஜீவகாருணியமுடைய உனது ஈகையை யாவருக்கும் வெளியிடுதற் பொருட்டு இந்திராக்கினிகளாகிய நாங்களிருவரும் வேடனும் புறாவுமாகி வந்து உன்னைச் சோதித்தோம்; உன்னிடத்தில் அதுமாத்திரமன்றிச் சாந்தம், நீதி, தர்மசிந்தை முதலானவைகளும் நிலைபெற்றிருக்கின்றமை பற்றி எங்களுக்கு அதிக சந்தோஷமாயிற்று!’ என்று வியந்து, அனேக வரங்களை அருளிச்செய்து போனார்கள்,’ என்றார். அசுவபதி முதலானவர்கள் அதிக சந்தோஷப்பட்டார்கள்.
இராவணன் வதைப்படல’த்தில், ஸ்ரீராகவரைக் கொல்லும்படி தசக்கிரீவன் விட்டெறிந்த அதியுக்கிரமாகிய சூலத்தைக் கண்டு தேவர்கள் முனிவர்கள் எல்லாம் ‘இது தசரதாத்மஜனை எவ்விதத்திலும் நாசஞ் செய்யும்! இனிச் சீதாபதியைக் கண்ணிலே காணப்போகிறதேயில்லை!’ என்று அலறியழாநிற்க, அதைத் தடுக்கும்படி இராமபத்திரர் பிரயோகித்த எவ்வகை அஸ்திரசஸ்திரங்களையும் பேதித்துக் கொண்டு அது சமீபித்த மாத்திரத்தில், அவர் அதட்டி உங்காரத்தாற் பொடிப்பொடியாய்ப் போம்படி செய்த பொழுது,
“சிவனோ அல்ல னான்முக னல்லன் றிருமாலே
அவனோ அல்லன் மெய்வர மெல்லா மடுகின்றான்
தவனோ என்னிற் செய்து முடிக்குந் தரமல்லன்
இவனோ தானவ் வேத முதற்கா ரணாமாவான்!”
- என்ற பாடலைக் குறித்து, ‘இராவணன், ‘இஃதென்னை ஆச்சரியம்! இந்த இராமன், நாம் நம் பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் கொய்து அக்கினியில் விறகாக இட்டு உதிரத்தை நெய்யாகச் சொரிந்து அகோரமான அரியதவஞ் செய்து பிரமருத்திராதியர்களாற் பெற்ற மெய்ம்மையாகிய அழியாத வரங்களையெல்லாம் பொருள் செய்யாமல் எளிதில் அழிக்கிறான்! எப்படிப்பட்ட ஆயுதங்களையும் நொடிக்குள்ளே தொம்சம் செய்கின்றான்! இவ்விதத்தால் இவனைச் சங்காரகர்த்தாவாகிய சாக்ஷாத் பரமசிவனென்று நினைப்போமென்றால், அவனுமல்லன்; சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமனென்று நிச்சயிப்போமென்றால், அவனுமல்லன்; இரட்சக கர்த்தாவாகிய ஸ்ரீமகாவிஷ்ணுவென்று மதிப்போமென்றால், அவனுமல்லன்; வனத்தில் தவஞ் செய்பவனென்று எண்ணுவோம் என்றால், தவசியானவன் இப்படிப்பட்ட செய்தற்கரிய செய்கைகளையெல்லாஞ் செய்து முடிக்கத்தக்க தரமுடையவனாயிரான். ஆதலால், அவனுமல்லன்; ஆராய்ந்து பார்க்குமிடத்தில் நமது அக்கிரமம் சகிக்காமல் சர்வத்திற்கும் முதற்காரணம் என்று வேத புருஷனால் நிர்ணயித்துச் சொல்லப்பட்ட அந்தப் பரம்புருஷன்தான் இந்த உருவெடுத்து வந்தான்,’ என்று நிச்சயித்தான்,’ எனக் கம்பர் பிரசங்கித்தார்.
குலோத்துங்க சோழனுடைய மந்திரியானவர், ‘இராகவரைத் திரிமூர்த்திகளில் ஒருவரல்லர் என்று இராவணன் என்னகாரணத்தாற் பூர்வபக்ஷம் பண்ணிக் கழித்தான்?" என்று கேட்க, கம்பர், ‘சிவனாயிருந்தால், மான், மழு, சதுர்புஜம், காளகண்டம், திரிநேத்திரம் இருக்க வேண்டுமே! அவை இல்லாமையாலும், அன்றியும் தான் கொடுத்த வரத்தைத் தானே அழிக்கமாட்டானாகையாலும், பிரமனானால் நான்குமுகமும், எட்டுக் கண்களும், தண்ட கமண்டலங்களும் இருக்கவேண்டும் ஆகையாலும், மேலும் அவன் தனக்குப் பாட்டனும் புரோகிதனுமாய் இருப்பதனால் விரோதஞ் செய்யான் ஆகையாலும், விஷ்ணுவெனிற் சங்க சக்கர கட்க கோதண்ட கதாயுதங்களைக் கையில் ஏந்தி வரவேண்டுமல்லவோ? அவை இல்லையே! ஆகையாலும், அவர்களை அல்லவென்று நிருணயித்தான்,’ என்றார்.
