உள்ளடக்கத்துக்குச் செல்

விநோதரசமஞ்சரி/11.ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடியது

விக்கிமூலம் இலிருந்து

விநோத ரச மஞ்சரி

[தொகு]

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்

[தொகு]

தந்துவாயர்கள்என்னும் செங்குந்தர்கள் (கைக்கோளர்கள) தங்கள் மரபிற் பிரபல வித்துவானாயிருந்த ஒட்டக்கூத்தரிடத்தில் ஒருநாள் வந்து, ‘ஐயா, கம்பர் வேளாளரைக் குறித்து ‘ஏரெழுபது’ம், வன்னியாரைக் குறித்துச் ‘சிலையெழுபது’ம் பாடினார்; பூர்வமே வைசியரைக் குறித்துச் சங்கத்தமிழாகிய ‘சிந்தாமணி’ முதலிய பஞ்ச காவியங்களுக்குள் ஒன்றான ‘சிலப்பதிகாரம்’ செய்யப்பட்டிருக்கின்றது; அன்றியும், ஔவையானவள் பந்தன் என்னும் வணிகன்மேல் ஓரந்தாதியும், ஐவேல்அசதி என்னும் யாதவன்மேல் ஒரு கோவையும் பாடினாள்; கம்பர் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரை இராமாயணமென்னும் மகாகாவியத்தில் ஆங்காங்கு எடுத்துரைத்தார்; இப்படிக்கெல்லாம் வைசியர், வேளாளர், வன்னியர், யாதவர் முதலானவர்கள் தத்தம் குலவளத்தைப் புலவர்கள் புகழ்ந்துரைக்கப் பாடல் பெற்றுச் சிறப்புற்றிருக்க, நம் ஜாதியார் பூஷணாதிகள் அணிவதற்குப் புண்ணியஞ் செய்யாத வறியவர் போல, அச்சிறப்பின்றியிருப்பது அழகோ? நமது மரபைக் குறித்து நீவிராவது ஏதேனும் ஒரு பிரபந்தம் செய்யலாகாதா?’ என்ன, அவர் அது கேட்டு, ‘நீங்கள் விரும்பிய விஷயம் நல்லதுதான்! பாமாலை சூட்டப்பெற்றவர்களைச் சாமானியராக நினைக்க வொண்ணாது! மனிதர்களுட் சிலர் செத்தும் சாகாதவர்களாகவும், அனேகர் இருந்தும் செத்தவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்களிற் செத்துஞ்சாகாதவர்கள், உதாரகுணமுடையவர்களும், அதிசூரரும், வித்துவஜனர்களும், வித்துவான்கள் வாக்கினாற் பாடல் பெற்றவர்களும், பிறரிடத்தில் இரவாதாரும் முதலானவர்களே; அவர்கள் தமது பூதவுடம்பழிந்தும் புகழுடம்பழியாது வளர்தலால், செத்துஞ்சாகாதவர்களாவார்கள். இருந்துஞ்செத்தவர்கள் வறியரும், தீர்க்க ரோகஸ்தரும், கொண்ட மனைவிக்கஞ்சி விருந்தோம்பாதவரும், கல்லாத மூடரும், இரப்பவர்க்கு ஈயாதவரும், சுமையெடுத்துச் சீவிப்பவரும் முதலானவர்களே. இவர்கள் பூதவுடம்பழியப் புகழுடம்பு வளராமையால், இருந்துஞ் செத்தவர்களாவார்கள். புலவர்கள் வாக்கினாற் பாடல் பெற்றுச் செத்துஞ்சாகாதிருப்பவர்களும், பாடல் பெறாத மற்றவர்களும், உலகத்தில் மூவர்களாலும் மற்ற ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திவ்விய ஸ்தலங்களும், அது பெறாத சாதாரண ஸ்தலங்களும் போல்வார்கள்; மேலும், புருஷஜன்மமெடுத்தவன் தத்துவ ஞானியாகவாவது, வித்துவானாகவாவது, கீர்த்திமானாகவாவது, சுத்த வீரனாகவாவது, கவீஸ்வரர்களாற் பாடல் பெற்றவனாகவாவது மகிமையுற்றிரானாயின், கௌரவமும் பகுத்தறிவுமில்லாத மிருகத்துக்கு ஒப்பாவான், ஆகையால் பாடல்பெற வேண்டுவது ஆவசியகமே; ஆயினும் நம்மைக் குறித்துப் பிறர் பாடுவதன்றோ தகுதி? நம்மை நாமே பாடிக்கொள்வது தகுதியா? அப்படிச் செய்தால், தன்னைத்தான் புகழ்ந்ததாக அல்லவோ முடியும்? பார்ப்பவர்களும் கேட்பவர்களும், ‘இஃதென்னை புதுமை! வேளாளர் முதலானவர்கள் கம்பர் முதலியோராற் பாடப்பெற்றதைக் கண்டு, இவர்கள் தங்களைத் தாங்களே பாடிக்கொண்டார்களே! இது ‘புலியைப் பார்த்துப் பூனை சூடிக்கொண்டது’ போல அல்லவோ இருக்கிறது!’ என்று பரிகாசம் பண்ணமாட்டார்களா?’ என்றார்.

 கற்ற வர்க்கும் நலநி றைந்த கன்னி யர்க்கும் வண்மைகை
உற்ற வர்க்கும் வீர ரென்று யர்ந்த வர்க்கும் உலகையாள்
கொற்ற வர்க்கும் உண்மை யான கோதில் ஞான சரிதராம்
நற்ற வர்க்கும் ஒன்று சாதி, நன்மை தீமை யில்லையே.”

-என்றபடி, ‘கற்றுணர்ந்த பூரண பண்டிதர்’களுக்கும், பருவம் நிறைந்த கன்னிகைகளுக்கும், கொடையாளர்களுக்கும், புறங்கொடாத வீரர்களுக்கும், உலகாளும் அரசர்களுக்கும், மெய்ஞ்ஞானிகளுக்கும் ஜாதிபேதம் இல்லையென்பதனாலும், தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே,’ என்பதனாலும், ‘சந்நியாசிக்கும் சாதி மானம் போகாது,’ என்பதனாலும், நீர் நம்மைக் குறித்துப் பாடுவது யுத்தமே அல்லது அயுத்தமன்று,’ என்றார்கள்.

ஒட்டக்கூத்தர் ‘உங்கள் இஷ்டப்படிக்குப் பாடினால் நமக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?’ என்று கேட்க, அவர்கள், ‘உனக்கு வேண்டிய திரவியம் கொடுப்போம்’ என்ன, இவர், ‘நமக்குத் திரவியத்திற்கு என்ன குறைவு? சோழராஜன் கொடுத்த அளவிறந்த பாக்கியமிருக்கிறது; ஆதலால், நீங்கள் திரவியங்கொடுக்க வேண்டியதில்லை, என, அவர்கள் ‘பின்னை என்ன உனக்கு வேண்டுவதோ அதைச்சொன்னால், தடையின்றி நடத்துவோம்,’ என்ன, இவர், ‘ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொன்று விழுக்காடு எழுபது தலைச்சன் பிள்ளைத் தலைகளைப் பரிசாகக் கொடுத்தால், நமது ஆயுதமாகிய ஈட்டியைச் சுட்டி எழுபது பாட்டில் ஈட்டி எழுபது என ஒரு பிரபந்தஞ் செய்கிறோம்’ என்று சொல்ல, அவர்கள் எக்காலத்தும் தங்கள் செவியிற் கேளாத பயங்கரமான அந்தச் சொல்லைக் கேட்டபொழுது, திடுக்குற்று, ‘இஃதென்னை கோரம்! ‘கூத்துப்பார்க்கப் போனவிடத்தில் பேய் பிடித்தது’ போலவும், ‘பிள்ளைவரத்துக்குப் போனவள் புருஷனைப்பறி கொடுத்தது’ போலவும் இருக்கிறதே! இவர் நம்மவராயிருக்கிறாரென்று பாத்தியத்தைப் பற்றிப் பாட்டுப்பாட வேண்டுமென்று சகஜமாகக் கேட்டால், கொஞ்சமாவது இரக்கமில்லாமலும், தாக்ஷணியம் இல்லாமலும், ‘பாடலொன்றுக்கு ஒரு தலைவீதமாகக் கொடுக்கவேண்டும் என்று மனமிருந்தால், இப்படிச் சொல்வாரா? பாடக்கூடாதென்ற எண்ணத்தைக் கொண்டல்லவோ, ஏடாகூடக்காரனுக்கு வழியெங்கேயெனில் போகிறவன் தலைமேலே, என்பார்போல அகடவிகடம் பேசுகிறார்? இதற்கு என்ன உத்தரஞ் சொல்லுகிறது!’ என்று ஒன்றுந் தோன்றாமல் மரம்போல அசைவற்று மௌனமாயிருந்தார்கள்.

