விநோதரசமஞ்சரி/8.நன்றி மறவாமை

விக்கிமூலம் இலிருந்து

விநோத ரச மஞ்சரி[தொகு]

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

என்னும் திருக்குறளில், ‘தனக்கு ஒருவன் முன்செய்த நன்மையை மறந்துவிடுவது அறமன்று; அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறந்துவிடுவது அறமாம்,’ என்று திருவள்ளுவ நாயனாராற் சொல்லப்பட்டமையால், தாய், தந்தை, குரு, தெய்வம், அரசன், பெரியோர் முதலானவர்கள் செய்த நன்றியை எந்நாளும் மறவாமற் சிந்தித்து ஒழுகல் வேண்டும்.

தாய் செய்ந்நன்றி

தாயானவள் பத்து மாதம் கர்ப்பத்திற் சுமந்து வருந்திப் பெற்று, கண்திறவாமல் இறகு முளையாமல் இருக்கிற சிறு குஞ்சுகளைப் பறவைகள் தமது சிறகின் கீழ்ச் சேர்த்து அணைப்பது போல, ஈ மொய்க்காமலும், எறும்பு கடியாமலும், குருகு பறவாமலும், வெயில் படாமலும், காற்று வீசாமலும், பனி பெய்யாமலும், மார்பிலும் தோளிலும் வயிற்றிலும் அணைத்து,

முன்னநின் னன்னை முலையூட்டி மையிட்டு மூக்குச்சிந்திக்
கன்னமுங் கிள்ளிய நாளல்ல காணென்னைக் காப்பதற்கே
அன்னமு மஞ்ஞையும் போலிரு பெண்கொண்ட ஆண்பிள்ளைநீ
இன்னமுஞ் சின்னவன் றானோசெந் தூரி லிருப்பவனே!

என்ற பாட்டிற் சொன்னபடி முலையூட்டி, மூக்குச்சிந்தி, நாசியூதி, செவியுருவி,நீராட்டி, நெற்றிக்கு நிலக்காப்பிட்டு, விழிக்கு அஞ்சனந்தீட்டி, பல பணிகளும் பூட்டி, கன்னங்கிள்ளி, உச்சி மோந்து, கண்ணோடு கண் வாயோடு வாய், முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சி, முத்தாடி, அருந்தனம் போலப் பாவித்துப் பொற்றொட்டிலிட்டு,

ஆராரோ, ஆராரோ, ஆராரோ, ஆராரோ!
சீரார் பசுங்கிளியே! தெவிட்டாத செந்தேனே!
பேரார் குலக்கொழுந்தே! பெருமானே! ஆராரோ! (ஆராரோ)
இருகண் மணியே! இலஞ்சியமே! என்னுயிரே!
ஒருகுடைக்கீழ் நீயிவ் வுலகாள வந்தவனோ? (ஆராரோ)
தெள்ளமுத கும்பமே1 தித்திக்குஞ் செங்கரும்பே!
பிள்ளை கலிதீர்த்த பெரியமத குஞ்சரமே! (ஆராரோ)
மாணிக்கக் கால்கட்டி வயிர வடம்பூட்டி
ஆணிப்பொற் றொட்டிலிட்டேன் அருமருந்தே! கண்வளராய், (ஆராரோ)
அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும்
வைத்துமுத் தாடும் மரகதமே! கண்வளராய்! (ஆராரோ)

என்று தாலாட்டிச் சீராட்டி நாடோறும் வாயது கையது கொடுத்துப் போஷித்து, தன் கன்றுக்கிரங்குங் கறவை போல நெஞ்சிரங்கி, நோயணுகாது மருந்தளித்துப் பத்தியமிருந்து, கண்ணை இமை காப்பது போல அபாயம் வராமற்காத்து, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து, பெற்ற தாயென்று குறியாமல் தன்னைக் கைப்பிடித்தலாகிய செயற்கரிய குற்றத்தைச் செய்தாலும் அதை அப்படி நினையாமல், பிறருடனுஞ் செல்லாமல், தன் புருஷனுக்குத் தெரிய வொட்டாமல், தானுந் தண்டியாமல், ‘ஐயோ! மகனுக்குப் பித்தம் தலைமண்டை கொண்டுவிட்டதே!’ என்று துக்கப்பட்டு, பித்தசாந்திக்கேற்ற சாதனங்களை அடுத்துச் செய்து, பின்பு, ‘இப்படிச் செய்தானே!’ என்பதையும் கடுகளவாவது நினையாமல் அன்பாய்ப் பாலிப்பதையும்-

தந்தை செய்ந்நன்றி

தந்தையானவன், பசியாமல் ஊணும் உடையுந்தந்து, துஷ்ட சகவாசஞ் செய்யவாவது, ஓடியொளித்துத் தூர்த்தனாய்த் திரியவாவது, சூதாடிப் பொய்பேசிப் புறங்கூறவாவது தாசி காந்தனாய் வேசி வீடு நுழையவாவது, துர்வியாச்சியந் தொடுக்கவாவது தன்னிச்சையாய் விடாமல் அடக்கி,

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னு மாடையு மாதரவாக்
கொள்ளிக்கும் பட்ட கடனுக்கு மென்னைக் குறித்ததல்லால்
துள்ளித் திரிகின்ற காலத்தி லேயென் துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைத்தில னேதந்தை யாகிய பாதகனே!

என்று நினைத்து, பின்பு வியசனப்படுதற்கு ஏதுவாகத் தன்னை மூடனாய்ப் போகவொட்டாமல், இதந்தெரிந்து ஐந்து வயதிலே கல்விக்கழகத்தில் விடுத்துப் பூரண பண்டிதனாகக் கல்வி பயிற்றுவித்து, சபையாரெல்லாம் பூஜ்யதை பண்ணத்தக்க யோக்கியனாம்படி செய்வதையும் மறவாமல், ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதனாலும், ‘தந்தை தாய்ப்பேண்,’ என்பதனாலும், அவர்களைத் தெய்வமாக எண்ணி, இகழாமல் வணங்கி, அவர்களுக்குக் கீழமைந்து, அவர்கள் குற்றங்களைப் பிறரறியாது மறைத்து, ‘தாய்சொலிற் சிறந்த வாசகமில்லை,’ என்றும், ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை,’ என்றுஞ் சொல்வதனால், அவர்கள் சொல்லைக் கடவாமற் சிரசா வகித்து, மாதுரு பிதுரு வாக்கிய பரிபாலகனாய் தாய்தந்தையர் போஷித்தது போல, ஒன்றாலொன்றுங் குறைவில்லாமற் அன்புடனே தானும் அவர்களைப் போஷிக்கவேண்டும். பெற்றவர்களுக்குப் புத்திரனன்றிப் போஷகன் வேறே யார்?

குழந்தைப் பருவத்தில் தானிச்சைப்பட்டுக் கேட்ட பதார்த்தங்களை எல்லாம், தனக்கு அவர்கள் பிரியத்துடன் வழங்கியது போல, வார்த்திகத்தில் அவர்கள் ஆசைப்பட்ட பண்டங்களை எல்லாம், தன்னைக் கேளாததற்கு முன்னமே குறிப்பறிந்து தான் அவர்களுக்கு வழங்க வேண்டுமன்றோ? ‘தாயிடப் பிள்ளையிடத் தானே மனமகிழ,’ என்கிறார்களே!