மேற்படி படலத்தில் தசக்கிரீவன் மடிந்தது கண்டு விபீஷணர் துக்கிக்கின்ற சமயத்தில்,
”போர்மகளைக் கலைமகளைப் புகழ்மகளைத் தழுவியவர் பொறாமை கூரச்
சிர்மகளைத் திருமகளைத் தேவர்க்குந் தம்மோயைத் தெய்வக் கற்பின்
பேர்மகளைத் தழுவுவா னுயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ திசையானைக் கோடிறுத்த பரிதி மார்பால்?”
-என்ற பாடலைக் குறித்து, பாகைவரோடு எதிர்த்துப் போர்செய்து வென்று, முற்காலத்திற் பெற்ற வெற்றியாகிய பெண்ணையும், எண்ணிறந்த சாஸ்திரங்களைக் கற்றுப் பெற்ற கல்வியாகிய பெண்ணையும், வீரம் செல்வம் முதலாவைகள் காரணமாகப் பெற்ற கீர்த்தியாகிய பெண்ணையும் நெடுங்காலமாகப் புணர்ந்து சுகமனுபவித்து அவர்கள், ‘தம் நாயகன் இப்போழுது காமதுரனாக நெறி தவறிப் பரஸ்திரீ கமனம் பண்ணத் தலைப்பட்டான்,’ என்று மனத்தில் அஸூயை கொண்டு பிணங்கும்படி, பின்பு சிறப்புக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாயிருப்பளை, ஸ்ரீமகாலக்ஷ்மியின் அமிசமானவளை, பிரமாதி தேவர்களுக்கும் பெற்ற தாயாய் விளங்குகின்றவளை, தெய்விகமாகிய கற்பானது உருக்கொண்டு வந்த மகா பதிவிரதையென்னுஞ் சீதையைத் தழுவும்பொருட்டுத் துராசைகொண்டு, பெறுதற்கருமையான உயிரைக்கொடுத்துப் பிரதிபலனாக எக்காலத்தும் நீங்காத பெரும்பழியைத் தேடிக்கொண்ட மதி மயக்கமுடையவனாகிய இராவணா, நீ இராம பாணத்திற்கு இலக்காகித் தலைவேறு உடல் வேறுபட்டு விழுந்து, திக்கஜங்களின் கொம்புகள் ஒடிந்து பதிந்து சூரியனைப்போலப் பிரகாசிக்கின்ற உன் மார்பினாற் பூமியாகிய பெண்ணைத் தழுவிக்கொண்டு கிடக்கின்றையோ?’ என்று பிரலாபித்தார்,’ என்பதாகப் பிரசங்கித்தார்.
அதுகேட்டுச் சடையப்ப முதலியாருடைய தம்பியாரான சரராம முதலியார்கம்பரை நோக்கி, ‘இராவணன் மார்பில் யானைக் கொம்புகள் பதிந்திருப்பது வாஸ்தவமே; அம்மார்பு சூரியனைப்போலப் பிரகாசிக்கின்றதென்பது என்ன விதத்தால்?’ என, கம்பர், ‘இராவணன் அஷ்ட திக்கஜங்களுடனே யுத்தஞ் செய்த காலத்தில் ஐராவதமுதலாகிய அவ்வெட்டு யானைகளும் அவனை முட்டிக் கொம்புகளால் மார்பிலே குத்த அவைகள் ஊடுருவி முறிந்து மேடும் பள்ளமுமாயிருந்தது கண்டு, அவற்றை அவன் மயன்என்னும் தெய்வத்தச்சனுக்குக் காட்டி, இவற்றைப் பிடுங்கி எறிந்து விடுகிறையா?’ என, மயன், ‘பிடுங்க வேண்டுவதில்லை; வாள் கொண்டு அறுத்து, அரத்தினல் அராவி ஒப்பமாக இழைத்து, மேலே விலையுயர்ந்த மாணிக்கக் கற்களை அழகாகப் பதித்தால், அது ஒரு விசித்திரமான மதாணிப் பதக்கந் தரித்ததுபோல இருக்கும்,’ என்று சொல்லி, அப்படியே செய்தான்; அது சூரியனைப் போல ஜொலிப்பது பற்றி அங்ஙனம் சொல்லப்பட்டது,’ என்றார்.