ஒட்டக்கூத்தர், ‘நாம் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒன்றுஞ் சொல்லாமல் இருக்கிறதென்னை?’ என,அவர்கள், ‘ஐயா, செல்வம் சொல்லுக்கஞ்சாது, என்பதற்குச் சரியாய்க் கேட்க உமக்கு நாக் கூசவில்லை; மறுமொழி சொல்ல எங்களுக்கும் நாவெழவில்லை; என் செய்வோம்? நம்முடைய மரபின் மகிமை விளங்கும்படி பாடற்பாட வேண்டுமென்று நாங்கள் உம்மைப் பிரார்த்தித்தவிடத்தில் தலை கொடுக்க வேண்டுமென்கிறீர்! பாட்டுக்காகத் தலை கொடுத்தவர்களார்? கேவலம் அசாத்தியத்திற் கொண்டுவந்து விட்டீரே!’ என்றார்கள். அதற்கு இவர், புன்சிரிப்புச் சிரித்து, ‘என்ன காணும்! ‘ஆனைமேலேறுவேன்; வீரமணி கட்டுவேன்; அகப்பட்ட பெயர்களைத் தலையை உடைப்பேன்,’ என்கின்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்குள்ள தைரியமும், ‘ஆராவது என்னைத்தூக்கிமாத்திரம் பிடிப்பார்களானால், நான் பிணக்காடாக வெட்டுவேன்,’என்ற முடவனுக்குள்ள வீரமுங் கூட உங்களுக்கில்லையே! ஆர் தலைகொடுப்பார்கள் என்கிறீர்களே! குமணராஜன் காட்டிற்போயிருக்கும் பொழுது அவன் தம்பியாகிய அமணராஜன் மாச்சரியத்தால், ‘என் தமயன் தலையைக் கொண்டு வருகிறவர்க்குக் கோடி பொன் கொடுக்கிறேன்,’ என்று சொன்ன சமயத்தில், ஒருவித்துவான் குமணன் மேற் கவி பாடிக்கொண்டு போய்ப் பரிசுகேட்க, அவன், ‘நான் செல்வமுடையவனாயிருந்த அக்காலத்தில் வரவில்லை; வறியவனாயிருக்கின்ற இக்காலத்தில் நீர் வறுமையினால்மெலிவுற்று வந்தடைந்தீர்; ஆயினுமென்ன? என் தலையைக் கொய்துகொண்டுபோய் அமணனிடத்திற் கொடுத்து, அவன் அதற்காகக் குறித்த திரவியத்தை வாங்கி, உமது வறுமையை நிவர்த்தி செய்து கொள்ளும்,’ என்னும் கருத்தையுள்ளடக்கி,

 “அந்தநாள் வந்திலை யருங்கவிப் புலவோய்
இந்தநாள் வந்தெனை நொந்துநீ யடைந்தாய்
தலைதனைக் கொடுபோய்த் தம்பிகை கொடுத்தவன்
விலைதனைப் பெற்றுன் வெறுமைநோய் களையே”

-என்று ஓர் அகவற்பாடி, தன் உடைவாளையும் அப்புலவர் கையிலெடுத்துக் கொடுக்கவில்லையா? ஒரு வணிகனுக்காகப் பழையனூரில் வேளாளர் எழுபது பெயர் தங்களுயிரைக் கொடுத்துச் சத்தியத்தை நிலைநிறுத்தவில்லையா? இந்தப் பிரதேசத்திலேயே கொஞ்சகாலத்திற்குமுன் ஓர் ஊரில் நிறையேரியில் அலையடிக்க, அதன் கரையில் கொஞ்சம் மண் கரைந்தோடினதை அருகிலிருந்த ஓருழவன் கண்டு ‘இனி இரண்டொரு நிமிஷஞ் சும்மாவிருந்தால் கரையுடைந்துபோம்,’ என்றும், ‘இந்த இடத்தை மண்ணை வெட்டிப் போட்டு அடைத்துப் பலப்படுத்துவோமென்றால் அவ்வளவு அவகாசத்திற்கு இடமில்லை, ஆதலால், முதலுக்கே மோசம் வரும்,’ என்று நினைத்துப் பரிதபித்துத் தன்னுடன் உழவுத்தொழில் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, ‘நீ இந்தத் தர்ம சங்கடமான தருணத்தில் முன்பின் யோசனை பண்ணாமல் என்னை வெட்டியெடுத்து அந்த உடைவாயிற் போட்டு அடை,’ என்று சொல்ல, அவன் அப்படியே மண்வெட்டியினால் அவனை இரு துண்டாக வெட்டிப் போட்டு அடைக்கவில்லையா? உதார புருஷனுக்குப் பொருளும் சுத்தவீரனுக்குப் பிராணனும் திரணமாத்திரந்தானே? இஃது ஓரதிசயமா! தலைகொடுக்கிறதென்பது நம்முடைய குலத்தாருக்கு விஷயமேயன்று; நம் முன்னோர்கள் உயிரை விடுவதற்கு அஞ்சாத அதிசூரர்களாயிருந்தார்கள் என்பதையும் நீங்கள் கேள்விப்படவில்லையா? புலியானது பூனையாய்விட்டது போல, இப்படி அதைரியப்பட்டுப் பின்வாங்குவீர்களாகில், உங்களுக்குப் பாடல்வேண்டும் என்னும் இச்சை ஏன் உண்டாயிருக்கின்றது? அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள்,’ என, அவர்கள், ‘நம்முடைய முன்னோர்கள் அதிசூரர்களாயிருந்தார்கள் என்றீரே! எப்படி?’ என, ஒட்டக்கூத்தர் சொல்லுகிறார்:

கேளுங்கள் சுற்றத்தார்களே...

[தொகு]

‘கேளுங்கள் சுற்றத்தார்களே! பூர்வம் மிக்க கல்வியும், தக்க செல்வமும், ஜீவகாருணியமும், அழகும், ஆண்மையும், சற்சன சவகாசமும், நீதி கோடாமையும், பொறுமையுமுடையவனாய் அரசாண்டிருந்த நீதிநெறிச் சோழன் காலத்தில், ஒருவிதத்திலும் குறையாத வல்லமையுடையான் என்னும் காரணத்தால், ‘வல்லான்’ என்று பெயர்பெற்ற ஒரு வீரனிருந்தான். அவனோ, மற்றவர்களைப்போல நாடுகள் ஊர்களில் வசிக்கின்றவனல்லன். கம்பம் என்னும் கிராமத்தில் ஏரியைப் பார்க்கிலும் மிகவும் பெரிதாய் எக்காலத்திலும் வற்றாத சமுத்திரம்போல அதிக ஆழமாகிய ஓரேரி நடுவில் அடிமுதல் நுனிவரையில் ஒரே அளவாகத் திரண்டு ஜலத்திற்குமேல் நூறடியுயரம் நீண்டு ஆளேறக்கூடாமல் வழுவழுப்பாயிருக்கின்ற பிரமாண்டமான இருப்புஸ்தம்பங்களை நாட்டி, அந்த ஸ்தம்பங்களின்மேல் இருப்புத்தூலங் கிடத்தி, அதன்மேல் இருப்புலக்கைகள் நிரைத்து, அவைகளின்மேல் இருப்புத்தகடு பரப்பி, அத்தகடுகளை இருப்பாணிகளால் தைத்து, அவ்விடத்தில் மகாமேருவும் இணையன்று என்று எண்ணும்படி கற்பாந்தகாலம் அழியாத அதியுன்னதமாகிய மூன்றடுக்கு உப்பரிகை சமைத்து, உப்பரிகையைச் சுற்றிப் பலவகையான காய்கனிகள் தேமலர்களைத் தருகின்ற செடி கொடி மரங்கள் நெருங்கியதாய், மயில்கள் குயில்கள் கிளிகள் பூவைகள் முதலிய பலவகைப் பறவைகளும் ஆடிப்பாடிக் கூவிக் கொஞ்சி விளையாடுவதாய், கோடை காலத்திலும் தண்ணென்று நிழலார்ந்த ஓர் இளஞ்சோலையை உண்டாக்கி, அச்சோலைக்குச் சூத்திரத்தின் வழியாக அவ்வேரி நீர் பாய்ச்சி, அதை அபிவிர்த்தியாம்படி செய்து, தேவர்களுடைய சுவர்க்கம் போல விளங்குகின்ற உசிதமான அந்த ஸ்தானத்தில், அவன் தனக்கு வேண்டிய ஆடுகள் மாடுகள் பசுக்கள் கன்றுகளும் வஸ்திராபணங்களும் வீட்டுத் தட்டு முட்டுகளும் சகலவிதத் தானிய தவசங்களும் மற்றும் அளவிறந்த திரவியங்களும் குபேரனைப்போலக் குறைவில்லாமற் சேகரித்து வைத்துக்கொண்டு, எவ்வளவும் சத்துரு பயமின்றி, ஒருவரும் தனக்குச் சமானமில்லையென்னும்படி நெடுநாள் வாழ்ந்திருந்தான்.

அவனிடத்திற் ‘சரகேசரி, சக்கரகேசரி என்ற இரண்டு புரவிகளும், ஒரு வஜ்ரவாளும், வஜ்ரகதையும், வஜ்ரகவசமும் இருந்தன.

[★ ‘சரகேசரி’ என்பது, கேசரமார்க்கத்தில் அம்புவிட்டாற் போல வேகமாய்ச் செல்வது. ‘சக்கரகேசரி’ என்பது, அம்மார்க்கத்தில் சக்கரம் போலச் சுழன்று செல்வது. ‘வஜ்ரவாள்’ இரும்பு முதலிய லோகங்களையெல்லாம் துணித்தெறிவது. ‘வஜ்ரகதை’ அதாவது தண்டம். கோட்டைகளின் கற்கதவு முதலானவைகளையும் உடைத்தெறிவது; ‘வஜ்ரகவசம்’ அம்பு குண்டு முதலியவைகள் பட்டுருவாமல் அவைகள் பொடிப்பொடியாய்ப் போக உடலைக்காப்பது.]

அவன் நாள்தோறும் இராக்காலத்தில் நல்ல நடுநேரத்தில் அந்தக் கவசத்தை உடலில் தரித்து, வஜ்ரவாளையும் கையிலேந்திச் சரகேசரி சக்கரகேசரிகளில் ஒன்றன் மேலேறி, அதிவேகமாக அதை ஆகாசமார்க்கத்திலேயே நடத்திக்கொண்டு போய், அரசர்களுடைய கோட்டை கொத்தளங்களையெல்லாம் அனாயாசமாகத் தாண்டிச்சென்று வாயில்களில் இட்டிருக்கும் கற்கதவு இருப்புக்கதவுகளை அக்கதையினால் அடித்து உடைத்துத் தூள்தூளாக்கி உட்புகுந்து, எதிர்த்தவர்களை வஜ்ரவாளுக்கு இரைகொடுத்து, அவர்கள் பொருள்களையெல்லாம் கொள்ளையிட்டுச் சூறையாடி ஸ்திரீகளையும் சிறைபிடித்துக் கொண்டு போவான். அவருடைய உபத்திரவம் எப்படிப்பட்டவர்களுக்கும் எங்கும் தலைவைத்துப் படுக்கக் கூடாது. இவ்வாறு வெகுநாளாய் நடந்து வருகையில், மேற்சொல்லிய சோழாஜன், ‘இந்த யமராக்ஷசனைப் பிடித்துச் சிறைசெய்யலாமென்று பார்த்தால் அகப்படுகின்றவனாயில்லையே! இவனுடன் ஆர் போராட வல்லவர்கள்? அம்புகள் குண்டுகள் முதலானவைகளைப் பிரயோகித்தாலும் பயன்படவில்லை! இவனையும் ஜயிக்கக்கூடுமா? இந்தப் பாதகன் ஏழரையாண்டுச் சனிபோலத் தோன்றினானே! இவனை அடக்கத்தக்க உபாயந்தான் என்னை? உங்களில் எவர்களாயினும் வல்லானை வெல்ல வல்லவர்களிருந்தால் புறப்படுங்கள் பார்ப்போம்!’ என்று தன் சபையிலுள்ள சேனாவீரர்களை நோக்கி அதிக துக்கத்துடன் சொன்னான்.