தன்மேல் ஈப் பறவாமல் அவர்கள் தன்னைக் காத்தது போல அவர்கள்மேல் தூசு பறவாமல் தானும் பாதுகாக்க வேண்டும்.

மாதுரு பிதுரு கைங்கரியம் தனக்கு லபிக்க வேண்டுமென்று தான் கடவுளைப் பிரார்த்தித்து எதிர்பார்த்திருந்து, அவர்கள் தேகவியோகமான உடனே அவர்களுக்குப் பிரேத சம்ஸ்கார முதலாகிய கடன்களெல்லாம் லோபமில்லாமற் சிரத்தையுடனே நடத்த வேண்டும். தாய் கடன் கழிப்பதற்குச் சர்வ சங்க பரித்தியாகஞ் செய்த சந்நியாசிகளும் காத்திருக்கின்றார்களே! இதற்குத் திருஷ்டாந்தம், முற்றத்துறந்த பட்டினத்தார், தாய் இறக்குமளவும் காத்திருந்து, அவள் மரித்த பின்பு, வாழை மரங்களைக் காஷ்டமாக அடுக்கி, அதன்மேல் அவளைக் கிடத்தி, வாய்க்கரிசியிட்டு,

முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே
அன்னை யிட்டதீ அடிவயிற் றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே!

என்று சொல்லிக் கொள்ளி வைத்துக் குடமுடைத்துப் பால்தெளித்து உத்தரகிரியைகளும் செய்து முடித்துச் சென்றார் என்பதே.

தனது கல்வி, அறிவு, ஆண்மை, பொறுமை, உண்மை, ஒழுக்கம் முதலியவைகளைப் பார்த்து, ‘இந்த மகானுபாவன், வித்தையில் அகத்தியனோ! அறிவில் ஆதிசேஷனோ! அண்மையில் விக்கிரமாதித்தனோ! சாந்தத்தில் தரும ராஜனோ! வாய்மையில் அரிச்சந்திரனோ! நீதியில் மனுச்சக்கரவர்த்தியோ!’ என்று அதிசயித்து, ‘அம்மம்ம! இவனைப் பெறுதற்கு இவன் பிதா என்ன தவத்தைச் செய்தானோ!’ என்று சகலமானவர்களும் சொல்லும்படி, நல்ல கீர்த்தியைப் பிதாவுக்குச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் தாய் தந்தையர் பெயரை விளக்குகிறதற்குத்தானே பிள்ளை பிறக்கிறது?

மேலும், தன்னைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியினும் அதிக மகிழ்ச்சியைப் பெற்ற தாய் அடைய ‘உன்மகன் சகல கலைவல்லவன்; சாதுரியகுண சம்பன்னன்,’ என்று அறிவுடையோர் சொல்லும் சொல் அவள் செவியிற் கேள்விப்படச் செய்யவும் வேண்டும்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்