மீட்சிப் படலத்தில்,
“அஞ்சினென் அஞ்சினென் ஐய அஞ்சினென்
பஞ்சினின் மெல்லடிப் பதுமத் தாள்தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையு மீதெலாம்
தஞ்சமோ? மறைமுதற் றலைவனே யென்றான்.”
- என்றும்,
“பெய்யுமே மழை?புவி பிளப்ப தன்றியே
செய்யுமே பொறை?அறம் நெறியிற் செல்லுமே?
உய்யுமே யுலகிவ ளுணர்வு சீறினால்
வைகுமே மலர்மிசை யயனு மாளுமே!”
- என்றுஞ் சொல்லப்பட்ட பாடல்களைக் குறித்து, ‘பிராட்டியானவள் அக்கினிப் பிரவேசம் பண்ணினபொழுது அவளுடைய கற்பென்னும் நெருப்புத் தன்னைச்சுடத் தான் வெந்து நொந்தமையால், அவ்வக்கினி வந்து ஸ்ரீராகவரை நோக்கி, ‘வேதத்தின் முதற்றலைவனாகிய இராமசந்திரா! நான் பயந்தேன்! செம்பஞ்சுக் குழம்பூட்டிய மிருதுவான பாதத் தாமரையையுடைய இந்தச் சீதையைத் தொடுவதற்காக மிகவும் பயந்தேன்! கற்புக்கரசியாகிய இவள்மேல் உனக்கு உண்டாகிய கடுங்கோபத்தினால் விளைந்த இவ்விளைவுகளெல்லாம் எளிமையானவைகளோ? இவள் மனம் நொந்து சீற்றஞ் செய்வாளானால் உலகமெல்லாம் நிர்மூலமாய் விடுமேயல்லாமல், மழை பெய்யுமா? பூமி பிளந்து போமேயல்லாமல் தன்னிடத்திலுள்ள அகிலசராசரங்களையும் தாங்கி நிற்குமா? பாவந் தலையெடுத்து நிற்குமேயல்லாமல், தர்மமானது நெறி தவறாமற் செல்லுமா? பெரியோர்கள் தத்தம் உயிர்நிலை தேய்ந்து போனவர்களேயல்லாமற் பிழைத்திருப்பார்களா? மூலத்தாமரையில் வசிக்கின்ற பிரமனும் தன் படைப்புத் தொழிலுடனே மாண்டு போவானேயல்லாமல், உயிர்பெற்றிருப்பானா? சகலமும் அடியோடே நாசமாய்ப் போய்விடாவா? இதென்ன விபரீதம்’ என்றும் மற்றும் பலவாறாகவும் முறையிடுகையில்,
“தோற்ற மென்பதொன் றுனக்கிலை; நின்கணே தோற்றம்
ஆற்றல் நான்முதற் பகுதிமற் றகனுளாம் அப்பால்
காற்றை முன்னுடைப் பூதங்க ளவைசென்று கடைக்கால்
வீற்று வீற்றுற்று வீயுறும் நீயென்றும் விளியாய்!”
- என்ற பாடலைக்குறித்து, ‘பிரமனானவன் சுவாமிக்கு முன்னே வெளிப்பட்டு வந்து, ‘விஜயகோதண்டபாணியாகிய இராகவா, கேவலம் சஞ்சித ஆகாமிய பிராரத்த கர்ம வசத்தனாய்ப் பலகாலும் பிறந்து பிறந்து உழலுகின்ற பந்த சமுசாரியைப்போல, உன்னை நீ மதித்துப் பிரமிக்கின்றையோ? உனக்கு எக்காலத்திலும் உற்பத்தியென்பது இல்லையே! சகலமுத் தன்னிடத்திலே தோன்ற, தானொன்றிலும் தோன்றாத மகாமகிமை பெற்ற மூலப்பிரகிருதியானது, செம்பிற் களிம்பு போல அனாதியே உன்னிடத்தில் தோன்றி நிற்கின்றது; பின்பு அம்மூலப் பிரகிருதியிலிருந்து அகங்காரத்துவந் தோன்றுகின்றது; அதிலிருந்து சூக்ஷ்ம்பூதமாகிய தன்மாத்திரை தோன்றுகின்றது; அதிலிருந்து ஸ்தூல பஞ்சபூதங்கள் தோன்றப் பஞ்சீகரணப்பட்டுப் பிரபஞ்சத் தோற்றம் உண்டாகின்றது; கால முடிவில் அனைத்துந் தோன்றிய வண்ணமே ஒடுங்கி மாய்ந்து போகின்றன. இவை இவ்வாறு சங்கோச விகாசப்பட்டு மாய்ந்து போயும் ‘நீ மாத்திரம் எக்காலமும் மாயாதிருக்கின்றாய்’ என்றும்,
“எனக்கு மெண்வகை யொருவற்கு மிமையவர்க் கிறைவன்