அப்பொழுது அங்கிருந்த அதிரதர் முதலாகிய ரதவீரர், யானைவீரர், குதிரை வீரர், வாள் வீரர், வேல் வீரர்களும் குடர் குழம்பிச் சிங்க சொப்பனங்கண்ட யானைபோலக் கைகால் விதிர்விதிர்க்க, ‘அடா, அப்பா! வல்லானை வெல்ல வல்லவர்களும் உண்டா? கடல் முழுதுங் கவிழ்ந்து குடிக்கலாமா? வடவாக்கினியை வாய்நீரால் அவிக்கலாமா? மலையை மயிர் முனையால் தொளைக்கலாமா? அவன் பெயரைச்சொன்னாலும், அழுத பிள்ளையும் வாய் மூடுமே! அவன் வானத்தையும் வில்லாக வளைப்பான்; மணலையுங் கயிறாகத் திரிப்பான். ஆதலால், அவனை வெல்வது அசாத்தியம்! அசாத்தியம்! எங்களாலே முடியாது!’ என்று சொல்லி,

‘ஆற்காட்டிலே சண்டையானால் சந்த மாமா,
அடுப்பங்கரையில் ஒளிந்திருப்போம் சந்த மாமா;
வேலூரிலே சண்டையானால் சந்த மாமா,
வேலிப்புறத்தில் ஒளிந்திருப்போம் சந்த மாமா’

என்று அஞ்சி ஓடுகின்ற நபுஞ்சகர்களைப்போலப் பின்னிட்டார்கள்.

அத்தருணத்தில் நம்மவர்களாகிய செங்குந்தர்களிற் சூரன் முதலிய பதினெட்டுப்பெயர்கள், தங்கள் தலைவனாகிய அதிசூரன் என்பவனுடனே உக்கிரமாய் எழுந்து, காயமென்ன கற்கண்டா? உயிரென்ன தித்திப்பா?ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு,’ என்று அட்டகாசஞ் செய்து அந்த ராஜசபை கிடுகிடென்று அதிரச் சிங்கம்போலக் கர்ச்சித்து நின்று அரசனை நோக்கி, ‘மகா பிரபு நீரெவ்வளவும் அஞ்சவேண்டா; உம்முடைய தயையைத் தலைமேல் தாங்கிக்கொண்டு நாங்கள்போய் ஒருவாரத்திற்குள்ளே அவசியம் அந்தப் பொல்லானாகிய வல்லான் தலையைக் கொண்டு வருகிறோம். கொண்டுவராமற் போனால், தாய் தந்தையர்களைக் கொலைசெய்தாவர்களும், சினேகத்துரோகஞ் செய்தவர்களும், குருமொழி கடந்தவர்களும், நம்பி அடுத்தவர்களைக் கைவிட்டவர்களும், உண்ணுஞ்சோற்றில் நஞ்சுகலந்தவர்களும், பெரியோரைத் தூஷித்தவர்களும், மனைவியைப் பிறர்பால் விடுத்துஞ் சீவனஞ்செய்பவர்களும் போகுங்கதியிற் போகக் கடவோம்!’ என்று பிரதிக்கினை செய்தார்கள். நீதிநெறிச்சோழன் சந்தோஷப்பட்டு, ‘அப்படியே அவனை வென்று வரக்கடவீர்கள்,’ என்று அவர்களுக்கு மரியாதைசெய்து உத்தரவு கொடுத்தனுப்ப, அப்பதினெட்டுப் பெயர்களும் புறப்பட்டுப்போய், இராத்திரியில் வல்லானுக்கு வாசஸ்தலமாகிய ஏரியருகிற் சேர்ந்து, ‘அம்மம்ம! இதைப் பார்க்கவும் பயமாயிருக்கிறதே! அந்தச் சண்டாளன் மற்றவர்களைப் போல நாடுகள் ஊர்களில் வாசஞ்செய்யலாகாதா? அவ்விடங்களிலிருந்தால் தனக்கு அபாயம் வருமென்று நினைத்தாலும், காடுகள் மலைகள் குகைகளிலாவத மறைவாய் வசிக்கலாமே! அங்குஞ் சேராமற் பாதளத்தை ஊடுருவியிருக்கின்ற இந்த ஏரியைத் தேடி வந்து, இதன் மத்தியில் அழிவில்லாத வீடு கட்டிக் கொண்டிருக்கிறானே! இவ்வேரியோ, இலேசானதல்லவே! கொஞ்சம் குறைய நூறு புருஷபாகம் ஆழ்ந்திருக்கின்றதே! இதில் எப்படி இறங்குவது? நீந்திச் செல்வோம் என்றாலும், கண்ணுக்கெட்டாத வெகுதூரம் விசாலமுடையதாகையாற் காலோய்ந்து போமே!’ என்றுநினைத்து, ‘இவ்விடத்திற் படவாவது தெப்பமாவது கிடைக்குமா?’ என்று தேடியும் கிடையாமையாலும், தெப்பங்கட்டுகிறதற்குச் சமீபத்தில் கம்புகழிகளைக் காணாமையாலும் ‘வேறென்ன செய்கிறது?’ என்று திகைத்தார்கள்.

பிறகு ஆனதாகட்டும்! ‘எப்படியும் முன்வைத்த காலைப் பின்வைக்கலாகாது,’ என்று தங்களுக்குள் எட்டுப் பெயர்களை வெட்டித் தெப்பமாகச் சேர்த்து அவர்கள் தோள்களைத் துணித்துத் தெப்பமரத்தின் குறுக்குக் கழிகளாக இணைத்து, குடல்களைப் பிடுங்கிக் கயிறாகத் திரித்து இறுக்கித் தெப்பங் கட்டி, ஏரி நீரிற்போட்டு மிதக்கப்பண்ணி, அப்பிணத் தெப்பத்தின்மேற் பத்துப் பெயரேறி நடத்திக் கொண்டுபோய், இருப்பு ஸ்தம்பத்தைக் கிட்டி, அதன்மேல் தொத்தியேற, அஃது ஏறக்கூடாமல் வழுவழுக்கின்றது கண்டு, அந்த வழுவழுப்பை மாற்றுகிறதற்கு ஏழுபெயர்களை வெட்டி,அவர்கள் இரத்தத்தை வாரிக் கம்பத்தின்மேல் இறைத்தார்கள். இரத்தம் களிப்புடையதாகையால், அது கம்பத்தில் ஒட்டிக்கொண்டு அவ்வழுவழுப்பைச் சிறிது மாற்றினவளவில், மூன்று பெயர்கள் சரக்கு மரமேறுகிறவர்களைப் போலத் தங்கள் உத்தரீயத்தைக் கம்பத்தில் அடிக்கடி சுற்றி அதன்மேல் அடிவைத்து இலகுவாய் ஏறிப்போய்ச் சூரன், அதிசூரன் என்கிற இரண்டு பெயர்கள் வல்லான் படுக்கையறையிற் புகுந்தார்கள். ஒருவன் குதிரை இலாயத்திற் போனான். அவனைக் குதிரைகளிலொன்று கண்டு மருண்டு, முன்னங்கால் பின்னங்கால்களிற் கட்டப்பட்ட அகாடிபிச்சாடிக்கயிறு தொடுத்திருந்த முளைகளைப் பிடுங்கிக் கொண்டு, இடி இடித்தது போல உரக்கக் கனைத்து, இங்குமங்கும் ஓடத் தலைப்பட்டது. அந்த அரவத்தால், அங்கே உடம்பு தெரியாமற் பிணம் போலக் கிடந்து தூங்கின குதிரைக்காரன் மருண்டு விழித்தெழுந்து, பரபரப்பாக ஓடிப்போய்க் குதிரையைப் பிடித்துச் சமாளிக்கப் பண்ணித் திருப்பிக்கொண்டு வருவதறிந்து, இலாயத்திலிருந்த நம்மவன், தன்னைக் குதிரைக்காரன் கண்டாற் சந்தேகப்படுவானென்று அக்குதிரைக்குப் படுக்கை போட்டிருந்த புல்லுக் குப்பையின் கீழேபோய்ப் பதுங்கியிருந்தான். அவனிருப்பதை அறியாமற் குதிரைக்காரன் குதிரையைக் கொண்டு வந்து அவ்விடத்தில் நிறுத்தித் தூக்கமயக்கத்தில் முளையை அவன் முதுகின்மேல் வைத்து ஆழ அடித்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டான். முளை நம்மவன் முதுகில் தைத்து மார்பில் உருவினதனால் அவன் இறந்து போனான்.

