134. நினைத்ததும் நடந்ததும்
தபால்காரன் வீசி எறிந்து விட்டுச் சென்ற கடிதத்தை எடுத்துப் பிரித்தான் ரகுநாதன். கடிதம், அவன் எதிர்பார்த்தது போலவே, அவன் மாமாவிடமிருந்து வந்திருந்தது. பொழுது விடிந்தால், அவருக்கு வேறு வேலையே கிடையாது போலிருக்கிறது. கலியாணம்! கலியாணம்!... கடிதம் தவறாமல் அதே பல்லவிதான்.
கடிதத்தைப் படித்ததும், அசட்டையாக அதை மேஜை மேல் வீசியெறிந்து விட்டு, ஈஸிசேரில் சாய்ந்தான் ரகுநாதன். மேஜையில், கடிதம் விரித்தவாறே கிடந்தது.
கீழத்தேரூர்
அன்புள்ள ரகுநாதன்!
நீ இங்கிருந்து போனபின், இதுவரை கடிதமே எழுதவில்லை. இப்படி நீ நடந்து கொள்ளும்படியாக நான் என்ன தவறு செய்து விட்டேன்? நாள் தவறாமல் உன் கடிதம் வரும் வருமென்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நிலையில், இன்று இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ வந்திருந்த போது உன்னிடம் நேரில் கூறியவாறு வருகின்ற சித்திரையில் கலியாணத்தை முடித்து விடவேண்டும். நீயுந்தான் எத்தனை நாள் பம்பாயில், இப்படி ஓரியாகக் கடத்த முடியும். இது விஷயமாக நீ ஏன் தயக்கப் படுகிறாய் என்பதுதான் எனக்குப் புரிய முடியாத ஒன்றாக இருக்கிறது. காரணம் கேட்டதற்கு ‘ஏதோ மேலே படிக்கப் போகிறேன் என்றும், பிரைவேட்டாக எம்.ஏ. எழுதப் போகிறேன்’ என்றும் சொன்னாய்! மாலதி உன்னுடன், உன் பக்கத்தில் இருப்பது உன் படிப்புக்குத் தடையாக இருக்குமென்ற எண்ணமா? அப்படியானால், அது வீண் பிரமை என்பதை உனக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். உங்கள் மாமி வீட்டிற்கு வந்த இரண்டு வருடங்கள் கழித்துச் சட்டக் கல்லூரியில் பி.எல். பரீட்சையில் முதல் வகுப்பில் தேறியிருக்கிறேன் நான். கடிதம் வளர்ந்து விட்டது. விவரமாகப் பதில் எழுது. கல்யாண விஷயமாக உன் பதில் அனுகூலமாக இருக்குமென்று நினைக்கிறேன்,
உன் மாமா,
வைத்தியநாதன்
இளமையில் தாய், தந்தையரை இழந்த ரகுநாதன், மாமாவிடமே வளர்ந்தவன். திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்து சென்னையில் கல்லூரிப் படிப்பு வரை அவருடைய ஆதரவினால் படித்தவன் அவன். தம் ஒரே மகளாகிய மாலதியையும், அவனையும் இரண்டு கண்மணிகளாகப் போற்றிப் பேணி வந்தார் வக்கீல் வைத்தியநாதன். தம்முடைய வக்கீல் வாழ்க்கையில் பேரும், புகழும், செல்வமும் மிகுதியாகப் பெற்றிருந்தும், சில ஆண்டுகளிலேயே அந்த வாழ்க்கை அவருக்கு வெறுத்துப் போய் விட்டது. கீழத்தேரூரில் காவிரிப் பாசனத்தில் ஒரு சிறு