தனக்கும் பல்பெரு முனிவர்க்கு முயிருடன் றழீஇய
அனைத்தி னுக்குநீ யேபர மென்பதை யறியந்தார்
வினைத்தொ டக்குடை வீட்டருந் தளைநின்றி மீட்டார்”
-என்பதைக் குறித்து, ‘கர்மபந்தத்தைக் கழித்துத் தாரபுத்திராதி ஈஷணாத்திரயமாகிய தளையினையறுத்து நீக்கிய சான்றோர் எனக்கும், பார் நீர் தீ வளி வான் சூரியன் இந்து இயமானன் என்னும் அஷ்டமூர்த்தமாய் விளங்கிய சிவனுக்கும், தேவர்களுக்கிறைவனாகிய மகபதிக்கும், ராஜரிஷிகள், தேவரிஷிகள், பிரமரிஷிகளாகிய பெருமை பொருந்திய பலவகை ரிஷிகளுக்கும், உயிரோடு கூடிய மற்ற எல்லாவற்றிற்கும் நீயே பரத்துவமென்பதாகச் சுருதி ஸ்மிருதி இதிகாசம் புராணம் முதலானவைகளும் சொல்வதை அனுபவமாக அறிந்திருக்கிறார்களே! அப்படியிருக்க, இப்படி நீ மயங்கவேண்டுவது என்ன?’ என்றும், மற்றும அனேகவிதமாகவுஞ் சொல்லி ஸ்துதி செய்கையில்,
“துறக்குந் தன்மைய ளல்லளாற் றொல்லையெவ் வுலகும்
பிறக்கும் பொன்வயிற் றன்னையிப் பெய்வளை பிழைக்கில்
இறக்கும் பல்லுயி ரிராமநீ யிவள்திறத் திகழ்ச்சி
மறக்குந் தன்மைய தென்றனன் வரதற்கு வரதன்”
- என்ற பாடலைக்குறித்து, ‘மேலானவர்களுக்கும் மேலானவராகய பார்வதி பாகர் வந்து சுவாமியை நோக்கி, ‘ஐயா, இரகுநாயகா, உன்னை ஆரென்று நினைத்திருக்கின்றாய்? நீ ஆதி மூர்த்தியாகிய ஸ்ரீமந்நாராயணனே, இந்த சனகராஜ குமாரியானவளோ, உன் மணி மார்பில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியாகிய ஸ்ரீமகாலக்ஷ்மியே ஆதலால், புராதனமாகிய எவ்வகைப்பட்ட உலகங்களும் கருவுற்று உற்பவிக்கின்ற அழகிய திருவயிற்றையுடைய தாயாகிய இச்சீதையானவள், உன்னைப் பிரிந்திருக்குந் தன்மையுடையவளல்லள்; புருஷகாரியாகிய இவள் உன்னை விட்டு நீங்குவாளானால், பலவகை ஜீவகோடிகளும் மாண்டுபோம்; உனக்கு ஸ்ரீநிவாசன் என்னும் பெயரும் மாறிப்போம்; மறுவற்ற மகோத்தமியாகிய இவள் விஷயத்தில் ஓரணுவளவேனுங் குற்றமென்பதைப் பாராட்டாமல், மறந்துவிட வேண்டும்,’ என்று சொல்லிப் போயினர்,’ எனக் கம்பர் பிரசங்கித்தபோது, பாண்டியன் ‘சர்வஞ்ஞரானவருக்குப் பிராட்டியின் குணாதிசயம் தெரியாதா? ஆஞ்சநேயர் தூதுபோய் வந்து சொல்லக் கேட்டதுதான் ஞாபகமில்லையா? இப்படிச் சந்தேகிக்க வேண்டுவதுதான் ஞாபகமில்லையா? இப்படிச் சந்தேகிக்க வேண்டுவது என்ன?’ என்று கேட்க, கம்பர், ‘ஸ்ரீராகவர் வனப்பிரவேசம் பண்ணினபொழுது தசரதர், ‘கைகேசியல்லவோ இதற்குக் காரணமாயிருந்தாள்? ஆதலால், அவள் என் மனைவுயுமல்லள்; அவள் வயிற்றிற் பிறந்த பரதன் என் புத்திரனுமல்லன்,’ என்று வெறுத்துரைத்தது பற்றி, அவர் வரவேண்டுமென்றும் அவர் வாக்கினால் அவர்கள் மனைவியும் மைந்தனுமேயென்று சொல்லும்படி வரம் பெறவேண்டுமென்றுங் கருதி, ‘அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல’ இவ்வாறு நடித்ததன்றி வேறல்ல,’ என்றார். பாண்டியன் முதலானவர்கள், ‘எம்பெருமான் கபடநாடக சூத்திரதாரியென்பது சத்தியமே!’ என்று ஆனந்தித்தார்கள்.