முன் படுக்கையறையிற் போன இருவரும் அங்கே அனேக சூரியர் உதயமானாற்போலச் சுடர்விட்டெரிகிற கிளைவிளக்குத் தேர்விளக்குக் காளவிளக்குகளையும், வரிசை வரிசையாகச் சுவர்முழுவதும் நிறைந்திருக்கின்ற நிலைக்கண்ணாடிகளையும், விதவிதமான சித்திரப் படங்களையும், வீணை தம்புரு மிருதங்கம் முதலாகிய பற்பல வாத்தியக் கருவிகளையும், இந்திர விமானம்போல நவரத்தினமயமாய் இலங்குகின்ற உன்னதமாகிய சப்பிர மஞ்சத்தையும், அதன் மேற்பக்கத்தில் விசாலமாயிருக்கின்ற அழகான சரிகை விதானத்தையும் அதைச்சுற்றிக் கட்டிய பல வர்ண ஜாலர்களையும், முத்துக் குச்சுகளையும், நாற்புறத்திலும் அடிவரையில் தொங்கவிடப்பட்டு உட்புறத்திலுள்ள விசித்திரங்களையெல்லாம் விசதமாகத் தெளிந்த கண்ணடி போலக் காட்டுகின்ற மெல்லிதான ரவை சல்லாத்திரையையும், கட்டிலின்மேல் மயிர் அன்னத்தூவி பஞ்சு முதலியவற்றால் தைத்து இட்டிருக்கும் ஐந்தடுக்கு மெத்தையையும், அதன்மேற்போட்டடிருக்கும் விலையுயர்ந்த முகமல் திண்டு தலையணைகளையும், கட்டிலைச்சுற்றி அணியணியாய் நிறுத்தியிருக்கும் நாநாவிதச் சூத்திரப் பிரதிமைகளையும், அவைகளிற்சில சாமரை போடுவதையும், சில ஆலவட்டம் அசைப்பதையும், சில எக்காளமூதுவதையும், சில பேரிகே முழக்குவதையும், சில படைவீரர் போல நிரைநிரையாய் வருவதையும், சில அவைகளுக்கெல்லாம் முன்னே தளகர்த்தர் போலக் குதிரையேறி வருவதையும், சில துப்பாக்கி முதலிய ஆயுதங்களைக் கொண்டு யுத்த பாவனை காண்பிப்பதையும், சில மத்தளங்கொட்டுவதையும், சில தாளம் போடுவதையும், சில வீணை வாசிப்பதையும், சில நடனஞ்செய்வதையும், அருகில் தங்கத் தாம்பாளங்களில் அடுக்கடுக்காய் வைத்திருக்கும் போளி, சுகியம், லட்டு முதலாகிய பலகாரங்களையும், பொற்செம்புகளில் பசுவின் பாலைக் கறந்து கற்கண்டு போட்டுக் காய்ச்சி நிரப்பி வைத்திருப்பதையும், மரகத் தட்டுகளிற் சீவிய வாசனைப் பாக்குடனே விதவிதமாக மடித்து வைத்த வெற்றிலைச் சுருள்களையும், பவளவள்ளத்தில் வைத்திருக்கும் கர்ப்பூரம், சாதக்காய், ஏலம், கிராம்புகளையும், வஜ்ரக் கரண்டகங்களில் நிறையத் திணித்து வைத்திருக்கும் முத்துச் சுண்ணாம்பையும், மாணிக்கக் கிண்ணத்தில் அத்தர் புனுகு ஜவ்வாது கலந்து குழைத்து வார்த்து வைத்திருக்கும் கலவைச்சந்தனக் குழம்பையும், நவரத்தினமயமாகிய கழுத்து நீண்ட செம்பில் நிரப்பியிருக்கும் விலையுயர்ந்த பன்னீரையும், வாயகன்ற தங்கத் தட்டுகளிற் சித்திர விசித்திரமாகத் தொடுத்து வைத்திருக்கும் பரிமளப் பூச்செண்டுகளையும், தலைமாட்டில் அந்தக் கட்டிலின் கிட்ட வைத்திருக்கும் கோமேதகத் தம்பலப் படிக்கத்தையும், அந்த மஞ்சத்தின்மேற் காஷ்மீரப்பொற்சிகைப் பூஞ்சால்வையை நெடுக விரித்துச் சொகுசாகப் போர்த்துக்கொண்டு போக தேவேந்தரனைப் போல வல்லான் படுத்திருக்கிறதையும், அவன் பக்கத்தில் இந்திராணி தேவி போல அதிரூப சௌந்தரியமுடைய ஒரு பெண் திவ்வியமாக வஸ்திராபரணங்களால் தன்னை அலங்கரித்துச் சுகந்த சந்தனாதி பரிமள திரவியங்களைத் தரித்து, வெகுதூரம் கமகமவென்று மணக்கின்ற மலர்மாலை சூடி, ஒயிலாகச் சயனித்திருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

மற்றும் அங்குள்ள...

[தொகு]

மற்றும் அங்குள்ள அதிசயங்களையெல்லாம் நோக்கிக் கண்களித்து, ‘இந்தப் படுக்கையறை சமைத்திருக்கிற விசித்திரமும், இதைச் சோடித்திருக்கிற சோடிப்பும் எங்கேயுண்டு!’ என்று தங்களுக்குள்ளே நினைத்து, வல்லானுக்குச் சமீபத்திற்போய், அவனை, ‘அடா முண்டை மகனே, உனக்கு இவ்வளவு பாக்கியமும் எங்கிருந்து கிடைத்தது? நீ எத்தனையோ பெயர்களை நாள்தோறும் கண் கலக்கம் கொள்ளும்படி அடித்துப் பறித்து ஆரவாரம் கண்டவல்லவா? நீ இப்போது ஒன்றுமறியாதவன் போல அமைதியாகக் கும்பகருணனைப் பார்க்கிலும் பெருந்தூக்கம் தூங்கிறையே! உனக்கு வெட்கமில்லையா? நீ கெட்ட கேட்டுக்கு இத்தனை போகமா?’ என்று வைது, இனித் தாமதிக்கலாகாது! தாமதித்தாற் பொழுது விடிந்துபோம்; அப்புறம் இவனை ஆராலும் வெல்லமுடியாது!’ என்று அதிசூரன், வல்லான் மார்பின்மேற் பிரமராக்ஷசன்போலத் தொப்பெனக் குதித்தேறி உட்கார்ந்து, இடக்கையினால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்து, வலக்கையிலிருந்த வீரவாளைக் கழுத்திற் பூட்டி அறுக்கப் போனான்.

அச்சமயத்தில் ஒருவன் தன் கழுத்தை அறுக்கிறதாக வல்லான் கனாக்கண்டு பயந்து, திடுக்கென விழித்துக் கொண்டு, தன் மார்பின்மேல் எமனைப்போல ஏறி மண்டிபோட்டிருந்து கழுத்தை அறுக்க எத்தனித்தவனைக் கண்டு, ‘நாமிப்பொழுது கண்ட சொப்பனமும், இதற்குமுன் எட்டு நாளாய்க் கண்டு வந்த துர்நிமித்தங்களும் தப்பாமற் பலித்தன; பாதாள பரியந்தம் ஆழ்ந்த கடல் நடுவில் திரிலோக பயங்கரனாகிய இராவணேசுவரன் ஆச்சந்திரகாலம் அழிவில்லாத கோட்டை கட்டிக்கொண்டு நிர்ப்பயமாய் வாழ்ந்தது போல, இந்த அகாதமான ஏரி நடுவில் அபேத்தியமான வீடு கட்டிக்கொண்டு, சத்துருக்களால் பிராண பயமில்லாதிருந்த நம்மிடத்தில் வருவதற்குக் கொஞ்சமாவது அச்சமில்லாமல், ஓர் அடியெடுத்து வைக்கத்தான் யாராலே கூடும்? இவ்வளவு தைரியத்துடனே எல்லாத் தடைகளையும் பேதித்துக் கொண்டு வந்த படியினாலே இவன் அசகாய சூரனாயிருக்க வேண்டும்; ஆதலால், இனி நாம் நமது உயிரின்மேல் ஆசைவைக்க வேண்டுவதேயில்லை; ஏதோ நமக்கு இதுவரையில் ஜயகாலமிருந்ததனால், வெகுகாலம் அபாயமின்றி வாழ்ந்தோம்; அஃது இன்றையோடே தொலைந்து போய்விட்டதாக வேண்டும்; ஓடுகிற ஆறு எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்குமா? அஃதேது!’ என்று தனக்குள்ளே நிச்சயித்துக் கழுத்தறுக்கத்துணிந்த அதிசூரனைத் தன் கண்களை மலர விழித்து நோக்கி, ‘அப்பா, என் கழுத்தை அறுக்காதே! சற்றே பொறு பொறு! ஒரு வார்த்தை கேள்; என்னையேன் வீணாக வதைசெய்கிறாய்? நானிது வரையில் ஒருவரும் எனக்கெதிரில்லையென்று கர்வித்திருந்தேன்; அந்தக் கர்வம் உன்னாலே ஒழிந்து போய்விட்டது! இவ்வளவுதூரம் வந்த மட்டும் இனி ஆலோசிக்க வெண்டுவதென்ன? ‘கட்டிலின் மேலேறியும் முறை பார்க்கிறதுண்டோ?’ இன்று முதல் நான் உனக்குக் கீழமைந்து உன் சொற்படி கேட்கிறேன்; என் சொத்துகளெல்லாம் உன்னுடையவைகளே; சந்தோஷமாகக் கைப்பற்றிக்கொள்; உன்னைத் தடுப்பவர் யாருமில்லை; என்னை மாத்திரம் கொல்லாமல் விட்டுவிடு; நான் இந்தத் தீவில் நில்லாமலும், ஒருவனுக்குத் தீங்கு செய்யாமலும், கண்காணாத தேசத்திற்குப்போய், உன் பெயரைச்சொல்லிப் பிழைத்துப் போகிறேன்!’ என்றான்.