இவ்வாறன்றித் தாய் தந்தையர் தன்னைப் பெற்று வளர்த்த அருமை பெருமைகளை எவ்வளவும் நினையாமல் ‘அவர்களென்னைப் பெறுகிறதற்கு இரவும் பகலும் ஊண் உறக்கமின்றி உபவாசித்து, உடம்பை ஒறுத்து, ஊசி முனையில் நின்று, அருமையாகத் தவம் செய்தார்களோ! ஆடு நனைகிறதென்று கோநாய் குந்திக்கொண்டு அழுமோ? எங்கள் ஆத்தாள் எதிர்ப்பட்டாள், அப்பன் மதப்பட்டான், நான் வெளிப்பட்டேனேயல்லாமல் வேறென்ன?’ என்று வாய் கூசாமற் பிதற்றுகின்ற வம்பன் இவன்,’ என்றும், ‘தன் குற்றத்தைக்கண்ட பிறனொருவன், வெட்கப்பட்டு, ‘நீ இப்படி அக்கிரமமாய் நடக்கலாமோ?’ என்று தன்னைக் கேட்க, தான் நாணாமல், ‘அடபோ! நீ என்ன கண்டாய்! இஃது அவசியம் பிதுராசாரம்! என்று தன் பிதா முதலானவர்கள் செய்த குற்றத்தையும் வெளிப்படுத்திய பேதை இவன்,’ என்றும், ‘உட்சுவரிருக்கப் புறச்சுவர் பூசுவார் போலத் தன்னைப்பபெற்ற மாதா பிதா முதலானவர்கள் தங்கள் உதரபோஷணைக்கு ஓர் ஏதுவுமில்லாமல், கொழுகொம்பில்லாத கொடிபோல அலைந்து கொண்டிருக்கையில், அவர்களை ஆதரியாமல், ‘மாதா மனமெரிய வாழாய் ஒருநாளும்,’என்பதையும் உணராமல், தனக்கு யாதொரு ்சம்பந்தமுமில்லாத அந்நியர்மேல் இரக்கங்கூர்ந்து, அவர்களைச் சம்ரக்ஷணை செய்கின்ற டம்பன் இவன்,’ என்றும், ‘ஒருபெண்சாதி போனால், அனேகம் பெண்சாதிமார் வருவார்கள்; பெற்ற தாய் போனால், வருவாளா?’ என்று பாரமார்த்திகமாக யோசியாமல், ஏடாகூடமாய், ‘எந்தப்பெண்டுகளையும் தாயென்றாற் குற்றம் பாராட்டார்கள். மனைவியென்றாற் குற்றம் பாராட்டாதிருப்பார்களா? ஆதலால், தாய் முதலானவர்களினும் மனையே தேடக்கிடையாத திரவியம்,’ என்று பெரிதாக மதித்து, அவள் பாதம் பூமியிற் பட்டால் அபசாரமாமென்று நடுங்கி, அவளைப் பஞ்சகல்யாணியாகிய குதிரைமேல் ஏற்றி, பெற்ற தாய் தலைமேற் புற்சுமை வைத்து கொண்ட பெண்டாட்டிக்குக் குடைபிடித்துக்கொண்டு போகின்ற மாபாவி இவன்!’ என்றும், தாயைத் தாசியென்றும், வேசியென்றும் இழிவாகப் பேசி, ஏசி, கொஞ்சமாவது பழிக்கஞ்சாது கொலை செய்த பஞ்சமாபாதகன் இவன்,’ என்றும், ‘விளக்கைக் கையிலே பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவாரைப் போல, பாவமென்று தெரிந்திருந்தும், காமவிகாரத்தாற் கண்தெரியாது, மதி மயங்கி, மிருகம் போலப் பெற்ற தாயைப் பெண்டாள நினைக்குஞ் சண்டாளன் இவன்,’ என்றும், ‘தன் தகப்பனுக்குத் தான் பிச்சைக்கஞ்சி வார்க்கும் எச்சில் ஓடு காணாமல் போனதனிமித்தம் கொஞ்சமாவது பச்சாத்தாபமில்லாமற் பழியென்றும் பாராமல், தடிகொண்டு சாடித் தகப்பனைத் தண்டித்த தறுதலை இவன்,’ என்றும், பிதா புத்திரனைக் குறித்துச் ‘சிரஞ்சீவி தம்பி இன்ன முதலியாருக்கு ஸ்வாமி கிருபையால், சகலபோக்கியமும், சந்தான சமர்த்தியும், வாகனப்பிரதிஷ்டையும், அகண்ட சாம்பிராச்சியமும், லக்ஷ்மி விலாசமும், ராஜ வஜீகரமும், தீர்க்காயுளும் சதாகாலமும் வற்றாத சமுத்திரம்போலக் குறைவின்றி மேன்மேலும் பெருகவுண்டாகும்!’ என்று உபசாரமாகவும் பக்ஷமாகவும் எழுதியனுப்பிய கடிதத்தை வாசித்துப் பார்த்து, ‘ஓ! ஓ! இவனென்ன சர்வ முட்டாளாயிருக்கின்றான்! ‘ராஜமாநிய ராஜபூஜித மகராஜராஜஸ்ரீ முதலியாரவர்கள், வடிவில் மன்மதனும் நாணத்தக்கவராய், கல்வியிற் சரஸ்வதிக்குக் குருபீடமாய், புஜபலத்தில் வாயு குமாரனை ஜயிப்பவராய், தர்மத்தில் தருமபுத்திரன் தலையை மிதிப்பவராய், ஒழுக்கத்தில் அணுவளவும் பிசகாதவராய், சத்துருக்கள் நடுங்குஞ் சிங்கிராம சிங்கமாய், பூவையர் மால் கொள்ளும் புருஷரத்தினமாய், சற்சனர் மெச்சும் சபா பூஷணமாய், ஒப்புயர்வில்லாத உத்தம சற்பாத்திரமாய் விளங்காநின்ற மிட்டாதாராகிய இன்ன முதலியாரவர்கள் திவ்விய சமூகத்திற்கு, அடியேன் தங்கள் ஊழியனாகிய இன்னான், சத்விநய பயபக்தியுடனே, தாங்களிருக்குந் திக்குநோக்கிச் சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து எழுதிக்கொண்ட விண்ணப்பம்’ என்று, நமது உத்தியோக ஸ்திதிக்குத் தக்க மரியாதையாயெழுதாமல், எவனோ காமாட்டி யொருவன் நாட்டுப்புறத்தானுக்கு எழுதுவது போல, இப்படியுமெழுதினான் பார்த்தையா!’ என்று முகங்கறுக்க, கண் சிவக்க, வாய் பதைக்க, பல்லை நெறநெற வென்று கடித்து, மீசை படபடவென்று துடிக்க, கலகலவென்று சிரித்து, உதட்டைப் பல்லால் அதுக்கி, கையோடு கைபுடைத்து, வாய், கண், மூக்கு, செவிகளிலிருந்து குப்குப்வென்று புகையெழும்ப, திக்திக்வென்று நெருப்புப் பொறி பறக்க, பொள்ளென்று சரீரம் வெயர்க்க, பெருமூச்செறிந்து புருவம் நெற்றிமேல் வில்லைப்போல வளைந்தேற, கொடிய காலாந்தகனைப் போலக் கோபித்து, தன் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் கிடுகிடென்று நடுநடுங்கி, நா வறண்டு நெஞ்சுலர்ந்து தடுமாறித் தத்தளிக்க, உக்கிராகாரமாகக் கொக்கரித்து ஆர்ப்பரித்துத் தகப்பனை அக்கணமே கைப்பிடியாகப் பிடித்து வரச்சொல்லி, அவனுள்ளீரல் கருகி, ‘இஃதென்னை கொள்ளை!’ என்று குடர் குழம்பக் கண்களை உருட்டி விழித்து உறுக்கிப் பார்த்து, பிரளயகால ருத்திரனைப் போல அட்டகாசஞ் செய்து, ‘ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ உத்தண்ட ராஜகெம்பீர ராஜகுஞ்சரமாகிய அகண்ட மண்டலேசுவரன்’ என்று சக்கிரவர்த்திகளும் சரணாகதி செய்யத்தக்க கனம்பொருந்திய நாம், நத்தைக்குள் முத்துப் பிறந்தது போலவும், சேற்றில் செங்கழுநீர் பூத்தது போலவும், சுடுகாட்டில் வில்வமரம் முளைத்தது போலவும், எவ்வளவோ தாழ்ந்த நிலையிலிருக்கின்ற உனக்கும் பிள்ளையாய்ப் பிறந்ததைப் பற்றியும், பிச்சைக்காரன் பணப்புதையல் கண்டெடுத்தாற் போல, மூதேவி முண்டைமகனாகிய நீ, லக்ஷ்மீ புத்திரனாகிய நம்மைப் பெற்றதைப் பற்றியும், இப்படிக்கெல்லாம் அவமானப்படுத்தலாமா? நாலுபேர் கேட்டால் நகைக்கமாட்டார்களா?’ என்று தகப்பனைத் தாக்ஷணியமின்றித் தாறுமாறாக வைது, ‘நீ செய்த குற்றத்திற்கு ஐம்பது ரூபாய் அபராதங் கொடுக்கவேண்டும்!’ என்று கடுந்தண்டம் விதித்த துராங்காரி இவன்,’ என்றும், தானும் கெட்டபெயர் எடுக்கலாகாது; தாய் தகப்பன் பேரையுங் கெடுக்கலாகாது.

குருவானவர்...[தொகு]

குருவானவர் செய்ந்நன்றி

"குருவானவர், ஆமை தானிட்ட முட்டைகளை இடைவிடாது நினைப்பது போல, சீஷனுக்குப் பரிபாகமுண்டாக வேண்டுமென்று தமது திருவுள்ளத்தில் நினைத்தும், மீன் தன் சினையை நோக்குவது போலச் சீஷனது அஞ்ஞானம் நீங்க அவனிடத்திற் கிருபா நோக்கம் வைத்தும், பறவை தானீன்ற அண்டத்தைச் சிறகினாலணைப்பது போலத் தேகபந்த மொழியக் கரத்தினால் அவனைப் பரிசித்தும், தமது சந்நிதானத்தில் இருக்கச் செய்து, அவன் முகத்தை நோக்கிப் பின்வருமாறு தத்துவங்களைப் போதித்தார்:

‘சித்து, அசித்து, ஈஸ்வரன் என மூன்று தத்துவங்குண்டு; அம்மூன்றனுள், சித்தென்பது ஆத்துமா; அசித்தென்பது சரீரம்; ஈஸ்வரனென்பது கடவுளாம். ‘மேற்படி ஆத்துமா, அணுவாய் நித்தியமாய்க் கிஞ்சித்துவமுடையதாய்ச் சுதந்தரமில்லாதிருப்பது; சரீரம், அநித்தியமாய்ச் சடமாயிருப்பது; கடவுளோ, விபுவாய், நித்தியராய், நியந்தாவாய், சர்வஞ்ஞராய், சர்வசுதந்தரராய், சர்வ சத்தராய், சர்வ பரிபூரணராயிருப்பவர்.- இந்தச் சரீரம், பிருதிவி முதலாகிய ஸ்தூல பூதங்களும், சப்த ஸ்பரிச முதலாகிய சூட்சும பூதங்களும் சேர்ந்தானது; இச்சரீரம் நீயன்று; ஆத்துமாவே நீ! இச்சரீரமோ, உனக்கு அந்நியமாயிருந்தும் உன்னை வந்தடைந்தது; அவிவேகத்தால் நீயல்லாத தனுகரணங்களை நீயென்றும், உன்னுடையவை அல்லாத புவனபோகங்களை உன்னுடையவை என்றும் அபிமானித்து, பல பாவங்களையுஞ்செய்து உழலவேண்டிவந்தது. ‘இதற்கு நிவர்த்தி எங்ஙனம்?’ எனில், பொறிகளாகிய மத யானைகளைப் புலன்களின்மேற் செல்லவொட்டாமல், அறிவென்னும் அங்குசத்தால் அடக்கி, நெஞ்சமாகிய குதிரையைப் பகிர்முகமாகிய செண்டு வெளியில் ஓடவிடாது, பத்தியாகிய கடிவாளத்தை இறுக்கி, வைராக்கியமென்ற தளையைப் பூட்டி, அந்தர்முகத்தில் நிறுத்தி, பரமகாருணியராகிய கடவுளைத் தியானித்து, அவருக்கடிமை பூண்டு, ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு,’ என்ற வண்ணம், அகங்கார மமகாரமாகிய பற்றுகளை வாசனையோடே கைவிட்டு, துஷ்கிருத்தியங்களைச் செய்யாது, கடவுள் ஆணைக்கமைந்து, அவருடைய திருவடித் தொண்டு செய்து, உனக்கொன்றுமில்லையென்னும் உபாய பரதந்திரனாயொழுகினால், பந்தங்கெட்டு, மோக்ஷம் காணியாட்சியாகும்’ என்று அநுக்கிரகித்து, மனமுதலாகிய திரிவித கரணங்களாலும் காணப்படாத கடவுளைக் காட்டிக் கொடுத்த அவரது உபதேசத்தை மறவாது சிந்தித்து, சதாகாலமும் அவர் கிருபைக்குப் பாத்திரமாயிருக்க வேண்டும்.

குருவைச் சாமானியராக நினையாமல், மானைக்காட்டி மானைப் பிடிப்பது போல மாநுடவுருக்கொண்டு வந்தவராகப் பாவித்து, அவர் வாக்கிலிருந்து வரும் மந்திரத்தைக் கேவலம் மனிதர் வாய்ச்சொல்லாக மதியாமல், கடவுளது திருவாக்கி்லிருந்து தொன்று தொட்டுப் பரம்பரையாய் வந்த பரமார்த்தமென்று உண்மையாக மதிக்கவேண்டும்.

எப்படிப்பட்ட மகாத்துமாக்களானாலும், குருவார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமலும், குரு வாய்மொழியைக் கடவுள் திருவாய்மொழியாக நம்பினாலல்லவோ அவர்களுக்கு அனேக கற்பங்கழிந்தாலும் அழியாது நித்தியமாயிருக்கின்ற மோக்ஷசித்தியுண்டு! நம்பாதவர்களுக்கு என்ன வுண்டு?

குரூபதேசமே காமக்குரோதாதி உட்பகையைச் சேதிக்கின்ற வாளாயுதமென்றும், குருப்பிரசாதமே கடவுள் வரப்பிரதாசமென்றுஞ் சிந்திக்கவேண்டும்.

எங்கும் குருவில்லாத வித்தையில்லையாதலால், எப்பொழுதுங் குருவைத் தொடர்ந்து ஆஸ்ரயிக்க வேண்டுமல்லவா? குரு பாதமே கதியென்று சமுத்திரத்தில் இறங்கினவனுக்கு, அச்சமுத்திரம் கணுக்கால் ஆழமாயிருந்ததென்றும் ‘என் பாதமே கதி,’ என்றிறங்கினவன் அதில் அமிழ்ந்து இறந்தானென்றுஞ் சொல்லக் கேட்டிருக்கிறோமே!

ஒரு நாள் ஒரு சீஷன் குருவின் உபதேசத்தைக் கேட்டவுடனே, ‘சுண்ணாம்பிலிருக்கிறது குக்ஷம்; குக்ஷத்திலிருந்து மோக்ஷம்’ என்று அறியும் அறிவில்லாமையால், இஃதென்னை ஆச்சரியம்? ஆருக்குத் தெரியாது அண்டை வீட்டுக்காரன் பெயர்? முன்னமே சொல்லலாகாதா?’ என்று சொன்னதாகவுஞ் சொல்லுகிறார்களே!

‘கூரையேறிக் கோணற்சுரைக்காய் அறுக்காத குருக்களா நாளை வானத்தைக்கீறி வைகுந்தம் காட்டப் போகிறவர்?’ என்று குருவைப் பரிகாசஞ் செய்த சீஷனுமிருந்தான் அல்லவா? இவ்விதமான அபக்குவர்களுக்கெல்லாம் பந்தம் நீங்குமா?

ஆசாரியர் சீஷனைத் தேடி வர, அவரைக் கண்ட மாத்திரத்தில், ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது,’ என்று எண்ணி, அதிசீக்கிரமாக எழுந்திருந்து, எதிர்கொண்டு போய்த் தீர்க்கதண்டன் சமர்ப்பித்து, கை கட்டி வாய் பொத்தி உபசரியாமல் குந்தியபடி இருந்து, ‘ஏண்டா குருக்களே எங்கடா வந்தாய்? சாமி! சாமி! தெண்டம் ஐயா!’ என்ற கர்வபுஞ்சமாகிய சர்வ மூடனைப் போலக் குருவை அசட்டை பண்ணினவன் அதோகதி அடைவான்.

கடவுள் செய்ந்நன்றி

கடவுளானவர், தமது திரேதுக கிருபையினாலே, மூலப்பிரகிருதியில் அழுந்திக் கட்டுப்பட்ட ஆத்துமாவுக்குக் கரசணாதி அவயவங்களைக் கொடுத்துப் பூமியில் ஜனிப்பித்து, போஷித்து, பரிபாலித்து, பரமாத்துமாவாகிய தமக்கும் ஜீவாத்துமாவுக்கும் உள்ள தாரதம்மியம் இவ்வகைப்பட்டவென்று வேதாகமங்களின் மூலமாக விளக்கி, பூனையானது தன்னைத் தழுவத்தெரியாத சத்தியற்ற குட்டியைத் தன் வாயினாற் கவ்விச் செல்வது போல’ தம்மை ஆஸ்ரயித்து வழிபாடு செய்ய அறியாத சத்தியற்ற ஆத்துமாவானது அறிந்து வழிபடச் செய்தும், குளவியானது அற்ப ஜந்துவாகிய புழுவினைத் தன்னுருவாக்குவது போல, தமது திவ்விய சொரூபத்தை அது மருவப்பண்ணியும், உலகத்தார் மேகத்திற்கு ஒரு நன்மையும் செய்யாதிருந்தும், அம்மேகம் அவர்களுக்கு க்ஷேமமுண்டாக மழையைச் சொரிவது போல, கடவுளானவர் ஆத்துமாவினிடத்திற் கைம்மாறு வேண்டாது அடைதற்கரிய அசாத்தியமாய் ஒப்பற்ற பெரிய வீட்டின்பத்தை அடையும்படி செய்யும் மகோபகாரத்தை, ‘வான்செய்த நன்றிக்கு வையகமென் செய்யும்? அதை மறந்திடாதே,’ என்றபடி எப்பொழுதும் மறவாது தியானிக்க வேண்டும்.

