உள்ளடக்கத்துக்குச் செல்

வனதேவியின் மைந்தர்கள்/19

விக்கிமூலம் இலிருந்து

19

          “செங்கதிர்த் தேவனை வந்தனை செய்வோம் -
          எங்கள் உள்ளங்களில் ஒளி பரவட்டும்!
          மங்கல ஒளியோய், மலர்களின் நாயக!
          எங்கள் மனங்களின் மலங்கள் அகற்றுவீர்!
          எங்கள் செயல்களில் வந்து விளங்குவீர்!
          எங்கள் சொற்களில் இனிமை கூட்டுவீர்.”

வேடப்பிள்ளைகளோடு அவள் பிள்ளைகள் காலை வணக்கம்பாடும்போது, பூமகளின் மனம் விம்முகிறது.சம்பூகனின் மறைவு ஏற்படுத்திய வடு காய்ந்து, ஒன்பது வேனில்கள் கடந்திருக்கின்றன. வேடப்பிள்ளைகளைப் போன்றே இவர்களும் முடியை உச்சியில் முடிந்து கொண்டு, அரைக் கச்சையுடன் கனிகளை சேகரித்தும், தானியங்கள் விளைவிக்கும் பூமியில் பணி செய்தும், ஆடியும் பாடியும் திரிந்தாலும், இவர்கள் தோற்றம் தனியாகவே தெரிகிறது. மொட்டை மாதுலனும் இவர்களுடன் திரிகிறான். அவனுக்குச் சிறிது கண்பார்வையும் கூடியிருக்கிறது. அவர்கள் காலை வந்தனம் பாடும்போது, பூமகள், இவர்களுக்கான காலை உணவைச் சித்தமாக்குகிறாள்.

இளவேனில் மரங்கள் செடிகளிலெல்லாம் புதிய தளிர்களையும் அரும்புகளையும் சூடித் திகழ்கிறது. பனிக்குளிர் கரைந்து மனோகரமான காலை மலர்ந்து விண்ணவன் புகழ்பாடுகிறது.

தானிய மாவில் கூழ் செய்து, பிள்ளைகளுக்கெல்லாம் அவள் இலைக் கிண்ணங்களில் வளர்க்கிறாள். கிழங்குகளைச் சுட்டு வைத்திருக்கிறாள்.

“இன்று குருசுவாமி, எங்களை வேம்பு வனத்துக்கு அழைத்திருக்கிறார். அங்கு ஒரு பொறி சுழலும். அதைக் கண்ணால் பார்க்காமல் சுழலும் ஓசையைக் கேட்டவாறே அம்பெய்து வீழ்த்த வேண்டும். அசையும்போது குறிபார்க்க வேண்டும்....”

அஜயன் இதைக் கூறும்போது பூமகள் திடுக்கிடுகிறாள்.

“முனிவர் - உங்கள் குரு, அப்படியா பயிற்சி கொடுக்கிறார்?”

“ஆமாம்? யந்திரம் - காற்றசையும் போது சுழலும். அப்போது அதில் பொருத்தப்பட்ட பறை அதிரும். அந்த ஓசை எங்கிருந்து வருகிறதோ அதை மனதில் கொண்டு எய்வோம். நேற்று, பறவை பறப்பது போல் ஒரு பஞ்சுப் பிரதிமை செய்து மரங்களிடையே வைத்து அசைத்து, எப்படிக் குறிபார்க்க வேண்டும் என்று கற்பித்தார். அம்மா, அஜயன் குறி விழவில்லை. நான் தான் வீழ்த்தினேன்!” என்று விஜயன் பெருமை பூரிக்க பேசுகிறான்.

“குழந்தைகளே, நீங்கள் வில் வித்தை பயிலுங்கள். ஆனால் இந்த மாதிரியான விளையாட்டுக்கள் வேண்டாம்! ஓசை வந்த பக்கம் எய்வது தவறான செயல்... அத்துடன் இந்த வில்வித்தை யாரையும் அழிப்பதற்குப் பயன்படாது. வெறும் தற்காப்பு வித்தைதான். இயற்கை அம்மை இதற்காக நம்மைப் படைக்க வில்லை. இயற்கையின் எந்தப் படைப்பையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் குருசாமி இப்படிச் சொல்லித்தானே உங்களுக்கு வித்தை பயிற்றுகிறார்...?”