நம்மவன், ‘நீ சொல்லுகிறது சரிதான்; ஆயினும் சோழனிடத்தில் நான் உன் தலையைக் கொண்டு வருகிறேன்என்று சபதஞ்செய்து வந்தேனே! அதற்கென்ன செய்கிறது?’ என்ன, வல்லான், ‘அப்படியானால், என் நற்றலைக்கு மாறாகப் பொய்த்தலையையும், என் வஜ்ரவாளையும், வஜ்ரகதையையும், வஜ்ர கவசத்தையும், சரகேசரி சக்கரகேசரி என்னும் இரண்டு புரவிகளையுங் கொடுக்கிறேன்; எனக்கு உண்டாயிருக்கிற உபபலங்களெல்லாம் பெரும்பாலும் இவைகளே; நீ இவைகளைக் கொண்டுபோய்க்காண்பிக்கலாம். இனி நான் ஆரையும் அதிக்கிரமிக்கிறதேயில்லை!’ என்று சொல்லித் தன் வாளைத்தொட்டுப் பிரமாணிக்கஞ் செய்து கொடுத்து, உடம்படிக்கை பண்ணினான். அதுகேட்டு அவனைக்கொல்லத் துணிந்த அதிசூரன் மனமிரங்கி, ‘நல்லது! உன்னைக்கொன்று நானடையும் சாம்பிராச்சியம் ஒன்றுமில்லை,’ என்று சொல்லி, அவன் கொடுத்த வஜ்ர வாள் முதலானவைகளைத் தன் வசம் பண்ணிக்கொண்டு, ‘இவனைச்சும்மா எதேச்சையாய் இருக்கவிட்டால், ஒருவேளை, ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பதாக வந்து சம்பவிக்கவுங்கூடும்; எப்படி நம்புகிறது!’ என்று சந்தேகித்து, அவன் கைக்கும் காலுக்கும் விலங்கு பூட்டிக் காவலில் வைத்து, அவனாற் சிறை செய்யப்பட்டவர்களையெல்லாம் சிறை நீக்கி, அவரவர்களுடைய சுதேசம் போய்ச்சேர உத்தரவும் வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு, அதிசூரன் சூரனை நோக்கி, ‘நாம் இப்பொழுது வல்லான் பொருட்டல்லவோ இவ்விடத்திற்கு வரும்படியிருந்தது? வந்தவிடத்திற் பிரதானமாகக் குறித்த காரியத்தைத் தெய்வ கடாட்சத்தால் முடித்துக்கொண்டோம்; இனி வரவேண்டிய ஆவசியகம் ஒன்றுமில்லை. ஆதலால், இங்குள்ள அற்புதங்களையெல்லாம் எந்தக் காலத்தில் வந்து பார்க்கிறது? எப்படியும் ஒருமுறை வந்த நாம் முழுவதும் செவ்வையாய்ச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாமே!’ என்ன, சூரன், ‘என் கருத்தும் அதுவே!’ என்றான்.

அப்பொழுது வல்லானுக்குக் குற்றேவல் செய்யும் பரிசாரகரில் இருவரை அழைத்துப் ‘பந்தம் கொளுத்தி வாருங்கள்’ என்ன, அவர்கள் பந்தத்தைக் கொளுத்திப் பிடித்து முன்னே வழிகாட்டிக்கொண்டு போக, அவர்கள் பின்னே இவர்களிருவரும் தொடர்ந்துபோய் அந்த மெத்தையின் மூன்றடுக்குகளிலும் ஏறிப்பார்த்து, அதன் பக்கத்தில் இருகின்ற குதிரைலாயம் மாட்டுத்தொழுவம் மடைப்பள்ளி முதலானவைகளையும் புகுந்து நோக்கி, பின்பு மெத்தையைச் சுற்றியிருக்கின்ற சோலைக்குட் பிரவேசித்து, வல்லான் உலாவுகிறதற்கு ஒழுங்காகவும், விசாலமாகவும் சமைக்கப்பட்ட சாலைகளையும், அச்சாலைகளின் இருபக்கங்களிலும் வரிசை வரிசையாய் நாட்டியிருக்கின்ற தெங்கு, கமுகு, வாழைகளையும், பல சாதிப் பூஞ்செடிகளையும், அவைகளைச் சுற்றிப் பொன் வெள்ளி இரத்தினங்களாற் கட்டப்பட்ட சிறு பாத்திகளையும், அப்பாத்திகளுக்கு நீலரத்தினக் கால்வாய்களின் வழியே வந்து பெருகும்படி ஏரிநீர் பாய்ச்சும் சூத்திரத்தையும், அங்கங்கே வட்டமாகவும் சதுரமாகவும் சமைக்கப்பட்டிருக்கின்ற சொர்ண மேடைகளையும், தெய்வரம்பைக்குச் சமானமாகிய ஸ்திரீகளுடனே வல்லான் ஜலக்கிரீடை செய்வதற்கு அதிக விசாலமாக அடியிற் பளிங்குக் கற்பதித்துச் சுற்றிலும் மரகதக்கரையோட்டி, வஜ்ரப்படி கட்டி, முத்துப்போலத் தெளிவும், பால்போல மதுரமுமாகிய குளிர்ந்த நீர் நிறைந்திருக்கின்ற தாமரைப் பொய்கையையும், சோலையின் கீழ்ப்புறத்தில் தங்கச் சுவரெழுப்பி, வெள்ளித்தூண் நிறுத்தி, நீலப்பாவுக்கல் ஏற்றிப் பவளக்கொடுங்கை அமைத்துச் சுவரின் ஒரு பக்கத்திற் பாரதயுத்தமும், மற்றொரு பக்கத்தில் இராம இராவண யுத்தமும், பின்னொரு பக்கத்தில் சிவனது அறுபத்து நான்கு திருவிளையாடலும், வேறொரு பக்கத்திற் கிருஷ்ண லீலையும் சிறப்பாகத் தீட்டியிருக்கின்ற அற்புதமான மண்டபத்தையும், அதன் மத்தியில் வல்லான் விநோதமாய் வீற்றிருக்கும்படி நவரத்தின மயமாக உண்டாக்கப்பட்ட சிங்காதனத்தையும், அதனருகிலிருக்கும் பதுமராகப் பீடத்தையும் தந்த நாற்காலிகளையும், மற்றுமுள்ள பற்பல அதிசயங்களையும் தனித்தனி நோக்கி, ‘ஆ! ஆ! வல்லானாகிய பட்டிமகன் தான் வெகுகாலம் வாழ்கிறவனாக நினைத்துக்கொண்டு எத்தனையோ புதுமைகளையெல்லாஞ் செய்வித்தானே! இஃது ஆச்சரியம்! ஆச்சரியம்!’ என வியந்து, அப்பால் நடந்து போனார்கள்.

போகும்பொழுது, நிரைநிரையாக மரக்கிளைகளில் பனங்காய்போலத் தூக்கப்பட்டிருக்கிற தலைகளைப் பார்த்துப் பிரமித்து, ‘இஃதென்னை அகோரம்?’ என்று பந்தம் பிடிப்பவர்களைக் கேட்க, அவர்கள், ‘இந்தக் கொடுமையை என்னவென்று வாய்விட்டுச் சொல்லுகிறது! இவை மகாபாதகனாகிய வல்லானாலே கொல்லப்பட்ட அரசர்களுடைய தலைகள்; அவர்களை வெட்டொன்றும் துண்டு இரண்டுமாகத் துணித்து, முண்டங்களை இருந்த இடங்களிலேயே கிடந்தழிய விட்டுத் தலைகளை மாத்திரங் கொண்டுவந்து, நாள்தோறும் இப்படித் தூக்கி வைக்கிறது அவனுடைய வழக்கம். பூர்வம் இராவணனால் தேவர்கள் முனிவர்களுக்கு உண்டான உபத்திரவம் ஸ்ரீராமபிரானால் நிவாரணமானதுபோல, இக்காலத்தில் இவனால் ராஜாக்களுக்குண்டான சங்கடம் புண்ணியவான்களாகிய உங்களால் நிவாரணமாயிற்று! இதுவரையில் இந்த நீசனிடத்தில் நித்தியகண்டம் பூரணாயுசாகவே சேவகம் பண்ணிக்கொண்டு வந்த எங்களுக்கும், நல்ல காலம் வந்தது!’ என்றார்கள். அச்சொற்களையெல்லாம் அதிசூரனும் சூரனும் கேட்டுத் தலையசைத்து, மூக்கின்மேல் விரலை வைத்துக் ‘கொடுமை! கொடுமை!’ என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து திரும்பி, இலாயத்திற்கு வந்து, அதிசூரன் சக்கரகேசரிமேற் சூரனையேறச்சொல்லித் தான் சரகேசரிமேல் ஏறப்போனவிடத்தில் முளையுருவி இறந்தவனைக் கண்டு, ‘நாம் முன்னமே இவனைக் காணாமல் தேடினோமே! ஹரிஹரி! இவன் கதி இப்படியா ஆயிற்று!’ என்றெண்ணி, உடனே அப்புரவிமேலேறி, இருவரும் அங்கிருந்து பிரயாணப்பட்டுப் பொழுதுவிடியும் பொழுது சோழனுடைய ஆசார வாசலின் புறத்தில் வந்து குதிரையை விட்டிறங்கி, வல்லானை வென்ற அதிசூரன் வஜ்ரகவசத்தை மார்பிலே தரித்து, வஜ்ரவாளை வலக்கையிலேந்தி, வல்லான் பொய்த்தலையை இடக்கையிலே தாங்கி, சூரனென்பவன் வஜ்ர கதையைக் கையிற் பிடித்தவண்ணமாய்த் தான் அருகேவர, அதியுக்கிரமாகிய வீராவேசத்துடனே ஆர்ப்பரித்து, எட்டுத் திசையும் செவிடுபட ஜயசங்கம் முழக்கிக்கொண்டு, ராஜசபையில் வந்து பிரவேசித்தான்.