சுவாமி பிராட்டியுடனே...
[தொகு]சுவாமி பிராட்டியுடனே இலங்கையிலிருந்து புஷ்பகம் ஏறி திருவயோத்தியை நோக்கிப் பிரயாணப்பட்டுப் பரத்துவாசருடைய ஆச்சிரமத்தில் வந்திருந்து, பரதனுக்குச் செய்தி தெரிவிக்கும்படி அனுப்பிய ஆஞ்சநேயர் அக்கினி குண்டத்தில் விழ யத்தனித்த பரதாழ்வானைக் கண்டு, ‘ஸ்ரீராமர் வந்தார்,’ என்று சொல்லிக் கணையாழியைக் கொடுத்தபொழுது,
“வேதியர் தமைத்தொழும் வேந்த ரைத்தொழும்
தாதியர் தமைத்தொழுந் தன்னை யேதொழும்
ஏதுமொன் றறிகிலா னிருக்கு நிற்குமால்
காதலென் றீதுமோர் கள்ளின் றோற்றமே.”
-என்ற பாடலைக் குறித்து, ‘தமயன் வந்த சந்தோஷப் பெருக்கினாற் பரதன் அங்கிருந்த பிராமணோத்தமர்களைப் பார்த்து, ‘சுவாமிகளே, உங்கள் ஆசீர்வாத பலத்தினால் எங்கள் தமயனார் க்ஷேமமாய் வந்தார்!’ என்று சொல்லி, அவர்களுக்குத் தண்டன் சமர்ப்பிப்பான்; தன்னை வணங்குதற்குரிய அரசர்களை நோக்கி, ‘வேந்தர்களே, நீங்கள் நீதி தவறாது நடப்பதனால், எங்கள் அண்ணனார் சத்துரு ஜயம் பண்ணி வந்தார்!’ என்று சொல்லி அவர்களையும் வணங்குவான். தங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களைக்கண்டு, ‘அடி தாதிகளே! நீங்கள் புண்ணியஞ்செய்ததனால் என் தமயனார் மீண்டுவந்தார்!’ என்று சொல்லி அவர்களையும் கும்பிடுவான்; கடைசியில் தன்னைக் குறித்து, ‘அடா பரதா, நீ நல்ல அதிர்ஷ்ட சாலியாகையால் உங்கள் அண்ணனார் வந்துவிட்டார்!’ என்று சொல்லித் தன்னைத்தானே தொழுதுகொள்வான்; தமயனாரும், அவரைச் சார்ந்தவர்களும் வந்ததைப் பற்றியாவது, கிருக கிர்த்தியத்தைக் குறித்தாவது, இராச்சியத்தின் பொருட்டாவது இன்னது செய்யவேண்டுமென்பது ஒன்றுந் தெரியாதவனாயிருப்பான்; அப்புறம் இப்புறம் அடிபெயராமல், எங்கே நின்றானோ அங்கேதானே திகைத்து நிற்பான், இப்படியெல்லாம் அவன் பரவசப்படும்படி சம்பவித்ததனால், இந்தச் சகோதர வாற்சல்யத்தாலுண்டாகிய களிப்பும் கள்ளுண்ட பாவனையாகவே இருக்கிறது!’ என்று கம்பர் பிரசங்கிக்க, கொங்கு தேசாதிபதி, ‘பரதன் பிராமணர்களைத் தொழுதது விசேஷமே; தோஷமன்று; தன்னைப் பணியும் அரசர்களைத் தான் பணிந்ததோ, தகாத செய்கை; அதுவும் பெரிதன்று; ஒரு பரியாயமாம், ‘தாதிகளைத் தொழுதான் என்றதுதான் வரம்பு கடந்ததாய் இருக்கின்றது,’ என, கம்பர், ‘அவன் சந்தோஷமாகிய சமுத்திரத்தில் மூழ்கிக் கரைகாணாதிருந்தமையால், தான் மெய்ம்மறந்து எதிரே கண்டவர்களையெல்லாம், இன்னாரினியாரென்று தாரதம்மியம் பாராமற்றொழுதான்; தாரதம்மியம் பாராவிடினும், தாதிமார் தனக்கு வேறாயிருப்பவர்களாகையால், அவர்களைத் தொழுததும் ஆச்சரியமன்று. வேறல்லாத தன்னையும் வேறாகக் கருதித் தொழுதுகொண்டதே அதிக ஆச்சரியம்!’ என்று சொல்லக்கேட்டு, யாவரும் மிகவும் அதிசயித்தார்கள்.