தெய்வபக்தியே தீவினையாகிய உளையைக் கடந்து செல்லும் ஊன்றுகோல்; தெய்வதரிசனமே பிறவிக்கடலின் கரை காணும் நாவாய்; தெய்வத்தியானமே முத்தியாகிய மேல் வீட்டிலேறும் நூலேணி; தெய்வத்தின் அருளுதயமே அஞ்ஞான இருளையொழிக்கும் ஆதித்தியோதயம்; தெய்வ வணக்கமே நரக வாயிலை அடைக்கும் தாழ்; தெய்வத்தை வாழ்த்தும் வாழ்த்தே பாசவிலங்கைத் தறிக்கும் கருவியாம். தெய்வபத்தி உதிக்காமல் உலகபாசம் ஒழியென்றாலும் ஒழியாது. தெய்வத்தைத் தொழாமற் பாவநிவாரணமாகிறது பிரயாசம். தெய்வத்தை ஆராதிப்பதல்லவோ தவஞ்செய்கை? அதற்கு அந்நியமாகச் செய்வனவெல்லாம் அவஞ்செய்கையே. ஒரு நொடிப்பொழுதாவது தெய்வத்தைத் துதியாத நாவுக்குப் பரிசுத்தமேது? தெய்வசிந்தனையினாலன்றிச் சித்தசுத்தி சொப்பனத்திலும் வருமா? சுயகாரிய துரந்தரனுஞ் சுவாமிகாரியம் ‘வழவழ’ கனுமாயிருப்பவனுக்குத்? தெய்வ கடாக்ஷம் எவ்வாறு கிடைக்கும்? ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்,’ என்கிறார்களே!

சூரிய ரஸ்மி பாயாததும், காற்று வீசாததுமாகிய இடமுமிருக்கலாம். கடவுளின் வியாபகத்திற்கு அந்நியமோ, ஒன்றுமில்லை. ஆதலால், அவருக்கு அகம் புறம் எங்கும் கண்; எங்கும் செவி; எங்கும் வாய்; எங்கும் முகம். சகலாண்ட சராசரமும் அவருடைய திருவுருவமாம். அதனால், அவர் காணாத காட்சியும், அவர் கேளாத கேள்வியும், அவர் பேசாத பேச்சும், அவர் அறியாத விஷயமுமில்லை. அதுபற்றி எவர்களும் அவராணையை மீறிக் குற்றஞ்செய்யவும், செய்த குற்றத்தை மறைக்கவும், ஒருவிதத்திலாவது அவரை வஞ்சிக்கவுங்கூடா, என்றாலும், எக்காலமும் அவர் திருவுள்ளத்திற்குப் பாங்காய் நடக்கின்ற பத்தர் செய்த குற்றத்தை மாத்திரம் அவர் கண்டும் காணாமலும், உணர்ந்தும் உணராமலுமிருப்பார்.

சிலர் தமக்குவருத்தம் சம்பவித்த காலத்தில், தாம் செய்த எல்லாம் குறையாயிருக்க, ‘நானென்ன குறை செய்தேன்?’ என்றும், தாம் செய்த சதியை நினையாமல், ‘என்னளவில் தெய்வம் சதி செய்ததே!’ என்றும், ‘அதை வணங்குகிறதுதான் ஏதுக்கு? அதற்கென்ன கண்ணில்லையா?’ என்றும், ‘சாற்றுக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கவிருக்கிறதோ? இப்படிப்பட்ட ஆபத்துக்கு உதவாமல் தெய்வம் இனியென்னதான் சாதிக்கவிருக்கிறது?’ என்றும், தெய்வத்தை நிந்திப்பார்கள். அது நன்மையே அன்று.

குருட்டுக்கண் தூங்கியென்ன, விழித்தென்ன?தெய்வ பத்தியில்லாதவர்கள் கங்காஸ்நானஞ் செய்தாலும், வனவாசம் பண்ணினாலும், மலைக்குகைக்குள்ளே கண்ணைத் திறவாமல் யோகத்திலிருந்தாலும், முத்தியடையமாட்டார்கள். ஆமை, மீன், தவளை முதலானவைகள் கங்கா ந்தியில் உற்பவித்து, அக்கங்கக்குள்ளேதானே மூழ்கியிருந்தும்; யானை, புலி, கரடி முதலியவைகள் காட்டில் உற்பத்தியாகி அக்காட்டினிடத்திலேயே வாசஞ் செய்தும்; பகற்குருடாகிய கோட்டான், மரப்பொந்துக்குள்ளேதானே கண்ணை மூடிக்கொண்டிருந்தும் என்ன பிரயோஜனம்?

தத்துவ விசாரணை செய்து,, தாடி சடை வளர்த்து, தலையை முண்டித்து, தண்ட கமண்டலமேந்தி, தவவேடம் பூண்டிருந்தும், தெய்வத்தியானமில்லாதவர்க்கு என்ன பயனுண்டு? அவர் கொண்ட கோலம் அலங்கோலமான பேய்க்கோலம், அல்லது பிணக்கோலமே!

தெய்வத்தை அஞ்சலியாத கை, நெற்குற்றும் உலக்கை; அல்லது வீட்டு உத்திரக்கை. தெய்வத்தைப் பணியாத முடி கழனியில் நடும் நாற்றுமுடி, அல்லது கம்பள நார்முடி, தெய்வத்தைத் தரிசியாத கண், பனங்காய் நுங்குக்கண், அல்லது பாம்புப்புற்றுக்கண். தெய்வத்தை வாழ்த்தாத வாய், மலஜலமோடுங் கால்வாய், அல்லது சுண்ணாம்புக் காளவாய். தெய்வ ஸ்தலத்தைத் தேடிச்செல்லாத கால், கொல்லைப் பரண்கால், அல்லது பந்தலுக்கு நாட்டுங்கால். தெய்வஸ்துதியைக் கேளாத செவித்தொளை, பருத்த நுகத்தொளை, அல்லது பாழான சாரத் தொளையாம்.

காற்றுக்கெதிரே ஏற்றிய விளக்குப்போல அடிக்கடி அலைந்து, ஓயாமலோடும் பம்பரம் போல இடைவிடாது சுழன்று, ஒரு வேலையுமில்லா விட்டாலும் நிற்க நேரமில்லாமல் திரியும் நாய்போல அரைக்கணமும் தங்காது காடு மலை கானாறுகளெல்லாங் கடந்து, லோகலோகமெங்கும் ஓடியுழல்கின்ற பொல்லாத மனமென்னுங் குரங்கு, அஞ்ஞானமாகிய வெறிகொண்டு, ஆணவமாகிய மரத்திலேறி, பலவகை வண்ணமாகிய இலைகள் செறிந்த ஆசையாகிய கிளைகளைத் தாவி, தீவினையாகிய கனிகளைக் கொள்ளை கொண்டு, சேஷ்டை செய்யவொட்டாமல், அதனை நிராசையாகிய கயிற்றினாற்கட்டி, விடயவாதனை இல்லாமல் அடக்கி வைத்தாலும், தெய்வத்தை உணரும் ஞானமில்லாதவர்களுக்கும் மோக்ஷத்திற்கும் வெகு தூரமே!

ஐயறி வறிந்தவை யடங்கினவ ரேனும்
மெய்யறி விலாதவர் வீடதுபெ றாரே.

என்றுஞ் சொல்லியிருக்கின்றதே!