அவனுடைய ஒரு கையிலிருக்கிற வீரவாள் ஜோதி மின்னல் மின்னுவது போலக் கண்கூசும்படி, தகதகவென்று ஒளிவீச, மற்றொரு கையிலிருக்கிற வல்லான் பொய்த்தலையானது சாக்ஷாத் அவன் நற்றலை போலவே கண்கள் சுழல, கண்ணீர் பெருக, புருவம் நெரிய, மீசையும் உதடும்துடிக்க, முடிந்த சிகையானது இரு செவிப்புறத்திலுமிருக்கின்ற அழகான காக பக்ஷத்துடனே அவிழ்ந்து குலைந்து அலைய, நெற்றியிலணிந்த திருநீறும், திலகமும் வீரபட்டமும் பிரகாசிக்க, கழுத்து அறுத்த பாவனையாகவே அதினின்று சரசரவென்று பச்சை ரத்தம் ஒழுக, கோரமாகக் காணும்படி அவன் திடுதிடென்று வருவது கண்டு, அச்சபையிலுள்ள அனைவரும் கிடுகிடென்று நடுங்கிப் பிரமை கொண்டு, சித்திரப் பிரதிமை போல நிலைபெயராமல் இருந்தவிடத்திலேயே இருந்தார்கள். சோழராஜனும், அஞ்சி நெஞ்சு தளர்ந்து அதிசயித்து, அவனைப் பார்த்துப் போனவிடத்தில் நடந்த வர்த்தமானமென்ன?’ என்று கிரமமாகக் கேளாமல், அவசரப்பட்டு, ‘மகாபிரபல வீரனாகிய வல்லான் தலையை நீ எப்படி வெட்டினாய்?’ என்று கேட்டான். அவன் அதற்குப் பின்னையொன்றும் மறுமொழி சொல்லாமல், ‘இதோ பார், இப்படித்தான்!’ என்று கையிலிருந்த கூரிய வாளைக்கொண்டு தன் தலையைத் தானே கறுக்கென்று வெட்டினான்; ஒருவெட்டிலேயே தலையொரு பக்கமும், உடலொரு பக்கமுமாய் விழுந்தன. அதைக் கண்டவருட் சிலர் பதைபதைத்து, ‘அம்மம்ம! இஃதென்னை தீரம்!, என்றும், சிலர், ‘இஃதென்னை கோரம்!’ என்றும், சிலர், ‘இவனுடைய வீரமே வீரம்!’ என்றும், சிலர், ‘படைக்குமொருவன்’ என்பதை இவனிடத்திலேதான் கண்டோம்!’ என்றும், சிலர் ‘இந்தப் புண்ணிய புருஷன் வல்லான் கொட்டத்தை அடக்கியது எவ்வளவு உபகாரம்!’ என்றும், சிலர், ‘இவனின்னம் உயிரோடிருந்தால் வெகுநாளைக்குச் சத்துரு பயமில்லாமலிருக்கலாமே!’ என்றும், சிலர், ‘வல்லான்மேற் போருக்குப் போனவர் இவனுடன் பதினெட்டுப் பெயரல்லவோ? இரண்டு பேர் மாத்திரந்தானே மீண்டு வந்தனர்? மற்றைப் பதினாறு பேர் எங்கேயிருக்கிறார்களோ?’ என்றும், சிலர், ‘இருக்கிறதேது! அவர்கள் மாண்டு போனதாகத்தான் காணப்படுகிறது! என்றும், சிலர் ‘இதோ! கையிலே கதை பிடித்திருக்கிறானே! இவனும் இறந்து போவானோ, பிழைப்பானோ!’ என்றும் இவர்கள் வெற்றிபெற்று வந்த சந்தோஷத்தை ஜீவனோடிருந்து அனுபவிக்கிறதற்கில்லாமற் போய்விட்டதே!’ என்றும் பலவிதமாச் சொல்லி பிரலாபித்தார்கள்.

அப்பொழுது காதாயுதபாணியாயிருந்த சூரன் என்பவன் ‘மற்றப் பதினாறு பெயரும் இறந்தது வரவு செலவல்ல; வல்லானை வென்ற அதிசூரன் என்னும் சிங்கமும் மடிந்து போய்விட்டதே! நானிருந்து ஆரை ரக்ஷிக்கப்போகிறேன்? என் தலையைக் கதையால் மோதி உடைத்துக்கொண்டு நானும் மாண்டு போகிறதே நலம்!’ என்று நிச்சயித்துக்கொண்டு, அந்தக் கதையைத் தன் தலைக்கு நேராக உயர ஓங்கினான்; பார்த்தவர் யாவரும், ‘இஃதென்ன கொடுமை!; ஐயையோ! இவனும் வீணாக மாண்டுவிடப் போகிறானே! இவனை வேண்டாவெனத் தடை செய்வார் ஒருவருமில்லையா?’ என்று அழுதனர். அத்தருணத்தில், தரையிலே விழுந்து கிடக்கிற அதிசூரன் தலையான்னஃ சூரனை அதட்டி, ‘அடா சூரா, பதறாதே! பதறாதே! பொறு பொறு! பதறாத காரியம் சிதறாது! நான் சொல்லுகிறதைக் கேள்,’ என்று யாவரும் கேட்கச் சொல்லுகிறது; நீவிருதாவாக இறப்பானேன்? என் சொற்படி செய்தால், நானும் பிழைப்பேன்; ஏரியினிடத்தில் வெட்டுண்டிறந்த பதினாறு பெயரும் பிழைப்பர்; உனக்கும் பிராண நஷ்டமில்லை; எப்படி எனில், அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவருவம் ஒன்றாகிய நவேந்திரபேதமாய் விளங்குகின்ற பரமசிவத்தின் வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் உமாதேவியினது திருவடிச்சிலம்பினின்றும் சிதறிய ஒன்பது மணிகளிற் பிரதிபலித்த அவளது சாயை யாகிய ஒன்பது பெண்களின் புத்திரர்களான வீரதீரன், வீரசூரன், வீரகேசரி, வீராந்தகன், வீரமகேந்திரன், வீரமார்த்தாண்டன், வீரவாகு முதலிய நவவீரர்களுடைய வமிசத்தவரும், நமக்குத் தமயனாரும் நம் குலதெய்வமுமாகிய முருகக் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்; பிரார்த்தித்தால், அவர் அனுக்கிரகிப்பார். நம்மில் மரித்த பதினெழுவரும் பிழைப்பர்,’ என்ன, அவனப்படியே குமாரயந்திரத்தை ஸ்தாபித்து அதிற் குமாரசுவாமியின் மூலமந்திரமாகிய ஷடாக்ஷரத்தைப் பிரணவ பீஜத்துடனே வரைந்து, உருச்செபிக்க, அவரது கடாக்ஷத்தால் அனைவரும் உயிர்பெற்றெழுந்தனர்.

அதுகண்டு நீதிநெறிச் சோழன்...

[தொகு]

அதுகண்டு நீதிநெறிச் சோழன் தனக்குள் பரமசந்துஷ்டி அடைந்து, முன்பு தன் சபையிலிருந்து அவர்கள் வல்லானிடத்திற்குப் போனது முதல் திரும்பி வந்தது வரையில் நிகழ்ந்தவைகளையெல்லாம் ஒளியாமற் சொல்லச் சொல்லிக் கேட்டு, நம்மவர்களை மிகவும் மெச்சி, அவர்களுக்குப் பற்பல விருதுகளுங் கொடுத்துச் சகல வரிசைகளுஞ்செய்து உபசரிக்க, அவர்கள் உலகமெங்கும் புகழத்தக்க கீர்த்திபெற்று வாழ்ந்தார்கள். அத்தன்மையருடைய மரபிலே தோன்றிய நீங்கள், தலை கொடுப்பதற்காக மயங்கலாமா?’ என்று ஒட்டக்கூத்தர் சொல்ல, அவர்களுக்கு அதிக உற்சாகம் பிறந்தது.

அவர்களெல்லாரும் ஒரு மனமாய்ச் சம்மதித்து, ‘இனிக் காலதாமசமில்லாமற் பிரபந்தத்தை ஆரம்பிக்கலாம்; உமது கட்டளைப்படி நாங்கள் நடந்து கொள்வோம்,’ என்றார்கள். இவர், ‘பிரபந்தத்தை ஆரம்பிக்கச் சொல்லுகிறீர்களே! அஃதெப்படி? தகுதியான ஸ்தானத்திலிருந்தல்லவோ ஆரம்பிக்க வேண்டும்!’ என்றார். அவர்கள், ‘ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கால் மண்டபமிருக்கிறதே! அது வெகு ஜனங்கள் தங்கத் தக்க விசாலமுடையதாதலால், தகுதியான ஸ்தானம் அதைவிட வேறில்லை; அந்த இடத்தில் அழகான பொற்பீடங்கொண்டு வந்து போடுகிறோம்; அதன்மேலிருந்து ஆரம்பிக்கலாம்,’ என்றார்கள். ஒட்டக்கூத்தர், ‘நாம் குறித்த ஸ்தானம் அதுவன்று. பின்பு உங்களுக்கே தெரியவரும்,’ என்றார். செங்குந்தர், ‘அப்படியானால் உமது சித்தத்தின்படியே செய்வோம். நாங்கள் தலை கொடுப்பதற்கு எவ்வளவும் தடையில்லை,’ என்று சொல்லிச் சோழநாட்டிற் சோழகுலத்தரசருக்குப் பட்டந் தரிக்கும் உறையூர் முதலிய பிரதான நகரங்கள் ஐந்திலும், அவைகளின் சுற்றுப்புறங்களிலுள்ள மற்றெந்த ஊர்களிலும் இருக்கின்ற தங்கள் ஜாதியார்களுக்கு இந்தச் சமர்க்கெல்லாம் சாரத்தையும், தங்கள் முன்னோர் சரித்திரத்தையும் விவரமாக எழுதிப், ‘பந்து ஜனங்களே, உங்களை நாங்கள் பலாத்காரம் பண்ணவில்லை; நம் முன்னோர்களின் பெயரையும் அவர்கள் வீரப்பிரதாபத்தையும் ஒளித்துப் போகாமற் பிரகாசிக்கப் பண்ண வேண்டுமென்னும் எண்ணமும் பக்ஷமுடையவர்கள் எவர்களோ, அவர்கள் மாத்திரம் இதற்குடன்படலாம்’ என்று குறித்தனுப்பினார்கள்.