ஸ்ரீராமர் திருவயோத்திக்கு எழுந்தருளினபொழுது பரதனும், முதன் மந்திரியாராகிய சுமந்திரரும் வசிஷ்டரால் மகுடாபிஷேகத்திற்குச் சுபதினங் குறிப்பித்து, வேண்டிய உபகரணங்கள் சகலமுஞ் சேகரித்துச் சப்பன்ன (ஐம்பத்தாறு) தேசங்களுக்கும் செய்தி தெரிவித்து, அந்தந்த அரசர்களும் முனிவர்களும் வந்து நிறைந்திருக்க, விபீஷணன், சுக்கிரீவன், ஜாம்பவந்தன் முதலானவர்களும் புடைசூழ, வானரப்படைத் தலைவர்களும் வானரவீரர்களும் நெருங்கி நிற்க, சமுத்திர தீர்த்தத்தோடு புண்ணியநதி தீர்த்தங்களைக் கொண்டு மங்கள் ஸ்நானஞ் செய்வித்து, திவ்வியமாகிய பீதாம்பரம் உடுத்தி, நவரத்தின பூஷணந்தரித்து, பரிமள திரவியங்களும் புஷ்பமாலைகளுஞ்சார்த்தி, உன்னத சிங்காசனத்திற் சுவாமியை ஜானகி சமேதரராக எழுந்தருளியிருக்கச் செய்த சமயத்தில்,
‘அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் பற்றப்
பரதன்வெண் குடைபி டிக்க இருவர்கள் கவரி வீச
விரைசெறி கமலத் தாள்சேர் வெண்ணெய்மன் சடையன் றங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி”
- என்ற பாடலைக் குறித்து, ‘ஆஞ்சநேயர் சிங்காசனத்தைத் தாங்க, அங்கதன் சுவாமியின் உடைவாளை ஏந்தி நிற்க, பரதமகாராஜன் வெண்கொற்றக் குடைபிடிக்க, இலட்சுமணரும் சத்துருக்கினரும் சாமரை வீச, இட்சுவாகு முதலான சூரிய குலத்து அரசர்களெல்லாம் பரம்பரையாய்ச் சிரசில் தாங்கி அரசாண்டு வந்த மாணிக்கமயமான மகுடத்தை அபிஷேகித்துப் பூஜித்து, வேதப் பிராமணர்கள் தொட்டு ஆசீர்வதிக்க, மங்கலச் சங்கமுதலாகிய வாத்தியங்கள் கோஷிக்க, வாசனை தங்கிய கமலாசனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமகாலக்ஷ்மி வாசஞ்செய்கின்ற திருவெண்ணெய் நல்லூர்க் கிராமதிபதியாகிய சடையப்ப முதலியாருடைய மரபில் அக்காலத்தில் தோன்றியிருந்த உத்தமர்களாகிய வேளாளர்கள் எடுத்துக்கொடுக்க, பிரமரிஷி சிரேஷ்டராகிய வசிஷ்டர்தம் கைகளால் வாங்கி, மந்திர வாக்கியங்களைச் சொல்லி, ஸ்ரீராகவருடைய திருமுடியில் தரித்து, மந்திராக்ஷதைகளை இறைத்தார்; அத்தருணத்தில் தேவர்கள் புஷ்ப வருஷம் வருஷித்துத் தேவ துந்துபி முழக்கினார்கள்; யாகாக்கினி வலஞ்சுழித்தெழுந்தது; தர்மம் தழைத்தோங்கியது; மாதம் மும்மாரி பொழிய, முப்போகம் விளைய, புலியும் பசுவும் வைரமில்லாமல் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க, வருணாச்சிரம தர்மம் வழுவாமல், தெய்வ பக்தி குன்றாமல், மனுநீதி கோடாமல், முறையே செங்கோல் செலுத்தி, வைதேகி மனோகரர் அரசாண்டிருந்தார்,’ என்று கம்பர் பிரசங்கிக்கக்கேட்டு, அந்தச் சபையிலிருந்தவர் யாவரும் பிரமானந்தமடைந்தார்கள்.