“ஆமாம், அவர் சொல்லாமல் நாங்கள் ஆயுதங்களைத் தொடவே கூடாது என்று சொல்லி இருக்கிறார்...”

“அதை நீங்கள் உறுதியாகக் காக்க வேண்டும். இந்த உறுதியினால், தீங்கு விளைவிக்க வரும் எதிரியோ, பகைவரோ கூட அம்பைக் கீழே போட்டுவிடுவார். போரும் அழிவும், இருவரும் மோதுவதாலேயே நேரிடுகிறது. நெருப்புப் பிடிக்கும்போது, காற்று வீசினால் அது பல இடங்களுக்குப் பரவும். அழிவு நிகழும். ஆனால் அந்தத் தீயை நீரினால் அணைத்துவிடலாம். பிள்ளைகளே, எக்காரணம் கொண்டும் நீங்கள் அழிவு நிகழக் காரணமாக இருக்கலாகாது... நந்தசுவாமி மதயானையைக்கூட சாந்தமாக்கும் தன்மை படைத்திருக்கிறார். நாம் காட்டில் எப்படி வாழ்கிறோம். அந்த விலங்குகளும் நாமும் ஒருவருக்கொருவர் அச்சமில்லாமல் இருப்பதால்தான்...” தன் இதயத்தையே வெளிக்காட்டும்படி அவள் மைந்தருக்கு உரைக்கிறாள்.

“இப்போது சொல்லுங்கள்.... குருசுவாமி தாமே உங்களுக்கு இந்த விளையாட்டு வித்தை பயிற்றுகிறாரா?”

விஜயனின் பார்வை தாழ்ந்து நோக்குகிறது.

“வனதேவி, இந்த மாதிரி ஓசையைக் கேட்டே அம்பெய்த முடியும் என்று அஜயன் சொன்னதால் குருசுவாமி இதைச் செய்து பார்க்கலாம் என்றார். அந்தப் பொறி போல் செய்யவும் விஜயனுக்கும் அவனுக்கும் அவர் கற்பித்தார். அந்தப் பொறி மெல்லிய நாராலான பொம்மை. அதை இன்று சரியாக அவர் அமைத்திருப்பார். அதுதான் ஒரே ஆவல்...” நீலன் உடல் பரபரக்க, கண்கள் இடுங்க மகிழ்ச்சியுடன் புதுமையை அனுபவிக்கிறான்.

“நாங்கள் மிதுனபுரிச் சந்தைக்குப் போனபோது அங்கு இப்படி ஒன்று வேடிக்கையாக வைத்திருந்தார்கள். அம்மா, அப்போது அங்கு தமனகன் என்ற காவலாளி இதைப் பற்றிச் சொன்னான். அங்கே படைவீரர்களுக்கு அதை நிறுத்தி வைத்து, வில் அம்புப் பயிற்சி சொல்வார்களாம். அப்போது, இந்த மாதிரி ஒரு பொறி பற்றியும் சொன்னான். முனிவரிடம் விஜயன் கேட்டான். அவர் அதைச் செய்து வித்தையும் கற்கலாம், வேம்பு வனத்துக்கு வாருங்கள் என்றார்.”

பிள்ளைகள் விடைபெற்றுச் செல்கின்றனர்.

பூமகள் கவலையிலாழ்கிறாள்.

பிள்ளைகள் குமரப்பருவம் உடையும் வேகத்தில் இருக்கிறார்கள்.

“கண்ணம்மா, ஷூத்திரிய வித்து!” என்று பெரியன்னை பேச்சுக்குப் பேச்சு நினைவூட்டுவது செவிகளில் ஒலிக்கிறது.

வானவன் வெண் கொற்றக் குடை பிடித்து உச்சிக்கு ஏறும் நேரம். பூமகள் பிள்ளைகள் உண்டபின் கலங்களைச் சுத்தம் செய்யவும் மனமில்லாமல் நிற்கிறாள்.