அந்தச்செய்தி அங்கங்கிருக்கும் தறிகளுக்கெல்லாம் போயெட்டின பொழுது, நூல் நனைக்கிறவர்களும், பாவோடுகிறவர்களும், பாத்தோய்கிறவர்களும், பாப் புனைகிறவர்களும், தறிநெய்கிறவர்களுமாகிய செங்குந்தர்களெல்லாம் வைராக்கிய சித்தர்களாய், ‘எந்தக்கிரமத்திலாவது, பிரமாலய தேவாலயங்களில் நடக்கும் சுவாமி கைங்கரியத்திற்கு ஆரேனும் விக்கினம் தேடுவார்களானால், வீரமுஷ்டிகளாகிய ஜவான்களுமல்லவோ அந்த க்ஷணம் கோபுரத்தின் மேலேறி விழுந்தாவது, கத்தியாற் கழுத்தை வெட்டிக்கொண்டாவது, வியிற்றிலே குத்திக்கொண்டாவது இறந்து போகிறார்கள்? அதற்கேற்றபடி, ‘உண்பான் தின்பான் சிவப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி’ என்பதாக ஒரு பழமொழியும் இருக்கிறதே!’ என்றும், ‘உலகத்தில் தங்கள் குலத்திற்குக் கீர்த்தியை வருவிக்கின்றவர்களல்லவோ உத்தமர்கள்!’ என்றும் நினைத்து வேறொன்றும் பேசாமல், உற்சாகத்துடனே தாம் தாமிருந்த இடங்களிலேயே தத்தம் தலைகளைத் துணித்தெறிந்தபடியினாலே, அந்தப்படியே சற்றுநேரமட்டும் அவர் முண்டங்களிற் சில பாவோடிக்கொண்டும், சில பாப்புணைத்துக்கொண்டும், சில தறி நெய்துகொண்டுமிருந்து, பிறகு தொட்டுத் தொட்டென்று அங்கங்கே விழுந்து கிடந்தன.

ஒட்டக்கூத்தர் கேட்டது எழுபது தலை மாத்திரமே. அறுபட்டவைகளோ, அனேகம் தலைகள், வெட்டுண்டவர்கள் தவிர மற்றவர் அத்தலைகளையெல்லாம் தக்ஷணம் பெரிய பெரிய கூடைகளில் வாரியெடுத்து வண்டிமேல் ஏற்றி அடுக்கிக்கொண்டு வந்து, ஒட்டக்கூத்தருடைய தலை வாசலிலே குவித்தார்கள். அவர், ‘இவைகளை இங்கே போடவேண்டா; சோழராஜாவின் வாசலண்டையிற் கொண்டுபோய்ச் சேருங்கள்; நாமவ்விடத்திற்கு வருகிறோம்,’ என்றார். அப்படியே கொண்டுபோய் உறையூரில் சோழனுடைய அரசாட்சி மண்டபத்திற்கு எதிரே மலைபோலக் குவித்தார்கள். அவைகள் கோவைப்பழம் போலச் சிவந்த கண்களை உருட்டி மருள மருள விழிக்கிறதும், உதட்டைப் பிதுக்கிறதும், வாயை ஆவென்ற திறக்கினும், நரிப்போலப் பல்லை இளிக்கிறது, பற்களை நெற நெறவென்று கடிக்கிறதும், கலகலவென்று சிரிக்கிறதும், பெருமூச்செறிகிறதும், கோடையிடி இடித்தது போலக் கொக்கரிக்கிறதும், அதட்டி ஆர்ப்பரிக்கிறதுமாய் ரத்த ஜலம் பிரவாகிக்கக் கிடக்கிற கோரத்தைக் குலோத்துங்க சோழராஜன் வந்து பார்த்து, ‘அடடா! இஃதென்னை கொள்ளை! இஃதென்ன அநியாயம்!’ என்று கேட்க, செங்குந்தர்கள் தாங்கள் ஒட்டக்கூத்தரைப் பிரபந்தம் படவேண்டுமென்று பிரார்த்தித்ததும், அவர் பரிசுகேட்டதும் அதற்காகத் தலைகொடுத்ததும், விவரமாகச் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒட்டக்கூத்தரும் அவ்விடத்தில் வந்து சேர்ந்தார்.

அரசன் அவரை நோக்கி, ‘ஐயா, கூத்தரே இஃதென்னை கூத்து?’ என்றார். அவர், ‘இந்தச் செங்குந்தர்கள் பாமாலை பெறவேண்டுமென்று நம்மைப் பிரார்த்தித்தார்கள்; நாம், பாடினால் நமக்கென்ன பரிசு கொடுப்பீர்கள்?’ என்றோம். இவர்கள், ‘உமதிஷ்டப்படி செய்வோம்,’ என்றார்கள்; நீங்கள் நமதிஷ்டப்படி செய்கிறது மெய்யானால் பாட்டொன்றுக்கு ஒரு தலை விழுக்காடு பரிசு கொடுத்தால் எழுபது பாட்டில் ஒரு பிரபந்தஞ் செய்கிறோம்,’ என்றோம்; அதற்கு இவர்கள் சம்மதித்து, அப்படியே செய்தார்கள், நாமே இவர்களைப் பலாத்காரம் பண்ணவில்லை,’ என்றார்.

குலோத்துங்க சோழன், ‘ஐயா, தலை கொடுக்கச் சொல்லிக் கேட்டீரே! அதனால் உமக்குவரும் பயனென்ன?’ என, ஒட்டக்கூத்தர், ‘நமக்கு மற்றொன்றும் ஆகவேண்டுவதில்லை; ஒன்று மாத்திரம் ஆவசுயகமாயிருக்கின்றது; அஃது இன்னும் சற்று நேரத்திற்குள்ளே பிரத்தியக்ஷமாகத் தெரியவரலாம்,’ என்றார். சோழராஜன், ‘நல்லது! இவர்கள் அபீஷ்டப்படி பிரபந்தம் நிறைவேறியதா?’ என்று கேட்க, இனிமேலேதான் பாடவேண்டும்,’ என்று சொல்லி, அந்தத் தலைகளைச் சரிந்துவிழாமற் செவ்வையாய் அடுக்கும்படி செய்து, அவைகளே தமக்கு ஓராசனமாக அச்சிரச்சிங்காதனத்தின்மேல் ஏறிப் பதுமாசனமிட்டு வீற்றிருந்து, இருகைகளையும் தலையின்மேற் கூப்பிச் சரஸ்வதி தேவியை வணங்கி, அவள் ஒரு கையிற் கமண்டலம், ஒருகையிற் புஸ்தகம், ஒரு கையில் படிகமாலை ஏந்தி, ஒரு கையில் சின்முத்திரை தரித்து, வெண்டாமரைப் புஷ்பாசனத்தில் எழுந்தருளியிருக்கிற பாவனையாக, அவளுடைய திவ்விய ஸ்வரூபத்தை மனத்திலே தியானித்து, அவள் திருநாமங்களைப் பலமுறையும் நாவினால் துதி செய்து, அவளனுக்கிரகத்தினால் அற்புதமாகவும் அதி சாதுரியமாகவும் நவரசாலங்காரத்துடனே கேட்டவர்களெல்லாஞ் சிரக்கம்பம் கரக்கம்பஞ்செய்து வியக்கத்ததக்கதாகவும், செங்குந்தரையும் அவர்களாயுதத்தையுஞ் சுட்டி வர்ணித்து, ஈட்டியெழுபது என்னும் பிரபந்தத்தைப் பாடி முடித்தார்.

அந்தப் பிரபந்தத்தின் அந்தத்தில், ‘கலைவாணி உன் கலைகளாகிய அறுபத்து நாலு கலைகளும், எங்கும் பிரசித்தமாய் விளங்கும்படி அவைகளுக்கெல்லாம் முதல்வியும் கண்கண்ட தெய்வமுமாகிய நீ சதுர்த்தச புவனங்களிலும், பிரமாதி பீபிலிகை பரியந்தம் எள்ளுக்குள்ளெண்ணெய் போல நிறைந்திருப்பதும், சமஸ்கிருதம் திராவிடம் முதலாகிய அஷ்டாதச பாஷைகளிலுமுள்ள பற்பல கல்விகளையும் கற்றுணர்ந்து கற்பனையுடனே ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமாகிய நால்வகைக் கவிகளும் பாட வல்லவர்களாகிய வித்துவஜனர்களை உறுதியாகப் பரிபாலிப்பதும், சகலலோக சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமதேவருடைய நாவிலிருப்பது போல அக்கவிஜனர்களுடைய நாவினிடத்தில் நீங்காமற் சதாகாலமும் நீ வீற்றிருந்து வாழ்வதும் சத்தியமாமல்லவோ? அதற்குத் திருஷ்டாந்தமாகத் துவாபர யுகாந்தத்திற் பாணாசுரனானவன் தன்மேற் படையெடுத்து வந்த துவாரகாவாசராகிய ஸ்ரீகிருஷ்ணசுவாமியுடனே வில்லெடுத்துப் போருக்குப் போன சமயத்தில், அவர் சக்கராயுதத்தைப் பிரயோகித்துக் கண்ட துண்டமாகச் சேதிக்க, அவனுடைய ஆயிரந்தோள்களும் அறுபட்டுக் குப்பல் குப்பலாக விழுந்து போயும், நீ அவனது நாவினிடத்தில் எழுந்தருளியிருந்த மகத்துவ பலத்தினாலல்லவோ அவ்வசுரன் உயிர்தப்பிப் பிழைத்தான்? இப்படிக்கெல்லாம் நீ மகிமை விளங்கிய கருணாநிதியாயிருப்பதனால், இப்பொழுது தலையையும் உயிரையும் தடையின்றிக் கொடுத்த உதார குணமுடைய உத்தம வீரர்களாகிய இந்தச் செங்குந்தர்கள் எனக்குப் பழியும் பாவமும் நேரிடாதபடி பெறுதற்கரிய உயிர்பெற்றெழுந்து, தங்களைக்குறித்து நான் பாடிய ஈட்டியெழுபது என்னும் பிரபந்தத்தைக் கேட்டுச் செவி களிக்கும்படி கிருபை செய்யவேண்டும்,’ என்னும் கருத்துத்தோன்ற,

கலைவாணி நீயுலகில் இருப்பதுவும் கல்வியுணர் கவிவல் லோரை
நிலையாகப் புரப்பதுவும் அவர்நாவில் வாழ்வதுவும் நிசமே யன்றோ?
சிலைவாண னாவிருந்தா யிரம்புயங்க டுணிந்துமுயர் சீவ னுற்றான்
தலையாவி கொடுத்திடுஞ்செங் குந்தருயிர் பெற்றிடநீ தயைசெய் வாயே

-என்ற பாடலைச் சொன்னார்.