தெய்வநிலை இத்தன்மைத்தென்று அத்தெய்வத்தின் அருளைக் கொண்டறிந்தாலன்றி, மற்றொரு விதத்தில் தெளியக் கூடாமையால், யானை கண்ட குருடர் போலவும்,

தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரு ம ஃதே!
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கண்ட சமயத் தன்னா னுருவுகண் டாரை யொத்தார்.

என்றாற் போலவும், உலகத்திலுள்ள பற்பல சமயத்தாரும் புற்பல அவசரமாகத் தாம் தாம் கண்டதையே பொருளென்று மதித்து, அதற்குத் தக்க யுத்தி சாதனங்களைக் கொண்டு சாதிப்பார்கள். அதை விரிக்கிற் பெருகுமாதலின், அது நிற்க.

ஔவையானவள், புகழேந்தியார் என்னும்புலவரை நோக்கி, தன் ஐந்து விரலையுமுடக்காமல் நெருக்கி உள்ளங்கையைக் குவித்தும், ஐந்து விரலையுமுடக்கிப் பிடித்தும், கடைவிரலிரண்டையும் முடக்கி மற்ற மூவிரலையுங் கோணமாக நிறுத்தியும்,, நால்விரல் முடக்கிச் சுட்டுவிரலை ஊர்த்துவமாக நிறுத்தியும், ஐந்துவிரலையும் குவித்தும் காட்டி, ‘இந்த ஐந்து சமிக்கியைக் குறித்து ஒரு வெண்பாப் பாடவேண்டும்,’ என்ற மாத்திரத்தில், அவர்,

ஐயம் இடுமின்; அறநெறியைக் கடைப்பிடிமின்,
இவ்வளவே யாயினுநீ ரிட்டுண்மின் -தெய்வம்
ஒருவனே யென்று முணரவல் லீரேல்
அருவினைக ளைந்து மறும்.

என்று பாடிய பாடலுள்ளும்,

எத்தேயத் தெத்திறத்தோ ரெவ்வருணத் தெவ்வுருவி னென்னை யாய்ந்தார்
அத்தேயத் தத்திறத்தோர்க் கவ்வருணத் தவ்வுருவி னவர்நே ராவன்;
முத்தேவர் முத்தொழிலு முக்குணமுங் கடந்துமறை முடிவின் முத்தி
வித்தாகித் தனிநின்ற பரப்பிரமப் பழம்பொருள்யான்! மெய்க்கொள் வாயே!

என்ற செய்யுளுள்ளும், தெய்வமொன்றென்றும் சொல்லுகின்றதனாலும், காரியமாகிய பணியும் பாண்டமும் பலவாயினும், காரணமாகிய பொன்னும் மண்ணும் ஒன்றாய் விளங்குவதனாலும், தெய்வமொன்றென்றே வேண்டுமல்லது, பலவென்று பிரமிக்கலாகாது.

அரசன்....[தொகு]

அரசன் செய்ந்நன்றி

அரசனானவன், உலகத்திற்கு அன்பிற்சிறந்த தாய்போலத் தோன்றி, மன்னுயிர் யாவையுந் தன்னுயிர் போலக் கருதி,

மாநிலங்கா வலனென்பான் மன்னுயிர்காக் குங்காலை
தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால்
ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ?

என்றவண்ணம், தன்னாலாவது, தன்பரிசனத்தாலாவது, பகைவர்களாலாவது, திருடர்களாலாவது, மற்றை உயிர்களாலாவது சிறிதுங் கொலை, களவு முதலாகிய உபத்திரவம் அணுகாமல், குடிகளுக்கு க்ஷேமமுண்டாகும்படி, முறை பிசகாது செங்கோல் செலுத்தி, பிரஜைகளிடத்திற் கடுஞ்சொற்சொல்லாமலும், கடுந்தண்டம் விதியாமலும், அரவரவர் தாரதம்மியமறிந்து, பக்ஷபாதமில்லாமல், தயையாப் பரிபாலனஞ் செய்கின்றதை மறத்தலாகாது.

ஆரைப் பகைத்தாலும் அரசனை மாத்திரம் பகைக்கலாகாது; அரசவையிலிருந்து வறிதே அடிக்க நகைப்பதும், பரிகாசம் செய்வதும், ஒருவர் செவியிலொருவர் இரகசிய சமாசாரம் சொல்வதும், அரசனுக்கெதிரே அடக்கிமில்லாதிருப்பதும், அரசனோடெதிர்த்து அவனை அலட்சியமாகப் பேசுவதும் வீண் போகாமல், திரவிய நஷ்டத்தையும், மான பங்கத்தையும், பிராண சேதத்தையும் வருவிக்கும், ‘செங்கோலுக்கு முன்னே சங்கீதமா?, திருக்குறள்,

செவிச்சொல்லுஞ் சேந்த நகையு மவித்தொழுகல்
ஆன்ற பெரியோ ரகத்து.

என்றுஞ் சொல்லுகின்றதே!

அரசனது தயையைப் பெற்று, அவனை அந்நியோந்நியமாகச் சினேகித்து, அவனுக்கு அனுகூலப்படாத விரோதிகளையெல்லாம் சதித்து, அவன் மனமகிழும்படி அனேக திரவியங்களைச் சம்பாதித்துக் கொடுத்து, அவனால் நன்கு மதிக்கப்பட்டவர்களானாலும், அவன் விஷயத்தில் நெறி தவறி இலேசமாத்திரத்தில் பிழை செய்தாலும், குடி முழுகிப்போம், ‘வேங்கைப் புலியும் ராஜாவும் சரி,’ என்கிறார்களே! ஆதலால் அவனை விஷசர்ப்பம் போலவும், கடுநெருப்புப் போலவும் நினைத்து, அவனுக்குப் பயந்து நடக்க வேண்டும்.

துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்பவனாகிய அரசனில்லாத நாடு, தன்னரசு நாடாய் உபத்திரவத்திற்கே உறைவிடமாகும்.

‘அரசனுடைமைக்கு ஆகாச வாணி சாக்ஷி,’ என்பதனால், அவனை வஞ்சித்து அவனுக்குச் செலுத்தத்தகும் இறைப்பொருளை அபகரிக்கலாகாது; அபகரிப்பது கர்த்துரு துரோகமாம். மாதுரு துரோகம், பிதுரு துரோகம், குரு துரோகம், சுவாமி துரோகம், சினேக துரோகங்கள் மறுமையில் துன்பத்தை விளைக்கும். இஃது இம்மையிற்றானே துன்பத்தைச் செய்யுமாதலால், அவைகளினும் இது மிகக் கொடியதாம்; ராஜதரிசனமும், ராஜதயையும், ராஜாபிமானமும் ஒருவர்க்கு எளியவையல்ல.