பிறகு சோழராஜன் சித்திரத்தொழிலில் மிகவும் நிபுணனாகிய ஒரு சிற்பனைக்கொண்டு ஸ்ரீராமர் பட்டாபிஷேக மகோற்சவத்தை விசித்திரமாகத் தத்ஜாதீயமாய்ப் படத்தில் எழுதுவித்துத் தன்னரண்மனைக்குச் சமீபத்திற் பட்டாபிஷேக மண்டபமொன்று உன்னதமாகக் கட்டுவித்து, அதைச் சுவர்க்கலோகம்போலச் சிங்காரித்து, அதன் நடுவில் ஒரு பத்மராகபீடம் ஸ்தாபித்து, அதன்மேல் அந்தப் படத்தை வைத்து மலர்மாலை சூட்டி, விதிவத்தாக (முறைப்படி) ஆராதித்து, கம்பராமாயண புஸ்தகத்தைப் படத்தில் அருகே வைத்து, கந்தபுஷ்பங்கள் சார்த்தி, மந்திராக்ஷதையால் அருச்சித்து, தூப தீபங்காட்டி, பின்பு அதற்குச் சரிகை முகமற்கௌசனையிட்டு, பொன்மயமாகிய சித்திரப்பல்லக்கில் வைத்து, சோடச உபசாரத்துடனே அதை முன்னே கொண்டு செல்ல, பின்னே கம்பராகிய கவிச் சக்கரவர்த்தியாருக்கு விலையுயர்ந்த பட்டாடைகளைத் தரித்து, சங்கு சக்கரக் கடுக்கனும், நவரத்தினக் கண்டியும் முத்துமாலையும் தங்கக் காப்பும் கொலுசுமிட்டு, சந்தன புஷ்ப தாம்பூலமுங் கொடுத்து, சப்த லட்சணமுடைய பட்டத்து யானைமேல் பொன்னம்பாரி வைத்து, அதன்மீது அவரை ஏற்றி மேளதாளம் முழங்கத் தன் மந்திரி பிரதானிகள் சாமரம் போடச் சிறப்பாகக் கிராமப்பிரதக்ஷணம் பண்ணுவித்து, அவருக்குச் சத்திரம் சாமரம் திருச்சின்னம் முதலிய அனேக விருதுகளுங கொடுத்து, ஸ்துதி செய்து, பிராமணர்களுக்குக் கோதான பூதானங்களும் மற்றக் கவீசுவரர்களுக்குப் பலவித வெகுமானங்களுஞ்செய்து, அரசர்கள் பிரபுக்கள் முதலானவர்க்குத் தக்கவாறு மரியாதை பண்ணி, அவரவர் இருப்பிடம்போய்ச் சேரும்படி விடை கொடுத்து அனுப்புவித்தான்.
அவர்களுள் சிற்சிலர் போம்பொழுது கம்பராமாயத்தைப்பார்த்து ஒவ்வொரு பிரதி எழுதுவித்துக்கொண்டு போனார்கள். இராமாயணப் பிரசங்கஞ்செய்த பொழுதுதான் கம்பரைப் பாண்டியராஜன் அதிக அந்நியோந்நியமாகச் சினேகித்தான்; அதற்குமுன் அவ்வளவு நேசமில்லை; அன்றுதொட்டு அவனிடத்திற்குக் கம்பர் அடிக்கடி போகவும் வரவும், அவன் சமஸ்தானத்திலே சில காலம் மருவியிருக்கவும், அவனால் வேண்டிய சகாயம் பெறவும் அவருக்கு இடமுண்டாயிற்று.
கம்பர் சீவந்தராயிருந்த காலத்தில் எப்பொழுதாவது எவ்விடத்திற்காயினும் போகவரச் சம்பவித்தால், முன்போலத் தனியே கால்நடையாகப் போகாமல், அன்று கருணாகர பாண்டியன் அபிமானித்துக் கொடுத்த சுவேத சத்திரம் கவிக்க, சாமரம் வீச, திருச்சின்னமூத,, மற்றும் பற்பல விருதுகள் பிடிக்க, குடகு தேசாதிபதி கொடுத்த யானைகளும், கூர்ச்சர தேசத்தரசன் கொடுத்த ஒட்டகங்களும், சிந்து தேசத்திறைவன் கொடுத்த குதிரைகளும், ஆந்திர தேசாதிபதி கொடுத்த கண்டவாள எருதுகளும் பெருங்கூட்டமாக ஒரு ராஜாவின் தண்டு வருவது போலத் தம்மைச் சூழ்ந்து வரும்படி பிரயாணம் பண்ணுவதுண்டு. இந்தக் கூட்டம் போகிற வருகிற மார்க்கங்களில் இவைகளுக்கு வேண்டிய ஆகாரங்களை அங்கங்குள்ள சோலைகள், தோப்புகள், கொல்லைகள், கழனிகளில் வேண்டிய மட்டும் பெற்றுக் கொள்வதற்குத் தடையில்லை; அந்த நஷ்டத்தை வருஷவாரியில் துரைத்தனத்தார் தங்களுக்கு வரும் மேல்வாரத்தில் ‘கம்பர் போன வழி கண்டு கழித்தது இவ்வளவு’ என்று கழித்துக் குடிகளுக்குக் கொடுப்பது பெரு வழக்கமாயிருந்தது.