சொன்ன மாத்திரத்தில் வெட்டுண்டு விழுந்து கிடந்த தலைகளும் உடல்களும் காந்தமும் இரும்பும் போல ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. காந்தத்திற்கு இரும்பையிழுக்கும் ஆக்ருஷணசக்தியும், இரும்பிற்குக் காந்தத்தில் போயொட்டும் சந்தான சக்தியும் இயல்பாக உண்டானமையால், அவையிரண்டும் ஒட்டுகிறது ஆச்சரியமன்று. அப்படிப்பட்ட சக்தியோ இவைகளுக்கில்லை. இல்லாதிருந்தும் கண்ட கண்ட இடங்களில் தாறுமாறாய் அறுபட்டுக் கிடந்த உடல்களெல்லாம் அதனதன் தலையைத் தேடிவர, சோழராஜனுடைய ஆஸ்தான மண்டபத்திற்கு முன்பாகக் குவித்துக் கிடக்கப்பட்ட தலைகளெல்லாம் தத்தம் உடல்களை நாடிச்சென்று, வாணி கிருபையினால் ஒட்டிக்கொண்டமையால் மாண்டவர்களெல்லாம் உடனே அநாயசமாக உயிர்பெற்றெழுந்து, இடியிடித்தாற் போல உரக்கத் கனைத்துத் தோள்கொட்டித் தொடைதட்டி மீசை முறுக்கி நகைத்து, ‘ஜயம்! ஜயம்!’ என்று ஆர்ப்பரித்தார்கள்.

அதன்பின்பு அவர்கள் செய்துவரும் உபகாரத்தையும், உதார குணத்தையும் வெளியிடவேண்டுமென்று புலவர் பெருமான், வல்லானுடைய உபத்திரவத்தால் அச்சுக்கெட்டுத் தச்சுமாறி நிலைகுலைந்த காலத்தில் இந்தத் தந்துவாயரென்னும் செங்குந்தர்கள்#

[#தந்துவாயர் - நூலைக்கொண்டு வஸ்திரம் செய்கிறவர்; செங்குந்தர் - உதிரத்தாற் சிவந்த ஈட்டியையுடையவர்.]

-அவனை உபாயத்தால் வென்று உலகத்தை நிலைபெறச் செய்தார்கள்,’ என்றும், ‘பூர்வகாலத்திலே லோகரக்ஷகராகிய ஸ்ரீமகாவிஷ்ணுவானவர் திரௌபதை என்னும் ஒரு பெண்ணுக்கு மாத்திரம் ஆடையளித்து மானங்காத்தார்; அந்த ஜகத் காரணராகிய பரமாத்துமாவினுடைய அகடிதகடனா சாமர்த்திய சக்திக்கு அஃது ஒரு விஷயமாகாது; இவர்கள் சகல தேசங்களிலும் பாலர்முதல் விருத்தர்வரையிலுள்ள ஸ்திரீபுருஷர்களாகிய நாநா ஜாதியாரும், கேவலம் மிருகங்களைப் போல நிர்வாணமாயிருந்து பங்கப்படாமல், அவரவர்களுக்கேற்ற இழையார்ந்த வஸ்திரத்தை உற்பத்திப் பண்ணிக் கொடுத்து அபிமானம் காத்தார்கள், என்றும், அவ்வஸ்திரத்தை வணிகருடைய கையிற்கொடுத்து, இவைகளை நீங்கள் விக்கிரயித்துப் பிழையுங்கள்,’ என்று அவர்களுக்குச் சீவனோபாயம் கற்பித்தார்கள்,’ என்றும், ‘எத்திசையிலுமுள்ள புலவர்கள் பலரும் பாடிய தமிழ்ப் பாமாலைகளுக்குப் பரிசாக அளவிறந்த திரவியங் கொடுத்தார்கள்,’ என்றும், ‘அவைகளெல்லாம் அதிசயமல்லவென்று நான் பாடிய ஈட்டியெழுபது என்னும் பிரபந்தத்திற்குப் பெருவியாகத் தங்கள் தலையையும் கொடுத்தார்கள்,’ என்றும், கடைசியிற் சாமானியனாகிய பொற்கொல்லன் ஒருவன் தன்கையில் ஆனமட்டும் பரும்படியாகச் செய்த பொன்னாபரணத்தைச் சமர்த்தனாகிய மற்றொருவன் தன் கைத்திறங் காட்டும்படி திருத்திச்செய்து, மணிபதித்துக் குந்தனமிழைத்துக் கொடுத்தது போல நெடுநாளாகச் சிறப்பின்றி வழங்கி வந்த கூத்தன் என்னும் எனது இயற்பெயரை அற்ற தலையும் உடலும் ஒட்டப் பாடிய காரணம் புலப்பட ஒட்டக்கூத்தன் என்னும் விசேஷணத்தாற் சிறப்பித்துக் கொடுத்தார்கள்,’ என்றும் சொல்லுகின்ற இவ்வாறு கருத்தும் விளங்க,

நிலைதந்தார் புவியினுக்கே; யாவருக்கும் அபிமானம் நிலைக்கத் தந்தார்;
கலைதந்த வணிகருக்குச் சீவனஞ்செய் திடவென்றே கையிற் றந்தார்;
விலைதந்தார் தமிழினுக்கு; செங்குந்தர் என்கவிக்கு விலையா கத்தான்
தலைதந்தார்; எனக்கு ஒட்டக் கூத்தன்என்னும் பெயரினையும் தாந்தந் தாரே.

-என்னும் பாடலைப் பாடினார்.

இவையனைத்தும் பிரத்தியக்ஷமாகக் கண்டு கேட்ட சோழனுடைய சபையாரும், அந்த நகரத்திலுள்ள சுற்றுக் கிராமங்களிலுமுள்ள சகல வருணத்தாரும், ‘இது மகா மகிமையாயிருக்கிறது!’ என்று அதிசயித்துச் சந்தோஷப்பட்டார்கள். அப்பொழுது சோழராஜன், தன் மந்திரி பிரதானிமார்களை நோக்கி, ‘இஃதென்னை புதுமை!’ என்று கேட்க, அவர்கள், ‘ஐயா, ராஜேந்திர்ரே, செங்குந்தர்கள், வேளாளர் முதலியோரைப் போலத் தாங்களும் பாமலை பெறவேண்டுமென்று கூத்தரைப் பிரார்த்தித்தது சகஜமே; கூத்தர் மனந்துணிந்து அதற்காகத் தலைப் பரிசு கொடுக்கவேண்டுமென்றது தமக்குச் சிறப்புப்பெயருந் தங்கள் குலத்தாருக்கெல்லாஞ் சிறந்த பட்டமுங் கிடைக்கவேண்டும் என்னும் அபிப்பிராயமே. அவர்கள் அஞ்சிப் பின்வாங்காமல் தலைகொடுத்தது சுத்தவீரத் தன்மையே! புலவர் பெருமான் பிரபந்தம் பாடி அவர்களை உயிர்ப்பித்த மாத்திரம் கேவலம் தெரியாதவர்கள் ஏதோ ஜாலவித்தையாய் இருக்கிறதென்பார்கள். சிலர் மந்திர பலத்தினால் இப்படி முடிந்ததென்பார்கள். புத்திமான்களுள் சிலர், ‘தலையும் உடலும் அறுபட்ட அறுவாயும் ஒட்டின ஒட்டுவாயும் எவ்வளவும் தெரியாமல் தழும்புதோன்றாமலிருப்பதனால், ‘விசல்யகரணி, சந்தானகரணி, சமானகரணி, சஞ்சீவகரணி’ என்னும் பரமௌஷதங்கள் நான்கும் இவரிடத்திலிருக்க வேண்டும்; அவைகளிற் சந்தானகரணியைக் கொண்டு அற்ற உறுப்புகளை இணக்கி, விசல்லிய கரணியைக் கொண்டு காயத்தை ஆற்றி, சமான கரணியைக் கொண்டு தழும்பு நீக்கி, சஞ்சீவ கரணியைக் கொண்டு உயிர் கொடுத்தனர் என்பார்கள். அவையெல்லாம் சரியல்ல, வாணி கடாக்ஷத்திலும், வித்துவ சிரேஷ்டராகிய கூத்தருடைய வாக்குவ விசேஷத்தினாலும், செங்குந்தருடைய வீரதர்மத்தினாலும், சத்தியத்தினாலுமே இங்ஙனம் நிகழ்ந்தன. ஆதலால், இஃது ‘அற்புதம்’ என்று நாமகளை வாழ்த்தி, ஒட்டக்கூத்தரைத் துதித்து, செங்குந்தரைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அது கேட்டுச் சோழராஜன், ‘நீர் தலைகொடுக்கச் சொன்னீரே! அதனால் உமக்குப் பிரயோஜனம் என்ன?’ என்று கூத்தரை முன்புதான் கேட்டதற்கு ‘இன்னும் சற்று நேரத்திற்குள் தெரியும்’ என்று அவர் சொன்னது, மந்திரிமார்கள் சொன்னபடி தமக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயரும், தமது குலத்தாருக்கெல்லாம் ‘சிரச்சிங்காசனாதிபதிகள்’ என்கின்ற பட்டமும் கிடைக்கவேண்டும் என்னும் எண்ணத்தைக் கொண்டுதான் என்று நிச்சயித்து அவ்வாறே அவருக்குக் கூத்தரென்ற பெயரை ஒட்டக்கூத்தர் என்ற விசேஷணத்துடனே ஸ்தாபித்து, அவரை உள்ளிட்ட செங்குந்தர் யாவருக்கும் சிரச் சிங்காசனாதிபதிகள் என்னும் பட்டமுங் கொடுத்து, பலவகை விருதுகளும் வரிசைகளும் வழங்கி, அதிக மரியாதையுஞ்செய்தான்.


ஒட்டக்கூத்தர் ‘ஈட்டியெழுபது’ பாடியது முற்றியது.

[தொகு]

பார்க்க:

[தொகு]

விநோதரசமஞ்சரி

10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது

12.ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது