உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111. ரிடயர்ட் ஆபீஸர் + என்.ஜி.ஓ. + காலை நேரம்

காலையில் அது நினைவில்லை. சட்டை வேஷ்டி ரொம்ப அழுக்காகி விட்டது. ஆபீஸ் புறப்படு முன் பெட்டியைத் திறந்த போதுதான் சட்டையோ, வேஷ்டியோ, சலவை செய்தது எதுவும் மீதம் இல்லை என்று தெரிந்தது. லாண்டரி தெருத் திருப்பத்தில்தான். ஒரே ஓட்டத்தில் போய் வாங்கி வந்து விடலாம். லாண்டரி பில் மூணு ரூபாய் எழுபது காசு. தேதியோ இருபத்தேழு. மணிபர்ஸில் பஸ் சார்ஜுக்கே சில்லறைகளைத் தேடும் வறட்சி. பக்கத்து வீட்டு நண்பரிடம் கடன் கேட்கலாம். பக்கத்து வீட்டு நண்பர் குருபாதம் ரிட்டயர்ட் மத்திய சர்க்கார் ஊழியர். பொழுது போக்கு - அரசாங்கத்தைக் கண்டித்து அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு ஆசிரியர் கடிதங்கள் எழுதுவது. எப்போது தேடிப் போனாலும் நிறையப் பேசுவார். பேச்சு ஆரம்பமாகும். முடிப்பது எப்படி, எப்போது என்று தெரியாது. எல்லா ரிட்டயர்ட் ஆபீஸர்களுக்கும் இருப்பது போல் நேரம் நிறைய உண்டு.

அவன் தயக்கத்தோடு பனியனை மாட்டிக் கொண்டு பக்கத்து வீட்டில் நுழைந்தான். குருபாதம் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். நுழைந்ததும் நுழையாததுமாக, “ரொம்ப அவசரம். ஒரு அஞ்சு ரூபா இருந்தாக் கொடுங்கோ! சம்பளம் வாங்கினதும், திருப்பித் தந்துடறேன்” என்று உடனே கேட்கத் தயங்கி,

“என்ன, பேப்பர் பார்த்து ஆகலையா இன்னும்” என்று ஆரம்பித்தான். அவர் உற்சாகமாக வரவேற்றார்.

“ஆமாமா! வாங்கோ.இப்ப நிக்ஸன் அந்த சீனாவை ஐநாவிலே விட்டுட்டான்னா செக்யூரிட்டி கவுன்ஸில்லே வீட்டோ பவர் தைவானுக் இல்லைன்னு ஆயிடாதோ? ஒரே சீனாவா மாசேதுங் சீனாவையே ஒப்புத்துக்கறான்னுதானே இதுக்கு அர்த்தம்? இல்லையா?”

“சந்தேகம் என்ன? நீங்கசொல்றதுதான் சரி.”

“அப்படின்னா பார்மோஸா, செவன்த் பிளிட் எல்லாம் என்ன ஆறது...?

“…”

“கீஸிங்கர் ஜேம்ஸ்பாண்ட் மாதிரின்னா சீனாவுக்குப் போயிட்டு வந்திருக்கான்.”

“சும்மாவா, பின்னே..?”

“சூடான்ல பாருங்களேன். என்னமோ நினைச்சோம். நூமேரி நான்தான்னு நிரூபிச்சுட்டானே ஐயா.”