அந்நாளில் அவருடைய மாணாக்கரையும் அடுத்துப் பல பெயர்கள் மேற்படி இராமாயணத்திற்குச் சம்பிரதாயமாகவும் சாதுரியமாகவும் உரை கேட்டார்கள். அப்புறம் அப்பல பெயரையும் அடுத்துப் பற்பலர் பாடங்கேட்டார்கள். இந்தப்படி அதன் பின்பும் காலக்கிரமத்தில் அனேகர் கர்ண பரம்பரையாகப் பாடங்கேட்டுக் கிரமமாய்ப் போதிக்கத் தக்க வல்லமை பெற்றிருந்தவர்கள் ஆரார் என்னில், ‘தென் தேசத்தில் வசித்திருந்த பெத்த பெருமாள் பிள்ளைஎன்பவரும், சீகாழி அருணாசலக் கவிராயரும், தொல்காப்பிய வரதப்ப முதலியாரும், காலேஜ் திருவேங்கடாசல முதலியாரும், திருத்தணிகைச் சரவணப் பெருமாள் கவிராயரும், புதுவைக் குறள் வேங்கடாசல உபாத்தியாயரும், காஞ்சீபுரம், அருணாசல தேசிகரின் பிதாவாகிய சண்முக கவிராயரும், திருநீர்மலைக் காளிங்கராய பிள்ளையும் மற்றும் சிற்சிலருமே. இக்காலத்திலும் அப்படிப்பட்ட சாமர்த்தியமுடைய சிலர் சென்னை ராஜதானி முதலான ஸ்தானங்களில் இருக்கின்றார்கள்.
சீகாழி அருணாசலக் கவிராயர், மணலி சின்னையா முதலியார் வீட்டில் கம்பராமாயணப் பிரசங்கஞ் செய்துகொண்டிருந்த பொழுது ஒருநாள் அம்முதலியார் கவிராயரை நோக்கி, ‘இன்றைக்குத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பூரண பாண்டித்தியமுள்ள பூம்பாவைக் குழந்தை முதலியார்இவ்விடத்திற்கு வருகிறபடியினாலே, பிரசங்கத்தை நிறுத்திவைத்தல் யுத்தமாயிருக்கும்,’ என்ன, கவிராயர், ‘அப்படிப்பட்ட மகாவித்துவானுக்கு முன்பாகத்தான் ஆவசியமாய்ப் பிரசங்கிக்கவேண்டும்,’ என்று அன்றைத்தினம் சுந்தரகாண்டத்தில் ‘பொழிலிறுத்த படல’த்தில், அசோகவிருக்ஷம் இவ்விதமாக உற்பத்தியாயிற்றென்றும், அது நெருங்கிய பசுமையாகிய இலைகளை உடைத்தாயிருப்பதென்றும்,அதனால் மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கிறதென்றும், காலை மாலை முதலிய எந்த வேளையிலும் தன்னிழல் தன்னைக் காத்து நிற்கின்றதென்றும், அந்நிழலின்கண் வந்தவர்களுடைய சோகத்தைத் தீர்ப்பதென்றும், அக்காரணத்தால் ‘அசோகம்’ என்று பெயர் பெற்றதென்றும், ஸ்திரீகள் பாததாடணஞ் செய்யப் புஷ்பிப்பதென்றும், அம்மலர் மன்மத பாணத்தில் ஒன்றென்றும், அது மன்மதனாற் காமங்கொண்டவர்களுடைய கண்ணிற் பிரயோகிக்கப்படுவதென்றும், அதுபோய் அவர்களுக்கு வெப்பத்தை விளைப்பதென்றும், அதன் நிறம் அக்கினி போல்வதென்றும், அதன் தளிர் காய் கனிகளின் குணம் இன்னதின்னதென்றும், அவ்விருக்ஷம் இக்காலத்தில் இல்லையென்றும், காணக்கிடையாத அவ்வசோகமென்று வேறொரு மரத்தை வழங்குகின்றார்களென்றும், அசோகமரத்தின் கன்றுகளை இராவணன் ஒரு தீவிலிருந்து எடுப்பித்து வந்து நாட்டி வனமாக வளர்ப்பித்தானென்றும், அவ்வனத்திலேதான் சீதை சிறையிருந்தாளென்றும், பலவிதத்திலும் நன்றாய்ப் பூரித்துப் பிரசங்கித்தார். குழந்தை முதலியார் அப்பிரசங்கத்தைக் கேட்டு, ‘நானிதுவரையில் இப்படிப் பிரசங்கித்தவர்களைக் கண்டதும் கேட்டதுமில்லை!’ என்று வியந்துரைத்ததாகச் சொல்வார்கள்.