லூ, உருமு, சோமா ஆகியோர் சில கொட்டைகளைக் கூடைகளில் சேகரித்துக் கொண்டு வருகிறார்கள். கிடுவிக் கிழவி மண்ணில் மடிந்துவிட்டாள். உருமுவுக்கு இப்போது ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். லூவின் பிள்ளைக்கே இரண்டு சந்ததியை அவள் தந்திருக்கிறாள். சோமாவின் மகள் சென்ற திங்களில் குமரியானாள். இவ்வாறு கொட்டைகளைக் கொண்டு வந்து உடைப்பார்கள். அவற்றில் விதைப்பருப்பு உண்ணவும் நன்றாக இருக்கும். மீதமானவற்றை மிதுனபுரி வணிகரிடம் கொடுத்து, மாற்றாக வேண்டும் பொருட்களைப் பெற்று வருகிறார்கள். தோல், மிக முக்கியமான வாணிபப் பொருள்.

“பெரியம்மா, இன்றைக்குப் பெரிய மீன் கொண்டு வந்தாங்க, ரெய்கி புட்டு அவிச்சி எடுத்து வரும். பிள்ளைகள் அந்திக்கு வரும்போது, இன்றைக்கு விருந்தாடலாம். நல்ல நிலா இருக்கும்.” “அடியே, நல்ல நிலான்னு சொல்லி ஊரியும், பாமுவும் மிதுனபுரிக் கரும்புச் சரக்கைக் குடத்தில் கொண்டு வந்து வார்க்கக்கூடாது! அதெல்லாம் உங்கள் குடிகளில் வைத்துக் கொள்ளுங்கள்! பிள்ளைகள் மனம், அறிவு திரிய நீங்கள் எல்லாவற்றையும் ஊற்றிவிடுவீர்கள்! ஏதோ பதினாறு ஆனால் அவர்களே தீர்மானிப்பார்கள். சத்தியரோ, நந்தமுனியோ அதெல்லாம் பாவிப்பதில்லை. அறிவு மயங்கக்கூடாது!”

கொட்டை உடைக்கும் ஒசையும், அவர்கள் கைகளில் போட்டிருக்கும் மணிகள் சேர்த்த வளையல்கள் செய்யும் ஒசையும் மட்டுமே கேட்கின்றன.

காத்யாயனிப் பசு, மூன்று ஈற்றுகள் பெற்றெடுத்து, பாட்டியாகிவிட்டது. அதைப் பிற பசுக்களுடன் ஒட்டிவிட்ட போது, அது குட்டையில் கால் தடுக்கி சரிந்துவிட்டது. அதனால் அதற்கு ஒரு கால் சிறிது ஊனமாகி இருக்கிறது. அதற்கு மூலிகை வைத்தியம் செய்து, புல்லும் நீரும் வைக்கிறாள். மர நிழலில் அது படுத்து அசை போடுகிறது.

சரசரவென்று குளம்படிகளின் ஒசை கேட்கிறது. பொதி சுமந்த கழுதைகள் பாதையில் தெரிகின்றன. வேதபுரிச்சாலியர், பட்டுக்கூடு சேகரித்துக் கொண்டு செல்கிறார்கள் போலும்?. வேதபுரிச் சாலியர். அறிமுகமான சச்சலர்.

‘வனதேவிக்கு மங்களம் பெரியம்மா இருக்கிறாரா?.” வேதபுரி என்று சொல்லைக் கேட்டதும் உடல் புல்லரிக்கிறது. முன்பெல்லாம் பருவந்தோறும் வருவார்கள். இப்போதெல்லாம் பட்டுக்கூடுகளை, இந்த வேடர்களே சேகரித்து மிதுனபுரிச் சந்தைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

“வேதபுரியில் மன்னர் நலமா?”

“ஆம், வனதேவி, மன்னர் நலம்.”

