தந்தை பெரியார், நீலமணி/இருவேறு சுவையுடைய ஒருகுலைக் கனிகள்
ஒரு குலைக் கனிகள்
"ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ; அப்படியே எல்லோரிடமும் தான் கடந்து கொள்வதே ஒழுக்கம் ஆகும்.
படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்."
- தந்தை பெரியார்
ஒரே குலையில் உள்ள திராட்சைகளில் ஒன்று இனிக்கிறது; சில சமயம் மற்றொன்று புளிக்கிறது. இது ஏன்! திராட்சைக்கு மட்டுமல்ல... இயற்கையின் இந்த விசித்திரம், மனிதப் பிறவியிலும் நிகழத்தான் செய்கிறது.
ஒருவர் முகம் போல் ஒருவர் இல்லை, ஒருவர் குணம் போல் ஒருவர் குணம் இல்லை.
வெங்கடப்ப நாயக்கரின் இரண்டு பிள்ளைகளும் இப்படித்தான்.
இரண்டு விதமான - மாறுபட்ட குணாதிசயங்களுடனேயே இளமையிலிருந்து வளர்ந்து வந்தனர். பேச்சில் - நடைமுறைப் பழக்க வழக்கங்களில், படிப்பில், கொள்கைகளில் - இப்படி அனைத்திலுமே அண்ணனும் தம்பியும், இருவேறு துருவங்களாகவே காட்சியளித்தனர்.
கிருஷ்ணசாமி, ஆசிரியர் அன்றாடம் கற்பிக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்டுப் படிப்பார். பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடங்கி நடப்பார். வகுப்பிலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
அதனால், அவரிடம் ஆசிரியர்கள் அன்பு செலுத்தினார்கள். பள்ளியிலும் நல்ல பெயர் வாங்கினார். ஆனால் -
இராமசாமியின் பள்ளிப் பருவமோ இதற்கு நேர்மாறாக இருந்தது.
பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. வந்தாலும் பாடங்களைக் கவனமாகக் கேட்டுப் படிப்பதில்லை - தனவந்தரான வெங்கடப்ப நாயக்கரின் பிள்ளை என்பதற்காக - இராமசாமி பரீட்சையில் எவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், கீழ் வகுப்புகளில் அவரை பாசாக்கி அனுப்பி வைத்தனர்.
எப்படியோ தம்பி, பரீட்சை சமயத்தில் கஷ்டப் பட்டுப் படித்து பாசாகி விட்டதாகவே கிருஷ்ணசாமி எண்ணி சந்தோஷப்பட்டார்.
மேல் வகுப்புகளுக்குப் போனாலும், இராமசாமியின் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாளுக்குநாள் தீய பழக்க வழக்கங்களும், கெட்ட நண்பர்களுடைய சகவாசமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனாலும் கிருஷ்ணசாமி இவற்றையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. முன்பு ஒரு தடவை தம்பியைப் பற்றி அப்பாவிடம் சொல்லி, அதனால் தம்பி அப்பாவின் பயங்கர கோபத்திற்கு ஆளானதிலிருந்து, கிருஷ்ணசாமி தம்பியைப் பற்றி வீட்டில் எவ்வித புகாரும் கூறுவதில்லை.
பள்ளிக் கூடத்திற்கு தினம் தாமதமாக வருவதையோ, கீழ்சாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதையோ அவர்கள் வீட்டிலெல்லாம் எது கொடுத்தாலும் அருவெறுப்புக் கொள்ளாமல் வாங்கிச் சாப்பிடுவதையோ எல்லாவற்றிற்கும் மேல் சமீப காலமாக சலீம் என்கிற முகம்மதியப் பையனோடு அதிகம் பழகுவதையும்; அவர்கள் வீட்டிலும், தின்பண்டங்கள் வாங்கித் தின்பதையோ கூட கிருஷ்ணசாமி வீட்டில் வாயே திறக்கவில்லை.
'இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது' என்று தம்பிக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இராமசாமி கேளாமல் போகவே, கிருஷ்ணசாமி வெறுத்துப் போய்; தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இராமசாமியிடமிருந்து ஒதுங்கியே விட்டார்.
