22. நினைவில் நின்றவள்
நினைத்துப் பார்த்தால் அது ஒரு கனவு போல் எனக்குத் தோன்றுகிறது. ‘நினைக்க வேண்டிய அவசியம்? நினைக்காமலே இருந்துவிட்டால் என்ன?’
இருக்க முடியவில்லையே! நான் என்ன செய்வேன்? உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாகுமோ? உள்ளம் நினைவுகளில் பொங்கும்போதெல்லாம் அந்த அழகிய முகம் திரைச்சீலையில் எழுதித் தொங்கவிட்ட ஒவியம் போல் தென்படுகிறதே? அந்த ஓவியத்தை நான் எப்படி அழிப்பேன்? நினைவில் அரும்பு கட்டி மலரும் அந்த மலரை எப்படிக் கசக்குவேன்? நெஞ்சே பொறு! உனக்கு மறுபடியும் அவள் கதையை நினைவூட்டுகிறேன். எண்ணங்களால் என்னைக் கொல்லாதே! நான் நிரபராதி. எளியவன், பலவீனன், தனியன் என்னை விட்டுவிடு. நீ கேட்பதை நான் ஒளிக்காமல் சொல்லிவிடுகிறேன்.நான் ஏன் எதிலும் பற்றில்லாமல் எதுவும் என்னைப் பற்றவிடாமல், சுவையற்று, சுகமற்று ஏகாங்கியாகத்திரிந்து கொண்டிருக்கிறேனென்று நீ கேட்கிறாய்! கடந்த பதினைந்து ஆண்டுகளாக இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் அந்த நினைவுச் சுமையைச் சற்றே கீழே இறக்கி வைக்கிறேன், சரிதானே? கேள்!
அவளைச் சந்திக்க நேர்ந்தது ஒரு விநோதமான கதை போல் நினைவில் தங்கியிருக்கிறது. நீலாம்பூர் மலைப்பகுதியில் யானைகளைப் பிடித்துப் பழக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு இருபத்து மூன்று வயது. மலை வாழ்வும் விறுவிறுப்பு நிறைந்த யானை பிடிக்கும் தொழிலும் மனத்துக்குப் பிடித்தவையாய் அமைந்திருந்தன. உடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் மலையாளிகள். அளவற்ற அன்புடன் என்னிடம் பழகினார்கள். கம்பெனிக் கட்டடங்களுக்கு அருகில் உள்ள அறையொன்று நான் இருப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. தனி ஆளாக இருந்தாலும், குடும்பங்களோடு வசித்து வந்த மலைநாட்டு நண்பர்களின் உதவி வேண்டிய போதெல்லாம் குறைவின்றிக் கிடைத்து வந்தது. பல நூறு மைல்களுக்கு அப்பால் பொற்றோர்களையும் வீட்டையும், பிறந்த மண்ணையும் விட்டு விட்டுப் பிழைப்பதற்காக இங்கே வந்து இப்படிக் காட்டிலும் மலையிலும் அலைகிறோம் என்ற உணர்ச்சி ஏற்படவே இல்லை.சொந்த ஊரில் சொந்த மனிதர்களுக்கு இடையே வசிப்பதைப் போலவே இருந்தது.
அப்போது கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூர் சிவன் கோவிலுக்கு ஒரு யானை பிடித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டிருந்தோம். கோவிலுக்கு யானை வாங்கிவிடுவதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த செல்வச்சீமான் முன்தொகை மூவாயிரம் ரூபாய் கொடுத்து, பிடிக்க வேண்டிய யானையின் வயது, உயரம் முதலிய