அரசன், பொன் மணி நெல் முதலிய மிதமற்ற பலமும், மலையரண் காட்டரண் மதிலரண் நீரரணாகிய நால்வகை அரண் சூழ்ந்த ஸ்தானபலமும், அகண்ட ராச்சிய பலமும், சமுத்திரம் போல அளவிறந்த ரதகஜதுரக பதாதிகளென்னும் சதுரங்க பலமும், வில் கணை முதலிய எய்வனவும், சக்கிரம் தோமரமுதலிய எறிவனவும், வாள், பரிசை முதலிய வெட்டுவனவும், சூலம் ஈட்டி முதலிய குத்துவனவுமாகிய ஆயுதபலமும், சத்துருக்களுக்கெதிரே மான் கூட்டத்திற் புகுந்த பெரும்புலி போலவும், யானைக்குழாத்திற்கு முற்பட்ட வீரசிங்கம் போலவும் கர்ஜித்து, நிர்ப்பயமாய், முன்வைத்த காலைப் பின்வையாமல், முதுகு காட்டாமல், விழித்த கண் சிமிட்டாமல், எய்ப்பில்லாமல், ‘காயமென்ன கற்கண்டா? உயிரென்ன தித்திப்பா? ஆறிலுமரணம், நூறிலுமரணம்,’ என்பதை நிச்சயித்துப் பிராணனைத் துரும்பு போல அலட்சியம் பண்ணி, ‘இறந்தால் வீரசொர்க்கம்; வென்றால் ராச்சிய லாபம் உண்டு,’ என்கிற நம்பிக்கையினால், முன் காயப்பட மூர்த்தன்னியமாய்ப் போர் செய்து, எதிரிகள் அதமாகக் கண்டதுண்டமாக்கி வெல்லுகின்ற உத்தண்டமான புஜபலமும் எந்தத் திக்குப்போனாலும், அபஜயப்படாமற் சாதித்துவரத் தக்க காலபலமும், மந்திரி பிரதானிமார்களுடைய ஆலோசனையின் பலமும், தானாபதிகள் நியாயாதிபதிகளுடைய விசேஷ பலமும், மெய்காப்பாளர் கடை காப்பாளர்களுடைய காவற்பலமும், தன்னைவிட்டு நீங்காத உறுதிச்சுற்றத்தின் பலமும், தனது பூரணமான வித்தியாபலமும், விவேகபலமும், என்றுஞ் சலியாத மனோபலமும் எங்குங்கி்ளளார்க்குச் செல்லாநிற்கும். வாக்குப் பலமுமாகிய சுயபல உபபலங்களைப் பிரபலமாகப் படைத்தமையால், நான் நினைத்தபடி யெல்லாம் முடிப்பதற்கு ஒரு விதத்தாலும் தடையில்லையே! அது பற்றி தனக்குள்ளே, நாம் முறை தவறி நடந்தால் நம்மைக் கேட்பவரார் நமக்கெதிர் ஒருவருமில்லை; நாம் அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு,’ என்று கர்வித்தால்,

மலையின்மிக் கானவ ரென்றாலுங் கர்வ மமதையுற்றால்
நிலைமைகெட் டோடுவர், ஈடே றுவதில்லை, நிச்சயமே
அலைகடற் றேங்குந் துரியோ தனன்செல்வ மத்தனையும்
தலைமுறைக் கும்வந்த கேடாகும் ரத்ன சபாபதியே!

என்ற வண்ணம், அவசியம் கேடு வருமாதலால், அவன், ‘நமக்கு மேலே தெய்வமிருக்கிறது. ‘அரசன் அன்றொறுக்கும், தெய்வம் நின்றொறுக்கும்,’ தெய்வம் பொறுத்தாலும் பூமி பொறுக்காது. அண்டமி்டிந்து தலைமேல் விழும். அதனால், நெருப்பாறும் மயிர்ப்பாலமுமாக நடக்க வேண்டும்,’ என்று கருதி, மழையைத் தனக்காதாரமாக நோக்கியிருக்கும் பயிர்போல, குடிகள் தமக்கு ஆதாரமாகத் தனது செங்கோலையே நோக்கியிருப்பதையும், அச்செங்கோல் கோணினால் எங்கும் கோணுமென்பதையும், ‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்,’ என்பதையும் உய்த்துணர்ந்து, தானே தன் மனத்தில் இரக்கங் கூர்ந்து, நீதி பிசகாது நடக்க வேண்டும். அங்ஙனம் நடவாமல், அநீதியாய் நடந்தால், அவனை, ‘இஃது உனக்குத்தகாது,’ என்று தண்டிக்கவாவது, அவனைத் தள்ளி வேறோரசனை ஸ்தாபிக்கவாவது ஆருக்குச் சாத்தியம்? வாழைத்தோட்டம் கருப்பந் தோட்டங்களிற் புகுந்து, வாழைகள் கரும்புகளை வேருடனே பிடுங்கி முறித்துச் சாடுகின்ற பெரிய மதம் பிடித்த யானையைச் சிறிய கொசுகுக்கூட்டம் போய்த்தடுக்கக் கூடுமா? மழைக்குக் குடைபிடிப்பதுண்டு, இடிக்குக் குடை பிடிப்பார்களா?

படித்துச்செங் கோல்மன்னன் நீதிசெய் யாதுவெம் பாவஞ் செய்தால்
பிடித்துத்தள் ளத்தக்க பேருமுண் டோவிந்தப் பேருலகில்?
அடித்துச் சொரியு மழைக்கேயல் லாம லதிர்ந்துவிழும்
இடிக்குக் குடையுமுண் டேவெள்ளை நாவ லிருப்பவனே!

என்றுங் கூறியிருக்கின்றதே!

ராஜாவைத் தந்தையாகவும், ராஜபத்தினியைத் தாயாகவும் பாவித்து வணங்க வேண்டும். தாய்மார், பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய்,, முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் என ஐவராவர்; அன்றியும், அரசன்தேவி, குருவின்தேவி, அண்ணன் தேவி, தன்தேவியை ஈன்றாள், தன்னைஈன்றாள் எனவுஞ் சொல்லப்படுவர். தந்தையர், பிறப்பித்தோன், கல்விகற்பித்தோன், மணம்முடிப்பித்தோன், அன்னந் தந்தோன், ஆபத்துக்குதவினோன் என ஐவகைப்படுவர். குருவானவர், வித்தியாகுரு, உபதேசகுரு என இருவராவர். இவருங் காரணகுரு, காரியகுரு என்று சொல்லப்படுவாருமுண்டு. அரசர் சிங்காசனாதிபதி, சேனாதிபதி என இருவகையாராவர்; தேசாதிபதி, மன்னர் மன்னர் எனவும், மகாராஜர், யுவராஜர் எனவுஞ் சொல்லப்படுவர். தாய், தந்தை, குரு, அரசர் என்னும் இவர்களுள் தாரதம்மியம் உண்டாயினும், ‘அவர் அத்தன்மையர், இவர் இத்தன்மையர்,’ என இவரை ஒருவர்க்கொருவர் வேறுபாடு உடையவராக எண்ணுவதும் பேசுவதும் யுத்தமன்று.

பெரியோர் செய்ந்நன்றி

பெரியோர்கள் ஜீவகாருணியத்தால், ‘யாம் பெற்ற பேறு வையகம் பெறுக!’ என்று எண்ணி, சகலரும் விதி விலக்குகளை அறிந்து நெறி வழாதொழுகி, இம்மையின்பத்தையும் மறுமை இன்பத்தையும் அடையும்பொருட்டு லோகோபகாரமாகச் சகல தர்மங்களையும், ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் என மூன்று வகையாகச் சாஸ்திரமுகத்தால் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கி அநுக்கிரகித்ததனால் அந்த ஆப்தவசனத்தை மறவாது சிந்திக்க வேண்டும்.