தாடி, மீசை, முடி நரைத்த கச்சலர், அவள் இங்கு வந்த நாட்களாக வருபவர்தாம். பெரியன்னை.அவரை ஒரிரு நாட்கள் தங்க வைத்து விடுவார். மற்றவர் கூடுகள் சேகரித்து வருவார்கள். இவர் வரும்போது, தானிய மூட்டை வரும்; ஆடைகளும்கூட வரும். சில சமயங்களில் தடாகக் கரையில் அமர்ந்து பெரியன்னை பேசுவதைக் கண்டிருக்கிறாள். தன் பிறப்பைப் பற்றிய ஏதோ சில உண்மைகள் பட்டு இழைகள் போல் சங்கேதங்களால் மறைக்கப்பட்டிருப்பதாக எண்ணுவாள். இப்போது அவள் நிறைவாக அமைதியாக இருப்பதால் அந்த சந்தேகங்கள் எவையும் அவளுடைய ஆர்வத்தைத் துண்டுபவையாக இல்லை.

“பெரியம்மை, கச்சலன் வந்திருக்கிறேன்..!

மரத்தடியில் புற்றரையில் இருக்கும் பெரியன்னை பார்வையை நிமிர்த்திப் பார்க்கிறாள்.

‘யாரோ, ராசா வூட்டு ஆள் போல்” என்று லு சாடை காட்டுகிறாள். வாய்கள் மூட நா உள்ளே அமைதி காக்க, கொட்டை உடைபடும் மெல்லோசை மட்டும் கேட்கிறது.

“உருமு. வந்தவருக்குத் தண்ணிர் கொண்டு வந்து கொடு.”

“இல்லை தாயே, தடாகக் கரையில் எல்லாம் செய்து கொண்டு இளைப்பாறி வருகிறோம். கொஞ்சம் தானியம் கொண்டு வந்திருக்கிறோம். இங்கே கொண்டு வருவார்கள்.”

அவர் சொல்லி முடிக்கு முன், தானிய முட்டைகளைச் சுமந்து இரண்டு ஆட்கள் அங்கே வந்து, நீள்சதுரக் கொட்டடியில் இறக்குகிறார்கள்.

“அது சரி, நான் சொன்ன விசயம்.?”பெரியன்னையின் குரல் இறங்குகிறது.

“சொன்னேன். குரு சதானந்தரைப் பார்த்தேன். அவர்கள் இப்போது அதிகமாகப் பரபரப்பாக இருக்கிறார்கள். அயோத்தியில் பெரிய யாகம் செய்ய ஏற்பாடெல்லாம் நடக்கிறது. ராசகுமாரி ஊர்மிளா, மாண்டவி எல்லாரும் வந்து போனார்கள். அரசகுமாரர்களுக்கு எல்லாம் பயிற்சி குருகுலவாசம் முடியப் போகிறதாம். கொண்டாடப் போகிறார்கள்.” அவள் ஆவல் ஊறிய விதையில் எழும்பும் முளைபோல் நிமிர்ந்து கொள்கிறது.

குருகுல வாசம். எல்லோருக்கும் பிள்ளைகள்.

“என் பிள்ளைகளும் குருகுலவாசம் செய்கிறார்கள். நாடு பிடிப்பதற்கல்ல.” ஒரக்கண்ணால் அவர்கள் பக்கம் பார்த்தவாறு, பூமகள், வேடுவப் பெண்களுடன் கொட்டை உடைக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.

“இந்தப் பருப்பை அரைத்துக் கூழாக்கி, உண்டால் பசி தெரியுதே இல்ல. இந்தத் தடவை, அருவிக்குபின்ன தொலைதுாரம் போயிப் பார்த்தால் குரங்கு கடிச்சிப் போட்ட கொட்டை நிறையக் கிடந்தது. எல்லாம் வாரிக்கட்டிட்டு வந்திருக்காளுவ. அதான் இங்க எடுத்திட்டு வந்தோம். வனதேவிக்கு காட்டுக்கறி, பன்னி, மானு, எதுவும்தான் ஆகாது. கொண்டைக்கோழி மயில், குயில் இதெல்லாம் இப்பப் பிள்ளைகள் பாத்து ஆடுறாங்க, பாடுறாங்க, ரசிக்கிறாங்க. முன்ன திருவி எறிந்திட்டு, சுட்டுத் தின்னுவம். ஒருக்க, மிதுனபுரி ஆளு, உப்புக் கொண்டாந்தான். அதைப் போட்டு சாப்பிட்டா ருசின்னு சொல்றாங்க. அதென்ன ருசி? கடல்ல மீனு ருசியாம். அதெல்லம் நமுக்கு எதுக்கு? இங்கே தலைமுறை தலைமுறையா பசி போக சாப்புடல? உசிர் வாழல? புள்ள பெறல? கிழங்கு புளிக்க வச்சி குடிக்கிறதுதா. ஆனா, இப்பதா புதுசு புதுசா, ருசி.”

