121. அனுதாபக் கூட்டம்
தியாகி கந்தப்பப்பிள்ளை அமரராகி ஏழு நாட்கள் கழிந்து விட்டன. பாவி மனிதர் இன்னும் நாலைந்து மாதங்கள் இருந்து விட்டுப் போயிருந்தால், 200 ரூபாய் பென்ஷனைச் சிறிது காலமாவது வாங்கியிருக்கலாம். பென்ஷன் அறிவித்து வந்த முதற்பட்டியலிலேயே அவர் பெயரும் வந்து விட்டது. பத்திரிகையில் அந்த அறிவிப்பைப் பார்த்த மறுதினம் அவர் காலமாகி விட்டார். உள்ளூர் தேச பக்தர்கள் அவருக்குச் செய்த இறுதி மரியாதை என்பது அவர் சடலத்தின் மேல் போர்த்திய மூவர்ணக் கொடி மட்டும்தான். ஊரிலிருந்த ஒரு சில தேச பக்தர்களும், பத்துப் பன்னிரண்டு கதர் ஜிப்பா ஆட்களும், இரண்டு மூன்று சிறுவர்களும்தான் கந்தப்பப் பிள்ளையின் அந்திம ஊர்வலத்தில் உடன் சென்றவர்கள். எல்லாருக்கும் போய் விட்டார் என்பதில் இருந்த வருத்தத்தைவிட அறிவிக்கப்பட்ட பென்ஷனை வாங்காமலேயே போய்விட்டாரே என்பதில்தான் அதிக வருத்தம். லாபம் வரும்போது பார்த்தா மனிதர் இறப்பார்?
80-வது வயதில் ஒருவர் இறப்பது என்பது அப்படி ஒன்றும் அசாதாரணமானதில்லை; சாகிற வயதுதான் என்றாலும், குடும்பத்தினரும் மற்றவர்களும் துயரப்படுவதற்குக் காரணங்கள் இருந்தன. அவை மெய்யான காரணங்கள :
தியாகி கந்தப்பப் பிள்ளை இந்த உலகில் இருந்து புறப்பட்டுப் போகும் போது எதையும் கொண்டு போகவில்லை. என்றாலும், குடும்பத்தினருக்குப் பாரமாக நிறைய விஷயங்களை விட்டுச் சென்றிருந்தார். இந்தத் தேசத்தின் பொருளாதாரத்தை விடப் படுமோசமான பொருளாதார நிலையில் உள்ள குடும்பம் அது. இன்னும் கலியாணமாகாத வயது வந்த இரண்டு பெண்கள் ஏராளமான கடன் சுமை. வீட்டு வாடகைப் பாக்கி; எல்லாவற்றையும் விட்டுச் சென்றிருந்தார் கந்தப்பப் பிள்ளை; சிரமத்துக்கு இவை போதாதா?
அவருக்கு மொத்தம் ஆறு பெண்கள். முதல் நான்கு பெண்களுக்கு அவர் அதிக மூப்படைவதற்கு முன்பே திருமணமாகி அவர்கள் கணவர் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள். காலமாவதற்கு முன் கடைசி இரண்டு பெண்களுக்கும் திருமணம் நடத்த அலைந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவரது சாவுக்கே அந்தக் கவலையும், மனவேதனையும்தான் காரணம் என்று அக்கம் பக்கத்தாரும், உறவினரும் பேசிக் கொண்டார்கள். கந்தப்பப் பிள்ளையின் மனைவி கோமதியம்மாள் கூடத் துக்கத்துக்கு வந்தவர்களிடம் அப்படித்தான் சொன்னாள். உண்மையும் அதுதான் என்பதை யாரும் மிகச் சுலபமாகவே ஊகித்துக் கொள்ளலாம். கந்தப்பப் பிள்ளை