மேற்கூறிய ஆசார தர்மமாவது, யாவரும் தங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிலைகளிலே நின்று, அவைகளைக் குறித்துச் சொல்லிய தர்மங்களில் வழுவாது நடத்தல்; விவகார தர்மமாவது, ஒரு பொருளையே ஒருவன் எனதென்றும் மற்றொருவன் தனதென்றும் சுதந்தரித்து அந்தப் பொருளின் மேல் வழக்குத் தொடுத்தல். பிராயச்சித்த தர்மமாவது, மேற்குறித்துச்சொல்லிய ஆசாரவழியிலும் விவகார வழியிலும் பிசகி நடந்தவர்களை அவ்வழியிலே தவறாது நிலைக்கச் செய்யும்படி, பகைவர் சினேகர் அயலார் என்னும் பக்ஷபாதமில்லாமல், பொதுப்பட ஆராய்ந்து, அதற்கேற்கத் தண்டித்தலாம்.

‘பெரியாரைத் துணைக்கொள்,’ என்றதனால், என்றும் பெரியாரையே நேசிக்கவேண்டும். அவர்கள் நேசத்தை ஒரு பொழுதும் கைவிடலாகாது. அனேகரது பகையைத் தேடிக் கொள்வதனால் வருந்தீமையினும், ஒரு பெரியாரது நேசத்தை இழந்துவிடுவதனால் வருந்தீமை பதின்மடங்கு அதிகமாகும்.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

என்று சாஸ்திரஞ் சொல்லுகின்றதே!

உருத்திராட்சப் பூனை போலவும், கோமுக வியாக்கிரம் போலவும், வேஷதாரிகளாய்ப் பிரபஞ்சத்தாரை மயங்கும்படி நடிப்பவர்களையன்றி, ‘சேரிடமறிந்து சேர்,’ என்பதற்கு ஏற்கக் களங்கமில்லாத பொன்போலும் உண்மையாகிய பெரியார்களை அறிந்து, அவர்களிடத்திற் சேர்ந்து, அவர்கள் சொற்படி நடக்க வல்லவர்களுக்கு, அறம் பொருள் இன்பம் வீடென்பவைகளில் எதுதான் அரிதாகும்? கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதுண்ணும் அல்லவோ?

முருகுவிரி மலர்க்கொடிகண் மூங்கின்மிசைப் படர்ந்துபோய்ப்
பொருவரிய துறக்கத்துப் புகுந்துவளர் கற்பகமாம்
மரமுழுதும் படர்ந்துலவும், வளர்மதியின் மேலாய்
பெரியவரை யடைந்தொழுகப் பெறிற்றுறக்கம் புகலரிதோ?

என்றுஞ் சொல்லியிருக்கின்றதே!

தபோமகிமை, சாபாநுக்கிரக சாமர்த்தியம், அஷ்டாங்க யோகம், அஷ்டமாசித்தி முதலாகச் சொல்லி முடியாத தமது வல்லமைகளை யெல்லாம் நீறு பூத்த நெருப்புப்போலவும், கரித்துணியில் முடிந்த மாணிக்கம் போலவும், புறத்தில் தோன்றாமல் அடக்கி, கோபமாகிய நெருப்பை மூண்டு எழவொட்டாமற் கிருபையாகிய நீரினாலவித்து, சாந்தத்தையே மேற்கொண்டு, பரமசாதுக்களாய் இருப்பதனாலும், ‘சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே,’ என்பதனாலும், பெரியோர்களுக்குக் கோபம் வாராதென்று எளிதாக நினைத்து,, நெருப்பை முன்றானையில் முடிவது போலவும், விஷப் பரீக்ஷை பண்ணுவது போலவும், அவர்கள் விஷயத்தில் அபசாரப்பட்டுக் கோபமூட்டலாகாது. மௌனம் மலையைச் சாதிக்குமல்லவோ?

துறவு, மெய்யறிவு, ஆசையில்லாமை முதலிய நற்குணமென்னும் அசைவற்ற பெரிய மேரு சிகரத்தில் ஏறியிருக்கின்ற சான்றோருடைய கடுங்கோபமாகிய நெடுங்கழியில் இறங்கினவர்கள், துக்கமாகிய முதலை வாயில் அகப்பட்டுக் கரைசேர மாட்டார்கள்.

மற்றச் சுற்றத்தார் சினேகர் அயலார் முதலானவர்கள் செய்த நன்றியையும், சத்திரம் சாவடி தோப்பு துரவு, ஏரி வாவி குளம், சந்தி சதுக்கம் முதலியவைகளை உண்டாக்கினவர்கள் செய்த நன்றியையும் மறக்கலாகாது. மேலும், பொருளினால் வாக்கினால் சரீரத்தினால் எவரெவர் எவ்வளவு சொற்பமான உதவியைச்செய்தாலும், ‘இது எம்மாத்திரம்?’ என்று அற்பமாய் எண்ணாமல், அவ்வுதவி செய்யப்பட்ட காலம் காரணம் முதலியவைகளைப்பற்றி மிகப் பெரியதாகவே கொள்ள வேண்டும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.

என்று வழங்குகின்றதே!

‘ஆண்டியைக் கண்டால் லிங்கன், தாதனைக்கண்டால் ரங்கன்,’ என்பவரைப்போல, அவரவர்களுக்கு ஏற்றபடி நடந்து, அவர்களால் தமக்கு வேண்டிய உதவிகளை வேண்டியபடிக்கெல்லாம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பிரதியுபகாரஞ் செய்யவேண்டுமென்கிற எண்ணம் சிறிதுமின்றி, ‘அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பிடாமல்,’ லோபகுணத்தையே பெரும்பான்மையாகக்கொண்டு, ‘இடாள் தொடாள்; மனுஷர்மேற் செபித்த பிராணன்,’ என்ற பாவனையாக, விசுவாச காதகர்களாயிராமல் யதார்த்தமாக ஒரு நன்றி செய்தார்க்கு ஆபத்து வந்த காலத்தில் பெறுதற்கரிய தமது உயிரையாவது கொடுத்து அக்கடனைக் கழிப்பதுமன்றி, அவ்வொரு நன்றியினிமித்தம், அவர் அனேகம் பிழைகளைச் செய்தாலும், அவைகளையெல்லாம் பாராட்டாமற் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். நீதிநூல்,

ஒருநன்றி செய்வாரை யுள்ளத்தே வைத்துப்
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்

என்றுஞ் சொல்லுகின்றதே!

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த நன்றியை மறந்த பாவத்திற்கும் பிராயச்சித்தமுண்டு; ஒருவர் செய்த நன்றியை மாத்திரம் ஏற்றுக்கொண்டு, அந்நன்றி செய்தாரை அவமதிப்பது தர்மமன்று. பழத்தைக்குறித்து மரத்தைப் பாலிப்பது போலவும், பாலைக்குறித்துப் பசுவைப் போஷிப்பது போலவும், செய்த நன்றியைக் குறித்துச்செய்தாரையும் மறவாமல் நன்கு மதிக்க வேண்டும். ‘உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைக்க வேண்டும்’ என்கிறார்களே!
எட்டாவது, ‘நன்றி மறவாமை’ முற்றிற்று.

பார்க்க:[தொகு]

விநோதரசமஞ்சரி

7.காலபேத வியல்பு

9.கம்பர் சரித்திரத்தின் ஒருபகுதி