லூவுக்கு நா எதையேனும் பேசித் தீர்க்க வேண்டும். சில சமயங்களில் அது இதமாக இருக்காது. இப்போது இந்தப் பேச்சு, மனதை இலேசாகச் செய்கிறது.

கச்சலன் எழுந்து செல்லுமுன் அவளைப் பார்க்க வருகிறான்.

“வனதேவிக்கு மங்களம். பிள்ளைகள் எங்கே தேவி?”

அவள் இமைகளை உயர்த்தாமலே, “குருகுல வாசம் செய்பவர்கள் இங்கே இருப்பார்களா?” என்று வினவுகிறாள்.

“. ஒ. ஆம்” கச்சலன் மன்னிப்புக் கேட்கிறான்.

“மன்னிப்பு எதற்கு? அரசகுமாரர்களுக்கும் அந்தணர்குலக் கொழுந்துகளுக்கும் மட்டும் குருகுல வாசம் என்பது சட்டமில்லையே? இந்த வன சமூகத்தில் எல்லாரும் சமம், சொல்லப்போனால் இந்த வன சமூகம்தான், அரசகுலங்களையும் அந்தண குலங்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் மன்னர், எங்களுக்குப்பிச்சை போடுவது போன்று இந்தத் தானிய மூட்டைகளை அனுப்புவது எங்கள் தன் மானத்தைக் குத்துவதுபோல் இருக்கிறது. எனவே, இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம் கச்சலரே?”

“அபசாரம், அபசாரம்: வனதேவியின் மனம் வருந்தும்படி, நான் எதுவும் பேசவில்லையே? வனதேவி, நீங்கள் வழங்குகிறீர்கள்: இந்தக் கொடைக்கு நன்றியாகச் சிறு காணிக்கை போல் இவை. வனதேவி இங்கே வந்தபிறகு, இந்த வனமே எப்படி மாறிவிட்டது? எனக்குத் தெரிந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில், இங்கே பஞ்சமில்லை; ஆற்று வெள்ளமில்லை; காட்டுத் தீ இல்லை; சூறைக்காற்று இல்லை. அதது, அததன் தருமப்படி இயங்கும் ஒழுங்கில் உலகம் தழைக்கிறது. அவன் பணிந்து விடை பெறும் வரை அவள் பேசவில்லை. இவர்கள் சென்ற பிறகு, பெரியன்னையின் நா வாளாவிருக்காது, தானே செய்தி வெளிவரும் என்று பூமகள் எதிர்பார்க்கிறாள்.

வேடுவப் பெண்கள் கொட்டைகளை உடைத்துப் பருப்பு களைத் தனியாகக் கொண்டு குடிலுக்குள் வைக்கிறார்கள். பிறகு தோடுகளை ஒரு பக்கம் குவிக்கிறார்கள். பொழுது சாய்கிறது.

பெரியன்னை இப்போதெல்லாம் மிகச் சிறிதளவே உணவு கொள்கிறாள். ஒரே நேரம்தான்.

இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறாள். நூல் நூற்பதோ, திரிப்பதே செய்ய இயலவில்லை. ஆனால் தடாகக் கரையில் சென்று, நீரை முகர்ந்து ஊற்றிக் கொள்வது மட்டும் குறையவில்லை. முகம் சுருங்கி, உடல் சுருங்கி, குறுகி, முன் முடி

வழுக்ை கயாகி.

இவள் பிறப்பு, வளர்ப்பு எப்படியோ? நானும் ஒரு பிள்ளையை இக்கானகத்தில் வளர்த்தேன் என்ற பேச்சு வாயில் இருந்து வந்திருக்கிறது. அது குறும்புகள் செய்யாதாம். தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்குமாம்.

