பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

7


முல்லை நிலம்

பழங்காலத்தில் தமிழ் நாட்டில் மரஞ் செறிந்த காடுகள் மலிந்திருந்தன. பண்டைத் தமிழரசர்களாகிய கரிகால் வளவன் முதலியோர் காடு கொன்று நாடாக்கினர் என்று கூறப்படுகின்றது.ஆயினும், அந் நாளில் இருந்து அழிபட்ட காடுகளின் தன்மையைச் சில ஊர்ப்பெயர்களால் உணரலாம். இக்காலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று போற்றப்படுகின்ற ஊர்கள் முற்காலத்தில் பெரும்பாலும் வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால் அறியப்படும். சிதம்பரம் ஆதியில் தில்லைவனம்,மதுரை கடம்பவனம்; திருநெல்வேலி வேணுவனம். இவ்வாறே இன்னும் பல வனங்கள் புராணங்களிற் கூறப்படும்.20

தமிழ் நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களக்காடும் பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணிச் சோழன் என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது.

அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.இக்காலத்தில் ஆர்க்காடு என்பது ஒரு நாட்டுக்கும் நகருக்கும் பெயராக வழங்குகின்றது. ஆர்க்காட்டுக்கு அணித்தாக ஆர்ப்பாக்கம் என்ற ஊர் உள்ளது. அன்றியும் சோழ நாட்டின் பழைய தலைநகரம் ஆரூர் ஆகும். அது பாடல் பெற்ற பின்பு திருவாரூர் ஆயிற்று.