இராமசாமிக்கு, சலீமின் பழக்கம் ஏற்பட்ட பிறகு தான் அசைவ உணவுகளை வீட்டிற்குத் தெரியாமல் உண்ணத் துவங்கினார். சலீமின் தாயார் ஆசையோடு கொடுக்கும் பிரியாணியை ராமசாமி மிகவும் ரசித்து உண்டார். அதனால் அந்த முஸ்லிம் அம்மணி இராமசாமி வரும் போதெல்லாம், தவறாமல் பிரியாணி செய்து கொடுப்பார்; அவரும் சாப்பிடுவார். இராமசாமிக்கு யாரைப் பற்றியும் வரவர பயம் அற்றுப் போய்விட்டது.
சலீமின் வீட்டிற்கோ - இன்னும் இதுபோல் தன் சாதிக்காரர்கள் எட்டிவிலகும் வீடுகளுக்கெல்லாம் கூட இராமசாமி இயற்கையாய்ப் போய் வந்தார்.
ஒருநாள் -
அம்மா அவரை எதற்காகவோ ஆசையோடு அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது தடால் என்று அவனைத் தள்ளி விட்டார்.
"ஏண்டா இராமசாமி, பல்லுக்கூட ஒழுங்கா நிதமும் தேய்க்க மாட்டியா? வாயெல்லாம், என்னமோ நாத்தமா நாறுது” என்று கூறியபோது இராமசாமி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
சலீம் வீட்டுப்பிரியாணி அவரைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனாலும் அது என்ன கெட்ட வாசனை என்று அம்மாவால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அம்மா சொன்னதற்காக அவள் சந்தோஷத்திற்காக அந்த மாலை வேளையில் மீண்டும் ஒருமுறை பல் விளக்கினார் இராமசாமி.
இப்போது கூட சலீமின் வீட்டிலிருந்து வருகிறார். ஆனால், அன்று போல் அம்மாவின் அருகில் போய் மீண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது;
ஏன்? அம்மாவின் அருகிலேயே கூடப் போகாமல் இருப்பதுதான் நல்லது. உடம்பெல்லாம் கூட ஒரு வேளை பிரியாணி மணக்கலாம்; என்றே எண்ணினார்.
இராமசாமி, தோளில் மாட்டிய பையுடன் இப்படியெல்லாம் சிந்தித்தபடி, நகரின் ஒதுக்குப்புறமாயிருந்த ஓலைக் கூரை போட்ட குடிசைகளின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு வீட்டினுள்ளிருந்து, சிறுவன் ஒருவனின் பயங்கரமான அழுகுரல் கேட்டது.
"என்னை அடிக்காதேம்மா...அடிக்காதேம்மா, நான் இனிமே அந்த ஐயா கூடப் பேசலே; விளையாடப் போகல்லே..." என்று அந்தச் சிறுவன் அலறிக் கொண் டிருந்தான்.
ஒரு கணம் தயங்கிய இராமசாமி, குடிசைக் கதவை உந்தித் தள்ளியபடி உள்ளே நுழைந்து பார்த்தபோது,
அடிபட்டு அழுது கொண்டிருப்பவன் அவரது நண்பன் காளி; அவன் தாயார் கையிலிருந்த விறகுச் சுள்ளி ஒன்றினால் அவனை விளாசிக் கொண்டிருந்தாள்.
இராமசாமி சட்டென்று குறுக்கே புகுந்து காளியை அவன் தாயாரின் பிடியிலிருந்து விடுவித்து விலக்கினார்.
பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளைபோல் தோற்றமளித்த இராமசாமியின் இந்தச் செய்கையால் காளியின் தாயார் பயந்து நடுங்கிப் போனாள்.
ஒரு கணம் என்ன செய்வதென்று தோன்றாமல், சட்டென்று கையிலிருந்த விறகுக் குச்சியைக் கீழே போட்டுவிட்டு 'வந்திருப்பது யார்?' என்று விழிகளால் கேட்பதுபோல், பயந்தபடி காளியைப் பார்த்தாள்.
தன் நண்பர் இராமசாமி தன் வீடுதேடி இந்த சமயத்தில் இப்படி நிற்பார் என்று சற்றும் எதிர்பாராத காளி பிரமிப்போடு இராமசாமியைப் பார்த்தான். தாயிடம் பட்ட அடிகளின் வேதனையை மீறி, அவனுள் சந்தோஷம் பொங்கிற்று.