அந்தப் பிள்ளை எங்கே? அதன் தந்தை யார்?

அடிமைப் பெண்ணுக்குப் பிள்ளையேது, பெண்ணேது? உறவே கிடையாது என்ற சொல் ஒரு நாள் பொதுக்கொன்று நழுவி வந்தது.

மன்னர் மரபுகளைக் கடித்துத்துப்பும் வெறுப்பு இவளிடம் வெளிப்படுகிறது. ஆனாலும் இவள் வேதபுரிக்காரி. வேதபுரி அரண்மனையில் சேடிபோல் இருந்தவளோ? ஜலஜாவைப் போல் பேரழகியாக இருந்திருப்பாள். யாரோ ஒரு பிரபு இளைஞன் இவளைக் கருவுறச் செய்தானோ? அல்லது.

கரீரென்று ஒர் உண்மை மின்னல் போல் சுடுகிறது.

இவள் அந்தப்புரக் கிளிகளில் ஒருத்தியோ? முறையற்ற சந்ததி உருவாகிறது என்று வனத்திற்கு அனுப்பி இருப்பார்களோ? அவன் படைவீரர்களில் ஒருவனாகி எந்தப் போரிலேனும் இறந்திருப்பானோ?. ஒருகால். ஒரு கால். இவள் அவன் சந்ததியோ?. இவள் அன்னை ஒர் அடிமைப் பெண்ணோ?. மின்னல்களாய் மண்டைக் கனக்கிறது. சத்திய முனிவரின் ஆசிரமத்தில் மகவைப் பெற்று இறந்தாளோ? மன்னர் அரண்மனைக்கு இவளைக் கொண்டு சேர்க்கச் சூழ்ச்சி செய்திருப்பாளோ இந்த அன்னை?

மேக மூட்டங்கள் பளிச்பளிச் சென்று விலகுவனபோல் இருக்கிறது.

“பெரியம்மா...’ என்ற குரல் தழுதழுக்கிறது.

“சிறிது கூழருந்துங்கள் தாயே!”

உட்கார்ந்து அவள் கையைப் பற்றுகையில் பூமகளின் விழிகள் நனைகின்றன. "யாகம் செய்கிறார்களாம், யாகம்? யாகத்துக்குப் பொருட்கள் சேகரிக்கிறார்களாம். உன் தந்தை. தந்தை, ஒரு தடவை இங்கே வந்து இந்த மகளை, இந்தப் பேரப்பிள்ளைகளைக் காண வரவேண்டும் என்று நினைக்கவில்லையே அம்மா? ஏன்? ஏன்? தானியம் அனுப்புகிறான். யாருக்கு வேண்டும் இந்தத் தானியம், இந்தப் பட்டாடைகள்? கொண்டு உன் பிள்ளைகளை வேதவதியில் கொட்டச் சொல்.!”

“அம்மா..! அம்மா. அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவர் என்னை அந்தப் பிஞ்சுப் பருவத்தில் அன்னையைப் போல் மடியில் இருத்தி வளர்த்தவர். தாயும் தந்தையுமாகத் திகழ்ந்தவர்.”

“இருக்கலாமடி, பெண்ணே. உலகு பொறுக்காத ஒர் அநியாயம் உன்னை இங்கே கொண்டுவிட்டிருக்கிறதே? அதை ஏற்கிறானா அந்த மன்னன்? இப்போது, அவன் அசுவமேதம் செய்யப் போகிறானாம்! பத்தினி இல்லாத மன்னன், யாகம் செய்கிறானாம்! சத்தியங்களைக் கொன்ற பிறகு யாகம் என்ன யாகம்? எனக்கு நெஞ்சு கொதிக்குதடி, மகளே..” என்று அந்த அன்னை கதறுகிறாள்.

பிள்ளைகள், அந்திநேரத்துச் சூரியக் கொழுந்துகள் போல் நண்பர் புடைசூழ ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறார்கள். கழுத்தில் கட்டிய மணிகள் அசைய கன்று காலிகள் வருகின்றன. மாதுலனின் இனிய குழலிசையின் ஒசை, துயரங்களைத் துடைக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/19&oldid=1304439" இலிருந்து மீள்விக்கப்பட்டது